பக்கங்கள்

திங்கள், 17 டிசம்பர், 2018

இராமாயணமும் பார்ப்பனிய தந்திரமும்-மி (2)

17.11.1929 - குடிஅரசிலிருந்து...

ராமனையும் அவனைச் சேர்ந் தவர்கள் என்று சொல்லப்படுபவர்களையும் வட தேசத்தி யராகவும், ஆரியராகவும் கடவுள் களின் தனித்தனி அவதாரங்களாகவும், அவர்கள் எல்லாம் தர்மத்தைக் காட்ட வந்த தர்ம தேவதைகளாகவும் போற்றப்பட வேண்டி யவர்களாக கற்பித்து இராவணனையும் அவனது கோஷ்டி யாரையும் ராட்சதர்களா கவும் தென் தேசத்தியர்களாகவும், திராவிடர் களாகவும், அதர்மம், கொடுமையுமே உருவாய் வந்தவர்களாகவும் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களாகவும், இழித்தும், பழிக்கப்பட வேண்டியவர்களாகவும் கற்பித்து, உலகில் உள்ள நன்மைகள் உயர் குணங்கள் ஆகியவை எல்லாம் ராமனுடையதாகவும் அவனது கோஷ்டியாருடையதாகவும், அவற்றிற்கு எல் லாம் அவர்கள் உருவமென்றும், தீமைகளும், தீக்குணங்களும், ராவணனுடையதும் அவனது கோஷ்டியாருடையதும் என்றும், தீமைக்கும், தீக்குணத்திற்கும் இவர்களே உருவமென்றும் கற்பித்து இருக்கின்றதை அடியோடு ஒழிப் பதற்கு, அதற்குத் தகுந்த பல காரணங்கள் காட்டியும் எழுதியும் பேசியும் வரப்படுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பனர்கள் இரா மாயணத்தை மக்களுக்கு எந்த விதத்திலாவது புகுத்தி அதன் பயனாக தங்கள் ஆதிக்கத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆதரவு தேடிக் கொண்டு மற்றவர்களை ஏமாற்றி இழிவுபடுத்தி வருகின்றார்கள் என்று கருதி அதை எந்த விதத்திலும் மக்கள் மதிக்காமல் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடனே இராமாயணம் இப்போது பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது என்பதேயாகும்.

ஆகவே, இது சம்பந்தமான எல்லாவித எதிர்ப்புகளுக்கும் அநேகமாக சமாதானம் சொல்லி, பார்ப்பனர்களின் வாய்க்கும் புராணி கர்கள் வாய்க்கும் ஒருவாறு ஆப்புக்கடாவின பிறகு இப்போது சில பார்ப்பனர்கள் தோன்றி வேறு விதமான தந்திரத்துடன் இராமாயணத்தை நிலைக்க வைக்க வெளிப்பட்டிருக்கிறார்கள். அதாவது இராமாயணம் என்பது அதிக பொய்க் கதையாயிற்றே. அதை ஏன் கிளறிக் கொண்டி ருக்கிறீர்கள் அதில் உள்ள பாத்திர அழகு, வர்ணனை அழகு, கவி அழகு ஆகியவை களுக்கு மாத்திரம் மதிப்புக் கொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றும், மற்றபடி அதை கவனிக்காதீர்கள்; அப்படி மீறிக் கவனிப்பது மடமை, மூடநம்பிக்கை என்றும், சுயமரியாதை அற்றதன்மைகள் என்றும் சொல்லி நம்மை வேறு வழியில் ஏய்க்க வந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தார்களை நாம் ராமனையும் இராமாயணத்தையும் கடவுள் என்றும் கடவுள் நடவடிக்கை என்றும் சொல்லுகின்றவர்களை விட மூடர்கள் என்றும், பித்தலாட்டக்காரர்கள் என்றுமே தான் சொல்லுகின்றோம்.

