பக்கங்கள்

புதன், 19 ஜூன், 2019

உண்மை இராமாயணம் (2)



20.3.1948  - குடிஅரசிலிருந்து

சென்ற இதழ் தொடர்ச்சி

சீதை: என்னைப் போல் நீங்கள் என்ன தாய் தகப்பன் இன்னாரென்று அறிய முடியாத பிள் ளையா? அல்லது உங்கள் தகப்பனார்க்கு நீங்கள் என்ன வைப் பாட்டி மகனா? எனக்குத் தாங்கள் சொல்வதிலிருந்து புத்தி எப்படி எப்படியோ எங்கு எங்கோ போகிறதே! இந்தப் பட்டாபிஷேகம் என் தகப்ப னாருக்கும், பரதன் பாட்டன், மாமன் முதலியோருக்கும் தங்கள் மீது மிகவும் அன்பும் உயிர் போன்ற ஆசையும் உள்ள உங்கள் சிற்றன்னை கைகேயி அம் மாளுக்கும் கூடத் தெரிவிக்கப்படாமல் ஏற்பாடு செய்யப்பட்டது என்றால், இது மகா ஆச்சரியமாகவும், மகா மூடு மந்திரமாகவும் இருக்கிறதே! இதில் ஏதோ ரகசியம், அதுவும் திருட்டுத் தனமான துரோகமான சூழ்ச்சி ரகசியம் இருக்க வேண்டும். அதைச் சற்று விளக்குங்கள். என் மனம் அதை அறியத் துடிக்கின்றது. நாதா! நாதா! சற்று சொல்லுங்கள்.

இராமன்:- சீதாய்! நீ ஊகிப்பது நிஜம் தான். இதில் பல சூழ்ச்சிகள் இருக்கின்றன என்பதும் மெய்தான். அவற்றைச் சொல்லுகிறேன். கேள்! நான் அரசனுக்குப் பட்ட மகிஷியின் புத்திரன் என்பதிலும், சிரேஷ்ட (மூத்த) புத்திரன் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் நமது அரசர் பரதனின் தாயாரான கைகேயியை மூன்றாந்தாரமாக மணக்க வேண்டுமென்று ஆசை கொண்டார். ஏனென்றால் அந்த அம்மாள் மகா சுந்தரவதி. உலகில் உள்ள பெண்களில் எல்லாம் மிக அழகியவள். மிக்க குணவதி, அந்தச் சமயத்தில் என் தாயார் மிகக் கிழப்பருவம் அடைந்தவர்களாய் இருந்தார்கள். ஆதலால் அரசர் கைகேயி யின் குணத்தையும் அழகையும் கேள்விப் பட்டுக் கேகய மன்னனிடம் சென்று பெண் கேட்டார். கேகய மன்னன் கிழ வனுக்குப் பெண் கொடுக்கவும் அதுவும் மூன்றாம் தாரமாய் கொடுக்கவும் சம்மதிக்காமல் மறுத்து விட்டார். பிறகு என் தந்தையார் இந்தக் குறைகளுக்குப் பரிகாரமாகத் தனது ராஜ்யத்தைக் கைகேயிக்குக் கொடுத்து விடுவதாகவும் கைகேயி, தனது மகனுக்குப் பட்டம் கட்டிக் கொள்ளத் தான் சம்மதிப்ப தாகவும் கூறி அன்றே சுலபமாக ராஜ்யத்தைக் கைகேயிக்கு ஒப்புவித்து அந்த அம்மாளுக்காக தான்  ஆளுவதாகச் சொல்லி ஒப்புக் கொண்டு கைகேயியைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் இந்த நாடு கைகேயிக்கும், பரதனுக்கும் சொந்தமானதாக இருந்து வருகிறது. இதனால் எனது தந்தையார் பரதனுக்கும், பரதன் பாட்டனார், மாமன் முதலியவர்களுக்கும், பரதன் தாய், கைகேயி அம்மைக்கும் தெரியா மலும் பரதன் வருவதற்கு முன்னாலு மாகப் பட்டாபிஷேகத்தைத் திடீர் என்று நினைத்து ஒருவருக்கும் தெரி யாமல், நினைத்த மறுநாளே பட்டா பிஷேக முகூர்த்தம் வைத்துக் கொண் டார். இந்தப் பட்டாபிஷேகத்தை உன் தந்தை ஜனகமகாராஜாவுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று நீ கேட்கக் கூடும். ஏன் தெரியவில்லை என்றால் உன் தகப்பனாருக்குத் தெரிவிப்பதாய் இருந்தால் கைகேயியின் தகப்ப னாருக்கும் தெரிவிக்க வேண்டி வரும். அப்படித் தெரிவிக்கா விட்டாலும் கூட உன் தகப்பனாருக்கு இப்படி மகாராஜா பட்டாபிஷேகத்தை இவ்வளவு ரகசியமாய் நடத்துவது பற்றி அதிருப்தி ஏற்படக் கூடும். இவை எல்லாம் இல்லா விட்டாலும் அவரும் வந்திருக்கிற சமயத்தில், இப்படிப்பட்ட தடையான காரியங்களும், சூழ்ச்சி வெளியாகும் காரியங்களும் நடந்து விட்டால் அதை அவர் சகிக்க மாட்டார். என் தகப்பனார் மீது மிகுந்த கோபமும் அசிங்கமும் கொள்வார். ஆனதால் ரகசியமாகக் காரியம் செய்ய வேண்டி வந்தது. இது வெளியாகிவிட்டது. இதனால் இந்த கதி ஏற்பட்டது. ஆதலால்தான் இதில் ஆச்சர்யப்படத்தக்கது ஒன்றுமில்லை என்றேன்.

சீதை:- அப்படியா சங்கதி! தாங்களும் தங்கள் தகப்பனாரும் மிகச் சாமார்த்திய மாய், நல்ல வேலை செய்திருக்கிறீர்களே! இதற்கு வசிஷ்டர் எப்படி ஒப்புக் கொண் டார்?

இராமன்:- என் தகப்பனார் இஷ்டப் படி கேட்டு நடப்பவர்தானே நமது குரு வசிஷ்டர். அன்றியும் அவருக்கும் இந்த தந்திர ஏற்பாடுகள் எல்லாம் தெரியும். அவரும்தான் இந்த முயற்சியில் பங் கெடுத்துக் கொண்டு யோசனை சொல்லி இருக்கிறார். குடி ஜனங்கள் பின்னால் சங்கதி தெரிந்தால் அவர்கள் நம்மை அவமதித்து விடுவார்களே என்று கருதி, என் தகப்பனார் என்னைக் குடிஜனங்களுக்கு நல்லவனாய் நடந்து கொள்ளும்படியும், அடிக்கடி அவர் களைக் காணும் படியும், அவர்கள் சேமலாபங்களை விசாரித்து அன்பு வார்த்தை கூறும்படியும் செய்து அவர்களை என் வசமாக்கி வைத்தார். இவ்வளவு மாத்திரம் தானா? இன்னும் அவர் செய்த நல்ல காரியங்கள் எவ்வளவு தெரியுமா? கலியாணமானவுடன் பரத னைக் கேகய நாட்டிற்கு அனுப்பி விட்டார்.

அவனுக்கும் குடிகளுக்கும் சம்பந்தமில்லாமலே செய்தார். கைகே யிக்கும் என்னை நல்ல பிள்ளையாகவே நடந்து அவளது பூரண அன்பையும், நம்பிக்கையையும் பெரும்படியும், கைகேயிக்குப் பரதன் ஞாபகமே வராமல் இருக்கும்படி நடந்து கொள்ளவும் செய்தார். என்னமோ ஒருவராலும் செய்ய முடியாததான, அவ்வளவு தந்திரமாகவும், முன்னேற்பாடாகவும் செய்த இந்தக் காரியம், கைக்கெட்டியது வாய்க் கெட்டாமல் போனது போல் ஆகிவிட்டது. இந்தக் கைகேயி கடைசி நிமிஷத்தில் அப்படிச்செய்து விட்டாள் என் செய்வது? எனக்கு இப்போது எவ்வளவு அவமானம்?

திங்கள், 10 ஜூன், 2019

இராமாயணம் - தந்தை பெரியார்



இராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள், சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன் னைட், ஷேக்ஸ்பியர், மதனகாமராஜன், பஞ்சதந்திரக் கதைகள் முதலிய கட்டுக் கதைகளைப் போன்று இயற்கைக்கும் மனித ஆற்றலுக்கும் பொருத்த மற்றதும், அனுபவத்தில் சாத்தியப்படாததுமான அசாதாரணமானவைகளாய் இருப்பதால் இக்கதை உண்மையாய் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுவ தில்லை என்று உறுதியாய்க் கூறலாம்.

அசாதாரண சம்பவங்களால்தான் கடவுள் தன்மை அவதாரத் தன்மை முதலிய தெய்வீகத் தன்மைகளைக் கற்பிக்க முடியும் என்று சொல்லப்படுமானால், இக்கதையில் காணப்படும் அசாதாரண விஷயங்கள் பெரிதும் பொருத்தமற்றதும், தேவையற்றதும், நீதியற்றது மாய் இருப்பதோடு பொது நடத்தையில், தேவை உள்ள சந்தர்ப்பங்களில் அதாவது உயர் குணமும் முன் யோசனையும், கருணையும், சத்தியமும், தூரதிருஷ்டியும் நல்லெண்ணமும் காட்டப்பட வேண்டிய சாதாரணக் காலங்களில் அசாதாரண சம்பவத்தில் காட்டப்படும் தெய்வீகத் தன்மையோ அல்லது மிக மிக சாதாரணத் தன்மையில் காட்டப்படும் சராசரி மனிதத் தன்மையோ கூட இல்லாமல் இருக்கின்றன.

கதாநாயகனாகிய இராமனைக் கடவுளின் அவதாரம் என்று மக்கள் கருத வேண்டும் என்பதாகக் கருதியே கற்பனை செய்திருக்கும் இந்த இராமாயணக் கதையில், இராமனுடைய எண்ணம், பேச்சு, நடத்தை ஆகியவைகளில் வஞ்சகம், பொய், சூது, வன்னெஞ்சம், பேராசை, கொலை, மதுவருந்தல், மாமிசம் புசித்தல், மறைந்திருந்து கொல்லுதல், அபலைகளை, குற்றமற்ற வர்களை கொடுமை செய்தல் முதலிய தீயகுணங்களும் கூடா ஒழுக்கங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதனாலேயே இராமனும், இராமாயணக் கதையும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை அல்ல என்பதும், அவை சராசரித் தன்மையைவிடக் கீழ்ப்பட்டவை என்பதும் தெள்ளென விளங்கும் என்பதோடு மற்றும் இராமனுடையவும் இராமாயணத்தினுடையவும் எந்தக் காரியமும் எண்ணமும் தமிழ் மக்களுக்கு படிப் பினைக்கோ பின்பற்றுதலுக்கோ ஏற்றதல்ல என்பதை யும் தெளிவுபடுத்தும்.

கதை தோற்றம்

இராமாயணக் கதை தோற்றத்திற்காக அதில் கூறப்படும் காரணங்கள் பெரிதும் பகுத்தறிவுக்கும், தெய்வீகத் தன்மைக்கும் ஒத்ததாகச் சிறிதும் காண் பதற்கில்லாமல் இருக்கிறது. அதாவது:-

தேவர்கள் தாங்கள் செய்யும் யாகத்தை இராவணன் முதலிய இராட்சதர்கள் வந்து அழிப்பதாய் நான்முகனிடம் வந்து முறையிடுகின்றார்கள். நான் முகன் தன் தந்தையாகிய திருமாலிடம் சென்று முறையிடுகிறான். திருமால் தாம் பூமியில் இராமனாகப் பிறந்து இராவணனைக் கொல்லுவதாக ஒப்புக் கொள்ளுகிறார் இதுவே இராமாயண கதை தோன்றக் காரணம்.

திருமால் மனிதனாகப் பூமியில் பிறந்து பல சங்கடங்களை அனுபவிக்கக் காரணம் என்னவெனில், முன்பு அவர் செய்த பாபச்செயல்களுக்காக அவருக்கு ஏற்பட்ட சில சாபக்கேடுகள் என்பதாகத் தெய்வீகப் புராணங்கள் சொல்லுகின்றன.

அவை யாவன:-

திருமால் பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் ஜலந்திராசூரன் மனைவியை வஞ்சகமாய்க் கூடின பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் திருமகளைப் பகல் காலத்தில் பிறர் அறியக் கலவி செய்த பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், இன்னும் இப்படிப் பலவாறாகப் புராணங்களில் கூறப்பட்டி ருக்கின்றன.

இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? இராட்சதர்கள் என்ப வர்கள் யார்? யாகம் என்றால் என்ன? கடவுளாகிய திருமாலுக்கு கொலை, களவு, காமம், விபச்சாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன? இக்காரியங்களைச் செய்பவர்கள் கடவுளர்கள் ஆவார்களா? தேவலோகத்துக்கும், பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன? தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும்? ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன்மையும் அளிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா? கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா? என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும்.

இன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப்பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்கமாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா? அதிலும் சிவபக்தனான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந்திருக்காதா? இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும், குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா? என்பனவும், இவை போன்ற பிறவுமே, இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாய் இருந்து வருவதை விளக்கும்.

மகப்பேறு யாகம்

இராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம், அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்குகாக, ஆடு, மாடு, குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன, பறப்பன, ஊர்வனவாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்ததாகவும் கூறுகிறது. ஒருவனுக்குப் பிள்ளை உண்டாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா? இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா? இப்படிப்பட்ட தேவர்களுக்கு ஓரரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம்! இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணம் ஆகலாம்.

நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கவுசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைத்து படுத்துக் கொண்டிருக்கிறாள். இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா? இன்னும் இந்த யாகத்தின் யோக்கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்பில் காணலாம். இரவு முடிந்தவுடன், இந்த கவுசலையையும் மற்றும் தசரதனின்  இரு மனைவி களாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்துவிடுகிறான். இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண்களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்து விட்டுப் பிறகு, அதற்காகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள். அதன்பிறகே இம்மனைவிகள் கர்ப்பவதி களாகக் காணப்படுகிறார்கள். (ஆங்கில மொழி பெயர்ப் பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.

இந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரி யங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத் தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத்தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார். இதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக் கணக்கான மனைவிகளை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப் பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக் குலாவித் திரிவதும் இயற்கையேயாகும். ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடையாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மை யற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா? என்பதும் யோசிக்கத் தக்கதாகும். அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்காக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண் களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும்?

உண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரத னுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடமில்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக் குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும், ஸ்மிருதிகளும் கூறுகின்றன. இதற்கு அனுபவ பூர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற (சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள். திருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப்படி பிறந்தவர்களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப் படுகிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புழுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத்திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.

மற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கரு உண்டாக்கியவர்கள் அல்லது பெற்றவர்கள், மனிதர் களாகக் கூட இருந்திருக்கவில்லை என்பது தெரியவரும். ஆதலால் இந்த யாகத்துக்கும், மகப்பேறுக்கும் சம்பந்த மில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.

குடிஅரசு - கட்டுரை - 11.12.1943

- விடுதலை நாளேடு, 23.4.17

மகப்பேறு யாகம்

11.12.1943  - குடியரசிலிருந்து...

இராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம்,அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்கு ஆக, ஆடு, மாடு குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன பறப்பன ஊர்வனவாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்ததாகவும் கூறுகிறது. ஒருவனுக்குப் பிள்ளை உணடாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா? இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா? இப்படிப்பட்ட தேவர்களுக்கு ஒரு அரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம்! இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயண மாகலாம்.

நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கௌசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரை யுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைந்து படுத்துக் கொண்டி ருக்கிறாள். (இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா? இன்னும் இந்த யாகத்தின் யோக்கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்பில் காணலாம்) இரவு முடிந்தவுடன், இந்த கௌசலையையும் தசரதனின் மற்றும் இரு மனைவிகளாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்துவிடுகிறான். இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண்களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்துவிட்டுப் பிறகு, அதற்கு ஆகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள். அதன்பிறகே இம்மனைவிகள் கர்ப்பவதிகளாகக் காணப்படுகிறார்கள். (ஆங்கில மொழி பெயர்ப் பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.

இந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரியங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத்தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத் தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார். இதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக் கணக்கான மனைவிகளை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப்பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக்குலாவித் திரிவதும் இயற்கையே யாகும். ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடை யாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மையற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா? என்பதும் யோசிக்கத்தக்கதாகும்.

அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்கு ஆக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண்களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும்?

உண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரதனுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடம் இல்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக்குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும் ஸ்மிருதிகளும் கூறுகின்றன. இதற்கு அனுபவப் பூர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற ( சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். திருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப் படி - பிறந்தவர் களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப்படு கிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புளுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத்திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.     மற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கருவு உண்டாக்கி யவர்கள், அல்லது பெற்றவர்கள், மனிதர்களாகக் கூட இருந்திருக்க வில்லை யென்பது தெரியவரும். ஆதலால் இந்த யாகத்துக்கும் மகப்பேறுக்கும் சம்பந்தமில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.

- விடுதலை நாளேடு, 19.5.17