பக்கங்கள்

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

இராமராஜ்ஜியம்

தந்தை பெரியார்இராமாயணம் என்பது நடந்த கதையா?

இராமன் என்று ஓர் அரசன் இருந்தானா?

கடவுள் இராமனாக அவதாரம் செய்தாரா?

என்பவற்றை நாம் ஆம் என்று ஒப்புக்கொள்ளுவதானால்,

கந்தபுராணம் என்பது நடந்த கதையா?

சுப்பிரமணியன் என்று ஒரு கடவுள் இருந்ததா?

இந்தச் சுப்பிரமணியன் என்பவன் சிவன் என்னும் கடவுளுக்கு மகனா?

என்பவற்றையும் ஆம் என்று ஒப்புக் கொள்ளவேண்டும். முந்தியதைச் சைவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? பிந்தியதை வைணவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா என்பது மற்றொரு தகராறாகும்.

இராமாயணத்தைவிடக் கந்தபுராணம் முந்தியதாகும். இராமாயணம் வைணவர்களின் கதை. கந்தபுராணம் சைவர்களின் கதை. இரண்டும் ஒரே தத்துவத்தைக் கொண்டவை. அதாவது, கடவுள் பூமியில் அவதாரமாகவும் கடவுள் மகனாகவும் மனித உருவில் வந்து அசுரர்களையும், இராட்சதர்களையும் கொன்று அவர்களது நாடுகளை அழித்து தேவர்களுக்கு நன்மை செய்தார் என்பதைத் தத்துவமாகக் கொண்டதாகும். இந்த இரு கடவுள்களும், மற்றும் பல தடவை பல ஜீவப்பிராணிகளாகப் பிறந்து இதுபோலவே பல காரியங்கள் செய்து பலரைக் கொன்று தேவர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள் என்ற கதைகளும் உண்டு.

இவைகள் எல்லாம் உண்மையில் நடந்தவைகளா அல்லது கற்பனையா என்பது ஒருபுறமிருந்தாலும், மனித வாழ்க்கை நடைமுறைகளுக்கு ஆதாரமாக இந்துக்கள் என்பவர்கள் இக்கதைகளில் சிலவற்றை அவ்வப்போது எடுத்துக் கையாளுகிறார்கள்.

அப்படிக் கையாளுபவற்றில் ஒன்றுதான் - இன்று நம்நாடு அரசியல் விவகாரங்களில் இராமராஜ்ஜியம் என்று பேசப்படுவதாகும். இந்தப்படி பேசப்படுவதும் இந்துக்களுக்குச் சம்பந்தப்பட்ட அளவில் மாத்திரம் பேச உரிமை பாராட்டக்கூடியதாக இருக்கலாமே தவிர, வேறு மதத்தவர்களுக்குச் சிறிதும் பொருத்தமற்றதும் வேறு மதத்தவர்களுக்கு ஆகப் பேச சிறிதும் உரிமை அற்றதுமாகும்.

ஏனெனில், காந்தியார் எப்படி இராமராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்லுகிறாரோ அதுபோல ஜின்னா சாயபு, நான் முகம்மது நபிகளின் ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னால் காந்தியார் கும்பல் ஒப்புக் கொள்ள முடியுமா? அதேபோல் ஒரு பவுத்தர், நான் புத்தபகவான் இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னால் மற்ற கும்பல்கள் ஒப்புக்கொள்ள முடியுமா?

காரியத்தில் இராமராஜ்ஜிய நிகழ்ச்சிகளைவிட முகமது நபி இராஜ்ஜியமும் புத்தபகவான் இராஜ்ஜியமும் பெரிதும் பகுத்தறிவுக்கும், விவகார ஞானத்திற்கும் ஒத்ததாக இருந்தாலும் மற்ற இந்து என்பவர் யாராவது இணங்கி இராஜிக்கு -  ஒத்துப்போவதற்கு வருவார்களா?

எனவே, ஒரு மத சம்பிரதாயமான சேதி ஒன்றை எடுத்துக்கொண்டு இதுதான் இந்தியா என்பதிலுள்ள எல்லா மதத்தவர்களுக்கும் எல்லா அரசியல் காரியத்திற்கும் பொருத்தமானது என்று சொல்லிக் கொண்டு, இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் கயவர்கள் என்று சொன்னால் நாம் யாரைக் கயவர்கள் என்று சொல்லுவது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

ஜூன் மாதம் 12ஆம்தேதி வெளியாகி 13ஆம்தேதி வெளியூர்களுக்கு வந்த ‘தினமணி’ பத்திரிகையில் ராமராஜ்ஜியம் என்னும் தலையங்கத்தில் துவக்கத்திலேயே அதன் ஆசிரியர்,

இந்தியாவில் இராமராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்று காந்திஜி கூறினால் இந்துமத ஆதிக்கத்தை முஸ்லிம்களின்மீது திணிக்கக் காந்திஜி விரும்புகிறார் என்று கயவர்கள் சொல்லித் திரிந்தார்கள் என்று எழுதி இருக்கிறார்.

ஆகவே, இராம ராஜ்ஜியம் அல்லது இராமராஜ்ஜியக் கொள்கைகள் என்பவைகள் இந்துமத சம்பந்தமானது என்று யாராவது சொன்னால் அப்படிச் சொல்லுகிறவர்கள் கயவர்கள் என்பது ‘தினமணி’ ஆசிரியர் கருத்து, அல்லது இந்தியக் காங்கிரஸ் தேசியவாதிகள் கருத்து, அல்லது காந்தி கும்பலின் கருத்து என்றுதான் கொள்ளவேண்டி இருக்கிறது.

இதிலிருந்து மக்கள் கொள்ளவேண்டி இருப்பது என்னவென்று நாம் கருதுகிறோமென்றால், இராமராஜ்ஜியம் எப்படிப்பட்டது என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பு இராமராஜ்ஜியத்தை ஆதரிக்கிற மக்களின் தன்மை எப்படிப்பட்டது, அவர்களுடைய அறிவும், போக்கும், குணமும் எப்படிப்பட்டவை என்பதைத் தெரிந்து கொள்ள இடமளிக்கிறது என்பதாகும்.

பொதுவாக இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு இடத்தில் உட்கார்ந்து ஒரு ராஜி பேசி முடிவுக்கு வந்து ஒரு ஒப்பந்தமெழுத ஆரம்பித்தால் அந்தக் காகிதத்தின் தலைப்பில் தோழர் ‘தினமணி’ ஆசிரியர் ஸ்ரீ மாதேராமானுஜாய நாமா என்று போடு என்றால், ஜின்னா சாயபின் காரியதரிசி ‘தினமணி’ ஆசிரியரைப் பார்த்து அது போடாதே பிஸ்மில்லாஹிர் ரஹ்மா நிர்ரஹீம் என்று போடு என்றால், அப்போது ‘தினமணி’ ஆசிரியர் இதற்கு ஆக ஒரு தலையங்கம் எழுத நேர்ந்தால், அப்போது இவர்கள் இருவர்களில் யார் கயவர்? யார் கயவர் அல்லாதவர் என்று எழுதுவார் என்று யோசித்துப் பார்க்கப் பொதுமக்களை வேண்டுகிறோம்.

இராம ராஜ்ஜிய தர்மத்தில் (யவனர், துருக்கர்) பட்டபாடு இராமாயணம் படித்தவர்களுக்குத் தெரியும் (அதாவது ஒரு மாடு சாணி போடும் துவாரத்தில் இருந்து துருக்கர்கள் உற்பத்தி ஆனவர்கள் என்று வால்மீகி குறித்திருக்கிறார். இது பாலகாண்டம் 54ஆம் சருக்கம் திருவல்லிக்கேணி ஈச்சம்பாடி ஸ்ரீனிவாசராகவாச்சாரி மொழிபெயர்ப்பு 1877இல் பதிப்பித்ததில் 127ஆம் பக்கத்தில் இருக்கிறது) என்றாலும் இராமராஜ்ஜியத்திற்குக் காந்தியார் சொல்லும் வியாக்கியானத்தைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.

இராமராஜ்ஜியம் என்பது மதத் தத்துவப்படி பார்த்தால் பூலோக ஸ்வர்க்கத்தைக் குறிக்கும்.

ராஜ்ஜிய தத்துவப்படி பார்த்தால் அது உத்கிருஷ்டமான ஜனநாயகம் ஆகும்.

அதில் ஏற்றத்தாழ்வில்லாத சொத்துரிமை உண்டு.

இனம், மதம், பால் ஆகிய பேதங்கள் இரா.

நிலமும் சர்க்காரும் ஜனங்களுடையன.

சுலபமாக நல்ல நீதி கிடைக்கும். கடவுள் வழிபாடு, பேச்சு, பத்திரிகை ஆகியவைகளில் சுதந்திரம் உண்டு.

யாவரும் தர்மத்தை ஏற்று நடப்பார்கள்.

என்று வியாக்கியானம் செய்திருக்கிறார்.

இராமராஜ்ஜியம் என்பதற்கு இந்த வியாக்கியானம் காந்தியார் தமது சொந்தப் பொறுப்பில் கொடுக்கிறாரா அல்லது இராமாயணத்தில் உள்ள இராமராஜ்ஜியத்தில் இந்தமாதிரி காரியங்கள் நடந்தனவா என்பது இங்கு மிகுதியும் கவனிக்க வேண்டியதாகும்.

இராமாயணத்தைப் பொறுத்தவரை காந்தியார் சொல்லும் கொள்கைகள் அதில் இல்லை என்பதோடு அதற்கு மாறுபாடான பல காரியங்கள் நடந்தனவாகக் கதையில் காணப்படுகின்றன. அதை எந்தக் கயவர் அல்லாதவர் மறுத்து ஆதாரத்தோடு கூறுவார்களானாலும் ஏற்றுத் தலைவணங்கத் தயாராயிருக்கிறோம்.

இராமாயணத்தை மதத் தத்துவத்தோடு பார்க்கத் தகுந்தது என்றும், அப்படிப் பார்த்தால் இந்தியா பூலோக சுவர்க்கமாகக் காணப்படும் என்றும் காந்தியாரே சொல்லும்போது, அதில் மத உணர்ச்சி இல்லை என்று பொருள்பட இந்துமத ஆதிக்கத்தை முஸ்லிம்கள் மீது திணிக்கக் காந்தியார் விரும்புகிறார் என்று கயவர்கள் சொல்லித் திரிகிறார்கள் என்று சொல்லுவதில் அறிவுடைமை இருக்கிறதா என்று கேட்கிறோம். இராமாயணத்தில் பூலோகத்தில் ராட்சதர், மிலேச்சர், யவனர், சண்டாளர் இல்லையா? என்பதோடு அரசியல் தத்துவத்தோடு இராமாயணத்தைப் பார்ப்பவர்களுக்கு உயர்ந்த ஜனநாயகமிருக்கிறது என்று சொல்லுவதற்கு இராமாயணத்தில் எந்தப் பாகத்தை, காரியத்தைக் காட்ட காந்தியாரால் அல்லது தினமணியால் முடியும் என்று கேட்கிறோம்.

இராமாயணத்தில் எங்காவது ஜனநாயகம் காட்டப்படுகிறதா? தசரதன் யாரைக் கேட்டு ஆயிரக்கணக்கான மனைவிகளை மணந்தான்? யாரைக்கேட்டுத் தசரதன் நாட்டை கைகேகிக்குக் கொடுத்தான்? என்பதோடு தசரதன் யாரைக்கேட்டு ராமனைக் காட்டிற்குப் போகச் சொன்னார்? யாரைக் கேட்டு கைகேகிக்கு வாக்குறுதி கொடுத்தான்? கொடுத்த வாக்குறுதியை யாரைக் கேட்டு மீறி ராமனுக்குப் பட்டம் கட்டப் பரதனில்லாதபோது சூழ்ச்சி செய்தான்? என்று கேட்கிறோம்.

மற்றும், குடிகள் இராமனைக் காட்டுக்குப் போக வேண்டாம் என்றபோது அயோக்கியத் தகப்பன் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏன் இராமன் காட்டிற்குப் போனான்? குடிகளும், குருமார்களும் சீதையை அழைத்துப்போக வேண்டாம் என்ற போதும் கைகேகி சொல்லுகிறாள் என்பதற்காக ஏன் நிர்ப்பந்தமாய் அழைத்துப் போனான்? என்று கேட்கிறோம்.

இவைகளால் இராம ராஜ்ஜியம் இராமனின் சொந்தக் குடும்ப ராஜ்ஜியமாகக் கருதப்பட்டதா அல்லது அயோத்தி மக்களின் இராஜ்ஜியமாகக் கருதப்பட்டதா என்று கேட்கின்றோம்.

பரதனுக்கு அவன் தகப்பன் கொடுத்த ராஜ்ஜியத்தை பரதன் எந்த ஜனநாயகத்தைக் கேட்டு அல்லது எந்தப் பெற்றோர்களைக் கேட்டு அதை ராமனுக்குக் கொடுத்தான்?

ராமன் யாரைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு இலங்கைக்கு இராவணனோடு சண்டைக்குப் போனான்?

எதற்காக சூர்ப்பனகையின் மூக்கை, முலையை அறுக்கச் செய்தான்? எதற்கு ஆக, எப்படி வாலியைக் கொன்றான்? எதற்கு ஆக விபீஷணனுடன் இராமன் நட்புக் கொண்டான்?

இவைகளில் (இந்தக் கற்பனைகளில்) ஜனநாயகமாவது, நீதியாவது, ஒழுக்கமாவது இருக்கிறதா என்று கேட்கிறோம். இராமராஜ்ஜியத்தில் ஏராளமான பிச்சைக்காரர்கள், தரித்திரர்கள், பேராசைக்காரர்கள் இருந்திருப்பதாக வால்மீகி சொல்கிறார்.

ராமன் காட்டுக்குப் போகும் போது பல உஞ்சவிருத்தி (பிச்சை) எடுப்பவர்களும் தரித்திரர்களும் வந்து இராமனிடம் பிச்சை வாங்கிக்கொண்டு போகிறார்கள். அனேகருக்குத் தானமும், தர்மமும் வழங்கப்படுகின்றன. நகைகள், துணிமணிகள் ஏழைகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன. இராமனின் தாய்மார்களுக்குச் சொந்தத்தில் ஏராளமான கிராமங்கள் இருந்தன என்று இராமாயணத்தில் இருக்கிறது. இதிலிருந்தே இராமராஜ்ஜியத்தில் ஏழைகள், தரித்திரவான்கள், பிச்சை எடுப்பவர்கள், செல்வவான்கள், செல்வ ஏற்றத் தாழ்வு, தன் இஷ்டப்படி காரியங்கள் செய்வது ஆகியவைகள் இருந்தனவாக ஏற்படவில்லையா? என்று கேட்கிறோம்.

இராம ராஜ்ஜியத்தில் இன, மத, பால், பேதங்கள் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? இராம ராஜ்ஜியத்தில் இராட்சதர்கள், தேவர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள் உயர்வு தாழ்வோடு இருந்திருக்கிறார்கள் என்பதோடு இராவணனது தங்கை சூர்ப்பனகை இராமனை மணக்க விரும்பும்போது இராமன் அவளை, நீ வேறு ஜாதி; நான் வேறு ஜாதி! என்று சொல்லி ஜாதி வர்ணாசிரம முறை பேசுவதாக வால்மீகி குறிப்பிட்டிருக்கிறார்.

இதிலிருந்து இனம், மதம், பால், ஜாதிபேதம் காணப்படவில்லையா? இவ்வளவு மாத்திரமா?

இராமராஜ்ஜியத்தில் கடவுள் வழிபாடு, பேச்சு, எழுத்து, ஆகியவைகளில் உரிமை உண்டு என்று சொல்லப்படுமானால், சம்பூகன் என்னும் சூத்திரன் கடவுள் வழிபாடு செய்ததற்காக அவன் இராமனால் கொல்லப்படுவானேன்?

சூத்திரன் கடவுள் வழிபாடு செய்ததற்காகப் பார்ப்பனன் சாவானேன்? சூத்திரனை இராமன் கொன்ற உடன் செத்த பார்ப்பான் பிழைப்பானேன்? இதுதான் கடவுள் வழிபாடு சுதந்திரமா என்று கேட்கிறோம்.

இராமன் பெண்ஜாதி சீதை கர்ப்பமாயிருப்பதைப் பற்றித் தெருவில் பாமர மக்கள் பரிகாசமாய் இழிவாய்ப் பேசினால் அதற்காக இராமன், 5 மாத கர்ப்பஸ்திரீயை கண்ணைக்கட்டி காட்டில் விடுவது உத்கிருஷ்டமான ஜனநாயகமா என்று கேட்பதோடு இதுதான் சுலபத்தில் சரியான நியாயம் கிடைத்ததற்கு எடுத்துக்காட்டா என்று கேட்கிறோம்.

சீதை கற்பு விஷயத்தில் சந்தேகத்திற்கிட முடையவளாக இருந்தாலும் அவளை கர்ப்பத்தோடு கண்ணைக்கட்டி காட்டில் விடும்படி எந்த ஜனநாயகமாவது கூறியதா என்று கேட்கிறோம். இந்த மாதிரி எந்த மிலேச்ச, கயவர் இராஜ்ஜியத்திலாவது நடந்ததாக எந்தக் கயவரல்லாதவராவது காட்ட முடியுமா என்று கேட்கிறோம்.

இராமராஜ்ஜியத்தில் சுலபத்தில் நல்ல நியாயம் கிடைக்கும் என்று சொல்லுகிறார். வாலி போரில் சுக்கிரீவன் செய்த பிராதுக்கு சுலபத்தில் கிடைத்த நியாயம் யோக்கியமானதா என்று கேட்கிறோம்?

கடைசியாக இராமராஜ்ஜியத்தில் எந்த மந்திரியாவது, குருவாவது, புரோகிதனாவது, குடும்ப மக்களாவது, சேனையாவது யோக்கியமாய் நடந்ததாக குறிப்பிட இடம் இருக்கிறதா என்பதோடு இராமராஜ்ஜியம் என்பது வர்ணாசிரம ஆதிக்கத்திற்கு ஏற்ற அநீதியான ஒரு கொடுங்கோல் ராஜ்ஜியம் அதாவது இன்றைய பார்ப்பன இராஜ்ஜியத்திற்குச் சமானமானது என்பதல்லாமல் வேறு என்ன என்று இராமாயணப்படியே ‘தினமணி’யைக் கேட்கிறோம்.

- -_ ‘குடிஅரசு’ - தலையங்கம் - 16.06.1945
- உண்மை இதழ், 1-15.4.18

1 கருத்து:

 1. /////////////ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறார்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று கூறுகிறார்.//////////////////////////////

  இராமனின் பிறப்பு பற்றிவால் மீகி கூறியது

  வால்மீகி ராமாயணம், பாலா காண்டம், சர்க்கம் – 16….


  இதம் து ந்ருயார்தூல பாயசம் தேவமிர்தம்
  ப்ரஜாகாரம் க்ருஹான தவம் தந்யமாரோக்ய வர்தநம் - வசனம் 19

  சிங்கம் போன்ற மன்னரே! இது தேவர்களால் உண்டாக்கப்பட்ட பாயாஸம். இது புத்திரர்களை தரக் கூடியது, செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது, இதனை பெற்றுக் கொள்..

  ததஸ்து தா: ப்ராஷ்ய ததுத்த மஸ்த்ரியோ மஹீ பதேருத்தம பாயஸம்
  ஹூதாயநாதித்ய ஸமாநேதேஸஸோ-சசிரேண கர்பாந் ப்ரதிபேதிரே ததா - வசனம்-30

  மன்னர் அளித்த பாயாசத்தை தனித்தனியே பருகிய உத்தம பெண்டீர் விரைவிலே கர்பம் தரித்தனர்.

  இப்படி புத்திர யாகம் செய்து அதில் உள்ள பிரசாதத்தை உண்டு, பின் பல மாதங்கள் கழித்து தான் தசரதருக்கு-சவுசல்யேகிக்கும் பிறக்கிறார் ராமர்.  பதிலளிநீக்கு