ஏனென்றால், ராமனை கடவுள் என்று சொல்லுகின்றவர்கள் எல்லாம் ராமனை பூஜித்துக் கொண்டு நம்மைக் குற்றம் சொல்லு கின்றார்கள். இப்படிப்பட்டவர்களில் சிலராவது உண்மையில் மூடநம்பிக்கையில் ஈடுபட்ட யோக்கியர்களாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால், ராமன் கடவுள் அல்ல; இராமாயணம் நடந்ததல்ல என்று சொல்லிக் கொண்டு நம்மைக் குற்றம் சொல்கின்றவர்களில் ஒருவ ராவது யோக்கியர்களாக இருக்க முடியாது என்றே சொல்லுவோம். இதற்கு என்ன காரணம் என்றால், இவர்கள் உண்மையிலேயே இராமா யணம் நடந்த கதை அல்ல என்று மற்ற மக்க ளுக்கு எடுத்துச் சொல்லி அதை மெய்ப்பிக் கின்றவர்களாயிருந்தால் இவர்களுக்கு இப் போது நம்மிடத்தில் சிறிதும் வேலை இல்லை. மற்று யாரிடத்தில் என்றால், ராமனைக் கடவுளாக வைத்து கும்பிடுகின்றவர்களிடத் திலும், பூஜை உற்சவத்திற்கு கோடிக் கணக்கான பொருள்களை பாழாக்குபவர்களிடத்திலும், கோடிக்கணக்கான பொருள்களைப் பாழாக்கி கோயில்களை கட்டுபவர்களிடத்திலும், முதலில் போய் இவர்களது புத்திசாலித்தனத் தையும் ஆராய்ச்சித் திறத்தையும் மூட நம்பிக்கையை ஒழிக்கும் தன்மையையும், மடமையை நீக்கும் தன்மையையும் சுயமரி யாதை உணர்ச்சியை ஊட்டும் வேகத்தையும், காட்டியிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இராமாயணப் புரட்டை வெளியாக்குபவரி டத்தில் வந்து முட்டிக்கொள்பவரிடத்தில் கடுகளவாவது உண்மையோ, யோக்கியமோ, இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். உதாரணமாக, நாட்டுக் கோட்டைச் செட்டி நாட்டில் உள்ள ஒரு புராணப் பிரச்சார பத்திரி கையில் காரைக்குடி விநாயகர் மண்டபத்தின் இந்துமத அபிமான சங்க சார்பாய் திரு.பி.ஸ்ரீ. ஆச்சாரியார் என்கின்ற ஒரு பார்ப்பனர் இராமாயணத்தின் இரகசியம் என்று ஒரு பிரசங்கம் செய்ததாக காணப்படுகின்றது. அதில் உள்ள விஷயங்கள் இந்துமத அபிமானத்தின் மீது செய்யப்பட்ட பிரசங்கமாகவே வைத்துக் கொள்ளப்பட்டாலும், இராமாயணத்தைக் காப்பாற்றுவதற்கு திருட்டுத் தனமான முறையில் தந்திரம் புரிகின்றார் என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது. இப்படிச் செய்வது பார்ப்பனர்களுக்கு குல தர்மம் என்று ஒருபுறம் சொல்லக்கூடுமானாலும் நாம் அதை அந்தப்படியே குலதர்மம் என்று விட்டுவிட முடியாததற்கு வருந்துகின்றோம். ஏனெனில், அது பாமர மக்களை ஏய்க்கவே நமது முயற்சி களுக்கு இடையூறாக செய்யப்படும் சூழ்ச்சி என்று நாம் கருதுவதால் அதன் புரட்டை வெளியாக்க வேண்டியது நமது கடமையா கின்றது. அதாவது, திரு.ஆச்சாரியார் அதில் இராமாயணம் ஆரியர் திராவிடர் என்கின்ற பாகுபாட்டிற்கு உடையதல்ல என்கின்றார்.  ஆனால், கம்பர் ராமனை ஆரியன் என்றும், இராவணனை தென்னாட்டவன் என்றும் பல இடத்தில் சொல்லி இருக்கிறார் என்பதற்கும், வால்மீகியும் வடக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் தேவர்கள் என்றும் தென்பாகத்தில் உள்ளவர் களை அரக்கர்கள் என்றும் சொல்லி இருப்பதாக மொழி பெயர்ப்புகளில் இருக்கின்றது என் பதற்கும், இவர் என்ன பதில் சொல்லுகின்றார் என்று கேட்கின்றோம். அதுமாத்திரமல்லாமல் இராமன் பார்ப்பனர்களின் காலில் விழுந்து கும்பிட்டதாகவும், அவர்களுக்கு பொருள்கள் தானங்கள் செய்ததாகவும், பார்ப்பனருக்கு திதி கொடுத்து தனது தந்தையை மோட்சத் திற்கு அனுப்பியதாகவும் சொல்லப் பட்டிருக்கின்றது. அது மாத்திரமல்லாமல், சூத்திரன் தவம் செய்ததற்காக (கடவுளை வணங்கியதற்காக) அவன் ராமனால் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. அது மாத்திர மல்லாமல், மாமிசம் சாப்பிடுபவனும், குடிகாரர் களுடைய நேசம் கொண்டவனுமான ராமன் செய்த கெட்ட காரியங்களையெல்லாம் கூட நல்ல காரியங்களாகவும் வேதம் படித்து கோடிக் கணக்கான வருஷம் தவம் செய்து, கடவுள் அருள் பெற்றவனை எது செய்தாலும் கெட்ட வனாகவே பாவிக்கப்பட்டிருக்கின்றது, இவை களில் எதற்கு திரு.ஆச்சாரியார் சமாதானம் சொல்லுகின்றார் என்று கேட்கின்றோம்.
- விடுதலை நாளேடு, 14.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக