கிருஷ்ணன்
கருப்பன். பாண்டவர்களுக்கு அனுசரனையாக இருந்தவன். அவர்களுக்காகவே அனைத்து வகை சூதுகளையும் செய்தவன். செய்ய வைத்தவன்.
போரிட மறுத்த அர்ச்சுனனைப் போரிடத் தூண்டியவன். அதர்மங்களைத் தர்மம் போலப் பேசியவன். அந்தப் போரை நடத்தியவனே அவன்தான்.
வனவாசம் முடித்த பாண்டவர்கள் சார்பாகத் தூது போனான். தூது எனும் பெயரிலான சூது வெற்றி பெறவில்லை. இவனே போரை அறிவித்து விட்டான்.
இவனுக்கு ஏது அதிகாரம்? யார் தந்தது அதிகாரம்? இவனே வரித்துக் கொண்டது. அகங்காரம்.
சத்திரிய ஜாதி தர்மம் பேசி போரிடத் தூண்டியபோது அவன் உளறியவை கீதைப் பாடல்கள். இடைச்செருகல், பாரதக் கதையில்.
நான்கு வர்ணங்களாக மக்களைப் பாகுபாடு செய்ததாகவும் பீற்றிக் கொண்டவன் இவன். அந்தந்த ஜாதிக்கும் தனித்தனிக் கடமைகள். அவற்றை மட்டுமே செய்ய வேண்டும். அடுத்த ஜாதியானின் கடமைகளைச் செய்யக் கூடாது என்றவன்.
போரை தன்னிச்சையாக அறிவித்தவன் தூதுபோன கிருஷ்ணன். சூதுத் திட்டம் வகுக்கிறான். முதலில் கர்ணனைப் பார்க்கிறான். குந்திக்கு சூரியன் மூலமாகப் பிறந்தவன் கர்ணன் என்பதைக் கூறுகிறான்.
துரியோதனனை விட்டு விலகத் தூண்டினான். கர்ணன் எவ்வித சபலமும் இன்றி மறுத்துவிட்டான்.
இந்தக் கிருஷ்ணனின் 18 ஆயிரம் மனைவியரில் ஒருத்தி ராதை. அவள் பெயரைச் சேர்த்தே இவனை ராதாகிருஷ்ணன் என்பார்கள். ராதை கிருஷ்ணனின் அத்தை. அத்தையுடன் கள்ள உறவு கொண்டவன். மணமாகாமலே குடும்பம் நடத்திய குணக்கேடன்.
போரில் வெற்றி பெறக் களப்பலி கொடுங்கள். போர்த் தெய்வம் காளிக்கு காணிக்கை கொடுங்கள். அவளின் வேட்கையைத் தீர்த்து வையுங்கள் என்றவன் கிருஷ்ணன்.
நரபலி தந்தால்தான் யுத்த தெய்வ கடாட்சம் கிடைக்கும் என்றால் தெய்வங்கள் பண்டமாற்று வணிகர்களா?
நரபலிக்குத் தகுதி 32 லட்சணங்களும் பொருந்தியவனாக இருக்க வேண்டுமாம். அப்படி இருந்தவன் கிருஷ்ணனே. ஏன் அவனைப் பலி கொடுக்கவில்லை? விடை இல்லை.
அடுத்து அமைந்தவன் அர்ச்சுனன். அவன் போரிட வேண்டியவன். பலியிட முடியாது.
மற்றொருவன் அர்ச்சுனனின் மகன். அரவான். உலுப்பி என்பவளோடு அர்ச்சுனன் கொண்டிருந்த தொடர்பின் பலன். பலியாகச் சம்மதித்தான்.
அவனுக்கொரு ஆசை. சாவதற்குள் பெண் போகம் அனுபவிக்கும் ஆசை. ஒரு நாள் புணர்ந்து, மறு நாள் விதவையாக எவள் வருவாள்? கடவுள் கிருஷ்ணனே பெண்வேடம் போட்டான்.
இது ஒன்றும் புதிதல்ல.
பத்மாசுரனிடமிருந்து பரமசிவனைக் காப்பாற்ற மோகினி வேஷம் போட்டு அரிகரபுத்திரனைப் (அய்யப்பன்) பெற்றவன்.
நாரதனிடம் புணர்ந்து 60 குழந்தைகளைப் பெற்று அவற்றின் பெயரால் 60 ஆண்டு-களுக்குப் பெயர் வைக்க உதவியிருக்கிறான்.
அரவானின் மனைவி மோகினியாக. இரவு முழுவதும் புணர்ந்து சுகம் பெற்றான். அரவானுக்குச் சுகம் தந்தாள். விடிந்ததும் விதவையானாள். அர்ச்சுனனின் மகன் அரவான் பிணமானான். கடவுள் கிருஷ்ணனின் சொல் கேட்டதால்...
மற்றொரு மகன் அபிமன்யு கொல்லப்-பட்டதும் கிருஷ்ணனின் யோசனையைக் கேட்டதால்.
அதுபோலவே கெடு யோசனையைக் கேட்டதால் பீமனும் தன்மகன் கடோத்கஜனை இழந்தான்.
அறிந்தே கடவுள் கிருஷ்ணன் நடத்திய கொலைகள்.
அவன் சொல்படி தர்மன் சொன்ன பொய்யால் துரோணன் கொல்லப்பட்டான். எத்தனை கொலைகள். எல்லாவற்றிற்கும் கிருஷ்ணனே காரணி!
கர்ணன் எய்த நாகாஸ்திரம் அர்ச்சுனனைத் தாக்க முடியாதவாறு தேரோட்டி கிருஷ்ணன் தேரைப் பள்ளத்தில் இறுத்தி விட்டான். அர்ச்சுனன் தப்பிவிட்டான்.
பள்ளத்தில் சிக்கிய தன் தேரைத் தூக்க கர்ணன் முயற்சித்தபோது அவன் மீது அம்பெய்தியவன் அர்ச்சுனன். யுத்த தர்மம் மீறி அவன் செயல்படத் தூண்டியவன் கடவுள் கிருஷ்ணன். கொலைக்குத் தூண்டுகோல். பெருங்குற்றவாளி.
கிருஷ்ணன் வேண்டுமென்றே கீழே போட்ட மோதிரத்தை எடுத்துக் கொடுத்த அசுவத்தா-மனிடம் சில சைகைகள் காட்டினான். பார்த்தவர்கள் அசுவத்தாமனுக்கும் கிருஷ்ணனுக்கும் “ஏதோ’’ கமுக்கத் திட்டம் என்று நம்பச் செய்து அசுவத்தாமன் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்தான். இந்த மித்ரபேதம் கடவுள் எனப்படுபவனுக்குத் தகுதியானதா?
குந்தியைக் காட்டித் தாய்ப் பாசத்தைத் தூண்டி வரம் வாங்கி அவன் சாவுக்குக் காரணியானான். கடவுள் செய்யத்தக்க செயலா இது?
கதாயுதப் போரில் இடுப்புக்குக் கீழ் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது முறை. பீமனைத் தூண்டி தொடைகளுக் கிடையே அடிக்கச் செய்து துரியோதனனைக் கொன்றவன் கிருஷ்ணன். யுத்த தர்மம் மீறுவதும் ஜாதி தர்மம் காப்பதும் கடவுள் செய்கிற காரியமா?
சாவதற்கு முன்பு கூட சதி! பதவி வேண்டாம் என்றான் தர்மன். வற்புறுத்தி முடிசூடச் செய்தவன் கிருஷ்ணன்.
பீஷ்மரைக் கொல்வதற்காக சிகண்டியைப் பயன்படுத்தினான் கிருஷ்ணன். பெண்ணைத் தாக்க ஆயுதத்தைத் தூக்க பீஷ்மர் தயாராக இல்லாத சந்தர்ப்பத்தில் அவனைக் கொல்லச் செய்தவன் கிருஷ்ணன்.
சக்கரவியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யூவைக் காப்பாற்ற எதுவும் செய்யாமல் அர்ச்சுனன் மகன் கொல்லப்படக் காரணி கிருஷ்ணன். தன் தங்கை மகனையே காப்பாற்றாத கயவன் கிருஷ்ணன்.
பீமனின் மகன் கடோத்கஜன் சாவுக்கும் காரணி அவனே.
துரோணனை வெல்ல முடியாது. அவனது தந்தைப் பாசம் பலரும் அறிந்ததே. அவன் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக தர்மனைப் பொய் பேசச் செய்து துரோணன் நிலை-குலைந்தபோது கொல்லப்படக் காரணி கிருஷ்ணனே.
பாண்டவர்கள் பேசிய தர்மம் அவர்கள் சார்பானது. நடுநிலையானதல்ல. அதையே பேசியவன் கிருஷ்ணன்.
தேரை விட்டுக் கீழே இறங்குமாறு கிருஷ்ணன் கட்டளையிட்டான். கடவுளல்லவா! அர்ச்சுனன் பணிந்தான். இறங்கினான். பிறகு கிருஷ்ணனும் இறங்கினான்.
அந்தக் கணத்தில் தேர் எரிந்தது. எண்ணெயோ தீயோ இல்லாமல் தேர் எரிந்து சாம்பலானது.
எப்படி இப்படி எனக் கேட்டான் அர்ச்சுனன்.
இந்தத் தேரில் சாரதியாக இருந்து ஏகப்பட்ட அயோக்கியத் தனங்களை நான் செய்தேன். அதனால் எரிந்தது என்றான் கிருஷ்ணன்.
இதுவரை தேருக்கு ஒன்றும் ஆகவில்லையே எப்படி? எனக் கேட்டான் அர்ச்சுனன்.
நான் தேரில் இருந்ததால் தீப்பிடிக்கவில்லை. நான் இறங்கியதும் எரிந்துவிட்டது.
அதனால்தான் உன்னை முதலில் இறங்கச் சொன்னேன். நான் பின்னர் இறங்கினேன். இல்லாவிட்டால் நீயும் தேருடன் சேர்ந்தே எரிந்திருப்பாய் என்றான் கிருஷ்ணன்.
அவனே ஒப்புக் கொண்டபடி எங்கும் காணமுடியாத கயவன். கொடூரன். அயோக்கியன். தன் முனைப்புக்காக யாருக்கும் எதையும் செய்யத் தயங்காதவன் கிருஷ்ணன்.
(நிறைவு)
- சு. அறிவுக்கரசு
- உண்மை இதழ், 16-31.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக