அனுமன், இதிகாசமெனும் இராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம். அவர் வாழ்ந்தாரா, இல்லையா என்று நமக்கு உறுதியாகத் தெரியாது. ஆனாலும் அவர் கடவுளாகி வணங்கத் தகுந்தவராக ஆக்கப்பட்டுவிட்டார். இராமாயணத்திற்கு மூலமாயிருப்பது வால்மீகி இராமாயணம். அதில் சொல்லப்படாத பல செய்திகளை, நாட்டில் அனுமனைப் பற்றிச் சொல்லி வருகிறார்கள். அனுமனை ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள். அவர் அன்னையின் பெயர் அஞ்சனையாம்; அதிலிருந்து ஆஞ்சநேயர் வந்தது என்கிறார்கள்.
பா.ஜ.க.வினர் இருக்கிற பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இப்போது அனுமனின் சாதியைப் பற்றிப் பேசத் தொடங்கி விட்டார்கள். பெரிய ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்கள். மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சங்பரிவார் தலைவர்கள், பிரதமர், முதல்வர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் போன்றவர்கள் எல்லாம் பேசிய பேச்சுகளை தொகுத்துப் பார்த்தால் அவர்களின் அறிவின் முதிர்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது நாட்டில் மக்களுக்கான பிரச்சினைகள் எவ் வளவோ இருக்கின்றன. அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அனுமன் எந்த ஜாதி என்று ஆராய்ந்து, ஆளுக்கு ஒரு சாதியைச் சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள். பா.ஜ.க.வின் இந்தப் போக்கு நாட்டிற்கு என்ன நன்மையை விளைவித்து விடப்போகிறது?
வால்மீகி இராமாயணம் ஒரு இதிகாசம் - பழங்கதை. அதில் வருகிற ஒரு குட்டிப்பாத்திரம் அனுமன். அவருக் குப் பல பெயர்கள் உண்டு. மனிதனாகப் பிறந்த இரா மனையும் சீதையையும் எவரும் அறிந்து கொள்வதற்கு முன்பாகவே அனுமன், அவர்கள் இருவரையும் கடவுள் நிலையினர் என்று அறிந்து கொண்டவர். அவர் இராம னுக்கு சீதையை மீட்க உதவுபவர்களுள் ஒருவராக அக்கதையில் படைக்கப்பட்ட பாத்திரமாக வருகிறார். கதையில் படைக்கப்படும் பாத்திரங்களைப் படிப்ப வர்கள் ஒவ்வொரு விதமாக விமர்சனம் செய்வார்கள். அந்த விமர்சனங்கள்கூட கதையின் போக்குகளையே உள்ளடக்கியதாக இருக்கும். தமிழ்நாட்டில் இராமாயணம் அல்லது இராமாயணப்பாத்திரங்கள் பல கோணங்களில் விமர்சிக்கப்பட்டதைப் போல இந்தியாவில் வேறு எந்தப் பகுதியிலும் விமர்சிக்கப்பட்டதில்லை . இங்கே புகழ் பெற்ற பக்தர்கள் முதல் நாத்திகர்கள் வரை விமர்சனம் செய்து இருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமான சிலரை இந்த நேரத்தில் நாம் கவனப்படுத்திக் கொள்வது சிறப்புக்குரிய ஒன்றாகும். வெள்ளக்கால் ப.சுப்பிரமணி யனார், ரசிகமணி டி.கே.சிதம்பரநாதர், நாவலர் ச.சோம சுந்தர பாரதியார், மறைமலையடிகள், இ.மு.சந்திரசேகரப் பாவலர், புதுமைப் பித்தன், கம்பதாசன், ச.து.சு.யோகியார், இராஜாஜி, அ.ச.ஞானசம்பந்தன் என இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்களெல்லாம் இராமா யணப் பாத்திரங்களை விமர்சனம் செய்தவர்கள். நாம் பாத்திரங்களை ஒட்டியும் வெட்டியும் பேசும் பட்டிமன்றப் பேச்சாளர்களை இப்பட்டியலில் இணைக்க முடியாது.
அடுத்து சுயமரியாதை இயக்கம், அதன் வழி வந்தவர்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக வால்மீகி இரா மாயணத்தை கம்ப இராமாயணத்தை நிராகரிக்கின்றனர். நாத்திகர்கள் இராமாயணக் கருத்தமைவையே ஏற்க மறுக்கின்றனர். அதைப்பற்றிய நாடு தழுவிய விவா தங்கள் நடந்து இருக்கின்றன. மாநாடுகள் நடத்தப்பட்டு கலகத்தில் முடிந்து இருக்கின்றன. சொற்போர்கள் நிகழ்ந்து இருக்கின்றன. எரிப்புப் போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. இதிகாச, புராணங்களைக் கொளுத்த அறிவிப்புகள் விடப்பட்டு இருக்கின்றன. வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று இருக்கின்றன. இவ்வளவு நிகழ்ந்தும் இராமாயணப் பாத்திரங்கள் இன்னின்ன சாதிகளைச் சார்ந்தவர்கள் என்கிற விவாதம் நடைபெற்றதில்லை. அப்படிப்பட்ட விவரங்களும் இதுவரை சொல்லப்பட்டதில்லை. வால்மீகி முதல் நூல் என்றாலும், கம்பன் தமிழ் வயப்படுத்தி இராமாய ணத்தைப் படைத்து இருக்கிறான். அவன்கூட பாத்திரங் களைப் பெருமை பொங்க அறிமுகப்படுத்துவான். அனுமனை இராமன் வாயிலாக இலக்குவனுக்குச் சொல்கிறபோது அவரைச் 'சொல்லின் செல்வன்' என்கிறான். 'தருமத்தின் தனிமைத் தீர்ப்பான்' என்று சொல்கிறான். வால்மீகியிலும் கம்பனிலும் ஒவ்வொரு பாத்திரங்களின் சாதி என்று பேசப்படவில்லை. வர்ணம் பேசப்பட்டு இருக்கும். அதுகூட வானரங்களுக்கு வர்ணம் ஏது?
ஏ.கே. இராமானுஜம், '300 இராமாயணங்கள் - அய்ந்து எடுத்துக்காட்டுகள் - மூன்று பிரச்சினைகள்', என்றொரு கட்டுரையை 2011 அக்டோபரில் எழுதினார். அக்கட்டுரை டில்லிப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டு விட்டது. பெரியார் இந்தியாவிலுள்ள ஒரு மதத்திற்கு ஒரு இராமாயணம் இருப்பதாகச் சொல்வார். அவர் இராமாயண ஆராய்ச்சி செய்தவர். அதைப் பற்றி நூல்களை எழுதியவர். வெளியிட்டவர். பேசியவர். அதைவிடவும் 300 இராமாய ணங்கள் என்ற போது பெரும் அதிர்ச்சி உண்டாயிற்று. ஆனால் அவற்றின் விவரம் இன்னதென்று நமக்குக் கிடைக்கவில்லை. வால்மீகியிலிருந்து அவை எத்தனை இராமாயணங்கள் என்றா லும், அவற்றில் எல்லாம் அனுமனின் சாதி சொல்லப்பட்டு இருக்கின்றனவா? அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் விவரங்கள் கிடைத் திருக்குமே? அப்படி இதுவரை யாரும் சொன்னதில்லை.
பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் ஒருவர், சார்லஸ் டார்வின் தத்துவமே சரியானது இல்லை என்று அறை கூவல் விடுத்துப் பேசினார். எதிர்ப்புகள் கிளம்பின. பிறகு அடங்கி விட்டார். நம் தமிழ்நாட்டில் 1954-இல் வந்த ஒரு திரைப்படப் பாடலில் உடுமலை நாராயணகவி,
"குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின்மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மையிது!
உருவ அமைப்பைக் காணும்போது
ஓரறி வீரறி வுயிரென மாறி
வாலில்லாத..... (குரங்கிலிருந்து)"
- என்று எழுதினார். மனிதப் பரிணாம வளர்ச்சியைப் பாட்டிலே வடித்தவர்கள் நாம். பா.ஜ.க. அமைச்சரோ, பரிணாம வளர்ச்சியையே தவறு என்றார். கிரேக்கப் புராணம், இதிகாசங்கள் பற்றியெல்லாம் எங்கல்ஸ் போன்ற அறிஞர்கள், "மனித குலத்தின், கடந்த கால நிகழ்வுகளின் - சமுதாய வளர்ச்சி நிலைமைகளின் பூடக வடிவம் என்று சொல்வார்கள். அதில் சாதியைத் தேடும் பா.ஜ.க.வினரை என்ன வென்று சொல்வது?
அனுமன் கற்பனையான பாத்திரமாக படைக்கப்பட் டாலும் வைணவ உலகம் அவரைச் சிறிய திருவடி என்று போற்றுகிறது. கோயிலெடுத்து வழிபடுகிறது. அதன் நீட்சி நம்பிக்கையின் பாற்பட்டு எல்லாச் சாதி மக்களும் அனுமனை வழிபடுகின்றனர். ஆனால் பா.ஜ.க.வினரோ அனுமனை இன்ன சாதி என்று கூறி விவாதித்து வருகின்றனர். இதை முதலில் தொடங்கியவர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் - தான். இவர்தான் அனுமனை 'தலித்' என்று கூறியவர். பின்னர் ஒருவர் 'ஏக் தம்மில்' அனுமனை ஆரிய சிரேஷ்டர் ஆக்கி விட்டார். அதை இன்னொருவர் ஏற்க மறுத்து 'ஜாட்' என்றார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. பார்த்தார். இதிகாச காலத்தில் இஸ்லாத்தை இருப்பதாகக் காட்டிவிட்டார். அதாவது அனுமனை, 'கலிமர் ஓதவைத்து முஸ்லிம் ஆக்கி விட்டார். பா.ஜ.க.வின் ஹரி ஓம் பாண்டேவால் இதையெல்லாம் பார்த்து எப்படிச் சும்மா இருக்க முடியும்? சுக்ரீவன் - குர்மி, வாலி - யாதவ், ஜடாயு - முஸ்லிம் என்று அனுமனின் நண்பர்கள் ஆளுக்கொரு சாதி, மதம் என மாற்றி விட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர், அனுமன் ஒரு விளையாட்டு வீரர் என்று அவர் பங்குக்கும் ஒரு கருத்தைத் தெரிவித்தார். இவர்களை யெல்லாம் மதுராபுரி 'மகந்து' ஒருவர் கண்டனம் செய்துள்ளார்.
அகண்ட இந்து ராஷ்டீரியத்தை கன்னியாகுமரி முதல் ஆப்கானுக்கு அப்பால் காந்தாரம் வரை எல்லையாகக் கொண்டு அமைக்கப் போகிறதாகச் சொல்கிற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்பரிவார் தலை மைகள் அனுமனைப் பற்றி கண்டவாறு பேசாதீர்கள் என்று அவர்கள் கட்சியினருக்கு வாய்ப்பூட்டுப் போட முடியவில்லை. இதுபோலக் குழப்பங்களை ஏற்படுத்தி, நாட்டிலுள்ள பிரச்சினைகளில் மக்களின் நாட்டம் செல்லாமல் திசை திருப்புவது, பா.ஜ.க.வின் உத்திகளில் ஒன்று.
தேர்தல் நெருங்கிவிட்டது. மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள். பா.ஜ.க.வின் எந்த 'பஜனும்' இனி மக்களிடையே எடுபடாது. மூடநம்பிக்கைகளைப் பரப்பி இந்திய மக்களின் வாழ்வை முடக்கும் அவர்களின் எந்தப் பிரச்சாரத்தையும் எதிர்கொள்வது போல அவர்களின் அனுமன் ஆராய்ச்சியைக் கண்டு மக்கள் சிரிக்கிறார்கள். இப்படி, எந்த இராமாயணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்.
(நன்றி: 'முரசொலி' - தலையங்கம் - 31.12.2018)
- விடுதலை நாளேடு, 1.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக