பக்கங்கள்

வியாழன், 15 பிப்ரவரி, 2018

இராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் பிராமணர்களின் கட்டுக் கதை என்கிறார்களே?

விவேகானந்தரும் தி.க.காரர் தானா?

விவாத மேடை

கருஞ்சட்டை



கேள்வி: இராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் பிராமணர்களின் கட்டுக் கதை என்கிறார்களே?

விஜயபாரதம் பதில்: தி.க.வினர் உளறுவதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாதீர்கள். ராமாயணம் எழுதிய வால்மீகியும், மகாபாரதம் எழுதிய வியாசரும் பிராமணர்கள் இல்லை. வால்மீகி வேடுவர். வியாசர் மீனவர், சிறீராமர் க்ஷத்திரியர். சிறீ கிருஷ்ணன் யாதவர், சொன்னவர்களும் பிராமணர்கள் இல்லை. சொல்லப் பட்டவர்களும் பிராமணர்கள் இல்லை. (விஜயபாரதம் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் 16.2.2018 பக்கம் 35).

அண்ணல் அம்பேத்கர்தான் மிக அழகாகச் சொன்னார். பார்ப்பனர்களுக்கு பாரதம் தேவைப்பட்டது ஒரு வியாசரை அழைத்துக் கொண்டனர். அவர் பார்ப் பனர் இல்லை. அவர்களுக்கு இராமாயணம் தேவைப் பட்டது வால்மீகியை அழைத்தனர் - அவர் பார்ப்பனர் இல்லை.

அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் தேவைப்பட்டது என்னை அழைத்தனர் என்று விஜயபாரதங்களுக்கு அப்பொழுதே செவிளில் அறைந்தது போல் பதில் சொன்னார் அண்ணல் அம்பேத்கர்.

கம்பர்கூட இராமாயணத்தை எழுதியவர்தான் வால்மீகி எழுதியதைக்கூடத் திருத்தி ஆரியப் பார்ப் பனர்களுக்குச் சங்கடம் ஏற்பட்டு விடக் கூடாது என் பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் - அதனால்தான் கம்பனையும் விபீஷணர் பட்டியலில் துரோகிகளின் பட்டியலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்ற, வால்மீகி எழுதிய உத்தரகாண்டத்தையே தவிர்த்து விட்டவன் தானே கம்பன்.

வால்மீகி எழுதுகிறார் சீதை இராவணனுடன் விரும் பியே சென்றாள் என்று.

'தனக்கு எவ்வளவே மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையி டத்தில் . ஆசை மேலிட்டு, புதன் ரோஹிணியைப் பிடிப்பது போல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கெண்டு, மற்றெரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது.

இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத் தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப் பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும்.

காரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக் குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பெருள்.

மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந் திருக்கையில் அவளுடைய முகம் 'காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளு டைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல்  புரண்டன' (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.

இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப்புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது.

சீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது

'விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டா யிற்று.'                                       (பக்கம் 155, சர்க்கம் 55)

மூல நூலான வால்மீகி இராமயணத்தில் சீதையைத் தொட்டுத் தூக்கினான் என்றிருக்க, தழுவல் இராமாயணம் எழுதிய கம்பனோ சீதையைப் பூமியோடு தூக்கிச் சென்றான் என்று எழுதியது எந்த நோக்கத்தில்?

சீதையைக் காப்பாற்ற வேண்டும், இராவணனை இழிவுபடுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில்தானே.

ராமாயணம், மகாபாரதம் பற்றி தி.க.வினர் உளறு வதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாதீர்கள் என்று விஜயபாரதத்தின் பேனா வாய் நீளுகிறதே - அந்தக் கூட்டத்திற்கு சில கேள்விகள்.

தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும்  இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று எழுதியுள்ள ரோவேஷ் சந்திர தத்தர் (புராதன இந்தியா பக்கம் 52). தி.க.காரரா?

ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை தங்களுடைய புத்தகங்களில் திராவிடர் களை, தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்; ஆரியக் கவிகள் திராவிடர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பையே இது காட்டுகிறது என்று எழுதியுள்ள (இந்திய சரித்திரம் முதல்பாகம் - இந்து இந்தியா எனும் தலைப்பில் பக்கம் 16,17ஆம் பக்கங்கள்)

சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ. ஆகியோரும் தி.க.வினர்தானா?

மத நம்பிக்கை ஒருபுறமிருக்க இராமாயணக் கதை யானது உவமையுரையோ (Allegory) சரித்திரமோ அல்ல; கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்ட கதையேதான் என்று எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ் திரியும் கருப்புச்சட்டைக்காரர்தானா?

இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும் உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவை உண்மையென்று நான் நம்பவேயில்லை. "பஞ்ச தந்திரம்" "அராபியன் நைட்" முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை (டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76-77) என்று எழுதிய ஜவகர்லால் நேருவும் பெரியாரின் சீடர்தானா?

வெகு தூரம் போவானேன்? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்த விவேகானந்தரை தி.க.காரர் என்று விஜயபாரதம் சொல்லாது என்று திடமாக நம்புகிறோம் இதோ அவரே பேசுகிறார்:

"தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமா யணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்" ("சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் "இராமாயணம்" எனும் தலைப்பில் பக்கம் 587-589).

இதற்குப் பதில் என்ன விஜயபாரத ஆரியப் பார்ப்பனக் கூட்டமே?

-  விடுதலை நாளேடு, 13.2.18

1 கருத்து: