பக்கங்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

இராமாயண ஆராய்ச்சி வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்

இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.
தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.
அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:
மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.
இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.
என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன் னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே;
இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு  சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன்.
நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன்.
இதுதான் இந்த இரண்டாவது குழந் தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.
இதைப்பற்றி சிந்திப்போம்
வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?
மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட்டியதாகவும் இராமா யணத்தில் காணப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண் டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை  உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.
குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது.
மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக ஆகிவிட்டது.
- தந்தை பெரியார்

விடுதலை,19.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக