பக்கங்கள்

வியாழன், 7 ஜூன், 2018

இராமாயணத்தில் திருத்தம் செய்கிறார்கள்

இராமாயணத்தைப்பற்றி நாம் பேசப் பேச சம்பந்தப்பட்ட பகுதிகளை அகற்றுகிறார்கள்
சென்னை, ஜூன் 4- இராமாயணத்தில் உள்ளவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி நாம் பிரச்சாரம் செய்ய செய்ய அடுத்தடுத்த பதிப்புகளில் அவற்றை அகற்றுவதை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டிப் பேசினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

'இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம'


(கம்பன் புளுகும் - வால்மீகியின் வாய்மையும்)


21.5.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் (கம்பன் புளுகும் - வால்மீகியின் வாய்மையும்) என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு சொற்பொழிவு-5 சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

இந்த ஆய்வுச் சொற்பொழிவை ஒன்று, இரண்டோடு முடித்துவிடவேண்டும் என்று நினைத்துத்தான் செய்தி களை தொகுக்க நான் தொடங்கினேன். ஆனால், ஒரு செய்தியைப்பற்றி அறிகிறபொழுது, ஏராளமான அறிஞர்கள் நமக்கு முன்பே பல காலத்திற்கு முன்பு, இன்னுங்கேட்டால், இதைப்பற்றி பேசக்கூடியவராகிய என்னைப் போன்றவர்கள் பிறப்பதற்கு முன்பே, பல்வேறு அறிஞர் பெருமக்கள் இதனை நன்கு ஆய்வு செய்திருக்கிறார்கள்.

ஆனால், பார்ப்பனர்களுக்கும், புராணிகர்களுக்கும், பக்தர்களுக்கும் ஊடகங்களில், மற்ற இடங்களில் இருக்கின்ற செல்வாக்கைப் பயன்படுத்தி, அவர்கள் அதை இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். பல்வேறு செய்திகள் மக்கள் மத்தியில், இவர்கள் இராமாயணத்தைப் பரப்புவதைப்போல, மாற்றுக் கருத்துகள் உள்ளதைப் பரப்புவதில்லை என்ற நிலை யைப் போக்க, இந்த 5 ஆவது சொற்பொழிவிலேயே முடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால், எனக்குப் பல்வேறு பணிகளும் இருக் கின்றன; அலைச்சல் அதிகம். நேற்று ஒரு ஊரில், நாளைக்கு வேறொரு ஊரில் என்று இப்படி பல ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது என்றாலும், இந்த ஆய்வுச் சொற் பொழிவுக்கு வந்திருக்கின்ற அறிஞர் பெருமக்களைப் பார்க்கின்றபொழுது,  அறிவார்ந்த சொற்பொழிவினை கேட்க நீங்கள் வந்திருக்கிறீர்கள். இங்கே வந்தவர்களைவிட, வராதவர்கள் கேட்பதற்கு வசதியாக இணைய தளம் மூலமாக நண்பர்கள் அனுப்பி விடுகிறார்கள். ஆகவே, அவர்கள் எல்லாம் கேட்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று சொல்லும்பொழுது, இந்தப் பணியை முழுமையாக செய்யவேண்டும் என்கிற உற்சாகத்தை, நீங்கள்தான், இந்த அறிவார்ந்த அவையினர்தான் தந்து கொண்டிருக்கின்றீர்கள். இதற்கு ஏற்பாடு செய்த உங்களுக்கு நன்றியை முதலில் கூறி, என் ஆய்வுச் சொற்பொழிவைத் தொடங்குகிறேன். கழக துணைத் தலைவர் உள்பட அறிவார்ந்த அறிஞர்கள், முன்னாலே அமர்ந்திருக்கக்கூடிய பெருமக்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினையும், நன்றியினையும் தெரிவித்து உரையைத் தொடங்குகின்றேன்.

சென்ற உரையில், சுந்தரகாண்டத்தைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில், லிப்கோ நிறுவனம் வெளியிட்ட சுந்தரகாண்டம் - வால்மீகி இராமாயணம் சி.ஆர்.சீனுவாசய்யங்கார் அவர்கள் மொழி பெயர்த்தது. இன்றைய விடுதலையை வாங்கிப் பார்த்தீர்களேயானால், அவருடைய படத்தினை வெளியிட்டிருக்கிறோம்.

அவர்தான் அதில் மிகவும் ஆழ்ந்து தோய்ந்தவர்.  அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் அவர்கள் வைணவத்தில் எப்படி ஆய்ந்து தோய்ந்தவரோ அதேபோல சி.ஆர்.சீனுவாசய்யங்கார்.

இராமாயண நோட்டுகள்


சி.ஆர்.சீனுவாசய்யங்கார் அவர்கள் பழைய நூல்களை யெல்லாம், 1935 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த புத்தகங் களையெல்லாம் இராமாயண நோட்டுகள் என்று தனியே ஒன்றை எழுதியிருக்கிறார். வியாக்கியானம் இல்லாமல்.

வால்மீகி இராமாயணத்தைத் தொடர்ந்து தொகுதிகள் வாரியாக, காண்டம் வாரியாக எழுதியதல்லாமல், இராமாயண நோட்டுகள் என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார். இதையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் தொகுத்து வைத்து, வரி வரியாக ஆய்வு செய்திருக்கிறார்.

சி.ஆர்.சீனுவாசய்யங்கார்  எழுதிய புத்தகத்தை எடுத்து ஆய்வு செய்து சொல்லச் சொல்ல, அந்த புத்தகத்தை மீண்டும் பதிப்பிக்கும்பொழுது, எது எதை தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டினாரோ, அந்தப் பகுதிகள் புதிய பதிப்பில் காணாமல் போய்விடுகிறது. இதுதான் அவர்களுடைய வேடிக்கையான ஒரு நிலை. இதை நான் ஏற்கெனவே சொல் லியிருக்கிறேன்.

அய்யா அவர்கள் மிகவும் சிக்கனக்காரர் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். இருந்தாலும், புதிய பதிப்பான அந்தப் புத்தகத்தையும், பழைய பதிப்பையும் வாங்கி வரச் சொல்லுவார். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தார்; புதிய பதிப்பில் அய்யா ஆய்வு செய்து சொன்ன பகுதிகள் இல் லாமல் இருந்தது.

சென்ற ஆய்வுக் கூட்டத்தில் அனுமான் எப்படி தன்மீது நம்பிக்கையை வரவழைப்பதற்காக விசேசமான அடையாளங்களையும் சொன்னான் என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்டினேன்.

சுந்தர காண்டம், யுத்த காண்டத்தை


நறுக்கியிருக்கிறார்கள்


இது ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டம் 1962 ஆம் பதிப்பு. அதே சுந்தர காண்டத்தை இப்பொழுது வெளியிடுகிறார்கள். வருடாவருடம் அவர்கள் வெளி யிடுகிறார்கள். வால்மீகி இராமாயணம் தமிழ் வசனம் இரண்டு பாகமாக ஆக்கியிருக்கிறார்கள். சுந்தர காண்டம், யுத்த காண்டத்தை நறுக்கியிருக்கிறார்கள். காரணம் என்ன சொல்வார்கள் என்றால், சுருக்குவதற்காக செய்தோம் என்று ஒரு சமாதானத்திற்கு இடம் வைத்திருக்கிறார்கள்.

இது என்னுடைய கைகளில் இருப்பது 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்பு.

1962 ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்பில், 27 பக் கங்கள் வரிசையாக எழுதியிருக்கிறார்கள். இன்னின்ன செய்தால், வெற்றி பெறலாம் என்று பாராயணம்பற்றி எழுதியிருக் கிறார்கள்.

இவை அத்தனையும் புதிய பதிப்பில் இல்லவே இல்லை.

அவர்கள் இராமாயணத்தை ரிப்பேர் செய்துகொண்டே இருப்பார்கள்


இதற்கு ஒரே ஒரு சமாதானம் என்ன சொல் வார்கள் என்றால், நாங்கள் பக்கத்தை குறைத்து விட்டோம் என்று சொல்வார்களே தவிர, நாம் இராமாயணத்தைப்பற்றி பேசப் பேச, அவர்கள் இராமாயணத்தை ரிப்பேர் செய்துகொண்டே இருப் பார்கள்.


ஆனால், அடிப்படையிலேயே அதை மாற்ற முடியாத அளவிற்கு நம்முடைய ஆதாரங்கள் அவ்வளவு நிறைந்திருக்கின்றன.


கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்ற தலைப் பில் பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் எழுதிய நூலைப் பற்றியும், அவரைப்பற்றியும் ஏற்கெனவே உங்களுக்குச் சொன்னேன்.

மேட்டூர் அணையைக் கட்டுவதற்கு இடத்தைத் தேர்ந்தெடுத்தவர் அவர்தான். அவர் சூப்பிரண்டிங் என்ஜி னியராக இருந்தவர். தமிழ்க்கடல் மறைமலையடிகளார் அவர்களுடைய தலைமையில், பல்லாவரத்தில் நடை பெற்ற கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். மாணிக்க நாயக்கர் அவர்கள் மிகச்சிறந்த பொறியாளர்; பல புதிய கண்டுபிடிப்புகளை செய்த பொறியாளர். ஆங்கிலத்தில் மிகப்பெரிய புலமை உள்ளவர். இங்கிலாந்தில் படித்துத் திரும்பியவர். தந்தை பெரியாருக்கு உற்ற நண்பர். நாமக் கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களுக்கும் நண்பர். இவர் கடைசியாக ஆற்றிய உரை, அச்சுக்குப் போகாமல் இருந் திருக்கிறது. அதை கலைக்கதிர் பதிப்பகம் சார்பாக, பேரா சிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்கள் முன்னுரை எழுதி,  கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்ற தலைப்பில் பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் பேசியதை நூலாக வெளியிட்டார். 1955 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நூல் வெளியிடப்பட்டது.

ஆனால், அதற்குப் பிறகு கம்பராமாயணத்தைப்பற்றியும், கம்பனைப்பற்றியும் ஆயிரம் புத்தகங்கள் வந்தாலும், இதுபோன்ற புத்தகங்கள் வெளிவரவில்லை. ஏனென்றால், இந்த நூல்கள் வெளியே பரவக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆகவே, அடுத்த ஆய்வுக் கூட்டத்தில், இந்தப் புத்தகம் இங்கே கிடைக்கும். நாம் அச்சடித்து, நாமே பதிப்பாகப் போட்டு, அந்நூலினை வெளியிட இருக்கிறோம்.

சக்கரவர்த்தி நாயனார் என்பவர் சமணக் கருத்துள்ளவர். அவர் அய்.இ.எஸ். (இண்டியன் எஜுகேசனல் சர்வீஸ்) கல்வியதிகாரியாக, முதல்வராக இருந்தவர்.

இராவணன் வித்யாதரனா?


சென்னை பிராட்வேயில் 1949 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய இரண்டு நாள் திருக்குறள் மாநாட்டிற்கு, ஒரு நாள் சக்ரவர்த்தி நாயனார் அவர்கள் தலைமை தாங்கிப் பேசியிருக்கிறார். அவர் ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறார், ஆய்வும் செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நூல் எங்களுடைய பழைய ஆவனத்திலிருந்து கிடைத்தது.

இராவணன் வித்யாதரனா? என்கிற ஒரு தலைப்பில் சிறிய நூல். இந்த நூலும், கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்ற நூலும் அடுத்த ஆறாவது சொற்பொழிவில் உங்களுக்குக் கிடைக்கும்.

கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் புத்தகத்தில் பா.வே.மாணிக்க நாய்க்கர் படத்தினை வெளியிட்டுள்ளார்கள். எவ்வளவு கம்பீரமாக இருக்கிறார் என்பதைப் பாருங்கள். இங்கிலாந்து நாட்டிற்கெல்லாம் சென்றிருக்கிறார். தமிழ் வரிவடிவ ஆராய்ச்சியில் அவர் தலைசிறந்த அறிஞராவார்.

இவரைப்பற்றி சென்ற கூட்டத்திலேயும் சொல்லியிருக்கிறேன்.

பா.வே.மாணிக்க நாயக்கர் எழுதிய


கம்பன் புளுகும், வால்மீகி வாய்மையும்


இன்றைய கூட்டத்திலேயும் அவரைப்பற்றி சொல்கிறேன்.

அந்த நூலில் உள்ளதாவது:

கம்பன் புளுகும், வால்மீகி வாய்மையும் என்ற கட்டுரை திரு.பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்களாலேயே எழுதப்பெற்றது. தமது இறுதிச் சொற்பொழிவை வரி வடிவில் ஆக்கி அச்சிடத் தொடங்கினார்; எக்காரணத்தாலோ நூல் உருவாகி வெளிவராது நின்றது; திருத்தத்துக்கு வரும் புரூப் திரு.நாயக்கர் அவர்களின் இல்லத்திலிருந்து கிடைத்தது. பாவே.மா. அவர்களின் கைப்படத் திருத்திய அச்சுப் பிரதியை நமக்குத் தேடி உதவியர் திரு.தா.ஏ.ஞானமூர்த்தி அவர்களாவார்.

கம்பன் புளுகும், வால்மீகி வாய்மையும் என்னும் துணிபை முன்னீடாக இட்டு, யான், இக்கல்வி கேள்வி முற்றிய பெருங்குழுவில் பேசவந்த துணிவே எனது புல்லறிவாண்மையைச் சுட்டிக்காட்டும் குறிக்கொம்பாகும். எனினும், இத்தகைய வெறுஞ் சொல்லையும் பெருஞ்சொல்லாகக் கொண்டு சீரியோராகிய நீவிர் கேட்பிரேல் நுங்கள் பெருமிதத்தை நிலைநாட்டினீர் ஆவீர்கள்.

இறையு ஞானமிலாதவென் புன் (சொலை)

முறையி னூலுணர்ந் தீரு முனிவிரோ?

முனியவே மாட்டீர். அன்றியும், நான் பேச வந்தது புளுகென்று உங்களுக்குத் தெரியுமானாலும், என் புளுகிற்கு முன் புளுகாக, இளம் புளுகனார், திருநாவிற் புளுகர் முதலிய அறிக்கை விடுத்த மாணவர்கள் என் தாளாண்மையை எக்சி கூடிவ் எஞ்சினீர் (Executive Engineer) ஓடு முடித்தவ னென்று புளுகியிருக்கிறபடியால் என் புளுகு பின் புளுகாக ஏற்பீர்களாக.

(1931 ஆம் பிப்ரவரித் திங்கள் 5 ஆம் நாள் வியாழக் கிழமையன்று பல்லாவரம் பொதுநிலைக் கழகத்தின் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவில் திரு.பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் நிகழ்த்திய பேருரையே இந்நூல். அக்கழகத்தின் அறிக்கையில் அக்கழச் செயலாளர்களாகிய மணி. திருநாவுக்கரசு, இளவழகன் ஆகியோர் திரு.நாயக்கர் அவர்கள் எக்சிகூடிவ் எஞ்சீனிராக இருந்து ஓய்வு பெற்றவர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், திரு.நாயக்கர் அவர்கள் சூப்பிரெண்டென்டிங் எஞ்சினீராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவராவர். செயலாளர்கள் அறிக்கையில் தவறாக வெளியிட்டதைத்தான் ஈண்டுத் திரு.நாயக்கர் அவர்கள் குறிப்பிடுகிறார். இங்குக் குறிப்பிட்டுள்ள இளம்புளு கனார் கழகச் செயலாளர் இளவழகன் ஆவர். திருநாவிற் புளுகர் - மணி.திருநாவுக்கரசு).

ஆராய்ச்சியின் தோற்றுவாய்


நாரணன் விளையாட் டெல்லா நாரத முனிவர் கூற

ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான் மீகியென்பான்

சீரணி சோழ நாட்டுத்

திருவழுந் தூருள் வாழ்வோன்

காரணக் கொடையான் கம்பன்

தமிழினாற் கவிசெய் தானே

என்று வான்மீகத்திருந்து கம்பன் கவி செய்தானெனப் பிறர் சொல்லி யிருத்தலானும்,

தேவ பாடையின் இக்கதை செய்தவர்

மூவ ரானவர் தம்முளும் முந்திய

நாவி னாருரை யின்படி நான்தமிழ்ப்

பாவி னாலி துணர்த்திய பண்பரோ

என்று அவ்வாறு வான்மீகத் திருந்து கம்பன் - நொய்தின் நொய்ய சொல் நூற்ற தாகக் கவிக் கூற்றே இருத்தலானும்' என்று அந்நூலில் உள்ளது.

இந்திய அரசியல் சட்டம் தயாரான அந்தக் காலகட்டத்தில், Hindi that is Hindi shall be official language  Hindi (in Devanagari script) என்று இருக்கிறது. இந்தியில் இந்துஸ்தானி இந்தி வேறு; சமஸ்கிருதத்தையொட்டிய இந்தி வேறு.

காந்தியார், நேரு போன்றவர்கள் விரும்பிய இந்தி, தேவநகரி ஸ்கிரிப்ட் இந்தியல்ல. இந்துஸ்தானிதான், உருது மொழிதான் சரியாக இருக்கும் என்று ஒரு போட்டியே இருந்தது. இன்றைக்கும் உத்தரப்பிரதேசத்தில் அந்தப் போட்டிகள் உண்டு. அப்படி இருந்தாலும், அதற்குத் தத்துவார்த்தம் சொல்லும்பொழுது,

அரசியல் சட்டத்திலேயே Hindi that is in the Devanagari script என்று போட்டார்கள். தேவநகரி என்றால் என்ன அர்த்தம்? தேவ பாஷை - தேவ எழுத்துகள் - கடவுள் எழுத்துகள் என்று அர்த்தம்.

எட்டாவது அட்டவணையில், 22 மொழிகளில் பேசாத மொழியான தேவநகரி என்று போட்டார்கள். தேவபாஷை என்பதற்கு அரசியல் சட்ட அங்கீகாரத்தை, செம்மொழி அங்கீகாரம் வாங்குவதற்கு முன்பே புகுத்திவிட்டார்கள். அதனால்தான் அய்யா அவர்கள் கொளுத்தினார்.

அய்யா அவர்கள் சொல்லும்பொழுது, ஆறு பேர் கமிட்டியில் ஒருவர் டாக்டர் அம்பேத்கர், இன்னொருவர் முகமது சாதுல்லா மீதியுள்ள நான்கு பேரும் பார்ப்பனர்கள்.

பி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோபாலசாமி அய்யங்கார், கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்.

ஆகவேதான் அம்பேத்கர் அவர்கள் மனம்நொந்து நாடாளுமன்றத்திலேயே சொன்னார்,

நீங்கள்தானே அரசியல் சட்டத்தை தயாரித்தீர்கள் என்று நண்பர்கள் வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் என்னைக் குத்திக் காட்டிச் சொன்னார்கள். ஆனால், நான் சொல்கிறேன், என்னை நீங்கள் வாடகைக் குதிரையாகப் பயன்படுத்தினீர்கள். எனக்கு சுதந்திரம் ஏதுமில்லை. நான் இப்பொழுது சொல்கிறேன், யாருக்கும் பயன்படாத இந்த அரசியல் சட்டம் இருக்கிறதே, இதை கொளுத்துவதற்கு முதல் ஆளாக நான்தான் இருப்பேன் என்று நாடாளுமன்றத்தில் பேசி, நாடாளுமன்றத்தில், மாநிலங்களவையினுடைய குறிப் பில் இது பதிவு செய்யப்பட்ட அம்பேத்கர் அவர்களுடைய உரையாகும்.

அரசியல் சட்டத்தில் ஒரு பகுதியை மட்டும்தான் அம் பேத்கர் அவர்களால் உள்ளே நுழைக்க முடிந்தது. மீதியெல் லாவற்றிலும் அவருக்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.

மேலும் பா.வே.மாணிக்க நாயக்கர் விளக்கிக் கூறுகையில்,

தேவ பாடையின் இக்கதை செய்தவர்

மூவ ரானவர் தம்முளும் முந்திய

நாவி னாருரை யின்படி நான்தமிழ்ப்

பாவி னாலி துணர்த்திய பண்பரோ

என்று அவ்வாறு வான்மீகத் திருந்து கம்பன் - நொய்தின் நொய்ய சொல் நூற்ற தாகக் கவிக் கூற்றே இருத்தலானும்,

.................அபிநவ கவிநாதன்


விழுந்த ஞாயிறு எழுவதன்

முன் மறைவேதிய ருடனராய்ந்

தெழுந்த ஞாயிறு விழுவதன்

முன்கவி பாடின தெழுநூறே

என்று பிறர் சொல்லியிருத்தலானும் நமது கம்பன், தனக்கே - ஆரிய மொழிப் பயிற்சி இல்லாமலோ, அன்றி இருந்திருப்பினும், வேதியர் சொல்லை வேதச் சொல்லாகத் தன் தலையிற்றாங்கித் தனது நூலை ஆக்க எண்ணிய நோக்கத்தாலோ, மற்று அவ்வேதியருடன் ஆராய்ந்தே தனது இராமாயணத்தை யாத்தனன் என்றிருத்தலினாலும்,

தேவ பாடையின் இக்கதை செய்தவர்

மூவ ரானவர் தம்முளும் முந்திய

நாவி னாருரையின் படி

தான் தமிழ்ப் பாவினால் மொழி பெயர்த்ததென்று கம்பன் கூற்றாகவே இருத்தலாலும், கம்பன் நூலிடையே அறியக் கிடக்கும் மக்கள் ஒழுகலாறு வடநாட்டு ஆரிய மக்கள் ஒழுகலாற்றிற்குப் பல வகைகளில் மாறுபட்டதாகப் புலப்பட்டமையினாலும், நீலகிரி மலைமேல் ஆனந்தாஸ்ரமத்து அமர்ந்திருந்த - மகரிஷி சிவத்யானானந்தர் வால்மீகத்திருந்து கம்பன் பிறழ்ந்ததை வற்புறுத்தி 1.3.1919 இல் ஒரு திருமுகம் எனக்குக் கடைக்கணித்தபடியாலும் கம்பனுக்கு முதனூலாகிய வான்மீகத்துடன் ஒத்திட்டுப் பார்க்கும் அக்கறையும், ஊக்கமும் அடியேனுக்குத் தோன்றின.

புளுகுக்குச் சக்கரவர்த்தி யார் என்பது?


ஒத்திட்டுப் படிக்க எனக்குக் கிடைத்த சுவடிகள், இப்போது கம்பராமாயண மென்றும், வால்மீகி இராமாயண மென்றும் பெயரிட்டுப் பதிப்பிக்கப் பெற்று உலவி வரும் கடைச் சுவடிகளேயாம். இவைகளைக் கொண்டுதான் கம்பன் பேரில் புளுகையேற்றினே னாகையால், இக்கடைச் சுவடிகளே மூல பாடங்களுக்கு வேறுபடப் பதிப்பிக்கப் பெற்றிருக்குமேல், கம்பன் புளுகு என்பது கடைச் சுவடி புளுகாக முடியும்.

அல்லது தமிழானகிய கம்பன் ஆரியம் என்றால் கேழ்வரகு என்கிற வரையில் மாத்திரம் தெரிந்திருந் தானானால் அவனுக்கு வால்மீகி நூலை எடுத்தோதிய வேதியர்கள் புளுகியிருத்தல் வேண்டும். ஆனால், அக்காலத்து வேதியர்கள் புளுகர்கள் அல்லர் என்று யான் முழுதும் நம்பியிருத்தலினாலே புளுகென்று தோன்றிய முழுமையினையும் நம்மவன் கம்பன் புளுகென்றே யான் தீர்மானித்தேன். அவ்வளவு திறமையுடன் புளுகும் வன்மையும், புளுகுச் சக்கரவர்த்தியாகிய கம்பனையன்றி வேறு யார்க்கும் கிட்டக் கூடியதென்றும் யான் நம்பவில்லை.

வால்மீகத்தில் உறுதிமொழி


புலமையுடையோர் சங்க நூற்களை மிகவும் பாராட்டுதல் அவைகளுள் பொதிந்து பொலியும் இயற்கை நவிற்சி யணிகளை வியந்தன்றோ? அவ்வாறாயின் உலக இயற்கை நிகழ்ச்சிகள் அன்று எத்தகையனவோ இன்றும் அத்தகையனவாகவே நம் இரு விழிகள் காண நிகழ்வதெனத் தோன்றும் அழகுடன் நவின்று செல்வது வால்மீகம். அதற்கு முற்றிலும் மாறாக, செயல் கடந்த செயற்கைக் கட்டென்றும் கம்பன் கனவென்றும் இயற்கை யுணர்வினர் எவரும் எண்ணும்படி நவின்று செல்வது கம்பன் நூற்ற நூல்.

இரு நூற்களின் வேற்றுமை


மற்றைய புலவர்களைப் போன்று காலத்தால், சொல் வழக்கால், செவி வழக்கால், மாறி மாறிப் பிறழ் வடைந்து பின்வந் தெய்திய பாட்டிக் கதைகளைத் தங்கள் புலமைகொண்டு புனைந்தெழுதுபவர்கள் போன்ற வரல்லர் - வால்மீகி.

அவரோ கதைத் தலைவனாகிய இராமன் காலத் தவர் : கதைத் தலைவியாகிய சீதைக்குப் பிள்ளைப் பேறு பார்த்தவர். அவ்வாறு ஒரு காலத்தவராக நேர்ந்தமை போதாமலும், தமக்கு நேராகத் தெரிந்த நிகழ்ச்சிகளையும், மறதியால் மாறுபட வரைய இட முண்டென்று அஞ்சி, நான்முகன் அருளாலும் நாரத மகா முனிவர் நெறிப்படுத்திய படியும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை, இருந்த இருப்புக்களை, அழுத அழுகை களை, சிரித்த சிரிப்புக்களை அவ்வவ்வாறே வரைந்து வைத்தனராக வால்மீகமே கூறுகின்றது.


வால்மீகம் - பாலகாண்டம்


3-வது சர்க்கத்தில்


உள்ள சுலோகம்:
அதாவது:


இராமன், இலக்குவன், சீதை, தசரதர், நாட்டார், நகரத் தார்களும் அவரவர்கள் சிரித்தது, பேசியது, செய்தது, வனவாசத்தில் நடந்தது முதலான சகலத்தையும் அருள் வலுவினாலே உண்மையாக அறிந்து வால்மீகி எழுதினா ரென்பது.


கம்பன் புளுகின்மேற் புளுகனென்பது


கம்பனோ எண்ணிய சகாப்தம் எண்ணூற்றேழின் மேல் - அதாவது இங்கிலீஷ் 885-இல் வாழ்ந்த முந்தா நாளைய மனிதன். இன்றையோர் கம்பனைப் பதின் மூன்றாவது ஆழ்வாராக்கினா ராயினும் தன் காலத்தில்,


நெற்கொண்டு போமளவும்


நில்லாய் நெடுஞ்சுவரே


என்று சோற்றிற்கு மண் சுவரெடுத்த வெறும் மனிதனேயன்றி வால்மீகியைப் போல-சிவத்யானானந்தரைப் போல்-மஹரிஷியு மல்லன்.


ஆகலின் உடனிருந்து கண்டும் கேட்டும் அருள் பெற்றும் ஆய்ந்தும் வால்மீகி எழுதிய கதையை முதலிலிருந்து இறுதி காறும் கம்பன் தன் நூலில் திரித்தும், கூட்டியும், குறைத்தும் புளுகிச் சென்றதையேனும் புளுகினேன்' என்று சொல்லி விட்டிருப்பானானால் அந்தக் கூற்று வரையிலேனும் கம்பன் புளுகனல்லனாய்ப் போய்விடுதற் கஞ்சி - தான் புளுகவேயில்லை.


மூவரானவர் தம்முளு முந்திய


நாவினா ருரையின் படி


தான் செய்ததாகவும் உறுதிமொழி கூறிப் புளுகின் மேற் புளுகின னந்தோ!


இரண்டு நூல்களிலும் பொதுப்பட உள்ளவை

பெயரளவே யென்பது

இராமன் சீதை இலக்குவன் தாரை இராவணன் முதலிய பெயர்களைப் பெயரளவிலும், இராமன் சீதை இலக்குவன் மூவரும் காட்டிற்குப் போனார்கள் - இராமன் மனைவி சீதையை இராவணன் கொண்டோடிப் போனான் - இராமன் குரங்குக் கூட்டத்தோடு கடல்கடந்து சென்று இராவணனைக் கொன்று சீதையை மீட்டுவந்தான் என்பன போன்ற நிகழ்ச்சிகள் நிகழ்ச்சியளவிலும், வால்மீகி நூலிற்கும் கம்பன் நூலிற்கும் பொதுப்படக் காணக் கிடக்கின்றனவேயன்றிச் சிறிது உற்று நோக்குங்கால் வால்மீக இராமன் வேறு. கம்ப இராமன் வேறு - வால்மீக சீதை வேறு, கம்ப சீதை வேறு - வால்மீக தாரை வேறு, கம்ப தாரை வேறு என்பனவும், கம்ப மண்டோதரியோ கம்பன் மண்டையோட்டிற்குள்ளிருந்து பிறந்தவள் என்பதும் தெளிவாகும்.


கதை நிகழ்ச்சிகளிலும் வால்மீக நிகழ்ச்சிகளோ இயற்கைக்கு மாறாத வாய்மையெனத் தோன்றும் நிகழ்ச்சிகள். கம்ப நிகழ்ச்சிகளென்றாலோ, இயற்கைக்கு வேறாய பெரும் பெரும் புளுகுகளென்று ஒரமின்றிய உள்ளப் பாங்கினருக்கு வெட்ட வெளியாகப் புலப்படக் கூடியனவும், கம்பன் கவித்துவ நறவம் மாந்தி மயங்கியோருக்கு பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்


மெய்போ லும்மே மெய்போ லும்மே" என்ற ஆன்றோர் சொற்படி கம்பனைப் பதின்மூன்றாவது ஆழ்வாராகத் தோற்றச் செய்யக் கூடியவனுமாய் அமையும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன.


கம்ப இராமனுடன் மூவர் மரவகையுணவே


அருந்தின ரென்பது


முதற்கண் கம்பசூத்திர இராமனையும், வால்மீக இயற்கை இராமனையும் நெருங்க நிறுத்திப் பார்ப்போம்.


(தொடரும்)

- விடுதலை நாளேடு, 4.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக