பக்கங்கள்

புதன், 4 ஏப்ரல், 2018

சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் நடந்தது என்ன?

இராமனை செருப்பாலடித்தது தி.க.'' என்றார்களே
அந்த சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் நடந்தது என்ன?
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்


சென்னை, ஏப்.4-  1971 சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், ஊர்வலத்தில் இராமன் செருப்பாலடிக்கப்பட்டதுபற்றி இன்றுவரை பிரச்சாரம் செய்கிறார்களே, அதன் உண்மை நிலை என்ன என்பது குறித்துத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.  27.3.2018 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு சொற்பொழிவு-2 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்
அவரது உரை வருமாறு:
இராமனைப்பற்றி பேசியதினால்தான்.. இரண்டாம் நாள் பொழிவாகிய இந்தப் பொழிவிற்கு முன் னுரையாக நல்ல கருத்துகளை எடுத்துக்கூறிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, இந்நிகழ்விற்கு வருகை புரிந்துள்ள சான்றோர் பெருமக்களே, இயக்கத்திற்கு அப்பாற்பட்டு இந்தக் கருத்துகளை அறிய வேண்டும் என்பதற்காக வந்திருக்கக்கூடிய அருமை நண்பர் களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, தொடர் நிகழ்ச்சிகளின் காரணமாக எனக்கு தொண்டை புண்ணாக இருக்கிறது; இருமல் தொல்லை. நேற்று மருத்துவரிடம் காண்பித்த பிறகு, நீங்கள் சில நாள்களுக்கு பேசாமல் இருக்கவேண்டும்; தொண்டைக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்று சொன்னார். நாளை நடைபெறும் நிகழ்ச்சியை தள்ளி வையுங்கள் என்றார். நான் இந்நிகழ்வைத் தள்ளி வைக்க விரும்பவில்லை. ஏனென்றால், இவ்வளவு தோழர்கள் இங்கே வந்திருக்கிறீர்களே உங்கள் அனைவரையும் ஏமாற்ற விரும்பவில்லை.  அதைவிட என்ன சொல்வார்கள் என்றால், இராமனைப்பற்றி பேசியதினால்தான், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்று சொல்லிவிடுவார்கள்.
கீழ்த்தரமானவர்கள் அவர்கள்!
நான் சங்கராச்சாரியார்பற்றி தொடர் சொற்பொழிவாற்றும் பொழுதுகூட, அதுபோன்ற ஒரு சூழல் இருந்தது. என்னுடைய அண்ணாருக்கு உடல்நிலை மோசமாக இருந்தது. அப்படி இருந்தாலும், அந்த நிகழ்வினை நான் தள்ளி வைக்கவில்லை. ஏனென்றால், சங்கராச்சாரியாரைப்பற்றி பேசியதால்தான் என்று சொல்லிவிடுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் கீழ்த்தரமானவர்கள்.
ஏன், இறந்துபோன சங்கராச்சாரியாரே என்ன சொன்னார், காம, கோடி என்று பேசினார் கருணாநிதி, அதனால், படுத் துண்டுட்டார் என்று சொன்னார். திருச்செந்தூர் இடைத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில்!
அதற்காக கலைஞருக்கு உடனே மருத்துவம் சிறப்பாகப் பார்த்து, அந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கே சென்று உரையாற்றினார். சமைத்தாகிவிட்டது; சூடாகப் பரிமாறவேண்டும்; இடைவெளி கூடாது
அதனால், இதுபோன்ற நிகழ்ச்சிக்கு நீங்கள்  எல்லோரும் வந்திருக்கிறீர்கள். நிறைய செய்திகளை சொல்லவேண்டும். நிறைய சமைத்தாகிவிட்டது; சூடாகப் பரிமாறவேண்டும்; இடைவெளி கூடாது. இது மிகவும் சுவையான விஷயங்கள். பாபர் மசூதி இடித்த நேரத்தில்,  இராமர் கோவில் கட்டப் போகிறோம் என்று சொன்ன அந்தக் காலகட்டத்தில், இந்தியா முழுவதும் எவ்வளவு கலவரங்கள்; இன்றைய இளைஞர்கள், தோழர்கள், புதிதாக வந்திருக்கின்ற தோழர்களுக்கு இந்த வரலாற்றை நினைவூட்டவேண்டும். எங்கு பார்த்தாலும், ரத்த ஆறு, கொலைகள். பம்பாய் என்று நாம் முன்பு அழைத்து, இப்போது மும்பை என்று அழைக்கப்படும் அந்த நகரம், காஸ்மோபாலிட்டன் நகரம் என்று பெயர். கொல்கத்தா, டில்லி இதுபோன்ற நகரங்களில் திட்டமிட்ட கலவரங்கள். தென்னாட்டில் கலவரம், கருநாடகம், கேரளம், ஆந்திராவில் கலவரம் நடைபெற்றது.
தமிழகத்தில் அன்றைக்கு செல்வி ஜெயலலிதா அவர் கள் முதலமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில், ஒரு பெரு மையான நிகழ்ச்சி என்னவென்றால், ஒரு சிறிய தகராறுகூட, மதக்கலவரம்கூட, ஒரே ஒரு சம்பவம்கூட நடைபெறவில்லை தமிழ்நாட்டில்.
திருநெல்வேலிக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு பகுதியில் இசுலாமியர்கள் வாழக்கூடிய பகுதி. அந்தப் பகுதி தனி முனிசிபாலிட்டியாக இருந்து கார்ப்பரேசனாகிவிட்டது அந்தப் பகுதி. அங்கே இசுலாமியர்களுக்குள் அண்ணன் - தம்பி குடும்பச் சண்டை. அந்த சம்பவம் நடைபெற்றபோதுகூட, பாபர் மசூதி சம்பவத்திற்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்று சொன்னார்கள்.
தமிழ்நாட்டை திராவிட பூமியாக' ஆக்கி வைத்திருக்கிறார் பெரியார்!
நம்முடைய தமிழ்நாட்டு காவல்துறையினரை, மற்ற மாநிலங்களுக்குப் பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. அன்றைக்கு ஒரு கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்தது.
இந்தியா முழுவதும் இவ்வளவு கலவரங்கள் நடைபெற்ற பொழுதும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தெளிவாக இருக் கிறது. இது ஜெயலலிதா அவர்களின் ஆளுமை என்று மட்டும் சொல்ல முடியாது. அதையும் தாண்டி ஒரு அடி நீரோட்டம் இருக்கிறது. அது என்னவென்றால், பெரியார் இந்த மாநிலத்தை, இந்த மண்ணை ஒரு திராவிட பூமியாக ஆக்கி வைத்திருக்கிறார். ஆகையால், தமிழகத்தில் கலவரங்களுக்கு இடமில்லை.
பெரியாருடைய கிளர்ச்சியைக்கூட, ராமன் படத்தை எரிக்கிறார்; இராமாயணத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று கேலி செய்தவர்கள் எல்லாம் உண்டு. இராமாயண ஆராய்ச்சி என்ற தலைப்பில்...
ஒரு அரசியல் தலைவரே கூட பேசினார், பெரியாருக்கு என்ன எந்த ஆட்சி வந்தாலும், அதை ஆதரிப்பார். ஆத ரிக்கிறது வாய்ப்பில்லை என்றால், இராமாயண ஆராய்ச்சி என்ற தலைப்பில் கூட்டம் போட்டு, இராமன் குடிகார இராமன், விபச்சாரி சீதை என்பதற்கு ஆதாரம் என்ன? என்பார். வால்மீகி இராமாயணத்தில் ஆதாரம் இருக்கிறது என்பார். பக்கத்தில் அமர்ந்திருக்கும் வீரமணியைப் பார்த்து, இந்தப் பக்கத்தைப் படி என்று சொல்வார்; வீரமணியும் அந்தப் பக்கத்தில் உள்ள செய்தியைப் படிப்பார் என்று கேலியாக பேசிய ஒரு காலகட்டம் உண்டு.
இராமனை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை
ஆனால்,அதுஎவ்வளவுமுன்னோட்டமான,தொலை நோக்கான ஒரு செயல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான், இன்றைக்கு அவர்களால், இராமனை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை.
அந்த நிகழ்வினைத் திரும்பவும் உங்களுக்குச் சொல்கிறேன்
இராமனைசெருப்பால்அடித்தார்கள்;செருப்புமாலை போட்டார்கள் என்று சொல்கிறார்கள்; செருப்பு மாலையெல் லாம் போடவில்லை. செருப்பாலடித்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை தொலைக்காட்சிகளிலும் விளக்கினேன்; இருந்தாலும், அந்த சம்பவத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த நிகழ்வினைத் திரும்பவும் உங்களுக்குச் சொல்கிறேன்.
சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டு ஊர்வலத்தில் தந்தை பெரியார் அவர்களை அழைத்து வருகிறோம். கடவுள்களின் பிறப்புகளை புராணத்தில் இருக்கின்றபடி, இதிகாசத்தில் இருக்கின்றபடி, படங்களுடன் விளக்கிக் கொண்டு அந்த ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்தனர்.
மாநாட்டிற்கு வருகின்ற தந்தை பெரியாருக்கு கருப்புக் கொடி காட்டப்போகிறோம் ஜனசங்கத்தினர் சொன்னார்கள். 1980 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் பாரதீய ஜனதா கட்சி என்று அரசியல் கட்சியாயிற்று. அதற்குமுன்பு, பாரதீய ஜனசங்கம் என்று அதற்குப் பெயர். அந்தப் பாரதீய ஜனசங்கத்தினர், பெரியாருக்குக் கருப்புக்கொடி காட்டப் போகிறோம் என்று காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். அன்றைக்குக் அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். இந்த சம்பவம் நடைபெற்ற ஆண்டு 1971.
தி.மு.க.விற்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக...
தேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது; அய்யா அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார், சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கு. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது. அய்யா அவர்களுக்குத் தெரியும். நாம் மூடநம்பிக்கைகளைப்பற்றி அந்த மாநாட்டில் உரையாற்றப் போகிறோம். அந்த உரையில், தாட்சண்யம் இல்லாமல், பல செய்திகளை சொல்லவேண்டும். நாம் அப்படி பேசுவதால், தி.மு.க.விற்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படக்கூடாது. அத னால், தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்களையோ, பொறுப் பாளர்களையோ அந்த மாநாட்டிற்கு அழைக்கவில்லை. ஏனென்றால், எங்களுடைய கருத்துக்கு நாங்களே பொறுப்பு. திராவிடர் கழகம் அந்தப் பணியை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.
அப்படி இருந்த அந்த காலகட்டத்தில், முதலமைச்சராக இருந்த கலைஞரிடம், காவல்துறை அதிகாரிகள் கேட்கிறார்கள், பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டவேண்டும் என்று அனுமதி கேட்கிறார்கள்; அவர்களைக் கைது செய்யலாமா? தடை விதிக்கலமா? அல்லது அனுமதி கொடுக் கலாமா? என்று கேட்டனர்.
கருப்புக்கொடி காட்டுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது
உடனே முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தாராளமாக அனுமதி கொடுங்கள்; கருப்புக்கொடி காட்டுவதற்கு அவர் களுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னார்.
இதுதான் தி.மு.க., இதுதான் திராவிடர் இயக்கம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்னொரு வகையில் அதனால் லாபம்; அய்யாவிடமே அதனை சொன்னார் கலைஞர் அவர்கள்.
அது என்னவென்றால், பெரியாருக்குக் கருப்புக்கொடி காட்டினால், மேலும் உற்சாகமடைவார். அந்த மாநாட்டில் இன்னும் கொஞ்சம் வேகமாக உரையாற்றுவார்.
அதேபோன்று, சேலம் மார்க்கெட் பகுதியில் ஒரு மூலையில் 50 பேரை அப்படியே காவல்துறையினர் வளைத்து நின்றனர். ஊர்வலம் செல்லும்பொழுது கருப்புக்கொடி காட்டினார்கள்; அய்யா அவர்களும் கையசைத்து காட்டி மகிழ்ச்சியாக சென்றார்.
அய்யாவிற்குப் பின் ஊர்வலத்தில் கடவுளர் படங்களை வைத்து வண்டிகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த ஜன சங்கக் கூட்டத்தில் இருந்த ஒருவர், பெரியார்மீது செருப்பை வீச வேண்டும் என்று நினைத்து, செருப்பை தூக்கி எறியும்போது, அய்யா வந்த வண்டி நகர்ந்து சென்றதால், அதற்கடுத்து வந்த கருப்புச்சட்டைத் தோழர்கள்மீது அந்த செருப்பு விழுந்தது. அந்த செருப்பை எடுத்த தோழர், ஊர்வலத்தில் வந்த இராமன் படத்தின்மீது அடித்தார். பெரியாரை மீது செருப்பை வீசவேண்டும் என்று நினைத் தீர்கள் அல்லவா என்று அந்த செருப்பை எடுத்து இராமன் படத்தின்மீது அடித்தார். ஊர்வலமும் முடிந்தது; அந்த நிகழ்வு அப்போது பெரிதாக ஆகவில்லை.
தேர்தலில் தி.மு.க.வை ஒழிக்கவேண்டும் என்று நினைத்து ஊழல், ஊழல் என்று சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை.
தினமணி ஆசிரியர் சிவராமன்
அன்றைக்கு தினமணி ஆசிரியராக இருந்தவர் சிவராமன் அவர்கள். அந்தப்  பத்திரிகையில் மிகக் கடுமையாக எழுதினார்கள். ஊழல், ஊழல் என்று எழுதி தி.மு.க.வை ஆட்சிக்கு வரக்கூடாது; திராவிட இயக்கத்தை அழித்துவிடவேண்டும் என்று மிகப்பெரிய அளவிற்கு எழுதினார்கள்.
கடைசி நேரத்தில், காமராசரும் - ராஜாஜி ஆகியோர் கூட்டணி வைத்த தேர்தல் அது. ஜனநாயகத்தைக் காப் போம் என்ற தலைப்பு கொடுத்து, கூட்டம் நடைபெற்றது கடற்கரையில். அந்தக் கூட்டத்தில், ராஜாஜி அவர்கள், காம ராசருக்குப் பொட்டு வைத்தார்.
தன்னுடைய வாழ்நாளில், தான் செய்த மிகப்பெரிய தவறான முடிவு!
பிறகு காமராசர் சொன்னார், என்னுடைய வாழ் நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறான முடிவு, இராஜ கோபாலாச்சாரியாரோடு கூட்டணி வைத்ததுதான்; அதுதான்  தோல்விக்குக் காரணம் என்றார்.
தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன் துக்ளக் அட்டைப் படத்தில், தந்தை பெரியார் ஒரு கையில் ஒரு பெரிய செருப்பு வைத்து இருக்கிறார்; இன்னொரு கையில் இராமன் படம்; ஓங்கி அடிப்பதுபோன்று செருப்பைக் காட்டுகிறார். அருகில் கலைஞர் அவர்களின் படம். பலே, பலே நல்ல அடியுங்க என்று சொல்வது போன்று படத்தைப் போட்டு,
ராமனை செருப்பாலடித்தவர்களாக்கா உங்கள் ஓட்டு? என்ற வாசகம் போட்டிருந்தார்கள்.
தேர்தலில் பக்தர்களுடைய வாக்குகளை வாங்கவேண் டும்; தி.மு.க.வை வீழ்த்தவேண்டும்; திராவிட இயக்கத்தை அழிக்கவேண்டும் என்பதற்காக அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்கள்.
தி.மு.க. தோழர்களுக்கே பயம்!
தி.மு.க. தோழர்களுக்கேகூட பயம், போச்சு, போச்சு, உங் களால், நாங்கள் வெற்றி பெறுவது போச்சு என்று சொன் னார்கள்.
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியைச் சேர்ந்தவர்கள், துக்ளக்' அட்டைப் படத்தினைப் பெரிதாக்கி, கோவில் கதவு அளவிற்கு சுவரொட்டி அடித்தார்கள். எல்லா ஊர்களிலும் அந்த சுவரொட்டிகளை ஒட்டினார்கள். இராமனை செருப்பாலடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று இதைச் சொன்னால், பக்தியைக் காட்டினால், அந்தப் பக்தியினால் நமக்கு ஓட்டு போட்டுவிடுவார்கள் என்பதற்காக அந்த வேலைகளைச் செய்தார்கள்.
கூட்டங்களில் நாங்கள் பேசினோம்; இராமனைச் செருப்பாலடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று சொல்கிறார்களே, எந்த இராமன்? இன்னுங்கேட்டால், இராமன் எப்பொழுது தேர்தலில் நின்றான்; அவன் என்ன வேட்பாளரா? இராமனுக்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டோம்.
சேலம்-1 தொகுதியின் தி.மு.க. வேட்பாளரின் பெயர் ஜெயராமன்.
சேலம் - 2 தொகுதியின் தி.மு.க. வேட்பாளரின் பெயர் இராசாராம்.
அந்தத் தேர்தலில் பிரதமர் இந்திரா காந்தி அவர்களும், தி.மு.க.வும் கூட்டணி வைத்திருந்தார்கள்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உரையாற்றிக் கொண்டிருந்த இந்திரா காந்தி அம்மையாரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
இமயம்முதல் குமரி வரை பத்திரிகையாளர்களாக இருந்த வர்கள் அவாள்கள்தான். இன்றைக்குத்தான் நம்மவர்கள் செய்தியாளர்களாக இருக்கிறார்கள். அதனால், அவாள்கள் இந்திராகாந்தியிடம் கேள்வி கேட்டார்கள்.
தமிழ்நாட்டில் நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்களே தி.மு.க.வுடன். அங்கே என்ன நடக்கிறது தெரியுமா? என்று கேட்டார்கள்.
என்ன நடந்தது? சொல்லுங்கள் என்று இந்திரா காந்தி அவர்களும் கேட்டார்.
பெரியார், இராமனை செருப்பாலடித்தார் தேர்தல் நேரத்தில். அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லையே? என்று கேட்டார்கள்.
1934 ஆம் ஆண்டிலிருந்தே  அதை செய்து வருகிறாரே!
இந்திரா காந்தி அம்மையார் ஆங்கிலத்தில்,
What? What? You mean Ramasamy Naicker? What did he do?
Madam, he beat Rama, with cheppals,
Is‘t
If it is fact. It is not a new thing, he is doing  it from 1934 onwards.

என்று பதில் சொன்னார்கள். ராமசாமி நாயக்கர் இன்றைக்குத்தான் புதிதாக அடிக்க வில்லையே; 1934 ஆம் ஆண்டிலிருந்தே அதை செய்து வரு கிறாரே என்று இந்திரா காந்தி அம்மையார் பதில் சொன்னார்.
இராமனை செருப்பால் அடிப்பதற்கு முன் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 138.
இராமனை செருப்பால் அடித்த பிறகு, 184.
தேர்தல் முடிவு வந்தவுடன், கேரவன், கரண்ட், பிளிட்ஸ் வடநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்த  செய்தி யில், தமிழ் நாட்டு வாக்காளர்களைப் புரிந்துகொள்ள முடிய வில்லையே! இராமனை செருப்பாலடித்தது அவ்வளவு பெரிய sensational issue -  அதுவும் ஒரு மதத்தில் கை வைப்பது என்பது மின் சாரத்தில் கைவைப்பது போன்றது என்று நாங்கள் எல்லாம் நினைத்தோம். ஆனால், தேர்தல் முடிவைப் பார்த்ததிலிருந்து, இராமனை செருப்பாலடித்துவிட்டு தேர்தலில் நின்றால், நிறைய ஓட்டு கிடைக்கும் என்று தெரிகிறது.
ஆக, ஒரு தவறான பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.
கண்ணதாசன் சொன்னார், சேலத்தில் இராசாராமன் வெற்றி பெற்றார்; ஜெயராமன் வெற்றி பெற்றார்; சிவராமன் (தினமணி ஆசிரியர்) தோல்வியுற்றார் என்றார்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்தப் பிரச்சாரத்தை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்களே தவிர, அதனுடைய அடிப்படை என்ன என்பதை தயவு செய்து தெரிந்துகொள்ளவேண்டும்.
இராமாயணம் ஒரு கதை
ஏன் அவர்கள், இராமனை, இராமாயணத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதைப்பற்றி சொல்லும்பொழுது ஒன்றைக் கவனிக்கவேண்டும்.
கடவுள்கூட முக்கியமல்ல; பிராமணர்கள்தான் - பார்ப்பனர்கள்தான் தொழப்படவேண்டும் என்பதுதான் இராமாயணத்தினுடைய தத்துவம்; இதுதான் புராணங்கள், இதிகாசங்களுடைய தத்துவம். இதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்றைக்கு ஏன் நாங்கள் இதைப்பற்றி பேசுகிறோம்? ஆடிசி, அரேபியன் நைட்ஸ் போன்ற கதைகள் நிறைய இருக்கின்றன. அதெல்லாம் கதைகள். அதேபோன்று இராமாயணம் ஒரு கதை. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கிறது.
அது புனிதமானது, அது கடவுள், அதைத் தொழவேண்டும் என்று சொல்லவேண்டியதின் நோக்கம் என்னவென்றால், புனிதத்திற்காக அல்ல நண்பர்களே! இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். புனிதம் என்று நினைத்தால், அவர்கள் கும்பிட்டுவிட்டுப் போகட்டும்; ஒரு கிறித்துவன் பைபிளை வைத்துக் கொள்கிறார்; இசுலாமியர்கள் குரானை வைத்துக் கொள்வதுபோன்று.
ஆனால், அதுபோன்று ஒரு நூல் கிடையாது இராமாயணம். அதனுடைய அடிப்படை என்னவென்றால், நூற்றுக்கு 97 பேரை கீழ்ஜாதியாக்கி - சூத்திரனாக்கி, பஞ்சமனாக்கி வைத்திருக்கின்ற வருணாசிரம தர்மம் - அந்த வருண தருமத்தைக் காப்பாற்றவேண்டும்.
இராமாயணத்தில் இராமனைப் பெரியாளாக்கி, அவன் யாரைக் கும்பிடுகிறான் - இராமனை கடவுள் அவதராம் - அவன் யாரைக் கும்பிடுகிறான் என்றால், முழுக்க முழுக்க பிராமணர்களைத்தான் கும்பிடுகிறான்.
வால்மீகி இராமாயணம் எழுதப்பட்டபோது, ஆய்வாளர் களுடைய கருத்தோடு நான் சொல்கிறேன், அதற்கு ஆதாரம் இருக்கிறது. அதில் கடவுள் அவதாரம் கிடையாது. அதில் ஒரு சாதாரண மனிதன். மனிதனுக்குரிய எல்லா பலகீனங்களும் இருக்கிறது என்று காட்டுகிறார். அதில் ஒன்றும் நமக்கு ஆட்சேபணை கிடையாது.
இராஜகோபாலாச்சாரியார் சக்கரவர்த்தி திருமகனில் எழுதியிருக்கிறார்
இராமன் மனைவியை சந்தேகப்படுகிறான்; இராமன் கறி சாப்பிடுகிறான். காட்டிற்குச் சென்றால் அதெல்லாம் சாப்பிடவேண்டும் என்று இராஜகோபாலாச்சாரியாரே எழுதி யிருக்கிறார்.
இவர்கள் வர்ணிப்பதுபோல, இராமன் ஒன்றும் ஏக பத்தினி விரதன் கிடையாது. இராமனுக்கு நிறைய மனைவிகள் இருந்திருக்கிறார்கள். அதனை இராஜகோபாலாச்சாரியார் அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார், எழுதியிருக்கிறார்; சக்கரவர்த்தி திருமகனில் எழுதியிருக்கிறார். இதையெல்லாம் மறுக்க முடியாது.
ஆனால், திரும்பத் திரும்ப ஒரு தவறான பிரச் சாரத்தை செய்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்தை எப் பொழுது உண்டாக்கினார்கள் என்றால், திட்டமிட்டு பார்ப் பனர்களுக்கு எதிர்ப்பு வந்தது; ஏன் இராமாயணத்தை இவ்வளவு பெரிதாக்கினார்கள்? ஏன் இராமாயணம் 200, 300 இராமாயணமாயிற்று? ஏன் இராமனை - வணங்கத்தக்கவனாக, பூஜிக்கத்தகுந்தவனாக ஆக்கினார்கள் என்றால், பெரிய கற்பனைகளை உருவாக்கினார்கள். மரியாதை இராமன் - புருஷ உத்தமன். இதை உண்டாக்கியது துளசிதாஸ் இராமாயணத்தில்.
இதை செய்யவேண்டிய அவசியமென்ன என்று சொல்லும்பொழுது நண்பர்களே, இதில் மிக அழகாக விளக்கியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதோ என்னுடைய கைகளில் இருப்பது டில்லியில் இருந்து வெளிவரக்கூடிய காரவன் பத்திரிகை. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குமுன்பு ஒரு கருத்தரங்கம் போன்று சிம்போசி ஒன்றை நடத்தினார்கள்.
ஜிலீறீணீவீபீணீ,  லீமீ னீவீரீவீபீமீக்ஷீ ஷீயீ பிவீஸீபீ ஷிஷீநீவீமீஹ்
இராமசரிதம் மனாஸ் நடத்திய கோசாமி என்ற துளசிதாஸ்
இந்து சமுதாயத்தைத் திசை திருப்பக்கூடிய தவறான வழிகாட்டக்கூடிய ஒருவர்தான் இராமசரிதம் மனாஸ் நடத்திய கோசாமி என்ற துளசிதாஸ் என்கிற பார்ப்பனர். அவர் எழுதியது திட்டமிட்டதுதான்.
இராமனை அவதாரமாக்கி, கடவுள் அவதாரம் அவனைக் கும்பிடுங்கள் என்று சொல்லி, அந்தக் கடவுளைக் கும்பிடுகிற நேரத்தில், கடவுளே யாரைக் கும்பிட்டார் தெரியுமா? பிராம ணர்களைக் கும்பிட்டார் - பார்ப்பனர்களைக் கும்பிட்டார்.
இது இந்தி மொழியில் துளசிதாஸ் இராமாயணம். சமஸ்கிருத மொழியில் வால்மீகி இராமாயணம்.
ஏறத்தாழ துளசிதாஸ் அதைத் திருப்பி, இராமசரித மன்னார்ஸ் என்று சொல்லக்கூடிய அந்தக் கோசாமி அதை எழுதிய காலகட்டத்திற்கும், அதே காலகட்டத்தில், கம்பர் தமிழ்நாட்டில் எழுதியதற்கும் கொஞ்சம் வித்தியாசம்தான். திட்டமிட்டே ஒரு இயக்கத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு என்ன அவசியம் என்று சொல்லும்பொழுது, ஆய்வறிஞர்கள் கட்டுரையில் எழுதியிருக்கிறார்கள்.
பார்ப்பனர்களுடைய செல்வாக்கு மிகவும் கீழே போயிற்று!
ஒரு ஆய்வாளரின் பெயர் ராம். பண்டர்கார் என்கிற பெரிய ஆய்வாளர்; மஜூம்தார் என்கிற ஆய்வாளரும் எழுதியிருக்கிறார்.
அவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்கள், புத்தம் ஜாதியைத் தாக்கியது. பவுத்தருடைய செல்வாக்கு ஏராளம் வந்தது. அசோகருடைய ஆட்சியில் வந்தது. இதையெல்லாம் எதிர்த்த பார்ப்பனர்களுடைய செல்வாக்கு மிகவும் கீழே போயிற்று. பார்ப்பனர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள். இவர்கள்தான் ஜாதி முறையினுடைய அடித்தளத்தை உருவாக்கக்கூடியவர்கள் என்கிற எண்ணம் வந்தது. ஆகவே, பார்ப்பன எதிர்ப்பு என்பது உச்சக்கட்டத்திற்குப் போன காலகட்டத்தில்,
பார்ப்பனர்களைப் பெரிதாக்கவேண்டும் என்று நினைத்தவுடன், அதற்கு சிலரைப் பிடித்தார்கள். அப்படி பிடித்து தயார் செய்தவர்கள்தான், வடக்கே உத்தரப்பிரதேசத்தில் இராமசரித மன்னார்ஸ்; தெற்கே கம்பன்.
வடசென்னை கம்பன் விழாவில் கலவரம் ஏற்பட்டது ஏன்?
ஏன் திராவிட இயக்கம் கம்பனை கடுமையாக எதிர்த்தது? வடசென்னையில் கம்பன் விழா நடக்கும்பொழுது கலவரம் ஏற்பட்டது. மைக்கைப் பிடுங்கி எறிந்து கேள்வி கேட்டது யார் தெரியுமா? சாந்த சொரூபியாக இருந்த என்.வி.நடராசன் அவர்கள்.
கம்பன் செய்திருக்கிற துரோகம் இருக்கிறதே, இனத் துரோகம். அது மன்னிக்க முடியாத துரோகமாகும்.
திரு.வி.க.விற்கு தந்தை பெரியாரின் பதில்!
பெரியாரைப் பார்த்து திரு.வி.க. அவர்கள் கேட்டார்,
நாயக்கரே, தயவு செய்து கம்பனுடைய கவிக்காவது அதனைப் பாராட்டக்கூடாதா? கம்பனைக் கண்டிக்கலாமா? என்றாடர்.
உடனே பெரியார் அவர்கள், முதலியார் அவர்களே, திரு.வி.க. அவர்களே, உங்கள்மேல் நிறைய மதிப்பு உண்டு. நீங்கள் தமிழ்த்தென்றல். தமிழுக்காக கம்பனைப் பாராட்டவேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால், நான் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள். உங்களைப் பெற்ற தாயை, உங்கள் அம்மாவை, ஒருவன் நிர்வாணமாக ஓவியம் எழுதி வைத்திருக்கிறான் என்றால், அந்த ஓவியத்தின் சிறப்பு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது பார்த்தீர்களா? என்று நீங்கள் ரசிப்பீர்களா? என்றார்.
திரு.வி.க. அவர்கள் அதோடு வாயைத் திறக்கவில்லை.
என் தாயை ஒருவன் நிர்வாணமாக வரைந்திருக்கிறான்; ஆகா, அந்த ஓவியத்தின் தன்மை எவ்வளவு என்று இன்னொருவன் சொல்கிறான். அதைக் காதால் கேட்டுக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியுமா? என் தாயைக் கொச்சைப்படுத்தி இருக்கிறான் - அதுபோன்று தமிழ்ப் பண்பாட்டை அழித்திருக்கிறான் - தமிழர்களுடைய உணர்வைக் கெடுத்திருக்கிறான் - தமிழர்களை காட்டிக் கொடுத்திருக்கிறான் - தமிழ் வளர்ச்சிக்குக் கேடு செய்திருக்கிறான் என்பதுதான் அதனுடைய அடையாளம் என்று பெரியார் எழுதினார்.
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 4.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக