பக்கங்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2018

பாரதப் பாத்திரங்கள் (9)

பரசுராமன்

சு.அறிவுக்கரசு

y7.jpg - 31.92 KB

பார்ப்பனன் மற்ற ஜாதியரை வெறுப்பவன். அதிலும் அரசர்களாக இருக்கும் சத்திரியர்களைக் கூடுதலாக வெறுப்பவன். சத்திரியர்களையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்றவன். முயன்றவன். பார்ப்பனர் குருவாக இருந்தாலும் தட்சணை தருபவன் சத்திரியன். ஆலோசனை தருபவனாகப் பார்ப்பனர் இருந்தாலும் ஆட்சி நடத்துபவன் சத்திரியன். அடங்கிப் போக வேண்டியவர்கள் பார்ப்பனர்கள்.

வேதமோதவும் வேள்வி நடத்தவும் சத்திரியனின் உதவிதான் தேவை. பணத்திற்கும் அவனே. பாதுகாப்பிற்கும் அவனே.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் _ என்று வள்ளுவமே  கூறுவதால், விளக்கம் வேண்டா.

அரசன் உதவி இல்லாவிட்டால், பார்ப்பனர் வேத நூலையே மறந்து விடுவர் (குறள் 560). ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல் என்னும் நான்கையும் மறந்து ஈதல், ஏற்றல் எனும் பிச்சைத் தொழிலைத்தான் செய்திட வேண்டும். தெருப்பிச்சை கிடைக்காவிட்டால், சூத்திரரின் களத்து மேட்டில் சிந்தியுள்ள நெல்மணிகளைப் பொறுக்கிப் பொங்கிச் சாப்பிட வேண்டும் என்கிறது மனுதர்ம சாஸ்திரம்.

தன் தந்தை சொன்னான் என்பதற்காகத் தன் தாயைக் கொன்றவன்.

தன் வீட்டுப் பசுமாடு (காமதேனு) திருடு போனதற்காக கார்த்தவீரியனைக் கொன்றான். பழிக்குப் பழியாக பரசுராமனின் தந்தையைக் கார்த்தவீரியனின் மகன் கொல்கிறான். கணக்கு நேர், அல்லவா?

கோபம் பரசுராமனுக்கு. சத்திரிய ஜாதியையே கொன்றிடச் சபதம் எடுக்கிறான். ஆயிரக்கணக்கில் கொலைகள்.

அடங்காத ஆத்திரம். ஆரியர்க்குப் படைக்கலப் பயிற்சி அளிக்கிறான். வாள், வேல், வில் வித்தைப் பயிற்சி.

துரோணன் இவனின் மாணவன். சத்திரியனுக்குப் போர்ப்பயிற்சி தந்தவன். சூத்திரர்க்கு மறுத்தவன்.

பரசுராமன் பார்ப்பனர்க்கு அளித்தான். சத்திரியர்க்கு மறுத்தான்.

இருவருமே பார்ப்பனர்கள். இருவேறு மனோநிலை. வேதத்தை விட்டு யுத்தக் கலை போதித்தனர்.

படைத் தலைவர்களாகப் பல பார்ப்பனர்கள்  அந்தக் காலத்தில். அசோக மன்னரின் வழியில் வந்த மன்னன் பிருகத்ரதனின் சேனாதிபதி புஷ்யமித்ரன் பார்ப்பான். மன்னனைக் கொன்று மகுடம் சூட்டிக் கொண்ட துரோகி. பரசுராமனின் பரம்பரை.

இந்திய மன்னர்களிலேயே சூரியனைப்போல ஒளி வீசியவர் அசோகர் என்று உலகின் வரலாற்றாசிரியர்கள் புகழ்வர். அசோகரால் வளர்க்கப்பட்ட பவுத்த நெறிக்கு மாறானவன் புஷ்யமித்திரன். அவனின் துரோகத்தை நியாயப்படுத்தும் நோக்கமே கீதை எழுதப்பட்டதற்கான காரணம். பாரதக் கதையில் கீதை செருகப்பட்டதற்கும் அந்நோக்கமே காரணி என்பது ஆய்வாளர்களின் முடிவு.

பார்ப்பானல்லாத கர்ணன் மாணவனாகச் சேர்ந்து தன்னிடம் கற்றுக் கொண்டான் என்பதற்காக அவனைச் சபித்தவன் பரசுராமன். அவன் வித்தை துரோணன் வழி சென்றடைந்து சத்திரியர்களிடம் பார்ப்பன மேலாண்மையை ஏற்படுத்த விரும்பிய பரசுராமன் தோற்றுத்தானே போனான்?

உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன்

உறுபகை ஒடுக்கிப் போந்தேன்

சிலையை நீ இறுத்த ஓசை

செவியுறச் சீறி வந்தேன்

மலைகுவன் வல்லையாயின்

 


வாங்குதிவில்லை என்றான் _- எனக் கம்பன் பாடியவாறு சத்திரிய ராமனிடம் அறைகூவல் விடுகின்றான் பரசுராமன். முனிவர்களாக இருக்கும் பார்ப்பனர்களுக்கே உரியதாக இவ்வுலகை ஆக்கினேன். அந்நிலையில் ஜனகனின் வில்லை நீ முறித்த ஓசை என் காதில் விழவே, உன்னிடம் மோத வந்திருக்கிறேன் என்றானாம். கோபம் அடங்காத நிலை.

ஜனகன் மகள் ஜானகி -_ சீதை. அவளை மணக்க விரும்புபவன் தன்னிடமுள்ள பழைய வில்லில் நாண் ஏற்ற வேண்டும் என்பது ஜனகனின் நிபந்தனை. ராமன் வில்லைத் தூக்குகிறான். அது ஒடிந்து விழுந்தது. பழைய வில் அல்லவா?

எடுத்தது கண்டார், இற்றது கேட்டார் என்பார்கள். எடுத்ததும் தெரியவில்லை, ஒடிந்ததும் தெரியவில்லை. ஒடிந்த சப்தம் காதில் விழவே பரசுராமன் சண்டைக்குப் புறப்பட்டுவிட்டான். ராமன் பார்ப்பானைக் கொல்லக்கூடாது எனும் மனு சாஸ்திரப்படி பரசுராமனின் தவப் பெருமைகளை சிதைத்து வென்றான்.

பரசுராமன் தோற்றான். வாழ்க்கையில் முதன்முதலாகப் பெற்ற தோல்வி. அகந்தை அடங்கியது.

சத்திரியர் மீது பரசுராமன் ஏற்படுத்திக்கொண்ட பகை சத்திரிய ராமனால் தீர்க்கப்பட்டுவிட்டது.

புல் ஏந்தும் கைகளில் வில் ஏந்தினான். மீண்டும் புல் ஏந்தும் நிலை ஏற்படுத்தப்பட்டது. விரல் உரலாக விரும்பினால், இப்படித்தான் முடியும்.

பார்ப்பனரல்லாதவன் கர்ணன் எனத் தெரிந்து, அவன் கற்றுக்கொண்ட பிரம்மாஸ்திரம் நெருக்கடியான நேரத்தில் பயன்படாமல் போகட்டும் என்று சாபம் விட்டவன் பரசுராமன். அதனால் கர்ணன் போரில் மாள நேரிட்டது.

ஜாதியை மதிக்காமல் வீரத்தை மதித்தவன் கர்ணன். ஜாதிக்கு முக்கியம் தராமல், தேரோட்டி மகனான கர்ணனை அங்கதேசத்து அரசனாக ஆக்கிப் பெருமை அடைந்தவன் துரியோதனன்.

இவ்விருவரையும் தோற்கடிக்கக் காரணமாக அமைந்த பாரதப் போரில், பரசுராமனின் சாபம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வேறு வகையில் சொன்னால், பரசுராமனின் பார்ப்பன ஜாதி வெறி இடம் பெற்றுள்ளது.

ஜாதி / வர்ணம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்குடன் பாடப்பட்ட பாரதக் கதையின் தீய எண்ணம் நிறைவேற உதவியவர்களில் ஒருவன் பரசுராமன்.

மற்றவன் கிருஷ்ணன்.

மற்ற பாத்திரங்கள் “எக்ஸ்ட்ரா’’க்கள்.

(தொடரும்...)

- உண்மை இதழ், 15-31.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக