பக்கங்கள்

புதன், 4 ஏப்ரல், 2018

சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள்!

சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள். சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டாளா? சீதையின் பஜாரித்தனம்! சீதை தன் கணவனைப் பேடி, மனைவியைக் கூட்டிக் கொடுக்கும் கூத்தாடி என்று பேசுதல்! சீதை ஆத்திரமடைந்து ஒரு அளவுக்கு தந்திரமாக தனது கற்புத் தவறை ஒப்புக்கொள்கிறாள்! 

சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா?


ஒரு நெருக்கடியான ஆராய்ச்சி.

சீதை எப்படிப் பிறந்தாள் என்பதற்கு ஆதாரமே காணோம். ஆனாலும் சீதையைப்பற்றிய முன் ஜன்மக் கதை ஒன்று கூர்ம புராணத்தில் உள்ளது. அது என்னவென்றால் சீதையானவள் குசத்துவசன் என்பவனுடைய வாயில் தோன்றினாளாம். தம்பன் என்னும் அரக்கன் சீதையை இச்சித்து கேட்க குசத்துவசன் மறுக்க குசத்துவசனை அந்த அரக்கன் கொன்று விட்டானாம். பிறகு சீதை விஷ்ணுவை மணக்க ஆசைப்பட்டுத் தவம் செய்கையில் அவ்வழி வந்த ராவணன் சீதையைக் கண்டு பலாத்காரம் செய்து விட்டானாம். பிறகு சீதை ராவணன் தொட்டுவிட்டதால் அந்த தோஷம் நீங்க நெருப்பில் இறங்கிவிட்டாளாம். நெருப்பில் இறங்கும் போது அடுத்த ஜன்மத்தில் லங்கையில் பிறந்து ராவணனை அழித்து விடுவதாகச் சபதம் கூறி இறந்தாளாம். 

அந்தப்படியே சீதை லங்கையில் ஒரு தாமரைப் பொய்கையில் கிடந்தாளாம். (எப்படி வந்து கிடந்தாளோ தெரியாது) அப்போது ராவணன் கண்டு எடுத்துப் போய் தன் வீட்டில் மகள் போல் வளர்த்தானாம். ஜோசியர்கள் இச்சீதை லங்கையில் இருந்தால் லங்கைக்கு ஆபத்து என்றார்களாம். அதை நம்பி ராவணன் சீதையை ஒரு பெட்டியில் இட்டுக் கடலில் விட்டு விட்டானாம். அது கரைக்கு வந்து பூமியில் புதைபட்டு விட்டதாம். பிறகு அது ஜனகன் கைக்குக் கிடைத்து அவன் எடுத்து வளர்த்து ராமனுக்குக் கட்டிக் கொடுத்தானாம். (சீதை போல இந்தக்காலத்தில் ஒரு குழந்தை கிடைத்தால் அதைப் பற்றிப் பொது ஜனங்கள் என்ன சொல்லுவார்கள்? என்பது ஒரு பக்க மிருக்கட்டும்.) 

எல்லாவற்றையும் சைன்சுக்கு (விஞ்ஞானத்துக்கு) விரோதமாகவே "தெய்வீக"மாக வைத்துப்பார்ப்போம். ராமாயணக் காவியப்படியே வால்மீகி வாக்குப்படி சீதை ராமனுடைய மனைவி, ராமன் மகாவிஷ்ணு என்னும் ஒரு வைணவக் கடவுளின் அவதாரம். சீதை மஹாலக்ஷ்மி; அதாவது மேற்படி வைணவக் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷ்மியின் அவதாரம். இங்கு வேறு சங்கையும் ஏற்படலாம். அதாவது விஷ்ணுவுக்கு இரண்டு பெண்ஜாதிகள் உண்டு. அவர்களுக்கு சீதேவி, பூதேவி என்றுகூடச் சொல்லுவார்கள். மற்றும் வேறுபல பெயர்களும் சொல்லுவார்கள். 

அப்படியிருக்க விஷ்ணு ராமாவதாரத்தில் ஒரு பெண்ஜாதியை மாத்திரம் அழைத்துக்கொண்டு மற்ற பெண்ஜாதியை ஏன் விட்டுவிட்டு வந்துவிட்டானோ விளங்கவில்லை. அல்லது ராமனுக்கு வேறு பல பெண்ஜாதிகளும் உண்டு என்பதாக வால்மீகி கூறுகிறபடி மற்ற பெண்ஜாதியையும் அழைத்து வந்தானோ என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் பூதேவியும் ராமாயணக்கதையில் வருகின்றாள். ஆனால் பூதேவி ராமனுக்குப் பெண்ஜாதியாய் வரவில்லை. மற்றெப்படி வருகின்றாள் என்றால் மாமியாராய் வருகிறாள். 

அதாவது ராமன் சீதையை விபசாரி என்று சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்கிவரும்படி சொன்னபோது முதல் தடவை நெருப்பில் குதித்து வந்தது போதாமல் மறுபடியும் சந்தேகப்பட்டு குதித்துவரும்படி சொன்னதில் பூமாதேவி வந்து கோபித்து தன் மகளை (சீதையை) கூட்டிக் கொண்டு போய்விடுகிறாள். ஆகவே விஷ்ணுவாய் இருக்கும்போது சீதேவி பூதேவி என்பவர்கள் பெண்ஜாதிகளாகவும் ராமனாய் வரும்போது பூதேவி, சீதேவி என்பவர்கள் முறையே மாமியாராயும், மனைவியாயும் வருகிறார்கள். இதுவும் இப்போதும் சில இடங்களில் நடப்பதுண்டு. 

அதாவது கன்றும் தாயுமாகப் பார்த்து மாடு வாங்குவது போல் தாயும் மகளும் பயன்படும்படி சிலர் கல்யாணம் செய்து கொள்வதுண்டு. சில இடங்களில் முதலில் தாயார் பயன்பட்டு பிறகு மகளும் பயன்படுவதுண்டு. இந்தக் கதையில் ராமனுக்கு என்றாலும் சரி, விஷ்ணுவுக்கு என்றாலும் சரி, தாயும் மகளும் பயன்படுத்தப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் சீதை ராமாயணக் கதையில் தான் வருகிறாளே ஒழிய அதற்கு முன்பு வந்ததாக நமக்குத் தெரியவில்லை. 

ஆகவே ராமாயணக் கதைக்கு பின்புதான் விஷ்ணு பெண்ஜாதி சீதை என்று ஏற்பட்டிருக்க வேண்டுமே ஒழிய அதற்குமுன் ஏற்பட்டிருக்க நியாயம் தென்படவில்லை. ஆதலால் விஷ்ணுவின் மனைவிமார் தாயாரும் மகளும் என்று சொன்னால் எப்படி மறுக்க முடியும்? (இந்த முறைகள் ஒரு புறமிருக்கட்டும். இதனால் ஒன்றும் முழுகிப் போகவில்லை.) 

எப்படியிருந்தாலும் விஷ்ணு என்றாலும் சரி, ராமன் என்றாலும் சரி, அவன் ஆண் ஆனதால் அவர்களைப் பற்றிக் கேட்க யாருக்கும் அதிகாரமில்லை. எடுத்துக் கொண்ட விஷயத்தைக் கவனிப்போம். அதாவது சீதை கற்புடையவளாயிருந்திருக்க முடியுமா என்பதேயாகும். 

ராமாயணக் கதைக்கு ஒரு ஆதாரக்கதை அவசியக்கதை அதன் பூர்வோத்திரக்கதை என்பது ஒன்று வால்மீகியாலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் விஷ்ணு ராமனாய் பிறக்க வேண்டிய காரணம் என்ன? லக்ஷ்மி சீதையாய் பிறக்க வேண்டிய காரணம் என்ன? சீதை என்னும் லக்ஷ்மியை மற்றொருவன் தூக்கிக் கொண்டுபோகவேண்டிய காரணம் என்ன? என்பவைகளுக்கு எல்லாம் அதில் நியாயம் சொல்லப்பட்டிருக்கிறது. 

அதென்னவென்றால் விஷ்ணுவானவன் ஜலந்தராசூரன் என்கின்ற ஒரு ராக்கதனுடைய மனைவி பிருந்தையைத் திருட்டுத் தனமாக மாறு வேஷம் பூண்டு புணர்ந்துவிட்டான். எப்படியென்றால் ஜலந்தராசுரன் மனைவி மகா பதிவிரதையாம். அவள் புருஷனை சிவன் கொன்று விட்டானாம். (மகாபதிவிரதையின் புருஷனை சிவன் எப்படி கொன்றானோ கொலை பாதகன் அதிருக்கட்டும்) இந்த சங்கதி அவளுக்குத் தெரியாதாம். (ஏனென்றால் அவள் பதி விரதையல்லவா? எப்படித் தெரியும் பாவம்) அப்படி இறந்துவிட்ட சமயத்தில் விஷ்ணுவானவன் அந்த ஜலந்தராசுரன் போல் உருமாறி அந்தம்மாளைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும் விஷ்ணுவின் புணர்ச்சி வேறுபட்டிருந்ததிலிருந்து அந்தம்மாள் இந்த உருமாறின விஷ்ணு தன் புருஷனல்ல என்பதாகத் தெரிந்து விஷ்ணுவுக்குச் சாபம் கொடுத்ததாகவும், அந்தச் சாபத்தில் "நீ என்னை கற்பை அழித்தது போல் உன் பெண்ஜாதியினுடைய கற்பை ஒரு அசுரன் அழிக்கவேண்டும்" என்றும் சபித்ததாகவும் அந்தச் சாபம் நிறைவேறவே மகாவிஷ்ணுவும் அவன் மனைவி மகாலக்ஷ்மியும் முறையே ராமனாகவும், சீதையாகவும் வந்ததாகவும் அந்த சாபம் நிறைவேறவே ராவணன் என்கின்ற அசுரன் தோன்றிச் சீதையைத் தூக்கிக்கொண்டு போனதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆகவே, பதிவிரதையான பிருந்தையின் சாபம் நிறைவேறுவதற்கு ஆகவே இவ்வளவு காரியமும் ஏற்பட்டிருக்கும் போது அந்த கற்பு கெடுவது என்கின்ற பாகம் மாத்திரம் நிறைவேறப்படாமல் எப்படி பாக்கியிருக்க முடியும்? என்பது ஒரு சாதாரண கேள்வியாக ஆகிவிடமுடியுமா என்பது யோசிக்கத்தக்கதாகும். 

விஷ்ணுவானவன் ஜலந்தராசுரன் மனைவியின் கற்பைக் கெடுக்காமல் இருந்திருந்தால்தான் சீதையின் கற்பு கெடாமல் இருந்திருக்க முடியுமே ஒழிய, ஜலந்தராசுரன் மனைவியின் கற்பு கெடப்பட்ட பிறகு சீதையின் கற்பு மாத்திரம் கெடாமல் இருந்திருக்கும் என்றால் ராமாயணக் கதையாவது பொய்யாயிருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு ஆதாரமான முன் கதையாவது பொய்யாயிருந்திருக்க வேண்டும். 

ஆகவே விஷ்ணு ஜலந்தராசுரன் மனைவியை என்ன என்ன செய்தானோ அதையெல்லாம் ராவணேசுரன் என்பவன் சீதையை செய்துதான் இருக்கவேண்டும் என்பது மாத்திரமல்லாமல் கதைப்படி பார்த்தால் செய்து தான் தீரவேண்டும் என்றே சொல்லுவேன்.

ஏனெனில் ஒரு அசுரன் என்பவன் மனைவியை ஒரு ஆரியன் என்பவன் இப்படி அனுபவித்தான் அப்படி அனுபவித்தான் என்று ஆனந்தமாகப் பச்சையாக எழுதிவிட்டு ஆரியன் என்பவன் மனைவியை அசுரன் என்பவன் அனுபவித்தான் என்கின்ற விஷயத்தில் மாத்திரம் ஜாதி அபிமானம் காரணமாக ஜாடை மாடையாய் எழுதியிருந்தாலும் விவகாரத்துக்கு வரும்போது தாக்ஷண்யமில்லாமல் பார்க்கும் போது உண்மை வெளியாகித்தானே தீரவேண்டும். 

அன்றியும் சீதையை ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின்பு ராமன் அந்த மீட்பை அரசியல் காரியத்தை உத்தேசித்து சீதையை மீட்டதாகவும் ராவணன் அனுபவித்ததை தான் அனுபவிக்க முடியாதென்றும் சொல்லி அவளை தனது மனைவியாக ஏற்க மறுத்த சமயத்தில் சீதை தைரியமாக விளக்கமாக தன்னை ராவணன் அனுபவிக்கவில்லை என்று சொல்லவே இல்லை. 

மற்றபடி என்ன சொன்னாள் என்றால் "நான் ஒரு பெண், அபலை, ராவணன் மகா பலசாலி அவனிடம் எனது சரீரம் சுவாதீனமாய் விட்டது. நான் என்ன செய்ய முடியும்? சரீரம் அவனுக்கு சுவாதீனமாய் இருந்தாலும் என் மனம் உன்னிடத்திலேயே தான் இருந்தது" என்று தான் சொன்னாளே ஒழிய மற்றபடி சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்லவே இல்லை. (இது வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.) 

ஆகவே அந்த முறையில் பார்த்தால் சீதை கற்புடையவளாய் இருந்திருக்க முடியுமா என்பது தான் இந்த வியாசத்தின் கேள்வியாகும்.

சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையை கற்பிப்பதற்கு ஆக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள். இந்தப் பெருமையைப் பற்றியும் கதையில் வால்மீகி ஜாடை மாடையாய் காட்டி இருப்பதுபற்றியும் நமக்கு இப்போது தகறார் இல்லை. ஆனால் கதையின் தத்துவப்படி மூலகாரணப்படி சீதை கற்புடையவளாக இருந்திருக்க முடியுமா என்பதுதான் கேள்வியாகும். 

ஆரியர்கள் தேவர்கள் அசுரர்கள் என்கின்ற விஷயத்தில் யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்றால் ஏன் துரோபதை சீதை அகலியை தாரை என்கின்ற முதலிய பஞ்சகன்னிகைகள், மகாபதிவிரதைகள் கோஷ்டியில் இந்த ஜலந்தராசுரன் மனைவியின் பெயரையும் சேர்த்து இருக்கக்கூடாது? என்று கேட்கின்றேன். 

இந்த நான்கு "உத்தம பத்தினிகளின்" யோக்கியதைகளை விட பிருந்தையின் யோக்கியதை என்ன கெட்டுவிட்டது? அந்தம்மாள் பதிவிரதா தன்மைக்கு ஆதாரம் மகா விஷ்ணுவுக்கே (கடவுளுக்கே) சாபம் கொடுத்தது. அந்த சாபம் நிறைவேறிற்று என்றால் இதற்குமேல் உரைகல் வேறு என்ன என்று கேட்கின்றேன். 

ஆகவே ஆரியர்கள் சகல வழிகளிலும் சகல துறைகளிலும் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்வதும் ஆரியர்கள் அல்லாதவர்களை இழிவு கீழ்மைப்படுத்துவதுமான காரியத்திலேயே இருந்து வந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த மாதிரியான காரியத்துக்காக அவர்கள் எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கிறார்கள் என்பதிலும் நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. 

உதாரணமாக சென்னையில் அசம்பளி தேர்தலின் போது ராமசாமி முதலியாரை தோற்கடிப்பதற்காக எந்த வகையிலும் யாதொரு சம்பந்தமில்லாத ஒரு பெரும் பழியை அதாவது ராமசாமி முதலியார் ஒரு பெண்ணின் தாலியை அறுத்துவிட்டார் என்று பிரசாரம் செய்து அவரை தோற்கடித்தார்கள் என்றால் இவர்கள் இனி என்னதான் செய்யமாட்டார்கள்? இதற்குமுன் என்னதான் செய்திருக்க மாட்டார்கள் என்பது விளங்கும். ஆதலால் கண்மூடித்தனமாக எல்லா புராணங்களையும் நம்பாமலும், மேம்புல்லை மேயாமலும் நன்றாய் ஊன்றிப் பார்த்தால் அவைகளின் யோக்கியதை அத்தனையும் ஆபாசமாகத்தான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகவே இதை எழுதுகிறேன்.

--சித்திர புத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - “குடி அரசு” கட்டுரை 08.03.1936 


1 கருத்து:

  1. Our Videoslots evaluation group have concluded that could be a|it is a} legit operator. The casino is regulated and holds a valid licence from renwowned bodies. Learn more about Videoslots 강원랜드 쪽박걸 licence creds with our mini guide to security and regulation. We hope our casino evaluation has put your thoughts comfy when it comes to of|in relation to} the question of whether there's a Videoslots rip-off to be wary of. It’s positively price noting the vary of software builders out there on this website too. Each developer’s games have their very own unique style and feel to them, so many individuals have distinct favourites.

    பதிலளிநீக்கு