பக்கங்கள்

செவ்வாய், 31 ஜூலை, 2018

பாரதப் பாத்திரங்கள் (7)

.அறிவுக்கரசு

குந்தி

 


திருமணத்துக்கு முன்பே சூரியனுடன் கலவி செய்து கர்ணனைப் பெற்றவள் குந்தி. அது கள்ளப் பிள்ளையாம். எனவே, கங்கை ஆற்றோடு போக விட்டுவிட்டாள். கணவனுக்குப் பெறாமல் வேறு ஆள்களுக்குப் பெற்றவை நல்ல பிள்ளைகளா? தன் மகன்கள் என்றால் குந்தி.

வியாசனின் கர்ப்பதானத்தால் பிறந்த திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் என்போரில் பாண்டு ஒரு சாபத்தைச் சுமந்தான். உடலுறவில் ஈடுபட்டிருந்த மான்களை வேட்டையாடிக் கொன்றான். உடல் உறவில் ஈடுபட்டால் பாண்டு இறந்துபோவான் என்பது சாபம். எனவே அவன் மனைவி குந்தி கணவன் சுகம் என்ன என அறியாமலே இருந்தவள்.

திருமணத்திற்கு முன்பே மிகச் சிறு வயதிலேயே சூரியக் கடவுளைப் புணர்ந்து பிள்ளை பெற்றவள் குந்தி. இருந்தாலும் கணவன் மூலம் பிள்ளை பெற முடியாதவள். பாண்டு விடவில்லை. “எந்த முனிவனையாவது புணர்ந்து பிள்ளை பெற்றுக்கொள்’’ என்றான். அவனும் அப்படிப் பெறப்பட்டவன்தானே!

குந்தி தயங்கினாள். பாண்டுவின் மற்றொரு மனைவியான மாத்ரியும் தயங்கினாள். நாங்களே அப்படிப் பிறந்தவர்கள்தானே! இதில் என்ன அவமானம்?’’ என்றான் பாண்டு.

பாரதக் கலாச்சாரமே அதுதானே! சாஸ்திர சம்மதமானதுதானே நியோகம்? நெய் பூசிப் புணர்ந்து உருவானவர்களின் ஜாதிதானே நியோகிகள்?

புரிந்த குந்தி சம்மதிக்கிறாள். ரிஷி எதற்கு? தேவர்களையே கூப்பிட்டுக் கலவி செய்யும் வித்தை கற்றவள் நான். துர்வாசர் சொல்லிக் கொடுத்துள்ளார் எனக் கூறவும் பாண்டு மனம் குதூகலிக்கத் தலையை ஆட்டுகிறான். குந்தி கூப்பிட்டாள்.

எமன் வந்தான். சாவுக் கடவுள். மகாபாரதம், வசனகாவியம், ஆதி_பக்கம் 190இல் சண்முகக் கவிராயர் எழுதுகிறார் _ “எமன்வர குந்தி அவனை எதிர்கொண்டு அழைத்துப் போய் மலரணையில் இருத்தி உபசரித்துத் தன்னுடைய முற்றா முலையை எமனது மார்பு ஊடுருவப் புல்லினாள். எமனும் அவளை இறுகத் தழுவிக் காமசாஸ்திரம் விதித்த அனைத்து முறைகளையும் கையாண்டு இறுதியில் வீரிய விருத்தியால் குந்திதேவி வயிற்றில் கருவுண்டாகி, குரு வாரத்தில் நவக்கிரகங்களும் நல்ல நிலையில் இருக்கிற தருணத்தில் உலகையெல்லாம் ஒரு குடையில் ஆளத் தகுந்த சிறப்பினை உடைய ஒரு புத்திரன் பிறந்தான்.’’

அவன் யுதிஷ்டிரன். தருமன் எனப்படுபவன். உலகை ஆண்டானா? ஊரை ஆளவே உனக்காச்சு, எனக்காச்சு என்று பங்காளிகளுடன் சண்டை. கிரக நிலைகள் நன்றாகக் கூடிய நேரத்தில் கூடிப் பெற்றாலும் நிலைமை அப்படித்தான்.

எமனை அனுப்பிய குந்தி மேலும் இரண்டு கடவுள்களை அழைத்தாள். வந்தார்கள். பிள்ளை கொடுத்தார்கள் ஆக குந்திக்கு மூன்று பிள்ளைகள்.

தனக்கு மட்டும் மூன்று. தன் சக்களத்தி மாத்ரி நிலை? அவளுக்கும் ஏற்பாடு செய்தாள். இரண்டு தேவர்களை அழைத்து மாத்ரியைக் கூட்டிக் கொடுத்தாள். குந்திக்கு தருமன், பீமன், அர்ச்சுனன். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன்.

பாண்டுக்கு மகன்கள் அய்ந்து பேர். பாண்டவர்கள். பஞ்ச பாண்டவர்கள். அய்வரும் அப்பனுக்குப் பிறக்காதவர்கள். வேற்றானுக்குப் பிறந்தவர்கள். பாரதக் கலாச்சாரத்தில் இதற்கு ஷேத்திரஜா என்று பெயர். வனஜா என்றால் வனத்தில் பிறந்தவன். கிரிஜா என்றால் மலையில் பிறந்தவன். ஷேத்ரஜா என்றால் ஊரானுக்குப் பிறந்தவன்.

திருமணத்துக்கு முன்பே சூரியனுடன் கலவி செய்து கர்ணனைப் பெற்றவள் குந்தி. அது கள்ளப் பிள்ளையாம். எனவே, கங்கை ஆற்றோடு போக விட்டுவிட்டாள். கணவனுக்குப் பெறாமல் வேறு ஆள்களுக்குப் பெற்றவை நல்ல பிள்ளைகளா? தன் மகன்கள் என்றால் குந்தி.

பாண்டுவின் அண்ணன், பார்வையற்ற திருதராஷ்டிரன் தன் மனைவி காந்தாரியுடன் ஆட்சியில், அரண்மனையில் இருந்தான். தன் மக்கள் நூற்றுவர் கவுரவர்கள் எனப் பட்டனர். மூத்தவன் துரியோதனன்.

பாண்டு இறந்துபோனான். கைம்பெண் ணாகிவிட்ட குந்தி அரண்மனையில் ஒண்டுக் குடித்தனம்.

ஆட்சியுரிமை யாருக்குச் சேர வேண்டும்? இதுதான் பாரதக் கதை.

திருதராஷ்டிரன் மூத்தவன். பாண்டு இளையவன். மூத்தவன் இருக்க இளையவன் மாண்டுபோனான். மூத்தவனின் மகன் துரியோதனன். அவன் பிறக்கும் முன்பே பாண்டுவுக்கு தருமன் பிறந்துவிட்டான்.

தருமன்தான் இப்போது வயதில் பெரியவன். அவன்தான் ஆளவேண்டும் என்பது பாண்டவர் தரப்பு. திருதராஷ்டிரன்தான் மூத்தவன். அவன் மகன்தான் ஆளவேண்டும் என்பது கவுரவர் தரப்பு.

எது சரி? எது வழக்கம்?

கணவனுக்குக் கண்பார்வை இல்லை என்பதால் தானும் கண்களைக் குத்திக் கொண்டு தியாக வாழ்வு வாழ்ந்த காந்தாரியின் பிள்ளைகளா?

திருமணத்திற்கு முன்னேயும் சரி, ஆனபின்னேயும் சரி தேவர்களை வரவழைத்துப் புணர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொண்டு காம வாழ்வு வாழ்ந்த குந்தியின் பிள்ளைகளா? விதுரன் சொன்னான்: திருதராஷ்டிரன் முடிதுறந்து தருமன் முடிசூட வேண்டுமாம்.

பாண்டவர்கள் ஆசைப்பட்டனர். ஆசை வெறியாகியது. காரணம் அவர்கள் வசம் உதவிக்கான சிறுபடை இருந்தது. திரவுபதியைக் கட்டிக்கொண்டதால் அந்நாட்டுப் படைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம், படை சிறிதாயினும் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளும் கபடத் தனங்களும் வெற்றிக்கு உதவும் எனவும் திட்டம்.

அதிகாரப் போட்டி பெரிதாகியது. நாட்டைப் பிரித்து ஆளுக்கொரு பங்காக ஆளலாம் என்பதை கிருஷ்ணன் கூறிய சமரச சமாதான யோசனை ஏற்கப்பட்டது.

நாடு பிரிக்கப்பட்டது. இந்திரப்பிரஸ்தம் உருவானது. பாண்டவர்கள் இங்கே. கவுரவர்கள் அஸ்தினாபுரத்தில்.

குந்தியின் முதல் மகனாகிய கர்ணனைக் கொன்றிட அவனது கவசகுண்டலங்களைக் கேட்டுப் பெற்று பாண்டவர் ஆட்சிக்கு வர உதவியவள், குந்தியே! உள் மனதில் அய்ந்து மகன்கள் மீது மட்டும்தான் அன்பு, ஆசை, பாசம், அனுதாபம், ஆதரவு என எல்லாமே! நல்ல தாயுள்ளம் தானா? நல்ல தாய் தானா? ஓரவஞ்சனை செய்தவள்!

                                                                                                (தொடரும்...)

- உண்மை இதழ்,16-31.7.18

வெள்ளி, 6 ஜூலை, 2018

இராமாயணம் கதைதான் என்று கூறிவிட்டாராம் தெலுங்கு நடிகர் மகேஷ் காதி மீது சங்-பரிவாரங்கள் பாய்ச்சல்!

அய்தராபாத், ஜூலை 5 ராமர் -- சீதை யைப் பற்றி தவறாக பேசிவிட்டார் என்று கூறி, தெலுங்கு நடிகர் மகேஷ்காதி மீது சங்-பரிவாரங்கள் பாய்ந்துள்ளன. பகுத்தறிவாளரான பாபுகோகினேனி கைது செய்யப் பட்டதையொட்டி, அண்மையில் தொலைக்காட்சி சேனல் விவாதம் ஒன்றை நடத்தியது. இதில், தெலுங்கு திரைப்பட நடிகரும், விமர்சகருமான மகேஷ் காதி கலந்துகொண்டார்.

அவர்பேசுகையில்,என்னைப் பொறுத்தவரை இராமாயணம் வெறும் கதைதான்; அந்த கதை யைப் படிக்கும்போது, ராமர் மிகப் பெரிய மோசடிக்காரர் என்றே எனக்குத் தோன்றியது என்று கூறியதுடன், ராமருடன் திரும்பி வராமல், ராவணனுடனேயே சீதை வாழ்ந்திருந் தால் அவருக்கு நியாயம் கிடைத்திருக்கும்; மேலும் அவ்வாறு வாழ்வதில் என்ன தவறு? என்றும் கேட்டி ருந்தார். மகேஷ் காதியின் இந்த பேச்சுக்காகவே, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பஞ்சாரா ஹில் காவல் நிலையத்தில், பஜ்ரங் தள் அமைப்பினர் தற் போது புகார் அளித்துள்ளனர். இந்துக்களின் மனத்தைப் புண் படுத்தி விட்டார் என்று கூறி, சைதாபாத் காவல் நிலையத்தில் வழக்குரைஞர்ஒருவரும் புகார் அளித்துள்ளார்.ஆனால், தானொரு தாழ்த்தப்பட்டவர் என்பதாலேயே சங்-பரிவாரங்கள் தனக்கு எதிராக வழக்குகளைப் போட்டு மிரட்டப் பார்ப்பதாக மகேஷ் காதி தெரி வித்துள்ளார்.

-  விடுதலை நாளேடு, 5.7.18

புதன், 4 ஜூலை, 2018

இராமாயண சொற்பொழிவு - வாசகர் வினாக்களுக்கு தமிழர் தலைவரின் விடைகள்

* வால்மீகி வடநாட்டார்; கம்பன் தமிழ்நாட்டார்   வால்மீகியைப் பாராட்டி - கம்பனைப் பழிக்கலாமா?''


* கோவில்களில் விபீஷண பட்டாபிஷேகம் நடக்கிறதே?''


* அல்லா, ஏசுவை ஏற்று ராமனை இகழ்வது ஏன்?''




சென்னை, ஜூன் 30- அல்லா, ஏசுவை ஏற்று இராமனை இகழலாமா? என்பது உள்பட வாசகர்கள் எழுப்பிய வினாக்களுக்கு திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடைகள் அளித்தார்.

இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம்


22.6.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம்  என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு சொற்பொழிவு-7 சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றிய பிறகு, அரங்கத்தில் இருந்தவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.

அக்கேள்வி - பதில்கள் வருமாறு:

காட்டிக் கொடுக்கும் தமிழனைவிட, எதிர்த்து


நிற்கும் எதிரி மிகவும் மேலானவன்


கேள்வி:  கம்பன் தமிழ்நாட்டுக்காரர், வால்மீகி வட நாட்டுக்காரர், வடநாட்டவரைப் புகழ்ந்து தமிழைப் பழிக்கிறீர்களே?

- ஜக்ரியா, புதுச்சேரி

தமிழர் தலைவர்: காட்டிக் கொடுக்கும் தமிழனைவிட, எதிர்த்து நிற்கும் எதிரி மிகவும் மேலானவன். ஏனென்றால், கம்பனைவிட, இனத்தைக் காட்டிக் கொடுத்த ஒரு கோடரி காம்பு உலகத்தில் வேறு எங்கும் கிடையாது.

தமிழன் என்று சொன்னால், அவனை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமாக, சமஸ்கிருதத்தை தேவபாஷை என்று ஒப்புக்கொள்கிறவன் எப்படி நம்மாளாக இருக்க முடியும்? தமிழை நீஷ பாஷை என்று சொல்கின்றவனை எப்படி தமிழனாக ஏற்க முடியும்? ஆகவே, கம்பன் தமிழனாக இருப்பதினால்தான், இரண்டு மடங்கு தண்டனை கொடுக்கவேண்டும். ஒரு மடங்கு தண்டனை கொடுத்தால் போதாது.

எதிரியாக இருப்பவன் சொன்னால், நாம் அவனைப் பாராட்டலாம். ஒப்பிட்டுக் காட்டும்பொழுது மட்டும்தான் வால்மீகியைக் காட்டுகிறோம்.

வால்மீகியினுடைய அடிப்படையே, இராமனை மானிட னாகக் காட்டினான். கம்பன், அவனை அவதாரமாகக் காட்டினான்.

வால்மீகி இராமாயணத்தில் ஒரு முக்கிய செய்தி, இராமன் கடவுளை வணங்காமல், பார்ப்பனரை வணங்கினான் என்கிற இடமில்லை.

இராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தான் துளசிதாஸ் - அவன் அந்த ஊர் கம்பன்.

வால்மீகி எழுதியது வடமொழியான சமஸ்கிருதத்தில். துளசிதாஸ் - புருஷோத்தமன் என்கிற பெயரை வைத்தவர் இவர்தான். துளசிதாஸ் இராமாயணம் - இராமச்சரித மன்னார்ஸ். வால்மீகி - இராமகாதை என்று பெயர் வைத்தார்.

அந்தக் கதையிலிருக்கும்படி, கடவுளை வணங்க வேண்டிய அவசியம் இல்லை. பார்ப்பனர்களைத்தான் வணங்கவேண்டும். இராமன் பார்ப்பனர்களை வணங்கினான். காரணம், கடவுள்களே பார்ப்பனர்களைத்தான் வணங்கி னார்கள் என்கிற கருத்தை - துளசிதாஸ் எழுதியதை அப் படியே மொழி பெயர்த்து -

கரிய மாலினும், கண்ணுத லானினும்,

உரிய தாமரை மேல் உரைவானினும்,

விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,

பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.

திருமாலைவிட, சிவனைவிட, பிரம்மாவைவிட, பஞ்ச பூதங்களைவிட பெரியவர்கள் யார்? வணங்க வேண் டியவர்கள் யார்? பிராமணர்கள்; பார்ப்பனர்கள்தான்.

கடவுள் முக்கியமல்ல - பார்ப்பனர்கள்தான் முக்கியம் என்று துளசிதாஸ் எழுதியிருக்கலாம். ஆனால், கம்பன், பார்ப்பனர்கள்தான் முக்கியம் என்று எழுதியதைவிட இந்த இனத்துக்கு மாபெரும் துரோகம் காலங்காலமாக செய்ய முடியாத துரோகம் வேறு இருக்க முடியாது.

அதற்காக நாம் கம்பனைப் பாராட்ட முடியவில்லை என்பதுதான் காரணம்.

இராமாயணத்தை தமிழில் கொடுத்ததினால்தானே இன்றைக்கு அது நிலைத்திருக்கிறது. அது வடநாட்டோடு நின்றிருந்தால், இங்கே வந்திருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. அந்தப் படையெடுப்பு வந்திருக்காது.

ஆகவே, வால்மீகி இராமாயணம் இந்த நாட்டில் பரவவில்லை. கம்ப இராமாயணத்தைத்தானே இன்றைக்கும் புலவர்கள் கட்டிக்கொண்டு மாரடிக்கிறார்கள். கம்பர் விழா என்று எல்லோரும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசு கிறார்கள்.

ஆகவேதான், இந்த விஷம் மிகவும் ஆபத்தானது.

விபீஷண சரணாகதி படலம்


கேள்வி:  கோயில்களில் விபீஷண பட்டாபிஷேகம் திருவிழா நடத்துகிறார்களே...

- ந.கதிரவன், செஞ்சி

தமிழர் தலைவர்: ஏற்கெனவே என்னுடைய உரையில் நான் சொல்லியிருக்கிறேன். நம்முடைய வ.ரா. அவர்களும் சொல்லியிருக்கிறார். இராமாயணப் பிரசங்கத்தில், காலட் சேபம் செய்கிறவர்கள் - இறந்துபோன சேங்காலிபுரம் அனந்தராம தீட்சதராக இருந்தாலும், மற்றோரும் எதைச் சொல்லுவார்கள் என்றால்,

விபீஷண சரணாகதி படலம்தான் இராமாயணத்திலேயே மிகவும் முக்கியம் என்பார்கள்.

சுந்தரகாண்டம் படித்தால் எப்படி மோட்சத்திற்குப் போக லாம் என்று சொல்கிறார்களோ, அதைப்போன்று விபீஷண சரணாகதி படலம் என்பார்கள்.

ஏனென்றால், விபீஷணர்களை, இந்த இனத்தைக் காட்டிக் கொடுப்பவர்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக.

முதல் விபீஷணனை, தூக்கி நிறுத்தியவன் கம்பன். ஆகவேதான், இன்றைக்கும் நம் நாட்டில், சொந்தக் கட்சி யைக் காட்டிக் கொடுக்கிறான்; சொந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கிறான்.

வ.ரா. அக்கிரகாரத்து அதிசய மனிதரான அவர், கோதைத் தீவில் எழுதினார்.

இந்த நாட்டில் இராமாயணம் ஏன் பரவக்கூடாது என்று சொல்கிறோம் என்றால், அதில் வரும் மோசமான கதாபாத்திரம் விபீஷணன்தான். காட்டிக் கொடுப்பது தவறு இல்லை. காட்டிக் கொடுக்காத வரையில்,  அவன் அரக்கன், அசுரன். காட்டிக் கொடுத்த பிறகு அவன், ஆழ்வார்.

காட்டிக் கொடுக்கின்றவர்களுக்குப் பட்டம் கொடுப் பார்கள் நம் நாட்டில். அது மிகவும் ஆபத்தானது.

இலங்கையைச் சுற்றிக்கொண்டு


போகவேண்டிய அவசியமில்லை


கேள்வி:  உங்கள் ஆய்வுச் சொற்பொழிவு நன்றாக இருந்தது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, இராமன் பாலம் என்று சொல்லி முடக்கிவிட்டார்கள். அது எந்த அளவிற்கு புளுகு என்பதை உங்களுடைய ஆய்வுச் சொற்பொழிவில் தெரிந்துகொண்டேன்.

- இராஜேந்திரன், சூளைமேடு

தமிழர் தலைவர்: இன்றைய விடுதலையில் வந்திருக்கின்ற அறிக்கையைப் படித்தீர்கள் என்றால், உங்களுக்கு இன்னும் மிகத் தெளிவாகத் தெரியும்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்குவதற்காக அவர்கள் சொன்ன இராமர் பாலம் என்பது இல்லாத ஒன்று. அதற்கு ஏராளமான புத்தகங்களை நாம் எழுதியிருக்கிறோம். ஆடம்ஸ் பிரிட்ஜ் என்கிற ஒரு சிறிய மணல் திட்டு. கலைஞர் அவர்கள், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அறிவித்து, நிறைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சி யில் இருக்கும்பொழுது, அதற்கான முயற்சிகளை மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு அவர்கள் சிறப்பான ஏற்பாடு செய்தார்.

அதை வேண்டுமென்றே திட்டமிட்டு, அந்தத் திட்டத்தை பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, மத்தியில் இருந்த பார்ப்பனர்கள் எல்லோரம் சேர்ந்து முடக்கினார்கள். அந்தத் திட்டத்திற்காக 2000 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், இலங்கையைச் சுற்றிக்கொண்டு போகவேண்டிய அவசியமில்லை. பொருளாதாரத்தில் நம் நாடு மிகப்பெரிய அளவிற்கு முன்னேறியிருக்கும்.

இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டுவிட்டு, தேவை யில்லாத திட்டங்களான மக்கள் விரோத திட்டங்களான சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டம் - நியூட்ரினோ திட்டம் - ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்து மக்களை வருத்திக் கொண்டிருக்கிறீர்களே, இது நியாயமா?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போலவே, மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ஒரு தூதரை அனுப்பி வைத்தார். ஆனால், இங்கே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், போக்குவரத்து நெரிசலும் இருக்காது. சென்னைக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கும்.

ஒரு கற்பனையைக் காட்டி, நடைமுறையில் வரக்கூடிய பொருளாதாரத் திட்டத்தை - மூடநம்பிக்கையால், புரட்டு களால் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும் என்பதற்கு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறுத்தம்தான் ஒரு எடுத்துக்காட்டாகும்.

இப்பொழுதுகூட என்ன சொல்கிறார்கள், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவோம் - இராமர் பாலத்தை உடைக்காமல் வேறு பாதையில் மாற்றுவோம் என்கிறார்கள்.

இராமர் பாலம் கட்டினால், ஏன் அனுமார் மலையைத் தூக்கிக்கொண்டு போகிறான் என்றால், அதற்குப் பதில் சொல்லவில்லை.

இராமர் பாலம் கட்டியிருந்தால், வானர சேனைகள் எல்லாம் அந்தப் பாலத்தின்மீதுதானே சென்றிருக்கவேண்டும். அதுபோன்று இல்லையே! என்று பல கேள்விகள் கேட்கப்பட்ட புத்தகங்கள் நிறைய இருக்கின்றன.

கம்ப இராமாயணத்தில் உத்தரகாண்டமே கிடையாது!


கேள்வி:  இராமன் குகனோடு அய்வரானோம், குன்று சூழ்வான் மகனோடு அறுவரானோம் எனக் கம்பன் காட்டும் சமத்துவ ராமனாக வால்மீகி காட்டுகிறாரா?

-முனைவர் மங்களமுருகேசன்

தமிழர் தலைவர்: ஆமாம்! வால்மீகி இதுபோன்று சொல் லாததற்கு நன்றி. வால்மீகி இன்னொன்றைக் காட்டினார் - வால்மீகி இராமாயணத்தில் உத்தரகாண்டம் இருக்கிறது. கம்ப இராமாயணத்தில் உத்தரகாண்டமே கிடையாது. இராமன் எப்படி ஆண்டான்? சம்பூகன் கழுத்தை வெட்டினான் என்று உத்திரகாண்டத்தில் இருக்கிறது. இந்தக் காண்டத்தையே விட்டுவிட்டார் கம்பன்.

ஆனால், அவர் நாணயமாக, பிராமணன் என்ன சொன்னான்? இராமராஜ்ஜியம் எப்படி இருந்தது? என்பதை இன்றைக்கும் இராமனைப்பற்றி நாம் புரிந்து கொள்வதற்கு வால்மீகிதான் துணை செய்கிறார். ஆகவே, வால்மீகியினுடைய இராமாயணம் என்பது, இராமன் எப்படி ஒரு பார்ப்பன விசுவாசியாக இருந்தான் என்பதையும் சம்பூகன் தலையை வெட்டினான் என்பதையும் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுகிறது.

கம்பனைப் புகழ்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?


கேள்வி: கம்பனின் காவியத்தில் இலக்கியச் சுவை அதிகம் உள்ளது. கம்பன் தமிழுக்கு கதியானவர் அதற் காகவாவது கம்பனைப் புகழலாமே! இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?

-குமாரதேவன்

தமிழர் தலைவர்: மிக அழகாகக் கேட்டிருக்கிறார். இலக்கிய சுவை இருக்கலாம், அதைத்தான் அய்யா சொன் னார். அமேத்தியம் என்றால் மலம்; அதைத் தங்கத்தட்டில் கொடுத்தால், தங்கத் தட்டில் கொடுத்தால், அதனை சாப்பிட லாம் என்று நாம் ஏற்றுக்கொள்வோமா? கண்டிப்பாக முடியாது.

திரு.வி.க. ஒன்றைக் கேட்டார், உங்கள் தாயை நிர் வாணமாக ஒரு நல்ல ஓவியன் வரைந்திருந்தால், ஓவிய னுடைய சிறப்பு மிக முக்கியம் என்று நீங்கள் நினைப்பீர்களா? என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு இந்த பதில் போதும்.

அய்யாவின் கருத்து அரியணை ஏறக்கூடிய காலம் நிச்சயமாக வரும்!


கேள்வி:  தமிழ்ப் புலவர்களுக்கு கம்பராமாயணம் பாடம் வைத்துள்ளார்களே! இவ்வளவு முரண் பாடுள்ள இந்தப் பாடத்தை புலவர்களுக்கு வைக்க வேண்டாம் என்று கூறப்படுமா?


- முனைவர் த.கு.திவாகரன் (பொறியாளர்)

தமிழர் தலைவர்: அந்தத் துணிச்சல் உள்ள ஒரு அரசாங்கம் வந்தால், அதை தாராளமாக செய்யலாம்.


கொள்கைகளில் எப்பொழுதும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.


நாட்டில் ஓட்டுக்காக, நாட்டுக்காக அல்ல; வீட்டுக் காக, அல்லது ஓட்டுக்காக கொள்கையில் சமரசம் செய்துகொள்ளுகிற அந்தக் காட்சி இருக்கின்ற வரையில், ஜனநாயகத்தில் அவ்வளவு சுலபத்தில் வராது. இருந்தாலும், நாங்கள் விடமாட்டோம். எல்லா கருத்துகளிலும், அய்யா கருத்து அரியணை ஏறுகிறது. அதுபோல, இந்தக் கருத்தும் அரியணை ஏறக்கூடிய காலம் நிச்சயமாக வரும்! வரும்!! வரும்!!!


நமக்கு கடவுள் இல்லவே இல்லை என்பதில் விலக்கு இல்லவே இல்லை


கேள்வி:  முகநூலில் ஒரு பதிவு: வெளிநாட்டு கடவுள் அல்லா, ஏசுவை ஏற்றுக்கொள்வார்களாம். ராமனை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்? விந்தை இது என்று கிண்டலடித்துள்ளார் ஒருவர்.

- தமிழினியன்

தமிழர் தலைவர்: இவையெல்லாம் கற்பனையானவை. கடவுள் அல்லது அவதாரம் என்று சொன்னால், எல்லாமும் ஒன்றுதான்.

பெரியார் ஒன்றைச் சொன்னார், அதைச் சொன்னாலே நன்றாக விளங்கும்.

மதங்களைக் கண்டுபிடித்து, அவனவன் கடவுள் வியாபாரம் செய்தார்களே, அதில் ஒரு விஷயம் என்ன வென்றால், முதலில் ரொம்ப முட்டாளாக இருந்த காலத்தில் மனிதர்கள், அறிவு விளங்காத காலத்தில், அல்லது நம்பிக்கை அதிகமாக இருந்த காலத்தில்,

கல்தோன்றி மண்தோன்றா காலம் என்று நாம் சொல் கிறோம்; அதற்கு முன் இதிகாச காலம் என்றால், இந்து மதத்திற்கு வயதே கிடையாது - அது சுயம்பு போன்றது என்று சொல்கிறார்களே, அந்தக் கருத்துப்படி, ராமன் எப்படி வந்தான்? கடவுள் எப்படி வந்தது? என்றால், அவதாரம்.

அதில்கூட சிவனுக்கு அவதாரம் கிடையாது; விஷ் ணுவுக்குத்தான் அவதாரம் உண்டு.

நாவலர் நெடுஞ்செழியன் வேடிக்கையாக சொல்வார், பத்து அவதாரத்தை இங்கேயே சுற்றி சுற்றி எடுத்தானே தவிர, ஆஸ்திரேலியாவில் ஒரு அவதாரம், பாகிஸ்தானில் ஒரு அவதாரம் என்று எடுக்கவில்லை என்று கிண்டலடிப்பார்.

இது ஒரு பக்கத்தில் இருந்தாலும், அவதார் என்று சொன்னால், மேலே இருந்து கீழே இறங்குதல்.

கடவுள் என்ன செய்தாராம், முதல் கட்டமாக இந்து மதத்தில் - கடவுள் அவதாரமாகக் கீழே இறங்கினாராம். அடுத்து அறிவு வளர்ந்தது - கடவுள் வரவில்லை 2000 ஆண்டுகளுக்குமுன் தேவகுமாரனை அனுப்பி வைத்துள்ளார் என்று இன்னொரு மதம் சொல்லிற்று.

அதற்குப் பிறகு வந்த இசுலாமிய மதத்தினர் என்ன சொன்னார்கள் என்றால், கடவுள் அவதாரம் எடுக்கவில்லை; அவருடைய மகனாக தேவகுமாரனையும் அனுப்பவில்லை. தூதுவனாக என்னை அனுப்பியிருக்கிறார் என்றார்கள்.

மூன்று பருவத்தையும் நினைத்துப் பாருங்கள் - முதலில் கடவுள் அவதாரமாக தானே இறங்கி வருகிறார்.

இரண்டவதாக, தேவகுமாரனை அனுப்பி வைக்கிறார்.

மூன்றாவதாக, தூதரை அனுப்புகிறார்.

தூதரை அனுப்பினார் என்று சொன்னவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், நான்தான் கடைசி தூதர் என்று சொன்னான். ஏனென்றால், அடுத்தவன் எவனாவது வந்து, அவருக்குப் பிறகு என்னை தான் அனுப்பி வைத்தார் என்று சொல்லக்கூடாது அல்லவா! அதனால்தான்.

இது, அது, எது எல்லாமே ஒன்றுதான்.

நமக்கு கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்பதில் விலக்கு இல்லவே இல்லை.

ஊர் உண்மைதான்; கதை நடந்த கதையல்ல!


கேள்வி: இராமாயணம் கற்பனை கதை. ஆனால் அதில் சுட்டிக்காட்டப்படும் இடங்களின் பெயர்கள் எவ்வாறு இன்றும் அழைக்கப்படுகிறது. உதாரணமாக அயோத்தி?

- பெ.மனோகரன்

தமிழர் தலைவர்: திருச்சியில் புறப்பட்டு திருவாரூருக்குப் போய்ச் சேர்ந்தார்கள் என்று சிறுகதையில் ஜெயகாந்தன் எழுதுகிறார். புதுமைப்பித்தன் திருநெல்வேலியில் உள்ள ஒரு இடத்தை வைத்துதான் கதை எழுதுகிறார். அதனால், சிறுகதை நடந்தது என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

ஊர் உண்மை; அதை வைத்துக் கற்பனையாக கதை எழுதுகிறார்கள். இன்றைக்கு இதை சிறுகதை, தொடர் கதையில் பார்க்கலாம். எதைச் சொன்னால் உங்களுக்கு சுலபமாகப் புரியுமோ அப்படியே சொல்கிறேன் - தொலைக்காட்சி சீரியலில் ஊர்கள் உண்மையாகத்தானே வருகிறது; ஆனால், அந்தக் கதை நடந்தது உண்மையா? அதுபோலத்தான், வேறொன்றும் கிடையாது.

தேவைப்படும்பொழுது இராவண காவிய மாநாட்டினை நடத்தவோம்!


கேள்வி: இராவண காவிய மாநாடு நடத்தப்படுமா?

- எஸ்.கே.தேவன்

தமிழர் தலைவர்: இராவண காவியத்தை ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருக்கிறோம். நிறைய கம்பன் விழாக்கள் நடக்க, நடக்க இராவண காவியத்திற்கு மரியாதை வரும். இராவண காவிய மாநாட்டை நிச்சயமாக நடத்துவோம்.

ஆனால், ஒன்று - இலக்கிய நயம் என்று புலவர்கள் சொல்கிறார்களே, கம்பனுக்குக் கொஞ்சமும் குறையாத இலக்கிய சுவை உள்ள ஒரு காவியம் உண்டென்றால், அது புலவர் குழந்தையின் இராவண காவியம்.

அந்த அளவிற்கு எங்களாலும் எழுத முடியும். கம்பனால் தான் சொல்ல முடியும் என்று சொல்லாதே - இந்தக் கொம் பனாலும் எழுத முடியும் என்று காட்டியவர்தான் புலவர் குழந்தை.

ஆகவே, திராவிட இயக்கத்தினுடைய சாதனைகளில் அது ஒரு சிறப்பானது. திராவிட இயக்கத்தினுடைய மகுடத்தில் ஒரு அற்புதமான ஜொலிக்கக்கூடிய முத்து அது. ஆகவே, அந்த மாநாட்டினை தேவைப்படும்பொழுதும் நடத்துவோம்.

நல்ல பாடத் திட்டங்கள் உருவாகவேண்டும்!


கேள்வி: மொழிப் பாடங்களில் மாணவர்களுக்கு கம்பனின் புகழும், புலமையும் மட்டுமே பரப்பிடும் வகையில் உள்ளது. அதனை ஒழிக்க முடியுமா?

- சு.விமல்ராஜ்

தமிழர் தலைவர்: பாடத் திட்டங்களில் பகுத்தறிவாளர்கள் இருந்தால், நிச்சயம் அதனை செய்ய முடியும். ஏனென்றால், சிலப்பதிகாரத்தில் இசை உண்டு; நாடகம் உண்டு. கதாபாத்திரங்களில் மாறுபட்டு இருக்கும்.

ஆரிய கலாச்சாரம் உள்ளே நுழைந்த பிறகுதான், திருமணம் எப்படி நடந்தது என்று தெளிவாகச் சொல்வார்கள். இருந்தாலும், அதில் நாடகம், இசை மற்றவை எல்லாம் இருக்கக்கூடிய அளவிற்கு இருந்தாலும், நம்முடைய அறியப்படாத தமிழ்மொழி நூலில் ஒரு கேள்வி கேட்கிறார்,

ஏங்க, சுந்தரகாண்டத்தைப் படித்தால் மோட்சத்திற்குப் போகலாம் என்று எழுதுகிறார்கள்.

புகார் காண்டத்தைப் படித்தால், புத்தி வரும் என்று இதுவரையில் சிலப்பதிகாரத்தைப்பற்றி எழுதுகிறார்களா? சிலப்பதிகாரத்திற்கு அந்த மரியாதை உண்டா? என்று கேட்டார்.

ஆகவேதான், நம்முடைய புலவர்கள் அதைப்பற்றி நினைத்துப் பார்க்கவேண்டும். நல்ல பாடத் திட்டங்கள் உருவாகவேண்டும்.

ஒரு காவியம் என்று சொல்லும்பொழுது, தெய்வமாக் கதை - தேவபாஷை - நீஷபாஷை இப்படித்தான் சொல்கிறார்கள்.

இலியட் இருக்கு: இலியட்டை யாரும் யானைமேல் வைத்து  தூக்கிக் கொண்டு போவதில்லை. இவன் யானைமேல் வைத்துத் தூக்கிக் கொண்டு போகவேண்டும் என்று நினைக்கிறான்.

அய்யோ இதைப் படித்தால் போதும் என்கிறான். ஆக, சிறீராம காதை என்று எழுதுகிறான்.

ஆகவேதான், தெய்வாமாக் கதை - தெய்வமாக்கவி என்றெல்லாம் தெய்வமாகப் போற்றக்கூடாது.

பக்தி உணர்வு வந்தாலே, கேள்வி கேட்காதே, நம்பு என்று சொல்வதுதான் பக்தி.

புத்தி என்றால், கேள்வி கேள்; ஆராய்ந்து பார் என்பதுதான்.

ஆகவே, புத்தியைக் கெடுக்கக்கூடிய எந்த அமைப்பையும், எந்தக் கவிதையையும், எந்தப் புலவரையும் உயர்த்தாத ஒரு பாடத்திட்டம் இருந்தால்தான், உண்மையான சிந்தனை

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்ற அறிவுக்கு வேலை கொடுக்கக்கூடிய வாய்ப்பு வரும். மாணவர்களை அப்படித் தயாரிக்கக்கூடிய உணர்வு இருந்தால், அது சிறப்பாக இருக்கும்.

மேலும் கேள்வி கேட்க வேண்டுமென்றால், நீங்கள் எழுதி அனுப்பலாம், விடுதலை ஞாயிறுமலரிலும், உண்மை இதழில் அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்போம்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வாழ்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு, 30.6.18