பக்கங்கள்

வியாழன், 7 ஜூன், 2018

பன்றி - கலைமான் - புள்ளிமான்களின் ஊன்களைத் தின்றவர்கள்தான் இராமன் - சீதை

ஆதாரங்களுடன் அலசுகிறார் தமிழர் தலைவர்




சென்னை, ஜூன் 5-  இராமன் ஒன்றும் காய்கறிப் பிரியன் அல்லன்; பலவகை ஊன்களை சாப்பிட்டவன்தான் - இதோ ஆதாரம் என்று வால்மீகி இராமாயணத்திலிருந்து எடுத்துக் காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 21.5.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் (கம்பன் புளுகும் - வால்மீகியின் வாய்மையும்) என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு சொற் பொழிவு-5 சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

கம்ப இராமனோ உயிர்செகாமையையே முதலொழுக்கமா கக் கொண்ட சைவ நாயன்மார்களுக்குப் பின் தென்னாட்டில் தோன்றி, பிறப்பில் எவ்வாறெனினும் ஒழுங்கில் சைவனாய்ப் போன இராமன். எவ்வாறெனின்:

கங்கைப் படலத்தில்


நகர் நீங்கிக் கங்கையாற்றங்கரை வந்துற்ற கம்ப இராமனுக்கு ஆங்கு வதிந்த முனிவரர்கள்

காயுங் கானிற் கிழங்குங் கனிகளும்

தூய தேடிக் கொணர்ந்தனர் தோன் றனீ

ஆய கங்கை யரும்புன லாடினை

தீயை யோம்பினை செய்யமு தென் றனர் -15

ஆனால் கொடுவந்து கொடுத்தோர் முனிவரர்களாகையி னாலே, அவர்கள் உண்ணும் மரவகை யுணவை யுதவின ரென இதனால் உணரத்தக்கதே யன்றி ஊனை உதவியி ருந் தால் கம்ப இராமன் வேண்டாமென்றிருப்பானோ என்பதற்குச் சான்றாகாதெனச் சொல்ல இடமுண்டு. ஆனால், அதே கங்கைப் படலத்தில் குகனென்னும் பெயர் நாவாயான் மீன் காணிக்கையுடன் வந்து கம்ப இராமனைக் கண்டபோது, இருத்தியீண் டென்ன லோடு

மிருந்திலன் எல்லை நீத்த அருத்தியன் தேனு மீனு

மமுதினுக் கமைவ தாகத்

திருத்தினென் கொணர்ந்தேன் என்கொல்

திருவுள மென்ன வீரன்

விருத்தமா தவரை நோக்கி

முறுவலன் விளம்ப லுற்றான் - 42

என்னென்று விளம்பலுற்றான்? அரிய தாம் உவப்ப வுள்ளத்

தன்பினால் அமைந்த காதல்

தெரி தரக் கொணர்ந்த வென்றால்

அமிழ்தினுஞ் சீர்த்த வன்றே

பரிவினில் தழீஇய வென்னிற்

பவித்திர எம்ம னோர்க்கும்

உரியன இனிதி னாமும்

உண்டனெ மன்றோ வென்றான் -43

அதாவது மீனூனை வாயாலுண்ணாமல் உள்ளத்தா லுண்டா னென்ப. இதனாலும்கூடக் கம்ப இராமன் ஊனுணாதவனென்று கோடற்குப் போதாது; முனிவர்கள் முன்னிலையில் ஊனுண் ணக் கூசினானென்று எண்ணற்கிட னுண்டு.

(இந்த இடத்தில் நகைச்சுவையாக ஒரு செய்தியை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். இதயம் பேசுகிறது வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் மணியன். அவர் உலக நாடுகளைச் சுற்றிவந்து புத்தகம் எழுதுபவர். ஒருமுறை அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபொழுது, அங்கே இருந்த அவருடைய நண்பர்களான பார்ப்பனர்களுடன் தங்கியிருந்தபொழுது, ஒருமுறை உணவு விடுதிக்குச் சென்று சாப்பிட்டார்கள். அப்பொழுது அவருடைய நண்பர்கள் இவரைப் பார்த்து, என்னய்யா, எங்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லிவிட்டு, நீ வேறு எதையோ சாப்பிடுகிறாயே? என்ன அது? என்றார்கள்.

உடனே மணியன் அவர்கள், வேறொன்றுமில்லை, நல்ல மாட்டுக்கறி. இங்கே அற்புதமாக இருக்கும் என்றார்.

அவருடைய நண்பர்கள், நம்முடைய சாஸ்திரம், சம்பிர தாயம் எல்லாம் என்னாயிற்று? இது நம்முடைய கோமாதா அல்லவா? என்றார்கள். மணியன் அவர்கள், இது இந்திய கோமாதா அல்ல; அமெரிக்க கோமாதா என்று சொல்லிவிட்டு, பிறகு சுவைத்து சாப்பிட்டாராம்).

ஆனால், குகப்படலத்தில் (பிறன் கூற்றாக, என்னை?) பரதன் கூற்றாக, இயன்றதென் பொருட்டி னாலிவ்

விடனருக் கென்ற போழ்தும் அயின்றனை கிழங்குங் காயும்

அமிர்தென வரிய புல்லில் துயின்றனை யென வும் ஆவி

துறந்தி லென் சுடருங் காசு குயின்றுயர் மகுடஞ் சூடும்

செல்வமுங் கொள்வன் யானே -40 என்னும் செய்யுள் காணப்படுகிறது.

இங்கே கம்ப இராமன் கிழங்குங் காயும் உண்டு வந்ததாக இருக்கிறது. ஆனால் பரதனுக்குக் கேள்வியால் தெரிந்ததே யன்றி நேராகத் தெரிந்த தன்றாகலின் கேள்விச் சான்று சான்றாகாது (Here say evidence is no evidence) என்று கொள்ளற் கிடனுண்டு.

இன்னும் அணுக்கத்தனான இலக்குவன் கூற்றைக் கேட்போம்.

கிட்கிந்தைப் படலத்தில் வருவலென்று உறுதி கூறிச் சென்று மதுவுண்டு வெறிகொண்டு காலந்தாழ்த்திய சுக்ரீ வனை யழைக்கச் சீற்றமேற்கொண்டு சென்றணைந்த இலக்கு வனுக்குத் தன் நினைவு வரப் பெற்ற சுக்கிரீவன் தான் நுகர் வகை யுணவு அளித்தனன். அப்போது இலக்குவன்,

பச்சிலை கிழங்கு காய் பரமனுங் கிய மிச்சிலே நுகர்வது வேறு நா னொன்று நச்சிலேன் நச்சினே னாயினா யுண்ட

எச்சிலே யதுவிதற் கேது வில்லையால் -114

என்றும், அன்றியு மொன்றுள தைய யானினிச்

சென்றனென் கொணர்ந்திடை திருத்தி னாலது

நுன் துணைக் கோமகன் நுகர்வ தாதலால் இன்றிறை தாழ்த்தலும் இனி தன்றாம் என்றான் - 115

இக்கூற்றுகளில் மரவகை யுணவே இராம இலக்குவர் காட்டிலருந்தின ரென்பதே மேலும் மேலும் வற்புறுத்தப்பட் டிருக்கிறது.

பண்டைய ஆரிய ஒழுக்கம் ஊன்தின்ப தென்பது


உண்மையில் வால்மீகி காலத்தில் வடநாட்டில் ஆரிய வகுப்பின் நால்வகைச் சாதியாரும், தாங்கள் ஊன்தின்னும் வழக்கத்தினர் மாத்திரமல்ல, தென் புலத்தார் (பிதுரர்கள்)களுக்கும் ஊன்வைத்துப் படைக்கும் வழக்கத்தினர் என்பதும், ப்ராஹ்மணர் முதலாயினோர் இன்னின்ன ஊன் தின்னலாம். இன்னின்ன தின்னலாகா தென்பதும், தென்புலத்தாருக்கு எந்தெந்த ஊன் அவி கொடுத்தால் எத்தனையெத்தனை ஆண்டுகளுக்கு அவர்களுக்கு ஆறுதலுண்டு என்பதும் போன்ற விவரங்கள் மனுஸ்மிருதி முதலிய நூல்களில் சொல் லியிருப்பது நுங்கட்குத் தெரியுமன்றோ? அன்றியும் இராமன் ப்ராஹ்மணனுமல்லன். அக்காலத்திலும் இக்காலத்திலும் பிற்காலத்திலும் ஊன் தின்ற, தின்கிற, தின்னும் க்ஷத்திரிய னல்லனோ?

வெள்ளக் கணக்கான அரக்கர் படைகளைக் கொல்லப் போன இராம இலக்குவர் மரவகை யுணவு உண்ட னர் என்று கம்பன் புளுகுவானேன்? ஓரிடத்திற் புளுகியதா? அல்ல.

பொய் சொல்லின் பொருந்தச் சொல் என்னும் வழக்கிற்கு ஏற்ப யான் முன்எடுத்துக் காட்டியவாறு புளுகத் துவக்கிய கம்பன் தன் இராமாயண நெட்டிலும் பொருந்தப் புளுகிக் கொண்டு போகின்றனனா ? அல்லது,

மூவரானவர் தம்முளு முந்திய நாவினாருரையின்படி சொல்லிப் போகின்றனனா, நீங்களே பாருங்கள்.

இராமன் ஊன் தின்பதில் ஊக்கமுடையவனென


வால்மீகி வாய்மை மொழி


வால்மீகியோ உள்ளதை உள்ளபடியும், உணர்ந்ததை உணர்ந்தபடியும் கூறும் வாய்மையுடையவர். அதனாற்றான் இயற்கை நவிற்சி அவர் நூலில் பொலிகின்றது.

அயோத்யா காண்டத்தில் 20 ஆவது சர்க்கத்தில் காட் டிற்குப் போம்படி கைகேசியால் ஏவப்பட்ட இராமன், நேர்ந் தது இன்னும் உணராதிருந்த தன் அன்னை கோசலையிடம் சென்று உற்றது உணர்த்தியபடி:



அதாவது அன்னாய்! மக்களின்றிய காட்டில் பதினான்கு ஆண்டுகள் வதியப் போகின்றேன்; துறவியைப் போல ஊனைவிட்டு, தேன் வேர் கனிகளால் உயிர்வகித் திருக்க வேண்டியவன். பேரரையர் (தசரதர்) இளவரசுப் பட்டத்தைப் பரதனுக்குக் கொடுத்து விட்டார்' என்று இராமன் கூறினான்.

இக்கூற்றிலும், இளவரசுப் பட்டம் போனதை முதலில் சொல்லாமல், காட்டில் வதிய வேண்டியதையும், ஊன் தின்பது போனதென்பதையும் முன்னர் மொழிந்தபடியால் இராம னுக்கு இளவரசுப் பட்டம் போனதைவிட ஊன் தின்பது போனது பெரிதாக உறுத்திற்றென்று வெறுங்குறும்பினர் பழிப்பர். அஃ தன்று. தனக்குற்ற இடுக்கணைத் தாய்க்குணர்த்த வந்த இராமன், இடி வீழ்த்துவது போல எடுத்த எடுப்பில் இளவரசுப் பட்டம் போயிற்றென்றால் அத்தாய் எவ்வளவு வருந்துவள்! அவ்வாறு திடுக்கென்று வருத்தம் தோன்றாதபடி. காட்டிற்குத் தான் போவதை முன் சொல்லி, காட்டில் மக்களின்றிய தன்மையைப் பின்னுணர்த்தி, துறவிகள் போல ஊன் மறுக்கவேண்டியதை அதன்பின் உணர்த்தி, வேறு யார்க்குமல்ல அடுத்த மகனாகிய பரதனுக்கென்று துவக்கி மகாராசா என்று தொடர்ந்து, எதுபற்றி யென்றெழும் ஐயப்பாட்டை யுண்டாக்கி அதன்பின் இளவரசுப் பட்டத்தைப் பற்றி யென்றுணர்த்தி இறுதியில் கொடுத்து விட்டார் என்று கோசலை மனத்தை வருத்தமேற்கும் வண்ணம் சிறுகச் சிறுகப் பண்படுத்தி மொழிந்த - அருமை யழகு வால்மீகியின் கவித் திறத்தையும், வாய்மையையும் காட்டும்.

ஆனால், ஊன் தின்பதை ஒழிக்கவேண்டியதாகக் கோசலை மனத்தைப் பண்படுத்த வேண்டிக் கூறியதேயன்றி, உள்ளபடி ஊன்தின்பதை இராமன் முதலிய மூவர் நீக்கின ரென்று வால்மீகி புளுகினா ரல்லர்.

நாட்டிற் கிடைக்கும் ஊனைவிடக் காட்டிற் கிடைக்கும் ஊன்தான் பல்வேறு வகையதென்றும், நோயற்ற தென்றும், சுவையுற்ற தென்றும் தரையிற் படர்ந்து கிடக்கும் உப்பும், உதிர்ந்து கிடக்கும் சருகும், நெருப்புண்டாக்கக் காடெங்கும் கிடைக்கும் சக்கிமுக்கிக் கல்லும் கொண்டு. அடுவதற்குப் பாண்டங்களும் வேண்டாமல், இப்பெருங்குழுவிற்கு வந் துறைவோர் நாளொன்றிற்குச் செலுத்த வேண்டிய சிறுதொகை ஒரு ரூபாயும் வேண்டாமல், நெருப்பில் வாட்டி வயிறாரத் தின்னக் கூடியதென்றும் வேடராயிருந்து நன்குணர்ந்து, பின் மகரிஷியான வால்மீகி தெரியாதவரல்லர்.

வெள்ளக்கணக்கான அரக்கர்களைக் கொல்லச் செல்லு மிவர்கள் ஆட்டு மாட்டுத் தீனிதின்று சென்று ஆற்றக்கூடியது மல்லவென்றும் வால்மீகி யுணராதார் அல்லர். நாடுவிட்டுக் காடுபுகுந்த முதல் நாள் உணவிற்கு இராமன் முதலிய மூவர் என்ன செய்தார்க ளென்பது பற்றி வால்மீகி வாய்மை புகல் கின்றார்.



அதாவது:

அவர்கள் அவ்விடத்தில் பன்றி, கலைமான், புள்ளி மான். கறுப்புக் கலைமான் ஆகிய நான்கு பெரிய விலங்குகளைக் கொன்று, சிறந்த அவைகளை எடுத்துக் கொண்டு உண்ண விரும்பியவர்களாய் விரைவாகக் காலத்தில் காட்டரசாய் நிற்கும் ஆலமரத்தினடிக்குச் சென்றார்கள்.

அவ்வாறு கூறுவதிலும் வால்மீகி ஊன்திறம் உணர்ந்தவ ராகையினாலே, மிகுதியாக வபையை (வயிற்றடிக் கொழுப்பு) உடையதும், வாட்டிய ஊன் வெண்ணெய் போன்று வாயிற் கரையும் மென்மையுடையது மாகிய பன்றியை (வராகம்) முதற்கண்ணும், அடுத்தபடியான கலைமானை (ருஷ்யம்) அதன் பின்னும், தசையை உலர வைத்துப் பின்னுண்ணக் கூடியதும் தாழ்வாய்த் தசைநார்களுக்குப் பயிற்சி கொடுப்பது மாகிய புள்ளிமான் (ப்ருஷ்தம்), கறுப்புக் கலைமான் (மஹாரு ரும்) களை அதன்பின்னும் முறையே வைத்துக் கூறினா ரென்க. ஆனால் அவ்வழகு நுங்கட்குத் தெரியவே தெரியா தென்பது சொல்ல வேண்டுமோ ?

அன்றியும் உள்ளுறைப் பொருள் அழகும் வைத்துக் கூறினாரென்னலாம். எற்றெனின் முன் அவதாரமாகிய வரா கத்தைச் சுட்டி இராமனையும், கண்ணழகிய கலைமானைச் சுட்டிச் சீதையையும், புள்ளிமானைச் சுட்டி மயக்க வந்த மாரீ சனையும், கறுப்புக் கலைமானைச் சுட்டிக் கரிய இராவண னையும் குறித்தாரென்று கொள்ளவும் அமையும்.

கம்பன் புளுகியது முழுக் குற்றமானால் அதில் பாதியாவது உங்கள் சைவப் பரம்பரைக் குண்டு. அதாவது அவன் புளுக ஊக்கிய குற்றம் (Abetting) உங்களுடையது. ஏனெனில் கம்பன் காலத்தில் மிதந்து பரவியிருந்த நுங்கள் பரம்பரையார் கம்பன் நூலைப் படித்து வாய் புண்ணாகாதபடி, கேட்டுச் செவி புண்ணாகாதபடி, நினைத்து மனம் புண்ணாகாதபடி இராமனையே கம்பன் சைவனாகப் புளுகியிருத்தல் கூடும். உங்களுக் கினிக்கப் பொய்யுரை கம்பன் புகன்றதை பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின் என்று போற்றவும் போற்றுவீர்'' - அதைக் குற்ற மென்றெடுத் தியம்பும் என்னைத்  தூற்றவும் தூற்றுவீர்''.

ஆனாலும் உங்கள் இறைவன் சீற்றத்திற்கும் அஞ்சாத தமிழர் வழித்தோன்றிய யான் உங்கள் சீற்றத்திற்கும் அஞ்சாது, கம்பன் புளுகியது குற்றம் குற்றமே என்பேன்.

அவன் பொய்மை நன்மை பயப்பதற்கு மாறாக அளவற்ற தீமை பயந்த தென்று கண்கூடு படுத்த வேண்டிய சான்றுக ளுண்டு. மா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் நகைச்சுவை உணர்வோடும், பாட்டு, ஆதாரங்களோடு எடுத்து விளக்கி யுள்ளார்.

இராஜகோபாலாச்சாரியாரின்


சக்ரவர்த்தித் திருமகன்


ஆனால், இராஜகோபாலாச்சாரியார் சக்ரவர்த்தித் திரு மகன் எழுதினாரே, அதில், பெரியார் ஆதாரத்தோடு சொல் கிறார்; மற்ற செய்திகளும் இருக்கிறது. நாம் இதில் விவாதம் செய்தால், பெரியார்தான் வெற்றி பெறுவார். வால்மீகி இரா மாயணத்தில் உள்ளதைத்தான் பெரியார் அவர்கள் எடுத்து சொல்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.

சக்ரவர்த்தித் திருமகன் நூல் 89 ஆம் பக்கத்தில்,

இவ்விடத்திலும் இன்னும் பலவிடங்களிலும் ராமலக்ஷ் மணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த, அதாவது வழக்கப்படி சாப்பிடத் தகுந்த வேட்டையாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் எழுதியிருக்கிறார். சந்தேகத்துக்கு இடமில்லாமல் வியக்தமாக எழுதியிருக்கிறார். இதைப்பற்றி நாம் குழப்பமடைய வேண்டியதில்லை. க்ஷத்திரி யர்களின் ஆதாரப்படி மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை. காலத்துக்கும், குல வழக்கத்துக்கும் ஏற்றபடி உடலைப் பாது காப்பதற்காக எந்த உணவும் தக்க வழியில் சம்பாதித்து, பூஜை யில் வைத்து அளவுக்கு மிஞ்சாமல் உண்பதில் யாதொரு தவறுமில்லை என்பது பாரத சேத்துப் பொது தருமம்.

என்று எழுதியிருக்கிறார் ராஜகோபாலச்சாரியார் அவர்கள்.

பசுப் பாதுகாவலர்கள், பசு மாட்டை விற்கக்கூடாது என் பவர்கள் எல்லாம் எவ்வளவு பித்தலாட்ட அயோக்கியப் பயல் கள் என்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

பெரியார் மண்ணான இந்தத் தமிழ்நாட்டில்தான், பீப் கிடைக்கும், பீப் பிரியாணி கிடைக்கும் என்று போர்டு வைக் கிறார்கள். அடுத்தபடியாக கேரளாவில் கிடைக்கும்.

வடநாட்டில் பொய் சொல்லி அல்லவா ஆட்களைக் கொல்கிறார்கள். ஆட்டுக் கறி வைத்திருந்தவர்களைக்கூட, மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று சொல்லி கொன்று விடு கிறார்களே!

இதற்கெல்லாம் அடிப்படை இராமாயணம்தானே! இதற் கெல்லாம் மூலாதாரம் என்ன இராமராஜ்ஜியம்தானே! ஆகவே, எவ்வளவு பெரிய உயிர்க்கொலைகளை, எவ்வளவு பெரிய மதவெறியை உருவாக்கி இருக்கிறது என்பதற்கு இந்த ஆதாரத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.

பா.வே.மாணிக்க நாயக்கரும் சொன்னார், இராஜகோ பாலாச்சாரியாரும் இதையே சொல்லியிருக்கிறார். நண்பர் களே, இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.

கோமாதா குலமாதா, பசுப் பாதுகாவலர்கள் என்று சொல் லிக்கொள்கிறார்களே, மோடி ஆட்சியில், மனிதனைப் பாது காப்பதற்கு ஆட்கள் கிடையாது.  எங்கள் சகோதரர்கள் ஒடுக் கப்பட்ட சகோதரர்கள், தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் திட்ட மிட்டு கொல்லப்படுகிறார்கள், வதைக்கப்படுகிறார்கள்.

மாட்டுக்குப் பரிந்து மனிதனைக் கைவிட்ட ஒரு ஆட்சி நீடிக்கலாமா? எனவேதான், அதற்கு அடிப்படை இராமாயணம் - இதற்கெல்லாம் காரணம், இராம, இராம என்று சொல்வதுதான்.

The Myth of The Holy Cow


கோமாதா புனித மாதா என்பது எவ்வளவு பித்தலாட்டம் என்பதை டி.என்.ஜா என்பவர், புனிதப் பசு என்பது புரட்டு (The Myth of The Holy Cow) A Book the Government of India Demands be Ritually Burned - இந்தப் புத்தகத்தை எரிக்கவேண்டும் என்றார்கள். இந்த புத்தகத்தை லண்டனில் வெளியிட்டார்கள். வடநாட்டில் விற்பதற்குத் தயாராக இல்லை. நம்மூரில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.

நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது, ஜப்பனிஸ் புத் தகக் கடையான கினோக்கினியோ என்கிற புத்தகக் கடையில் புத்தகங்களை வாங்கும்பொழுது, இந்தப் புத்தகத்தை வாங் கினேன். அந்தப் புத்தகத்தில் உள்ள மிக முக்கியமான பகுதியை உங்களுக்குச் சொல்கிறேன்:

Like the Mahabharata, the Ramayana of  Valmiki contains numerous references to the practice of killing animals including cattle  for sacrifice as well as for  food if tells us that Dasaratha, desirous of progeny, performed a sacrifice  in which the sages brought  fourth  numerous animals (e.g. horses, snakes and aquatic animals)  permitted by the sastras to be  killed in rituals. It adds that three hundred animals along with the horse, which had roamed the earth, were tied to the sacrificial poles (yupas), obviously for ritual slaughter. While announcing the news of his exile to Kausalya, Rama seems to be assuring her that he would live for fourteen years in the forest on honey, roots and fruit, abstaining from meat, as indeed he initially does. This is why he refuses food offered by the Nisada chief Guha. But the epic makes frequent references to Rama and Laksamana killing game for consumption as well as for sacrifice and the former’s image of a habitual hunter is corroborated by numerous Ramayana episodes. Similarly Sita’s fascination for meat can be inferred from several passages of the text. While crossing the Ganga she promises to offer her rice cooked with meat and thousands of jars of liquor on her safe return with her husband.


While being ferried across the Yamuna, Sita says that she will worship the river with a thousand cows and a hundred jars of wine when her  husband accomplishes his vow. Sita's love of deer meat  makes her husband chase and kill Marica disguised as the fabulous golden deer; and even while thinking of its evil consequences he does not hesitate to kill a chital and take its meat. in the later part of the story Rama also gives the pregnant Sita different kinds of wine (madhu and maireya) when his servants serve them with meat and fruit. Bharadvaja also extends generous hospitality to Bharata’s troops, regaling them with meat and wine and welcomes Rama by slaughtering the ‘‘fatted calf’’. The flesh of deer, buffalo, boar, peacock, jungle fowl and goat are the highlights of the convivial banquet of Ravana and the colossal non-vegetarian meal of Kumbhakarna.


இதன் தமிழாக்கம் வருமாறு:

மகாபாரதம் மற்றும் இராமாயணம் இந்த இரண்டிலும் விலங்குகளை பலியிடுவது பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. முக்கியமாக வால்மீகி ராமாயணத்தில் யாகத்திற்காக பசுக்கள் பலவற்றை தொடர்ந்து பலியிட்டது குறித்து எழுதியுள்ளார். மேலும் பலியிட்ட விலங்குகளை தசரதனும், அவனது கூட்டத்தினரும் பங்கிட்டு உண்பதாகவும் எழுதியுள்ளார். சாஸ்திரங்களில் பலியிடுவதை தேவையான ஒன்றாகவே எழுதியுள்ளனர். யாகத்திற்காக நடப்பட்ட கம்பங்களில் 300 குதிரைகள் கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் யாகத்தில் இருக்கும் பூசாரிகள் பலியிட வருவதற்காக மக்கள் காத்திருக்கின்றனர். ராமனை 14 ஆண்டுகள் காட்டிற்குச் சென்று வாழச் சொல் லும் கவுசல்யா, அவன் காட்டில் இருக்கும்போது காட்டில் கிடைக்கும், பழம், கிழங்கு, தேன் முதலானவற்றை மட்டுமே உண்ணவேண்டும். இறைச்சியை உண்ணக்கூடாது என்றும் கூறுகிறார்.  காட்டிற்குச் சென்ற ஆரம்ப காலத்தில் ராமன் குகனின் சமையற்காரர் கொடுத்த இறைச்சி உணவை மறுத் தது, இந்தக் காரணத்தினால் தான். ராமனும், லட்சுமணனும் வேட்டையாடுவதில் வல்லவர்கள். காட்டுவிலங்குகள் யாகத் தில் இடையூறு செய்கின்றன என்று பூசாரிகள் கூற, ராமனும், லட்சுமணனும் எண்ணிலடங்காத விலங்குகளைக் கொன்று குவித்தனர். இது ராமாயணத்தில் பல்வேறு காண்டங்களில் நிறைய கிடைக்கிறது.

ராமனின் மனைவி சீதை தான், தனது கணவருடன் நலமாக திரும்பினால், வேக வைத்த சோற்றுடன் கறியும் சேர்த்து ஆயிரக்கணக்கான குடுவைகளில் மதுபானத்தை தருவேன் என்று கங்காதேவியிடம் கூறியுள்ளார். சீதை யமுனை ஆற்றைக் கடக்கும் போது அவளது கணவரிடம் ஆயிரக்கணக்கான பசு மற்றும் நூற்றுக்கணக்கான மதுபானக்குடுவையை உனக்கு தருவேன் என்று சீதையிடம் ராமன் கூறியதையும் நாம் ராமாயணத்தில் காணலாம். சீதை மான் இறைச்சியை சாப்பிடுவதை மிகவும் விரும்புவார். சீதையின் விருப்பத்திற்கு இணங்க தங்க மான் ஒன்றை அவளுக்காக வேட்டையாடினார். வேட்டையாடுவது தீய பழக்கம் என்று கூறியபோது, ராமன் வேட்டையாடுவதை விடவில்லை.  சீதை கருவுற்றிருந்த போது பல்வேறு வகையான திராட்சை ரசம் மற்றும் பலவிதமான இறைச்சிகளை பணியா ளர்கள் பரிமாறினார்கள்.

பரத்வாஜ முனிவர் பரதனின் போர் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள்பற்றி கூறியுள்ளார். அதில் இறைச்சி மற்றும் மதுபானம் ஆகியவற்றை ராமனே விரும்பி அனைவருக்கும் பகிர்ந்தளித்து தானும் உண்பார். மேலும்  கொழுத்த கன்றுக்குட்டியை ராமனே வெட்டி இறைச்சியை பங்கிடுவானாம். அதுபோல் மான் இறைச்சி, எருமை, பன்றி, மயில் மற்றும் காட்டுக்கோழி, வனத்தில் திரியும் ஆடுகள் போன்றவற்றையும் விரும்பி உண்பாராம். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இலங்கை வேந்தன் இராவணனின் விருந்தில் சைவ வகை உணவுகள் மட்டுமே காணப்பட்டனவாம். அதைவிட கும்பகர்ணனின் உணவுகளில் எங்குமே இறைச்சி பற்றிய குறிப்புகள் இல்லை அனைத்தும் முழுக்க முழுக்க சைவ உணவு பற்றியன ஆகும்.

சிவானந்த சரசுவதியின் "ஞானசூரியன"


இன்னும் தெளிவாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டு மென்றால், ஞானசூரியன் புத்தகத்தை அய்யா அவர்கள் வெளியிட்டார். சுயமரியாதை இயக்கத்தினுடைய பாலபா டமே அதுதான். சிவானந்த சரசுவதி என்பவர் எழுதிய நூல் அது. அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இமயமலைக்குச் சென்று அங்கேயிருந்து சமஸ்கிருதத்தில் எழுதி, அந்தப் புத்த கம் 1930 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, இன்றைக்குப் பல லட்சம் பிரதிகள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் புத் தகம் இங்கேகூட கிடைக்கும். அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

எனவே, இதில் ஒரு பகுதிதான் முடிந்திருக்கிறது. இன் னொரு பகுதியை முடிக்க முடியவில்லை. அடுத்தக் கூட்டத் தில் இது தொடரும். இதுமட்டுமல்ல,இன்னும் பல்வேறு செய்திகள் இருக்கின்றன. புளுகு மட்டும் என்று சொல்வதற்கு மூன்று, நான்கு உதாரணத்தோடு முடித்துவிடலாம். அடுத்த படியாக, மற்ற அமைப்புகளைப்பற்றி சொல்வதற்கு ஆறாவது சொற்பொழிவில் சொல்கிறேன். அதிலேயும் முடிக்க முடிய வில்லை என்றால், ஏழாவது சொற்பொழிவோடு முடித்துக் கொள்கிறேன். சப்த ரிஷிகள், சப்த ராகங்கள், சப்த சாப்டர்கள், சப்த உரைகள் என்று சத்தமான உரைகளோடு முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 5.6.18

1 கருத்து: