பக்கங்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2018

பாரதப் பாத்திரங்கள் (6)

.அறிவுக்கரசு

தர்மன்



 

யுதிஷ்டிரன் என்பது பெயர். சூதாடி. சூதாடி அனைத்துச் செல்வங்களையும் இழந்தவன். தன் உடன் பிறந்தாரைத் தோற்றவன். தன்னைத் தோற்றவன். தன் நாட்டை சூதில் இழந்து நாடற்றவனானவன் தன் பெண்டாட்டி (மட்டுமே) என நினைத்துத் திரவுபதியைத் தோற்றவன். அய்ந்து பேரின் மனைவியை, தான் ஒருவன் மட்டுமே கலந்துகொண்ட சூதாட்டத்தில் பணயம் வைத்துத் தோற்றவன். மற்ற கணவர்களைக் கலக்காது பந்தயப் பொருளாகப் பாஞ்சாலியை வைத்தவன்.

சூதாடுவதில் பெரு விருப்பம் கொண்டவன். சூதாடுவது சத்திரியனுக்கு விதிக்கப்பட்ட கடமை என்றவன். இந்தக் கடமையை ஆற்றவே சூதாடினானாம். காலுக்குச் செருப்பு தைக்கத் தன் குழந்தையின் தோலை உரித்தவன். இவன் தரும புத்திரனாம்.

தாயத்தில் தோற்று வென்றவனுக்கு அடிமையாகிவிட்ட தர்மன் என் கணவனல்ல. அவனின் மனைவி நான் அல்லள். பின் யார் என்றால், மன்னன் துருபதனின் மகள் என்று திரவுபதை சொல்லுமளவுக்குத் தரம் கெட்டுப்போன சூதாடி.

சூதாடியதால் இறப்புக்குப் பின் நரகம் போனவன். இவனா தருமபுத்திரன்?

ஒற்றை மனிதனாக இருப்பவன் வேள்வியோ, வேறு சடங்குகளோ செய்யும் தகுதி பெற்றவனல்லன். ‘ஒற்றைப் பார்ப்பான் கெட்ட சகுனம்’ என்பதுகூட இதன் அடிப்படையில் தான். ஆகவேதான் கிழட்டுப் பார்ப்பனர்கள் கூடத் திருமணம் செய்துகொண்டு தகுதியைப் பெறுகின்றனர். அப்படி ‘வேள்வி மாது’ என்ற வகையில் வந்தவள்தான் மனைவி பாஞ்சாலி. அவள் எப்படி இவனது உடைமை ஆவாள்? உடைமை எனக் கருதிச் சூதில் பணமாக வைத்துத் தோற்றது தர்மமா? இவன் தர்மனா? அச்சொல்லுக்குத் தகுதியானவனா?

பாண்டவர்கள் கவுரவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பாதி நாட்டை வாங்கி தனியரசாக ஆனபின்பு ராஜசூய யாகம் செய்திட ஆசை கொண்டனர். மன்னனான தர்மன் மாமன்னன் ஆக ஆசைப்பட்டான். யாகக் குதிரையைப் பல நாடுகளுக்கும் அனுப்புவார்கள். பயந்தவர்கள் பணிந்து கப்பம் கட்டுவார்கள். அஞ்சாதவர்களுடன் குதிரைக்குரியவன் சண்டையிட்டு வெல்லவோ தோற்கவோ வேண்டும்.

கிருஷ்ணனிடம் யோசனை கேட்டான் தர்மன். மகத நாட்டு மன்னன் ஜராசந்தனைப் பற்றிக் கூறித் தன்னால் பதினெட்டு முறை போரிட்டும் வெல்லமுடியாததைக் குறிப்பிட்டு அவனுடன் போரிட நேரிடும் எனக் கூறித் தயார்படுத்தினான், கிருஷ்ணன். நேரான போரில் _ நேர்மையான முறையில் அவனை வெல்ல முடியாது. சூழ்ச்சி செய்துதான் தோற்கடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான் கிருஷ்ணன். அந்தப்படியே செய்தவன் தருமன். அவன் யோக்கியனா?

ஜராசந்தன் வீட்டுக்குப் பார்ப்பன வேடத்தில் பீமன் நுழைந்தான். ஜராசந்தனுடன் சாப்பிட்டான். மன்னனுடன் சண்டை போட வேண்டுமென்கிற ஆசையை பீமவேடப் பார்ப்பனன் கேட்டானாம். விருந்தாளியின் ஆசையை நிறைவேற்றுவது உபசரிப்பவனது கடமையாம் அக்காலத்தில். அதன்படி சண்டை நடந்தது. பீமன் ஜராசந்தனைக் கொன்று விட்டான். சூழ்ச்சியால் கொன்றது நேர்மையா? தருமன் நேர்மையானவனா?

எண்ணமும் அதனை அடையும் வழிகளும் ஒருசேர நேர்மையாக இருக்க வேண்டும். மாமன்னன் ஆவது நோக்கம். அதனை நிறைவேற்றிக் கொள்ளச் சூழ்ச்சி செய்தவனான தருமன், தர்மனா? அதர்மனா?

ஜராசந்தனிடம் தோற்றுக்கிடந்த சிற்றரசர்கள் ஆதரவுடன் மாமன்னனாகி விட்டான் தர்மன். இந்திரப் பிரஸ்தத்தில் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள். கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை. ஏன் என்று கேட்டான் சிசுபாலன். கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டான். முதல் பலி. இரத்தம் பூசிக் கொண்டது இந்திரப் பிரஸ்தம். இது தர்மமா?

தர்மம் வென்றாக வேண்டுமென்றால் வெல்லும் வழியும் தர்மமாக இருக்க வேண்டும் அல்லவா? இல்லையே?

அண்ணன் சொல்லைத் தட்டாமல் வளர்ந்தவர்கள் _ வளர்க்கப்பட்டவர்கள் பாண்டவர்கள். என்றாலும் பீமன் சிற்சில சமயங்களில் தர்மனைக் கடிந்ததுண்டு. சூதாடிப் பெண்டாட்டியைத் தோற்றபோது அவன் கையை எரித்துவிடுவோம் என்று கொள்ளிக் கட்டை கொண்டுவரச் சொன்னான் பீமன். அந்த நிலைக்கு அவனைத் துரத்தியவன் தர்மன். பாஞ்சாலி பீமனுக்கும் மனைவிதானே! தர்மன் மட்டுமே தனியாக ஏன் பணயம் வைத்தான்? அதர்மமல்லவா?

ஒற்றை ஆடையால் முகத்தை மூடிக்கொண்டு வனவாசம் புறப்பட்ட நிலை தர்மனுக்கு ஏற்படலாமா? அவன் பத்தினி பாஞ்சாலி தனது விரிந்த தலைமயிரால் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்படலாமா? அவமானகரமான இந்த நிலை தர்மனால்தானே வந்தது?

சக்கரவியூகத்தில் சிக்கிக் கொண்ட தர்மன் ஓலமிட்டு அழுது தன்னைக் காப்பாற்றக் கூப்பாடு போட்டான். சக்கரவியூகத்தை உடைத்துக் காப்பாற்றப் போய் அபிமன்யூ மாட்டிக் கொண்டான். தர்மனோ, பீமனோ, கிருஷ்ணனோ, எவனும் காப்பாற்றவில்லை அவனை. போரில் கொல்லப்பட்டான், அபிமன்யூ. அவனைக் கொன்ற பழியை அர்ச்சுனன் தர்மன் மீதல்லவா சுமத்தினான்?

உங்களைக் காப்பாற்றத்தான் தெரியும், என்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதே என்கிறான் அபிமன்யு. எங்களைக் காப்பாற்று, நாங்கள் உன்னைக் காப்பாற்றுகிறோம் என்று தர்மன் சொன்னதால்தானே அபிமன்யூ முயற்சித்தான். காப்பாற்றப்பட்ட தர்மன் அபிமன்யூவைக் காப்பாற்றினானா? வாக்கைக் காப்பாற்ற வக்கில்லாதவன்தானே தர்மன்?

வியூகப் பாதையை சைத்ரதன் அடைத்து விட்டான். என்னால் காப்பாற்ற முடியவில்லை என்றானே தர்மன். இந்தப் பெட்டைப் புலம்பல் சரிதானா? கையாலாகாதவன் கூறும் நொண்டிச் சாக்கல்லவா?

துரோணனை நிலைகுலையச் செய்து சாகடிக்கத் திட்டம் போட்டு அவன் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் எனப் பொய் கூறியவன்தானே தருமன்?

அவன் பெரிய தர்மவானாம். அதனால் பெற்ற சலுகையின்படி அவனது தேர் தரையில் படாமல் ஓடுமாம். தரையிலிருந்து நான்கு அங்குல உயரத்தில்தான் தேர் உருளுமாம். பொய் சொன்னதும் இந்தச் சலுகை பிடுங்கிக் கொள்ளப்பட்டுவிட்டதே. கைமேல் பலன்.

ஆசாபாசங்களுக்கு ஆள்பட்டுவிட்ட சாதாரண ஆள்தான். அசாதாரணமான பிரகிருதி அல்ல என்பது எண்பிக்கப்பட்டு விட்டதே!

போரின் கடைசி நாளன்று... போரில் பலத்த காயம் பெற்று அதனைத் தேற்றிக் கொள்ள குளத்து நீரில் துரியோதனன் அமிழ்ந்திருந்த போது அவனைப் போரிட அழைத்தவன் தர்மன். மனதளவில் தளர்ச்சியுற்றிருந்த அவன், “எதற்காக நான் போரிட வேண்டும்? அனைவரையும் இழந்துவிட்டேன். சிறந்த மனிதர்களும் வீரர்களும் மறைந்துவிட்ட நிலையில் விதவைபோல ஆகிவிட்டது நாடு. இது எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக்கொள்.’’ என்றான். தர்மச் சக்ரவர்த்தி எனப்படும் தர்மன் அதனை ஏற்காமல் பீமனை உசுப்பிச் சண்டை போடச் செய்து துரியோதனனைச் சாகடித்துவிட்டான்.

அந்தச் சண்டையாவது தர்மப்படி நடந்ததா? துரியோதனனின் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பீமன் தாக்கிக் கொன்றானே. நேர்மையான போர் முறையா? “அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ’’ என்று வில்லிபுத்தூரான் பாடி சூதுப்போர் நாயகனான கிருஷ்ணனைச் சாடுகிறான்.

சூதாடி, பொய்யன் எனப் பெயர் வாங்கிய காரணத்தால் நரகத்தில் தள்ளப்பட்ட கீழானவன்தானே தர்மன்?

“பூமியில் கணக்கிறந்த பாவங்களைச் செய்தாலும் போர்முகத்தில் உறுதியாய்ச் சமமான வீரனுடன் சண்டையிட்டு இறப்பானேயானால் அவனுக்குச் சொர்க்கம் உரியது’’ என்பான் நாரதன். (மகாபாரத வசன காவியம் 4ஆம் பாகம், பக்கம் 518) அதன்படி சொர்க்கத்தில் இடம் பெற்றானே துரியோதனன். தர்மனா? துரியோதனனா? யாரை விரும்புவீர்கள்?

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.7.!8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக