பக்கங்கள்

வெள்ளி, 10 ஜூலை, 2015

சீதை தசரதனின் மகள்! 4,5 ஆதாரங்கள்! - தந்தை பெரியார்


இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டனவென்றும்,
 
ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமாயண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928ஆ-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புத்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புத்தகத்தின் விலை ரூ.1) அவையாவன:- ஜைன ராமாயணம், பவுத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்த ராமாயணம் என்பவைகளாகும்.

இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ்தராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இங்கு எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாயணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர்களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப் பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயீ, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்ததாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதுபோலவே சீதையை ஜனகராஜனுடைய மகள் என்றும், வில்லை வளைப்பவனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சுமணனுக்கு 18 பெண்சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்பட்டாளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டிருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர்! சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

பவுத்த ராமாயணத்திலும், தசரதராஜனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சுமணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும்,  அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்குப் பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமயனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்று சொன்னதால், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமானபின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப் பட்டிருக்கின்றது.
இவைகளை மெய்ப்பிக்க திரு. அய்யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10ஆ-வது மண்டலத்தில் 10,12 -சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின்தென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதாரமாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதி யிருக்கின்றார். திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431ஆ-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார் என்றும் அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜனகனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லையென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் ஸ்கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கு ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும் அந்தச் சாபத்தின் பலனாய் ராவணன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவணனுக்கு உண்மையில் ராமன் தன் தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்கமாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ஆம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்.
மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாகவும், ராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது ராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டதாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல்லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார்.
எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 - ஆதாரங்களும் ராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக்கின்றன. இன்னமும் மற்ற ராமாயணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்குமென்பது ஊகிக்கக் கூடவில்லை.
- குடிஅரசு, கட்டுரை, 03.03.1929

-உண்மை,1.7.2015

சீதை இராமனுக்குத் தங்கை!

      
இராமாயணம் எத்தனை இராமாயணம்!
சீதை இராமனுக்குத் தங்கை!
இராமனுக்கு நான்கு மனைவி!
- மஞ்சை வசந்தன்

இராமன் சீதை இருவரும் ஒருதாய் பிள்ளை. அதாவது அண்ணன் தங்கை என்று பவுத்த இராமாயணத்திலும், பம்ப இராமாயணத்திலும், ஜைன இராமாயணத்திலும் எழுதப்பட்டுள்ளது!
இன்னுமொரு இராமாயணத்தில் சீதை இராவணனின் மகள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இராமன் பல பெண்டிரைத் திருமணம் செய்தான் என்று ஜைன இராமாயணம் சொல்கிறது. 1.சீதை, 2.பிரபாவதி, 3.ரதினிபா, 4.ஸ்ரீதாமா என்ற நால்வரும் இராமனின் மனைவியர் என்கிறது இந்த இராமாயணம்.
இலட்சுமணனுக்கு எட்டு மனைவி
இலட்சுமணனுக்கு எட்டு மனைவிகள் 250 பிள்ளைகள் என்கிறது ஜைன இராமாயணம். விசல்யா, ரூபவதி, வனமாலா, கல்யாண மாலிகா, ரத்தினமாலிகா, ஜீதபத்மா, பாக்கியவதி, மனோரமா என்ற எட்டு மனைவிகள் என்று விவரிக்கிறது.
ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸ அய்யங்கார்
இவர் 1.ஜைன இராமாயணம், 2.பௌத்த இராமாயணம், 3.யவன இராமாயணம், 4.கிறிஸ்துவ இராமாயணம் என்ற நான்கு இராமாயணங்களை ஆய்வு செய்து 1928இல் இதர இராமாயணங்கள் என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்.
இருபத்து நான்கு இராமாயணம்
நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் இறுதியில் 24 இராமாயணங்கள் நிலைக்கின்றன.
பவுத்தர்கள் பிராகிருத மொழியிலும், இந்துக்கள் வடமொழியிலும், தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளிலும் இராமாயணம் எழுதியுள்ளனர்.
கி.பி.முதல் நூற்றாண்டில் விமலசூரி என்பவர் இராமாயணத்தை பவுமசகியம் என்ற பெயரில் எழுதினார்.

அதன்பிறகு சவுமியன், சுயம்புவன், குணபக்த ராச்சாரியன், ரவிசேனன், தேவச்சந்திரன், பிரவரசேனன் என்ற சமணர்கள் இராமாயணத்தை எழுதியுள்ளனர்.
பவுத்தர்கள் தசரத ஜாதகம், சாம ஜாதகக் கதை, செச்ந்திர ஜாதகம், சம்புல ஜாதகம், இலங்காவதார சூத்திரம் என்ற இராமாயண கதைகளை எழுதியுள்ளனர்.
7ஆம் நூற்றாண்டில் ரவிசேனன் மகாராமாயணம் எழுதினார். கி.பி.12ஆம் நூற்றாண்டில் திரிசஷ்டிகாலக்கா என்ற பெயரில் இராம கதையை எழுதினார்.
கி.பி.16ஆம் நூற்றாண்டில் தேவ விஜயர் இராம சரிதம் எழுதினார்.
இராமாயணம் என்பது கற்பனைக் கதை. உண்மை நடப்பாயிருந்தால் ஒரே மாதிரி இருக்கும். கற்பனை என்பதால் கண்டபடியிருக்கிறது! பலவிதமாக இருப்பதே பொய் என்பதற்கான ஆதாரம்.
தந்தை பெரியாரின் இராமாயண ஆய்வு
தந்தை பெரியார் அவர்கள் இராமாயணக் குறிப்புகள், இராமாயண பாத்திரங்கள் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்கள். இவை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட இராமாயணத்தைத்தான் இந்தியா முழுக்கப் பரப்பி மதவெறியைத் தூண்டப் பார்க்கிறது மதவெறிக் கூட்டம்.
இந்த இராமனைத்தான் இந்தியாவின் ஏகக் கடவுளாக ஆக்கப் பார்க்கிறார்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும்கூட அதை ஏற்க வேண்டும் என்கின்றனர்.
வடநாட்டில் தடம் பதிக்கும் பெரியார்
அறிவியலின் உச்சத்தில் உலகம் சென்று கொண்டிருக்கையில் நாட்டை 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துத் தங்களின் மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது ஆரியப் பார்ப்பனக் கூட்டம்.
இச்சூழலில் தந்தை பெரியாரின் தேவை வடபுலத்தாரால் உணரப்பட்டு பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்படுகிறது.
வடநாட்டு பத்திரிகைகள் தந்தை பெரியாரின் தேவையை வலியுறுத்தி எழுதுகின்றன. ஆரிய ஆதிக்கம் வீழ்த்தப்பட, மதச்சார்பற்ற நெறி பின்பற்றப்பட தந்தை பெரியாரின் கொள்கைகள் முதற்கட்டமாக  இந்திய மயமாக்க வேண்டியது இன்றியமையாக் கடமையாகும்.

-உண்மை இதழ், 1.7.2015