பக்கங்கள்

வெள்ளி, 31 மார்ச், 2017

இராமாயண முக்கிய பாத்திரங்களின் யோக்கியதை


18.12.1943 - குடிஅரசிலிருந்து...

இராமாயணம் என்னும் கதையில் முக்கிய பாத்திரங் களாக விளங்கும் தசரதன், இராமன், சீதை, லட்சுமணன் முதலியவர்களின் யோக்கியதையை சற்று ஆராய்வோம்.

இராமாயணத்தில், யாகத்துக்கு அடுத்தாற்போல் தசரதன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யும் சேதி குறிப்பிடத்தக்கதாகும். இதில் தசரதன், அவனுடைய பிள்ளைகள், மனைவிமார்கள், மந்திரி, குரு முதலானவர் களுடைய தன்மைகள் இன்னவை என நன்கு விளங்கும்.

தசரதன்

1. தசரதன் கைகேயியை மணக்கும்போதே, கைகேயியின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே அயோத்தியைக் கொடுக்கிறேன் என்பதாக வாக்குக் கொடுத்து இருக்கிறான். மற்றும் கதை வாசகப்படி பார்த்தால், தசரதன் தனது விவாகத்தின் போதே கைகேயி வசம் நாட்டை ஒப்புவித்து விட்டு, கைகேயிக்கு ஆக கைகேயிக்குப் பிரதிநிதியாய் இருந்து நாட்டை ஆண்டு வந்தானெனவே தெரிகிறது.

2. அதாவது, கைகேயிக்கு தசரதன் அயோத்தியை சுல்கமாகக் கொடுத்துவிட்டான் என்று மூலத்தில் இருக்கிறது.

3. இந்த சங்கதி இராமனுக்கும் கோசலைக்கும் தெரியும். என்றைக்கு பரதன், அவன் மாமன் வீட்டுக்குப் போனானோ அன்று முதல் உன் பட்டாபிஷேகத்துக்குத் தக்க காலம் என்பது எனது கருத்து என்று, இராமனிடம் வெளிப்படையாய் தசரதன் சொல்லுகிறான். பரதனை நாடு பெறச் செய்யாமல் ஏமாற்றுவதற்கு ஆகவே, அவனை அவனது பாட்டனார் வீட்டில் தசரதன் பத்து வருஷ காலம் விட்டு வைக்கிறான்.

4. திடீரென்று ஒரு நாள் நினைத்துக்கொண்டு, குடிகளுக்குச் சமாதானம் சொல்லி, அடுத்த நாளே இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்கிறான்.

5. இந்தத் துரோகமான காரியத்துக்கு, மந்திரிகளும், வசிட்டன் முதலிய குருமார்களும், இராமனும் சம்மதிக் கிறார்கள்.

6. கோசலையும் இராமனுக்குப் பட்டம் கிடைக்கச் சதா தபசு செய்கிறாள்.

7. பரதனுக்கும், சத்துருக்கனுக்கும், ஜனகனுக்கும், கேகய மன்னனுக்கும், கைகேயிக்கும் தெரிவிக்காமலும், இவர்களுக்கு அழைப்புக்கூட அனுப்பாமலும், இவ்வளவு முக்கியமான முடிசூட்டை அவசர அவசரமாக நடத்த ஏற்பாடு செய்கிறான்.

8. இராமனிடம் தனிமையில் பேசும்போது, பட்டாபிஷேகம் நடைபெறாமல் தடை செய்யவேண்டிய அவசியம் பரதனுக்கு இருந்தாலும், அது முடிந்துவிடுமாயின், பிறகு பரதன் வந்தாலும் தகராறு செய்யாமல் அதற்குச் சம்மதித்து சும்மா இருந்து விடுவான். ஏனெனில், பரதன் சாது, நல்லவன், நடந்துவிட்ட காரியத்தை ஒத்துக் கொள்ளுவது உயர்ந்த குணம் படைத்தவர்களின் கடமை. ஆதலால் சீக்கிரம் முடியவேண்டும் என்கிறான்.

9. இந்தப் பட்டாபிஷேகச் சேதியறிந்து, கைகேயி, இராஜ்யத்தைத் தன் மகன் பரதனுக்கு முடி சூட்ட வேண்டுமென்றும் அந்த முடி பரதனுக்கு நிலைக்கச் செய்ய இராமன் காட்டுக்குப் போக வேண்டுமென்றும் சொல்லும் போது, கைகேயியை ஏமாற்ற தசரதன் அவள் காலில் விழுந்து கெஞ்சுகிறான்.

10. எவ்வளவோ ஏற்பாட்டுடன் செய்த காரியத்தைக் கெடுத்துவிட்டாயே என்கிறான். ஆனால், நாடு மூத்த மகனாகிய இராமனுக்குத் தானே உரிமை என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லவே இல்லை. தசரதனுக்குக் கைகேயி இணங்காமல் போன பின்பு தசரதன் இராமனை அழைத்து, இராமா, நான் புத்தி சுவாதீனம் இல்லாத சமயத்தில் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதாக ஒப்புக் கொண்டுவிட்டேன்; என்றாலும் நீ அதற்குக் கட்டுப்பட வேண்டியதில்லை.... என்னைப் பட்டத்திலிருந்து தள்ளி விட்டு நீ இராஜ்யத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்து கொண்டு இரு என்று துர்யோசனை சொல்லிக் கொடுக்கிறான்.

11. இவையெல்லாம் பயன்படாமல் போகவே, தசரதன் சுமந்திரனை அழைத்து,இராமனுடன் நாட்டிலுள்ள பொக்கிஷம், தானியக் களஞ்சியம், குடிகள், படைகள், வியாபாரிகள், வேசையர்கள் ஆகிய எல்லாவற்றையும் காட்டிற்கு அனுப்பிக் கொடுத்துவிடு என்கிறான்.

12. இதைக் கைகேயி ஆட்சேபித்தவுடன் தசரதன், நீ, நாடுதான் கேட்டாயே ஒழிய இவைகளை எல்லாம் சேர்த்துக் கொடு என்று கேட்கவில்லையே என்று அடாவழக்குப் பேசுகிறான்.

13. பிறகு பொக்கிஷத்தில் உள்ள நகைகளையெல்லாம் வாரி சீதைக்குக் கொடுத்து விடுகிறான்.

14. தனது மற்றொரு மகன் இலட்சுமணன் காட்டுக்குப் போவதைப் பற்றித் தசரதன் துக்கப்படவில்லை

-விடுதலை,31.3.17