பக்கங்கள்

வியாழன், 29 மார்ச், 2018

இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் -2

மனித சமத்துவத்திற்கு எதிராக வேதங்களும், இதிகாசங்களும் இருக்குமானால், அவற்றை எதிர்ப்பதுதான் திராவிடர் கழக கொள்கை

இராம அவதாரம் வருணதர்மத்தைக் காப்பதால் அதனை எதிர்க்கிறோம்!

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வரலாற்றுரைசென்னை, மார்ச் 29-  மனித சமத்துவத்திற்கு எதிராக எது இருந்தாலும் எதிர்ப்பதுதான் திராவிடர் கழகக் கொள்கை; இராமாயணம் வருண தர்மத்தைக் காப்பதால் அதனை எதிர்க்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  23.3.2018 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் என்ற தலைப்பில் நடை பெற்ற  ஆய்வு சொற்பொழிவில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

எங்கள்மீது வழக்குப் போடலாம்

மிகுந்த எதிர்பார்ப்போடும், தேவையான நேரத்தில் இந்தக் கருத்துகள் இந்த அரங்கத்திற்கு மட்டுமல்ல, இணையத்தின் வழியாக உலகம் முழுவதும் பரவவேண்டும் என்ற அந்த உணர்வோடு இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் இவை எப்படிப்பட்டது என்பதை, தாறுமாறாக, ஒரு ஆத்திரமாக, ஆவேசமாக, வசைபாடுவதற்காக அல்ல இந்தக் கூட்டம். இது ஒரு ஆய்வு சொற்பொழிவு கூட்டம். இதில் எந்த இடத்தில் தவறு இருக்கிறது என்று சொன்னால், எதைச் சுட்டிக்காட்டியதில், சரியான ஆதாரபூர்வமான உண்மை இல்லை என்று யார் நினைத்தாலும், அவர்கள் எங்கள்மீது வழக்குப் போடலாம் என்பதை முதலில் அறிவிக்கிறேன். அறிவித்துவிட்டு இந்த நிகழ்ச்சியை நான் தொடருகிறேன்.

தாறுமாறாக, ஏதோ செங்காங்கடை - செங்காங்கடை என்றால் நிறைய பேர்களுக்குத் தெரியாது - பழைய சென்னை தோழர்களுக்குத்தான் தெரியும். ஏனென்றால், அந்தக் கடையே இப்பொழுது இல்லை. அதனை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்பொழுது குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். ஆக, அப்படிப்பட்ட நிலையில், இன்றைக்கு நடக்கக்கூடிய இந்தக் கூட்டத்தில், பல்வேறு செய்திகளை ஆதாரப்பூர்வமாக - இதோ உங்கள்முன் நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறோம்.

படிப்பதோடு மட்டுமல்லாமல்,

அதனைப் பரப்பவேண்டும்

இதில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய புத்தகங்கள், மற்ற ஆதாரப்பூர்வ செய்திகளடங்கிய புத்தகங்கள் - ஒரு பூங்கொத்தைப்போல தொகுக்கப்பட்டு பல தோழர்களுக்கு இங்கே வழங்கப்பட்டு இருக்கிறது. வாய்ப்பு இருக்கிறவர்கள், இதனைப் படிப்பதோடு மட்டுமல்லாமல், அதனைப் பரப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டு,

இந்நிகழ்ச்சியில் அறிமுக உரையாற்றிய கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

எதிரில் அமர்ந்திருக்கும் தமிழாய்ந்த புலவர் பெரு மக்களே, கவிஞர்களே, அறிவுசால் சான்றோர்களே, அனைத் துக் கருத்துகளையும் உள்ளடக்கிய பல்வேறு கருத்துள்ள பெருமக்களே, தாய்மார்களே, தோழர்களே, கழகக் குடும் பத்தவர்களே உங்கள் எல்லோருக்கும் பணிவன்பான வணக் கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதற்கண் என்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்னால், இந்த ஆய்வு சொற்பொழிவைத் தொடங்குவதற்கு முன்னால், இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள்.

மாவீரன் பகத்சிங்கிற்கே உண்டு இந்த நாட்டிற்கு சுதந்திரம் என்ற பெயராலே, யார் யாரோ எதை எதையெல்லாமோ செய்திருக்கிறார்கள். ஆனால், மிகப்பெரிய அளவிற்கு யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பணியை செய்து முடித்த பெருமை மாவீரன் பகத்சிங்கிற்கே உண்டு என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

அந்த மாவீரன் பகத்சிங் அவர்களுக்கு, குறிப்பிட்ட நாளுக்கு முன்பே, அவரை தூக்கிலிடுகிறார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு என்கிற பட்டியலில், அவர்களுக்கு இணையாக, அவர்களுடைய அருகிலே வர முடியாதவர்கள் எல்லாம் இன்றைக்கு அதனுடைய பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு செய்தி.

நான் ஏன் நாத்திகன்?

ஆனால், அன்றைக்கு உயிர்த் தியாகம் செய்த பகத்சிங் யார் என்று சொன்னால், சிறையில் இருந்துகொண்டு, நான் ஏன் நாத்திகன்? என்கிற புத்தகத்தை எழுதிய மாவீரன் பகத்சிங்.

எனவே, இந்த நாட்டினுடைய விடுதலைக்குப் பாடுபட்ட வர் பகத்சிங். பகத்சிங் போன்றவர்களால்தான் நம் நாட்டிற்கு விடுதலை கிடைத்திருக்கிறது என்று இன்றைக்குப் பிரதமர் கூட சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட அவருடைய கருத் துக்கு - உண்மையாக அவர் சொல்லியிருக்கிறார்.

அதை செய்து காட்டிய பெருமை ஆத்திகனைச் சாராது; ஒரு நாத்திகனையே சாரும் என்ற பெருமையை வைத்துப் பார்க்கவேண்டும். எனவே, நாத்திகம் ஒரு நன்னெறியே தவிர, அது விரும்பத்தகாத, வேதனைப்படுத்தக் கூடிய தகுதியல்ல - அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்படிப்பட்ட நாத்திகன் மாவீரன் பகத்சிங் அவர்கள் சிறையில் இருந்துபொழுதே, கடவுள் மறுப்பை கடைசி வரையில் சொல்லி, எந்த வகையிலும் தனக்கு அந்த நம் பிக்கை வந்துவிடக் கூடாது என்று சொன்னது மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் கடிதம் எழுதி, நீங்களும் அதை நம் பாதீர்கள்; சக தோழர்களுக்குக்கூட அந்த எண்ணம் வந்துவிடக்கூடாது. கடவுள் என்ற ஒரு தத்துவமோ, உண்மையோ இருந்திருந்தால், இப்படி நடக்குமா? என்று அவர் ஆணித்தரமான வாதங்களை எழுப்பினார்.

தோழர் பா.ஜீவானந்தம்

அந்த நூல், பகத்சிங் எழுதிய நூல், தமிழ்நாட்டிலே தந்தை பெரியார் அவர்களால், மொழி பெயர்க்கப்பட்டு, பரப்பப்பட்ட நூல். அந்த நூலை தமிழில் மொழி பெயர்த்த பெருமை தோழர் பா.ஜீவானந்தம் அவர்களே சாரும். அவர்கள் அப்பொழுது இந்த இயக்கத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் செய்தார்.

இந்த இயக்கம் அந்தக் காலகட்டத்தில், ஒவ்வொருவரும் பகத்சிங்குகளாகமாறவேண்டும்என்று தலையங்கம் எழுதிய ஒரே ஏடு-தந்தை பெரியார் அவர்களுடைய பச்சை  அட்டை  குடிஅரசு ஏடு- தந்தை பெரியார் கையொப்பமிட்டு எழுதினார்.

பெரியார்தான் பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று, அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தவர்கள், வெள்ளைக்காரர்களின் காலணிகளை சுமந்தவர்கள் எல்லாம் இன்றைக்குப் பேசுகிறார்கள்.

தலையங்கம் எழுதி, அதற்காக அந்த நூல் தடை செய்யப்பட்டபொழுதுகூட...

ஆனாலும், இந்தப் பழைய கதைகளெல்லாம் தனியே பேசவேண்டிய செய்தியாகும்.

பகத்சிங் அவர்களுக்கு தண்டனை வந்த நேரத்தில், துணிந்து தலையங்கம் எழுதி, அதற்காக அந்த நூல் தடை செய்யப்பட்டபொழுதுகூட, அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிற்கு இருந்த இயக்கம் இந்த இயக்கம்.

தந்தை பெரியார் அவர்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்னால், இராமாயண பாத்திரங்கள், இராமாயண குறிப்புகள் என்பதை அவர்கள் ஆய்வு செய்து, பிரச்சாரம் செய்து, கண்டனம் செய்தார்கள்.

இன்றைக்கும் அவர் வழிவந்த தொண்டர்களாகிய நாங்கள், இந்தப் பணி செய்வதை, எங்கள் இயக்க, லட்சியப் பணிகளில் ஒன்றாகக் கருதுகிறோம்.

ஏன்? பிறரைப் புண்படுத்துவதற்காகவா? அல்லது வம்பு சண்டையை வலிய இழுப்பதற்காகவா? அல்ல நண்பர்களே!

ஒரே நாளில், ஒரே கடிதத்தில், ஒரே நொடியில்...

1920 ஆம் ஆண்டுகளிலிருந்து 1925 ஆம் ஆண்டு வரையில், அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசு இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள். ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து, அதில், தான் வகித்த 29 பதவிகளை, ஒரே நாளில், ஒரே கடிதத்தில், ஒரே நொடியில், ராஜினாமா செய்கிறேன் என்று எழுதிவிட்டு, பொதுவாழ்க்கைக்கு வந்த பெருமை - தலைவர் தந்தை பெரியார் அவர்களைச் சார்ந்தது. இன்றைய இளைஞர்கள் இதனைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

பலரும் கட்சிகளில், அரசியல் கட்சிகளில் சேருவது, பதவிகளைப் பெறுவதற்காக. பெரியார் அதிலும் முற்றிலும் மாறுபட்டவர். பதவிகளை விடுத்துத்தான் அவர் அரசி யலுக்கே நுழைந்தார் என்பது வரலாறு. தனித்த வரலாறு.

அப்படி அவர்கள் அரசியலில் நுழைந்து, கடுமையாக உழைத்ததின் விளைவு, காந்தியாருக்கு நெருக்கமானார். காந்தி யாரை தலைவராக ஏற்றுக்கொண்டு, மிகப்பெரிய அளவில், வெளியேறுவதைக்கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடி யாத என்கிற அந்த நிலையில் இருந்தார். இது பழைய கதை.

திரு.வி.க. அவர்கள் எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள் என்கிற அவருடைய நூலில், ஒரு குறிப்பு இருக்கிறது.

திருப்பூரில், 1922 இல் காங்கிரசு கமிட்டியினுடைய மிக முக்கியமான பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்து, காங்கிரசு மாநாடு நடைபெறுகிறது.

தமிழர்களைத் தேடினார்கள்...

அந்தக் காலத்தில் நீதிக்கட்சி வெற்றி பெற்றுவிட்டது - பார்ப்பனரல்லாதவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லக்கூடிய நிலையில், தமிழர்களைத் தேடினார்கள்; காங்கிரசு என்பது தேசிய போர்வையில் இருக்கின்ற பார்ப்பன அமைப்பு என்கிற கருத்தை மாற்றவேண்டும் என்கிற நோக்கத்தோடு, தமிழர்களைத் தேடிப் பிடித்தார்கள்.

அப்படித் தேடிப்பிடித்த நேரத்தில், அவர்கள் மூன்று தமிழர்களை முன்னிலைப்படுத்தினார்கள். ராஜகோபா லாச்சாரியார், திலகர் போன்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். அதேபோன்று தமிழ்நாட்டில், மாவட்டத் தலைவர்கள், ஜில்லா தலைவர்களாக இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள்தான்.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இந்த எண்ணத்தை மாற்றவேண்டும் என்பதற்கு, மூன்று பேர் பயன்பட்டார்கள். அந்த மூவரில் ஒருவர் ராமசாமி நாயக்கர்,

இன்னொருவர் சேலம் வரதராஜூலு நாயுடு

மூன்றாமவர் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்கள்.

நாயுடு - நாயக்கர் - முதலியார் என்று அந்தக் காலத்தில் மூன்று பேரை வைத்துத்தான் முன்னிலைப்படுத்தினர்.

ராஜகோபாலாச்சாரியார், இவர்கள் எல்லாம் பேசி முடித்த பிறகு - இவர்களால் வரக்கூடிய அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, கருத்துகளை சொல்வாராம். அய்யா அவர்கள் இதை பல பொழிவுகளில் பதிவு செய்திருக்கிறார்.

திரு.வி.க. அவர்களும் இந்தச் செய்தியை சொல்கின்ற பொழுது, திருப்பூர் மாநாட்டில், இராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று காங்கிரசில் இருந்தபொழுது, 1922 இல் பேசிய தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

இராமாயணத்தின்மீது பெரியாருக்கு ஏன் அவ்வளவு கோபம்? ராமனுக்கும், இவருக்கும் என்ன தகராறு? இல்லாத ராமன்மீது இவருக்கு ஏன் கோபம்? என்று சிலர் நினைக்கலாம்.

உண்மை இராமாயணம் ஆனால், நண்பர்களே! அவரது ஆய்வு, இராமாயண ஆராய்ச்சி, இராமாயண குறிப்புகள், இராமாயணத்தைப்பற்றி, உண்மை இராமாயணம் என்று எழுதி, லட்சக்கணக்கான பிரதிகளைப் பரப்பினர். இதுவரையில், ஒரு குருவி கூட அதற்குப் பதில் சொல்ல முடியாத அளவிற்கு அவர்களுடைய நிலைமை இருக்கிறது.

ஏன், இராஜகோபாலாச்சாரியார் அவர்களேகூட இதற்கு மாற்றாக ஒன்றை எழுதவேண்டும் என்று நினைத்தாரே தவிர, அதனை மறுத்து எழுதக்கூடிய அளவிற்கு இல்லை.

இந்த நாட்டிலேயே எல்லா பதிப்புகள் கொண்ட இராமா யணத்தை அதிகம் படித்தவராக இருந்து, ஆய்வு செய்த ஒரே ஒருவர், அவர்தான் தந்தை பெரியார். அதற்கடுத்து அவருடைய தொண்டர்கள்.

இன்றைக்கும் திராவிடர் கழகம் ஏன் இதனை செய்கிறது?

அதைப் புரிந்துகொள்ளவேண்டும். அவருக்கு என்ன அவ்வளவு கோபம்? இன்றைக்கும் திராவிடர் கழகம் ஏன் இதனை செய்கிறது? பெரிய ஆய்வு செய்து, யாரையாவது சங்கடப்படுத்தவேண்டும் என்பதற்காகவா? அல்ல நண்பர்களே!

ஜாதி ஒழியவேண்டும்; தீண்டாமை அழியவேண்டும்; மனிதர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் உருவாகவேண்டும். மனுதர்ம சமுதாயம், வருணாசிரம சமுதாயம் இருக்கவே கூடாது. அது அழிக்கப்பட்டு, ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று நினைக்கின்றபொழுது, எவை யெல்லாம் ஜாதிக்கு மூலாதாரமாக இருக்கிறதோ, அந்த மூலாதாரத்தை, ஜாதியை தூக்கிப் பிடிக்கின்றவர்களை நாம் மக்களுக்கு அடையாளப்படுத்தவேண்டும்.

நோய்நாடி நோய் முதல் நாடவேண்டும். எனவே, ஜாதி என்ற நோய்க்கு மூலகாரணம் எங்கே இருக்கிறது என்றால், கடவுள் அவதாரங்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்ட, இதிகாச புராணங்கள், மனுதர்மம், பகவத் கீதை போன்ற நூல்கள்.

1934 ஆம் ஆண்டில், அதனை தமிழில் மொழி பெயர்த்து...

இந்தக் கருத்தில் பெரியாருக்கு எவ்வளவு உறுதியான கருத்தோ - அதேபோல, பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும் உறுதியான கருத்து என்பதை ஜாதியை ஒழிக்க வழி என்ற தலைப்பில் அவர் பேசவிருந்ததை ஏற்றுக்கொள்ளாத ஒரு நிலையில், பேசப்படாத ஒரு தலைமை உரையாக, பெரியார் 1934 ஆம் ஆண்டில், அதனை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டாரே, அதிலும் அதே கருத்துதான்.

சத்ய சோதக் சமாஜ்

எனவே, ஆய்வுகள் தந்தை பெரியார் அவர்களானாலும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களானாலும், அதற்கு முன்னால், 1834 ஆம் ஆண்டு, மராத்தியத்தில் மிகப்பெரிய ஜாதி ஒழிப்பு, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பெண்ணடிமை நீங்கிய, அனைவரும் படிக்கவேண்டும் என்கிற கருத்தை உண்டாக்கிய ஜோதிபாபூலே அவர்களின் சத்ய சோதக் சமாஜ் (உண்மை விளக்க அமைப்பு) என்பதிலும், இதுபோன்ற இராமாயணத்தைக் கண்டித்து அவர் மிகப்பெரிய ஆய்வு நூலை எழுதியிருக்கிறார் மராத்தி மொழியில்.

எனவேதான், இதில் புரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால் நண்பர்களே, முதற்கண் தெளிவுபடுத்த வேண்டியது, எங்களுக்கு இருக்கிற ஆத்திரம், கோபம் எல்லாம்- ஏதோ இல்லாத ஒருவனோடு ஏன் என்றுகூட நீங்கள் நினைக்கலாம்; நாங்கள் அதைப் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை. ஆனால், அதுதான் ஜாதிக்கு ஆணி அடித்திருக்கிறது.

வால்மீகி இராமாயணத்தினுடைய கடைசி பகுதி உத்திரகாண்டம்

இந்த வருணாசிரம தர்மம் மிகப்பெரிய கேடு; இதைத் தமிழ்நாட்டில் சொன்னால் எடுபடாது என்று, பெரியார் காலத்தில் மட்டுமல்ல, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் பண்பாடு நிலைத்து, இங்கே இருக்கக்கூடிய இந்த மண்ணில், அது செல்லாது என்று கருதிய காரணத் தினால்தான் நண்பர்களே, சம்பூகனை வதம் செய்த - இராமராஜ்ஜியம் நடத்தினார் என்ற பகுதி இருக்கிறதே - வால்மீகி இராமாயணத்தினுடைய கடைசி பகுதி உத்திர காண்டம் - அதை கம்பன் அறவே தவிர்த்துவிட்டார். கம்பன் எவ்வளவு பெரிய மோசடி மன்னன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கம்ப இராமாயணத்தை மொழியாக்கம் செய்து தமிழில், ஒன்பதாம் நூற்றாண்டு, பத்தாவது நூற்றாண்டு, பனிரெண்டாம் நூற்றாண்டு என்று புலவர்கள் மத்தியில், ஆய்வறிஞர்கள் மத்தியில் அவர்களுடைய காலம் வேறாக இருக்கிறது.

கம்பராமாயணம், இராமாயணத்தில் எத்தனையோ நடந் திருக்கிறது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கூட, தமிழ்நாட்டில் வருணாசிரம தருமத்தை, பார்ப்பன சிறுவன் மறைந்தான் உன்னுடைய ஆட்சியில், காரணம், தர்மம் கெட்டுப் போய்விட்டது; மனுதர்மம் அயர்ந்து விட்டது என்று சொல்லக்கூடிய அளவில், ஜாதிக்கு, வருணாசிரம தர்மத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விட்டது. எல்லோரும் கடவுளை நேரடியாகத் தொழலாம் என்று வந்துவிட்டது.

ஞானியானாலும், மூடனானாலும், கடவுளை பிராமணன் மூலம்தான் தொழவேண்டும் - இது மனுதர்மம். நேரிடையாகத் தொழுவதற்கு உரிமையில்லை.

கற்பனையாக இருந்தாலும், இந்தத் தத்துவம் எவ்வளவு ஆபத்தானது

இல்லாத கடவுளை, அவன் கண்களை மூடிப் பார்ப்பதற்குத் தேடிக் கொண்டிருக்கிறான். அவன்தான் மிக முக்கியமாக இருக்கக்கூடிய சம்பூகன். அதனால் பார்ப்பனச் சிறுவன் இறந்துவிட்டான் என்று சொல்லி, மிகப்பெரிய அளவில் அவர்கள் போய் முறையிட, எந்த விசாரணையும் செய்யாமல், வாளை எடுத்துக்கொண்டு சென்று, சம்பூகன் தலையை வெட்டினான். என்ன சொல்லி வெட்டினான் என்றெல்லாம் விளக்கமாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமானால், கற்பனையாக இருந்தாலும், இந்தத் தத்துவம் எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

என்னதான் எதிர்ப்பு காட்டினாலும், பெரியார் வெல்வார்; பெரியாருடைய கருத்துகள்தான் இருக்கும்

இதோ என்னுடைய கைகளில் இருப்பது சிறீமத் வால்மீகி இராமாயணம் - உத்திரகாண்டம்.

பல பதிப்புகள் போட்டிருக்கின்ற இடத்தில், இப்பொழுது இந்த உத்திரகாண்டத்தையே வெளியிடமாட்டேன் என் கிறார்கள். ஏனென்றால், பெரியாருடைய தாக்கம் இருக்கிறதே, தோழர்களே நீங்கள் என்னதான் எதிர்ப்பு காட்டினாலும், பெரியார் வெல்வார்; பெரியாருடைய கருத்துகள்தான் இருக்கும். ஆகவே, ஜாதி ஒழிப்பு, வருணாசிரம தர்ம ஒழிப்பு - அனைவருக்கும் அனைத்தும் - சமத்துவம் - சமவாய்ப்பு.

எனவேதான், ஒரு சமத்துவ சமுதாயம் காணவேண்டும்; சமதர்ம சமுதாயம் காணவேண்டும் என்று நினைத்தால், அவன் முதலில் ஒழிக்கவேண்டிய இராமாயணத்தை

முதலில் எதிர்க்கவேண்டியது மனுதர்மத்தை

முதலில் எதிர்க்கவேண்டியது பாரதத்தை

முதலில் எதிர்க்கவேண்டியது பகவத் கீதையை.

உடனே என்ன சொல்வார்கள், இவர்கள் இந்து மதத்தை மட்டும்தான் எதிர்த்துப் பேசுவார்கள். ஏன் இசுலாமிய மதத்தைப்பற்றி பேசவேண்டியதுதானே - கிறித்துவ மதத்தைப்பற்றி பேசவேண்டியதுதானே என்பார்கள்.

வேரோடும், வேரடி மண்ணோடும்

பிய்த்து எறியவேண்டும்

நாங்கள் மூடநம்பிக்கை என்ற அளவில் வரும்பொழுது அதைப் பேசுவோம். எங்களுக்கு அதைவிட மிக முக்கியம் - எங்கள் நோய் - எங்களைப் பாதிக்கின்ற நோய் - எங்கள் உயிரை எடுக்கக்கூடிய நோய் ஜாதி நோய். அந்த ஜாதி நோய் இருக்கிறதே, வருணாசிரம தர்மம், அதைத் தூக்கிப் பிடிக்கின்ற கரங்களையெல்லாம் நாங்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் பிய்த்து எறியவேண்டும். எனவே, அதற்காகத்தான் இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறோம்.

யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல; புரியாதவர்களை பண்படுத்துவதற்காக. இதைத்தான் நன்றாக நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

இந்திய பீனல் கோடில் கிடையாது

வெள்ளைக்காரர்கள் அவர்கள் தப்பிக்கவேண்டும் என்பதற்காக, 294-ஏ என்கிற ஒரு பிரிவைக் கொண்டு வந்தார்கள். வழக்குரைஞர் என்கிற முறையில் நான் இதைச் சொல்கிறேன். ஆரம்பத்தில் அந்தப் பிரிவு இந்திய பீனல் கோடில் கிடையாது; குற்றச்சட்டத்தில் கிடையாது.

நாங்கள் தலையிடமாட்டோம் என்கிறபொழுது, அவர்களுடைய சுரண்டல் தங்கு தடையின்றி நடக்கவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு முக்கியம்; அவர்களின் ஆட்சிக்கு எதிர்ப்பு இருக்கக்கூடாது. அப்பொழுது படித்தவர்கள் யார் என்றால், ஊடகங்கள் நடத்தியவர்கள் யார் என்றால், இவர்கள் மட்டும்தான்.

கிஸீவீ தீறீணீநீளீ னீணீஹ் தீமீ றீஷீ

ஆகவே, இவர்களைத் திருப்திபடுத்துவதற்காக மட்டுமல்ல நண்பர்களே, கிறித்துவத்தை எதிர்க்கக்கூடிய அளவிற்கு உணர்வு வந்தவுடன், அதனைத் தடுப்பதற்காகத்தான்,  கிஸீவீ தீறீணீநீளீ னீணீஹ் தீமீ றீஷீ  என்று இங்கிலாந்தில் உருவாக்கினார்கள். அதைத் திரும்ப இங்கே கொண்டு வந்து பயன்படுத்தினார்களே தவிர, வேறொன்றுமில்லை.

ஒவ்வொன்றையும் தனித்தனிப் பொருளாகக் கொண்டு தலைப்பாக எடுத்தால், மணிக்கணக்கில் பேசவேண்டிய வரலாற்று செய்தி. எல்லாவற்றையும் ஒரு கேப்சூல் மாதிரி, ஒரு குளிகை போன்று உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்படி வருகிறபொழுது நண்பர்களே, உத்திரகாண்டத்தை அறவே தடுத்துவிட்டார்கள்.

இப்பொழுதுகூட சீதை பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறார்கள். அதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்:

உத்தரகாண்டம் சர்க்கம் 76 சம்பூகனுடைய வதம்

மகாராஜா! நான் நான்காம் வர்ணத்தவன்; சம்பூகனென்று எனக்குப் பெயர். இந்தச் சரீரத்துடன் தேவ பதவியை அடைய விரும்புகிறேன். ஆகையால் பொய் சொல்லமாட்டேன். இந்தக் கடுந்தவத்தைச் செய்வதன் உத்தேசம் இதுவே என்றான். உடனே ராமன் மின்னலைப் போன்ற தன் கத்தியை உறையிலிருந்து உருவி, அவன் தலையை வெட்டினார். தேவர்கள் நல்லது நல்லது என்று அவரை அடிக்கடி புகழ்ந்தார்கள். ஆகாசத்திலிருந்து பரிமளமுள்ள புஷ்பமாரி பெய்தது.

எப்படி கதை விடுகிறார்கள் பாருங்கள்; நாளைக்கு ராம ராஜ்ஜியம், ராமராஜ்ஜியம் என்று ரதம் கொண்டு வருகிறார்களே, இதுதான் ராமராஜ்ஜியம். நாளைக்கு ராமராஜ்ஜியம் வந்தால், ஜாதியை எதிர்க்கின்றவர்களை எல்லாம், கடவுளை நேரிடையாகப் பார்க்கின்றவர்களையெல்லாம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்கின்றவர்களையெல்லாம், கடவுளைக் கும்பிடுகிற பக்தர்களெல்லாம் நேரிடையாக ராமனால் சிறைச்சேதம் செய்யப்படுவார்கள். கழுத்து வெட்டப்படுவார்கள்.

எனவே, நாங்கள் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வது, பக்தர்களே, எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்ல; உங்களைக் காப்பாற்றுவதற்காக - உங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக - உங்கள் மானத்தை, மரியாதையை,  உரிமையைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் இந்தப் பணியை செய்கிறோம்.

ஆனந்தவிகடனின் கார்ட்டூன்

நாங்கள் சொல்வது தவறு என்றால், யாராவது மறுத்துச் சொல்லுங்கள்.  பெரியார் என்கிற மாமனிதர் மாமலையாக உயர்ந்து  இருக்கிறார்; ஆனந்தவிகடனின் கார்ட்டூனை மறந்துவிடாதீர்கள்.

இந்த மண் மட்டுமல்ல, பெரியார் உலக நாடுகள் மத்தியில் ஆய்வுக்குரிய பெரியாராக உயர்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், கருத்தை கருத்தால் சந்திக்க முடியாத கயவர்கள், கருத்துச் சூனியங்கள் எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்; கொலைகூட செய்யலாம்; எங்களை சம்பூகனாக்கலாம் என்று கூட நினைக்கலாம், உங்களுடைய ஆட்சிவந்துவிட்டால். நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அந்த சம்பூகன் அன்றைக்குக் கொல்லப்பட்டாலும், இன்றைக்கு சம்பூகனுக்காக வாதாடுகிறவர்கள் வந்திருக்கிறார்கள் அல்லவா இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு.

எனவேதான், இந்தக் கருத்தாழம் மிக்க ஒரு கருத்து மிகமிக சிறப்பானது.

அடுத்தபடியாக ஒரு செய்தி, ஜாதியை ஒழிப்பதற்காக, பெண்களை மேன்மைப்படுத்துவதற்காக - பெண்ணுரிமை என்பது காப்பாற்றப்படவேண்டும்.

பெண்களைக் கொச்சைப்படுத்தலாமா? பெண்களைக் கேவலப்படுத்தலாமா?

தந்தை பெரியார்தான் கேட்டார், மனித நேயம் உள்ளவன் நான்; எனக்கு அடிப்படை கொள்கை மானிடப் பற்று; மற்ற பற்றுகள் எனக்கு முக்கியமல்ல; எனவே, மானிடப் பற்றுள்ள எனக்கு, மனிதநேயம் - அந்த அடிப்படையில் மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்களைக் கொச்சைப்படுத்தலாமா? பெண்களைக் கேவலப்படுத்தலாமா? ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காரன், சூத்திரன் தவம் செய்தான் என்றால், வெட்டி எறி என்கிறான்.

ஆரியப் பெண்களாக இருந்தாலும், ஏனென்றால், பெண்கள் மனுதர்மப்படி, இன்னுங்கேட்டால், அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கின்ற கருத்துப்படி, நமோ சூத்திரர்கள் - பெண்களும் நமோ சூத்திரர்கள்.

ஏனென்றால், படிக்கட்டு ஜாதி முறையில், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு ஜாதி. இந்த நான்கு ஜாதிகளுக்கும் கீழே அய்ந்தாவதாக பஞ்சமன் - உழைக்கின்றானே, பாடுபடுகின்றானே, காலமெல்லாம் பாடுபட்டு, இந்த நாட்டில் உரிமைகளையெல்லாம் இழந்திருக்கிறானே, அந்தச் சகோதரன் பள்ளன், பறையன், சக்கிலி என்ற கேவலத்தை சுமந்துகொண்டிருக்கின்ற என் தோழன், என் சகோதரனாகிய அவன் இந்த நாட்டில், ஜாதி வருணாசிரம தர்மப்படி, அவன் பஞ்சமன் - அய்ந்தாவது ஜாதி. இதற்கும் கீழே இன்னொரு பிரிவு இருக்கிறது. அதுதான், அத்தனை ஜாதி பெண்கள் - உயர்ஜாதி, ஆரியப் பார்ப்பனப் பெண்கள் உள்பட.

இந்த இயக்கம் பார்ப்பனப் பெண்களுக்கும் சேர்த்து குரல் கொடுக்கின்ற இயக்கம்

எனவே, இந்த இயக்கம் பார்ப்பனப் பெண்களுக்கும் சேர்த்து குரல் கொடுக்கின்ற இயக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

மனிதநேயம் என்று சொல்லும்பொழுது, நாங்கள் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை; யாரையும் பகுத்துப் பார்ப்பதில்லை. அளவுக்கு மீறி தன்னுடைய அதிகாரத்தை, தன்னுடைய வாய்ப்பை, தன்னுடைய ஏகாதிபத்தியத்தை நடத்தவேண்டும் என்று நினைக்கின்றபொழுது, அந்தத் தத்துவத்தை எதிர்க்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.

எனவேதான் தந்தை பெரியார், லட்சுமிபுரம் யுவ சங்கத்தில் பேசும்பொழுது, பார்ப்பனர்களுக்கு ஒன்றை நினைவூட்டினார்.

இனி வரக்கூடிய இளைஞர்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது

தனிப்பட்ட முறையில் நானோ, என்னுடைய இயக்கமோ பார்ப்பனர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், பார்ப்பன நண்பர்களே, இன்றைக்கு நான் பொறுமையாக சொல்கிறேன்; அமைதியாக சொல்கிறேன், நீங்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாக இவ்வளவு காலத்திற்கு இருந்தீர்கள். இனிமேலும் அப்படி இருக்கலாம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். இனிமேல் எதிர்காலத்தில் உங்களுக்கு அந்த வாய்ப்பு இருக்காது. எங்களைப் போன்றவர்கள் அமைதியாக சொல்லக்கூடிய நிலையில் இருப்போம்; இனி வரக்கூடிய இளைஞர்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய நிலைகள் வேறு. அதற்கு உதாரணம் சொல்கிறேன் என்று ஒன்றைச் சொன்னார்கள்.

முள்ளுக்குச் சேதாரம் வராது

நாங்கள் முள் போன்றவர்கள்; நீங்கள் வாழை இலை போன்றவர்கள்; வாழை இலை தானாக வந்து முள்மீது பட்டாலும்சரி, முள் தானாக வாழை இலையின்மீது பட்டாலும் சரி, கிழியப் போவது வாழை இலையே தவிர, முள்ளுக்குச் சேதாரம் வராது என்று சொன்னார்கள்.

இந்த எச்சரிக்கை என்பது அவர்கள் கல்லில் செதுக்கி வைத்துக்கொள்ள வேண்டிய எச்சரிக்கையாகும்.

எனவே, வருணாசிரம தர்மத்தின் கடைசி அடையாளம்கூட இருக்கக்கூடாது என்று நினைத்த தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, இந்த ராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை செய்யவில்லை; ஆதாரம் வாழ்க்கைக் குறிப்பு திரு.வி.க. 22.

பின் எப்பொழுது? காங்கிரசில் இருந்தபொழுது சொன்னார்.

இன்னுங்கேட்டால், அருமையாக ஒரு செய்தியை அய்யா அவர்கள் சொல்வார். பல இடங்களில் பேசியிருக்கிறார்; அவருடைய உரையில் இது பதிவாகியிருக்கிறது.

ராமாயணத்தை தீயிட்டுக் கொளுத்தவேண்டாமா?

ஜாதியை ஒழிப்பதற்காக வேகமாகப் பேசிக் கொண்டு வந்தவர், காங்கிரசிலிருந்தபோது, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு செய்தியை - பல்லாயிரக்கணக்கான மக்கள் திருப்பூரில் கூடியிருக்கும்போது, கடுமையாக பேசுகிறார். அதில் சம்பூகன் கதையை சொல்கிறார்.

காங்கிரசில் இருக்கும்பொழுது, நம்மைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்தில், 1922 ஆம் ஆண்டு.

ராஜகோபாலாச்சாரியார், வரதராஜுலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்கள் அமர்ந்திருக்கின்ற மேடையில், பெரியார் கடுமையாகப் பேசினார்.

சம்பூகன் தலையை வெட்டினான் என்கிற பகுதியை எடுத்துக்காட்டி, ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால், சம்பூகனை வெட்டிய ராமாயணத்தை நாம் பிரச்சாரம் செய்யலாமா? அதனை தீயிட்டுக் கொளுத்தவேண்டாமா? என்று பேசுகிறார் காங்கிரசில் இருக்கும்பொழுது,. ராஜகோபாலாச்சாரியாருக்கு விளக்கெண்ணெய் குடித்ததுபோல இருந்தது - ஆனாலும், பெரியாரைத் தடுக்க முடியாது.

இந்த மடப் பசங்களுக்கு ஸ்ட்ராங்காவது, குறைச்சலாவது

கூட்டம் முடிந்ததும் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், நாயக்கர்வாள் நன்னா பேசினீர்கள்; ரொம்பப் பிரமாதமாக இருந்தது உங்கள் பேச்சு. அதிலொன்றும் சந்தேகமில்லை. ஆனால், ஒன்றை ஒன்று, ரொம்ப ஸ்ட்ராங் டோஸ்; கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்றாராம்.

உடனே பெரியார் அவர்கள், நீங்க ஒண்ணு, இந்த மடப் பசங்களுக்கு ஸ்ட்ராங்காவது, குறைச்சலாவது; இதைவிடவும் வேகமாக சொன்னால்தான் இவங்களுக்குப் புரியும்; அவ்வளவுக் கொடுமை இருக்கிறது என்றார்.

ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் வாயை மூடிக்கொண்டு, ஏண்டா இதனைச் சொன்னோம்; சொல்லாமலே இருந்திருக்கலாம் என்று நினைத்தார்.

அவர்தாம் பெரியார்!

அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், அதை ஏன் பயன்படுத்தினார்? இன்றைக்கும் நாங்கள் ஏன் பயன்படுத்துகிறோம்? இன்றைக்கும் ஏன் இராமராஜ்ஜியம் கூடாது? இராமராஜ்ஜியம் என்றால்....

இராமராஜ்ஜியம் என்றால் ஜாதி ராஜ்ஜியம், மனு ராஜ்ஜியம், வருணாசிரம தர்ம ராஜ்ஜியம், பெண்களைக் கொடுமைப்படுத்திய ராஜ்ஜியம்.

இரண்டாவது இடத்திற்குப் போவோம் - முதலில் நடந்த கதையா? இல்லையா? என்பதைப் பிறகு பார்ப்போம்.

இந்த இரண்டும் இல்லை என்று யாராவது சொல்லட்டும் - ராமன், சீதாபிராட்டி என்று சொல்லி நிறைய பேர் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் காலட்சேபம் செய்ய முடியாதா? தொடர்ந்து எத்தனை நாள் பேசவேண்டும் - நூறு நாள்கள் பேசவேண்டுமா? நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆதாரத்தோடு சொல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதைப் பேச ஆரம்பித்தால், ஒரு நாளோடு முடியாது.

இராமாயணம் நடந்த கதையல்ல; நடந்த கதையல்ல என்று சொல்லும்பொழுது, பின் ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்று கேட்டால், இரண்டு இனத்தை அடிப்படையாக வைத்து உருவகப்படுத்தப்பட்ட கதை. ஆரிய - திராவிட போராட்டம்.

தேவாசுரப் போராட்டம் என்கிறார்களே, தேவர்கள் - அசுரர்கள் என்றால் என்ன அர்த்தம்? பல கூட்டங்களில் நாங்கள் சொல்லியிருக்கிறோம். அசுரன் என்றால், ஒரு பெரிய  அருவெறுக்கத் தகுந்த வார்த்தைப் போன்று சொல்லி விட்டார்கள்.

தேவர்கள் என்றால் என்ன அர்த்தம்?

தேவர்கள் என்றால் என்ன அர்த்தம்? திருவள்ளுவர் மிக அழகாகப் புரிந்துகொண்டார். உயர்ஜாதிக்காரர்கள் எப்படி இருப்பார்கள்? வருணாசிரமத்தைத் தூக்கிப் பிடிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள்? சூதானவன் எப்படி இருப்பான்? என்பதைப் புரிந்துகொண்டதினால்தான், வள்ளுவர் அவர்கள் அடையாளம் காட்டுவதற்காகச் சொன்னார், தேவர் அனையர் கயவர் என்று.

தேவாசுர யுத்தம் என்று சொல்கிறபொழுது, திராவிடர் - ஆரியர்பற்றி எல்லா வரலாற்று ஆசிரியர்கள், பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் உள்பட எல்லோரும் அதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இராமாயணப் பாத்திரங்கள்

ஆனாலும், அதில் முக்கியமாக சொல்லவேண்டிய ஒரு செய்தி - இராமாயணப் பாத்திரங்கள் இதுவரை பல லட்சம் பிரதிகள் போயிருக்கிறது. இதுவரையில் ஒரு வரியைக்கூட மறுத்து யாரும் எழுதவில்லை; ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் உள்பட.

தார்மீக இந்து என்று ஒரு இதழை ஜெகநாத ஆச்சாரியார் நடத்தினார். பெரியார் அவர்கள் இராமாயணப் பிரச்சார எதிர்ப்புக் கூட்டத்தில் உரையாற்றும்பொழுது, ஜெகநாத ஆச்சாரியார் கேள்வி கேட்டபொழுது, தோழர்கள் ஆத்திரப்பட்டார்கள்; அவரை எதுவும் செய்யவேண்டாம்; அவரை மேடைக்கு அழைத்து, அருகில் அமர வைத்துக்கொண்டு, வால்மீகி இராமாயணத்திலிருந்து கேள்வி கேட்கச் சொல்லி, அதற்குப் பதிலையும் சொன்னார்.

இன்னுங்கேட்டால், பெரியாரிடமிருந்த இராமாயணப் பதிப்புகள் வேறு யாரிடமும் கிடையாது. பழைய பதிப்புகளை வாங்கி வைத்திருந்தார். சி.ஆர்.சீனுவாச அய்யங்கார் போன்றவர்கள் மொழி பெயர்த்த, பழைய பதிப்பை அய்யா அவர்கள் வாங்கி வைத்ததினால்தான், ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

சிறீமான் சி.ஆர்.சீனுவாச அய்யங்கார்

இதே சிறீமான் சி.ஆர்.சீனுவாச அய்யங்கார் அவர்கள்தான், வால்மீகி இராமாயணத்தை சமஸ்கிருதத்திலிருந்து மொழி பெயர்த்தவர். 1928 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் வெளியிட்டிருக்கிற நூல் இது. அதை அப்படியே மறைத்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் பத்திரமாக வாங்கி வைத்திருந்தார். நாங்கள் அதை இப்பொழுது புதிதாக வெளியிட்டோம்.

இதர ராமாயணங்கள் - வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசிதாசர் ராமாயணம் - இதுமட்டுமல்ல.

மயிலாப்பூர் ராமாயண விலாஸ் சி.ஆர்.சீனுவாச அய்யங்கார் பி.ஏ., இவர்தான் வால்மீகி ராமாயணத்தை, சமஸ்கிருதத்திலிருந்து மொழி பெயர்த்த மிகப்பெரிய சமஸ்கிருத விற்பன்னர்.

சீதைக்கும், இராமனுக்கும் என்ன உறவு என்றால், அண்ணன் - தங்கை உறவு

ஒன்று நடந்திருந்தால், பல ராமாயணங்கள், பல மாதிரி இருக்காது. பல இராமாயணத்தில், சீதைக்கும், இராமனுக்கும் என்ன உறவு என்றால், அண்ணன் - தங்கை உறவு என்று இருக்கிறது.

அண்மையில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது. மாத்தளை சோமு என்பவர் இலங்கையில் இருக்கக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகம் கம்போடிய ராமாயணம்.

கம்போடியா போயிருந்தபோது, புத்தகக் கடைகளில் புத்தகங்களைத் தேடியபோது, என் கைக்கு கிடைத்தது, இராமாயணக் கதை புத்தகம். அது ஒரு பக்கம் கெமுரு மொழியிலும், மறுபக்கம் ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டு இருந்தது.

- விடுதலை நாளேடு, 29.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக