பக்கங்கள்

புதன், 30 மே, 2018

அண்டப் புளுகுகளுக்கும் அளவில்லையா?

அண்டப் புளுகுகளுக்கும் அளவில்லையா?

இராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்தால் தீராத நோய் எல்லாம் தீரும் என்றால் மருத்துவக் கல்லூரிகளும் - மருத்துவமனைகளும் ஏன்? ஏன்?


சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆய்வுரை




சென்னை, மே 21-  இராமாயணத்தில் சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்தால், தீராத நோயும் தீருமென்றால், மருத் துவக் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் ஏன்? அண்டப் புளுகு என்பது இதுதானோ - என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம்


(கம்பன் புளுகும் - வால்மீகியின் வாய்மையும்)


16.5.2018 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் (கம்பன் புளுகும் - வால்மீகியின் வாய்மையும்) என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு சொற்பொழிவு-4 சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

கழகத் துணைத் தலைவர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், ஆய்வு சொற்பொழிவைக் கேட்க வந்திருக்கக்கூடிய அறிஞர் பெருமக்கள், இருபால் தோழர்கள் ஆகிய அருமை நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன் பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் என்ற நிலையில், சிறப்பான வகைகளில் பல்வேறு ஆய்வுகளை செய்த இயக்கம் அறிவாசான் தந்தை பெரியார் அவர் களுடைய இயக்கம். அதற்கு முன்பும்கூட பலர் இந்தப் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் ஏதோ ஒரு அரங்கத்தில் பேசியவர்கள், எழுதியவர்கள் என்றுதான் அது இருந்தது.

இராமாயண பாத்திரங்கள் - இராமாயண


சம்பாஷனைகள் - இராமாயணக் குறிப்புகள்!


ஆனால், பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில், இராமா யணத்தை இன்றைக்கும் தூக்கிப் பிடிப்பதற்கு, பரப்புவதற்கு அடித்தளமாக இருக்கின்ற மிக முக்கிமான நோக்கம், துணைத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, இன்னும் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல, அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் இடையறாது மேடைதோறும் தவறாமல் வால்மீகி இராமாயணத்திலிருந்து, பல்வேறு பகு திகளில் இருக்கின்ற முரண்பாடுகளைப்பற்றி பல லட்சங்கள், அவருடைய இராமாயண பாத்திரங்கள் - இராமாயண சம்பாஷனைகள் - இராமாயணக் குறிப்புகள் இவைகள் அத்தனையும் பார்த்தீர்களேயானால், அவை எல்லாம் ஆய்வுகள்தான்.

சக்ரவர்த்தி திருமகன்


ஒவ்வொரு தோழரும், இந்த உரையைக் கேட்க வரு கின்ற நீங்கள், மேற்சொன்ன மூன்று தலைப்பில் உள்ள புத்தகங்களையும், தந்தை பெரியார் அவர்களுடைய நூல்களை ஆழமாக நீங்கள் படித்தீர்களானால் தெரியும். அவர் பிழிவுகள் மாதிரி கொடுத்திருக்கிறார். ஒரு வரிக்குக்கூட யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. அதற்கு நேரிடையாக பதில் எழுதாமல், மறைமுகமாக செய்யக்கூடிய வகையில்தான், இராஜகோபாலாச்சாரியார் அவர்கள், சக்ரவர்த்தி திருமகன் என்ற தலைப்பில், கல்கியில் எழுதினார்.

சி.ஆர்.சீனிவாச அய்யங்கார்




ஆனால், பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டிய பல்வேறு செய்திகளை அவர்களால் மறுக்க முடியவில்லை, மறைக்க முடியவில்லை. தந்தை பெரியார் அவர்கள், இராமாயணப் பதிப்புகளான பழைய பதிப்புகள் முதல் எல்லாவற்றையும் வைத்திருந்தார். இப்பொழுதுகூட லிப்கோவிற்கு ஒரு பெரிய விளம்பரத்தை அண்மையில் சில ஏடுகளில் கொடுத்திருந்தனர். அந்த லிட்டில் பிளவர் கம்பெனி என்பது, அவர்கள் வால்மீகி இராமாயணத்தை - சி.ஆர்.சீனிவாச அய்யங்கார் படம் மற்றும் சமஸ்கிருத சுலோகங்களைப் போட்டு, ஒவ்வொரு காண்டத்தினையும் வெளியிட்டு இருக்கின்றனர்.

இது ஜாதி, வருணாசிரம தர்மம், பெண்ணடிமை மற்றும் ஆரிய - திராவிட போராட்டத்தினுடைய பின்னணி என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், மூடநம் பிக்கை களைக்கூட, பக்தியைப் பயன்படுத்தி, அச்சத்தை, ஆசையை அடிப்படையாகக் கொண்டதுதான் பக்தி.

1962  ஆம் ஆண்டு பதிப்பான இராமாயணம் - இதிலி ருந்துதான் பல பகுதிகளை சுட்டிக்காட்டிப் பேசினார் தந்தை பெரியார். எது எது மிக மோசமான பகுதி - எது எது ஆரிய-திராவிட போராட்டத்தைக் குறிக்கிற பகுதி-எது எது அறுவருப்பான பகுதிகள் என்று குறிப்பிட்டவற்றை அடுத்த அடுத்த பதிப்புகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துவிட்டார்கள்.

புதிய பதிப்பையும் வாங்கச் சொல்லி, பழைய பதிப்பையும் - புதிய பதிப்பையும் ஒப்பிட்டுப் பேசுவார். நாங்கள் இராமாய ணத்தைப்பற்றி பேசியதும், இராமாயணத்தையே ரிப்பேர் செய்துவிட்டார்கள் என்று சொல்வார் அய்யா.

இன்றைய சொற்பொழிவில் அதனை மய்யப்படுத்தி பேசவிருக்கிறேன்.

பக்தியைப் பயன்படுத்திக்கொண்டு, எப்படி மக்களை மூடநம்பிக்கைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதற்கு உதாரணம்,

பெரியாரிடம் இருந்த துணிவு


மற்றவர்களிடம் இல்லை


வால்மீகி இராமாயணத்தில் ஏழு காண்டங்கள் இருக்கிறது என்றால், கம்ப இராமாயணத்தில் உத்தரகாண்டத்தை எடுத்துவிட்டார். சார்பு நூல் என்று சொல்லக்கூடிய ஒன்றில், அவருடைய இஷ்டம்போல், எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியிருக்கிறார். இந்தத் தகவல் புலவர்கள், தமிழறிஞர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பெரியாரிடம் இருந்த துணிவு மற்றவர்களிடம் இல்லை. அதனால்தான் அவர்கள் அதனை எடுத்துச் சொல்லவில்லை.

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -


ஸுந்தர காண்டம்


இது என்னுடைய கைகளில் இருப்பது தி லிட்டில் ப்ளவர் கம்பெனி பதிப்பகத்தார் வெளியிட்ட ஸ்ரீமத் வால்மீகி இராமா யணம் -  ஸுந்தர காண்டம்.

பல பேர் இதை நம்பிக்கொண்டு, பாமரத் தனத்தோடு, பக்தியைக் காட்டி மக்களின் புத்தியைப் பறிமுதல் செய்தி ருக்கிறார்கள் என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால், இதிலிருக்கும் ஒரு செய்தியை சொல்லு கிறேன்.

ஒரே நாளில் பாராயண முறை: காலையில் ஆரம் பித்து அபராஹ்ணத்திற்குள் (பகல் சுமார் 1 மணிக்குள்) முடித்துவிட வேண்டும். - உமாஸம்ஹிதை, 129 சுலோ.

2  நாள்களில் பாராயண முறை: முதல் நாள்: அங்குளீயப்ர தானம் (36 ஆவது ஸர்க்கம்) முடிய. இரண்டாம் நாள்: கடைசிவரை. - உமாஸம்ஹிதை 130-131 சுலோ.

3 நாள்களில் பாராயண முறை: முதல் நாள்: திரிஜடை ஸ்வப்பனம் (27 ஆவது ஸர்க்கம்) முடிய இரண்டாம் நாள்: ஹநுமத் ப்ரேஷணம் (40 ஆவது ஸர்க்கம்) முடிய. மூன்றாம் நாள்: கடைசி வரை. - உமாஸம்ஹிதை 132-133 சுலோ.

5 நாள்களில் பாராயண முறை: முதல் நாள்: ஸீதா தரிசனம் (15 ஆவது ஸர்க்கம்) முடிய. இரண்டாம் நாள்: திரிஜடை சொப்பனம் (27 ஆவது ஸர்க்கம்) முடிய. மூன் றாம் நாள்: சூடாமணி ப்ரதானம் (40 ஆவது ஸர்க்கம்) முடிய. நான்காம் நாள்: லங்கா தகனம் (54 ஆவது ஸர்க்கம்) முடிய. அய்ந்தாம் நாள்: 68 ஆவது (கடைசி) ஸர்க்கம் முடிய. - உமாஸம்ஹிதை 134-136 சுலோ.

64 நாள்களில், 32 தடவை பாராயணம் செய்யும் முறை: முதல் நாள்: சூடாமணி ப்ரதானம் (38 ஆவது ஸர்க்கம்) முடிய. இரண்டாம் நாள்: கடைசிவரை.

இம்மாதிரி 32 தடவை (64 நாள்களில்) பாராயணம் செய்யவேண்டும். - உமாஸம்ஹிதை, 113-114 சுலோ.

மோக்ஷார்த்தமான பாராயணம்: ஸுந்தர காண்டத்தின் முதல் ஸர்க்கத்தை பிரதி தினமும் காலை யில் ஒரு தடவை 6 மாதங்கள் பாராயணம் செய்தால், ஸம்ஸார துக்கங்கள் நீங்கி, முடிவில் மோக்ஷமும் ஸித்திக்கும். - உமாஸம்ஹிதை 153 - 154 சுலோ.

அறிவுக்கு விலங்கை எவ்வளவு அழகாகப் போட்டு, பக்தி என்கிற மயக்க மருந்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இலியட், ஒடிசி என்கிற நூல்கள் எல்லாம் இருக் கின்றன. அவையெல்லாம் காவியங்கள். அதுபோன்று John Milton 
எழுதிய Paradise Lost நூல் இருக்கிறது. இந்த நூல் மோட்சத்தை மய்யப்படுத்துவதுதான். அவர்களே மோட்சத்திற்குப் போகவேண்டுமானால், இந்த நூலைப் படி என்று சொல்லவில்லை. அது ஒரு கற்பனை என்று இலக்கிய ரீதியாகத்தான் அதனை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

சுந்தரகாண்டத்தைப் படித்தால் எல்லா நோய்களும் தீர்ந்துவிடுமாம்.

மேலும் சி.ஆர்.ஸ்ரீநிவாஸய்யங்கார் எழுதிய ஸுந்தர காண்டம் என்ற நூலில் 14 ஆம் பக்கத்தில் இருப்பதை இங்கே  அப்படியே படிக்கிறேன்.

தீராத வியாதிகள் தீர...


68 தடவை பாராயணம்


ஒவ்வொரு நாளும் காலையில் ஆரம்பித்து ஸூரியன் உச்சிக்கு வரும்போது பாராயணத்தை நிறுத்திவிடவேண்டும். நெய் தீபம் அகண்ட தீபமாக ஏற்றி வைத்தல்வேண்டும். பகவானுக்கு அப்பம், பாயஸம் என்ற நிவேதனங்கள் ஸமர்ப்பிக்கவேண்டும். முதல் தடவை 68 ஸர்க்கங்களும், பாராயணம் முடிந்த நாளன்று பன்னிரண்டு பிராம்மணர்களைப் பூஜித்து, போஜனம் செய்விக்க வேண்டும். ஒவ்வொரு தடவை பாராயணம் முடிந்த பிறகும் ஒவ்வொருவர் அதிகமாக பிராம்மண போஜனம் செய்விக்கவேண்டும்,

இம்முறையில் ஒரு நாளைக்கு ஒரு தரம் வீதம் 68 நாட்களில் 68 தடவை ஸுந்தர காண்ட பாராயணம் செய்தல் முதல் தரமானது.

நான்கு மாதங்களில் 68 தடவை பாராயணம் செய்தல் இரண்டாம் தரமானது.

ஆறு மாதங்களில் 68 தடவை பாராயணம் செய்தல் மூன்றாம் தரமானது.

இம்முறையில் 68 ஆவது தடவை பாராயணம் முடிந்தவுடன், யுத்த காண்டத்தை அய்ந்தாறு தினங் களில் பூர்த்தியாகப் பாராயணம் செய்யவேண்டும்.

இந்த 68 தடவை பாராயணம் தொடங்கிய நாள் முதல் பட்டாபிஷேகம் முடியும்வரை பிரதி தினமும் காலையில் பாராயணம் செய்த ஸர்க்கக் கதையை மாலையில் பக்தியுடன் வித்வான்மூலம் பிரவசனம் செய்விக்கவேண்டும்.

பாராயணம் முடிந்த நாளன்று ஸ்ரீராம பட்டா பிஷேகம், பிராம்மண போஜனம் முதலியவைகளை விமரிசையாகச் செய்து, இரவு பிரவசனம் செய்யும் ஸ்வாமியைக் கௌரவிக்க வேண்டும்.

இவ்வாறு பாராயணத்தை அனுஷ்டித்தால் தேவ லோகத்து வைத்யர்களான அசுவிநீ தேவதைகள்கூட தீர்க்கமுடியாத தீராத வியாதிகள் தீரும்; தீர்க்காயுள் உண்டாகும்; பிள்ளைகளோடும், நண்பர்களோடும் ஏற்பட்ட விரோதம் நீங்கும்; குடும்பத்தில் கலகம் தீரும்; அகாலமிருத்யு பயம் ஒழியும்; கடன் தொல்லைகள் ஒழியும்; சத்ரு ஜயம் உண்டாகும். அதிகம் ஏன்? எல்லா காரியங்களும் ஸித்திக்கும். இம்முறையில்  68 தடவை பாராயணம் செய்பவருடன் ஸ்ரீராமர் ஸுக்ரீவனுடன் பேசியதுபோல் அன்புடன் பேசுவார். - உமாஸம்ஹிதை, 81-99 சுலோ.

இராமாயணம் எழுதியவன் எப்படி இதை சொல்லியி ருப்பான்; பின்னாளில் இதை உள்ளே நுழைத்திருக்கிறார்கள் என்பதை தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

இருப்பதிலேயே சுந்தர காண்டம்தான் மிக முக்கியமானது என்று இராமாயண பிரசங்கிகளைக் கேட்டீர்கள் என்றால் சொல்வார்கள்.

சுந்தரகாண்டம் பாராயணம் செய்தால் இவ்வளவு வியாதிகளும் தீரும் என்றால், மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் ஏன்? ஏன்? இதைவிட அண்டப் புளுகு வேறு உண்டா?

கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்


பல செய்திகளை சொல்லிக்கொண்டே போகலாம். இதோ என்னுடைய கைகளில் இருப்பது பா.வே.மாணிக்க நாயக்கர் எழுதிய கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்ற இந்த புத்தகத்தை கலைக்கதிர் வெளியிட்டது.

60 ஆண்டுகளுக்குமுன்பு வெளிவந்த புத்தகம் இது. இப்பொழுது இந்த புத்தகம் கிடைப்பதில்லை. பா.வே.மாணிக்க நாயக்கர் யார் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். மேட்டூர் அணை இருக்கிறதே, அந்த மேட்டூர் அணையை இந்த இடத்தில் கட்டினால், பயனுறும் என்று கண்டுபிடித்த சூப்பரண்டிங் என்ஜினியர், மிகப்பெரிய தமிழறிஞர் அவர்கள்.

ஆனால், மேட்டூர் அணைக் குறிப்புகளில் இந்தத் தகவல்கள் கிடையவே கிடையாது.

கலைஞர் அவர்கள், பா.வே.மாணிக்க நாயக்கர் நூற் றாண்டு விழாவில், அவரைப் பற்றி பேசவிருந்தார். இந்தக் குறிப்பை கொடுத்தவுடன், மிகவும் ஆச்சரியப்பட்டு,

என்னய்யா, இதுவரையில் எனக்குத் தெரியாமல் இருந்ததே என்றார்.

ஞானமூர்த்தி அவர்கள் அந்தத் தகவலை எழுதியிருக் கிறார். அதுமட்டுமல்லாமல், நாமக்கல்லார் அதை பதிவு செய்திருக்கிறார் என்றோம்.

சுந்தர காண்டத்தைப் படித்தால் கடன் தீருகிறது; நோய் தீருகிறது; கலகம் தீருகிறது; மோட்சம் கிடைக்கிறது என்று சொல்கிறார்களே, அது அவ்வளவு பெரிய புனிதமானதா என்று பல பேர் நினைக்கலாம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஒன்றை சொல்கிறேன். இங்கே இருக்கிற தாய்மார்கள், பெண்கள் என்னை மன்னிக்கவேண்டும்.

இராவணனுடைய ஒழுக்கம் எப்படிப்பட்டது?


ஏனென்றால், மிக அறுவருப்பான, பகிரங்கப்படுத்த முடியாத அளவிற்கு செய்திகளைச் சொல்கிறார்கள். எந்தக் காலகட்டம் என்றால், அசோக வனத்தில் சீதை இருக் கிறாள். சீதை அங்கே சவுகரியமாக இருக்கிறாள். இரவு நேரத்தில், காவல் நிலையத்திற்கு ஒரு பெண் போனால், விடிவதற்குள் பாதுகாப்பாக அந்தப் பெண் வருவதில்லை. ஆனால், அத்தனை ஆண்டுகாலம், இராவணன் விரும் பினான் என்று சொன்னாலும், தூக்கிச் சென்றான் என்று சொன்னாலும், இராவணன் சீதைக்கு ஏதாவது சிறு தொல்லையையும் கொடுக்கவில்லை. இராவணனுடைய ஒழுக்கம் எப்படிப்பட்டது என்பதை நன்றாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள், கம்ப ராமாய ணத்தை மய்யப்படுத்தி, திருவாரூர் தங்கராசு அவர்கள் தந்தை பெரியாருடைய கருத்துகளை உட்படுத்தி எழுதிய இராமாயண நாடகம். அதை சில பத்திரிகைகள் தவறாக கீமாயணம் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டன. சென்னை வால்டாக்ஸ் சாலையிலுள்ள ஒற்றைவாடைத் தியேட்டரில் நடைபெற்றது. பல அறிஞர்கள் அந்த நாடகத்தைப் பார்த்தார்கள். இதற்காகவே, ஒரு நாடகத் தடைச் சட்டத்தையும் கொண்டு வந்தார்கள், அன்றைக்கு இருந்த ஆட்சியினர்.

அந்த நாடகத்தில், இராமர் வேடத்தை, நடிகவேள் இராதா அவர்கள் ஏற்றிருப்பார்.

சீதையைக் காணவில்லை என்று அழுகிற காட்சி. அதில் மிக அருமையாக நடித்திருப்பார் இராதா அவர்கள்.

கம்பராமாயணத்தில் ஒரு பாட்டு இருக்கிறது; சீதை யைப்பற்றி வருணிக்கும்பொழுது, அய்யோ இப்படிப்பட்ட சீதையைக் காணவில்லையே என்று வருத்தப்படலாம். ஆனால், கம்பன் எழுதியது, சீதையின் ஒவ்வொரு அவயங்களை உவமையாகச் சொல்லி சொல்லி, இப்படிப் பட்ட என்னுடைய சீதையைக் காணவில்லையே என்கிற காட்சியை அமைத்திருந்தார், நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள்,

கொங்கைகளை வருணித்து ஒரு பாட்டு, செப்பென்பர், கலசமென்பர் என்று ஒரு பாட்டு.

இந்தக் காட்சியில் மிக அருமையாக நடிப்பார் இராதா அவர்கள்.

சீதையைத் தேடிச் செல்லவிருக்கின்ற அனுமானிடம் இராமன், சீதை இப்படி இப்படி அடையாளங்களைக் கொண்டிருப்பார். ஆனால், நீ சீதையைப் பார்த்தவுடன், நான்தான் அனுப்பினேன் என்று நம்பமாட்டாள். ஆகவே, சில அடையாளங்களை நீ சொல். அதைச் சொன்னால்தான் உன்மேல் நம்பிக்கை வரும் என்று சொல்லியிருப்பார்.

சீதையைக் காண, ரகசிய ஒற்றனாக அனுமான் (குரங்கு) அசோக வனத்திற்குள் போய் குதிக்கிறான்.

இராமன் சொன்ன அடையாளங்களையெல்லாம் வைத்து சீதையை அடையாளம் கண்டுகொண்ட அனுமானுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

அனுமான் - சீதை இடையே நடைபெற்ற உரையாடல்

அப்பொழுது அனுமான் - சீதை இடையே நடைபெற்ற உரையாடல்.


இதை சி.ஆர்.ஸ்ரீநிவாஸய்யங்கார் எழுதிய ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம் என்ற நூலில் 136, 137, 138 ஆகிய பக்கங்களில் இருப்பதை படிக்கிறேன்.

ராகவனுடைய சரித்திரத்தை வானர சிரேஷ்டன் வர்ணிக்கக் கேட்டு, ஸீதை மதுரமான வாக்கியங்களால் ஆஞ்ச னேயரைப் பார்த்து, ராகவனுக்கும், உனக்கும் ஸம்பந்தம் ஏற்பட்டதெப்படி? லஷ்மணனை உனக்கு எப்படித் தெரியும்? மனிதர்களுக்கும், வானரர்களுக்கும் சேர்க்கை எப்படி நேர்ந்தது? ராம லஷ்மணர்களுடைய அடையாளங்களை மறுபடியும் நன்றாய் வர்ணி. அவர்களுடைய அவயவப் பொருத்தங்களையும் ரூபங்களையும், துடைகளையும், புஜங்களையும் விஸ்தாரமாய் வர்ணித்தால் உன்னிடத்தில் எனக்கு நம்பிக்கை பிறந்து துக்கம் தீரும் என்றாள்.

அதைக்கேட்டு ஹனுமான் ராமனுடைய லக்ஷ ணங்களைத் தான் அறிந்தவரையில் வர்ணிக்க ஆரம்பித்தார். அம்மா! நான் ராம தூதன் என்றறிந்து ராவணனென்ற ஸந்தேகத்தை விட்டு என்னை ராம லஷ்மணர்களுடைய அடையாளங்களைக் கேட்பதால் நான் பார்த்தறிந்தவரையில் தெரிவிக்கிறேன். கவனத் துடன் கேட்கவேண்டும். ராமனுடைய ஸகல அவய வங்களும் வெகு ஸுந்தரமாக இருந்தாலும், செந்தாமரை இதழ்கள் போன்ற அவருடைய நேத்திரங்களின் அழகை என்ன சொல்வேன்! அவை காந்தி என்ற பிரவாஹத்தில் ஆழ்ந்த சுழல்களைப்போல் ஸமஸ்த பிராணிகளுடைய மனத்தையும் அபகரிக்கின்றன. மரத்திற்கு மரம் தாவிக் கொண்டு நன்மை - தீமை தெரியாத கேவலம் குரங்கான என்னையும் மயக்கு கின்றன. அவரு டைய தேகத்திலும், புத்தியிலும் அனந்த கல்யாண குணங்கள் குடிகொண்டிருக்கின்றன. அவை அவருக்கு ஸ்வபாவமானவை. என்னைப் பரீக்ஷிக்கும் தங்களுக்கல்லவா அவைகளின் விஷயம் தெரியும்? யோகத்தாலும், தவத்தாலும் ஸகல காமங் களையும் அடக்கின மஹரிஷிகளும் அவரைக் கண்டு பிரமிக்கிறார்கள்.

தேஜஸில் ஸூரியனுக்கும், பொறுமையில் பூமி தேவிக்கும், புத்தியில் பிருஹஸ்பதிக்கும், கீர்த்தியில் தேவேந்திரனுக்கும் ஸமமானவர். ஸகல பிராணிகளையும் ரக்ஷிப்பவர். தன்னை அண்டினவர்களுக்கு யாதொரு துக்கமும் நேரா மல் காப்பாற்றுகிறவர். தன்னுடைய ஆசாரத்தையும், தர்மத்தையும் குறைவில்லாமல் நடத்துகிறவர். சத்துருக்களை வேரறுப்பவர். நான்கு வர்ணத்தார்களையும் தன்னைப்போல் காப்பாற்றுகிறவர். லோகத்தார்கள் ஆசரிக்கவேண்டிய ஸகல தர்மங்களையும் ஏற்படுத்தி அவைகளைக் குறைவில்லாமல் நடத்தி வைக்கிறவர். மஹாதேஜஸ்வி; எல்லோராலும் பூஜிக்கப்படுகிறவர். பிரஹ்மசரிய விரதத்தை அனுஷ்டிக்கிறவர். ஸாதுக்களுக்கு உபகாரம் செய்யவேண்டிய காலமறிந்தவர். கர்மங்களுடைய ஹேதுவையும், அனுஷ்டானத்தையும், பலன்களையும் நிஜமாய் அறிந்தவர். ஆன்வீக்ஷிகீ, த்ரயீ, வார்த்தா, தண்ட நீதி என்ற நான்கு ராஜவித்யைகளையும் பூர்ணமாக அறிந்தவர். பிராம்மணர்களைப் பக்தியுடன் உபாஸிப்பவர். சாஸ்திரார்த்தங்களை ஸந்தேக விபரீ தமில்லாமல் பெரியோர்களிடத்தில் கேட்பவர்; அதற்குத் தகுந்த ஆசாரமுடையவர்; விநயத்தையே பூஷணமாகக் கொண்டவர்; தனது சாகையான யஜுர் வேதத்தில் ஸமர்த்தர்; வேத ரஹஸ்யங்களை அறிந்தவர்களால் பூஜிக்கப்பட்டவர்; தனுர் வேதத்திலும், இதர வேதங்களிலும் வேதாங்கங்களிலும் நிபுணர்.

விசாலமான தோள்களையும், பருத்து நீண்ட புஜங்களையும், தங்கம் போன்ற கழுத்தையும், மங்களகரமான முகத்தையும், மாம்ஸத்தால் மறைந்த கழுத்தெலும்புகளையும், செந்தாமரை யிதழ்களைப் போல் மிகவும் சிவந்த நேத்திரங்களையும், துந்து பியின் த்வனியைப் போன்ற குரலையும், சியாமள வர்ணத்தையும் ஏற்றக் குறைவில்லாத சரீரத்தையும், பொருத்தமாய் அமைக்கப்பட்ட அங்கங்களையும் உடையவர்; பிரதாபசாலி. இப்படிப்பட்ட திவ்விய மங்களவிக்கிரஹத்தை உடையவரென்பது லோகப் பிரஸித்தம். மார்பு மணிக்கட்டு, முஷ்டி இவை மூன்றும் கெட்டியாயும்; புருவம், புஜம், விருஷணம் (விதை - ஜிமீவீநீறீமீ) இவை மூன்றும் நீளமாயும்; மயிர் நுனியும், விருஷணங்களும், முழங்கால்களும் ஏற்றக் குறைவில்லாமல் ஸமமாயும்; நாபி, வயிறு, மார்பு இம்மூன்றும் உயர்ந்தும்; உள்ளங்கை, கடைக்கண், உள்ளங்கால் இம் மூன்றும் சிவந்தும்; பாதரேகை, தலைமயிர்கள், ஆண்குறி இம்மூன்றும் மழமழப்பாயும்; த்வனி, தேகவலிமை, நாபி இம்மூன்றும் கம்பீரமாயும்; கழுத்து, வயிறு இவ்விரண்டும் மூன்று ரேகைகளுடன் கூடினதாயும்; ஸ்தனம், ஸ்தனத்தின் காம்பு, பாதரேகை இம்மூன்றும் உள்ளாழ்ந்தும்; நரம்பு வெளியில் தெரியாத பாதங்களையும், ஒரே மயிரையுடைய மயிர்க்கால்களையும், சிறிய ஆண்குறியையும், மாம்ஸம் தோற்றாத அடிவயிற்றையும் உடையவராயும்; ஏற்றக் குறைவின்றி ஸமமாய்க் குடைபோல், வட்டமாய் விசாலமுள்ள சிரஸையுடையவராயும்; கட்டை விரலினடியில் நான்கு ரேகைகளையுடையவராயும்; 96 அங்குலங்களடங்கிய நான்கு முழம் தேகப் பிரமாணமுடையவராயும்; புஜங்கள், முழங்கால், துடை, கன்னம் இந்த நான்கும் ஸமமாயும்; புருவங்கள், மூக்கின் துவாரங்கள், காதுகள், உதடுகள், முலைக்காம்புகள், முழங்கைகள், மணிக்கட்டுகள், முழங் கால்கள், விருஷணங்கள், இடுப்புகள், கைகள், கால்கள், பின்பாகங்கள், இந்தப் பதினான்கும் ஏற்றக்குறை வில்லாமலும்; இரண்டு பல்வரிசைகளும், உரத்து வழ வழப்பாய்க் கோரப் பற்கள் போன்ற நான்கு தந்தங்களையுடையவராயும்; யானை, ஸிம்ஹம், புலி, காளை இவைகளைப்போல் நடையுள்ளவராயும், வேங்கைப் புஷ்பங்கள் போலவும், கோவைக்கனி போலவும், சிவந்து அழுத்தமான உதட்டையும், மாம்ஸம் நிறைந்த கன்னங்களையும், உயர்ந்த மூக்கையும் உடையவராயும்; தலைமயிர், கண்கள், பற்கள், தோல், உள்ளங்கால் மிருதுவாயும்; சரீரம், பின்புறம், கை, கால், விரல், கண், காது, ஆண்குறி நீண்டும்; முகம், வாய், கண்கள், நாக்கு, உதடு, தாடை, ஸ்தனம், நகம், கை, கால் தாமரைப் புஷ்பம்போல் சிவந்தும்; மார்பு, தலை, முகம், கழுத்து, புஜம், தோள், நாபி, இடப்புறம், பின்புறம், த்வனி கம்பீரமாயும் விசாலமாயும்; தேஜஸாலும் கீர்த்தியாலும், ஸம்பத்தாலும் பிரஸித்தியடைந்தவராயும், கண்களிலும், பற்களிலும் வெளுப்புடையவராயும்; கஷ்கம், வயிறு, மார்பு, மூக்கு, தோள், முகம் உயர்ந்தும்; தலைமயிர், மீசை, நகம், மயிர், தோல், கட்டைவிரல், ஆண்குறி, புத்தி, இவை ஸுக்ஷ்ம மாயும்; முன்பகல், நடுப்பகல், பிற்பகல் இம்மூன்று காலங்களிலும் அவைகளுக்கு உசிதமான தர்மங்களை அனுஷ்டிப்பவராயும்; ஸத்தியத்திலும், தர்மத்திலும் பிரியமுள்ளவராயும்; தனத்தை ஸம்பாதிப்பதிலும், பிறருக்குக் கொடுப்பதிலும் பிரியமுள்ளவராயும்; தேச காலங்களையும் அவைகளின் உபயோகங்களையும் நன்றாக அறிந்தவராயும்; ஸமஸ்தப் பிராணிகளுக்கும் பிரியமான வார்த்தையையே சொல்லுகிறவராயும்; ஸகல ஐசுவரியலக்ஷ்மி பொருந்தினவராயும்; இன்னும் உத்தம புருஷர்களுக்குரிய ஸகல லக்ஷணங்களுக்கும் வாஸ ஸ்தானமாயும் இருப்பவர்.

ஆக, இது நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது. இதுபோன்ற ஒன்றை, மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி, அறுவருப்பான செய்திகளை சொல்லி, அறிவுக்கு வேலை கொடுக்காதே, நம்பு! நம்பு!! உடனே நம்பிக் கொண்டிரு என்று சொல்லக் கூடிய அளவில்தான் அதனை செய்திருக்கிறார்கள்.

(தொடரும்)
- விடுதலை நாளேடு, 21.5.18