பக்கங்கள்

புதன், 4 ஏப்ரல், 2018

சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டாளா?

20.12.1955 அன்று ராசிபுரம் ரங்கவிலாஸ் தியேட்டரில் நாடகத் தலைமையேற்று பெரியார் அவர்கள் பேசுகையில், குறிப்பிட்டதாவது:


சூழ்ச்சியில் வலுத்த பார்ப்பனர்கள் நம் நாட்டுப் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களிடம் காட்டுமிராண்டிப் பழக்க வழக்கங்களைப் புகுத்திவிட்டார்கள். தன் சுயநலத்தையே பெரிதாகக் கொண்டு பார்ப்பனர்களுக்கும் இதுவரை நம் மக்கள் அடிமைகளாக இருந்ததுமன்றி கீழ்ஜாதிகள், நான்காம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி, சூத்திரன், பஞ்சமன், பார்ப்பனரின் இழிமகன், பார்ப்பனரின் கூலி, எப்பொழுதும் உடல் உழைப்புக் கொண்டு வாழும் தொழிலாளி என்று ஆக்கப்பட்டு விட்டான்.

இந்நிலையை என்றைக்கும் நிலைநாட்டவும், அழியாமல் மேன்மேலும் இந்நிலை வளர்ந்து கொண்டே போகவும்தான் பார்ப்பனர்கள் தங்கள் மதம், கடவுள், புராணம் இவற்றை உண்டாக்க வேண்டியதாயிற்று. அவற்றைப் பிரசாரம் செய்ய பல வழிகளிலும் முயற்சி எடுக்கும் முறைகளில் ஒன்றுதான் கலைகள் என்ற பெயராலும் பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

கலைஞர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களைப் பற்றியே பிரசாரம் செய்பவர்களாக இருந்ததால்தான் அவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். கடவுளின் பித்தலாட்டத்தையும் மதம், சாஸ்திர, புராணங்களின் அயோக்கியத் தன்மைகளையும் வெளியிடுபவர்கள் கலையில் சிறந்த வல்லுநர்களாக இருந்ததாலும், அவர்கள் நாஸ்திகர்கள், பார்ப்பனத் துவேஷிகள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள், ஏன்? இன்றைக்கும் எத்தனையோ கலைஞர்கள், புலவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் கூலிகளும், கடவுள் பிரச்சாரக்காரர்களும்தான் ஆவார்கள். மதப் புரட்டுகளையும், கடவுள் பித்தலாட்டங்களையும் வெளியிடுவார்களேயானால் அவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்படுவதில்லை.

கலைகளில் நாடகம், நடனம், சங்கீதம், ஓவியம் இப்படி பல வகை இருக்கின்றன என்றாலும் அவை ஒவ்வொன்றிலும் மதத்தையும், கடவுளையும் புகுத்தி இருக்கிறார்கள். கடவுள் அவதாரம் எடுத்ததாகக் கூறப்படும் புராணக் கதைகளை நடிப்பவர்கள்தான் நடிகர்கள். அப்படிப்பட்ட நாடகத்திற்குத்தான் அதிக மதிப்பும், சலுகையும் அளிக்கப்படுகிறது.

நடனக் கலையோ கடவுள் இப்படி ஆடினார்; கிருஷ்ணன் இன்னின்ன லீலைகள் செய்தான் என்பதைத்தான் சித்திரித்துக் காட்டப்படுகிறது. அதன்றி, அய்ந்து வயதுப் பெண்ணும் நடனம் ஆடுகிறதென்றால், காமமே உருவெடுத்தாற்போல் கண்ணனின் லீலா வினோதங்களை சித்திரித்து ஆடுகின்றனர். இப்படிப்பட்ட நடனக் கலையினால் அக்கலையைக் கைக்கொள்பவர்கள் மட்டுமின்றி, அதை ரசிக்கும் ரசிகனும் அவ்வித உணர்ச்சி கொள்ளும்படி ஆடுகிறான். சித்திரக்கலையும் அப்படித்தான். கடவுளின் உருவத்தை இப்படி அப்படி என்று இவர்களாக நினைத்துக் கொண்டான். அதை வரைந்து காட்டுவதுதான் சித்திரக்காரர்களின் திறமையாக இருக்கிறது.

இப்படிப் பலவிதமான கலைஞர்கள் என்பவர்களின் திறமையெல்லாம் மத சம்பந்தப்பட்டவற்றைப் பிரச்சாரம் செய்வதற்கென்றே அமைந்துவிட்டன. அன்றியும், மேன்மேலும் மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தவும், அநாகரிகத்தை வளர்க்கவும், பொய்ப் புரட்டுகளை உண்டாக்கவும் தான் உபயோகப்படுகின்றன.

பாரதத்தில் வருகிற திரவுபதி என்று கூறப்படுகிற பலே கைகாரி மகாபத்தினி என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு மனைவியாகியவள் அய்ந்து பேர்கள் கூடி தன்னை அனுபவிக்க இசைந்துள்ளதும் அன்றி, அய்ந்து பேர்களும் போதாது. ஆறாவதாகக் கர்ணன் என்பவன்மேல் ஆசை கொண்டிருந்தாளாம். இப்பேர்ப்பட்ட ஆபாசம் நிறைந்த கதை நாடகமாக நடிக்கப்படுகிறதென்றால், இதனால் என்ன அறிவு வளர முடியும்? திரவுபதியைப் போன்று ஒவ்வொரு பெண்ணும் நடந்து கொள்ள வேண்டும். அல்லது ஒருவன் மணந்த மனைவியை அண்ணன் தம்பிகள் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனைப் பேர்களும் அனுபவிக்கவேண்டும் என்பதா? இதில் என்ன கருத்து இருக்கிறதோ தெரியவில்லை. அன்றியும் பாரதத்தில் வருகிற பஞ்சபாண்டவர்கள் என்ற அத்தனை பேர்களுள் ஒருவராவது தன் தகப்பனுக்குப் பிறந்ததாகக் கூறப்படவில்லை. ஒவ்வொருவனையும் தனித்தனியே கள்ளப் புருஷனுக்குப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதைப்போன்று, இராமாயணம் என்ற புராணத்தின் ஊழலோ மிகவும் மோசமானது. அதில் வரும் பத்தினி என்று கூறப்படும் சீதையின் அயோக்கியத்தனமோ கொஞ்சமல்ல; தன் கணவனை எப்படியும் ஏமாற்றி விட்டு இராவணன் பின் செல்லவேண்டும் என்றே திட்டமிட்டு, தான் தனியாக இருக்கும் நிலையை ஏற்படுத்தவும், அது சமயம் இராவணன் தன்னைத் தூக்கிக் கொண்டு போகவேண்டும் என்பதற்காக மானைப் பிடிப்பதற்கென்று ராமனையும், பிறகு ராமனுக்குத் துணை செய்ய லட்சுமணனையும் அனுப்பி இருக்கிறாள். முன் கூட்டியே செய்த ஏற்பாட்டின்பேரில் தயாராக இருந்த இராவணன்அங்கு வந்து அவளை அழைத்துச் சென்றிருக்கிறான்.

இந்த இடத்தில் சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்படவில்லை; சீதையே இராவணன் மேல் இச்சை கொண்டு அவன் பின்னால் சென்றிருக்கிறாள் என்பதை நன்றாகக் கூற முடியும். அப்படிக் கூறுவது என் சொந்தக் கருத்தல்ல; பார்ப்பனர்கள் எழுதிய இராமாயணத்திலேயே ஆதாரம் எடுத்துக் காட்டுவேன்.

இராவணனுக்கு ஏற்பட்டிருக்கும் இரண்டு சாபங்களின் காரணமாக, இராவணன் சீதையை, சீதை சம்மதமின்றி தொட்டு எடுத்திருப்பானாகில் அவன் தலை வெடித்திருக்க வேண்டும். அல்லது உடம்பு நெருப்புப் பற்றி எரிந்திருக்க வேண்டும். இரண்டு ஆபத்துகளில் ஒன்றும் நேரவில்லை. சீதையின் தொடையை ஒரு கையாலும், மறு கையால் கூந்தலையும் பிடித்து தூக்கிச் சென்றிருக்கிறான். இதற்கு இராமாயண பக்தர்கள் என்ன பதில் கூற முடியும்?

இராவணனுக்குக் கொடுக்கப்பட்ட சாபங்கள் கப்ஸா என்று கூற முடியுமா? அல்லது சீதை இசைந்திருக்கிறாள்; இராவணனின் மேல் ஆசைப்பட்டு அவனுடன் சென்றிருக்கிறாள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதுமட்டுமல்ல, இன்னமும் இராமாயணத்தை மேன்மேலும் படித்து, துருவித் துருவி ஆராய்ந்தால்தான் அதனுடைய முழு வண்டவாளங்களும் நாளுக்குநாள் மேன்மேலும் புலப்படுகின்றன.

இராவணனிடமிருந்து மீட்டு வரப்பட்ட சீதை இராவணன் படத்தை வரைந்து கொண்டு அழுது கொண்டிருந்தாளாம். அதைக் கண்ட இராமன் கோபம் கொண்டு அவளைக் கொலை செய்ய முற்படுகிறானாம். அந்தச் சம்பவம் இராமாயணத்தில் கூறப்படுகிறது.

வால்மீகி இராமாயணத்தைவிட மேலான இராமாயணம் ஆனந்த இராமாயணம் என்று கூறுவார்கள். அதில் கூறப்படுவதை அப்படியே சி.ஆர். சீனிவாசய்யங்கார் கூறுகிறார்.:

இராவணன் வீட்டிலிருந்து சீதை மீட்கப்பட்டு இராமனுடைய அந்தப்புரத்தில் தனியாக இருக்கும்பொழுது அவளுக்குப் பழைய நினைப்பு வந்துவிடுகிறது; அதாவது இராவணனுடன் அனுபவித்த இன்பங்கள் எல்லாம் மனதில் தோன்றுகின்றன.

அவள்தன் மனத்தில் இராவணனைச் சித்தரித்துக் கொண்டு இராவணனின் உருவத்தை சித்திரமாக வரைகிறாள். அதுசமயம் இராமன் அங்கு வந்து விடுகிறான். இராமனைக் கண்டவுடன் சீதை அந்தப் படத்தைப் படுக்கைக் கட்டிலின் கீழ் போட்டு விடுகிறாள். இதைக் கண்டு கொள்ளாத இராமன் சீதையிடம் சல்லாபங்கள் செய்ய முயற்சிக்கிறான். இருவரும் ஜாலியாக இருக்கும்பொழுது கீழே கிடந்த இராவணனின் சித்திரமானது தெய்விகசக்தி கொண்டதாகி படபடவென்று அடித்துக் கொண்டதாம்.

அப்போது இராமன், யாரடா இந்த வேளையில் சப்தம் செய்கிறவனென்று கட்டிலின் கீழ் கீழே குனிந்து பார்த்ததும் அங்கு இராவணனின் படம் கிடக்கிறது. அதை எடுத்து சீதையிடம் காண்பித்து, உனக்கு இன்னமும் அந்த புத்தி போகவில்லையே! எவ்வளவு துணிவிருந்தால் இன்னும் இராவணன் ஞாபகமாகவே இருப்பாய் என்று கடிந்துவிட்டு உடனே அவளைக் கொலை செய்து வரும்படி லட்சுமணனை அனுப்புகிறான். அவன் காட்டிற்குச் சென்று அவளை உயிருடன் விட்டு விட்டு ஏதோ ஒரு பொய்யான கை ஒன்றைக் கொண்டு வந்து இராமனிடம் காண்பித்து சீதையைக் கொலை செய்து அவள் கையை எடுத்து வந்திருக்கிறேன் என்று ஏமாற்றி விட்டான். இப்படி சீதையின் யோக்கியதை இருக்க அவள் எப்படி பதிவிரதைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்?

இதனால், இராமன் ஒருவன் இருந்தான், அவன் மனைவி சீதை என்பவள் இருந்தாள் என்பதையோ நாங்கள் அப்படிப்பட்ட கதை ஒன்று நடந்திருக்கிறது என்பதையோ ஒப்புக்கொள்வதில்லை என்றாலும், அதன்மூலம் பார்ப்பனர்கள் யோக்கியதை என்ன? அன்று எழுதிய பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட நாகரிகம் கொண்டவர்கள்? அவர்களில் ஒரு பெண் பதிவிரதை என்றால் அவளுடைய நடத்தை எப்படி இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, புராணங்கள் நடந்ததாகக் கூறப்படுவது பொய் என்பதோடு, அதன்மூலம் பார்ப்பனர்களின் நாகரிகம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

- தந்தை பெரியார்
- “விடுதலை நாளேடு”, 24.12.1955

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக