பக்கங்கள்

செவ்வாய், 10 நவம்பர், 2015

இராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை

(கட்டுரையாளர் - திராவிடர் இயக்கத்தவர் அல்லர் - அவர் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துள்ளார்).
சிறீராமனுடைய சரித்திரத்தை நாரத முனிவர் வால்மீகிக்குச் சொல்லி அதை அவர் காவியமாக எழுதினார் என்பதுதான் நாம் அறிந்தது. வால்மீகி எழுதிய இராமாயணம் மிகப் பெரிய புகழ் பெற்ற பிறகே பிற மொழிகளில் கம்பர் முதற்கொண்ட பலரால் இராமாயணம் எழுதப் பெற்றது.
இராமர் பாலம் பற்றிய எந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் வான்மீகத்தில் இருப்பதை ஆதாரமாகக் கொள் வதுதான் நியாயம். கம்பரோ, எழுத் தச்சனோ, துளசிதாசரோ யாராயினும் இவர்கள் எழுதியவை வான்மீகத்தை அடியொற்றி மாற்றியும், மிகைப் படுத்தியும் எழுதப்பட்டவைதான் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்த காவியங்களிலெல்லாம் ஏராளமான இடைச்செருகல்கள் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
மதரீதியாக இராமர் பாலத்தின்மீது நம்பிக்கை வைத்து அது இன்றளவும் இருக்கிறது என்று ஒருவர் நம்பினால் அவரது நம்பிக்கை யார் எழுதிய இராமாயணத்தை அடிப்படையாக வைத்து அமைய வேண்டும்?
இராமாயணத்தை எழுதிய ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டு இருப்பதையும், இவர்களது காவி யங்களில் ஏராளமான கற்பனைகள் இருப்பதையும், இவற்றில் பல இடைச்செருகல்கள் இருப்பதையும் ஒப்புக் கொள்ளும்போது, இராமர் பாலத்தை புனிதம் என்று நம்பு கிறவர்கள் யார் எழுதியதை ஆதார மாகக் காட்டுவார்கள்?
உதாரணமாக, இராமர் தான் கட்டிய பாலத்தைத் தானே உடைத் தார் என்ற செய்தி கம்பராமா யணத்தில் வருகிறது. இதை மிகைப்பாடல் என்றும், இடைச் செருகல் என்றும் ஆகவே இது உண்மையல்லவென்றும் சிலர் (துக்ளக் சோ) சொல்கிறார்கள்.
இதே அளவுகோலைப் பயன் படுத்தினால் இராமர், இராமேஸ் வரத்தில் சிவனை வழி பட்டார் என்பதும் கம்பராமாயணத்தில் மட்டுமே. அதுவும் மிகைப்பாடல் பகுதியில், இடைச்செருகலாகத்தான் வருகிறது.
இதை நம்பி இன்றுள்ள இராமேஸ்வரம் கோவிலை ஆரம்பத் தில் ஸ்தாபித்தவர் இராமனே என்றும் நம்புகிறவர்களின் நம்பிக்கை என்னாவது? இப்படி இராமன் இரா மேஸ்வரத்தில் சிவனை வழிபட்டார் என்பது வான்மீகத்தில் இல்லவே இல்லை.
முதல் நூலில் இல்லாத ஒன்று தழுவல் நூலில் இருக்குமானால் நாம் முதல் நூலைத்தானே ஆதார மாக ஏற்க முடியும். மேலும், வான் மீகத்தில் இராமேஸ்வரம் என்ற ஊரின் பெயர் எங்குமே பயன்படுத் தப்படவில்லை. அதுபோல தனுஷ் கோடி என்ற ஊரின் பெயரும் வான்மீகத்தில் இல்லை.
மாறாக அனுமன் லங்காவுக்குச் சென்றபோதும், இராமன் லங்காவை பார்வை இட்டபோதும் மகேந்திர கிரி மலையில் ஏறி நின்று பார்த் தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது.
இந்த மகேந்திரமலை இராமேஸ் வரத்திலோ, தனுஷ்கோடியிலோ இல்லை. ஒரு சிறிய மணல் பொத் தையை மகேந்திரமலை என்று இராமேஸ்வரத்தில் வழிகாட்டிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அனுமனும், இராமனும் ஏறி நின்ற மகேந்திர மலை இன்றும், உண் மையிலேயே இந்திய வரைப்படத்தில் ஒரி சாவை ஒட்டிய ஆந் திர மாநிலத்தின் கடற்கரையில் தான் உள்ளது. இந்த மலை யில் நின்று பார்த்தால் கடலும், கடற்கரையில் உள்ள லங்காவும் (சிறிய தீவு) அவர் களுக்குத் தெரிந்தது.
லங்கா என்ற சமஸ் கிருத வார்த்தைக்கு சிறிய தீவு என்று அர்த்தம். வான்மீகத் திலும், கம்பரிலும் சொல்லப்படுகின்ற கிட்கிந்தை, தண்டகாரண்யம், விந்திய மலை, கோதாவரி நதி, நர்மதை நதி, விந்தியத்தின் மலைக்குகைகள் அனைத்துமே இன்றும் இந்திய வரைபடத்தில் ஆந்திராவின் வடக்கு எல்லையிலும், ஒரிசா சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம், உத்திர பிரதேசம் மாநிலங்களிலும் உள்ளன.
வான்மீகத்திலும் கம்பரிலும் வரும் பஞ்சவடியும், அயோத்தியும் சித்திரக்கூடமும் கூட இன்றைய உத்திரபிரதேச மாநிலத்திலேயே உள்ளன. அயோத்தியில் புறப்பட்டு காட்டில் கால்நடையாக வனவாசம் வந்த இராமன் முதலியோர் முதல் 10 ஆண்டுகள் சித்திரக்கூடத்தில் முனிவர்களின் விருந்தினர்களாகவே தங்கியிருந்தார்கள் என்கிறது வான்மீகம்.
சீதையை இராவணன் கடத்திய தாகச் சொல்லப்படும் பஞ்சவடி ஆஸ்ரமம் கோதாவரி ஆற்றின் ஒரு கிளையின் அருகில் இருந்தது என்று இரண்டு இராமாயணங்களும் சொல்கின்றன.
இந்த பஞ்சவடியும், கோதாவரியும், கிட்கிந்தையும் சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் வடக்கு எல்லையில் இன்றும் உள்ளன. இராவணனின் தங்கை சூர்ப்பனகை தண்டகாரண் யப் பகுதியில் வசித்தாள் என்கிறது வான்மீகம்.
ஆகாயத்தில் பறக்கும் குதிரை, தேர், புஷ்பக விமானம், பேசும் குரங்கு, பேசும் கழுகு, பேசும் கரடி, பறந்து செல்லும் அரக்கர்கள் போன்ற இயற்கைக்கு புறம்பான கற்பனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இராவணனது லங்கா இன்றுள்ள ஒரிசா கடற்பகுதியில் உள்ளது என்பது புரியும்.
எப்படி?
கிட்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திரமலையை கால்நடையாக சென்றடைய இராமன் எடுத்துக் கொண்ட காலம் வெறும் நான்கே நாட்கள் ஆறுகள், மலைகள், ஏரிகள், அடர்ந்த காடுகளையெல் லாம் சுற்றியோ, நடுவில் சென்றோ வீரர்கள் இந்த தூரத்தைக் கடந் தார்கள் என்று வான்மீகத்தில் வருகிறது.
கிட்கிந்தையில் இருந்து காட்டு வழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பது தான் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையும் கடற்கரையும்.
மாறாக கிட்கிந்தையில் இருந்து குறுக்காக நடந்தாலும் 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இராமேஸ் வரத்தை இராமனின் சேனை வந்தடைய நான்கு நாளல்ல. ஆறு மாதங்கள் ஆனாலும் முடியாது.
பாலம் கட்ட 5 நாட்களும், போர் செய்து இராவணனைக் கொல்ல 8 நாட்களும் எடுத்துக் கொண்ட இராமன் சித்திரை மாதம் சுக்ல ஷஷ்டியன்று வனவாசம் முடிந்து  திரும்பி நந்திகிராமம் வந்துவிடுகிறார்.
கிட்கிந்தை மகேந்திரகிரி -4 நாட்கள்
பாலம் கட்ட    -5 நாட்கள்
போர்    -8 நாட்கள்
பங்குனி மாதம் உத்தரத்தில் கிட்கிந்தையிலிருந்து புறப்பட்ட இராமன் சித்திரை மாதம் கிருஷ்ண சதுர்த்தியுடன் கூடிய அமாவாசையில் இராவண வதம்  முடிந்து மீண்டும் நந்திகிராமம் வந்து சேர எடுத்துக் கொண்டது இவ்வளவு குறுகிய நாட்கள் மட்டுமே. (ஸ்ரீ மத்வால்மீகி இராமாயணம் ஸாரம். ஸ்ரீ ராம கிருஷ்ணமடம் மைலாப்பூர் வெளி யீடு).
இதனால், இராமன் இராமேஸ் வரம் வரவே இல்லை என்பதும், இராமன் கட்டிய மிதவைப் பாலம் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையின் பக்கமுள்ள கடலிலேயே கட்டப் பட்டது என்பதும். அன்றிருந்த சிறிய லங்கா (தீவு) இன்று கடலில் மூழ்கி இருக்கலாம் என்பதும் தான் உண்மையாக இருக்க முடியும்.
இராமபிரான் புருஷோத்தமனாக வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிய மனிதன் என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸ்தாபகரான பரமபூஜ்ய டாக்டர் கேசவ பலிகாரம் ஹெட் கேவார்.
மக்களை மடையர்களாக்கி தீண் டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கு வதற்கு காரணமாக இருந்தவர்கள் கள்ள பண்டிதர்களான உயர் ஜாதி பூஜாரிகள் என்றும், சடங்காசாரங்கள் போன்றவற்றினால் பாமர இந்துக்களை ஏமாற்றியவர்கள் என்றும், இன்றும் பொய்யான கட்டுக் கதைகளைச் சொல்லி அறியாதவர்களை ஏமாற்றி வேதாந்தத்திற்கு தப்பான பொருள் சொல்லி விடுகிறார்கள் என்றும், இன்றுள்ள பூஜை முறைகளினால் இந்துக்களை ஆண்மையற்றவர் களாகவும், பிச்சை எடுக்கும் புத்தியுடையவர்களாகவும், ஆக்கி விட்டார்கள் என்றும் உயர்ஜாதி பூஜாரிகளை சாடுகிறார். சுவாமி சின்மயானந்தர் அவர்கள்.
இந்த சின்மயானந்தர் சுவாமி. ஆர்.எஸ்.எஸ். கிளை ஸ்தாபனங் களில் ஒன்றான விஸ்வஹிந்து பரிஷத்தின் ஸ்தாபனத் தலைவர் களில் ஒருவர் என்பதை மறந்து விடக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.ன் பெரும் தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் ஸ்தாபகருமான ஏக்னாத் ரானடேயும் கூட இரா மனை அற்புதங்கள் செய்யாத மக் களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த மாபெரும் மனிதர் என்றுதான் சொல்கிறார்:
ஆனால், இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று சொல்லிக் கொள் கிறவர்கள் அதன் ஸ்தாபகத் தலை வரின் கொள்கையையே சத்த மில்லாமல் சாப்பிட்டு விட்டு இராமனை கற்பனை கதாபாத்திரம் ஆக்குவதிலேயே குறியாக இருக் கிறார்கள்.
ராமன் கட்டிய பாலம் மரங் களையும் கற்களையும் போட்டு, காட்டுச் செடிகளால் பிணைத்து கட்டப்பட்ட மிதவைப் பாலம் என்பது வான்மீகத்தில் விளக்கப் பட்டுள்ளது.
மிதவைப்பாலம் அசையாமல் இருக்க கற்கள் கீழே கட்டி தொங்க விடப்பட்டிருக்கலாம். அந்த கடற்கரையில் உள்ள ஒருவரிடம் கேட்டறிந்து (இதை சமுத்திர ராஜன் என்கிறார்கள்) அலை அதிகம் இல்லாத இடத்தில் இராமன் பாலம் அமைத்தான் என்றும் வான்மீகத்தில் வருகிறது.
மரத்தினாலும், கொடிகளினாலும் ஒரிசா கடற்கரையின் அருகில் உள்ள லங்காவுக்கு செல்ல அமைக்கப்பட்ட மிதவைப் பாலம் எத்தனை நாட் களுக்கு இருந்திருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். வான்மீகத்தின்படி தமிழகத்திற்கு வராத இராமன், இராமேஸ்வரத்தில் 100 யோஜனை (200 மைல்) நீளத்தில் 20 மைல் அகலத்தில், பாலம் கட்டினார் என்று நம்பச் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
இயற்கையில் நடக்காத, கற் பனையான கதைகளைச் சொல்லி பாமர இந்துக்களை கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பல ஆயிரம் ஆண்டுகள் ஏமாற்றி சுகபோகமாக வாழ்ந்த உயர்ஜாதி பூஜாரிகளின் சரித்திரத்தை நன்கு அறிந்தவர்களுக்கு, இன்று. இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் செய்து வரும் ஏமாற்று வேலைகள் புரிந்து வரும்.
புருஷோத்தமன் ஸ்ரீராமனை வழிகாட்டியாக மதித்து, வீரனாக வாழ்ந்து அதர்மத்தையும், அறியாமை யையும் எதிர்த்து போராடும் நம்பிக்கையில் உள்ள என் போன் றவர்களின் மனம் புண்படும்படி, ராமனை வெறும் கற்பனைக் கதாநாயகனாக ஆக்க முயலும் ஜாதி பூஜாரிகளின் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.
ஒருவரது மத நம்பிக்கை இன்னொருவரது அறிவுபூர்வமான நம்பிக்கைக்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ இடையூறு செய்யாத வரையிலும் யாரும் பெரி தாகக் கவலைப்பட போவதில்லை.
ஆனால் உண்மைக்குப் புறம்பான வெறும் கற்பனைகளை நம்பச் சொல்லி பாமர இந்துக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இவர்கள் இந்து மதத்திற்கும், ஸ்ரீராமனுக்கும் தீராத களங்கத்தையே உண்டு பண்ணுகிறார்கள் என்பது தான் உண்மை.
- கேப்டன் எஸ்.பி. குட்டி பி.இ.,
(நூல் அறிவுக்கு எட்டிய கடவுள்)
-விடுதலை ஞா.ம.,2.3.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக