பக்கங்கள்

புதன், 11 ஏப்ரல், 2018

பிராமணர்களை''ப் பழித்தால் பின், காக்காவாகப் பிறப்பார்களாம்!

பிராமணர்களை''ப் பழித்தால் பின், காக்காவாகப் பிறப்பார்களாம்!

துளசிதாஸ் இராமாயணப்படி இன்று பறக்கும் காக்காக்கள்

போன ஜென்மத்தில் பிராமணர்களைப் பழித்தவர்கள்''தானா?

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய ஆய்வுரை

சென்னை, ஏப்.5-  பிராமணர்களைப்' பழிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் காக்காக்களாகப் பிறப்பார்கள் என்று துளசிதாஸ் இராமாயணம் கூறுகிறது. அப்படிப் பார்த்தால், இப்பொழுது பறக்கும் காக்காக்கள் எல்லாம் போன ஜென்மத்தில் பிராமணர்களைப் பழித்தவர்கள்தானா?' என்ற வினாவை பலத்த சிரிப்புக்கிடையே எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  27.3.2018 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் என்ற தலைப்பில் நடை பெற்ற  ஆய்வு சொற்பொழிவு-2 திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது உரையின் நேற்றையத் வருமாறு:

தீ பரவட்டும்!

அண்ணா அவர்கள் எழுதிய கம்பரசத்திற்கு இதுவரை யில் பதில் உண்டா?

தீ பரவட்டும் என்று சொல்லி, சோமசுந்தர பாரதியாரும், இரா.பி.சேதுபிள்ளையும் போராடினார்களே, சேதுபிள்ளை, மருத்துவன் கூற்றால் மருந்து சாப்பிட வேண்டும் என்று  நான் விடைபெறுகிறேன்'' என்று அவர் போய்விட்டார்!

அதை நடத்தியவர் யார் தெரியுமா? நம்முடைய ஜஸ்டீஸ் வேணுகோபால் அவர்கள். அவர்தான் சட்டக் கல்லூரியினுடைய பேரவை செயலாளராக இருந்து அழைத்தவர்.

சேலத்தில், நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணா ஆகியோர் உரையாற்றிய நிகழ்வுகள் எல்லாம் தீ பர வட்டும் என்கிற புத்தகத்தில் உள்ளது, அதனை நீங்கள் வாங்கிப் பாருங்கள்.

நம்முடைய மக்களை கேவலப்படுத்தலாமா?

கம்பனுடைய கவித்திறத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அது யாருக்குப் பயன்பட்டது? எதற்குப் பயன்பட்டது? அதனுடைய விளைவுதானே மிக முக்கியம். ஒரு இலக்கியம் என்றால், அது பக்தி இலக்கியம் என்று சொல்லி, நம்முடைய மக்களை கேவலப்படுத்தலாமா? என்று சொல்லி, வாதங்களுக்குமேல் வாதங்களை அண்ணா அவர்கள் அடுக்கினார்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் எவ்வளவு பெரிய ஆய்வாளர். அவருடைய அறிவு நாணயத்தை நாம் பாராட்டவேண்டும்.

இவ்வளவு நேரம் நான் பேசினேன்; அண்ணாத்துரை அவர்களும் பேசினார். அவரிடம் நான் தோற்றேன்; தோற் றேன்; தோற்றேன் என்று மும்முறை ஒப்புக்கொள்கிறேன் என்றார் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள்.

துளசிதாஸ் இராமாயணத்தில், இராமன் யாரை வணங் கினார் என்று சொன்னால், பிராமணர்களைத்'தான் வணங் கினார்.

பிராமணர்களின் பாதங்களில் குறையாத பக்தியை வைப் பதுதான் மோட்சம் அடைவதற்குரிய எளிய வழியாகும்.

ஒழுக்கக்கேடாக நடந்த பிராமணர்களைக்கூட குற்றம் சொல்லக்கூடாது

அதுமட்டுமல்ல, பிராமணர்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும், தவறு செய்த, ஒழுக்கக்கேடாக நடந்த பிராமணர்களைக்'கூட குற்றம் சொல்லக்கூடாது.

பிராமணர்களை' யாராவது பழித்துப் பேசினால், அடுத்த ஜென்மத்தில் அவர்கள் காக்காயாகப் பிறப்பார்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

இன்றைக்குப் பறக்கிறதே, காக்கா, அவ்வளவும் நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். முன்காலத்தில், பார்ப்பனர்களைப் பற்றி பேசியிருப்பார்கள். பார்ப்பன எதிர்ப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்களோ - துளசிதாஸ் இராமா யணக் கருத்துப்படி.

அதில், சிவனும், மகாவிஷ்ணுவும் மற்றவர்களும் எல்லோரும் சேர்ந்து பிராமணர்களை வணங்கினார்கள். இதைத்தான் சென்ற கூட்டத்திலும் சொன்னேன்.

கடவுளை வணங்குவது முக்கியமல்ல!

தெய்வாதீனம் ஜகத் சர்வம்

மந்த்ராதீனம் து தெய்வதம்

தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்

தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்

இதன் பொருள்

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது

கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது; மந்திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது.

எனவே, கடவுளை வணங்குவது முக்கியமல்ல; பிரா மணனை வணங்கு, பார்ப்பனனை வணங்கு என்பதுதான் அந்த சுலோகம்!

இப்படியெல்லாம் அந்தக் காலகட்டத்தில் ஏற்படுத்தி னார்கள். ஆராய்ச்சியாளர் சொல்கிறார்,

பார்ப்பன மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்

பவுத்தம் வளர்ந்துவிட்டது; வருணாசிரம தர்மம் சரிந்துவிட்டது. அப்படி சரிந்துவிட்ட காலகட்டத்தில், மீண்டும் ஒரு மறுமலர்ச்சியை, பார்ப்பன மறுமலர்ச்சியை உருவாக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக இந்தக் கதையை கையிலெடுக்கிறார்கள்.

அதுவரையில் தனி மனிதனாக இருந்த இராமனை, அவதார புருஷனாக ஆக்கி, அவதார புருஷனாக மட்டு மல்ல, புருஷ உத்தமன். மரியாதை இராமன். இந்த உத்தம குணங்கள் எல்லாம் இருக்கிறது என்று காட்டுவதற்காக அவர்கள் என்னென்னவோ முயற்சிகள் செய்து, இதை அத்தனையும் சொன்னார்கள் என்று இந்தி துளசிதாஸ் இராமாயணத்தில் இருக்கிறது.

பிராமணர்களுக்குத் தொண்டு செய்வதுதான் இராமராஜ்ஜியம்

இராமன் யாரை வணங்கினான்? பிராமணர்களை வணங்கினான். பிராமணர்களுக்குத் தொண்டு செய்வது தான் இராமராஜ்ஜியம் என்று தெளிவாக எழுதி வைத் திருக்கிறார்கள். பிராமணர்களுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால், அதனை எதிர்ப்பதுதான் இராமராஜ்ஜியத்தின் பணி! முதலில் அதனை அழிக்கவேண்டும் என்கிற நிறைய செய்தி இதில் இருக்கிறது.

கம்பன் அதையே பின்பற்றினான். புலவர்கள்கூட ஏன் கம்பனை குறை சொல்கிறார்களே என்று நினைப்பார்கள். கம்பன் கழகம் என்ற பெயர் வைத்துக்கொண்டு, பட்டி மன்றத்தை நடத்துகிறார்கள். ஆனால், அடிப்படையில் இன உணர்வுகளை நினைத்துப் பார்க்கவேண்டும் நண்பர்களே!

இதை பெரியார் சுட்டிக்காட்டி, குடிஅரசுவில் எழுதிய கட்டுரையிலிருந்து இதை சொல்கிறேன்.

வசிஷ்டர் இராமனிடம் சென்று, எப்படி ஆட்சி நடத்தவேண்டும் என்று சொல்லும்பொழுது,

கம்பன் பாட்டு

பிராமணர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதற்கு துளசிதாஸ் இராமாயணத்தில் பிராமணர்களை எப்படி கும்பிட்டார்கள் என்பதற்கு ஒருபடி மேலே போய் கம்பன் பாட்டு எழுதியிருக்கிறார்.

கரிய மாலினும், கண்ணுத லானினும்,

உரிய தாமரை மேல் உரைவானினும்,

விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,

பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.

தயவு செய்து நன்றாக இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

கரியமால் யார்? திருமால். கண்ணுதல் - நெற்றிக்கண் வைத்திருப்பவன் யார்? சிவன். கண்ணுதல் ஆனினும்

உரிய தாமரை மேல் உரைவானினும்

தாமரை மேல் இருப்பவன் யார்? பிரம்மா

இதைவிட பெரிய விஷயம் என்ன தெரியுமா?

பூதம் ஓர் ஐந்தினும் - பஞ்ச பூதம் இருக்கிறதே அது அத்தனையும் தாண்டிய உண்மை - இவை அத்தனைக்கும் பெரியவர் யார் என்றால்,

அந்தணர்; பேணுதி உள்ளத்தால்

திருமாலைவிட, சிவனைவிட, பிரம்மாவைவிட, பஞ்ச பூதங்களைவிட பெரியவர்கள் யார்? வணங்க வேண் டியவர்கள் யார்? பிராமணர்கள்; பார்ப்பனர்கள்தானாம்!

இதுதான் கம்பன் பாட்டு.

இது ஒன்று மட்டுமல்ல, இதுபோன்ற நிறைய செய்திகளை எடுத்துச் சொல்லலாம்.

இது ஏன் தயாரிக்கப்பட்டது? திட்டமிட்டு அந்தப் பணி வடக்கே துளசிதாசிடம் ஒப்படைக்கப்பட்டது; தெற்கே கம்பர் அதை எடுத்துக்கொண்டார்.

ஆகவேதான், இந்த அடிப்படையை வைத்து, இந்த ஆய்வில் மிகத் தெளிவாக சொல்கிறார்கள்; அதற்கு முன் உருவ வழிபாடே கிடையாது.

யாகத்தை கலைத்தவர்கள்தானே அசுரர்கள்; தேவர்கள் போய் தடுத்தார்கள் என்பதுதானே கதை

புத்தருடைய செல்வாக்கு வளர்ந்துவிட்டது; யாகத் திற்கு செல்வாக்கு இல்லை. யாகம் நடத்தாதீர்கள் என்றார் கள். யாகத்தை கலைத்தவர்கள்தானே அசுரர்கள்.' தேவர் களைப் போய் தடுத்தார்கள் என்பதுதானே கதை எழுதி வைத்திருக்கிறார்கள். நம்முடைய மன்னர்கள் எல்லாம் அதைத்தானே செய்திருக்கிறார்கள். அந்தத் தத்துவங்களை யார் செய்தார்களோ, அவர்கள் எல்லாம் கீழ்ஜாதி - அவர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்று சொல்கிறார்கள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இதைப் பார்த்தீர்களேயானால், இடைச்செருகல் போன்று இருக்காது. தொடர்புள்ள ஒரு செய்தி என்னவென்றால்,

பெரியாருடைய தொலைநோக்கு இருக்கிறதே - திராவிடர் கழகம் என்ற பெயர் எப்படி வைத்தார் என்றால்,

திராவிடம் என்பது வெறும் மொழியை வைத்து அல்ல; திராவிடம் என்பது தத்துவம் என்பதாகத்தான் மிக முக்கியம்.

வருணாசிரம தர்மத்திற்கு எதிரான தத்துவம் அதுதான்.

ஆரியம் என்றால் - வருணாசிரம தர்மம்

திராவிடம் என்றால் - ஒன்றே குலம் என்பதுதான்.

ஆகவே, பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கக் கூடிய ஒரு தத்துவம் - திராவிடம்

திராவிடர்கள் எல்லாம் யார்?

அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் வரும்பொழுது, திராவிடம் என்று சொன்னால், திராவிடர்கள் எல்லாம் யார்? என்று, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், வாட்ஸ்அப், முகநூலில் எல்லாம் என்ன பதிவிடுகிறார்கள் என்றால்,

கார்டுவெல் என்கிற ஒரு வெள்ளைக்காரன் வந்தான், எல்லீஸ் என்று அதற்கடுத்து வந்தார் - திராவிடம், திராவிட மொழிகள் ஒப்பீடு என்று சொன்னார்கள். அதற்குமுன் திராவிடம் எல்லாம் கிடையாது.

அதைப் பிடித்துக்கொண்டு, தமிழர்களுக்கு விரோதமாக சொல்லவேண்டும் என்று, தமிழ்மேல் ஏதோ பக்தி வந்து விட்டது போன்று, தமிழை காட்டுமிராண்டி என்று சொன் னார் பெரியார், தமிழை சனியன் என்று சொன்னார். ஆகவே, தமிழை அழிப்பதற்காக, திராவிடத்தை உண்டாக்கினார்.

திராவிடம் என்பதை வெள்ளைக்காரன் கொண்டு வந்தது - அவன் நம் மக்களை ஒழிக்கவேண்டும் என்பதற்காகக் கொண்டு வந்தான். இதை பைத்தியக்காரத்தனமாக ஆர்.எஸ்.எஸிலிருந்து, எச்.ராஜா வரையில், வரிசையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸினுடைய எச்சி வழிகிறது.

மனுதர்மத்தில் திராவிடம் இருக்கிறது!

நண்பர்களே, இந்த நேரத்தில், இதையும் சொல்ல வேண்டும்.

மனுதர்மம் அனாதிகாலம் தொட்டு என்று சொல்வார்கள் அவர்கள். மனுதர்மத்தில் திராவிடம் இருக்கிறது, அதுதான் மிக முக்கியம்.

அதை அவர்களால் மறுக்க முடியவில்லை. அரவிந்தன் நீலகண்டன் என்பவர் ஒருவர் எழுதும்போதே, அதற்கு நாங்கள் பதில் எழுதினோம்.

மனுதர்மத்தில் தெளிவாக இருக்கக்கூடிய அந்த அடிப் படையை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மனுதர்மம் 10 ஆவது அத்தியாயம் 44 ஆவது சுலோகம்:

அசல் மனுதர்ம சாஸ்திரத்தின் பக்கம் 209.

பௌண்டரம் ஔண்டரம் திரவிடம்

காம்போசம் யவ நம் சகம் பாரதம்

பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம்

இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும்

மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள்.

இதற்கு முன் பகுதி என்ன தெரியுமா? 43 ஆவது சுலோகம்

பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள்.

இந்தியா ஒன்று என்பது எவ்வளவு பெரிய மோசடித் தத்துவம்

டி புரோமோஷன் கொடுத்துவிட்டார்கள் மனுதர்மத்தில். அந்த டி புரோமோட் ஆனவர்கள் யார்? யார்? என்கிற பட்டியலைக் கொடுக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனித்தனி நாடாக்கிவிட்டார்கள்.

ஆக, இந்தியா ஒன்று என்பது எவ்வளவு பெரிய மோசடித் தத்துவம். வெள்ளைக்காரன் வரவில்லை என்றால், இந்த நிலைமை என்னவாகியிருக்கும்?

குப்தர்கள் காலத்தில்தான் மனுதர்மமே உருவானது. குப்தர்கள் காலத்தைப் பொற்காலம் என்று அதனால்தான் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் சொன்னார்கள். உண் மையிலேயே அது பொற்காலம் அல்ல; கற்காலத்தைவிட மிகக் கேவல மான காலம். அதை வரலாற்றில் தலைகீழாக எழுதி விட்டார்கள்.

இந்தத் தேசத்தை ஆண்டவர்கள் அனைவரும் சூத்திரர்'களாகி விட்டார்கள்.

திராவிடம் என்பது கார்டுவெல்லால் வரவில்லை. மனுதர்மத்திலேயே திராவிடம் இடம்பெற்றது.

பாகவதத்தில், பிராமணர்களைத்தான் வணங்க வேண்டும். பார்ப்பனர்களை உயர்த்திக் காட்டினால்தான், வருமானமும், மற்ற காரியங்களும் நடைபெறும் என்ப தற்காகத்தான் இந்தக் காரியத்தைச் செய்தார்கள் என்று வரும்பொழுது, நிறைய சொல்லலாம் - இது தனியே பேசவேண்டிய விஷயம். சுருக்கமாக உங்களுக்குச் சொல் கிறேன்.

சிறீ மகாபாகவதம்!

சிறீவேத வியாசர் அருளிச் செய்த சிறீ மகாபாகவதம்திருவனந்தபுரம்பாகவதசிரேஷ்டரானவேணுகோபா லாச்சாரியார் அவர்களால், சம்ஸ்கிருத காவியத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

பக்கம் 368

அந்த பகவான் அம்மறையோனை நோக்கி இந்த ரிஷிகள் எந்த ஜலத்தைத் தொடுகிறார்களோ, அதுவே புண்ணியத் தீர்த்தமாகும்படி செய்யத்தக்கின மகிமையை உடையவர்கள். சகல தேவர்களுடைய சொரூபம் யான். என்னுடைய சொரூபம் வேதம். அந்த வேதங்களுடைய சொரூபம் மறையோன். அவர்களுக்கு மிஞ்சினவர்கள் உலகில் இல்லை. அவர்களை சாமானிய மானிடர்கள் என்று எண்ணி, அவர்களைப் பழித்து, என்னை பூஜித்ததினால், ஒரு பயனையும் அடையமாட்டார்கள்.

அந்த வேதியரைப் பூஜிக்கிறவன்தான் ஞானி. அவனே எனக்கு மிகவும் இஷ்டனென்று சிறீ பகவானால் ஆக்ஞாபிக்கப்பட்டு, அந்த சுவாமியின் எதிரில்தானே அந்த ரிஷிகளை அனேக விதமாய் பூஜித்து உபசரித்து சந்தோசப்படுத்தினார்.

அவர்கள் எந்தப் பாவத்தையும் செய்யலாம்

சிறீ கிருஷ்ண பகவான் அவ்விடத்தில் சில நாள் வாசம் செய்து, அந்த ரிஷிகணங்களுடன் துவாரகாப்பட்டினத்திற்கு எழுந்தருளினார்.

ஆகவே, அவர்கள் எந்தப் பாவத்தையும் செய்யலாம். அவர்களை எதிர்த்துப் பேசினால், பஞ்சமாபாதகங்களாகும்.

அடுத்தபடியாக, பாகவதத்தில் திராவிட தேசம்'' வரு கிறது. திராவிடத்தை வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்தார்கள் என்கிறார்களே, இவனுடைய புராணத்திலேயே திராவிடம் இருக்கிறது. பெரியாருடைய சிந்தனை எவ்வளவு பெரிய ஆழமான சிந்தனை என்பதை நினைத்துப் பாருங்கள்.

அதனுடைய தத்துவம் என்னவென்றால், ஆரியம் - திராவிடம்தான்!

எவ்வளவு பெரிய வரலாற்றுப் பின்னணி இருக்கிறது - புராணப்படி, இலக்கியப்படி, வரலாற்றுப்படி - எல்லாத் துறைகளிலும் அதனுடைய தத்துவம் என்னவென்றால், ஆரியம் - திராவிடம்தான்.

சிறீமகாபாகவதம், பக்கம் 404

இந்தக் கலியுகத்திலே சிறீமத் நாராயணருடைய பக்தர் கள் ஒவ்வொரு இடங்களிலே இருப்பார்கள். சகலவிடங் களிலும் இருக்கமாட்டார்கள்.

திராவிட தேசத்திலே பகவத் பக்தர்கள் விசேசமாய் இருப்பார்கள்.

கலியுகத்தில், திராவிட தேசத்தில் இருப்பார்கள் என்றால் என்ன அர்த்தம்? அங்கே இருந்து நாங்கள் இங்கே வந்துவிட்டோம். இங்கேதான் அதிகமாக இருக்கிறோம். எதிர்த்து இந்தப் பிரச்சாரத்தை செய்யவேண்டும் என்பதற் காகத்தான், பாகவதம், பாரதம், இராமாயணம் (துளசிதாஸ் இராமாயணம், கம்ப இராமாயணம்) இவை அத்தனையும் உருவாக்கினார்கள்.

எனவே, பார்ப்பனர்களை உயர்த்துவது - ஏனென்றால், அவர்களை குறை சொல்லக்கூடாது. அப்படி குறை சொன்னால், அடுத்த ஜென்மத்தில் காக்காவாகப் பிறப்போம்.

அவர்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், இந்த வாரம் வெளிவந்த நக்கீரன் இதழைப் பாருங்கள்.

பழைய சோடாபாட்டில் ஜீயர்!

ஆண்டாள் பிரச்சினையில், நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை, ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று சொன்னார், பழைய சோடாபாட்டில் ஜீயர் அவர்கள். ஏனென்றால், அவருடைய பழைய தொழிலை மறக்கவில்லை; அந்த விசுவாசம் எப்பொழுதும் அவருக்கு உண்டு.

தவணை முறையில் உண்ணாவிரதம்

உண்ணாவிரதத்திலேயே, தொடர் உண்ணாவிரதம், பிறகு விட்டு விட்டு உண்ணாவிரம், சாகும்வரை உண்ணா விரதம் என்று இப்படி பலவகையான உண்ணாவிரதங்கள் உண்டு. ஆனால், ஜீயர் அவர்கள், புது வகையான உண்ணாவிரதத்தைக் கண்டுபிடித்தார். தவணை முறையில் உண்ணாவிரதம்.

அப்படிப்பட்ட அவர் என்ன சொன்னார் என்றால், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது; ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றார்.

ஆண்டாள் சன்னதிக்கு என்ன அவ்வளவு சிறப்பு என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா! ஏனென் றால், புதிய இளைஞர்கள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். இந்த வாரம் வெளிவந்த நக்கீரனில் அதனுடைய சிறப்பு என்னவென்று வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்:

நக்கீரன், 2018, மார்ச் 27-29, பக்கம் 18-19

கோவில் கருவறையில் அர்ச்சகர் காமக் களியாட்டம்

பக்தர்கள் தாயாக மதிக்கும் ஆண்டாள் குடி கொண் டுள்ள சிறீவில்லிபுத்தூர் கோவில் கருவறையில் நடந்த காமலீலைதான் சமீபத்தில் ரகசியமாக நடந்த கூட்டத்தின் சப்ஜெக்ட்.

பூணூல் போட்டுக்கிட்டு என்ன வேலை பண்ணி ருக்கான்? அவனை சும்மா விடக்கூடாது. ஒரு கையை யாச்சும் வெட்டினால்தான் அடுத்து எந்த பொம்பள மேலயும் கைவைக்க மாட்டான் என்று ஆவேசம் காட்டியபோது, சொந்த பந்தங்கள், இவளுக்கு புருஷன், புள்ளகுட்டின்னு ஒரு குடும்பம் இருக்கு. அவனை ஏதாச்சும் பண்ணிட்டா, இவ அசிங்கப்பட்டு தெருவுல நிற்கணும். தேவையா இது? பிரச்சனைய இத்தோடு விட்ருங்க என்று வேகத்தை தணித்துவிட்டனர்.

இந்தக் கசமுசா விவகாரம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, பல லட்சங்களை இறைத் திருக்கிறார்கள். சிறீவில்லிபுத்தூரில் சமூக ஆர்வலர் ஒருவர் கொதித்துப்போய்ச் சொன்ன இந்த விவகாரத்தை உறுதி செய்த அரசியல் பிரமுகரான தேரடி மாரியப்பன், சாமியை நம்பாதவன்கூட கோவிலை மதிப்பான். வாழ்க்கை, வச தின்னு எல்லாத்தையும் இவங்களுக்கு அள்ளிக் கொடுக்கிற அந்தக் கோவில்லயே தப்பு பண்ணுறத எப்படி பொறுத்துக்க முடியும்? என்றார் குமுறலுடன்.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்கள் சிலரோடு உல்லாசமாக இருந்து, அதை தன் செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்து ரசித்து வந்த அர்ச்சகர் தேவநாதன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே வழக்கில் சிக்கினார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், சிறீவில்லிபுத்தூரிலும் கோவில் கருவறையில், தேவநாதன் பாணியிலேயே லீலைகள் புரிந்திருக்கிறார் பத்ரி நாராயணன் என்ற பட்டாச்சாரியார். பக்தியை முன்னிறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ராமராஜ்ஜிய ரத யாத்திரை, தமிழகத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்த வேளையில், இந்த விவகாரம் அம்பலமாகிவிடக் கூடாது என்று ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்கள். அனைத்தையும் மீறி, கோவில் கருவறை ரகசியங்களுக்குள் நாம் ஊடுருவினோம்.

பலான வீடியோவில் பத்ரி

சிறீவில்லிபுத்தூரில் சிறீ ஆண்டாள் கோவில், வடபத்ரசாயி கோவில், தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருவண்ணாமலை - சிறீநிவாச பெருமாள் கோவில் ஆகிய மூன்று வைணவ கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் சிறீவில்லிபுத்தூரில் உள்ள பண்ணையார் பட்டர் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரம்பரை பரம்பரையாக, முறைமை வைத்து, மூலவர் இருக்கும் கருவறையில் தீபாராதனை காட்டி, பூஜைகள் செய்து, பக்தர்களிடம் தட்டுக் காணிக்கை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவர்தான் பட்டாச்சாரியர் பத்ரி நாராயணன்.

சிறீவில்லிபுத்தூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், திருவண்ணாமலையில் உள்ள மலைக்கோவிலான சிறீநிவாச பெருமாள் கோவிலில், பிரகாரம், உண்டியல் காணிக்கை செலுத்துமிடம், நகை அறை மற்றும் கருவறை ஆகிய 4 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறீஆண்டாள் கோவில் உட்பட சிறீநிவாச பெருமாள் கோவிலிலும் பட்டாச்சாரியராக இருந்து வருகிறார் பத்ரி. இவர்தான், சிறீநிவாச பெருமாள் கோவில் கருவறைக்குள் பெண் பக்தைகளை அழைத்துச் சென்று, பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.

ஆண்டாள் கோவில் அருகிலுள்ள பத்ரியின் வீட்டுக்குச் சென்றோம். பத்ரி ஊரிலேயே இல்லை என்றார்கள் எரிச்சலுடன். அவரது கைபேசி எண்ணுக்கு டயல் செய்தோம்; குறுந்தகவல் அனுப்பினோம். ரெஸ்பான்ஸ் இல்லை. பத்ரிக்கு எதிரான வீடியோ ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு, பணம் பறிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டதால், பத்ரி தலைமறைவாகி விட்டார் என்று தகவல் சொன்னார்கள் ஆண்டாள் கோவில் வட்டாரத்தில்.

சிறீஆண்டாள் கோவில் அலுவலகத்தில் செயல் அலுவலர் நாகராஜனை சந்தித்தோம். இது அஃபிசியல் மேட்டர். வெளியில் சொல்ல முடியாது என்று முதலில் தயங்கியவர், பிறகு இது வெளியில் தெரிந்தால் கோவிலுக்குத்தான் கெட்ட பெயர். யார், யாரோ அவனை மிரட்டி பணம் வாங்கியிருக்கிறார்கள். அதனால்தான், மூன்று நாட்கள்வரை அவன் செய்த குற்றம் வெளியில் தெரியவில்லை. தக்கார் ரவிச்சந்திரன் வரைக்கும் தகவல் போனது. தக்கார் சொன்னதன் பேரில், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தோம். பத்ரியைக் கூப்பிட்டு சத்தம் போட்டோம். அவனிடம் கருவறையில் ஒரு பெண்ணிடம்? என்று விசாரித்த போது, பிரசாதம் கொடுத்தேன்... என்று மழுப்பினான். அவனை அடிக்காத குறைதான். மற்றபடி, உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளியேற்றிவிட்டோம். பத்ரி கோவில் ஊழியரும் கிடையாது: அரசு ஊழியரும் கிடையாது. பூர்வீகமாக முறை வைத்து பூஜை பண்ணுபவர். ஆனாலும், கோவில் கருவறையில் இழிவான செயலில் ஈடுபட்டவரை கோவிலில் வைத்திருக்க முடியாது அல்லவா? அதனால்தான், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அவனும் ஊரைவிட்டே ஓடிட்டான் என்றார்.

மிரட்டிய பின்னணி சி.சி.டி.வி. கேமரா இருந்தும், சிறீநிவாச பெருமாள் கோவிலுக்கு தனியாக வரும் பெண் பக்தைகளை நிதானமாக நோட்டம் விட்டு, கருவறைக்குள் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் பத்ரி. கோவிலுக்கு வரும் மூன்று பெண் பக்தைகளிடம் பத்ரி தொடர்பு வைத்திருந்தது, நட்பு வட்டத்தில் உள்ள ஒருவனுக்குத் தெரிந்துவிட, நீ மட்டுமே அனுபவித்தால் எப்படி? கருவறைக்குள் நானும் வருவேன்; உன் வலையில் சிக்கிய பெண்களை எனக்கும் கொடு. இல்லையென்றால், உன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறான். பரிகாரம் பண்ணுவதாகச் சொல்லி பக்தர்களிடம் கல்லா கட்டி, செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருபவன் என்பதால், கை நிறைய பணத்தைக் கொடுத்து நண்பனைச் சரிக்கட்ட முயற்சித்திருக்கிறான் பத்ரி. அவனோ பத்ரியிடம் முரண்டு பிடித்திருக்கிறான். தனது ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லை என்ற கோபத்தில் ஒருகட்டத்தில் கருவறையில் பத்ரி ஒரு பெண்ணுடன் இருந்த இரண்டரை மணி நேர சி.சி.டி.வி. ஃபுட்டேஜை கைப்பற்றி, பிளாக்மெயில் செய்திருக்கிறான். இதே ரீதியிலான பிளாக் மெயிலில் வேறு சிலரும் ஈடுபட, விவகாரம் கோவில் நிர்வாகம்வரை போய், விசாரணை நடந்து, பத்ரியை வெளியேற்றிவிட்டனர்.

சிறீ ஆண்டாள் கோவில் நிர்வாகமே அந்த சிசிடிவி பதிவை முற்றிலுமாக அழித்து, பத்ரியின் குற்றச் செயலை மறைத்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து புகார் எதுவும் வராததால், சட்ட நடவடிக்கை குறித்த அச்சமின்றி, ஜாலியாக எங்கெங்கோ சுற்றித் திரிகிறானாம் பத்ரி.

தனியாக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் ஜாக்கிரதை! என, தமிழ்நாட்டில் போர்டு வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று, நம்மிடம் சீரியஸாகப் பேசினார், பத்ரி விவகாரத்தை நன்கறிந்த உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர்!

நண்பர்களே! ஆண்டாள் கோவில் சன்னதியில்தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று ஜீயர் சொன்னார் அல்லவா! அந்த ஆண்டாள் மகிமை எப்படி என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தப் பத்திரிகை செய்தி உண்மையாக இருக்குமானால், நாம் என்ன முடிவுக்கு வருவது?

பிராமணர்களுடைய உயர்வு என்று சொல்கிறார்கள் பாருங்கள், ஒழுக்கங்கெட்ட பார்ப்பானாக இருந்தாலும், அவனையே நீ பூஜிக்கவேண்டும்.

ஞானியானாலும், மூடனானாலும், சூத்திரர்களுக்குப் பிராமணர்களே தெய்வம் - இதுதான் மனுதர்மம்.

இந்தச் செய்தியில் கோவில் கருவறை என்று தமிழில் எழுதியிருக்கிறார்கள். கர்ப்பக்கிரகம், கர்ப்பக்கிரகம் என்று அவர்கள் சொல்லியிக்கிறார்கள் பாருங்கள், அதனுடைய அர்த்தத்தை அவன் தவறாகப் புரிந்துகொண்டான் போலிருக்கிறது - கர்ப்பம் - கிரகம்; இந்த இரண்டுமே அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது.

எத்தனைக் கூட்டம் என்றாலும், தெளிவாக அதனை விளக்குவோம்!

கர்ப்பக்கிரகம் என்கிற வார்த்தையை எப்படி பயன்படுத்தியிருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே, அடுத்த கூட்டத்தில் எல்லா விவரங்களையும் விளக்கமாகச் சொல்வோம் என்று கூறிக்கொண்டு, ஒரு பகுதி முடிந்திருக்கிறது; இன்னும் எத்தனைக் கூட்டம் என்றாலும், தெளிவாக அதனை விளக்குவோம்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 5.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக