பக்கங்கள்

புதன், 30 மே, 2018

வேதங்கள் - சமஸ்கிருத கலாச்சாரங்களை பள்ளியில் புகட்டிட உஜ்ஜயினியில் கூடி குருகுல முறையைக் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். திட்டம்

இவற்றை முறியடிக்க ஒரே திட்டம் மோடி ஆட்சியை விரட்டுவதே!

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைசென்னை, மே 18-  சிறுவர்களுக்கு வேதம், சமஸ்கிரு கலாச்சாரங்களைப் பள்ளிகளில் புகட்டிட, ஆர்.எஸ்.எஸ். உஜ்ஜயினியில் கூடி முடிவெடுத்துள்ளது. இதுபோன்ற ஆபத்துகளை தடுத்திட, மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசை விரட்டுவதே ஒரே திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம்’’

10.5.2018 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு சொற்பொழிவு-3 சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார் அவரது உரை வருமாறு:

தொடர் ஆய்வு சொற்பொழிவு இன்றைக்கு நிகழ்த்தப்படக் கூடிய வாய்ப்பு கிடைத்தமைக்காக முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்றாடம் போராட்டங்களாகவே வாழ்க்கையைக் கழிக்கக் கூடிய அளவிற்கு...

இடையில், காவிரி மேலாண்மை வாரியப் போராட்டம், நீட் போராட்டம் இதுபோன்று அன்றாடம் போராட்டங்களாகவே வாழ்க்கையைக் கழிக்கக் கூடிய அளவிற்குத் தமிழகம் இன்றைக்கு இருக்கிறது. இதை உணர்த்தி, எனக்கு முன் உரையாற்றிய கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களே,

கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, கழகத்தின் ஏனைய பொறுப்பாளர்களே, பல்வேறு துறை களில் இருந்து வந்திருக்கக்கூடிய, இயக்கங்களுக்கும், கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே, தோழியர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமாயணம் நடக்காத கதை என்றாலும்....

இராமாயணம் - இராமன் என்பது உருவாக்கப்பட்டதே - இராமராஜ்ஜியத் தத்துவத்தைக் காப்பற்றுவதற்காகவே. இராமராஜ்ஜியம் என்றாலே, மனுதர்ம இராஜ்ஜியம் என்பதுதான் அதற்கு மறுபெயர். ஜாதியைக் காப்பாற்றிட, உருவாக்கப்பட்ட வருணாசிரம தருமத்தில் உயர்ந்த இடத்தில் பார்ப்பனர்களை வைத்து, மிகவும் தாழ்ந்த, தாழ்த்தப்பட்ட இடத்தில், ஒடுக்கப்பட்ட மக்களாகிய சூத்திரர்களையும், பஞ்சமர்களையும், மற்றவர்களையும் வைக்கவேண்டும். இவர்களுக்கெல்லாம் கீழே பெண்களை வைக்கவேண்டும். அதற்கு வேறு யாரையும் தேடவேண்டாம்; இராமாயணத்து சீதை ஒருவரே போதும். அந்த அளவிற்குப் பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

இராமாயணம் நடந்த கதையா? என்றெல்லாம் ஆராய வேண்டிய அவசியமில்லை. நடக்காத கதை என்றாலும், அந்தக் கற்பனைக்கு அவர்கள் ஏன் தள்ளப்பட்டார்கள் என்றால், அதன்மூலமாக, இழந்து போன பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை, பக்தியைக் கொண்டு உள்ளே செலுத்தி, எப்படியாவது மக்களை மயக்கப்படுத்தி, ஜாதியைக் காட்டி, வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றவேண்டும்.

உலகம் உள்ளளவுக்கும் பார்ப்பான் பார்ப்பானாக இருக்க வேண்டும்; கீழ்ஜாதி மக்களாக இருக்கின்ற நாம், கீழ்ஜாதி மக்களாகவே இருக்கவேண்டும். இதுதான் அதனுடைய தத்துவம்.

கொசுவை ஒழித்தாலொழிய, மலேரியா காய்ச்சலை ஒழிக்க முடியாது

எனவேதான், இந்தத் தத்துவம் எங்கே இருந்து கிளம்பியிருக்கிறதோ, அதைப் பார்க்கவேண்டும். உலக மலேரியா நாள். கொசுவை ஒழித்தாலொழிய, மலேரியா காய்ச்சலை ஒழிக்க முடியாது என்று தெரிந்து, கொசு எங்கே உற்பத்தியாகிறதோ, அந்த நீர் நிலைகளுக்கு, அசுத்த தேக்கங்களுக்குச் சென்று கொசுவை அழிக்கவேண்டும்; இல்லையானால், அது பயன்படாது. கொசுவத்தி வாங்கி கொசுவை ஒழிப்பது என்பது இருக்கிறதே, கொசுவை நிரந்தரமாக ஒழிப்பதற்கு அது பயன்படாது; கொசுவத்தி வியாபாரிகள் பயன் பெறுவதற்குத்தான் அது பயன்படும்.

அதுபோன்று, நம்முடைய நாட்டில், இந்தப் பிரச்சினை என்று வரும்பொழுது, இராமராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று அவர்கள் உருவாக்கி, இன்றைக்கு வேகமாக வேகமாக தன்னுடைய எண்ணங்களை நடைமுறைப்படுத்திக் கொண் டிருக்கிறார்கள்.

சமஸ்கிருத மொழி, பழைய காலத்து வில்லும், வேலும் இருக்கக்கூடிய அந்தக் காலகட்டம் - இவை அத்தனையும் கொண்டுவரவேண்டும் என்று துடிக்கின்றனர்.

இன்னும் ஒரு சில நாள்களில், ‘விடுதலை’யில் ஒரு அதிர்ச் சியூட்டக்கூடிய ஒரு அறிக்கையை நீங்கள் பார்க்கலாம்.

குலக்கல்வித் திட்டத்தைப்பற்றி இங்கே கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அந்தக் குலக்கல்வித் திட்டத்தை மேலும் வெளிப்படையாகவே, ஆபத்தானதாக அகலப்படுத்தி ஓர் திட்டத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறது வெளிப் படையாகவே ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸினுடைய ஆங்கில ஏடான ‘‘ஆர்கனைசர்’’

அதைப்பற்றி யாராவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், ஆர்.எஸ்.எஸினுடைய ஆங்கில ஏடான ‘‘ஆர் கனைசர்’’ என்கிற வார ஏட்டில், இந்த வாரம் வந்திருக்கின்ற ஒரு கருத்து இருக்கிறதே, அது மிகமிக முக்கியமானது.

Rebranding Gurukuls

குருகுலத்தை மறுபடியும் புதுமைப்படுத்தி, புகுத்தி, அதையே கல்வித் திட்டமாக்கவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்

உஜ்ஜியினில் கூடி...

வேதங்கள், சமஸ்கிருதம், பழைய கலாச்சாரம் இவைகளை, சிறு பிள்ளைகளுக்கு 5 வயது, 6 வயது, 7 வயது என்று ஆரம்பிக்கும்பொழுதோ கற்றுக்கொடுக்கவேண்டும். இந்தக் கல்வியைத்தான் இனிமேல் உருவாக்கவேண்டும். வேறு கல்வி தேவையில்லை. இதனை ஏற்காத மக்களை ஏற்க வைக்கவேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் வீட் டிற்கு வீடு போகவேண்டும். அந்தத் திட்டத்தை உருவாக்க வேண்டும். இதை ஆரம்பிக்கின்ற பள்ளிகளுக்கு நிதி உதவி செய்யவேண்டும். அதற்குத் தகுந்தாற்போல், மத்திய கல்வி, நிதித்துறையை உருவாக்கவேண்டும். இந்தத் திட்டத்தையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உஜ்ஜ யியினில் கூடி, மிகத் தெளிவாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நீட் தேர்வுபோல, இன்னொரு மிகப்பெரிய ஆபத்து உருவாகியிருக்கிறது. நாம் எதற்காகத்தான் போராடவேண்டும் என்று தெரியவேண்டுமானால், ஒரே ஒரு வரியில், இத்தனைப் போராட்டங்களுக்கும் முடிவு கட்டுவதற்கு ஒரே வழி - மீண்டும் மோடி ஆட்சி இந்தியாவில் இருக்கக்கூடாது என்று முடிவு கட்டுவதுதான். அதேபோல, இங்கே பா.ஜ.க. விற்குக் காவடி தூக்குகிறவர்களோ அல்லது தோள் கொடுக் கிறவர்களோ அல்லது தலையாட்டுகிறவர்களோ அல்லது பொம்மலாட்டத்திற்கு இசைவான ஓர் ஆட்சியோ அதை ஆதரிக்கின்ற கட்சிகளோ தேவையில்லை - நேரிடையாக, மறைமுகமாக.

அதற்காகத்தான் நேரிடையாக தமிழ்நாட்டில், செலா வணியாகக் கூடாது என்பதற்காகத்தான், நடிகர்கள் மாய மான்களாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாயமான்கள் என்ன வேலைகளைச் செய்யும் என்பதை நாம் அடுத்தடுத்து அம்பலப்படுத்திக் கொண்டே இருப்போம்.

எனவேதான், மிகத் திட்டமிட்டு செய்கிறார்கள். எதை நேரிடையாகச் சாதிக்க முடியாதோ -  எப்படி மயக்க பிஸ்கெட் டுகளைக் கொடுத்து, பொருள்களைப் பறித்துக் கொண்டு போகிறார்களோ, அதுபோல, மயக்க பிஸ்கெட்டுகள் போன்று பல திட்டங்களை அவர்கள் செய்யவிருக்கிறார்கள்.

துரோகத்தைவிட மிகப்பெரிய ஆபத்தானது மனித வாழ்க்கையில் வேறு கிடையாது

இதற்கெல்லாம் அடிப்படை இராமாயணம். துரோகம் - அண்ணனைக் காட்டிக் கொடுப்பது, வஞ்சகம் இதுதான் மிக முக்கியம்.

நண்பர்களே, இந்த நாட்டில், இயக்கங்களில் துரோகம் மலிகிறது; நிறுவனங்களில் துரோகம் மலிகிறது; வீடுகளில் துரோகம் மலிகிறது. எனவே, துரோகத்தைவிட மிகப்பெரிய ஆபத்தானது மனித வாழ்க்கையில் வேறு கிடையாது. ஒருவன் நன்றி காட்டாமல் இருப்பதுகூட மன்னிக்கப்படலாம். ஆனால், துரோகம் மன்னிக்கப்பட முடியாதது.

அதனால்தான், நீண்ட காலத்திற்கு முன்பே அனுபவப் பழமொழி ஒன்று உண்டு. எதிரியை விட கொடியவன் யார்? என்றால், எதிரியைவிட கொடியவன் துரோகி.

வ.ரா. அவர்களின் ‘‘கோதைத் தீவு’’

இந்தக் கருத்தை நாம் சொல்வதைவிட, அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று கருதப்பட்ட ‘வ.ரா’ என்கிற வ.ராமசாமி அய்யங்கார் அவர்கள், அந்தக் காலத்திலேயே சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மிகவும் முற்போக்குச் சிந்தனை உள்ளவர் - விதிவிலக்குப் போன்று.

அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட, பெரியாரால் மதிக்கப்பட்ட, பெரியாரைத் தமிழ்நாட்டுப் பெரியார் என்று எழுதிய, வ.ரா. அவர்கள், ‘‘கோதைத் தீவு’’ என்ற ஒரு புதினத்தை எழுதியிருக்கிறார். அதில் பெண்ணுரிமையை மய்யப்படுத்தி இருக்கிறார்.

சீதைகள் எப்படி சிறை வைக்கப்பட்டார்; எப்படி அவர் களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டது. பெண்ணுரிமையைப் பறிப்பதற்கு இராமாயணத்தினுடைய அடிப்படை என்ன வாக இருக்கிறது என்பதையெல்லாம் அதில் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதை மய்யப்படுத்தி எழுதியுள் ளார்.

ஜாதி காப்பாற்றப்பட வேண்டுமாம்!

இராமாயணத்தில் இரண்டு விஷயம். ஜாதி காப்பாற்றப்ப வேண்டும்; பெண்கள், வருணாசிரம தர்மத்தில், கீழோருக்கும் கீழோர். அதுதான் மிக முக்கியம்.

துளசிதாஸ் இராமாயணத்தில் இருக்கின்ற ஒரு வரியை, மண்டல் கமிசனில், மண்டல் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார். துளசிதாஸ் இராமாயணம் இந்தி மொழியில் எழுதப்பட்டது. வால்மீகி இராமாயணம் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. துளசிதாஸ் என்று சொல்லப்பட்ட கோசாமி பார்ப்பனர். அவர் துளசிதாசாகி விட்டார். பின்னாளில். எல்லா பார்ப்பனர்களும் வெவ்வேறு பட்டங்களை வைத்துக் கொள்வார்கள்.

அந்த துளசிதாஸ் என்ற கோசாமி அய்யர் யார் என்றால், வடநாட்டுக் கம்பன். இங்கே இருக்கிற கம்பன் யார் என்றால், தென்னாட்டு துளசிதாஸ். இதனை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அங்கே என்ன வேலைக்காக அவர்கள் ஆளைப் பிடித்தார்களோ, அதே வேலையைத்தான் இங்கே கம்பன் செய்தான்.

எனவேதான், துரோகம் என்பது இருக்கிறதே, கம்பன் இனத் துரோகி. அழகுகள் இருக்கலாம், நயங்கள் இருக்கலாம்; பாடல்கள் இருக்கலாம். இதை நாம் ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம். கம்பனுடைய துரோகம் தமிழகக் கலாச் சாரத்தையே அழித்தது எப்படி என்று நாம் சொல்வதைவிட, பெரியாருடைய தொண்டர்கள், தோழர்கள், கருத்தாளர்கள் சொல்வதைவிட நண்பர்களே, தவத்திரு தமிழ்க்கடல் மறைமலையடிகளார் எழுதியிருக்கிறார். அதைப் பிறகு நான் சொல்கிறேன்.

வ.ரா. அவர்கள், ‘கோதைத் தீவில்’ எழுதுகிறார்:

இந்தியாவில் துரோகம் மலிந்ததற்கு என்ன காரணம்? எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்து லாபம் அடைவது என்பது இருக்கிறதே, இது எங்கிருந்து தொடங்கியது என்றால், இராமாயணத்தில் இருந்துதான் தொடக்கம்; இராமாயண விபீஷணனிடமிருந்துதான் தொடக்கம் என்று ‘கோதைத் தீவு’ என்ற புதினத்தில், வ.ரா. அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்திலும் - புதுமைத் தென்றலிலும் ஆய்வு செய்யவேண்டும்

இதுபோன்ற நூல்களை தனித்தனியே நம்முடைய பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் ஆய்வு செய்யவேண்டும். இதுபோன்ற நூலை புதுமைத் தென்றல் நிகழ்வில் ஆய்வாக மேற்கொள்ளவேண்டும்.

நமது மொழியினுடைய சிறப்பு பல்லாண்டு காலத்திற்கு முந்தையது என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது; அந்த மொழியை அடித்தளத்திற்குக் கொண்டு வருகிறான். இப்பொழுது சமஸ்கிருத்ததையே வீட்டிற்கு வீடு சொல்ல வேண்டும் என்கிறான். சிறு பிள்ளைகளிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறான். இருமொழி இருக்கின்ற தமிழ்நாட்டை அவர்கள் வெறுக்கிறார்கள்.

இது பெரியார் மண் - இந்த மண்ணில் நிச்சயமாக அது வேகாது!

திரைப்படம்வெற்றியடையவேண்டும் என்றால், ஆங் காங்கே மசாலாவை நுழைக்கிறார்கள் அல்லவா! அதுபோன்று அரசியலில் வெற்றி பெறவேண்டும் என்றால், ஆங்காங்கே கலைஞர் மசாலா, எம்.ஜி.ஆர். மசாலா, இப்படி மசாலாக்களைப் போட்டு வெற்றியடையலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது பெரியார் மண் - இந்த மண்ணில் நிச்சயமாக அது வேகாது, வேகவே வேகாது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த உணர்வை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்தச் செய்தியை சொல்கிறேன்.

மண்டல் கமிசனில் எழுதியிருக்கிறார்கள். துளசிதாஸ் இராமாயணத்தைப்பற்றி சொல்கிறார்,

இராமாயணத் தத்துவம் என்ன தெரியுமா?

மேளம், பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் இவர்கள் அடி படுவதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டவர்கள். மேளம் என்றால் அடிவாங்கவேண்டும்; பெண்கள் என்றால் அடிவாங்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் அடிவாங்கவேண்டும். இதுதான் இராமாயணத் தத்துவம். இதைப் பாதுகாப்பதுதான் இராமராஜ்ஜியம்.

ஏன் இப்படி உருவாக்கினார்கள்? அதனுடைய தேவை என்ன? இராமன் என்பவன் ஒருவன் இருந்தானாம்; ஏற்கெனவே சாபம்; சாபத்தினால் வந்தேன் என்கிறான். சாபத்தினால் வந்தவன், அதற்குப் பிறகு எப்படி யோக்கியமாக இருப்பார் என்று கேட்டார்.

மூன்று பார்ப்பானுக்கு வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தானே!

அவர் அவதாரம்,  நேரே கீழே வந்துவிட்டார் என்கிறார் கள். அவதாரம் எப்படி வயிற்றுக்குள் போவான். ஏற்கனெவே உருவத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று இராமாயணத்தில் சொல்கிறார்கள். பல பாத்திரங்கள் அப்படி ஆகியிருக்கிறது. அனுமார் உருவத்தை மாற்றி, விசுவரூபம் எடுக்கிறான் என்கிறார்கள். அனுமாரிடம் போகவேண்டாம்; சூர்ப்பனகை - அரக்கி. திரைப்படங்களில் அந்த உருவத்தை மிகக் கோரமாகக் காட்டுவார்கள். உடனே அப்சரஸ் மாதிரி அடுத்தக் கட்டம் - அழகியாக போனால்தான், இராமனைக் காதலிக்க முடியும் என்றவுடன் - நினைத்தவுடன் அழகியாக மாற்றிக் கொள்கிறாள். அரக்கர்களுக்கே தங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்கு, இராமாயணத்திலேயே  பாத் திரங்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கும்பொழுது, அதே இராமாயணத்தின் கதாநாயகனாக இருக்கவேண்டிய இராமன், அவதாரம் எடுத்தபொழுது, நேரே டக்கென்று வந்துவிட வேண்டியதுதானே? இவன் ஏன் வயிற்றுக்குள் புகுந்து அதற்குப் பிறகு வருகிறான்? குதிரைக்கு ஏன் வேலை? யாகத்திற்கு என்ன வேலை? புத்திர காமேஷ்டிக்கும் என்ன அவசியம்? அசுவமேதை யாகத்திற்கு என்ன அவசியம்? மூன்று பார்ப்பானுக்கு வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தானே - வேறு எந்த வாய்ப்பும் கிடையாதே!

அவனும் பிறகு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறு கிறார்கள். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், சந்திர சேகர பாவலர் புத்தகம் இருக்கிறது; அவருடைய புத்தகத்தை மட்டும் பார்க்கவேண்டாம் - அமிர்தலிங்க அய்யர் எழுதிய ‘‘இராமாயண விமர்சா’’ என்கிற புத்தகத்தைப் பார்க்கட்டும். ஆதாரங்களோடுதான் நாங்கள் சொல்கிறோம்.

பாயாசத்தைக் குடித்து கருத்தரித்தார்களாம்!

இவையெல்லாம் அசிங்கம் என்று தெரிந்தவுடன், பாயாசம் கொண்டு வருகிறார்கள். ஏற்கெனவே இதை நான் சொல்லியிருக்கிறேன். உங்களுக்காக இதைத் திரும்பவும் சொல்கிறேன். பாயாசத்தைக் குடித்துவிட்டு உடனே கருத்தரித்து விடுகிறார்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

அசிங்கத்தைப் போக்கவேண்டும் என்று நினைத்தார்கள்; குதிரையை வெட்டி, குதிரையோடு புணர்ந்து, தசரதனுடைய பத்தினிகள் இருந்தார்கள் - சுலோகம் எல்லாம் சொன் னார்கள் என்கிற காட்சி - தாய்மார்களை, பெண்களை வைத்துக்கொண்டு சொல்ல முடியாத காட்சி என்றவுடன், சிறிது காலத்திற்குப் பிறகு, அமிர்தலிங்க அய்யர் சொல்கிறார்,

Later on they introduced the payasa theory

பிறகுதான், பாயாசம் என்கிற கருத்தைப் பின்னாளில் நுழைத்தார்கள்.

பாயாசம் சாப்பிட்டால் நேரே கருப்பைக்குள்ளா போகும்? அப்படியென்றால், பாயாசம் சாப்பிடுகின்ற அத்தனை பேரும் பிள்ளை பெற்றாகவேண்டுமே! விருந்துகளில் பாயாசம் போடவே கூடாதே! குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விரோதமான உணவுப் பொருளாகிவிடுமே!

பெண்கள் உடற்கூறு என்ன பாயாசம் சாப்பிட்டவுடன், நேரே கருப்பைக்குள் போவது போன்று இருக்கிறதா?

இதுபோன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது; நம்புங்கள்! நம்புங்கள்! நம்பவில்லை என்றால், நரகத்திற்குப் போவீர்கள். அதற்காகத்தான் நரகத்தையே உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

பெரியார் காலத்திற்குப் பிறகுதான், பெரியாருடைய தாக்கத்தினால், ‘குடிஅரசினுடைய’ தாக்கத்தினால், கலை வாணர் போன்றவர்கள் வேகமாக அடித்தார்கள்.

‘‘நான் மோட்சத்திற்குப் போக விரும்பவில்லை. நரகத்திற்குத்தான் போகப் போகிறேன். அங்கே தான் காலியாக இருக்கும்; நான் பிரச்சாரம் செய்வதற்கு ஏற்ற இடம்’’ என்று நகைச்சுவையாக சொன்னார்.

ஆகவே, நண்பர்களே! இந்த எண்ணம் என்னவென்று சொன்னால், நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதனு டைய அடிப்படை, பார்ப்பனர்களை, வர்ணாசிரமத் தத் துவப்படி, மனுதர்மத்தில் எப்படி உயர்த்தி, தலையில் பிறந்தவர்களுக்கு ஒரு நீதி, காலில் பிறந்தவர்களுக்கு, காலுக்கும் கீழே இருக்கக்கூடியவர்களுக்கு வேறொரு நீதி! அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னதுபோன்று, படிக்கட்டு ஜாதி முறை. அந்தப் படிக்கட்டில் கீழே இருக்கக்கூடியவர்கள் அனைத்து ஜாதிப் பெண்கள். ஏன் அனைத்து ஜாதிப் பெண்கள்? ஆரியர்கள் பெண்களோடு வரவில்லை. அதனால், பெண்களை கீழ்ஜாதிக்கும் கீழே வைத்துவிட்டார்கள். நான்கு ஜாதி - ஜாதி வட்டத்திற்கு வெளியே பஞ்சமன் அய்ந்தாம் ஜாதி - அதற்கும் கீழே பெண்கள் என்கிற அளவிற்கு வந்தார்கள்.

ஆகவேதான், பெண்களும், மேளமும், கீழ்ஜாதியினரும் அடிப்பதற்கென்றே படைக்கப்பட்டவர்கள். இதை ராமன் சொல்வதாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

பெரியாருடைய சிந்தனைகள் தொலைநோக்கு...

எனவே, இராமாயணத்தைப் பொருத்தவரையில், பெரி யாருடைய தொலைநோக்கை நீங்கள் எண்ணிப்பாருங்கள். எந்தக் காலத்தில் இராமாயணத்தைப்பற்றி பேச ஆரம் பித்திருக்கிறார். காங்கிரசில் இருக்கும்பொழுதே அதனைக் கண்டித்துப் பேசியிருக்கிறார். சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே! பெரியாருடைய சிந்தனைகள் தொலைநோக்கு சிந்தனை என்பது மட்டுமல்ல, அனுபவ ரீதியாக சிந்தித்தது. ஜாதியை ஒழிக்கவேண்டும் என்கிற எண்ணம் வந்த பிறகு, துப்பாக்கியை நேரே பிடித்தார். ‘‘எவை எவையெல்லாம் ஜாதியைத் தாங்கிப் பிடிக்கிறதோ, அவை எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு தள்ளுங்கள்’’ என்றார்.

திருப்பூரில், 1922 ஆம் ஆண்டு ஏறத்தாழ 96 ஆண்டு களுக்கு முன்பு பேசுகிறார். அப்பொழுது சம்பூகன் கதையை சொல்கிறார்.

அறிவுபூர்வமாக, தர்க்க பூர்வமாகப் பேசக்கூடாது

என்கிறார்கள்; ஏனென்றால், அறிவைப் பயன்படுத்தாதே, நம்பு! நம்பு!! என்கிறார்கள்.

ஆத்திகர்களுக்கும் - நாத்திகர்களுக்கும் உள்ள வித்தி யாசம்!

ஆத்திகர்களுக்கும் - நாத்திகர்களுக்கும் உள்ள வித்தி யாசம் என்னவென்றால், ஆத்திகன் என்றால், கண்களை மூடிக்கொண்டு நம்புகிறவர்கள். நாத்திகன் என்றால், கேள்வி கேட்பவன். ஏன்? எதற்கென்று?

ஏன்? எதற்கென்று? கேட்டதினால்தான், ஒலிபெருக்கி. ஏன்? எதற்கென்று? கேட்டதினால்தான் மின்சாரம். ஏன்? எதற்கென்று? கேட்டதினால்தான், 8 வயதிலும், 10 வயதிலும் செத்துக் கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு 75 வயது சராசரி இருக்கிறது; 100 வயதைத் தாண்டியவர்கள் நம்முடைய இயக்கத்தில் இருக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

பெரியார் தொண்டர்கள் 100 வயதைத் தாண்டி வாழ்கிறார்கள்!

இன்றைக்குக் கடவுள் மறுப்பாளர்கள், சனாதனத்தைச் சாடுகிறவர்கள், பகுத்தறிவாளர்கள் எவ்வளவு பேர் 90 வயதைத் தாண்டி இருக்கிறார்கள். பெரியார் அவர்கள் 95 வயது வரையில் இருந்தார் என்றவுடன் அதிசயமாக இருந்தது. இன்றைக்குப் பெரியாரைத் தாண்டி, பெரியார் தொண்டர்கள் வாழுகிறார்கள், பெரியாரால் உருவாக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு 96 வயது; இன்றைக்குக் காலையில் பெங்களூரிலிருந்து இங்கே வந்தார் வேலு  - அவர் வயது 97. செபாஸ்தியான் அவர்கள் திருச்சியில் இருக்கிறார் அவருக்கு வயது 101. கைகுலுக்குகிறார், அதுதான் மிக முக்கியம்.

இளைஞரணி மாநாடு போன்று, திராவிடர் இயக்க முதியவர் மாநாடு - பெரியார் பெருந்தொண்டர்கள் மாநாடு ஒன்றை நடத்தவேண்டும். கடவுள் இல்லை என்பதற்கு நாங்கள்தான் சாட்சி. எங்களைவிட பெரிய சாட்சி உலகத்தில் வேறு கிடையாது. எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்கிறார்கள், அவன் ஏதோ பரிந்துரை செய்வதுபோல.

அந்த சூழ்நிலையில், இவர்களுடைய அடிப்படை கருத்தென்ன? சென்ற முறை விடுபட்டு போனதினால், தொடர் சொற்பொழிவு என்பது உடனே இருந்தால்தான், அதனை தொடர்ந்து சொல்லக்கூடிய வாய்ப்பு இருக்கும்.

இராமாயணன் - பாரதம் - இதிகாசங்கள் யாருக்காக இயக்கப்பட்டது. யார் வேதங்களைப் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டார்களோ, வேதங்களை சொல்லுகிறவர்கள், படிக்க உரிமை பெற்றவர்கள், வேதங்களை சொல்லக்கூடிய, படிக்கக்கூடிய, சமஸ்கிருதத்தில் படிக்கக்கூடிய உரிமை பெற்றவர்கள், அந்தக் கலாச்சாரப்படி பார்ப்பனர்கள். வேதியர்கள்.

யாகத்தை எதிர்த்தவர் புத்தர்!

இதனை புத்தர் எதிர்த்தார். அவருக்கு மிகப்பெரிய அளவிற்கு செல்வாக்கு வந்துவிட்டது. எல்லோரும் படியுங் கள், அதற்காக பள்ளிக்கூடம் வைக்கிறேன் என்று சொன்ன முதல் ஆள் புத்தர்தான் இந்தியாவிலேயே!

பகுத்தறிவைப் பயன்படுத்து - முன்னோர்கள் சொன் னார்கள் என்பதை கேட்காதே - முன்னோர்கள் அதன்படி நடந்தார்கள் என்பதை நம்பாதே! என்று எடுத்துச் சொன்னவர்.

யாகத்தை எதிர்த்தார் புத்தர். யாகம் எதற்காக என்று கேட்டார். பெண்களை அடிமைப்படுத்தாதே! பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்றார்.

பார்ப்பனியத்தினுடைய செல்வாக்கு மடமடவென சரிந்தது!

எது எது ஆரிய தத்துவமோ - எது எது வேதக் கலாச்சாரமோ - எது எது பார்ப்பனிய கலாச்சாரமோ - அந்த அடிப்படையையே தகர்த்தது புத்த நெறி.

ஜாதி ஒழிப்பு - பெண்ணடிமை ஒழிப்பு - மூடநம்பிக்கை ஒழிப்பு - பகுத்தறிவுச் சிந்தனை - சமத்துவம் - சம வாய்ப்பு - எல்லோருக்கும் கல்வி - அதோடு மக்களுடைய மொழி பாலி மொழிதான் என்று சொல்லக்கூடிய வாய்ப்புகள். இதனால், மக்களுக்குக் கண் திறந்தார் - விழி திறந்தார். எல்லா மக்களும் அவர் பின் சென்றார்கள். ஆட்சிகள் அவர்பால் அமைந்தன -அசோகன் ஆட்சிவரையில்.

அதனால் பெரிய அளவிற்கு அவருடைய கொள்கைகள் பரவின. பார்ப்பனியத்தினுடைய செல்வாக்கு மடமடவென சரிந்தது. சரிந்த செல்வாக்கை மீட்பதற்குத்தான் பக்தி இயக்கம் - அதற்குப் பிறகுதான் இராமாயணம் -அதற்குப் பிறகுதான் மனுதர்மம் - இவை அத்தனையையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

வேத காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளோ, இது போன்ற கடவுள்களோ, இதுபோன்ற அவதாரங்களோ கிடையாது. ஒப்புக்கொள்ளமாட்டோம். இதை நாங்கள் சொல்லவில்லை.

இதை உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், முதலில் ஒரு கருத்தை எடுத்துச் சொல்லி சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறோம்.

Hindutva: Exploring the Idea of 
Hindu Nationalism


அண்மையில்கூட இந்துத்துவா என்கிற பெயரில் ஒரு அற்புதமான நூலை, ஒரு பேராசிரியர் எழுதியிருக்கிறார். அந்தப் பேராசிரியர் எழுதிய நூலை நான் அண்மையில் படித்தேன்.

அந்தப் பேராசிரியருடைய பெயர் Jyotirmaya Sharma.. இவர் ஒரு பார்ப்பனர். முற்போக்குச் சிந்தனையாளர் இவர்.

‘‘‘‘Hindutva: Exploring the Idea of Hindu Nationalism’’

என்பதுதான் அந்த புத்தகத்தின் தலைப்பு.

இந்துத்துவா கருத்துக்கு - இந்துராஷ்டிரம் - இராமராஜ் ஜியம் என்று சொல்கிறார்களே, அந்தக் கருத்துக்கு, அடித்தள மிட்டவர்களைப்பற்றி பார்ப்போம்.

இந்து மதத்தை சீர்திருத்தம் செய்கிறேன் என்று சொல்லி ஆரிய சமாஜத்தை உருவாக்கிய தயானந்த சரசுவதி என்கிற குஜராத்தில் பிறந்த பார்ப்பனர்.

டி.ஏ.வி. பள்ளிக்கூடம் நடத்துகிறார்களே, அவர்கள் எல்லாம் ஆரிய சமாஜ்ஜிஸ்ட். நாங்கள் ஜாதியை ஒத்துக் கொள்ளமாட்டோம்; வேதத்தை மட்டும்தான் நாங்கள் நம்புவோம் என்று மேலெழுந்தவாரியாக சொன்னவுடன், ஓகோ, இவர்கள் எல்லாம் சீர்திருத்தவாதி போலிருக்கிறதே என்று நினைப்பார்கள். அவர்களைப்பற்றி பின்னால் சொல்கிறேன்.

தயானந்த சரசுவதிக்கு அடுத்தபடியாக அரபிந்தர். வங்காளத்தைச் சார்ந்தவர். புரட்சிகரமானவர் என்று சொல்லி, வேத கலாச்சாரம், அசுரர்களை அழிக்கவேண்டும் என்று சொன்னவர். கடைசியாக புதுச்சேரிக்கு வந்து வெள்ளைக்காரர்களுக்குப் பயந்துகொண்டு இருந்தவர்.

மூன்றாவது, முற்போக்குச் சிந்தனையாளராக இருக்கக் கூடிய விவேகானந்தர். இவர் ஒவ்வொரு நேரத்தில், ஒவ்வொரு மாதிரியாக பேசியிருக்கிறார். யார் யாருக்கு எது எது வேண்டுமோ அவரவர்கள் அதை அதை எடுத்துக் கொள்ளலாம். பாரதியார் பாடல்கள் போன்று.

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், உண்மையான விவேகானந்தர் யார் என்பதைப்பற்றி தனியே ஒரு நாள் பேசுவோம். அவரைப்பற்றி பேசுவதற்கு நிறைய செய்திகள் இருக்கிறது. ஏனென்றால், வெளியில் இதுவரைக்கும் வராத விவேகானந்தர் இருக்கிறார். மறுபக்கத்தைக் கொண்டு வருவது நம்முடைய வேலைதானே!

நான்காவதாக, சவர்க்கார்.

இப்படி வரிசையாக சொல்லி, அந்த புத்தகத்தில் பல செய்திகள் உள்ளன. தயானந்த சரசுவதி அவர்கள், அவ தாரங்களை ஒப்புக்கொள்ளவில்லை. மனுதர்மத்தையே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஜாதியை ஒப்புக்கொண்டு, வேத தர்மத்தை ஒப்புக்கொள்கிறேன் என்கிறார்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 18.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக