பக்கங்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2018

பாரதப் பாத்திரங்கள் ( 10 )

கர்ணன்


திரவுபதையின் சுயம்வரம். தற்போதைய பெண் பார்க்கும் படலம். பல இளைஞர்கள் வருவர். திறமையைக் காண்பிப்பர். விரும்பியவனுக்குப் பெண் மாலை இடுவாள்.

பார்ப்பனன் வேடத்தில் அர்ச்சுனன் அமர்ந்திருந்தான். அவனுக்கிணையான வீரனான கர்ணனும் அங்கே. அக்கால வழக்கப்படி வில்லில் நாணேற்றுவது போட்டி.

கர்ணன் எழுந்தான். வில்லில் நாணேற்றி விட்டான். போட்டியில் வென்றுவிட்டான். மணக்க வேண்டிய திரவுபதை மறுத்து விட்டாள். “தேரோட்டியின் மகனை மணக்க மாட்டேன்’’ எனக் கூறிவிட்டாள்.

கலந்து கொண்டோர் யாவராயினும் ஒன்றே.  யார் திறமையானவன் என்பதற்குத்தான் போட்டி. திரவுபதை ஏற்கவில்லை. சபையும் சும்மாதான் இருந்தது.

சபையோரையும் திரவுபதையையும் ஏளனமாகப் பார்த்துவிட்டு, தன் இடத்தில் அமர்ந்துகொண்டான்.

பின்னர் அர்ச்சுனன் திறமை வெளிப்பட்டது. அவனுக்கு மாலையிட்டாள் திரவுபதை.
அர்ச்சுனன் பார்ப்பன வேடத்தில் இருந்தான். அரசன் மகளுக்கு அட்டியில்லை. ஜாதி அடுக்கில் இவளுக்கு மேல்தட்டில் இடமாயிற்றே.

ஜாதி காரணமாகக் கர்ணன் ஒதுக்கப்படுவது இது புதிதல்ல. அவனுக்குப் பழகிப் போனது. அதைப் பற்றி அவன் கவலைப்பட்டது கிடையாது.

அவனை வளர்த்தவன் அதிரதன்_ தேரோட்டி. வளர்த்த தாய் ராதை. கிருஷ்ணனின் அத்தை. கிருஷ்ணனின் பல துணைவியரில் ஒருத்தி. ராதாகிருஷ்ணன்தானே! மணமாகாத உறவு. மணம் புரிந்துகொள்ள முடியாத உறவு. இருந்தாலும் கர்ணன் கேவலப்படுத்தப்பட்டான்.

கர்ணனின் இயற்கைப் பெற்றோர் யார்? சூரியனும் குந்தியும். திருமணமாகாத குந்தி சூரியனுடன் கூடிப் பெற்றவள். அசிங்கம். அதனை உணர்ந்த குந்தி ஒரு பெட்டியில் பெற்ற குழந்தையைக் கிடத்தி கங்கை நதியின் ஓடும் நீரில் விட்டுவிட்டாள். அதிரதனும் ராதையும் வளர்த்தனர்.
கர்ணனுக்கு அவர்கள்தான் தாயும் தந்தையும். திரவுபதையின் சுயம்வரத்தில்கூட அதிரதனைக் கண்டு, “தந்தையே’’ என்று பாராட்டிப் பணிந்தவன். அதிரதன் சூதர் குலம். கர்ணன் மனைவியும் அதே குலம்.

பரசுராமனிடம் வில்வித்தை கற்றவன். ஜாதியின் காரணமாக, தான் பெற்ற வித்தை பலனளிக்காமல் போகக் கடவது எனும் சாபமிடப்பட்டவன்.

ஜாதியை மறைத்தவனல்லன். வாய்ப்புகளை ஜாதி அவனுக்கு மறுத்தது. ஆகவே பொய் சொல்லி பரசுராமனிடம் மாணவனானவன்.

வேடனான ஏகலைவனுக்கு வித்தை சொல்லித்தர மறுத்த துரோணன் ஜாதி மாணவர்களாக நூற்றைந்து பேர்களுக்குப் பயிற்சிஅளித்து போட்டி ஒன்றை நடத்தினான். முன்னிலையில் அர்ச்சுனன் பாராட்டு பெற்றான். அப்போது ஒர் அறைகூவல். கூவியவன் கர்ணன்.
மார்பில் கவசம். காதுகளில் குண்டலங்கள். அழகிய முகம். தோற்றம் பொலிவு. யாரென அறியாத நிலை என்றாலும் துரோணன் அனுமதிக்கிறான்.

அர்ச்சுனன் ஆவேசப்பட்டான். போட்டியாளனனைக் கண்டு பயப்படுபவன் எப்படி திறமையானவன்? கற்ற வித்தையை அர்ச்சுனன் காட்டினான். அவை அத்தனையையும் கர்ணனும் செய்து காட்டினான். “சபைக்கு அழைக்கப்படாமல் வந்தோரும், கேட்கப்படாமல் பேசுவோரும் இகழப்படுவார்கள்’’ என்கிறான் அர்ச்சுனன்.

“பல்குணா! இந்தச் சபை எல்லார்க்கும் பொது. உனக்கே உரிமையானதல்ல. ராஜதர்மமும் பலத்தைப் பின் தொடர்ந்தே செல்கிறது. வெறும் பேச்சில் என்ன இருக்கிறது? பாணங்களைக் கொண்டு பேசு’’ என்கிறான் கர்ணன்.

இவ்வாறு கர்ணன் அர்ச்சுனனை யுத்தத்திற்கு அழைத்ததும் சனக் கூட்டம் குதூகலங்கொண்டு இரண்டு கட்சியாய்ப் பிரிந்தது. பெண்களிலும்கூட இரண்டு கட்சிகள் உண்டாயிற்று. உலகம் எப்போதுமே இம்மாதிரிதான்.’’ (ராஜாஜி _ மகாபாரதம் -_ பக்கம் 49)

அப்போது ஜாதிக்குரல். கிருபாச்சாரி எழுந்து பேசுகிறார்: “அர்ச்சுனனோ பாண்டுவின் மகன். முதலில் நீ எந்த ராஜ்யத்தின் அதிபதி என்று சொல். உன் குலம் யாது? பெருமையற்ற பரம்பரையில் வந்தவர்களோடு அரசகுமாரர்கள் சரிசமமாக நின்று யுத்தம் செய்வதில்லை. முதலில் உன்னை அறிமுகம் செய்துகொள்!’’ (பக்.49)

கர்ணனுக்குச் சங்கடம். துரியோதனன் எழுந்து பதில் கூறுகிறான். கர்ணனைப் பற்றி எதுவுமே அறியாதவன். என்றாலும் கூறினான்.



“கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும்

வண்மை கை/ உற்றவர்க்கும் வீரரென்று

உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக் / கொற்றவர்க்கும்

உண்மையான கோதின் ஞான சரிதராம்

மற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால்”

(வில்லிபுத்தூரார் பாரதம் - ஆதிபர்வம் - 342)

“படித்தோர், கன்னியர், ஈகையர், செல்வமிகு மன்னர், வீரர், அறிஞர் முதலியோர்க்கு ஜாதி ஒன்றுதான். உயர்வு தாழ்வு கிடையாது’’ என்று துரியோதனன் கூறுகிறான். அர்ச்சுனன் தன்னை ஒப்பாரும், மிக்காரும் யாரும் இல்லா வீரன் போல அகந்தை வெளியிடப் பேசுவது துரியோதனுக்குப் பிடிக்கவில்லை போலும்! 

பாண்டவர் பக்கம் இருக்கும் பீஷ்மன், துரோணன், கிருபன் ஆகியோர் ஜாதிப் பெருமை, குலப் பெருமை பேசுவது கண்டு துரியோதனன் அசூயைப்பட்டுக் கர்ணனின் பக்கம் பேசினானோ? வில்லிபுத்தூரார் கேட்கிறார் _ “தூணிடத்தில் பிறந்த ஹரியும் (நரசிம்ம அவதாரம்), அழகிய பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் மோகித்து பரத்வாஜன் சிந்திய விந்து வைக்கப்பட்ட குவளை (துரோண்)யில் பிறந்த துரோணனும் அகத்தியனும் முருகனும் பெருமைக்குரிய பிறப்பில் வந்தவர்களா?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார். (பாடல் 343)

கடவுள், விஷ்ணு, முருகன், கழுத்திலேயே கத்தி வைத்து விட்டார். பார்ப்பனச் சிரேஷ்டர்களான துரோணன் (துரியோதனனின் குரு) அகத்தியர் ஆகியோரின் அடிமடியில் கை வைத்துவிட்டார் தமிழில் பாரதம் பாடிய வில்லிபுத்தூர் ஆழ்வார். சங்கடம்தான். பாரதம் எழுதிய சோ.ராமசாமி மற்றொன்றையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். “பாண்டவர்களாகிய உங்களுடைய பிறப்பு எவ்வகைப்பட்டது என்ற எல்லோருக்கும் தெரியும்’’ (மகாபாரதம். ஆதி. பக்.107)

திருடியவனே, “திருடன், திருடன்’’ என்று கத்திக் கொண்டு ஓடுவதைப் போல, இழிந்த பிறப்பினரே கர்ணன் பிறப்பின் இழிவு பற்றிப் பேசுவது கொடுமை அல்லவா?

அதனை விளக்கியவன் துரியோதனன்.

கிருபனின் இரண்டாம் குற்றச்சாட்டு, கர்ணன் எந்த நாட்டு அரசன்? “சூதன் மதலை தன்னை அங்க ராசன் ஆக்கினான்’’ (பாடல் 344)

பின் என்ன தடை? அர்ச்சுனனோடு கர்ணன் மோதினானா? போட்டி தொடர்ந்ததா?
இல்லை.

அந்த நேரத்தில் அதிரதன் அங்கே வருகிறான். கர்ணன் ஓடோடிப் போய்த் தந்தையைப் பணிகிறான். பார்த்த பீமன், கர்ணனைப் பார்த்து, “வில்லைக் கீழே போடு _ குதிரைச் சவுக்கை எடுத்துக் கொள். குதிரை ஓட்டு’’ என்கிறான்.

உடலை வளர்த்தான். அறிவை வளர்த்தானில்லை. கர்ணனும் அர்ச்சுனனும் கதைப்படி பெருவீரர்கள். கர்ணனோ நிகரற்ற கொடைத்தன்மை கொண்டவன். அவனுடைய கொடைத்தன்மையால்தான் அவனது இறப்பே நிகழ்ந்தது. அவனது கொடைத்தன்மையால் அவன் பெயர் நிலைத்து விளங்குகிறது-.

அர்ச்சுனனுக்கு சூது வழியும் பித்தலாட்டங்களும் வெற்றி தேடித் தந்தன. வெற்றியா அது? அவமானகரமான செய்கை அல்லவா? 

வீழாத வீரன் _ கர்ணன் வீழ்ந்தான். கொடைத் தன்மையால் வீழ்ந்தான். கிருஷ்ணனின் ஆசை காட்டலுக்கு மயங்காதவன், குந்தி வரம் கேட்டபோதும், இந்திரன் பிச்சை கேட்டபோதும், கொடுக்கக் கூடாதவற்றைக் கொடுத்து கொடை மடம் பட்டதால்... வீழ்ந்தான்.

(தொடரும்)

- சு.அறிவுக்கரசு

-உண்மை இதழ், 1-15.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக