பக்கங்கள்

புதன், 14 நவம்பர், 2018

மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன்

இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன்

பொதுவாக வான்மீகியினை ராமயணத்தை இயற்றியவராகவும், பின்னர் கம்பர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தவராகவும் பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். உண்மையில் ராமாயணம் வான்மீகியால் எழுதப்படுவதற்கு முன்னரே மக்களிடம் நாட்டுப்புறக் கதையாக பல்லாண்டுகளாக இருந்துவந்துள்ளது. இதனாலேயே இந்தியாவினைத் தாண்டியும் யாவா,சீனா, தாய்லாந்து போன்ற பல இடங்களில் வேறுபட்ட வகைகளில் ராமாயணங்கள் உள்ளன. வான்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட பவுத்த ராமாயணம் இன்னொன்று இந்தியாவிலேயே உண்டு(அதில் ராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள்).

இவ்வாறு ராமாயணக் கதையானது வேறுபடுவதற்கு நெடுநாட்களாக வாய்வழியாகக் கடத்தப்படும்போது ஏற்பட்ட திரிபுகளும், நாட்டுப்புறக் கதையினை எழுத்துவடிவில் கொண்டுவரும்போது அவரவர் தமது விருப்பப்படி எழுதிவைத்ததுமே காரணங்களாகும். இதனை மேலும் விளங்கிக்கொள்வதற்காக கிரேக்கத்திற்கு சென்றுவருவோம். கிரேக்கக் காவியமான ஒடிசி (Odyssey) ஆனது Homer இனால் இயற்றப்பட்டது எனவே நம்பப்பட்டிருந்தது. பின்னர் Milman Parry என்ற அறிஞர் ஏற்கனவே வாய்மொழிப் பாடல்களையே Homer இனால் எழுதப்பட்டதே தவிர இயற்றப்பட்டதல்ல என அறிவியல்ரீதியில் நிறுவினார். அங்கு காப்பியத்துடன் மதம் ராமாயணத்தைப் போன்று கலக்காமையால் உண்மை வெளிவந்தது. கிரேக்கம் ஏன், தமிழர்களையே எடுத்துக்கொண்டால் சங்க காலப் பாடல்களைப் பாருங்கள், அங்கு புலவர்கள் பல நேரங்களில் தொகுத்தவர்களாகவே கூறப்படுவார்கள் (தொகுத்தவன்-புலவன், தொகுப்பித்தோன்- அரசன்) . அவ்வாறாயின் ஏற்கனவே வாய்மொழிப் பாடல்களாக இருந்தவற்றையே சங்ககாலப் புலவர்கள் தொகுத்திருந்தனர்.

இவ்வாறே ராமாயணமும் ஏற்கனவேயிருந்த வாய்மொழிக் கதையினையே வான்மீகி சில மாறுதல்களுடன் ராமரைத் தெய்வீக மனிதராக மாற்றி எழுதினார். பவுத்த ராமாயணமும் தனது நோக்கில் எழுதப்பட்டிருக்கும். இவ்வாறு 24 விதமான இராமாயணங்கள் இந்தியாவில் மட்டுமே இருப்பதாக சி.ஆர்.சீனி வாசய்யங்கார் `இதர இராமாயணங்கள்` என்ற நூலில் கூறியுள்ளார். வான்மீகி எழுதிய பின்னரே ராமாயணம் பிற இடங்களிற்குப் பரவியிருப்பின் அவற்றுக்கிடையே பெரிய மாறுதல்கள் இடம்பெற்றிருக்காது. புராணத்தின்படி பார்த்தாலே நாரதர் சொல்ல வான்மீகி எழுதியதாகவே உள்ளது. இங்கு நாரதர் என்ற புனைவினை விடுத்தால் யாரிடமோ கேட்டே வான்மீகி எழுதியுள்ளார். வான்மீகி எழுதிய பின்பும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நம்பகத்தன்மையினை ஏற்படுத்துவதற்காகவே வான்மீகியும் அதே கதையில் ஒரு பாத்திரமாக்கப்பட்டார்.

Sunplus Corp.

வான்மீகி ராமயணத்தின் பவுத்தத்தின் மீதான போர்:
வான்மீகி ராமாயணம் என்பது பவுத்த எதிர்பினையும், பார்ப்பனியத் தாங்கலையுமே முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இதனை விளங்கிக்கொள்வதற்கு புத்தரின் காலத்திற்குச் சென்றுவரவேண்டும். பார்ப்பனியர் குளிரான இடங்களிலிருந்து வந்தமையால் நெருப்பினைக்(அக்கினி) கடவுளாகவும் வேள்வியினை(யாகம்) முதன்மையான சடங்காகவும் கொண்டிருந்தனர். இந்த வேள்விகளின் போது பெருமளவு மாடுகளையும், பிற மிருகங்களையும் வெட்டி வேள்வியில் பலியாக்கி வந்தனர் (இதற்கான சான்றுகளை வேதங்களிலேயே காணலாம்). இத்தகைய நிலையில் வேளாண்மையில் பயன்படுத்தப் போதிய மாடுகள் இன்மையால் புத்தர் வேள்வியினை எதிர்த்தார். ஒரு முறை சொர்க்கத்திற்குச் செல்ல என்று கூறி பார்ப்பனர்களால் யாகம் ஒன்று நடாத்தப்பட்டு மிருகங்கள் வெட்டப்பட்டு அதில் பலியிடப்பட்டன. அந்த யாகம் நடைபெறுமிடத்திற்குச் சென்ற புத்தர், ஏன் இவ்வாறு மிருகங்களை நெருப்பில் பலியிடுகிறீர்கள் எனக்கேட்டார். அப்போது பார்ப்பனர்கள் யாகத்தில் பலியிடப்படும் மிருகங்கள் எல்லாம் நேரே சொர்க்கம் செல்வதால் கவலைப்படவேண்டாம் எனக்கூற, புத்தர் “ இவ்வாறு மிருகங்களைப் பலியிட்டுப் பின்னர் சொர்க்கம் போவதற்குப் பதில் நீங்களே நேரில் நெருப்பில் குதித்து நேரடியாகச் சொர்க்கம் செல்லலாமே! “ என்றார். பார்ப்பனர்களிடம் பதிலில்லை, அந்த யாகம் பாதியிலேயே குழம்பிற்று. இவ்வாறு புத்தரிற்குப் பின்னரும் பவுத்தர்களிற்கும் பார்ப்பனர்களிற்கும் யாகங்கள் தொடர்பான மோதல்கள் இடம்பெற்றுவந்தன. இக் காலப்பகுதியிலேயே வான்மீகி ராமாயணம் எழுதப்படப்பட்டது.

இப்போது ராமாயணத்திற்கு வந்தால், ராமன் மேற்கொண்ட முதற்போர் தாடகை என்ற அரக்கப் பெண்ணிற்கு எதிராகவேயிருந்தது. அதாவது வேள்வியினைக் குழப்ப வந்த தாடகையினை எதிர்த்து விசுவாமித்திரரின் அழைப்பின் பெயரில் ராமன் எதிர்த்துப் புரிந்த போரே ராமனின் முதற்போர். இதிலிருந்தே அரக்கர்களுடனான பகை ராமனிற்குத் தொடங்குகின்றது. இங்கு யாகத்தைக் குழப்பும் அரக்கர்களாக புத்தரும், அவரது கொள்கையினைப் பின்வற்றுவோருமே உருவகப்படுத்தப்படுகின்றார்கள். இங்கு ராமயணத்தில் வேள்வியிக்குக் கொடுக்கப்படும் சிறப்பினையும், அதனை எதிர்த்தோரை கொடிய அரக்கர்களாகவும் உருவகப்படுத்துவதனைப் பார்த்தால் வான்மீகியின் நோக்கம் புலனாகும். இதனைப் படிக்கும் சிலரிற்கு `நாம் இறைச்சி சாப்பிட்டுவிட்டுக் கோயிலிற்கே போவதில்லை, ராமபிரான் எவ்வாறு மிருகங்களைப் பலியிடும் யாகத்திற்கு உதவுவார்` என்ற ஐயம் ஏற்படும். ராமாயணத்தில்

ராமர்_இறைச்சி_உண்பவர்_மட்டுமல்லாமல்_மதுவும் உண்பார் (சான்று- (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8). வான்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க உருத்திர காண்டத்திற்கு வரவேண்டும்.
ராமர் அரசனாக முடி சூட்டப்பட்ட பின்பும் அரசாட்சியில் ஈடுபடவில்லை. பரதனும், அமைச்சர்களுமே ஆட்சியினைப் பார்த்துக்கொண்டனர். வான்மீகி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான்`.

`நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).`
இவ்வாறு ஆட்சியில் பங்கெடுக்காத ராமன் முதன்முதலில் ஆட்சியில் செய்யும் செயலே சம்பூகன்_தலைவெட்டல் ஆகும். அதாவது சூத்திரர்கள் தவம் செய்யவோ அல்லது ஞானம் (கல்வி) பெறவோ கூடாது என்ற பார்ப்பன சனாதன தர்மத்திற்கு முரணாக, சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்வதாக பார்ப்பனர்கள் ராமனிடம் முறையிட, அவன் மரத்தில் தொங்கியபடி தலைகீழாகத் தவம் செய்த சூத்திரனான சம்பூகனின் தலையினை வெட்டி வீழ்த்துகின்றான். (உத்தர காண்டத்தின் 73 முதல் 76 வரையிலான சருக்கங்கள்). இவ்வாறு வான்மீகி ராமயணமானது பார்ப்பனிய நலன்களிற்காகப் பவுத்தத்தின் மீ து மேற்கொள்ளப்பட்ட போராகவே உருவகப்படுத்தப்படுகின்றது. வான்மீகி காலத்தில் பவுத்தமே பார்ப்பனியத்தின் எதிரியாகக் காணப்பட்டமையால் வான்மீகி ராமாயணம் பவுத்தத்தின் மீது போரினைத் தொடுத்தது, ஆனால் கம்பனின் காலத்தில் அத் தேவையில்லை. எனவே கம்ப ராமாயணம் யார் மீது போர் தொடுத்தது என இனிப் பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தின் சைவத்தின் மீதான பனிப்போர்:::
கம்பரின் காலத்தில் பவுத்தம் இந்தியாவை விட்டுத் துரத்தியடி்கப்பட்டு, சமணம் கழுவேற்றப்பட்டு விட்டது. எனவே அவற்றினை எதிர்க்கவேண்டிய தேவை கம்பரிற்கு இல்லை. நாயன்மார்களின் செயற்பாட்டினாலும், அக் காலச் சோழ அரசர்களின் தாங்கலாலும் சைவமானது பெரும் சமயமாக உருவெடுத்திருந்தது. கம்பரோ வைணவர் என்பதுடன் அக் காலத்தில் சைவத்திற்கும் வைணவத்திற்குமிடையே பூசல்கள் காணப்பட்ட காலம். எனவேதான் கம்பர் சைவத்தின் மீதான பனிப்போராகக் கம்ப ராமாயணத்தை எழுதியிருந்தார்.

இங்கு பனிப்போர் (Cold war) என்ற சொல் கவனிக்கத்தக்கது (பனிப்போர் என்பது தானே நேரடியாக ஈடுபடாமல் மறைமுகமாகப் போர் செய்வது. எ.கா- அமெரிக்கா-சோவியத் பனிப்போர்). வான்மீகி போன்று வெளிப்படையாகவல்லாமல் கம்பர் இவ்வாறு மறைமுகமாகப் போர் புரிவதற்குச் சோழர்களின் சைவத்தின் மீதான பற்று, பார்ப்பனிய நலன் இரு புறங்களிலும்(சைவம்-வைணவம்) இருந்தமை, சைவர்களையும் கவர்ந்து தமது கடவுளை ஏற்கச்செய்தல் ஆகியவை காரணங்களாக அமைந்திருக்க்கூடும். இது பனிப்போர் என்பதால் மிக நுணுக்கமாகப் பார்த்தாலே கம்பரின் நோக்கத்தினை விளங்கிக்கொள்ள முடியும். சைவ-வைணவ முரண் என்பது யார் முதன்மையான கடவுள், எந்தக் கடவுள் ஆற்றல் கூடியவர், எந்தப் பெயரினை (நாமத்தை)உச்சரித்தல் என்பன தொடர்பான மோதல்களே என்பதனை மனதிற்கொண்டு பாருங்கள்.
கம்பர் முதற் கட்டமாக சிவ (சைவ) பக்தர்களாகவும், ராம பக்தர்களாகவும் உருவகப்படுத்தப் படுபவர்களைக் கொண்டு தனது பனிப்போரினைத் தொடங்குகின்றார். சிவ பக்தர்கள் (வாலி முதற்கொண்டு ராவணனும்,அவரது அரக்கர் கூட்டமே சிவ பக்தர்கள்) மற்றையோரின் மனைவியினைக் களவாடுபவர்களாகவும், போரில் தோற்பவர்களாகவுமே காண்பிக்கப்படுகின்றனர். மறுபுறத்தில் வான்மீகி ராமாயணத்தின்படி வாலி இறந்தபின் சுக்கீரிவன் வாலியின் மனைவியான தாரையினைத் தனது மனைவியாக்கிய செய்தியினை கம்பன் மாற்றி ராம பக்தனான சுக்கீரிவனின் நற்பெயரினைப் பேணுகின்றான். இன்னொரு ராம பக்தனான அனுமானின் ஆற்றலினைக் கூறும்போது சிவனாலும் செய்ய முடியாத செயலினைச் செய்தவனாகக் காட்டப்படுகின்றான் (சான்று- கம்ப ராமாயணப் பாடல் 6019 – “முத்தலை எஃகினாற்கும்…” ). இன்னொரு ராமபக்தனான அங்கதனின் செயலினை உருத்திரமூர்த்தியினாலும் செய்ய இயலாது எனவும் ( க.ரா 7939 வது பாடல்- “அத்தொழில் கண்ட வானோர்..ஈசற்கும் இயலாது.”.) என்கின்றார்.

கம்பன் இரண்டாவது கட்டமாக சிவனால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஒவ்வொன்றாக ராமனால் வெற்றி கொள்ளப்படுவதாகக் காட்டுகின்றார். இதனை ராமன் சிவதனுசினை(சிவன்-வில்) சீதை சுயம்வரத்தின்போது உடைப்பதுடன் தொடங்குகின்றது(க.ரா 3045 வது பாடல்- “செறுத்துஇறுதி யில் புவனி…”). அடுத்தாக “ சங்கரன் கொடுத்த வாளும்…” பாடல் பொதுவாக அறியப்பட்டதே. இவ்வாறு சிவன் வழங்கிய ஆயுதங்களும், வரங்களும் மட்டும் ராமனால் தோற்கடிக்கப்படவில்லை. சிவனின் வேலாலும் (சூலத்தாலும்) துளைக்கமுடியாத மார்பினை உடைய பலம் பொருந்திய ராவணன் (8275 வது பாடல்- “பழிப்புஅறு மேனி…”) எனக் குறிப்பிட்டு, பின்னர் போரில் ராம பாணத்தால் துளைக்கப்படுவதன் மூலம் ராமனின் ஆயுதம் சிவனின் ஆயுதத்தை விடப் பலம் வாய்நததாக் கம்பன் கூறுகின்றான். இன்னோரு இடத்தில் சிவனின் சூலத்தை விட ராமனின் அம்பே வலுக் கூடியது என ராவணன் வாய் மூலமாகவும் (7294 வது பாடல்- “இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலைமூன்று…” ) கூற வைக்கின்றார் கம்பர். மேலும் சிவனின் வில்லும் திருமாலின் வில்லும் நேரடியாக மோத சிவனின் வில் தோற்றது (1291 – “இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்…” ) என்று வேறு கம்பர் பாடுகின்றார்.

மூன்றாவது கட்டமாகக் கவிக் கூற்று உவமைகள், ஒப்பீடுகள் என்பவற்றை நோக்கலாம். கம்ப ராமாயணத்தில் சிவன் குறித்து கூறப்பட்டுள்ள 395 இடங்களில் 168 இடங்கள் கவிக் கூற்றாக வருவதாகப் பெருமையாகக் கூறுகின்றார் `சிவம் பெருக்கும் சீலர்` ராய.சொ என்பவர். அது உண்மைதான் , ஆனால் அவற்றில் பெரும்பாலானவைகளில் அரக்கர்களின் ஆற்றலே சிவனிற்கு ஒப்பிடப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு👇

• திரிசுரா என்ற அரக்கன் சிவனின் சூலாயுதம் போன்றவன் (2987)
• அயோமுகி என்ற அரக்கியின் தோற்றம் ஊழிக்கால உருத்திரமூர்த்தியின் தோற்றம் போன்றது (3585)
• இந்திரசித்தனின் தோற்றமானது சிவன்,முருகன்,விநாயகன் ஆகிய மூவரையும் ஒருங்கே சேரப் பெற்ற தோற்றம் எனல் (4974)
• சிவனும் நடுங்கும் படி இந்திரசேனன் அம்புகளை எறிதல்(8123)
• ராமன் விட்ட கருடப்படையினால் சிவன் அணிந்திருந்த பாம்புகள் அஞ்சி நடுங்கல் (10006)

இவ்வாறு நீண்டு செல்லும். இதை விடப் பல இடங்களில் சிவன் `அழிப்புக் கடவுள்` என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் (பொதுவாக மக்கள் உலகை அழிக்கும் கடவுளிடம் இறையன்பு செலுத்தமாட்டார்கள், காத்தல் கடவுளையே விரும்புவர் என்ற உளவியல்). இவற்றின் உச்சமாக சிவனின் உணவுக்காகவே ஊழிக்காலம் ஏற்படுகின்றது எனக் கம்பன் “நீலநிற நிருதர், யாண்டும்…” (5942) எனப் பாடுகின்றார். சைவ மதத்தவரோ ஒரு உயிரினைக் கொன்று உண்பதே தீவினை (பாவம்) என்றிருக்க, கம்பரோ ஊழிக்காலத்தில் சிவனோ பசிக்காகமுழுஉலகையும்உண்பவராக க் காட்டுகின்றார். இதிலிருந்து கம்பரின் நோக்கத்தினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இறுதிக் கட்டத்தில் சிவனின் எட்டுத் தோள்களும் ராமனின் ஒரு விரலிற்கு ஈடு ஆகாது (7295 – “பேய்இரும் கணங்க ளோடு…” ) என்கின்றார் கம்பர். சிவ பக்தனான ராவணனே ராமனைப் பரம்பொருளாக ஏற்றுக்கொள்வதாகவும் (9837- “சிவனோ? அல்லன் நான்முகன்..”)ராவணன் வதைபடலத்தில் (134) கம்பர் பாடுகின்றார். எல்லாவற்றிலும் உச்சமாக சிவன்,பிரம்மன் உட்பட எல்லோரும் “நாராயணாய” எனும் மந்திரத்தை மறந்தால், அவர்கள் இறந்தவரேயாவர் (6232- “முக்கண் தேவனும், நான்முகத்து ஒருவனும்….” ) என்று கம்பர் கூறி எந்த நாமத்தை(பெயர்)
யார் கூற வேண்டும் என வலியுறுத்தி சைவத்தின் அடிமடியிலேயே கைவைக்கின்றார்.

சில இடங்களில் கம்பர் சிவனைப் பெருமையாகவும் குறிப்பிடுகின்றார் என்பதனை மறுக்கவில்லை. அதெல்லாம் மேற்கூறியனவற்றுடன் மட்டுமல்லாமல், விரிவஞ்சி நான் குறிப்பிடாத இன்னமும் பல கம்பரின் கூற்றுக்களுடன் கவனமாக ஒப்பிட்டுப் பார்த்தால் கம்பர் சைவத்தின் மீது மேற்கொண்ட பனிப்போர் தெளிவாகப் புரியும்.

வான்மீகி ராமாயணம் குறிப்பிடும் லங்கா(Island) இலங்கை(Srilanka)யல்ல:::

ராமாயணத்தில் ராவணன் வாழ்ந்ததாகக் கருதப்படும் தீவு இலங்கையல்ல எனக் கூறினால் நீங்கள் வியப்படையக்கூடும். அவ்வாறாயின் ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ராமேசுவரம், தனுசுகோடி, இலங்கை வேந்தன் என்பனவெல்லாம் என்னவாயிற்று என எதிர்க்கேள்வி கேட்கவும் கூடும். இந்தக் கேள்விக்கான பதில், அவையெல்லாம் கம்பரின் இடைச்செருகல்களே தவிர அவை எதுவுமே வான்மீகி ராமாயணத்தில் இல்லை. வான்மீகி ராமாயணத்தில் ராவணனின் வாழ்ந்த இடமாக `லங்கா` குறிப்பிடப்படுகின்றது என்பது உண்மையே. ஆனால் லங்கா என்ற சொல் சமசுகிரதத்தில் நீரால் சூழப்பட்ட தீவினியையே குறிக்கும் (இலங்கையினையல்ல). வான்மீகி ராமாயணத்தின் படி ராவணன் ஒரு தீவில் (லங்காவில்) வாழ்ந்தாகக் கூறப்படுகின்றதே தவிர, அத் தீவு இலங்கை எனக் குறிப்பிடப்படவில்லை. ராமரின் கதையினை உண்மை என நம்பாதவர்கள் கூடக் கம்ப ராமாயணத்தை கம்பரின் கவித்திறனிற்காக எவ்வாறு பாராட்டுகின்றார்களோ அதே போல வான்மீகி ராமாயணம் அது சொல்லும் புவியியல் அமைவிடங்களின் துல்லியத்திற்காகப் பாராட்டப்படும். எனவே வான்மீகி ராமாயணத்தின் புவியியலை அடிப்படையாகக் கொண்டே ராமாயணப்போர் நடைபெற்றது இலங்கையில் அல்ல என பின்வரும் அடிப்படைகளில் அறிந்துகொள்ளலாம்.

• கிட்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திரமலையை கால்நடையாக சென்றடைய இராமன் எடுத்துக் கொண்ட காலம் வெறும் நான்கே நாட்கள் என்கின்றது வான்மீகி ராமாயணம். கிட்கிந்தை (Kiskkindha) என்பது இந்தியாவின் இன்றைய மத்தியப்பிரதேசத்தில் யபல்பூர் (Jabalpur) பகுதியினைக் குறிக்கும். இங்கிருந்து ராமேசுவரத்தை நான்கு நாட்களில் நடந்து கடப்பது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது. (படம் Google map காண்க). (ராமன் நடந்து சென்ற ஏனைய இடங்களின் தூரம் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் நினைவிற்கொள்க)

• அனுமன் லங்கா(Island)வுக்குச் சென்றபோதும், ராமன் லங்காவை பார்வை இட்டபோதும் மகேந்திர கிரி மலையில் ஏறி நின்று பார்த் தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது. ராமேசுவரத்திலோ அல்லது அதனையொட்டிய எந்தப் பகுதியிலுமோ அவ்வாறான எந்த மலையுமில்லை. ((சுற்றுலாப் பயணிகளிற்கான வழிகாட்டிகள் வெறும் மணல்திட்டினையே மகேந்திரகிரி மலை என்கின்றனர், ஆனால் முன்பு மலையிருந்து அழிந்ததற்கான சான்றுகள் கூட எதுவும் அங்கில்லை)

• வான்மீகி ராமாயணத்தின் பாலத்தின் மறுபக்கத்திலும் ஒரு மலை (Trikuta hill)உண்டு. மன்னாரிலோ அல்லது அதனை அண்மித்த பகுதிகளிலும் கூட அவ்வாறான மலை எதுவுமேயில்லை.

• வான்மீகி ராமாயணத்தின்படி பாலமானது ஐந்து நாட்களில் முறையே 14,20,21,22,23 Jojans ஆகக் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மொத்தமான 100 jojans நீளம் என்பது பதினொன்று அரை மைல் (11.5) தூரமெனக் கணிப்பிடுகின்றார் ( Ramajana and Lanka by T. Paramasiva Iyer). ராமேசுவரம்-மன்னார் தூரம் குறைந்தது 30 மைல்களாவதாகவிருப்பதால், ராமாயணம் குறிப்பிடும் பாலம் இதுவல்ல.

மேற்கூறிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறிப்பிடும் லங்கா(தீவு) என்பது இலங்கையல்ல என்பதும் ராமர் கட்டிய பாலம் ராமேசுவர- மன்னார் பாலம் அல்ல என்பதும் தெளிவு.

அவ்வாறாயின் அந்த லங்கா எங்குள்ளது? என்ற கேள்வி ஏற்படும். கிட்கிந்தையில் இருந்து காட்டு வழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பது ஒரிசா தான் (சிறிய வேறுபாடு புறக்கணிக்கத்தக்கது) . அங்கு மகேந்திரமலையும் கடற்கரையும் இருப்பது கூடுதல் செய்தி. இந்தப் பதிவின் நோக்கம் லங்கா எது என்று கண்டுபிடிப்பதல்ல, மாறாக லங்கா என்பது இலங்கையல்ல எனக் கூறுவதே என்பதால் இத்துடன் லங்கா எங்கிருக்கின்றதுஎன்ற ஆய்வினை நிறுத்துவோம். (இதற்கு மேலதிக ஆய்வுகள் தேவை).

10ம் நூற்றாண்டுவரை லங்கா என்பது பற்றி யாருமே ஆந்திராவினைத் தாண்டிச் சிந்திக்கவில்லை. இதில் சிறிது குழப்பம் சம்பு ராமாயணத்தில் (Champu Ramajana in CE 1010-1050) ஏற்பட்ட போதிலும், இலங்கையுடன் தெளிவாக ராமாயணத்தை தொடர்புபடுத்தியவர் கம்பரே ஆகும். இதற்கு கம்பரின் வாழ்விடமும், அந்த நூற்றாண்டுகளில் இடம்பெற்ற சோழப் படையெடுப்புக்களும் காரணமாகவிருக்கக்கூடும். அமைவிடத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தோனிசியா ராமாயணத்தில் ராவணன் வாழ்ந்த தீவாக அங்குள்ள ஒரு தீவே (லங்கா) கருதப்படுகின்றது. பின்னர் இந்தியாவிலுள்ள ராமாயணங்களைப் பொதுமைப்படுத்தும் நோக்கில் `இலங்கையே லங்கா என்ற கம்ப ராமாயணக்கருத்து` வட இந்தியாவில் ஏற்பட்டது. சோழப் படையெடுப்புக்களின் தாக்கத்தாலும் மகாயன பவுத்தத்தில் பார்ப்பனிய ஊடுருவல் செல்வாக்கினாலும் இலங்கையிலும் பரவியது. இவ்வாறு இரு புறங்களிலும் சிறிதளவு அறியப்பட்ட இலங்கைதான் லங்கா என்ற செய்தி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1934 இல் ஆற்றிய உரை (லங்காதான் இலங்கை என்ற உரை) ஒன்றின் பின்னரே இலங்கையில் மிகவும் பரவலடைந்தாகக் கூறுகின்றார் பரமசிவ ஐயர். மேலும் இவ்வுரையின் பின்னரே இந்தியாவில் கூட பொதுமக்களிடம் இந்த நம்பிக்கை பெருமளவில் ஏற்பட்டதாகவும் 1940 இல் வெளியிடப்பட்ட Ramajana and Lanka நூலில் T. Paramasiva Iyer குறிப்பிடுகின்றார்.

முடிவாக வான்மீகி ராமாயணத்திற்கும் இலங்கைக்கும் எந்தத்தொடர்புமேயில்லை. அதுவெல்லாம் கம்பரின் இடைச்செருகலே. ராமர் பாலத்தை நாசா (NASA) சான்றுப்படுத்தியதாக யாராவது புரளி கூறினால், முதலில் வான்மீகி அதனைக் கூறினாரா? என எதிர்க்கேள்வி கேளுங்கள்.

குறிப்பு-இங்கு இன்னொரு விடயத்தினையும் அழுத்திக் கூறவேண்டும். ராமாயணம் வான்மீகி கூறியபடி உண்மையில் நடைபெற்றது என்ற அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக வான்மீகியின் விவரிப்பிலையே இன்றைய இலங்கைக்குத் தொடர்பில்லை என்ற நோக்கிலேயே இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

வி.இ.குகநாதன்”

வெள்ளி, 2 நவம்பர், 2018

இராமன் கட்டிய பாலம் எங்கே?

மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்

தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- நான் (செ.ர.பார்த்தசாரதி) 2.11.2012ல் முகநூலில் பதிவிட்டது.