பக்கங்கள்

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கம்பரசம் சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்



நூல்: கம்ப ரசம்
ஆசிரியர்: அறிஞர் அண்ணா
வெளியீடு: 
திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 
84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, 
சென்னை-600 007.
பக்கங்கள்: 144, விலை: ரூ.30/-

தீர்ப்பளியுங்கள்!

“கம்பனையா கடிந்துரைக்கிறீர்கள்
அவனன்றோ அருந்தமிழன் பெருமையை             நிலைநாட்டினான்!

அருங்கலை உணரா மக்களே!
அவன் அருமை அறியாது கண்டது பேசிக்         குழப்ப மூட்டாதீர்!’’

“கம்பனின் கலைத்திறமை _ கவிதை அழகு இவை பற்றி அல்ல நாம் குறை கூறுவது; கவி எடுத்தாண்ட கதை; அக்கதையின் விளைவு; அதனால் நமது இன கலாச்சாரத்துக்கு வந்துற்ற கேடு இவைபற்றியே நாம் கண்டிக்கிறோம்.’’

“ஓஹோ! கவிதை அழகும் உனக்குத்         தெரியுமோ!
கசடர் அறிவரோ கலையின் மேன்மையை’’

“அறிவோம் அய்யனே! அகமகிழ்வு கொள்ளும் அளவு மட்டுமல்ல. செப்பனிடும் அளவுக்கும் அறிவோம்.’’
“செருக்குடன் பேசுகிறாய்; செந்தமிழை         ஏசுகிறாய்;

கம்பநாட்டாழ்வாரின் கவிதையைச்         செப்பனிடுவையோ?
என்னே உன் சிறுமதி’’

“புலவரின் பாடலை மற்றொரு புலவன் செப்பனிடும் முறையிலே அல்ல. புலவரின் பாடலை ஒரு சாமான்யனின் கண்கொண்டு பார்த்து பகுத்தறிவாளனின் நோக்குடன் ஆராய்ந்து பார்த்திருக்கிறோம்.’’

“பார்த்து கண்டது என்னவோ?’’
பல! அதிலும் நீர் காணாதவை.
“நாம் காணாதவைகளை நீர் கண்டீரோ?
என்னய்யா கண்டீர்’?’’
‘கம்பனின் கவிதை பல காமரசக் குழம்பாக இருப்பதை.’
“என்ன? என்ன? அடபாதகா, கம்பனின் கவிதை
காமரசக் குழம்பா? காமரசமா? ஐயையோ!”
“சபித்திட வேண்டாம் கலாரசிகனே! காமரசந்தான் கம்பனின் கவிதை! பல உள _ கூறட்டுமா?’’
“கூறுவையோ?’’
“கேளும் கமபரச விளக்கத்தை.’’

தமிழ்நாட்டிலே இங்ஙனம் ஓர் உரையாடல், சற்று காரசாரமாகக் கிளம்பிற்று 1943ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும். அந்த உரையாடலுக்குக் காரணமாக இருந்தது, கம்பராமாயணம், பெரிய புராணம் முதலிய ஏடுகள் தமிழரிடையே ஆரியத்தைப் புகுத்திக் கேடு விளைவித்தனவாதலின் அவைகளைக் கொளுத்துவதன் மூலம், தமிழர் தமக்கு ஆரியத்தின் மீதுள்ள வெறுப்புணர்ச்சியைக் காட்ட வேண்டும் என்று பெரியார் துவக்கிய கிளர்ச்சியாகும்.

இராம கதையின் போக்கு தவறு என்பதில் துவக்கிய கிளர்ச்சியைக் கலைவாணர்கள், தமக்குச் சாதகம் இருக்குமென்ற எண்ணிக்-கொண்டு, கவிதை அழகு எனும் துறைக்குத் திரும்பினர்; எதிர்ப்பட்டாளத்தைச் சதுப்பு நிலப்பகுதியிலே புகும்படி செய்து, தாக்கும் முறைபோல.

கவிதையின் அமைப்பு பற்றியும், பிறகு ஆராயவேண்டிய அவசியம் நேரிட்டது. அதன் விளைவு, கம்பனின் கவிதை காமரசக் குழம்பாக இருப்பதைக் கண்டறிந்தது.

இந்நூலிலே இத்தகைய காமக்குழம்பு முழுவதையுமல்ல. ஓரளவு மட்டுமே வெளியிட்டிருக்கிறார் திராவிடப் பண்ணை-யினர்; கம்பரசம் என்ற தலைப்பிலே.

எழுத்துக்கெழுத்து பிளந்தும் பிரித்தும், பொருள் கூறும் புலவர்களும்கூட, இந்தக் கம்பரசங்கள் ‘திராவிட நாடு’ இதழிலே வெளிவந்தபோது, இன்ன தவறு காண்கிறோம் என்று நமக்கு எடுத்துக் காட்டியதில்லை. பலர், கம்பனின் கவிதையிலே இவ்வளவு காமச்சுவை இருத்தலாகாதுதான் என்று மனமாறவே கூறினர். பிறகே இராம கதையைக் கம்பனின் கவிதைத் திறனைக் காட்டி, நிலைநாட்ட முடியாது என்ற முடிவுக்கு எதிர்ப்பாளரில் பலர் வந்தனர்.

கம்பரசம் இப்போது சிறுநூல் வடிவில் வருகிறது. கம்பன், தமிழரின் கலையையும், நிலையையும் குலைக்கும் ஆரியத்தை எப்படியாவது புகுத்தவேண்டும் என்பதற்காக எத்தகைய ரசத்தை கவிதையிலே கூட்டியிருக்-கிறார் என்பதைக் கண்டு, சரியா, முறையா என்பது பற்றி ஓர் தீர்ப்பளியுங்கள்.
- சி.என்.அண்ணாதுரை

இந்த நூலில் அறிஞர் அண்ணா அவர்கள்

11 “டோஸ்’’ கம்பனின் காமரசத்தைப் பிழிந்து தந்துள்ளார். அதில் சில துளிகள் இதோ:

“சொற்செல்வன் அனுமான், அஞ்சலி செய்து நின்று பக்திபூர்வமாக இராமன் சீதா பிராட்டியாரைப் பற்றிக் கூறிய வர்ணனைகளைக் கேட்டு இன்புறுகிறான். அவதார புருஷர்களின் (அவ) லட்சணம்! “அனுமானே! கேள், என் பிரியை சீதா இப்படி இருப்பாள்’’ என்று தொடங்கிய “எம்பெருமான்’’  எந்த அளவோடு நிறுத்துகிறார் என்று எண்ணுகிறீர்கள்? சர்வமும் சாங்கோபாங்க மாகக் கூறி முடித்த பிறகுதான்! முப்பத்து நான்கு பாடல்களய்யா இதற்கு! தன் மனைவியின் அங்கங்களை வர்ணித்து, “இது இப்படியிருக்கும். இது இவ்வளவு மிருதுவாக இருக்கும். இந்த அங்கம் இவ்விதமான பளபளப்பாக இருக்கும்’’ என்று இராமர், ஒவ்வொன்றையும் அனுமானிடம் கூறுகிறார். காளை கெட்டவன், அதன் வால் மயிர் அடையாளம் கூறுவதே மதிகெட்ட தன்மை எனில், காணாமற்போன மங்கையின் நாபி, தொடை ஆகிய உறுப்புகளையும் வர்ணிக்கும் இலட்சணத்தை எதன்பாற்பட்டது என்பீர்களா? அதிலும் அந்த மங்கை எத்தகைய மங்கை? இராமன் மனைவி, மகாலட்சுமியின் திரு அவதாரமாம்! பொன்னவிர் மேனியாள், பூவிரி மணத்தினள், புன்னகை முகத்தினள், அழகொழுகு முகத்தினள் என்று கூறலாம். மற்ற புலவர்கள் இங்ஙனம் உரைப்பர். தங்கை எனினும், கொங்கை பற்றி மறைக்க மறுக்கும், தகைமை வாய்ந்த தவக்கவி கம்பர் இத்துடன் கூறிடுவது தமது கவித்திறமைக்கேற்றதாகாது என்று கருதிப் போலும், சீதா பிராட்டியாரின் எழிலை விளக்க எல்லா அங்கங்களையும் வர்ணித்து மகிழ்கிறார்.

அதிலும், ஒரு கணவன் தன் மனைவியைக் குறித்து ஒரு நண்பனிடம் இவ்விதம் பேசலாமா, பேசுவதுண்டா, முறையா என்பது பற்றிய கவலையுமின்றிக் கம்பர் வர்ணித்திருக்கிறார். சீதையானாலும் சீதேவி என்றாலும் பெண் என்றால் அவருக்குப் போதும்; நெஞ்சு நெகிழ்ந்துவிடும். கம்பரசம், குறைவற வெளிவரத் தொடங்கும்! இராமன் கூறியதாகத் தொகுத்துள்ள பாடல்களிலே, இவ்வளவு ஆபாசம் இருக்கலாமா? இதற்குப் புலவர் பெருமக்கள் என்ன சமாதானம் கூறுகின்றனர் என்று கேட்கிறேன். மறைவிடங்களைப் பற்றி எல்லாம், அனுமானிடம் இராமன் கூறி, “இவ்விதமானவள் என் சீதை. நீ அவள் இருக்குமிடந்தன்னைத் தெரிந்து வா’’ என்று கூறினதாகச் சொல்லும் கவியின் பிரதிநிதிகளைக் கேட்கிறேன். சீதையின் பாதம், புறஅடி, கணைக்கால், தோள், முன்கை நகம், கழுத்து, அதரம், பற்கள், மூக்கு, காது, கண்கள், புருவம், நெற்றி, கூந்தல் _ எனும் இன்னோரன்ன பிற உறுப்புகளையாவது, இராம வர்ணனையின்படி இருக்கின்றனவாவென்று வெளித்தோற்றத்தால் அனுமான் காணமுடியும். ஆனால், அந்த 34 பாடல்களிலே வரும் மற்ற வர்ணனைகள் உளவே, மறை உறுப்புகளான தொடை, பெண்குறி, இடை, வயிறு, நாபி, நாபிக்குமேல் வயிற்றிலுள்ள மயிரொழுங்கு, வயிற்று இரேகை, தனங்கள் ஆகியவற்றை அடையாளங் காண்பதெப்படி? இதுகூடவா கம்பர் கவித்திறமையின் விளக்க ஒளிகள் என்று கேட்கிறேன். ஒரு புலவரின் திறனை விளக்க ஒரு பாவை நிர்வாணமாக்கப்படுவதா? அதிலும், மனைவியை நிர்வாணக் கோலமாக்க கணவன் முனைவதா? அதையும் மற்றொரு நண்பன் முன்பா? அதிலும் அனுமான் என்னும் நித்திய பிரம்மச்சாரி முன்பா? வரைமுறை, மறைதிரை, வரம்பு முதலிய எதுவும் தேவையில்லையா? ஆம்! அவருக்கு, அந்தக் கம்பருக்குப் பெண்களின் விஷயமாக எழுதும்போது, வேறு எந்த நீதியும் குறுக்கிடாது; அவ்வளவு அனுபவித்தவர் அவர்; போகி; காமுகர். இந்த மகானுபாவர் கடவுட் கதை ஏன் எழுதப் போந்தார்? கன்னியின் முத்தம் _ கலவிக் கடல் என்பன போன்ற காமக்கதை எழுதியிருக்-கலாமே! எந்தப் பொருள் கொண்ட இலக்கியத்திலே எந்த ரசம் இருக்க வேண்டும்

என்ற முறை கூடவா தவற வேண்டும்! பாருங்கள் இப்பாடலை.
வாராழி கலசக் கொங்கை
    வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல்
    தங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில்தங்கும், பாந்தழும்
    பணி வென் றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு
    நான் உரைப்ப தென்ன?

இராமபிரான் சொல்லுகிறார் அனுமானிடம், “தக்கவனே! என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் கலசம் போன்றன! அல்குலோ, தடங்கடற்கு உவமை’’ என்று!

உலகிலே உள்ள எந்தப் பித்தனும் வெறியனுங்கூடத் தன் மனைவியின் கொங்கை-யையும் மறைவிடத்தையும், வேறொருவனிடம் வர்ணிக்க மாட்டான். அங்ஙனம் வர்ணிக்கும் கதாநாயகனை எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக் கவியும் சித்தரிக்கவில்லை. ஹோமர் முதற்கொண்டு பெர்னாட்ஷா வரையிலே எடுத்துப் பாருங்கள். மதனகாமராஜன் கதை முதற்கொண்டு மன்மதவிஜயம் என்பன போன்ற காமக்கூத்து ஏடுகளையும் கூடப் பாருங்கள். எதிலேயும் “என் மனைவியின் மேலிடமும் மறைவிடமும் இவ்விதமாக இருக்கும்’’ என்று பிறனிடம் கூறிய பேயன் எவனுமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதைக் கூறுவதே ஆபாசம்! கம்பனோ, இதையெல்லாம் கூறி, இன்னின்ன அங்க இலட்சணமுடைய அவளை தேடிக் கண்டுபிடி என்று இராமர் பணிக்கிறார் என்றுரைக்கிறார். பரிதாபத்துக்-குரிய அந்த அனுமான் பாடு எவ்வளவு திண்டாட்டமாக இருந்திருக்கும்? இந்த இலட்சண விளக்கத்தை சகித்துக்கொண்டு கேட்பதே சிரமம். அதோடு விட்டதா அனுமானுக்கு! இந்த இலட்சணங்கள் பொருந்திய அங்க அடையாளமுடையாளைக் கண்டுபிடி என்று கடவுளின் அவதாரம் கட்டளையிடுகிறதே! கலசம் போன்ற கொங்கையுடையாள், தடங்கடற்கு உவமை-யுடைய அல்குலையுடையாள் எவள் என்பதை ஆராய்ந்தறிய வேண்டுமே! அதைச் செய்வ-தெங்ஙனம்? இத்தகைய அனுமத் ஆராய்ச்சிக்கு இசைய எம்மங்கை கிடைக்க முடியும்? குரங்குக்குக் கோமளவல்லிகளின் ஆடைக்-குள்ளிருக்கும் அங்கங்களைக் கண்டு ஆராய கோதண்டபாணி கூறுவாரா! இதனையேனும் கம்பர் எண்ணிப் பார்த்து எழுதியிருக்க வேண்டாமா? இது மட்டுமா? சீதையின் தனங்கள் இப்படிப்பட்டதா அப்படிப்பட்டதா என்று உவமை தேடி இராமர் கூறுகிறார். ஒரு கவி, கம்பர் தமது முழுக் கவித்திறனையும் இதிலே பொழிகிறார் படியுங்கள் இச்செய்யுளை:

“செப்பென்பன் கலசம் என்பன்
    செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்ற திரள்சூ தென்பன்
    சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலின் வந்த
    சக்கர வாகம் என்பன்
ஒப்பொன்றும் உலகின் காணேன்
    பலநினைத்து உலைவன் இன்னும்.’’

“என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன். ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலே ஒரு பொருளும் இல்லை. அவைகட்கு இணை, என்ன செய்வேன்!’’ என்று சோதிக்கிறார் இராமன். ‘செப்புக் கலசமோ! செவ்விள நீரோ!’’ என்று தமது மனைவியின் தனங்கட்கு உவமை தேடுகிறார், தவிக்கிறார். இதனை அனுமானிடம், பணியாளனிடம், பக்தனிடம், பாகவதனிடம், வேதசாத்திர விற்பன்னனிடம் கூறுகிறார்! ஆண்டவனுக்-கேற்ற பக்தன்; பக்தனுக்கேற்ற ஆண்டவன்! கவிக்கு ஏற்ற கதை. அக்கதைக்கேற்ற கவி! கலசத்துக்கேற்ற ரசம்; ரசத்துக்கேற்ற கலசம்! கம்பரசம் இவ்விதமிருக்கிறது தோழர்களே! இதைப் பருகுவோர் பரமபதம் போவாராம்.

“அண்டம் பலவும் இங்கே தெரியுதண்ணேன். ஆதிசேஷனும் கிட்டே தூங்குதண்ணேன்’’ -_ என்று பாடும் குடியன்! மதுரச மகிமையால் மண்டபம் பல போகும் போதைக்காரர் போல், கம்பரசத்தைப் பருகினோர், காமலோக வாசிகளாகின்றனர்; களிக்கின்றனர். அதன் பயனாக யார் எக்குற்றத்தைக் கூட்டினும் எமது கம்பனை யாம் விடோம் என்று எக்காளமிடு-கின்றனர். அவர்கள் கண்ட இன்பம் யாதோ, யாரறிவார் தோழரே!! 

- உண்மை இதழ், 16-31.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக