பக்கங்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2018

பாரத பாத்திரங்கள் [5]

- சு.அறிவுக்கரசு

பீஷ்மன்

 


பலராமனின்/கிருஷ்ணனின் தங்கை சுபத்திரையை துரியோதனுக்கு மணம் முடிப்பதாக நிச்சயம் செய்திருந்த நிலையில் அவள் அருச்சுனனோடு ஓடிப் போகிறாள். அதனை அறிந்துகொண்ட பீஷ்மன் சுபத்திரையின் ஜாதியாரான யாதவர்கள் மீது போர் தொடுத்து மானம் காத்திடத் தூண்டி விட்டான். துரியோதனன் மறுத்துவிட்டான். இது அரசு சார்ந்த விவகாரமில்லையாதலால் போர் கூடாது என்று சொல்லிவிட்டான். அதன் பிறகுதானே தன் யோசனையை மாற்றிக் கொண்டான் பீஷ்மன். துரியோதனனைத் துஷ்டன் என்பவர்கள் பீஷ்மனைப் பிதாமகன் என்கிறார்களே, சரியா?

சத்திரிய ஜாதியின் தர்மப்படி போரிடக் கூறினான் பீஷ்மன். மாற்றாரின் கருத்தை, அதிலுள்ள நியாயத்தை மதிக்கத் தேவையில்லை எனும் வெறும் மறத்தனம்தானே சத்திரிய தர்மம். வன்முறைதானே அந்தத் தர்மம்? அதனை வலியுறுத்தியவன்தானே பீஷ்மன்?

வன்முறையால் சுபத்திரையை மீட்டுத் துரியோதன் மணம் முடித்தாலும் சுபத்திரையின் மனதில் இடம் பிடிக்க முடியுமா? இதைக்கூட யோசிக்காமல் போர் தொடுக்கச் சொன்னவன் பிதாமகனா? பேதை மகன் அல்லவா? கொண்டாடப்படக் கூடியவனல்லன். கண்டனம் செய்யப்பட வேண்டியவன்.

குருசேத்திரப் போரில் கவுரவர்களின் படைக்குத் தலைமை தாங்கியவன் பீஷ்மன். என்றாலும் எதிர்தரப்பினரான பாண்டவர்களைக் கொல்ல மனமில்லாதவன். விரும்பாதவன் விலகிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, நம்பவைத்துக் கழுத்தை அறுக்கும் நயவஞ்சகம் செய்யக் கூடாது.

பீஷ்மன் படைத் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிட வேண்டுமென்று துரியோதனன் நினைக்கிறான். கர்ணன் அதனைச் சொல்லிவிட்டான். வேறு வழியின்றி துரியோதனன் பீஷ்மனை விலகச் சொல்கிறான். ஏற்று, விலகத் தயாரில்லை என்கிறான் பீஷ்மன். இப்படிச் செய்யலாமா?

பீஷ்மனை எதிர்த்துப் போர்புரிய சிகண்டியை நிறுத்துகிறான் அர்ச்சுனன். சிகண்டி பெண். எதிர்க்க மாட்டான் பீஷ்மன் என்கிற எண்ணம். ஆனால் சிகண்டியின் கையால்தான் பீஷ்மன் சாவான் என்ற நிலை. சிவன் அளித்த வரமாம்.

சிகண்டி யார்? பாஞ்சால மன்னன் துருபதன் என்பானின் மகள். மகனை எதிர்பார்த்திருந்த மன்னன் மகள் பிறக்க அதிர்ந்து போய்விட்டான். குறிபார்த்த குறத்தி, மகள் மகனாவான் என்கிறாள். முடியுமா? துருபதன் நம்பினான். ஆணாகவே வளர்த்தான். சகல வீர விளையாட்டுகளையும் கற்பித்து வளர்த்தான்.

பீஷ்மனால் துராக்கிரமமாகக் கடத்தி வரப்பட்ட காசியின் மன்னனின் மகள்கள் மூவரில் மூத்தவளான அம்பையே அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்திருக்கிறாள். பீஷ்மனைக் கொல்லக் காத்திருக்கிறாள்.

சிகண்டிக்குத் திருமணம் நடந்தது. முதல் இரவில் சிகண்டி ஆணல்ல, பெண் என்பது தெரிந்துவிட்டது. விஷயத்தைத் தெரிந்து கொண்ட சிகண்டியின் மாமனார் பாஞ்சால நாட்டின் மீது படையெடுத்தார். முற்றுகையிட்டார். அவமானம் தாங்காமல் சிகண்டி காட்டுக்குப் போய் தற்கொலை முயற்சி செய்தாள். அதனைப் பார்த்த காட்டுவாசி தடுத்து, தற்கொலைக்கான காரணம் கேட்கிறான். சிகண்டி சொன்னாள். காட்டுவாசி பரிதாபப்பட்டான். ஒரே ஒரு நாள் தனது ஆண்மைச் சக்தியை சிகண்டிக்கு மாற்றித் தருகிறேன் என முன் வந்தான். மாற்றித் தந்தான்.

மறுநாள். முந்தைய இரவு முழுவதும் சிகண்டியின் புணர்ச்சிக்கும் நுணுக்கத்திற்கும் கிரங்கிப் போய் கிடந்தவள் முகமலர்ச்சியைக் கண்ட சிகண்டியின் மாமனார், மருமகனை மறுவீட்டிற்கு அழைக்கிறான். போரும் முற்றுகையும் முடிந்துபோனது. பேசியபடி காட்டு மனிதனிடம் ஆண்மையைத் திருப்பித் தர சிகண்டி காட்டுக்குப் போனான்.

சிகண்டிக்கு ஆண்மையைத் தந்துதவிய செய்தி காட்டுவாசியின் குலத் தலைவனுக்குத் தெரிந்துவிட்டது. கண்டித்தான். கொடுத்தது கொடுத்ததுதான். திரும்பப் பெற முடியாது எனத் தலைவன் சொன்னான்.

சிகண்டிக்கு மகிழ்ச்சியே. இருக்காதா, பின்னே! எவனுக்கும் எதுவும் நடக்கட்டும். எக்கேடோ கெட்டுப் போகட்டும். என் கதையை மட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன். இதுதானே சத்திரிய தர்மம். தன்னை வைத்துத் தானே தர்மஞாயம் பேசுகிறார்கள்? சிகண்டி நிரந்தர ஆண் இப்போது.

இது தெரியாத பீஷ்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன் எல்லோருமே சிகண்டியைப் பெண் என்கிறார்கள். எனவே, சிகண்டிக்குப் பின்னால் இருந்துகொண்டு அர்ச்சுனன் பீஷ்மனைக் கொல்லலாம் என்கிறான் கிருஷ்ணன்.

சிகண்டி ஆணாகிவிட்டான் என்பதை அறியாத கிருஷ்ணன் கடவுளாம்.

சண்டையில் சிகண்டியைப் பெண் எனக் கருதியதால் பீஷ்மன் வில்லை வளைக்கவில்லை. சிகண்டியோ வில்லை நாணேற்றி அம்பைத் தொடுத்து பீஷ்மனை வீழ்த்தினான்.

அம்பைக்குச் செய்த கொடுமைக்குத் தரவேண்டிய விலையை பீஷ்மன் தந்துவிட்டானா? இல்லை. விலையைக் கொடுக்கச் செய்துவிட்டாள் அம்பை. பிதாமகனாக இருந்தாலும் பிரம்மச்சாரியாக இருந்தாலும் ஒரு பெண்ணுக்குக் கொடுமை செய்த பீஷ்மன் எப்பேர்பட்ட கேவலச் சாவை அடைந்தான்?

அரை மனதோடுதானே பீஷ்மன் கவுரவர்களின் படைத் தலைவனாக இருந்தான்? பாண்டவரைக் கொன்றிட மனமில்லாமல், ஒப்புக்குத் தலைவனாகத் தானே இருந்தான்?

பழி செய்வது. பழி வாங்குவது. பழிக்குப் பழி தீர்ப்பது. இதுதான் பாரதக் கதை. அதில் பீஷ்மனின் பங்கு என்ன? புத்திமதி கூறுவதா? இல்லையே. நீதிபோதனை செய்ததா? இல்லையே. மாறாக, தூண்டிவிட்டதுதானே. அநீதிக்கு ஆதரவு தந்ததுதானே. அநீதியைச் செய்யச் செய்ததுதானே. பிதாமகனின் வேலை இதுவா? வெட்கம்.

                                                                                                (தொடரும்..)

- உண்மை இதழ், 16-30.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக