பக்கங்கள்

வெள்ளி, 25 மே, 2018

இராமாயணம், இராமன், இராமராஜ்யம் பொழிவு 5 இராமாயண ஆபாசங்கள், கம்பன் புளுகுகள், வால்மீகி இராமாயணத் தகவல்களுடன் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் தமிழர் தலைவர் ஆய்வுரை



சென்னை, மே 22- ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்புக்கு  எதிரானது இராமாயணமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம்


(கம்பன் புளுகும் - வால்மீகியின் வாய்மையும்)


16.5.2018 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் (கம்பன் புளுகும் - வால்மீகியின் வாய்மையும்) என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு சொற்பொழிவு-4 சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பா.வே.மாணிக்க நாயக்கர்


இதில் மிகவும் குறிப்பானது, இதோ என்னுடைய கைகளில் இருக்கும் புத்தகம் கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும். நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா, பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் எழுதிய புத்தகம்தான் இது. பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் தந்தை பெரியாருக்கு மிகவும் நெருக்கமானவர். 5.2.1931 அன்று பல்லாவரத்தில் கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும் தலைப்பில், மறைமலையடிகள் முன்னிலையில் ஆற்றிய உரைதான் இந்நூல். இந்நூலை கலைக்கதிர் வெளியிட்டது. அந்த நூலின் பதிப்பு இப்பொழுது கிடையாது. விரைவில் அந்த நூல் நம்மால் மீண்டும் வெளியிடப்படும். அந்த நூலில் உள்ள நூன்முகத்தை எழுதியவர் கோவை கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஆய்வாளர் தா.ஏ.ஞானமூர்த்தி  அவர்கள். அந்த நூன்முகத்தில் உள்ளதை உங்களுக்காக அப்படியே படிக்கிறேன்.

நூன்முகம்


தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்களுள் நனி சிறந்தவர் திரு. பா.வே.மாணிக்க நாயக்கர். அவர் பல துறையிலும் வல்லுநர். அவர் அறியாத கலை இல்லை யெனலாம். பொறியியலைத் (Engineering)  தம் வாழ்க்கைத் தொழி லாகக் கொண்டவர். எனினும், அப்பொறியியலே அன்றி, வான நூல், விலங்கு நூல், தரை நூல், தத்துவம், இசை முதலியவற்றிலும் ஆன்ற புலமை வாய்ந்தவர். அவருக்குப் பன்மொழிப் பயிற்சியும் உண்டு. இவருடைய தமிழ்ப் புலமையைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. இன்னும் இவர் பல கைத்தொழில்களில் கைதேர்ந்தவராய் விளங்கினார். தையல் வேலை, பின்னல் வேலை, தச்சு வேலை, ஓவியம், படப்பிடிப்பு (Photography) முதலியவைகளில் அவர் திறமை வியத்தற்குரியது. அவர் ஒரு பல்கலைக் கொள்கலம்.

மாணிக்க நாயக்கர் எப்படிப்பட்டவர்?


மாணிக்க நாயக்கர் வாழ்க்கையில் எதற்கும் அஞ்சாதவர். தாம் கண்ட உண்மையை உயிர் கொடுத்தும் நாட்டவல்ல  பெற்றியர் அவர். அவரது வரலாற்றை யுணர்வோர் பல்கலை வேட்கையுறுவர். எத்துணை மெலிந்த நெஞ்சினரும் வலிமை பெற்றவராய் வீறு கொண்டு எழுவர்.

அவர் பிறந்த ஊர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாகல் பட்டி என்னும் சிற்றூர். அவருடைய பெற்றோர் வேங்கடசாமி நாயக்கரும். முத்தம்மாளும் ஆவர். அவருக்குத் தமையனார் ஒருவர் உண்டு. அவர் பெயர் திரு. பா.வே.பொன்னுசாமி நாயக்கர் என்பது. இவரும் தமிழில் மிகச் சிறந்த புலமை வாய்ந்தவர். திருக்குறள், கம்பராமாயணம். பெரியபுராணம் முதலிய நூல்களின் பல பாடல்களுக்கு மிக நயமான பொருள் உரைக்கும் அரிய திறம் பெற்றவர் அவர்.

மாணிக்கநாயக்கர் தமது பன்னிரண்டாம் வயதுக்குமேல் கல்வி பயிலத் தொடங்கினார். அவர் தமது பன்னிரண்டாம் வயதில் இறந்து விடுவார் என்று சோதிடர் ஒருவர் கூறியதை நம்பி, அவருடைய பெற்றோர் அவரை அதுவரை பள்ளிக்கு அனுப்பவில்லையாம். தம் பன்னிரண்டாம் வயதில் கல்வி தொடங்கிய நம் நாயக்கர் அவர்கள், இருபத்தைந்தாம் வயதிற்குள் பொறியியல் புலமை பெற்றுச் சென்னை அரசாங்கத்தில் உதவிப் பொறியியலாளர் (Assistant Engineer) தொழிலேற்றார். விரைவில் பொறியியலாளர் (Executive Engineer) பதவிக்கும் அடுத்துக் கண்காணிப்பு பொறியியலாளர்  (Superintending Engineer) பதவிக்கும் உயர்த்தப் பெற்றார். அவர் 1912 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் வழக்கியல் கல்வி (Barrister - at -law) பெறுவதற்காகவும், ரீயின்போர்ஸ்ட் கான்கிரீட்  (Reinforced Concrete) பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகவும் இங்கிலாந்து சென்றார். ரீயின்போர்ஸ்ட் கான் கிரீட்' ஆராய்ச்சியை மான்செஸ்டர் நகராண்மைத் தொழிலியற் பள்ளியில் (Municipal School of Technology, Manchester)   நிகழ்த்தினார். அதன் பயனாய் அவர் கால்குலோகிராப் (Calculograph for reinforced concrete) என்றதொரு புதுமையான கருவியை அமைத்தார். இக்கருவியின் மூலம் ரீயின்போர்ஸ்ட் கான்கிரீட்' அமைப்பு முறையில் ஏற்படும் பெருஞ் சிக்கலான கணக்குகளை மிக எளிதில் தீர்த்துவிடலாம். மாணிக்க நாயக்கரது பெரும் பொறியியல் புலமையையும், திறமையையும் வியந்து இங்கிலாந்தில் புகழ்பெற்ற பொறியியல் பேரறிஞர்கள் அவரைப் பாராட்டிப் போற்றினர். ஆனால், நம் நாட்டிலோ அவர் கண்ட கால்குலோ கிராபைப் பற்றியோ, அல்லது அவரது பெரும் பொறியியல் புலமையைப் பற்றியோ ஒரு பேச்சில்லை.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கு முதன் முதல் இடம் தெரிந்தெடுத்துத் திட்டம் வகுத்தவர் மாணிக்க நாயக்கரே ஆவர். ஆனால் மேட்டூர் அணையின் வரலாற்றில் அவருடைய பெயரைக் காணமுடியாது!

மாணிக்க நாயக்கரின் தமிழ்த் தொண்டு மிகப் பெரியது; இணையற்றது. ஒலி இலக்கண (Universal Phonetics) ஆராய்ச்சியில் அவர் பல காலம் ஈடுபட்டு உலகத்திற்கே பயன்தரத்தக்க ஒரு சிறந்த உண்மையைக் கண்டார். உலகிலுள்ள மக்கள் பேசும் எத்தகைய ஒலியையும் தமிழ் ஒலிகொண்டு உச்சரிக்க முடியும் என்பது அவர் ஆராய்ந்து தெளிந்த உண்மை. அவர் தமிழ்நாட்டில் பல இடங்களில் தாம் கண்ட இவ்வுண்மையைப் பல சொற்பொழிவுகள்மூலம் விளக்கியிருக்கிறார். அவரைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒலியிலக்கணப் பேராசிரியராக அமர்த்தி அவர் கண்ட ஆராய்ச்சிகளை நம் நாட்டில் பலருக்கும் பயன்படுமாறு செய்ய வேண்டும் என்று பேரறிஞர்கள் பலர் கருதினர்; அதையொட்டிப் பல தீர்மானங்கள் தமிழ கத்தின் பல இடங்களிலிருந்து அரசாங்கத்தாருக்கும், சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கும் அனுப்பப் பெற்றன. ஆனால் அவர்களில் எவரும் அத்தீர்மானங்களுக்குச் செவிசாய்த்ததாகத் தெரியவில்லை.

கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்!'


கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்' என்பது மாணிக்க நாயக்கரின் இறுதிச் சொற்பொழிவு. இது பல்லாவரத்தில் முதுபெரும் புலவர் மறைமலையடிகளார் முன்னிலையில் நிகழ்த்தப் பெற்றது. அச்சொற்பொழிவே அழகான இந்நூல் வடிவாக மிளிர்கின்றது.


 


இந்நூலின் தலைப்பு கம்பனைப் பழிப்பதுபோலத் தோன்றலாம். இந்நூல் கம்பனைப் பழிக்கின்றதா அல்லது புகழ்கின்றதா என்பதனை இதனைப் படிப்போர் ஆய்ந்து தெளிய வேண்டுவதொன்று. இந்நூலாசிரியரின் முக்கிய நோக்கமாவது, வால்மீகி இராமாயணத்தில் கண்ட பண் டைய ஆரியப் பழக்க வழக்க ஒழுகலாறுகளைத் தெளிவு படுத்துவதேயாம்.


 


மாணிக்க நாயக்கர் அவர்கள் கம்பன் காவியத்தைப் பலமுறை ஆழ்ந்து படித்தவர். அதன் பாக்களைப் பலகாலும் சுவைத்தவர். பல பாடல்களுக்கு நுட்பமான பொருள் கூறும் வன்மையர், அவருடைய இன்னுயிர்த் துணைவியார் தாயாரம்மாள் அவர்களும் கம்பராமாயணத்தில் மிக்க ஈடுபாடு உடையவர். நம் நாயக்கர் அவர்களின் தமையனார் திரு. பொன்னுசாமி நாயக்கர் அவ்வம்மையாருக்குக் கம்பராமாயணப் பாடம் சொல்வது வழக்கமாம். அவர் கூறிய பாடல்களின் பொருள்களை அவ்வம்மையார் தம் கொழுநரிடத்தில் சொல்லுவார்களாம். மாணிக்க நாயக்கர் ஒவ்வொரு முறையும் தம் தமையனார் கூறிய பொருளுக்கு மாறான பொருள் கூறுவாராம். இங்ஙனம் இரு திறத்துப் பொருள்களையும் அவ்வம்மையார் கேட்டு மிக்க பயனடைந்ததாக அவர்கள் என்னிடம் கூறுவதுண்டு. கம்பராமாயணப் பாடலின்கண் நம் நாயக்கர் அவர்கள் கொண்டிருந்த ஆர்வம் இதனின்றும் நன்கு விளங்கும்.


பா.வே.மாணிக்க நாயக்கர்பற்றி


நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை


அவரது உண்மை உள்ளத்தை ஓராது நாமக்கல் கவிஞர் திரு.வே.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் அவரைப்பற்றி என் கதை' என்னும் தம் நூலில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.

கம்பராமாயணத்தை மிகச்சிறந்த கவிதையாகவும், தமிழ் இலக்கியமாகவும் கொண்டாடுவார் என்றாலும், இராமாயணத்தை ஆரியர்களுடைய ஏற்றத்தைச் சொல்லும் நூலாகவே மதிப்பார். ஆரிய மன்னனாகிய இராமனைச் சிறப்பித்து, திராவிட மன்னனாகிய இராவணனைக் குறைத் துப் பேசுகின்ற ஒரு ஆரியக் கவியினால் ஆக்கப்பட்ட கதையாகத்தான் இராமாயணத்தை மாணிக்க நாயக்கர் மதித்தார்.  இராமாயணம்' என்ற பெயர் இராவணாயனம்' என்று இருக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். இராவணாயனம்' என்ற ஒரு நூலைத் தாம் எழுதப்போவதாக, அதற்கு அவர் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்ததும் எனக்குத் தெரியும். சுருங்கச் சொன்னால் இன்றைக்குக் கம்ப ராமாயணத்தைக் குறைத்துப் பேசுகின்ற கட்சி மாணிக்க நாயக்கர் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதென்றால் அது தவறாகாது. பிற்காலத்தில் -  சுயமரியாதை' இயக்கத்தை ஆரம்பித்து, கம்பராமாயணத்தை எரித்துவிடவேண்டும் என்ற ஸ்ரீ ஈ.வே.இராமசாமி நாயக்கரும்கூடத் தாம் மாணிக்க நாயக்கரிடத்தில் கேட்டுக்கொண்ட பாடத்தைத்தான் காரி யத்தில் காட்ட முன்வந்தாரோ என்று நான் எண்ணுவதுண்டு,''

இதைப் படிப்போர் ஒவ்வொருவரும் மாணிக்க நாயக்கர் அவர்கள் கம்பராமாயணத்தைக் குறைத்துப் பேசுகின்றவர் என்றும், கம்பராமாயணத்தை எரிக்கும் இயக்கத்திற்கு அவரே அடிப்படைக் காரணமாவார் என்றும் முடிவு செய்வர் என்பதில் ஐயமில்லை. மாணிக்க நாயக்கர் உயிரோடிருந்து நம் கவிஞர் எழுதியுள்ளதைக் கண்ணுறுவாரானால் அவர் உள்ளம் எவ்வளவு வருந்தும் என்று கூற முடியாது. கவிஞர் அவர்கள் மாணிக்க நாயக்கரிடத்துக் கலை பயின்றவர். அவரோடு ஆறுமாதம் வடநாடு முழுதும் சுற்றிவந்தவர். அவர்கள் இருவரும் வடநாட்டில் இருந்த பொழுது கவிஞர் அவர்கள். சில சமயங்களில் பொழுது விடிந்த பிறகும் தூங்கிக்கொண்டிருப்பாராம். அப்போதெல்லாம் மாணிக்க நாயக்கர் அவர்கள்,

உறங்கு கின்ற கும்பகன்ன வுங்கண் மாய வாழ்வெலாம்

இறங்கு கின்ற தின்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்''

என்ற கும்பகர்ணப் படலத்துப் பாட்டை வேடிக்கையாகப் பாடி அவரை எழுப்புவது வழக்கமாம்.

இங்ஙனம் கவிஞர் அவர்கள் மாணிக்க நாயக்கரோடு மிக நெருங்கிப் பழகும் பேறு பெற்றும் அவர் கம்ப ராமாயணத்தின்பால் கொண்டிருந்த உண்மைக் கருத்தை உணராது, அவரைப்பற்றித் தவறாக எழுதியிருப்பதை நினைக்கும்தோறும் நெஞ்சம் வருந்துகின்றது.

தேவை இலக்கியத் திறனாய்வு


நமது நாட்டில் இலக்கியத் திறனாய்வுக்கு (Literary Criticism) மதிப்பில்லை. அதைத் தக்கபடி புரிந்துகொள்ளவும் திறமில்லை. ஒரு நாட்டின் இலக்கியங்கள் வளஞ்செறிந்து வளர்வதற்கு மிக இன்றியமையாததாய் அமைவது இலக் கியத் திறனாய்வு. மேனாடுகளில் சிறந்த இலக்கியங்கள் பல்கிக் கிளைப்பதன் காரணம், அங்கு அறிஞர்கள் இலக்கியத் திறனாய்வுகளுக்கு உரிய மதிப்பீந்து அவற்றைப் போற்றுவதேயாம். ஒரு நூலின் குறை நிறைகளை ஆராய்ந்து தெளிவுபடுத்தினால் அன்றி அந்நூலின் உண்மை மதிப்பு எப்படி விளங்கும்?

மாணிக்க நாயக்கர் கம்பராமாயணத்தைப் பற்றிப் பேசியவையனைத்தும் அந்நூலின் திறனாய்வேயாம். இராமாயணம்' என்ற பெயர் இராவணாயனம்' என்று இருக்கவேண்டும் என்று அவர் சொல்லியது உண்மையே. கம்பராமாயணத்தில் இராவணன் பல அரிய பண்புகளை உடையவனாக மிளிர்கின்றான். கம்பன் கூறும் அவனது பெறலரும் பண்புகளைப் படிக்கும்போது அவன் காவியத் தலைவனாதற்குத் தகுதியுடையவன் என்று பலருக்குத் தோன்றக்கூடும். மாணிக்க நாயக்கர் தமதாராய்ச்சியில் தோன்றியதை நேர்மையாக எடுத்துரைத்தார். ஆனால், இதைக் கொண்டு அவர் கம்பராமாயணத்தைக் குறைத்துப் பேசியதாகக் கொள்வது பொருந்துவதாகாது.

மேனாட்டுப் பெருங்கவியாகிய மில்டன் பாடிய சுவர்க்க நீக்கம் (Paradise Lost) என்ற நூலில் சாத்தான் என்பவன் இறைவனையே எதிர்த்துப் போரிடுகின்றான். எனினும் கவி அவனைப் பல அரிய பண்புகள் பொருந்தியவனாகச் சித்தரித்திருக்கிறார். இதனால் டிரைடன் (Dryden), சர் வால்டர் ராலே (Sir Walter Raleigh), டில்யார்ட் (E.M.W.Tillyard) முதலிய அறிஞர்கள் சாத்தான்தான் காவிய வீரனாதற்குரியவன் என்று கருதுகிறார்கள். இறைவனை எதிர்த்துப் போராடுகின்ற ஒருவனைக் காவிய வீரனாகக் கொள்வதா? இது அடுக்குமா?' என்று நெஞ்சம் துணுக்குற்று, அப்படிக் கூறுகிறவர்கள் மில்டன் காவியத்தைப் பழிப்பவர்களேயாவர் என்று அவர்கள்மீது மேனாட்டார் எவரும் குற்றஞ்சாட்டியதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக அவ்வறிஞர்கள் எழுதிய விளக்கங்களை அந்நாட்டவர் விரும்பிக் கற்கின்றார்கள். இதனாலன்றோ அந்நாட்டு இலக்கியங்கள் சீரும் சிறப்புமெய்தி ஓங்குகின்றன.

கவிஞர் அவர்கள் மாணிக்க நாயக்கரைப்பற்றி எழுதி யுள்ளவற்றில் முன்னுக்குப்பின் முரணாக அமைந்திருப்பதைக் காணலாம்.

மாணிக்கநாயக்கர், கம்பராமாயணத்தை மிகச் சிறந்த கவிதையாகவும், தமிழ் இலக்கியமாகவும் கொண்டாடு வார்' என்று முதற்கண் குறிப்பிடுகிறார். இறுதியில் பிற் காலத்தில் சுயமரியாதை' இயக்கத்தை ஆரம்பித்துக் கம்பராமாயணத்தை எரித்துவிட வேண்டும் என்ற ஸ்ரீ ஈ.வே.இராமசாமி நாயக்கரும்கூடத் தாம் மாணிக்கநாயக்கரிடத்தில் கேட்டுக்கொண்ட பாடத்தைத்தான் காரியத்தில் காட்ட முன்வந்தாரோ என்று நான் எண்ணுவதுண்டு என்று எழுதுகிறார். கம்பராமாயணத்தை மிகச்சிறந்த கவிதையாகவும், தமிழ் இலக்கியமாகவும் போற்றும் மாணிக்க நாயக்கர், அக்காவியத்தை எரிக்கும் அளவிற்குப் பெரியார் இராமசாமி நாயக்கருக்கு அதன்பால் வெறுப்பூட்டியிருப்பார் என்று நம்பமுடியுமா ?

பிறர் சொல் கேட்டு நடக்கும் பெற்றியர்


அல்லர் பெரியார்!


மேலும், பெரியார் அவர்களின் பண்புகளை நம் தமிழகம் நன்கு அறியும். அவர் பிறர் சொல் கேட்டு நடக்கும் பெற்றியர் அல்லர்; தாம் உண்மையெனக் கண்டதை உறுதியோடு நிலைநாட்டும் வீரப் பண்பு வாய்ந்தவர். அவர் மாணிக்க நாயக்கரிடத்தில் கேட்ட பாடத்தைச் செயலில் காட்ட முன் வந்தாரோ என்று கவிஞர் அவர்கள் எண்ணுவது பொருந் தாது.

உண்மையில் மாணிக்க நாயக்கர் கம்பன் காவியத்தை வெறுப்பவரல்லர். அதனை விரும்பிப் போற்றுபவரே யாவர். இந்நூலை ஆழ்ந்து படிப்போர் இவ்வுண்மையை உணரலாம்.

இந்நூலுக்கு யான் நூன்முகம் எழுதும் பேறு பெற்றதைக் குறித்து மிக்க மகிழ்ச்சியுறுகிறேன், பேரறிஞர் மாணிக்க நாயக்கர் அவர்கள் செய்துள்ள தமிழாராய்ச்சிகள் மிகப்பல. அவைகள் நம் தமிழகத்திற்குப் பெரும்பயன் அளிக்கத் தக்கவை. அவைகள் அனைத்தும் வெளிவர கோவை, கலைக்கதிர் அச்சகத்தார் போன்றவர்கள் முயல்வார்களாக! என்று பேராசிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்கள் நூன் முகத்தில் எழுதியுள்ளார்.

ஆக, கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் நூலில் மூன்று இடத்தில் பா.வே.மாணிக்க நாயக்கர் முக்கியமாக சொல்கிறார்.

தமிழ்க்கடல் மறைமலையடிகளார்


இதைவிட மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்ல வேண்டும். இவர்களுடைய அடிப்படை, இவர்கள் மட்டும் சொல்லவில்லை. மறைமலையடிகளார் அவர்கள் முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இது பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைத்திருவாளர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளால் இயற்றப்பட்டு, பல்லாவரம் பொதுநிலைக் கழக நிலையத்திலுள்ள திருமுருகன் அச்சுக் கூடத்தில் - டி.எம். பிரசில் பதிக்கப்பட்டது. இந்த நூல் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். இந்த புத்தகம் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.

மறைமலையம் என்கிற பெயரால், நம்முடைய இளவழகன் அவர்கள் ஒரு பெரிய புத்தகத் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். அதிலேயும் ஒரு பகுதியாக இது இருக்கிறது. அதைத் தெளிவாகப் பார்க்கலம்.

அதில் முற்கால புலவர்கள் இருந்தார்களே, அவர்கள் எல்லாம் கம்பன் போன்று ஒரு மோசமான நிலையை எடுக்க வில்லை. அவர்கள் எல்லாம் உண்மையைச் சொன்னார்கள்.

அதேநேரத்தில், கம்பன் போன்றவர்கள், மிகப்பெரிய பொய்களையும், கற்பனை என்ற பெயராலும், நம்ப முடியாத அளவிற்கு அதைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் என்பதை இரண்டு உதாரணங்கள் மூலமாக சொல்கிறார்கள்.

முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்கிற நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

முற்காலத்தில் வந்தவர்கள், ஒரு கற்பனை என்று சொன் னாலும், அதனை ஒரு அளவோடு நிறுத்தினார்கள். ஆனால், கம்பனுடைய புளுகு உச்சகட்டப் புளுகாகும்.

இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை!


புளுகு என்கிற வார்த்தையைச் சொல்லும்பொழுது, ஒன்றை இந்த நேரத்தில் நினைவூட்ட கடமைப்பட்டு இருக்கிறேன். அது என்னவென்றால், இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை என்று சொல்வார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம்? புளுகுக்கே கந்தபுராணம்தான் அத்தாரிட்டி போன்றது.

முற்கால தமிழ்ப் புலவோர், நம்முடைய புலவர்கள் எப்படி உண்மையை பேசினார்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டு, அதனுடைய பண்பாட்டுப் படையெடுப்பு எப்படிப்பட்டது என்பதை தமிழ்க்கடல் மறைமலையடிகளார் சொல்கிறார்.

குடிமக்களுக்குரிய கடமை இவை அத்தனையும் சொல் கிறார். இதைப்பற்றி  தனி சொற்பொழிவாகவே ஆற்றலாம்.

தமிழர்களுடைய வாழ்வு எப்படிப்பட்டது என்பதையும், முற்காலப் புலவோர் எப்படி என்று சொல்லிவிட்டு, அடுத் ததாக, இத்துணை சிறந்த அரிய அறிவுரை உடைய ஆரிய ஸ்மிருதி நூல்களில் காண்டல் இயலுமோ? அம்ஸ்மிருதி நூல்கள் பிறப்பளவில் மக்களுக்குள் உயர்வு - தாழ்வு வகுத்துக்கொண்டு, அவ்வகுப்பிற்கேற்ற பயனில்லா புறவினைகளை செய்யுமாறு, நுவன்று சொல்ல காண்கின்றோமே அன்றி, அறிவாலும், அன்பாலும், அறவினையாலும் சிறந்தவரை, சிறந்தெடுத்து பாராட்டி, பிறப்பளவில் மக்கள் எல்லோரும் ஒரே தன்மையினர் என்று அறிவுறுத்தக் காண்கிலோம் என்றார்.

அப்படிப்பட்ட நூல்கள் நமக்கு எது என்று சொல் லும்பொழுது, மேற்காட்டிய உண்மையினை அறவுரைபோல பொழிந்துள்ள திருக்குறள், நாலடியார் போன்ற தமிழ் அறநூல்களோ, தமிழ் மக்களே அன்றி உலகம் எங்ஙனம் எல்லா வகையிலும் எச்சமயத்தாரும் விரும்பி, ஏற்று போற்றி மேம்பாடு வாய்ந்து திகழ்கின்றன அந்தக் காலத்தில்.

ஆனால், இடையில் நுழைந்த பிறகு, பண்பாட்டுப் படை யெடுப்பு வந்தவுடன் அதற்கு என்ன நிலை? என்பதையும் சொல்கிறார்.

இது பிற்காலத் தமிழ்ப்புலவோர். முற்காலம் என்பது பண்பாட்டுப் படையெடுப்பு இல்லாத காலம்; பிற்கால  என்பது பார்ப்பன படையெடுப்பு வந்த பிறகு ஏற்பட்ட காலம். இந்த இரண்டு காலங்களையும் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் எடுத்துச் சொல்லி, கம்பனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்.

முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர்

மறைமலையடிகளார் சொல்கிறார்:

அஃதொக்கும். பிற்காலத்துத் தோன்றிய பொருட்டொடர் நிலைகளிற் பெரும்பாலன உண்மையில் நடவாப் பொய்க் கதைகண்மேல் எழுந்தனவாயினும், அவையிற்றிற் காணப் படும் இலக்கியச்சுவை பயில்வார்க்கு இன்பம் பயத்தலின், அதுபற்றி அவை பாராட்டற்பாலனவல்லவோ வெனின்; அல்ல. அந்நூல்களை ஆக்கிய புலவர்கள், தாம்பாடுதற் கெடுத்துக்கொண்ட கதைகளில் மெய்இவை பொய்இவை யென்று ஆராய்ந்துரைத்தவரல்லர்; கதை பொய்யேயாயினும் அவற்றால் அறியப்படும் உறுதிப்பொருள்கள் இவையென்பது தேற்றிப் பாடினவருமல்லர். பொய்யான கதைகளை ஆராயாது மெய்யெனக்கொண்டு தாம் நம்பியதல்லாமலும், அவற்றைப் பயில்வார் கேட்பாரெல்லாரும் அங்ஙனமே நம்புமாறு செய்து உலகத்திற் பொய்யைப் பரப்பி மெய்யே விளங்கவொட்டாமலுந் திரிபுபடுத்தினர். அவ் வாறு பொய்யை மெய்யாக நம்புவதிலும், அதனைப் பிறரும் நம்புமாறு செய்வதிலுமே பிற்காலத்துப் புல வரிற் பெரும்பாலார் அழுந்திப் பழகிவிட்டமையால், அவர் கதையைவிட்டு இலக்கியச் சுவை தோன்றக் கூறு மிடங்களிலும் மெய்யுரை பகரமாட்டாராய்ப் பொய்யே கூறுவராயினர். மற்றுப், பண்டைத் தமிழாசிரியர்களும், அவர்வழி பேணிய இடைக்காலத்தாசிரியர் சிலரும் யாண்டுந் தாம் மெய்யே காண்பதொடு, தாங்கண்ட மெய்யையே பிறர்க்குங் காட்டுவாராய்த் திகழ்ந்தமையின், அவர் இலக்கியச் சுவை தோன்றக் கூறுவனவும், இயற்கை நிகழ்ச்சியொடு முழுதொத்து மெய்யாகவே மிளிர்கின்றன.

இவ்வேறுபாட்டினை இரண்டு எடுத்துக்காட்டுகளான் விளக்குதும்: கொல்லிமலையாண்ட வல்வில் ஓரி என்னுந் தலைவனைப் பாடிய பழந்தமிழ்ப் புலவர் பெருமானான வன்பரணர் அவனது விற்றொழிலாண்மையினைச் சிறந் தெடுத்துக் கூறுதற்குப்புகுந்து,

வேழம்வீழ்த்த விழுத்தொடைப் பகழி

பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்

புழற்றலைப் புகர்க்கலை உருட்டி உரற்றலைக்

கேழற் பன்றி வீழ அயலது

ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும்

வல்வில் வேட்டம் வலம்படுத்திருந்தோன் - (புறம் 152)

என்று அதனை வியந்து பாடியிருக்கின்றார்;

அளவிறந்த அறிவுக் கொல்லான் கற்பனைகள்!


இதன் பொருள் வருமாறு:  யானையைக் கொன்று கீழே விழச்செய்த, சிறந்த நாணினின்றும் விடுக்கப்பட்ட அம்பா னது பெரியவாயினையுடைய ஒரு புலியை ஊடுருவி இறக்கப் பண்ணித், துளையுள்ள கொம்புகளைத் தலையில் உடைய ஒரு புள்ளிமான் தலையைக் கீழே உருளப்படுத்தி, உரல்போலுந் தலையினையுடைய காட்டுப் பன்றி யொன்று நிலத்தே வீழுமாறு சென்று, பக்கத்தே உளதாகிய ஆழ்ந்த புற்றின்கட்கிடக்கும் உடும்பின் உடம்பிலே பட்டுநிற்கும். அத்துணை வலிய வில்லாண்மை வேட்டத்தில் வெற்றியை யுண்டாக்கி யிருந்தவனான ஓரி! என்பது. இங்ஙனம் ஓரியென்னும் மலையரசன் ஓர் யானையை நோக்கி எய்த அம்பானது அவ்வியானையைக் கொன்று கீழே வீழ்த்திய தல்லாமலும், அது தான்சென்ற கடுவிசையினால் தான் சென்ற வழியின்கண் ணிருந்த ஒரு புலியின் திறந்த வாயினுள் நுழைந்து அதனை ஊடுருவிப் போய்ப் போகும் நெறியில் எதிர்ப்பட்ட ஒரு புள்ளிமானையும் உருட்டிவிட்டு, அதன்பின் ஒரு காட்டுப் பன்றியையுங் கீழ்விழச் செய்து, அவ்வளவிற் றன்விசை குறைதலின், அப்பன்றிவீழ்ந்த பக்கத்தேயுளதான ஒரு புற்றின்கட் கிடந்த ஓர் உடும்பின் உடம்பிலே பட்டு நின்றது  என, அவ்வம்பை ஏவிய அவ னது விற்றொழில் வல்லமையினையும், அதனைப் புலப் படக் காட்டும் அவ்வம்பினது விசையினையும் ஆசிரியர் வன்பரணர் நன்கெடுத்துக் காட்டினார். இதன்கண் இயற் கைக்கு மாறாகக் கருதற்பாலது ஏதுமேயில்லை. ஏவப்பட்ட மிகக் கூரிய அம்பு, ஏவியவனது பேராற்றலாற் கடுவிசையிற் சென்று ஓர் யானையை யூடுருவிப் போய்ப், பின் அவ் வியானையை நோக்கித் திறந்தவாயுடன் வந்த ஒரு புலியின்வாயினுள்ளே நுழைந்து அப்புலியினையுங் கீண்டு சென்று, அவ்வளவிற் றனது விரைவு சிறிது சிறிது குறைத லின் எதிர்ப்பட்ட ஒரு புள்ளிமானைக் கீழே உருளச் செய்து, அதன்பின் ஒரு காட்டுப் பன்றியைக் கீழ்விழமோதிக், கடைசியாக அதன் பக்கத்தேயிருந்த ஒரு புற்றினுள்ளே நுழைந்து அங்கே கிடந்த ஓருடும்பின் மேற்றைத்து நின்று போதல் நிகழக்கூடியதேயாம்.

மற்றுப், பிற்காலத்துப் புலவரான கம்பர் அங்ஙனமே இராமனது விற்றொழிலாண்மையினைப் புலப்படுத்துதற் குப் பாடிய இரண்டு செய்யுட்களையும் அவற்றின் பொய்ம்மை யினையும் ஈண்டெடுத்துக் காட்டுதும்:

அலையுருவக் கடலுருவத்து  ஆண்டகைதன் நீண்டுயர்ந்த

நிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கு ஐயா!

உலையுருவக் கனல்உமிழ்கண் தாடகைதன்  உரம்உருவி

மலையுருவி மரம் உருவி மண்உருவிற்று  ஒருவாளி

ஏழுமாமரம் உருவிக் கீழ்உலகமென்று  இசைக்கும்

ஏழும்  ஊடுபுக்கு உருவிப் பின்உடன் அடுத்துஇயன்ற

ஏழு இலாமையின் மீண்டது அவ்விராகவன் வாளி.

இவ்விரண்டனுள் முதற்செய்யுள் இராமனது வில்லாண் மையினை அவனை யுடனழைத்துச் சென்ற விசுவாமித் திரர் சனக மன்னனுக்கு எடுத்துரைக்கும் நிலையில் வைத் துக் கம்பராற் பாடப்பட்டிருக்கின்றது. அதன்பொருள் வரு மாறு:

அலைகளையே தனக்கு உருவமாய்க் கொண்ட கடலைப் போலும் நீலநிறத்தினனனும் ஆண்மைக் குணத் தினனுமான இராமனுடைய நீண்டு நிமிர்ந்த நிலையி னையே வடிவாக வுடைய தோள்களின் வலிமையை நீ ஊடுருவப் பார்த்தல் வேண்டும் ஐயனே! கொல்லனது உலைக்களத்திலே செக்கச்சிவந்து தோன்றுங் கனலை யொப்பத் தீயைக் கக்குங் கண்களையுடைய தாடகை யென்னும் அரக்கியின் மார்பைத் துளைத்துச் சென்று, அதன்மேலும் மலையினையுந் துளைத்துப்போய், அதனு லுந் தன்விசை அடங்காமையின் மரத்தினையுந் துளைத்து ஏகிப், பின்னும் அது குறை யாமையின் நிலத்தினையுந் துளைத்தோடியது அவன் ஏவிய ஒருகணை.

இயற்கைக்கு மாறான உயர்வு நவிற்சி!


இப்பொருளைச்சிறிதறிவுடையாரும்உற்றுநோக்குவ ராயின், இஃது எத்துணைப் பொய்ம்மை நிறைந்ததாயிருக் கின்ற தென்பதனை யுணர்ந்து அதன்கண் அருவருப்பு எய்துவர். இராமன் ஏவிய ஓர் அம்பு தாடகைதன் மார்பைத் துளைத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அஃது அதன்பின் ஒரு மலையினைத் துளைத்துச் சென்ற தென்றதும், அதன் பின்னும் ஒரு மரத்தையோ பல மரங்களையோ துளைத்துப் போய தென்றதும், அதனானும் அதன்விரைவு குன்றாமல் இந்நிலத்தையே ஊடுருவி ஏகிய தென்றதும் இயற்கை நிகழ்ச்சியிற் காணப்படாத, கருதுதற்குங் கூடாத பெரும் பொய்யா யிருக்கின்றனவல்லவோ! இருப்புக் கோலிற்செய்த ஒருகணை மலையைத் துளைத்துச் செல்லுதல் கூடுமோ! அதனைத் துளைத்தபின்னுந் தன்விரைவுங் கூர்மையும் மழுங்காமல் மரங்களையுந் துளைத்துப், பின்னர் இந்நிலவுலகத்தையுந் துளைத்து அப்பாற்போகியதென்றது எத்துணைப் பெரும் புளுகாயிருக்கின்றது! இதனை நன் குணர்ந்து பார்மின்கள் அறிவுடையீர்! ஒருவனது வலிவை, ஒரு பொருணிகழ்ச்சியைச் சிறப்பிக்க உயர்வுநவிற்சி சொல்லுங்கால் இங்ஙனம் இயற்கைக்கு முழுமாறுபாடுண் டாகச் சொல்லுவது நல்லிசைப் புலமையாகுமா? கூர்ந்து பாருங்கள்!

மற்று, மேலெடுத்துக் காட்டிய பழந்தமிழாசிரியரான வன்பரணர் ஓரியினது வில்லாண்மையை வியந்து பாடிய அரிய செய்யுளிற் காணப்படும் உயர்வுநவிற்சி உலக இயற்கைக்கு எத்துணைப் பொருத்தமுள்ளதாய் விளங்கி நமக்குத் தேருந்தொறும் ஆரா மகிழ்ச்சியினைத் தருகின் றதோ, அத்துணைக்கு இயற்கையொடு பொருந்துவதில தாய்க் கம்பர் கூறும் இவ்வுயர்வுநவிற்சி நினைக்குந்தொறும் நமக்குப் பேரா வெறுப்பினையே விளைக்கின்றது!

இன்னும், ஆசிரியர் வன்பரணரது செய்யுளில் மற்றுஞ் சில நுட்பங்களுந் தோற்றங்களும் ஓவியத்தில் வரைந்து காட்டினாலென நமதுளக் கண்ணெதிரே தோன்றி நம்மை இன்புறுத்தலும் அறியற்பாற்று. ஓரி மன்னன் ஒரு வேழத்தை நோக்கி யெய்த கடுங்கணை அவ்வேழத்தை ஊடுருவிப் போய், அதனைக் கொல்லுதற்கு அங்காந்தவாயுடன் வந்த ஒரு புலியை யுங்கொன்ற நிகழ்ச்சியும்;  அதன்பின் துளை யுள்ள கொம்புகளை யுடைய புள்ளிமான் ஒன்றையும் உருட்டி, அதன்பின் உரல் போலுந் தலையினையுடைய ஒரு காட்டுப் பன்றியையும் வீழ்த்திய நிகழ்ச்சியுங்; கடைசி யாக அப்பன்றியின் பக்கத்தே ஒரு புற்றினுள்ளே அடங்கிக் கிடந்த ஓர் உடும்பின் உடம்பிற்சென்று தைத்து அவ்வள வில் நின்றுபோன நிகழ்ச்சியும்; இயற்கையில் உள்ளவை களை உள்ளவாறே கைவல்லான் ஒருவன் வரைந்து காட் டும் ஓவியங்கள்போல் நம்மகக் கண்ணெதிரே தோன்று கின்ற மையுங் காண்மின்கள்! இத்தகைய இயற்கைத் தோற்ற வனப்பு மேற்காட்டிய கம்பரது செய்யுளிற் சிறிதும் இல்லாமையும் நோக்குமின்கள்!

இனி, இராமன் ஏழு மராமரங்களைத் துளைத்தற்கு ஏவிய ஓர் அம்பு அவை தம்மைத் துளைத்துச் சென்றதாகக் கம்பர் கூறும் இரண்டாவது செய்யுட்பொருள் வருமாறு:

அவ்விராமன் தனது வில்லினின்றுந் தொடுத்துவிட்ட ஒரு கணையானது ஏழு பெரிய மராமரங்களையுந் துளைத் துச் சென்று, அதன் பின்னுந் தனதுகடுவிசை சிறிதுங் குறை யாமையின், கீழுலகம் என்று சொல்லப்படும் ஏழினையும் நடுவே புகுந்து துளைத்துப் போய்ப், பின் அக்கீழ் ஏழ் உலகங்களை உடன் அடுத்துத் தொடர்பாக உள்ள வேறு ஏழ் உலகங்கள் இல்லாமையினாலே திரும்பி வந்தது

புளுகில் புலவர் கம்பர்


என்னும் இப்பொருளை நோக்குங்காற், கம்பர் மேலே டுத்துக் காட்டிய முதற் செய்யுளிற் புளுகியதினும் பன் மடங்கு மிகுதியாக இச்செய்யுளிற் புளுகிவிட்டனரென்பது நன்கு புலப்படுகின்றதன்றோ? மராமரங்களேழனைத் துளைத்தற்கு ஏவிய ஒரு வாளி, அம்மராமரங்கள் ஏழனை யுந் துளைத்துச் சென்றதல்லாமலுங் கீழ் ஏழ் உலகங்களையுந் துளைத்துப் போய்ப், பின்னர்த் துளைத்துச் செல்லுதற்கு ஏதும் இல்லாமையின் திரும்பி இராமனிடமே வந்து சேர்ந்ததென்பது உலகிலுள்ள புளுகுகட்கெல்லாம் முதற் பெரும்புளுகாய் முன்நிற்கின்றது. மேலே வன்பரணர் பாடிய செய்யுளில் ஓரி மன்னன் ஏவியவாளி, யானை, புலி, மான், உடும்பு முதலான உயிர்களின் ஊன் உடம்பைத் துளைத்துச்சென் றடங்கியதென்று சொல்லப்பட்டதே யல்லாமல், மரத்தை, மலையை, நிலத்தைத் துளைத்துச் சென்றதெனச் சொல்லப்பட்டதில்லை. ஏனெனில், இரும் பிற் செய்த கூர்ங்கணை விலங்குகளைக் கொல்லுதற் பொருட்டும், மக்களைக் கொல்லுதற் பொருட்டும் அக் காலத்திற் செய்யப் பட்டன வேயல்லமல், மரங்களை, மலையை, நிலத்தைத் துளைத்தற்காகச் செய்யப்பட்டன அல்ல.

ஆதலால், அவை மெல்லிய தசையுள்ள  யானை, புலி, மான் முதலான உயிர்களின் உடம்பைத் துளைத்துச் சென்றன வென்பதுதான் பொருத்தமாகுமே யல்லாமல், அவை மரத்தை, மலையை, நிலத்தைத் துளைத்துச் சென்ற னவெனக் கூறுதல் ஒரு சிறிதும் பொருத்தமுடையதாகாது; பொருத்தமுடைத் தாகாமையின் அக்கூற்று உண்மை யுடைத்தாகலுமில்லை. இல்லையாகவே, இராமன் மராமரங் களை ஏழனை ஒரு கணையாற் றுளைத்துவிட்டனென்பது, பார்ப்பனர் இராமனது திறலை மிகுதிப்படுத்திக் காட்டு தற்குக் கட்டிவிட்ட ஒரு பொய்க்கதையே யாம். வால்மீகி இராமாயணத்திற் கட்டிவிடப்பட்ட இப்பொய்க்கதையினை உண்மையென நம்பிக் கம்பருந் தமிழில் இதனை எடுத்துப் பாடியது, பண்டைத் தமிழாசிரியரது மெய்வழக்கிலேயே பழகினார்க்கு உவர்ப்பினையும், வருத்தத்தினையுந் தாராதொழியுமோ?

இவ்வாறுகம்பர்நடவாதபொய்க் கதையாகிய இராமா யணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்தமை யால்,வடமொழிப்பொய்வழக்கிற்பழகிவிட்டஅவரது நா, அதன்கண் இலக்கியச் சுவை தோன்றக் கூறவேண்டும் இடங்களிலும் பொய் யாவனவே புனைந்துகூறி இழுக் கினார். இங்ஙனமே, கம்பர்க்குப் பின்வந்த தமிழ்ப் புல வர்களெல்லாரும், பொதுமக்களை ஏமாற்றுதற் பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண் மாரும் வடமொழியில் வரைந்துவைத்த பொய்யான புராணங்களையுந் தல புராணங்களையுமே பெரும்பாலுந் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய்வழக்கினை அடியோடழித்து விட்டார். இப்பிற்கால மொழிபெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங்களில் இலக்கியச் சுவை காணப் படுமேனும், முதலிலிருந்து முடிவு வரையில் அவற்றின்கட் பொய்யாவனவே தொடுக்கப்பட்டிருத்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய் யறிவு விளக்கத்தினையுந் தராது.

அற்றேல், ஆங்கிலம் முதலான இஞ்ஞான்றை நாகரிக மொழிகளிற் பொய்யாகப் புனைந்த கட்டுக் கதைகளுங், கட்டுக் கதைகண்மேற் பாடப்பட்ட செய்யுள் நூல்களுஞ் சாலப் பெருகி வருதலும், அவற்றின் பயிற்சியைச் சிறந்த அறிவுடையாரும் பாராட்டிப் பேசுதலும் என்னையெனின்; அப்பிற மொழிக் கட்டுக்கதைகளை ஆக்கிய புலவர்கள் அவற்றைக் கட்டுக்கதைகளென்றே கூறுதலோடு, அவற் றைப் பயில்வாரும் அவை பொய்யெனவே யுணர்ந்து அவையிற்றை அயர்வு தீர்ந்து இன்புறுதற் கருவியாகவே கைக்கொண்டு பயில்கின்றனர். அதனால் அந்நூல்களைப் பயிறலிற் றீங்கேதும் விளைவதில்லை.மற்றுப், பிற்காலத்துத் தமிழ்ப் புலவர்களோ வடமொழிக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து அவற்றுட் பொய்யாவன இவை, மெய்யாவன இவையென்று தெளியும் பகுத்தறிவு இல்லாதவர்களாய்ப், பொய்யை மெய்யாக நம்பித் தாம் அறிவு மழுங்குவதோடு, அப்பொய்யை மெய்யாகப் பிறரும் நம்புமாறு காட்டி அவரதறிவையும் மழுக்குவதால், இவரால் தமிழ்க்குந் தமிழ் மக்கட்கும் உண்டாங் கேடு அந்தோ! பெரிது! பெரிது!

என்று சொல்லுகிறார் மறைமலையடிகளார்.

இராமாயணத்தைப் படித்தால், மூடநம்பிக்கை அதிகமாகும்!


ஆகவே, நண்பர்களே! உண்மையை நிலைநாட்ட வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் இராமாயணத்தின் பக்கம் போக முடியாது. ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கின்றவர்கள் இராமாயணத்தைத் தூக்கக் கூடாது.

மூடநம்பிக்கையை அழிக்கவேண்டும் என்று நினைப் பவர்கள், இராமாயணத்தைப் படித்தால், மூடநம்பிக்கை அதிகமாகுமே தவிர, ஒழியாது.

இராமராஜ்ஜியம் என்பது இத்தனையும் சேர்ந்ததுதான் என்பதை மிகத் தெளிவாக இந்தக் கருவிகளின்மூலம் பார்க்கிறோம்.

ஆய்வுச் சொற்பொழிவு-5இல் சந்திப்போம்!


அடுத்தபடியாக, கம்பன் புளுகும் வால்மீகி வாய்மை யும் எப்படிப்பட்டது என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் ஏராளம் இருக்கின்றன. அடுத்த கூட்டத்தில், நிச்சயமாக இந்த ஆய்வுச் சொற்பொழிவு-5 என்பது தொடரும். அதில் இன்னும் பலவற்றைத் தெளிவுபடுத்துவோம் என்று கூறி, உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

 

சென்னை, மே 22 இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் அய்ந்தாவது கூட்டமாக ‘கம்பனின் புளுகும் வால்மீகியின் வாய்மையும்’  எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சொற்பொழிவு நேற்று (21.5.2018) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. கழகத் துணைத் தலைவர் தொடக்க உரையாற்றினார். முதல் சொற்பொழிவு தொடங்கி அய்ந்தாவது கூட்டத்திலும் அதே உணர்ச்சியுடன், பேரார்வத் துடனும் அறிஞர் பெருமக்கள் பலரும் தொடர்ச்சியாக கலந்துகொண்டனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அய்ந்தாவது கூட்டத் திலும் பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுகள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வுகளை எடுத்துக்காட்டி ஆதாரபூர்வமாக பல்வேறு தகவல்களை முன்வைத்து ஆய்வு சொற்பொழிவாற்றினார். பொழிவின்  முடிவில் மேலும் ஆறு, ஏழாவது கூட்டம் நடைபெறும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தபோது, பார்வையாளர்கள் கரவொலியுடன் வரவேற்றனர்.

துணைத் தலைவர் தொடக்க உரை

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவ ரையும் வரவேற்று தொடக்க உரையாற்றினார்.

தொடக்கவுரையில் அவர் குறிப்பிட்டதாவது: இராமா யணம் குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆய்வுரை இந்த அளவுக்கு இராமாயணத்தில் கூறுவதைப் போல் அனுமான் வாலாக நீண்டு கொண்டிருக்கிறது என்று சொன்னால், பேச வேண்டிய அவசியம் உள்ளது. இது அய்ந் தாவது கூட்டம். மத்தியில் ஆள்பவர்கள் இன்று இராமராஜ்யத்தை உண்டாக்குவோம் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.

இராமாயணத்தை எதிர்ப்பது என்பதில் தந்தை பெரியார், திராவிட இயக்கத்துக்கு நீண்ட வரலாறு உள்ளது. திருப்பூரில் 1922ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் காங்கிரசிலிருந்தபோதே இராமாயணத்தை எதிர்த்துப்பேசியுள்ளார். ஜாதி இழிவை ஒழிக்க வேண்டுமானால், இராமாயணம், மனுஸ்மிருதியை கொளுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.

கான்பூருக்கு 1959ஆம் ஆண்டில் தந்தை பெரியார் சென்றார். ஆசிரியர் அவர்களும் உடன் சென்றார். ரிபப்ளிகன் பார்ட்டி ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. ரிபப்ளிகன் கட்சியினர் இராணுவ உடையுடன் வாளேந்தி பெரியாருக்கு வரவேற்பு அளித்தார்கள்.

தந்தை பெரியார் எழுதிய இராமாயண கதாபாத்திரங்கள் நூலுக்கு விதிக்கப்பட்ட தடை நெருக்கடி காலத்திலேயே நீக்கப்பட்டது.

தந்தைபெரியாரிடம் வானொலியில் வெளியிடுவதாகக் கூறி, பதிவு செய்யப்பட்ட உரையை வானொலியில் ஒலிபரப் பாததைக் கண்டித்து, நாள் குறிப்பிட்டு போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார். அதன்படி 1.8.1956இல் ராமன்பட எரிப்புப் போராட்டம் நடைபெற்றது-. தந்தை பெரியார் முன்கூட்டியே கைது செய்யப்பட்டார். தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட பலரும் அப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள்.

அண்ணாவும், கலைஞரும் ஒரு திரைப்படத்தைக் காண்ப தற்காக திரையரங்கம் சென்றார்கள். அப்போது, திரைப்படத் திற்கு முன்பாக அரசு நியூஸ்ரீல் ஓடியது. அதில் டில்லியில் ராம் லீலா நிகழ்ச்சி காண்பிக்கப்பட்டது. அப்போது, கலைஞர் அண்ணாவிடம் நம்மை இழிவுபடுத்துவதைப்போல் செய்கிறார்களே, நாமும் இதை எதிர்த்து செய்யலாமே என்றார். திராவிட நாடு இதழில் அண்ணா இத்தகவலை வெளியிட்டார்.

டில்லியில் நடக்கின்ற ராம் லீலா திராவிட இனத்தை இழிவு படுத்துவதாக உள்ளது. ஆகவே, பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டவர்கள் அதில் கலந்துகொள்ளக்கூடாது. ராம் லீலா நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றும், அப்படி செய்யவில்லை என்றால்,  ராவண லீலா நடத்துவோம் என்று  அன்னை மணியம்மையார் முன்னதாகவே ராவண லீலா போராட்டத் தேதியைக் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் உங்கள் தலைவர் பெயரும் ராமசாமிதானே என்று மழுப்பலாக கூறியிருந் தார்கள். அன்னை மணியம்மையார் திட்டமிட்டபடி ராவண லீலா போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.  கலைஞர் ஆட்சி என்பதால், திராவிட நாடு இதழில் வெளி யான குறிப்பை எடுத்து விடுதலையில் போட்டிருந்தோம். கலைஞரும் போராட்டத்துக்கு அனுமதி அளித்து, காவல்துறை பாதுகாப்பு அளித்து, கைது செய்தார்.

அன்னை மணியம்மையார் முன்னதாக கைது செய்யப் பட்டார். ஆசிரியர் உள்ளிட்ட பலரும் ராமன், லட்சுமணன், சீதை படங்களைக் கொளுத்தி கைது செய்யப்பட்டார்கள். கீழமை நீதிமன்றத்தில் ராவணலீலா போராட்டத்தில் கைதானவர்களுக்கு ஆறு மாத தண்டனை அளிக்கப்பட்டது.

அன்னை மணியம்மையார் மேல்முறையீடு செய்தார். நீதிபதி சோமசுந்தரம் பக்திமான். எப்படியும் ஆறு ஆண்டு தண்டனை கொடுத்துவிடுவார் என்று நினைத்த நேரத்தில், இராமாயணத்தை தந்தை பெரியார் நீண்ட காலமாக எதிர்த்து வந்துள்ளார். இராமாயணம் பரப்புவதற்கு உள்ள அதே உரிமை இராமாயணத்தை எதிர்ப்பதற்கும் உண்டு என்று கூறி ஆறு மாத கால தண்டனையை ரத்து செய்தார். அதுவும் நெருக்கடி காலத்தில். இன்று கடவுள்கள்குறித்தும், இராமாயணம் குறித்தும் நாம் பேசுகின்றோம் என்று சொன்னால், அன்னை மணியம்மையார் பெற்றுத்தந்த உரிமையாகும். தமிழர் தலைவர் அவர்கள் இன்று அய்ந்தாவது கூட்டம் பேசுகிறார்.

நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய கோயில்கள் தோன்றியது ஏன்? மற்றும் தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு ஆகிய நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டார். இரண்டு நூல்களின் மொத்த நன்கொடை மதிப்பு ரூ.130. சிறப்புக்கூட்டத்தில் ரூ.30 தள்ளுபடியுடன் ரூ.100க்கு வழங்கப்பட்டது.

த.கு.திவாகரன், பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர் செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆ.வெங்கடேசன், கொடுங்கையூர் கோபால், ஆவணப்பட இயக்குநர் விஜயராஜ், ஆதம்பாக்கம் சவரியப்பன், சைதை மதியழகன், ஊரப்பாக்கம் சீனுவாசன், பெரியார் பிஞ்சு க.கனிமொழி, மாணவர் கழகம் தொண்டறம் உள்ளிட்ட பலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெருமகிழ்வுடன் நூல்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

கலந்து கொண்டவர்கள்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவர் பா.வீரமணி, கவிஞர் கண்மதியன், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு, வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், துணை செயலாளர் கி.இராமலிங்கம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன் உள்பட  பலர் கலந்துகொண்டனர்.

-  விடுதலை நாளேடு, 22.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக