பக்கங்கள்

செவ்வாய், 3 ஜூலை, 2018

வழக்குப் போடட்டும் - நீதிமன்றத்தில் இராமாயணத்தை தோலுரிப்போம்!

இராமாயணம்பற்றி நான் பேசுவதால் என்மீது


வழக்குப் போடுவதாக சு.சாமி சொல்லியிருக்கிறார்


சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் இடித்துரை




சன்னை, ஜூன் 29- இராமாயணத்தைப்பற்றி நான்தொடர் சொற்பொழிவு செய்வது குறித்து என்மீது வழக்குப் போடுவதாக சுப்பிரமணிய சாமி சொல்லியிருக்கிறாராம்; வழக்குப் போடட்டும் நீதிமன்றத்திலும் இராமாயணத்தைத் தோலுரிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் சொற்பொழிவு-7


22.6.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு சொற்பொழிவு-7 சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு தொடங்கி, அதே உணர்ச்சியோடு ஏழாவது பொழிவு நிறைவடையக்கூடிய இந்தக் கூட்டத்திற்கு இணைப்புரை வழங்கிய கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

ஏழு பொழிவுகளையும் கேட்டவர்களுக்குத் தனிப் பரிசு


இந்நிகழ்விற்கு தவறாமல் வந்து ஏழு பொழிவுகளையும் கேட்டவர்கள் என்று சொன்னால், அவர்களுக்குத் தனிப் பரிசு கொடுக்கவேண்டிய அளவிற்கு, வகுப்பைத் தவறாமல் அட்டெண்ட் செய்பவர்கள்போல, இங்கே வந்திருக்கின்ற அறிஞர்கள், சான்றோர்கள், தோழர்கள் எல்லோருக்கும் என் னுடைய பணிவன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூல பலத்தை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை


இந்தப் பொழிவு ஆரம்பித்த நேரத்தில், தந்தை பெரி யாரைக் கொச்சைப்படுத்தலாம்; தந்தை பெரியாரை இணைய உலகத்திற்கு, முகநூல் மூலம், டுவிட்டர்மூலம் எல்லாம் ஒரு தவறான படத்தை வரையலாம் என்ற ஆர்.எஸ்.எஸ். கும்பல், இந்துத்துவ கும்பல், பார்ப்பன இரட்டை நாக்குக் காரர்களுடைய முயற்சிகளுக்கு சரியான முறையில் பதில் கொடுக்கவேண்டுமானால், அவர்களுடைய தனிப்பட்ட தலைவர்களைப்பற்றியோ, கொள்கைகளைப் பற்றியோ விமர் சிப்பதைவிட, மூலபலம் எங்கே இருக்கிறது என்று தெரிந்து, அதனை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று நம்முடைய அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

அதுபோல, அவர்கள் இராமனை வைத்துத்தான் பிழைக்கிறார்கள். இராமாயணத்தில் அன்றைக்கு என்ன நடந்ததோ - அதை இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆட்சிகள் மாறும் - காட்சிகள் மாறும் - காலங்கள் மாறும் - ஓலங்கள் அவ்வப்பொழுது வெவ்வேறு வகையில் ஒலிக்கும். ஆனால், அதேநேரத்தில், இவர்களுடைய முறை என்பது இருக்கிறதே, இது பல்வேறு ரூபத்தில், சுலபமாக கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வந்துகொண்டிருக்கும்.

ஒரு செய்தியை நீங்கள் ஏடுகளில் பார்த்திருப்பீர்கள். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவர்களுடைய கொலை செய்யப்பட்டு இவ்வளவு நாள்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் குற்றவாளிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸினுடைய ஒரு பிரிவு!


அதுபோலவே, மராட்டியத்தில் கொலை செய்யப்பட்ட பன்சாரே, அதேபோன்று கல்புர்கி போன்றவர்களை சுட்டுக் கொன்றவர்கள் யார்? திட்டமிட்டு கொலை செய்தவர்கள் யார்? என்று பார்க்கின்றபொழுது, ராமசேனா என்று சொல்லக் கூடிய தீவிரவாத பிரிவு. ஆர்.எஸ்.எஸினுடைய துணை அமைப் புகளாக 10 குழுக்கள் இருக்கின்றன, பல்வேறு பெயர்களில்.

அபினவ், பஜ்ரங் தள் (பஜ்ரங் என்றால் குரங்கு; தள் என்றால் சேனை என்று அர்த்தம். அதாவது குரங்கு சேனை) இது புரியாமல் நம்மூரில் பஜ்ரங் தள் என்ஜினியரிங் காலேஜ் என்று வைத்திருக்கிறார்கள். மாணவர்களை ஒழுங்கு படுத்தவேண்டும் என்று நாம் கவலைப்படுகிறோம். இந்தப் பெயரை புரிந்துதான் வைத்திருக்கிறார்களா? அல்லது புரியாமல் வைத்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான்; மறுபடியும் மனிதனை குரங்காகவே ஆக்கவேண்டும் என்பதற்காகத்தான் பொறி யியல் கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கிறோம் என்று சொன்னார் என்ன அர்த்தம். அவர்கள்மேல்  எங்களுக்கு வருத்தம் இல்லை, பரிதாபம்தான்.

இது ஒரு தந்திரமாகக்கூட இருக்கலாம். ஏனென்றால், கல்லூரி தொடங்கும் நேரத்தில், பா.ஜ.க. ஆட்சி இருந்த கார ணத்தினால், இந்தப் பெயரை வைத்தால், அதற்கு ஆட் சேபணை தெரிவிக்காமல் அனுமதி கிடைத்துவிடும் என்றுகூட அவர்கள் நினைத்திருக்கலாம். இது என்னுடைய யூகம்தான்; தவறாகவும் இருக்கலாம்; சரியாகவும் இருக்கலாம்.

அதுபோன்று, வானர சேனை என்று சொல்லக்கூடிய வர்களை இவ்வளவு நாள்களுக்குப் பிறகு அவர்களைக் கைது செய்திருக்கிறார்கள்.

இராமாயணத்தைப்பற்றி சொல்லவேண்டியவர் வானர சேனையைப்பற்றி பேசுகிறாரே என்று நினைக்கலாம். இதற்குத் தொடர்பு இருக்கிறது.

நீ ஒரு பெண்ணைக் கொல்லவேண்டும்!


இன்றைய நாளேடுகளில் வெளிவந்த செய்திகளைப் பார்த்தீர்களேயானால், கவுரி லங்கேஷ் அவர்களை கொலை செய்தவனை கைது செய்து அவனிடம் விசாரித்ததில், அவன் என்ன சொன்னான் என்றால்,

ஓராண்டாக துப்பாக்கி சுடக்கூடிய பயிற்சியை எங்களுக் குக் கொடுத்தார்கள்; எதற்காக இந்தப் பயிற்சி? என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர்கள் சொன்ன பதில், நீ ஒரு பெண்ணைக் கொல்லவேண்டும் என்றார்கள்.

எந்தப் பெண் என்றெல்லாம் எனக்குத் தெரியாது என்று இப்படி பல தகவல்களை அந்தக் கொலைக் குற்றவாளி தெரி வித்தான்.

நாம் நாகரிகக் காலத்தில்தான் வாழுகிறோமா? கோட் சேக்கள் இன்னும் மறையவில்லை. கோட்சேக்கள் நிறைய இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

கோட்சேவை உயர்த்திப் பிடிக்கிற ஓர் அமைப்பு - இன்றைக்கு அரசாங்கத்தையே நடத்தக்கூடிய அளவிற்கு இருந்து, நியாயமாகப் போராவேண்டிய மக்களையெல்லாம் பயங்கரவாதிகள் என்று சொல்கிறார்கள்.

குடை ராட்டினத்தில் சுற்றுபவர்களுக்கு, உலகமே சுற்றுவது போல் தெரியும். அதுபோன்ற ஒரு உணர்வு. அதற்குப் பொருத்த மாகத்தான் ராமசேனா'' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

என்னுடைய மதத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் நான் கொலை செய்தேன் என்கிறான்.

மதத்தைக் காப்பாற்றுவதற்கு இவனுக்கு மதம் பிடித்தி ருக்கிறது. மதம் பிடித்த காரணத்தினால்தான் அவன் அப்படி செய்திருக்கிறான்.

இதற்கு மூலம் எங்கு இருக்கிறது என்றால், இராமாயணத்தில். ராமாயணத்தை அவர்கள் வாழ்க்கை நெறியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்றையிலிருந்து இன்றுவரை அவர்கள் ஏன் இராமன், இராமன் என்று சொல்கிறார்கள்.

படித்தவர்கள், பெரிய ஆட்கள், இராஜகோபாலாச்சாரியார் கவர்னர் ஜெனரலாக இருந்தவர். பெரியார் இந்தப் பிரச்சி னையை 1930 ஆம் ஆண்டுகளில் இருந்து சொல்கிறார். அதற்கு செல்வாக்கு வருகிறது என்று தெரிந்தவுடன்,

சக்ரவர்த்தித் திருமகன் - மகாபாரதம் வியாசர் விருந்து இதுதான் நான் என்னுடைய வாழ்க்கையிலேயே மன நிறைவான பணி என்று அவர் சொல்கிறார்.

வெள்ளி நாக்கு பேச்சாளர் சீனுவாச சாஸ்திரி


வெள்ளி நாக்கு பேச்சாளர் என்று பெயர் கொண்ட வலங்கைமான் வி.எஸ்.சீனுவாச சாஸ்திரி அவர்கள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்தார். நாங்கள் எல்லாம் அங்கே படிப்பதற்கு முன்பு. பாலதண்டாயுதம் போன்றவர்கள் படித்த காலத்தில், இவர் துணைவேந்தரானபோது, அங்கே கலவரங்கள் எல்லாம் நடந்தன.


இன்னுங்கேட்டால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பட்டமளிப்பு விழா மண்டபத்தை மிகப்பெரி தாகக் கட்டி அதற்குப் பெயர் என்னவென்றால், சீனுவாச சாஸ்திரி ஹால் என்று பெயர்.


அந்த சீனுவாச சாஸ்திரி அவர்கள், அவருடைய நுனி நாக்கு ஆங்கில உச்சரிப்பைப் பார்த்து வெள்ளைக் காரர்களே வியந்தார்கள் என்று கூறுவார்கள்.  குடந்தை யைச் சேர்ந்த வலங்கைமான் அக்கிரகாரத்தவர் அவர். அப்படிப்பட்ட அவர், 1944 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பிறகு, மயிலாப்பூரில் சமஸ்கிருத கல்லூரியில் இருக்கிறது - அதை இப்போது, பல்கலைக் கழகம் ஆக்கவேண்டும் என்று முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


இராமாயணப் பேருரைகள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகள்!


சென்னை பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத் துறை உண்டு. அந்தத் துறைக்கு டாக்டர் வி.ராகவன் என்பவர் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருடைய தலை மையில், 1944 ஆம் ஆண்டு, மயிலாப்பூர் வாசிகள், திரு வல்லிக்கேணிவாசிகள் எல்லோரையும் அழைத்து, இங்கே நாம் இராமாயணத்தைப்பற்றி விளக்கி சொல்வதுபோன்று, வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம், Lectures and Ramayana  என்ற தலைப்பில் சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் உரையாற்றுவார்.

அந்த உரைகள் எல்லாம் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. கலைமகள் அச்சகத்தினர் இதைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதற்குத் தலைப்பு இராமாயணப் பேருரைகள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகள் (1944 ஆம் ஆண்டில் ஆற்றிய சொற்பொழிவு)

அதிலிருப்பதை அப்படியே உங்களுக்குப் படித்துக் காட்டுகிறேன்.

ராமனுடைய குணத்தை விளக்கும் மற்றொரு விஷயத்தை இங்கே எடுத்துக் கூறுகிறேன். தாடகா வனத்தில் தாடகையைச் சந்தித்தபொழுது தான் ராமனும் லக்ஷ்மணனும் முதல்முதலில், போர்முறையைப் பயிலுகிறார்கள். விசுவாமித்திரர் தசரதரிடம் மாரீசனும் சுபாகுவும் என் விரோதிகள் என்று கூறுகிறாரே தவிரத் தாடகையைப்பற்றிப் பேசவே இல்லை. அதற்கு என்ன காரணம் இருக்கக்கூடுமென்று யோசித்துப் பார்ப்போம். வேள்விக்கு அவள் ஒன்றும் விக்கினம் செய்யாமலில்லை; யஜ்ஞ, விக்நகரீ என்றுதான் விசு வாமித்திரர் அவளைப்பற்றிக் கூறுகிறார். தசரதர் ராமரை அவ்வளவு சுலபமாய்த் தம்முடன் அனுப்பிவிட மாட்டார் என்று விசுவாமித்திரருக்குத் தெரியும், மாரீசன், சுபாகு ஆகிய இருவரைத் தவிரத் தாடகை என்ற பெண் வேறு இருக்கிறாள் என்று கூறினால், அவருக்குப் பின்னும் அதிகப் பயமாகிவிடும். இந்தக் காலத்திற்போல் அந்தக் காலத்திலும் போர்புரிந்து பழக்கமான ஒரு யுத்த வீரன் ஸ்திரீயைக் கொல்லுவதற்குத் தயங்குவான். தாடகையைக் கொன்றலன்றி அவள் புரியும் உபத்திரவம் நீங்காது, என்று விசுவாமித்திரருக்குத் தெரியும். உங்கள் புத்திரனை, அழைத்துப்போய், முதல் முதலில் ஒரு ஸ்திரீயைக் கொல்வதோடு அவன் யுத்தப் பயிற்சியைத் துவக்கப்போகிறேன் என்று தசரதரிடம் சொன்னால் எப்படிச் சரியாக இருக்கும்? ஆகவேதான் மனத்தில். வைத் திருந்த இந்த விஷயத்தை அவர் தசரதரிடம் சொல்லாமல், நிறுத்திக் கொண்டார் என்று நான் ஊகிக்கிறேன்.

தாடகையைப் பார்ப்பதற்கு முன்பே விசுவாமித்திரர் ராமனிடம், அவள் மிகவும் தந்திரமுள்ளவள், அவளி டம் தயை காட்ட வேண்டாம். அவளை உடனே வதம் செய்; தயங்காதே; ஸ்திரீவதமாயிற்றே என்று சற்றும் பார்க்காதே. அவளைக் கொல்லுவதுதான் முறை என்று கூறுகிறார். பிரஜைகளுக்கு. ஏற்பட்ட இடுக் கண் களிலிருந்து அவர்களைக் காப்பதுதான் உன்னைப் போன்ற ராஜகுமாரர்களின் முதற் கடமையாகும். அதற்குத் தடையாக இருக்கும் யோசனைகளைக் களைய வேண்டும். ஸ்திரீயைக் கொல்ல வேண்டுமென்றால் கொன்றுதான் ஆகவேண்டும். இரக்கம் காட்டக்கூடாது  என்று மேலும் எச்சரித்துச் சொல்லுகிறார்.

இன்னொரு செய்தியை இங்கே உங்களுக்குச் சுட்டிக் காட்டவேண்டும். அண்மையில் வெளிவந்த ஒரு அற்புதமான ஆய்வு நூல் கம்பரின் மறுபக்கம் புலவர் ஆ.பழனி அவர்கள் எழுதிய நூல் இது. பாவலர் பழனி அவர்கள் சிறந்த ஆய்வாளர்; காரைக்குடியில் இருக்கிறார்.

புலவர் பழனி எழுதிய கம்பரின் மறுபக்கம்


இந்த கம்பரின் மறுபக்கம் நூலினை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' வெளியிட்டு இருக்கிறது.

அதில் ஒரு செய்தி:

ஒரே காட்சி- இரண்டு நூல்களிலிருந்து இரண்டு ஆதா ரங்கள். சீனுவாச சாஸ்திரியார் 1944 ஆம் ஆண்டு சொன்னதை ஒரு பக்கத்தில் சொல்லியிருக்கிறேன்.

அதோடு அண்மையில் வெளிவந்த ஆய்வாளர் புலவர் பழனி எழுதிய கம்பரின் மறுபக்கம் என்ற நூலில் இந்தக் கருத்தை சொல்கிறார்.

வேள்வியை இயற்றுபவர்கட்கும், அதை எதிர்ப்ப வர்க்குமான போராட்டந்தான் இராமாயணத்தின் அடிப் படை என்பது தெளிவாகி விடுகின்றது. இந்திய வரலாற்றில் வேள்வியை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இருந்துள்ளனரா என்றொரு வினாவை எழுப்பினால், ஆம் என்றே விடை வரும். வைதிகர்கள் வேள்வியை ஆதரித்தனர். சமண - பவுத்தர்கள் அதனை எதிர்த்தனர். இந்திய வரலாற்றேடுகளில் நாம் எங்கும் காணக் கூடியது இந்தச் செய்தி.

தயரதன் அவைக்கு விசுவாசித்திரர் வருகின்றார். வந்தவர் இராமனை எனக்குக் கொடு என்று கேட் கின்றார். எதற்காக என்று வினவுகின்றான் தயரதன். விசுவாமித்திரர் நாங்கள் செய்யும் வேள்விகளை எல்லாம் இராவணனும், அவன் அத்தை தாடகையும் வந்துஅழிக்கின்றனர்.அவர்களைஅழிக்கவும்எங்கள் வேள்வியை முற்றுவிக்கவும் இராமனைக் கொடு என்று கேட்க வசிட்டரின் பரிந்துரைக்கு ஏற்ப இராமன் விசுவாமித்திரருடன் அனுப்பப்படுகின்றான். இப் பொழுது காப்பியத்தின் மய்யக் கரு எது என்பது விளக்க மாகிவிடுகின்றது.

எனவே, இராமாயணம் என்பது இருக்கிறதே, கட்டுக் கதையாக இருந்தாலும், கற்பனைக் கதையாக இருந்தாலும், இரண்டு பண்பாடுகளுடைய போராட்டங்கள். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொல்வார், இனப் போராட்டம், பண்பாட்டுப் போராட்டம் என்று சொல்வார். அந்தப் பண்பாட்டு போராட்டத்திற்கு மய்யக் கரு எதுவாக இருக்கிறது என்றால், யாகம். யாகத்தைக் கெடுக்கிறார்கள் என்றார்கள். அசுரர்கள் எல்லாம் எங்கள் யாகத்தைக் கெடுக்கிறார்கள் என்று தேவர்கள் முறையிட்டார்கள்.

சுப்பிரமணிய சாமியே, உன்னுடைய பூச்சாண்டி வேலை  எங்களிடம் வேண்டாம்!


சுப்பிரமணிய சாமியிடம் யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது - வீரமணி இராமனைப்பற்றி பேசுகிறார் என்று.


அப்படியா? அவர்மீது வழக்குப் போட்டு, நீதிமன்றத் திற்கு அழைத்து சிறையில் தள்ளுகிறேன் என்கிறார்.


நாங்கள் என்னமோ சிறைச்சாலையையே பார்க் காததுபோல், இவர், நெருக்கடி காலத்தில் மிசா காலத்தில் தேடப்பட்ட கைதி. நான் சிறையில் ஓராண்டு இருந்து அடிபட்ட கைதி.


ஆகவே, எங்களிடம் உன்னுடைய பூச்சாண்டி வேலை வேண்டாம்.


நீங்கள் சிறைச்சாலைக்குப் பயந்து ஓடிய ஆள்; நாங்கள் சிறைச்சாலை அழைப்பதற்கு முன்பே தயாராக நின்றவர்கள்.


நான்தான் முதல் கூட்டத்திலேயே சொல்லியிருக்கி றேனே, அவசியம் வழக்குப் போடுங்கள்; இங்கே பேசி னால் போதாது; வீதிமன்றத்தில் பேசினால் போதாது; நீதிமன்றத்தில் எங்களுடைய கருத்தைப் பதிவு செய்ய வேண்டாமா? என்றேன்.


ஏன் யாகத்தை அவர்கள் அனுமதிக்கவில்லை.

எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு புலவர் பழனி அவர்கள் தன்னுடைய முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

ஆனால், வால்மீகி இராமாயணத்தில் தாடகையைப்பற்றி அவன் பேசவேயில்லை. ஏனென்றால், அப்படி பேசினால், பெண்ணை வதம் செய்யவேண்டுமே என்று.

சீனுவாச சாஸ்திரி என்ன சொல்லுகிறார்?


சீனுவாச சாஸ்திரி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

இதற்கு முன்பு நடந்த ஸ்திரீ வதங்களைப்பற்றிச் சொல்லி, விசுவாமித்திரர் மேலும் வற்புறுத்திக் கூறவே, ராமர் அதற்குச் சம்மதிக்கிறார். உன்னைத்தான் முதல் முதலாக ஸ்திரீயை வதம் செய்யும் முறையற்ற காரியத்தைச் செய்யும்படிச் சொல்வதாக நினைத்துக்கொள்ளாதே. பெரியவர்கள் எல்லாரும் அதைச்  செய்திருக்கிறார்கள். இந்திரன் மந்தரையைக் கொன்றான். பிருகு பத்தினியை மகாவிஷ்ணுவே வதம் செய்தார். பரசுராமர் தம் தாயையே கொன்றார். ஆகவே, இதில் உனக்கு அருவறுப்புத் தோன்ற வேண்டியதில்லை என்கிறார். ராமரும் இதைத் தவறாக நினைக்காமல், என் தந்தை என்னைத் தங்களுடன் அனுப்பிய பொழுது தாங்கள் எது சொன்னாலும் மறுக்காமல் உடனே செய்யக் கட்டளையிட்டிருக்கிறார். என் தந்தை பெரிய சக்கரவர்த்தி; தாங்களோ பெரிய ரிஷி, என் குரு. தங்கள் சொல்லை எதற்காக நான் மீறி நடப்பேன்? என்கிறார்.

குருவின் சொல்லைக் கேட்டு நடப்பது என் பெரும் கடமையாகையால் தாட...கையை வதம் செய்வேன்; ந ஸந்தேஹ:- இதில் அய்யமில்லை என்று ராமர் கூறினாலும், சிறிது நேரம் கழித்துத் தாடகையைக் கண் டதும் அவரது மனச்சாட்சி அவளைக் கொல்ல இடம் தரவில்லை. லஷ்மணா, இந்தப் பயங்கர ரூபமுள்ள ராக்ஷஸியைத் தைரியமில்லாதவர்கள் பார்க்கும்பொழுதே உயிரை விட்டு விடுவார்கள். ஆயினும் இவள் ஸ்திரீ. அதை எப்படி மறுப்பது? விசுவாமித்திர மகரிஷிக்கு இவளால் துன்பமில்லாமலிருக்க வேண்டுமென்பது ஒன்று தான் நமது கொள்கை. இவளைச் சக்தியில்லாமல் செய்துவிடுகிறேன். இவள் கைகளை வெட்டிக் காதுகளை அறுத்து விரூபமாக்கி அனுப்பிவிடுவோம். அப்புறம் இவளால் எந்த இம்சையும் ஏற்படாது என்று கூறி, ஒரு பாணத்தினால் அவள் கைகளை வெட்டி வீழ்த்துகிறார். தானும் ஒரு பாணத்தைப் போட்டு, லஷ்மணன் அவள் காதுகளையும், மூக்கையும் அறுத்தெறிகிறான். ஆனால், தாடகையோ இதற்கெல்லாம் சிறிதும் சளைக் காமல் அவர்கள் மீது கல்மாரி பொழிகிறாள். பல உரு வங்களை எடுத்துக் கொண்டு அவர்கள் கண்ணில் படாமல் மறைந்திருந்து துன்புறுத்துகிறாள். ராமனும், லக்ஷ்மணனும் ஒலி வந்த இடத்தை நோக்கி அம்புகளைப் பொழிகிறார்கள். ஆனால் அவர்களின் முயற்சி அதிகம் பலிக்கவில்லை . அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்த விசுவாமித்திரர், இவளுக்கு நீ கருணைகாட்ட வேண்டியதில்லை, ராமா! இவள் அத்தகைய ஸ்திரீ அல்ல; இவளை வதம் செய்துவிடு என்று சொன்னேன். சூரியன் அஸ்தமிக்கும் வேளை வந்துவிட்டது. இன்னும் அய்ந்து நிமிஷம் கடந்தாலும் பிறகு அதிகத் தாமதமாகிவிடும். சூரியன் அஸ்தமித்துவிட்டால் இந்த ராக்ஷஸர்கள் பகல் வேளையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகப் பலம் பெற்றவர்களாகிவிடுவர். இப்பொழுதே இவளைத் தொலைத்துவிடு என்று கூறியதைக் கேட்டு ராமர் உடனே தாடகையை வதம் செய்கிறார்.

அறியப்படாத தமிழ் மொழி


இன்னொரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்து கிறேன். அந்த நூலின் தலைப்பு அறியப்படாத தமிழ் மொழி என்ற நூலை எழுதியிருப்பவர் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர். சென்னை திருவான்மியூரில் உள்ள தடாகம் பதிப்பகத்தாரின் வெளியீடு.

இந்த நூலின் ஆசிரியர் கரச அவர்கள். இவர் எவ் வளவு தெளிவானவர் என்று சொன்னால், பண்பாட்டுப் படை யெடுப்பை எவ்வாறெல்லாம் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை டுவிட்டர் பகுதியில், இணையத்தில் அவர் மிகப் பிரபலமான கருத்துகளை எடுத்துச் சொல்லி,  பல பேர் மத்தியில் ஒரு சிறப்பான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சிறந்த சிந்தனையாளர். நிறைய படித்திருக்கிறார், ஆய்வாளர், இளைஞர் அவர். இப்படிப்பட்ட இளைஞர்கள் எல்லாம் நம் சமுதாயத்தில் இருப்பது நமக்கு மிகப்பெரிய பெருமையாகும்.

முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர்

இவரைப்பற்றி ஒரு சிறு குறிப்பு:

வடார்க்காடு மாவட்ட மரபில் தோன்றி, தென் தமிழக / ஈழ மரபுகளில் ஆழ ஊன்றி, சிங்கை முதலான கீழை நாடுகள், அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கக் கண்டங்களில் பரவலான பயணம் செய்து வருவதால், ஆங்காங்குள்ள மொழி மரபுகளைத் தமிழோடு ஒப்புநோக்கலும், மொழி வேர்ச்சொல் ஆய்தலும் இவர் நனி விருப்பம்.

தொழில்நுட்பம் பயின்று வங்கியியலில் பணியாற்றி வரினும், யுசி பர்க்கிலி -இல் தமிழியல் முனைவர் பட்டம் பெற்று, பகுதி நேரப் பேராசிரியராகவும் வலம் வருபவர்.

தமிழ் மட்டுமன்றி வடமொழியும் (சமஸ்கிருதம்) பயின் றமையால், இரு வேறு மரபியல் நுனித்து வேறுபடுத்திக் காட்ட வல்லவர். சாம வேதம் / சாந்தோக்ய உபநிடதப் பாடம் வல்லார். சமணம், பவுத்தம், கிறித்துவம், இசுலாம் உள்ளடக்கிய தமிழின் பக்தி இலக்கியத்தை ஆழ வாசித்து, ஆழ்வார் அருளிச் செயலும், நாயன்மார் நற்றமிழ்த் தேவாரங்களும், இராமனுச மரபுகளும், திராவிட / தமிழ் இயக்க வரலாறும் நனி பயின்றவர்.

எது பயின்றிடினும், இயற்கையோடு இயைந்த வாழ்வான சங்கத் தமிழே இவரின் உளக் காதல்!  உரையாசிரியர்கள் கடந்து மூலநூலின் நேரடியான வாசிப்பு விழையும் இவர், தொல்காப்பிய ஓதுவார், அகம் சார் திருக்குறள் - புறம் சார் அறிவியல் இவ்விரு நெறிகளே, வரும் தமிழ்த் தலைமுறையின் விடியல் என்பது இவர் துணிபு!

இந்த நூலை வாய்ப்புள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள்.

இந்த நூலில் இராமன், கம்ப இராமாயணம், கம்பன் புளுகை - ஓர் அற்புதமான செய்தியை சொல்கிறார்.

இதற்குத் தொடர்பான ஒரு செய்தி. பெண்களை வதம் செய்வது, கொல்லுவது எப்படி என்பதை சின்ன வயதில் சொல்லிக் கொடுத்தார்கள். அதற்கடுத்து எப்படி வருகிறது என்று இந்நூலில் பல்வேறு செய்திகள் களஞ்சியம் போல் எழுதப்பட்டு இருக்கிறது.

கம்பன் தலைவி = நடத்தை நாயகி; இயற்கை நாயகி அல்ல!

சங்கத் தமிழ்/சிலப்பதிகாரம் = = Inclusive Morals, அணைக்கும் அறம்.

கம்ப ராமாயணம் = Exclusive Morals விலக்கும் அறம். அதான் பரத்தை / Illigitimate Child  என்ற ஒவ்வாமை இல்லை , சிலம்பில்! கம்ப ராமாயணத்தில் அந்த ஒவ்வாமை உண்டு! மனிதம் இல்லை பக்தி உண்டு!

கம்பன், வடநெறிக் காப்பியமே செய்தாலும், தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றி மாற்றியே செய்தான்! என்று பெருமை கொப்பளிக்கச் சொல்வார்கள் பட்டிமன்றத்தில் நல்லது; ஆனால், அத் தமிழ்க் கலாச்சாரம் (பண்பாடு) என் பது என்ன? பெண்ணுக்கு (மட்டும்) நடத்தை விதிகள், கற்புப் போர்வை போர்த்துவதா? அப்படி இல்லையே சங்கத் தமிழில்? அப்பறம் என்ன அது தமிழ்க் கலாச்சாரம்?

அயலான் மனையில் வாழ்ந்தவளே, அவன் போட்ட சோற்றை மூக்கு பிடிக்கத் தின்னவளே; நீ இன்னுமாடி சாவலை? உன்னை மீட்க வரலை டீ! எங்கள் தசரதகுல மானம் மீட்க வந்தேன். நிலத்தில் கிடைத்தவளே; பிறப்பு அறியாதவளே - இதெல்லாம் தான் தமிழ்க் கலாச்சாரமா? ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை? உன்னை மீட்பான் பொருட்டு, உறுபகை கடந்திலேன்;

என்னை மீட்பான் பொருட்டு, இலங்கை எய்தினேன்! அருந்தினையே? நறவு அமைய உண்டியே?

நன்மைசால் குலத்தினில் பிறந்திலை; நிலத்தினில் பிறந்தமை!

(யுத்த காண்டம், திருவடி தொழுத படலம் 48-55)

ஒரு பெண்ணை , பொதுவில் அத்தனை பேர் பார்க்க சாவு டீ என்பதா, தமிழ்க் கலாச்சாரம்? அன்றே வசையில், ஜாதி/பிறப்பு வருகுது பார்த்தீர்களா? நன்மை சால் குலத்தில் பிறக்கலை! பூமியில் தோண்டக் கிடைச்சவள் தானேடீ நீ? எனும் பிறப்பு சார்ந்த வசை! வால்மீகி தான் பெண் கொடு மையாக எழுதுகிறார்; ஆனால் கம்பன், சங்கத் தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஏற்ப அதையெல்லாம் மாற்றி இருக்கலாமே? ஆனால் மாற்றவில்லை! இராமன் ஒரு அவதாரம் - அவர் நினைத்தார் என்றால் சீதை எங்கே பிறந்தாள் என்று கண்டுபிடித்திருக்கலாம்; ஏனென்றால், அவர் முக்காலம் தெரிந்த ஞானி - ஆண்டவர் - கடவுள். பெண்ணை கொலை பண்ணலாம் என்கிறார்கள்; நீ ஏன் சாகலை என்கிறார்கள். இதுபோன்று பேசுவதற்கு என்ன காரணம்?

நண்பர்களே, மனுதர்மம் - அதுதான் வருணாசிரம தர்மம்தான்..

வருண தருமத்தின் அடிப்படையில், பிராமணன், சத்திரி யன், வைசியன், சூத்திரன் அதற்கும் கீழே அய்ந்தாவதாக பஞ்சமன் -அதற்கும் கீழே எல்லா ஜாதிகளையும் சேர்ந்த பெண்கள். அடிமைகளுக்கும் அடிமை - ஆகவே அடிமை களைக் கொல்லலாம். அடிமைகளுக்குப் படிப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கல்வி அறிவு கொடுக்கவேண்டிய அவசியமில்லை. அடிமைகளுக்கு சொத்துரிமைக்கு இடமில்லை.

பெண்களை வாழ வைப்பது திராவிடம் - அவர்களை அடிமையாக்கி அழிப்பது ஆரியம்!


ஏனென்றால், பெண்கள் அடிமைகளிலும் அடிமைகள். இதுதான் அதனுடைய தத்துவம். அந்தப் பெண்களை வாழ வைப்பது திராவிடம் - அவர்களை அடிமையாக்கி அழிப்பது ஆரியம்.

ஆரியம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? நிறைய பேர் குழப்பிக் கொள்கிறார்கள். இதுதான் அதற்குப் பதில் மிகவும் சாதாரண விஷயம் இதுதான்.

ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும்?


மறுபடியும் புலவர் பழனி அவர்கள் எழுதிய கம்பரின் மறுபக்கம் நூலுக்குச் செல்லலாம்.

அவருடைய முன்னுரையில்,

கம்பரின் மறுபக்கத்தைக் காண நான் எடுத்துக்கொண்ட முயற்சியையும், அதனால் கண்ட காட்சிகளையும் உங்கட்குக் காட்டி விட்டேன். இந்த அடிப்படைத் தடத்தை விட்டு விலகாமல் நீங்கள் நூலுக்குள்ளே செல்வீர்களேயானால், ஏராளமான சிவதூடனைகளைக் காணலாம். கம்பரின் மறுபக்கத்தைக் கண்கொள்ளாமற் கண்டு களிக்கலாம்.

மறுபக்கம் என்பது பின்பக்கத்தையும் குறிக்கும். மற்றொன் றையும் குறிக்கும். மறு என்ற சொல்லுக்கு குற்றம், களங்கம் என்றெல்லாம் கூடப் பொருள்கள் உண்டு. கம்பரின் மாபெரும் புலமையில் இது குற்றம் படிந்த பக்கம், களங்கம் படிந்தபக்கம் என்று நீங்கள் பொருள் கொள்வீர்களேயானால் அதனைத் தடுப்பது அரிதுதான். - புலவர் பழனி.

ஆகவே, கம்பரின் மறுபக்கம் என்கிற நூலில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. நம்முடைய நேரத்தைக் கருதி உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன்.

கம்பராயணத்தைப் பார்க்கும்பொழுது, பட்டிமன்ற பேச்சாளர்கள், ஸ்பெஷலிஸ்டுகள், சூப்பர் ஸ்பெஷலிஸ்டுகள் இவர்கள் எல்லாம் அதிகமாக சொல்வது என்னவென்றால், நாடு என்றால், எப்படி இருக்கும் என்பதற்கு கம்பன் சொல்லியதைப் பார்க்கவேண்டும் என்பார்கள்.

கம்பன் கண்ட நாடு அயோத்தி எப்படி இருக்கிறது என்றால், அதற்கு ஒரு இலக்கணம் வகுத்திருக்கிறார்.

வண்மை இல்லையோர் வறுமை இன்மையால்;

திண்மை இல்லையோர் செறுநர் இன்மையால்;

உண்மை இல்லைபொய் உரையி லாமையால்;

ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால் தண்டனை என்பதே கோசலத்தில் இல்லை; ஏனெனில் குற்றம் புரிகின்றவர் யாரும் கோசலத்தில் இல்லாமையால், சினங்கொள்கின்றவர் எவரும் அங்கே இல்லை; ஏனெனில் அங்கு வாழ்வார் அனைவரும் மனச் செம்மை உடையவர் ஆதலின், நல்லறம் புரிதல் அல்லது வேறெதனையும் அந் நாட்டு மக்கள் செய்யார் ஆதலின் கோசலத்திற்குப் புகழ்தான் உண்டு; பழியே கிடையாது.

கூற்றம் இல்லையோர் குற்றம் இன்மையால்;

சீற்றம் இல்லைதம் சிந்தையின் செம்மையால்; ஆற்ற நல்லறம் அல்லது இலாமையால்

ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே. கல்வியை முழுமையாகக் கல்லாதவர் எவரும் அங்கே இன் மையால் கல்லாதவர் என்று யாரையும் சொல்ல முடியவில்லை; அது மட்டுமன்று, இவர்தாம் கல்வியில் வல்லவர் என்று யாரையும் சிறப்பித்துக் கூற முடியவில்லை. அங்கு வாழ்கின்ற எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வங்களையும் பெற்று வாழ்கின்றார். ஆதலின் கோசலத்தில் வறியவர்களும் இல்லை; செல்வர்களும் இல்லை;

கல்லாது நிற்பார் பிறரின்மையின் கல்வி முற்ற

வல்லாரும் இல்லை, அவை வல்லார் அல்லாரும் இல்லை

எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்த லாலே

இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ!'' கம்பரின் கோசலக் கனவு இன்னும்கூட விரிந்து செல்கிறது. கோசலத்தில் வாழ்கின்ற மக்கள் தமக்குரிய பொருளைப் பாதுகாப்பாகப் போற்றிப் பாதுகாப்பது கிடை யாது; ஏனெனில் அங்கே பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கின்ற கள்வர் ஒருவரும் இல்லை. ஆதலின், அதுமட்டுமா? தன்னிடம் உள்ள ஒரு பொருளைப் பிறர்க்குக் கொடுத்துவிடலாம் என்று யாரேனும் எண்ணினால் அதுவும் முடியாது; ஏனெனில் அங்கே பிறர் பொருளை வாங்கிக் கொள்வதற்கு யாருமே இல்லை.

தெள்வார் மழையும் திரையாழியும் உட்க, நாளும்

வள்வார் முரசம் அதிர்மா நகர்வாழும் மக்கள்

கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்

கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ!''

இவ்வாறாகக் கோசல நாட்டையும், அதன் தலைநகரமாகிய அயோத்தி மாநகரத்தையும் கற்பனைக் கண்களால் கண்டு களித்துப் படைத்துக் காட்டுகின்றார். தன்னுடைய விருப் பங்களை எல்லாம் - ஆசைகளை எல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகின்றார். படிக்கின்ற நாம்கூட மயங்கித்தான் போய்விடுகின்றோம். அய்யோ! கோசலத்தில் பிறந்து வாழ்ந்திட நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே. இத்தகைய நாட்டில் ஒரு நாள் வாழ்ந்தால் கூடப் போதுமே! என்றெல்லாம் நாமும்தான் கற்பனைக் கவலையில் மூழ்கித் திணறுகிறோம்.

கம்பர் படைத்த அந்தக் கோசலத்தைக் கண்டு மகிழ நாம் மீண்டும் மீண்டும் பாலகாண்டத்தைப் புரட்டுகின்றபோது கனவுகள் மெல்லக் கலையத் தொடங்குகின்றன. கம்பரின் சொல் மயக்கத்தில் நாம் ஏமாந்துவிட்டோமோ என்று எண்ணுமாறு அழகியலுக்குள் இருந்து சில அவலட்சணங்கள் புறப்படுகின்றன. எவை எவை அங்கே இல்லை என்று சொன்னாரோ அவையெல்லாம் திரைக்குப் பின்னே இருந்துகொண்டு முகம் காட்டுகின்றன. நம்முடைய கற்பனை மயக்கம் கலைகின்றபொழுது கம்பர் கட்டுரைத்த காட்சிகள் குட்டிச்சுவர்களாக மாறி நின்று கோலங் காட்டுகின்றன. அதனை இனிக் காண்போம்.

1. நாட்டில் வறுமை என்பதே இல்லை. 2. தண்டனை என்பதே இல்லை; குற்றமும் இல்லை. 3. சினம் என்பதே கிடையாது. 4. நல்லறம் மட்டுமே செய்வர். 5. பிறர் பொருளைக் கவர்வார் இல்லை. 6. இல்லாரும் இல்லை; உடையாரும் இல்லை.

வறுமை இல்லையா?


கோசலத்தில் வறுமை என்பதே கிடையாது. கொள்வாரும் கிடையாது. கொடுப்பாரும் கிடையாது. எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தி வாழ்கின்றார்கள். இல்லாரும் இல்லை; உடை யாரும் இல்லை. என்றெல்லாம் கம்பர் கூறுவது உண்மையா?

அயோத்தி நகர மாந்தர் எவ்வாறு பொழுது போக்கினர் என்பதைக் கம்பர் இவ்வாறு விவரிக்கின்றார். சிலர் பிளிறுகின்ற யானை மீது ஏறி ஊர்ந்து பொழுது போக்கினர். வேறு சிலர் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிப் பொழுது போக்கினர். மற்றும் சிலர் மிக்க துன்பங்கொண்டு இரந்து நின்றவர்களின் துன்பத்தைப் போக்கும் பொருட்டுப் பொருளை வழங்கிப் பொழுது போக்கினர்.

முழங்குதிண் கடகரி மொய்ம்பின் ஊரவும் எழுங்குரத் திவுளியொடு இரதம் ஏறவும்

பழங்கணோ டிரந்தவர் பரிவு தீர்தர

வழங்கவும் பொழுதுபோம் சிலர்க்கம் மாநகர் அகன்ற கண்களையும் பிறை போன்ற நெற்றியையுமுடைய பெண்டிர் செல்வம் கல்வி இரண்டிலும் சிறந்து விளங்குவதால் துன்பத்தால் வருந்தி வந்தவர்கட்கு இரங்கி ஈகை செய்தலும், விருந்தினரைப் போற்றுதலும் அன்றி வேறெதனையும் செய்ய மாட்டார்களாம்.

பெருந்த டங்கண் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க் கீதலும்; வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே.

கோசலத்தில் யாரும் வருந்த மாட்டார்கள் என்றார். வருந் துவது தெரிகிறது. யாரும் துன்பப்படமாட்டார்கள் என்றார். துன்பப்படுவது தெரிகிறது. கொடுப்பவர்கள் யாரும் இல்லை என்றார். கொடுப்பவர் இருப்பது தெரிகிறது. பெறுபவர் ஒருவரும் இருக்க மாட்டார் என்றார். பெறுபவர் இருப்பதும் தெளிவாகவே தெரிகின்றது. வறுமை அகற்ற மக்களாற்றிய தொண்டு இதுவென்றால் மன்னன் தொண்டு எப்படி இருந்தது என்று பார்ப்போமா?

ஈந்தே கடந்தான் இரப்போர்கடல் எண்ணில் நுண்ணூல்

ஆய்ந்தே கடந்தான் அறிவெனும் அளக்கர்

இரண்டும் மெய்யாக ஒருபோதும் இருக்க முடியாது


கொடுத்துக் கொடுத்தே கடந்து சென்றானாம் தயரதன். எதனை? இரவலர்கள் என்னும் கடலை என்கின்றார் கம்பர். அயோத்தி மாநகரில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பிச்சைக்காரர்கள் இருந்தனர் என்று எண்ணிவிட வேண்டா. கடலளவு பிச்சைக்காரர்கள் இருந்தனர் என்கின்றார். இவ் வளவு பெரிய இரவலர் தொகை நாடு முழுவதும் மலிந்திருக்க, ஈவாரும் இல்லை; ஏற்பாரும் இல்லை என்று சொல்ல எப்படிக் கம்பருக்கு மனம் வந்தது. ஒன்று முன்னது பொய்யாக இருக்க வேண்டும்; அல்லது பின்னது பொய்யாக இருக்க வேண்டும். இரண்டும் மெய்யாக ஒருபோதும் இருக்க முடியாது.

இதுபோன்ற பல செய்திகள் இந்த நூலில் இருக்கின்றன.

பல நூல்களை ஆதாரங்களாகச் சொல்லியிருக்கிறோம்!


ஆகவே, நண்பர்களே! இன்னும் நிறைய சொல்லலாம். இந்த ஆய்வுச் சொற்பொழிவில் நிறைய நூல்களை ஆதாரங் களாகச் சொல்லியுள்ளோம்.

பா.வே.மாணிக்கனாரின் கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும், மறைமலையடிகளாரின் முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர்,  அமிர்தலிங்க அய்யரின் புத்தகம், சிறீநிவாச சாஸ்திரிகளின் இராமாயணப் பேருரைகள், புலவர் ஆ.பழனி எழுதிய கம்பரின் மறுபக்கம், முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் எழுதிய அறியப்படாத தமிழ்மொழி ஆக, 19 ஆம் நூற்றாண்டு, 20 ஆம் நூற்றாண்டு, 21 ஆம் நூற்றாண்டுகளில் வந்த செய்திகளையெல்லாம் இந்த ஆய்வு சொற்பொழிவில் எடுத்து வைத்திருக்கிறோம் - உங்கள் சிந்தனைக்கு. இது தொட்டுக்காட்டிய விஷயம்தான். இதுபோன்று நிறைய சொல்லலாம்.

ஆரியப் பண்பாடு - மனிதநேயத்திற்கு விரோதமானது;


மனிதநேயப் பண்பாடு திராவிடப் பண்பாடு!


எனவே, இராமாயணத்தில் ஒரு ஆரியப் பண்பாடு - மனிதநேயத்திற்கு விரோதமான பண்பாடு. மனிதநேயத்தோடு ஒரு பண்பாடு என்பது திராவிடப் பண்பாடு - ஜாதியற்ற பண்பாடு.

ஆகவே, கீதை எப்படி ஒரு கொலை நூல் என்று இருக் கிறதோ, அதுபோல, இராமாயணத்தைப் பார்த்தாலும், ஒழுக்க நூலல்ல - அது கொலையையும், கொள்ளையையும், பெண்களைக் கேவலப்படுத்துகின்ற ஒரு நூல்தான் என்பதை இங்கே நான் சொல்கிறேன்.

ஆகவே, தோழர்கள் சீட்டு எழுதியோ, நேரிடையாகவோ கேள்வி கேட்கலாம். அதற்கான பதிலை நான் சொல்கிறேன்.

நன்றி, வணக்ளகம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 29.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக