இராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்லி ஆர்.எஸ்.எஸின் ஒரு கிளையான விசுவ ஹிந்து பரிஷத் ஒரு ரத யாத்திரையைக் கிளப்பிவிட்டது.
இந்தியா மதச் சார்பற்ற ஒரு நாடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால் ராமராஜ்ஜிய ரத யாத்திரை என்பதோ ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கானதோர் முன்னோட்ட மாகும்.
இதன் பொருள் என்ன? இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மைக்கு விரோதமாக ஓர் இந்து ராஜ்ஜியத்தை (இராம ராஜ்ஜியத்தை) .உண்டாக்குவது என்றால், அது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மைக்கு விரோதமானதுதானே!
திட்டவட்டமாக தமிழ்நாட்டு மக்களால் இது உணரப் பட்ட நிலையில்தான் அந்த யாத்திரைக்கு கடுமையாக எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது. அதற்கான அடித்தளத்தை தந்தை பெரியார் இங்கு அரை நூற்றாண்டுக்கு மேலான பிரச்சாரங்களால், போராட்டங்களால் உருவாக்கி வைத்துள்ளதால், வேறு மாநிலங்களில் ராமராஜ்ஜிய யாத்திரைக்கு எழாத எதிர்ப்புணர்வு தமிழ்நாட்டில் நீக்கமறக் காண முடிகிறது.
இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜாதியில்லை, மதமில்லை. மாறாக மனிதத் தன்மையும் சமத்துவமும் இழைந்தோடுகின்றன.
இராம ராஜ்ஜியம் என்றால் அதன் பொருள் வருணா சிரமத்தைக் கட்டிக் காப்பதாகும். அதற்கான ஆதராம் இராமாயணத்தில் உத்தர காண்டத்தில் இராமனால் நிகழ்த்தப்பட்ட ஒரு நிகழ்வாகும்.
சம்பூகன் என்னும் சூத்திரன் தவமிருந்தது - வருணாசிரம தர்மத்துக்கு எதிரானது; பிராமணன்தான் சூத்திரனுக்குக் கடவுள், இப்படி சம்பூகன் என்னும் சூத்திரன் வருண தர்மத்துக்கு விரோதமாக தவமிருந்ததால், அக்கிரகாரத்தில் ஒரு பார்ப்பனக் குழந்தை மரணித்து விட்டதாம்.
மரணித்துப் போன பார்ப்பனக் குழந்தையின் தந்தை இராமனிடம் முறையிட்டான். "வருணதர்மம் கெட்டதால் தான் பிராமணக் குழந்தை செத்தது" என்று அரசனாகிய இராமனிடம் எடுத்துக் கூற, அரசனான இராமன் ஊரின் ஒதுக்குப்புறம்பான ஓர் காட்டில் தவமிருந்த சூத்திரனான சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்றான். அப்படி வெட்டப்பட்ட நிலையிலே செத்துப்போன பிராமணக் குழந்தை உயிர்ப் பெற்று எழுந்து விட்டது. தேவர்கள் இராமன்மீது பூமாரி பொழிகிறார்கள் - இதுதான் இராமாயணத்தில் உத்தரகாண்டம் உரைத்துக் கொண்டுள்ளது.
சூத்திரன் சம்பூகனை வாளால் வெட்ட சத்திரிய அரசனான இராமன் என்ன சொல்லுகிறான்?
"ஹே! ஹஸ்த தக்ஷிண மருதஸ்ய சிசோர்த் விஜஸ்ய ஜீவதாலே விஸ்ருஜ சூத்ர முனவ்க்குப் பானாம்; ராமஸ்ய காத்ரமளி!" என்பதுதான் அந்த சுலோகம்.
ஓ, எனது கையே! இறந்து போன பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர்ப் பெற்று எழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியை கொல்லுவதே மருந்தாகையால் கூசாமல் இவன் தலையை வெட்டிவிடு! நீ இராமனின் அங்கங்களில் ஒன்றன்றோ!"
நேற்று சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் "இராமாயணம் - இராமன் - இராம ராஜ்ஜியம்" என்னும் தலைப்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்தப் பகுதியை எடுத்துக் காட்டி இராமராஜ்ஜியம் என்று சொன்னால் சம்பூகனுக்கு ஏற்பட்ட கெதிதான் சூத்திரர்களாகிய நமக்கெல்லாம் ஏற்படும் என்று விளக் கியதானது - கூடியிருந்த பெரு மக்கள் மத்தியில் கண்டிப்பாக விழிப்புணர்வுச் சிந்தனையை ஏற்படுத்தியது என்பதில் அய்யமில்லை.
'இராமனைப் பற்றி இப்படியெல்லாம் கருத்துக்களைக் கூறுவதால் இங்கு மதக் கலவரம் ஏற்படாதா?' என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் சொன்ன பதில் மிக முக்கியமானது.
"அது எப்படி? டாக்டரும், நோயாளியும் ஒன்றா? இங்கு ராமன் பெயரால் வருண தர்மத்தை நிலைநாட்ட முற்படுபவர்களின் நோக்கம்தான் மதக் கலவரம். அதைத் தடுத்து நிறுத்துவது தான் எங்களுடைய பிரச்சாரம். இது எப்படி இரண்டும் ஒன்றாகும்?" என்று எதிர்க் கேள்வியை முன் வைத்து செய்தியாளரைச் சிந்திக்க செய்தார் திராவிடர் கழகத் தலைவர்.
இது அந்தச் செய்தியாளருக்கு மட்டுமல்ல; திராவிடர் கழகத்தின் அறிவு சார்ந்த பிரச்சாரத்தைச் செவிமடுக்கும் ஒவ்வொரு வரையும் சிந்திக்க வைக்கும்.
திராவிடர் கழகத் தலைவரின் இந்த வகையான விளக்கம் நாட்டில் அமைதியையும், முதிர்ச்சியையும் ஏற்படுத்துமே தவிர கலவரத்தை உண்டு பண்ணவே பண்ணாது.
மதவாதத்தின் உச்சியில் நின்று கோலோச்சும் சங்பரிவார் சக்திகளையும்கூட சிந்திக்க வைக்கும் உரையாகக் கழகத் தலைவரின் உரை சிறப்புக் கூட்டத்தில் அமைந்திருந்தது.
கூட்டத்திற்கு ஏராளமான புது முகங்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் மத்தியில் இராமாயணம், இராமன், இராம ராஜ்ஜியம் பற்றி சரியான புரிதலை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் அய்யமில்லை.
இந்தச் சிறப்புக் கூட்டத்தின் நீட்சியாக வரும் 27ஆம் தேதி மாலை இதே போல பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெறும் என்று கழகத் தலைவர் அறிவித்த போது எழுந்த கரஒலி, இத் தலைப்பிலான சொற்பொழிவு எந்த அளவு ஆழமாக மக்களைச் சிந்திக்கவும், உணரவும் செய்திருக்கிறது என்பதற்கான உரத்த ஆவணமாகும். வரும் 27ஆம் தேதி மீண்டும் சந்திப்போம்!
- விடுதலை நாளேடு, 24.3.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக