பக்கங்கள்

சனி, 19 மே, 2018

இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் நான்காவது சொற்பொழிவு


மறைமலையடிகள் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆதாரபூர்வ ஆய்வுரை
சென்னை, மே17 இராமாயணம்-இராமன்- இராமராஜ்யம் நான்காம் நாள் சொற்பொழிவில் கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும் எனும் தலைப்பில் நேற்று (16.5.2018) மாலை சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார். மத்தியில் ஆளும் பாஜக இராமராஜ்யம் என்று கூறிக்கொண்டு, இராமாயணத்தையும், இராமனையும் மதரீதியில் அரசியல் லாபங்களுக்காக இராமராஜ்ய யாத்திரை என்கிற பெயரில் மக்களிடையே இந்துத்து வாவைத் திணிக்கின்றபோக்கில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் இராமராஜ்ய யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இராமாயணம், இராமன்,-இராமராஜ்யம் எனும் தலைப்பில் ஆய்வு சொற்பொழிவை 23.3.2018 அன்று தொடங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார். இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் இரண்டாவது கூட்டம் (27.3.2018) அன்றும், மூன்றாவது கூட்டம் (10.5.2018) அன்றும் நடைபெற்றன. நேற்று (16.5.2018) மாலை நடைபெற்ற இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் நான்காவது சொற்பொழிவுக் கூட்டத்தில் கம்பன் புளுகும், வால்மீகியின் வாய்மையும் எனும் தலைப்பில் ஆய்வுரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் தொடக்கவுரை


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தொடக்க உரையாற்றினார். இராமாயணம், இராமன், இராமராஜ்யம் எனும் தலைப் பிலான சொற்பொழிவுக்கான இந்த காலக்கட்டத்தின் அவசியம் குறித்தும்,  இராமாயணத்தில் குரங்குகளாக திராவிடர்களையே குறிப்பிடப்பட்டுள்ளதாக பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துகளையும், அண்ணா எழுதிய கம்பரசம் நூலில் கூறப்பட்டவற்றையும் எடுத்துக்காட்டி, இராமாயணம் ஆரியர் திராவிடர் போராட்டத்தைக் குறிப்பதே என்றும் பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டு தொடக்க உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆய்வுரை


தந்தைபெரியார், திராவிடர் கழகத்தினர் மட்டுமல் லாமல் பல்வேறு அறிஞர் பெருமக்களும் இராமாய ணத்தையும், கம்பனையும் ஏற்கவில்லை என்பதை தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார்.


பா.வே. மாணிக்க நாயக்கர்


தந்தை பெரியாருக்கு மிகவும் நெருக்கமானவரான பா.வே. மாணிக்க நாயக்கர் 05.02.1931 அன்று பல்லா வரத்தில் கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும் தலைப்பில் மறைமலையடிகள் முன்னிலையில் ஆற்றிய உரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரையாற்றி னார். பேராசிரியர் ஞானமூர்த்தி கருத்துகள், மறைமலை யடிகள் எழுதிய முற்கால, பிற்கால புலவர்கள் எனும் தலைப்பில் 1936இல் பதிப்பிக்கப்பட்ட நூலின் கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களைமுன்வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆய்வுரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய நான்காவது ஆய்வு சொற்பொழிவில் தந்தைபெரியார் மற்றும் திராவிடர் கழகம் மட்டுமல்லாமல் ஆய்வாளர்கள், அறிஞர்கள் பலரும் ராமாயணத்தின் ஆபத்தை உணர்ந்து கூறிய கருத்துகளைத் தக்க ஆதாரபூர்வமான நூல்களை எடுத்துக்காட்டிப் பேசினார். இராமன், இராமாயணம்குறித்து ஆய்வு செய்த இயக்கம் திராவிடர் இயக்கம். தந்தை பெரியார். அதற்கு முன்பும் ஆய்வு செய்தார்கள் ஆனால், ஓர் அரங்கத்துக்குள்தான் பேசினார்கள். தந்தை பெரியார்தான் மேடைதோறும் தவறாமல் வால்மீகி இராமாயணத்தை எடுத்துக்காட்டி பேசினார். இராமாயண கதாபாத்திரங்கள், இராமாயண சம்பாஷணைகள் உள்ளிட்ட நூல்களில் பிழிவுபோல் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்தார்கள். தந்தை பெரியார் கருத்துகளுக்கு மறைமுகமாக பதில் சொல்வதுபோல்,  இராஜகோபாலாச்சாரியார் சக்கரவர்த்தித் திருமகன் என்று கல்கியில் எழுதினார்.

லிப்கோ லிட்டில் பிளவர் பதிப்பகத்தின் சார்பில் சீனுவாசன் எழுதிய நூலான வால்மீகி இராமாயணம் வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளார்கள்.

2 காரணங்கள்


பக்தியின் பெயரால் மூடநம்பிக்கைகளை பரப்புவதே இராமாயணம். இரண்டு காரணங்களால் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டுவருகிறது. ஒன்று அச்சம், மற்றொன்று ஆசை. இவை இரண்டும் இல்லையேல் கடவுள் நம்பிக்கை இருக்காது.

இராமாயணத்தின் பல பதிப்புகள், பழைய பதிப்புகள் தந்தைபெரியாரிடம் இருந்தது. இராமாயணத்தில் உள்ள ஆபாசங்களை, மோசமான பகுதிகளை தந்தை பெரியார் எடுத்துச் சொன்னபிறகு, அடுத்தடுத்த பதிப்புகளில் அவற்றை எடுத்துவிட்டு பதிப்பித்தார்கள். இராமாயணத் தையே ரிப்பேர் செய்து வெளியிட்டார்கள். கம்ப இராமாயணத்தில் உத்தர காண்டம் பகுதி இல்லை. புலவர் பெருமக்களுக்குத் தெரியும், கம்பன் மொழி பெயர்க்கும்போது சார்புநூலில் நீக்கிவிட்டான்.

சுந்தர காண்டத்தையே பார்ப்பனர்கள் பெரிதாக கூறிவருகிறார்கள். சுந்தர காண்டத்தை படித்தால், தீராத வியாதியெல்லாம் தீர்ந்துவிடும் என்று பக்தியைக் காட்டி பாமரத்தனத்தை வளர்த்தார்கள்.

அதற்கு மூன்று வகை பாராயண முறைகளைக் கூறி,  அறிவுக்கு இடமில்லாத வகையில் மயக்க மருந்தைப்போல் பாராயணம் செய்தால் நோய்கள் தீரும்,  சம்சார துக்கங்கள் நீங்கும், மோட்சத்தில் இடம் கிடைக்கும் என்று கூறியுள் ளார்கள். வெளிநாடுகளில் இலியட், ஒடிசி இலக்கியங்களில் அவ்வாறெல்லாம் கூறவில்லை. மில்ட்டனின் லாஸ்ட் பேரடைஸ் ரீகெயின் நூலில்கூட மோட்சம் கிடைக்கும் என்று கூறவில்லை. வால்மீகி இராமாயணம் வெறும் கதையாகத்தான்  இருந்தது.

சுந்தர காண்டத்தை 68 தடவை ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்ய வேண்டும். சூரியன் உச்சிக்கு வரும்போது நிறுத்திவிட வேண்டும். 68 சருக்கங்கள் பாராயணம் முடித்த பிறகு 12 பிராமணர்களை பூஜித்து போஜனம் செய்விக்க வேண்டும். பாராயணம் முடிந்தபின் ஒவ்வொருநாளும் அதிகமாக பிராமண போஜனம் செய்விக்க வேண்டும் என்று கூறி தரவாரியாக பிரித்து, பட்டாபிஷேகம் முடியும்வரை பிராமணர்களுக்கு போஜனங்கள் செய்விக்க வேண்டும்  என்று கூறப் பட்டுள்ளது.  இதைத்தான் பார்ப்பனர்கள் வயிற்றில் அறுத்துக் கொட்டவேண்டுமா? என்று தந்தைபெரியார் கேட்பார்.

திருவள்ளுவமாலையில், திருக்குறள்குறித்து கூறப் பட்ட கருத்தாகிய, பொய்யை பொய் எனவும், மெய்யை மெய் எனவும் போராடிய நூல் திருக்குறள் என்பதை தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச்சொல்வார்.

மறைமலையடிகள்


நடவாத பொய்க்கதை இராமாயணம் என்று மறை மலையடிகள் கூறியுள்ளார்.

கம்பனோடு போகவில்லை, கம்பனுக்குப்பின்வந்த தமிழ்ப்புலவர்கள்  எல்லோரும் பொதுமக்களை ஏமாற்று வதன்பொருட்டு  பார்ப்பனரும், கோயில் குருக்கள்மாரும் வடமொழியில் வரைந்துவைத்த பொய்யான புராணங் களையும், தலபுராணங்களையும் பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்த்துவைத்து  பண்டைத் தமிழ் மெய் வழக்கினை அடியோடு அழித்துவிட்டார்கள்.

பிற்காலத்துத் தமிழ்ப்புலவர்களோ வடமொழிக் கட்டுக்கதைகளை ஆராய்ந்து அவற்றை மெய்யானவை இவை, பொய்யானவை இவை என்று தெளியும் பகுத்தறிவு இல்லாதவர்களாய் பொய்யை மெய்யாக நம்பி தம் அறிவு மழுங்குவதோடு, அப்பொய்யை மெய்யாக பிறரும் நம்பும்படிக் காட்டி அவரது அறிவையும் மழுக்குவதால், இவரால் தமிழுக்கும், தமிழ்மக்கட்கும் உண்டாகும் கேடு அந்தோ பெரிது பெரிது என்று மறைமலையடிகள் சொல்லுகிறார்.

எது இராமராஜ்யம்?


ஆகவே, உண்மையை நிலைநாட்ட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இராமாயணம் பக்கம் போக முடியாது. ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறவர்கள் இராமாயணத்தைத் தூக்கக்கூடாது. மூடநம்பிக்கையை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறவர்கள் இராமாய ணத்தைப் படித்தால் மூடநம்பிக்கை அதிகமாகுமே தவிர, வேறேதும் இல்லை. இராமராஜ்ஜியம் என்பது இத்தனையும் சேர்ந்ததுதான். கம்பன் புளுகும், வால்மீகியின் வாய்மையும் எப்படிப் பட்டது என்பதற்கு இன்னும் ஆதாரங்கள்  ஏராளமிருக் கின்றன. அடுத்தக் கூட்டத்தில் இந்த ஆய்வு சொற்பொழிவு 5 என்பது தொடரும். அதிலே மிகத் தெளிவுபடுத்துவோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆய்வுரையில் குறிப்பிட்டார்.

நூல் வெளியீடு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய நூல் நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?(ரூ.20), பக்தர்களே பதில் சொல்வீர் (ரூ.30), மஞ்சை வசந்தன் எழுதிய சம்பிரதாயங்கள் சரியா? (ரூ.70)  ஆகிய நூல்களின் நன்கொடை மதிப்பு ரூ.120. சிறப்புக்கூட்டத்தில் தள்ளுபடியுடன் ரூ.100க்கு அளிக்கப்பட்டது.

நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட த.கு.திவாகரன் பெற்றுக்கொண்டார். சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பகுத்தறிவாளர் கழகம் ஆ.வெங்கடேசன், கொடுங்கையூர் கோபால், பழ.சேரலாதன், மாணவர் கழகம் தொண்டறம், பெரியார் பிஞ்சு தமிழ்த்தென்றல் உள்பட ஏராளமானவர்கள் நூல்களைப் பெருமகிழ்வுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.

கலந்துகொண்டவர்கள்


பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கவிஞர் கண்மதியன், புலவர் வெற்றியழகன், சி.வெற்றி செல்வி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், தென்சென்னை இளைஞரணித் தலைவர் தமிழ்சாக்ரட்டிஸ், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், தமிழ்செல்வம், கு.சோம சுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

- விடுதலை நாளேடு, 17.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக