இராமாயணம் - தத்துவார்த்தம்
இராமகாதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்த ஒருவரது வரலாற்று நிகழ்ச்சிகளைக் கொண்டதன்று. அது ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாறு அன்று; எந்த ஒரு நாட்டையோ மனித இனத்தையோ சார்ந்ததன்று; சில தத்துவ உண்மைகளை விளக்க எழுந்த நூலாகும் என்பது அறிஞர் கருத்து.
பலர் இராமகாதை உண்மை வரலாற்று நிகழ்ச்சி என்று கருதி, அதன்கண் கூறப்பட்டுள்ள நகரங்கள், மலைகள் முதலியவற்றின் அடையாளம் கண்டறிய முனைந்துவிட்டனர்; ஒரு காலத்தில் இந்தியாவோடு இணைந்திருந்த இலங்கை இராவணன் வாழ்ந்த இலங்கை என்றும், சீதை அங்குச் சிறை வைக்கப்பட்டாள் என்றும், இலங்கைக்கும் இராமேசுவரத்திற்கும் இடையில் காணப்படும் பாறைகள் இராமன் கட்டிய பாலத்தின் சிதைவுகள் என்றும் கருதுகின்றனர்.
அயோத்தி வட இந்தியாவில்இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘தைத்ரேய ஆரணியகம்’ என்னும் நூலில் அயோத்தி என்பது மேலுலகத்தில் இருப்பது என்றும் அது கடவுளர் உறையும் நகரம் என்றும் கூறப்படுகிறது. இராமன் பத்தொன்பது வயதினனாக இருக்கும்பொழுது காடு சென்றான்; பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தான்; பின்பு அயோத்தி மீண்டு முடிசூடிக் கொண்டான். எனவே, அவன் முடிசூடிக்கொள்ள முப்பத்து மூன்றாண்டுகள் கழிந்துவிட்டன. பல சுவர்க்க நிலைகளின் சேர்க்கை இடுப்பில் அணியும் கச்சைபோல அமைந்துள்ளது. அவ்வமைப்பு முப்பத்து மூன்றாண்டுகட்கு ஒருமுறை சுற்றுகிறது. அதனை உருவகப்படுத்தப்பட்டு எழுதப்பட்ட கதையே இராமகாதை. முதன்முதலில் ‘கல்பம்’ என்று சொன்ன காலஅளவு இதுதான். இதனைப் பிற்காலப் புராண ஆசிரியர்களும் சித்தாந்த நூல்களின் ஆசிரியர்களும் 43,20,000 ஆண்டுகளாகப் பெருக்கிவிட்டனர்.
இராமாயணம் செம்மையான முறையில் ஒரு வரலாற்று நூலைப் போல எழுதப் பட்டிருப்பினும் கற்பனை நூல் என்று கொள்ளுதலே பொருத்தம் உடையது.
இலங்கை எது?
“இலங்கை மாநகர் கோவில்களையும் அரண்மனைகளையும் அழகுறப் பெற்றுத் திகழ்ந்தது; சூரிய மண்டலத்திற்கும் விஷ்ணுலோகத்திற்கும் இடைப்பட்டது’’.
வால்மீகி கூறுவது:
1. “இராவணனுடைய இலங்கை திரிகூடமலையின் உச்சியில் இருந்தது.
2. சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன் கழுதை பூட்டிய வண்டியில் சீதையை ஏற்றிக் கொண்டு, திரிகூடமலையைச் சூழ்ந்திருந்த சாகரத்தைக் கடந்து இலங்கைக்குச் சென்றான்.’’
‘சாகரம்’ என்பது கடலன்று
வால்மீகி முனிவர் கூறியுள்ள இந்த இரண்டு குறிப்புகளைக் கொண்டு, இராவணன் ஆண்ட இலங்கை, சிங்களத் தீவாகிய இலங்கை அன்று என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாம். _என்னை? சிங்களத் தீவாகிய இலங்கை திரிகூடமலையின் உச்சியில் இல்லை; இது ஒரு தீவாக உள்ளது. கழுதை பூட்டிய வண்டியைச் செலுத்திக் கொண்டு போகக்கூடிய அவ்வளவு சிறிய கடல் அன்று சிங்கள இலங்கையைச் சூழ்ந்துள்ள கடல். மலையின் உச்சியில் இருந்த இராவணனுடைய இலங்கையைச் சூழ்ந்திருந்த “சாகரம்’’ உண்மையில் கடலன்று; ஏரி போன்ற சிறிய நீர்நிலையாகும். கிருஷ்ணராச சாகரம், கிராத சாகரம், இலக்ஷ்மண சாகரம் என்ற பெயருள்ள ஏரிகள் இப்போதும் உள்ளன. அதுபோன்ற சிறு நீர்நிலைதான் இராவணனுடைய இலங்கையைச் சூழ்ந்திருந்தது என்பது ஆராய்ச்சி வல்லார் சொன்ன துணிபு.
பரமசிவ அய்யர் சொல்லும் இலங்கை
இராவணன் ஆண்ட இலங்கையானது, மத்திய இந்தியாவில் உள்ள இந்த்ரனா மலையுச்சியில் இருந்ததென்றும், இம்மலையைச் சூழ்ந்து மூன்று புறத்திலும் ஹிரான் என்னும் ஆறு பாய்கிறது என்றும், மாரி காலத்தில் இவ்யாறு பெருகி மலை முழுவதும் (அகழி போல்) சூழ்ந்து பெரிய ஏரி போல ஆகின்றது என்றும், இதுவே வால்மீகி முனிவர் தமது இராமாயணத்தில் கூறிய ‘சாகரம்’ என்றும், மற்றும் பல சான்றுகளைத் தேசப் படத்துடன் காட்டுகிறார் திரு.பரமசிவ அய்யர். இவர் ஆங்கிலத்தில் இயற்றியுள்ள, “இராமாயணமும் இலங்கையும்’’ என்னும் நூல் காண்க.
பந்தர்காரின் முடிவு
திரு.பந்தர்கார் என்பவர், தாம் எழுதிய ‘தண்டகாரண்யம்’ என்னும் கட்டுரையில், மகாராஷ்டிர தேசந்தான் பண்டைக் காலத்தில் தண்டகாரண்யமாக இருந்ததென்றும், இலங்கை, கிஷ்கிந்தை முதலியன மத்திய இந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கில் இருந்தன என்றும் கூறுகின்றார்.
ஹிரலால் ஆராய்ச்சி
திரு.ஹிரலால் என்பவர், தாம் எழுதிய, “இராவணனது இலங்கை இருந்த இடம்’’ என்னும் கட்டுரையில் இச்செய்திகளைக் கூறுகின்றார்:_
“விந்திய மலையைச் சார்ந்த மேகலாமலைத் தொடரில் அமர கண்டச் சிகரத்தில் இராவணன் இலங்கை இருந்தது; ‘கொண்டர், ஓரானர், சபரர்’ என்னும் காட்டில் வாழும் மக்கள் குழுவினர் அவ்விடங்களில் வாழ்கின்றனர். இவர்களில் ‘கொண்டர்’ தம்மை இராவணன் வமிசத்தவர் என்று கூறிக் கொள்வதோடு, 1891இல் எடுத்த ஜனக்கணக்கில் தம்மை இராவண வம்சம் என்றே பதிவு செய்துள்ளனர். 400 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இவர்களுடைய அரசன் ஒருவன், தனது பொன் நாணயத்தில், தன்னைப் ‘புலத்திய வமிசன்’ என்று பொறித்திருக்கிறான். இதனால் கொண்டர், ‘இராவண குலம்’ என்று சொல்லிக் கொள்வது உறுதிப்படுகிறது. ‘ஓரானர்’ என்னும் இனத்தவர் பண்டைய வானரர் இனத்தைச் சேர்ந்தவர். கொண்டர்களுக்கும் சபரர்களுக்கும் பகையிருந்தபடியால், சபரர் இராமன் பக்கம் சேர்ந்தனர். (இராமனுக்கு விருந்திட்ட சபரி என்பவள் சபரர் குலத்தைச் சேர்ந்தவள். இது அவள் இயற்பெயரன்று, குலப் பெயர்) இராமன் இலங்கைக்குக் கடந்து சென்ற “சாகரம்’’ கடல் அன்று; ஏரியாகும்.
கிபியின் கூற்று
திரு.கிபி என்பவர் தாம் எழுதிய, “அமர கண்டக் மலையில் இருந்த இராவணனுடைய இலங்கைக்குச் சுற்றுப் புறத்திலிருந்த மக்கள்’’ என்னும் கட்டுரையில் இருந்ததென்றும், அதற்கு அருகிலே தண்டகாரண்யம், சித்திரகூடம், அகத்திய ஆசிரமம், பஞ்சவடி, கிரௌஞ்சம், பம்பை, கிஷ்கிந்தை, அயோத்தி முதலியன இருந்தன என்றும் தேசப்படத்துடன் விளக்குகிறார்.
இராமதாசர் சொல்வது
திரு.சிவராமதாஸ் என்பவர், இராவணன் இலங்கையும் அமரதீமுபம் ஒன்றென்றும், அமரகண்டக் மலையில் இருந்ததென்றும், நருமதை, மகாநதி என்னும் இரண்டு ஆறுகள் உண்டாகிற மேட்டு நிலப் பகுதியே இந்த இடம் என்றும் கூறுகிறார். அன்றியும், மத்திய இந்தியாவில் மத்திய மாகாணத்தில் உள்ள கூயி இனத்தார், இராவணன் மரபினர் என்றும், அமரகண்டக் மலையில் உள்ள கொண்ட்வனா என்னும் இனத்தார் இராவணன் மரபினர் என்றும் கூறுகிறார்.
தீட்சிதர்
திரு.தீட்சிதர் என்பவர், சிங்களத் தீவாகிய இலங்கையும் இராவணன் ஆண்ட இலங்கையும் வெவ்வேறு இடங்கள் என்று கூறுகிறார்.
மிஷ்ரா
திரு. மிஷ்ரா என்பவர், இராவணன் இலங்கை, ஆந்திரதேசத்தில் கடற்கரையைச் சேர்ந்த ஓர் இடம் என்கிறார்.
திரு. வதர் என்பவர், இராவணன் இலங்கை பூமியின் மத்திய இடமாகிய உஷ்ண மண்டலத்தில் இருந்ததாகக் கூறுகிறார்.
இலங்கைகள் பல
இதுகாறும் காட்டிய சான்றுகளால், சிங்களத் தீவாகிய இலங்கை, இராமாயணத்தில் கூறப்படும் இராவணன் ஆண்ட இலங்கை அன்று என்பதும், இரண்டும் வெவ்வேறிடங்கள் என்பதும் விளங்குகின்றன. ஆனால், எக்காரணத்தினாலோ, சிங்களத் தீவை இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் தவறாகக் கருதுகிறார்கள். இந்தத் தவறான எண்ணம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் இலங்கை என்னும் பெயர் ஒற்றுமையேயாகும். இலங்கை என்னும் பெயருடைய ஊர்கள் பல உள்ளன என்பதைப் பலர் அறியார். இலங்கை என்னும் பெயர் உள்ள ஊர்களைக் கீழே தருகிறோம்.
கீழ்க்கோதாவரி மாவட்டம் சோடவரம் பிரிவில் பூசுல லங்கா, தேமுடு லங்கா என்னும் ஊர்களும், கிருஷ்ணை மாவட்டம் கைகலூரு தாலுகாவில் செவ்வாட லங்கா என்னும் ஊரும் உள்ளன. தமிழ்நாட்டில், தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் மாவிலங்கை (கீழ் மாவிலங்கை, மேல் மாவிலங்கை) என்னும் ஊர் இருக்கின்றது. இவ்வூரைச் சங்க காலத்தில், ஓவியர் பெருமான் நல்லியக் கோடன் என்னும் அரசன் ஆண்டான் என்பதைப் பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப் படையினால் அறிகிறோம்.
“தென்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்ன ருள்ளும்
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
வறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்’’
என்று வருதல் காண்க.
இராமநாதபுர மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் கீழ்த்திருவிலங்கை என்னும் ஊரும், முதுகுளத்தூர்த் தாலுகாவில் மாவிலங்கை என்னும் ஊரும், பரமக்குடி தாலுகாவில் மற்றொரு மாவிலங்கை என்னும் ஊரும் உள்ளன. செங்கற்பட்டு மாவட்டம் திருவள்ளூர் தாலுகாவில் புதுமாவிலங்கை என்னும் ஊரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர்த் தாலுகாவில் மாவிலங்கை என்னும் இனாம் கிராமமும் உள்ளன. மேற்கூறிய இராமநாதபுர மாவட்டத்தில் பரமக்குடி தாலுகாவில் மாவிலங்கை என்னும் இனாம் கிராமமும், சிவகங்கை தாலுகாவில் மாவிலங்கை என்னும் சமீன் கிராமமும், திருவாடானைத் தாலுகாவில் மாவிலங்கை என்னும் பெயருள்ள சமீன் கிராமமும், இனாம் கிராமமும் ஆகிய இரண்டும் உள்ளன. இவை யாவும் இலங்கை என்னும் பெயரால் முடிவது காண்க. அன்றியும் ஆறுகள் கடலுடன் கலக்கிற இடத்தில் பல கிளைகளாகப் பிரிந்து ஏற்படுகிற ‘டெல்ட்டா’ என்று சொல்லப்படுகிற தீவுகளுக்கு ஆந்திர நாட்டில் ‘லங்கா’ என்று பெயர் கூறப்படுகிறதென்று தெரிகிறது. ஆகவே, இராவணன் ஆண்ட ஊர் ஒன்றுக்கு மட்டும்தான் இலங்கை என்னும் பெயர் உண்டு என்று கருதுவது தவறு. பண்டைக்காலத்தில் இலங்கை என்னும் பெயருள்ள ஊர்கள் பல இருந்தன.
“எனவே, தமிழ்நாட்டுக்கு அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைக்கும் இராவணன் ஆண்ட இலங்கைக்கும் தொடர்பு இல்லை என்பதும், இத்தொடர்புடைய கதைகள் பிற்காலத்தில் கற்பிக்கப்பட்டவை என்பதும் தெளிவாகின்றன. இலங்கையின் புராதன நூலாகிய மகாவம்சம் என்னும் நூலில் இராவணன், இலங்கை என்ற பெயர்களே கூறப்படவில்லை. இராவணன் ஆண்ட இலங்கை இப்போது மராட்ட நாடு உள்ள பகுதியில் விந்திய மலையைச் சார்ந்த இடத்தில் இருந்தது என்பது ஆராய்ச்சியாளரின் முடிபு. அங்ஙனமாயின், மலையமலை, பாண்டி யனுடைய கபாடபுரம் முதலியவை வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுகிறதே என்றால், இந்தச் சுலோகங்கள் இடைச் செருகல்களாகும். வடமொழியில் இராமாயணத்திலும் வேறு நூல்களிலும் பல இடைச்செருகல் சுலோகங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மறக்கக் கூடாது.
இவ்வரலாறு இந்தியாவில் நடந்ததா?
கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்கிரீவன் சீதையைக் கண்டுபிடிக்கத் தன் வீரர்களை ஏவும்பொழுது கிஷ்கிந்தையை நடுவிடமாகக் கொண்டு அங்கிருந்து நான்கு திக்குகளிலும் போகும்படித் தன் வீரர்க்கு அறிவுறுத்து கின்றான்; ஒவ்வொரு திசையிலும் உள்ள மலைகள் ஆறுகள் நாடுகள் தோட்டங்கள் காடுகள் இவற்றை விவரித்துக் கூறுகிறான். இவ்வாறு அவன் கூறும் விவரங்கள் பொருத்தமாக இருக்கின்றவா என்று உலகப் படத்தை வைத்துக்கொண்டு ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து பார்த்தனர்; கிஷ்கிந்தையை நடுவிடமாகக் கொண்டு கூறப்படும் நாற்றிசைச் செய்திகள் பொருத்தமாக வரவில்லை என்பதைக் கண்டனர்; “சுக்கிரீவன் கூறியதாக வால்மீகி கூறும் விவரங்கள் பொருந்துமாறு இல்லை. எனவே, இராமாயண நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடைபெற்றன என்று கூறுதல் அய்யமே’’ என்ற முடிவுக்கு வந்தனர். வேதம்-வேங்கடராம அய்யர் என்ற அறிஞர் பலவாறு ஆராய்ந்து, “இராமாயண வரலாறு கூறும் விவரங்கள், இன்றைய துருக்கி, காக்கஸஸ் மலைப்பகுதி, அதனைச் சுற்றியுள்ள நிலப்பகுதி இவற்றில் நடைபெற்றனவாக இருத்தல் வேண்டும்’’ என்று முடிவு கட்டினர்.
இதுகாறும் கூறப்பெற்ற உண்மைகள் யாவை? வால்மீகி எழுதிய இராமாயணத்திலேயே இடைச் செருகல்கள் பல; பல்வேறு இராமாயண நூல்களில் கூறப்படும் செய்தி வேறுபாடுகள் பல; நிகழ்ச்சி வேறுபாடுகள் பல; இராவணன் ஆண்ட இலங்கை எது என்பது தெளிவாக்கப்படவில்லை; வரலாறு நடந்த இடமே எது என்பது அய்யத்திற்கிடமாக உள்ளது _ என்னும் செய்திகள் இதுகாறும் கண்ட உண்மைகளால் புலப்படுகின்றன. இந்நிலையில் தசரதனுக்குப் பிறந்த இராமன் என்ற அரசகுமாரனைக் கம்பர் திருமாலின் அவதாரமாக ஆக்கி வைத்தார்.
இதற்குக் காரணம் யாது?
நெடுங்காலமாக இராமன் வரலாறு அரசர் அவைக் களங்களில் நடிக்கப்பட்டு வந்தன. நாளடைவில் நாடக அமைப்பிற்கு ஏற்பப் பழைய கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இவற்றை உளங்கொண்டு, “வால்மீகி உயர்ந்த லட்சியங்களை முன்னிறுத்தி, அவை விளங்கும் அழகிய சரிதமொன்றை இயற்றினர். இதுவே இராமாயணம். ஆனால், இராம சரிதத் தொடக்கம் இவ்வாறிருப்பினும், பின்னர், கால-அடைவில், சமய நூலாகவும் பக்தி நூலாகவும் பரிணமித்துவிட்டது. இராமன் மனுஷ்ய நிலை கடந்து தெய்வமாகிவிட்டான்.
“கி.பி.நான்காம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்திலும் அதற்குச் சிறிது முன்னும் பின்னும் இதிகாசங்களும் புராணங்களும் விரிவாக்கப்பட்டன. அப்பொழுது அவதாரக் கதைகள் புதியனவாகச் சேர்க்கப்பட்டன. பழைய வீரர்கள் அவதார புருஷர்களாக ஆக்கப்பட்டார்கள்’’ என்று ஆராய்ச்சியாளர்கள் தக்க சான்றுகள் காட்டியுள்ளார்கள். இம்மாற்றங்களுக்குப் பின்னரே பொது மக்கள் இராமாயண வரலாற்றை விரும்பிக் கேட்கலாயினர். பின்னர் நாளடைவில் அவதார புருஷனாகக் கருதப்பட்ட இராமனுக்குக் கோவில்கள் தோன்றின. அஃதாவது, கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பிறகு இராமன் தெய்வமாக வழிபடப்பட்டான். ஆழ்வார்கள் இராமாவதாரத்தைச் சிறப்பித்துப் பாடினர். அவர்தம் அருட்பாடல்கட்கு மணிப்பிரவாள நடையில் (வடமொழி பாதியும் தமிழ்மொழி பாதியும் கலந்த நடையில்) விரிவான உரை எழுதப்பட்டது. இராமானுசர் காலத்தில் வைணவ சமயம் நன்கு வளர்க்கப்பட்டது. இராமாயண வரலாறு பல கோவில்களில் படித்து விளக்கப்பட்டது. இத்தகைய காலத்தில் _ கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பர் தோன்றினார்.
கம்பர் கால நிலை
கம்பர் சோழப் பெருநாட்டில் பிறந்தவர். ஏறத்தாழக் கி.பி.9ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 12ஆம் நூற்றாண்டு வரையில் சோழப் பேரரசு தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. சோழப் பேரரசர் கடல் கடந்து நாடுகளை வென்றனர். ஏறத்தாழ இந்த 400 வருட காலம் சோழப் பெருநாடு செல்வச் சிறப்புடன் விளங்கிவந்தது; செல்வப் பெருக்குப் பல தீமைகளையும் விளைத்தது. குடியும் ஒழுக்கக் கேடும் இருந்தன; போக பாக்கியங்கள் மிகுதிப்பட்டன. சமயவெறி தலை தூக்கியது; சாதிச் செருக்கு மிகுந்தது; சமுதாயத்தில் உயர்வு_தாழ்வுகள், மேடு_பள்ளங்கள் காணப்பட்டன.
கல்வியில் பெரிய கம்பர் உலக அனுபவத்திலும் பெரியவராக விளங்கினார்; அவர் தம் முன் காணப்பட்ட மேற்சொன்ன வேறுபாடுகளை வெறுத்தார்; சைவ வைணவர்க்குள் இருந்த மனக்கசப்பை மாற்ற எண்ணினார்; அரசியல் இன்னின்னவாறு அமைதல் வேண்டும் என்று திட்டமிட்டார்; இத்தகைய (தம்முடைய) கருத்துகளை வெளியிட இராமாயணத்தை இயற்றினார்.
- உண்மை இதழ், 1-15.12.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக