பக்கங்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2018

பாரதப் பாத்திரங்கள் (6)

.அறிவுக்கரசு

தர்மன்



 

யுதிஷ்டிரன் என்பது பெயர். சூதாடி. சூதாடி அனைத்துச் செல்வங்களையும் இழந்தவன். தன் உடன் பிறந்தாரைத் தோற்றவன். தன்னைத் தோற்றவன். தன் நாட்டை சூதில் இழந்து நாடற்றவனானவன் தன் பெண்டாட்டி (மட்டுமே) என நினைத்துத் திரவுபதியைத் தோற்றவன். அய்ந்து பேரின் மனைவியை, தான் ஒருவன் மட்டுமே கலந்துகொண்ட சூதாட்டத்தில் பணயம் வைத்துத் தோற்றவன். மற்ற கணவர்களைக் கலக்காது பந்தயப் பொருளாகப் பாஞ்சாலியை வைத்தவன்.

சூதாடுவதில் பெரு விருப்பம் கொண்டவன். சூதாடுவது சத்திரியனுக்கு விதிக்கப்பட்ட கடமை என்றவன். இந்தக் கடமையை ஆற்றவே சூதாடினானாம். காலுக்குச் செருப்பு தைக்கத் தன் குழந்தையின் தோலை உரித்தவன். இவன் தரும புத்திரனாம்.

தாயத்தில் தோற்று வென்றவனுக்கு அடிமையாகிவிட்ட தர்மன் என் கணவனல்ல. அவனின் மனைவி நான் அல்லள். பின் யார் என்றால், மன்னன் துருபதனின் மகள் என்று திரவுபதை சொல்லுமளவுக்குத் தரம் கெட்டுப்போன சூதாடி.

சூதாடியதால் இறப்புக்குப் பின் நரகம் போனவன். இவனா தருமபுத்திரன்?

ஒற்றை மனிதனாக இருப்பவன் வேள்வியோ, வேறு சடங்குகளோ செய்யும் தகுதி பெற்றவனல்லன். ‘ஒற்றைப் பார்ப்பான் கெட்ட சகுனம்’ என்பதுகூட இதன் அடிப்படையில் தான். ஆகவேதான் கிழட்டுப் பார்ப்பனர்கள் கூடத் திருமணம் செய்துகொண்டு தகுதியைப் பெறுகின்றனர். அப்படி ‘வேள்வி மாது’ என்ற வகையில் வந்தவள்தான் மனைவி பாஞ்சாலி. அவள் எப்படி இவனது உடைமை ஆவாள்? உடைமை எனக் கருதிச் சூதில் பணமாக வைத்துத் தோற்றது தர்மமா? இவன் தர்மனா? அச்சொல்லுக்குத் தகுதியானவனா?

பாண்டவர்கள் கவுரவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பாதி நாட்டை வாங்கி தனியரசாக ஆனபின்பு ராஜசூய யாகம் செய்திட ஆசை கொண்டனர். மன்னனான தர்மன் மாமன்னன் ஆக ஆசைப்பட்டான். யாகக் குதிரையைப் பல நாடுகளுக்கும் அனுப்புவார்கள். பயந்தவர்கள் பணிந்து கப்பம் கட்டுவார்கள். அஞ்சாதவர்களுடன் குதிரைக்குரியவன் சண்டையிட்டு வெல்லவோ தோற்கவோ வேண்டும்.

கிருஷ்ணனிடம் யோசனை கேட்டான் தர்மன். மகத நாட்டு மன்னன் ஜராசந்தனைப் பற்றிக் கூறித் தன்னால் பதினெட்டு முறை போரிட்டும் வெல்லமுடியாததைக் குறிப்பிட்டு அவனுடன் போரிட நேரிடும் எனக் கூறித் தயார்படுத்தினான், கிருஷ்ணன். நேரான போரில் _ நேர்மையான முறையில் அவனை வெல்ல முடியாது. சூழ்ச்சி செய்துதான் தோற்கடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான் கிருஷ்ணன். அந்தப்படியே செய்தவன் தருமன். அவன் யோக்கியனா?

ஜராசந்தன் வீட்டுக்குப் பார்ப்பன வேடத்தில் பீமன் நுழைந்தான். ஜராசந்தனுடன் சாப்பிட்டான். மன்னனுடன் சண்டை போட வேண்டுமென்கிற ஆசையை பீமவேடப் பார்ப்பனன் கேட்டானாம். விருந்தாளியின் ஆசையை நிறைவேற்றுவது உபசரிப்பவனது கடமையாம் அக்காலத்தில். அதன்படி சண்டை நடந்தது. பீமன் ஜராசந்தனைக் கொன்று விட்டான். சூழ்ச்சியால் கொன்றது நேர்மையா? தருமன் நேர்மையானவனா?

எண்ணமும் அதனை அடையும் வழிகளும் ஒருசேர நேர்மையாக இருக்க வேண்டும். மாமன்னன் ஆவது நோக்கம். அதனை நிறைவேற்றிக் கொள்ளச் சூழ்ச்சி செய்தவனான தருமன், தர்மனா? அதர்மனா?

ஜராசந்தனிடம் தோற்றுக்கிடந்த சிற்றரசர்கள் ஆதரவுடன் மாமன்னனாகி விட்டான் தர்மன். இந்திரப் பிரஸ்தத்தில் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள். கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை. ஏன் என்று கேட்டான் சிசுபாலன். கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டான். முதல் பலி. இரத்தம் பூசிக் கொண்டது இந்திரப் பிரஸ்தம். இது தர்மமா?

தர்மம் வென்றாக வேண்டுமென்றால் வெல்லும் வழியும் தர்மமாக இருக்க வேண்டும் அல்லவா? இல்லையே?

அண்ணன் சொல்லைத் தட்டாமல் வளர்ந்தவர்கள் _ வளர்க்கப்பட்டவர்கள் பாண்டவர்கள். என்றாலும் பீமன் சிற்சில சமயங்களில் தர்மனைக் கடிந்ததுண்டு. சூதாடிப் பெண்டாட்டியைத் தோற்றபோது அவன் கையை எரித்துவிடுவோம் என்று கொள்ளிக் கட்டை கொண்டுவரச் சொன்னான் பீமன். அந்த நிலைக்கு அவனைத் துரத்தியவன் தர்மன். பாஞ்சாலி பீமனுக்கும் மனைவிதானே! தர்மன் மட்டுமே தனியாக ஏன் பணயம் வைத்தான்? அதர்மமல்லவா?

ஒற்றை ஆடையால் முகத்தை மூடிக்கொண்டு வனவாசம் புறப்பட்ட நிலை தர்மனுக்கு ஏற்படலாமா? அவன் பத்தினி பாஞ்சாலி தனது விரிந்த தலைமயிரால் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்படலாமா? அவமானகரமான இந்த நிலை தர்மனால்தானே வந்தது?

சக்கரவியூகத்தில் சிக்கிக் கொண்ட தர்மன் ஓலமிட்டு அழுது தன்னைக் காப்பாற்றக் கூப்பாடு போட்டான். சக்கரவியூகத்தை உடைத்துக் காப்பாற்றப் போய் அபிமன்யூ மாட்டிக் கொண்டான். தர்மனோ, பீமனோ, கிருஷ்ணனோ, எவனும் காப்பாற்றவில்லை அவனை. போரில் கொல்லப்பட்டான், அபிமன்யூ. அவனைக் கொன்ற பழியை அர்ச்சுனன் தர்மன் மீதல்லவா சுமத்தினான்?

உங்களைக் காப்பாற்றத்தான் தெரியும், என்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதே என்கிறான் அபிமன்யு. எங்களைக் காப்பாற்று, நாங்கள் உன்னைக் காப்பாற்றுகிறோம் என்று தர்மன் சொன்னதால்தானே அபிமன்யூ முயற்சித்தான். காப்பாற்றப்பட்ட தர்மன் அபிமன்யூவைக் காப்பாற்றினானா? வாக்கைக் காப்பாற்ற வக்கில்லாதவன்தானே தர்மன்?

வியூகப் பாதையை சைத்ரதன் அடைத்து விட்டான். என்னால் காப்பாற்ற முடியவில்லை என்றானே தர்மன். இந்தப் பெட்டைப் புலம்பல் சரிதானா? கையாலாகாதவன் கூறும் நொண்டிச் சாக்கல்லவா?

துரோணனை நிலைகுலையச் செய்து சாகடிக்கத் திட்டம் போட்டு அவன் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் எனப் பொய் கூறியவன்தானே தருமன்?

அவன் பெரிய தர்மவானாம். அதனால் பெற்ற சலுகையின்படி அவனது தேர் தரையில் படாமல் ஓடுமாம். தரையிலிருந்து நான்கு அங்குல உயரத்தில்தான் தேர் உருளுமாம். பொய் சொன்னதும் இந்தச் சலுகை பிடுங்கிக் கொள்ளப்பட்டுவிட்டதே. கைமேல் பலன்.

ஆசாபாசங்களுக்கு ஆள்பட்டுவிட்ட சாதாரண ஆள்தான். அசாதாரணமான பிரகிருதி அல்ல என்பது எண்பிக்கப்பட்டு விட்டதே!

போரின் கடைசி நாளன்று... போரில் பலத்த காயம் பெற்று அதனைத் தேற்றிக் கொள்ள குளத்து நீரில் துரியோதனன் அமிழ்ந்திருந்த போது அவனைப் போரிட அழைத்தவன் தர்மன். மனதளவில் தளர்ச்சியுற்றிருந்த அவன், “எதற்காக நான் போரிட வேண்டும்? அனைவரையும் இழந்துவிட்டேன். சிறந்த மனிதர்களும் வீரர்களும் மறைந்துவிட்ட நிலையில் விதவைபோல ஆகிவிட்டது நாடு. இது எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக்கொள்.’’ என்றான். தர்மச் சக்ரவர்த்தி எனப்படும் தர்மன் அதனை ஏற்காமல் பீமனை உசுப்பிச் சண்டை போடச் செய்து துரியோதனனைச் சாகடித்துவிட்டான்.

அந்தச் சண்டையாவது தர்மப்படி நடந்ததா? துரியோதனனின் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பீமன் தாக்கிக் கொன்றானே. நேர்மையான போர் முறையா? “அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ’’ என்று வில்லிபுத்தூரான் பாடி சூதுப்போர் நாயகனான கிருஷ்ணனைச் சாடுகிறான்.

சூதாடி, பொய்யன் எனப் பெயர் வாங்கிய காரணத்தால் நரகத்தில் தள்ளப்பட்ட கீழானவன்தானே தர்மன்?

“பூமியில் கணக்கிறந்த பாவங்களைச் செய்தாலும் போர்முகத்தில் உறுதியாய்ச் சமமான வீரனுடன் சண்டையிட்டு இறப்பானேயானால் அவனுக்குச் சொர்க்கம் உரியது’’ என்பான் நாரதன். (மகாபாரத வசன காவியம் 4ஆம் பாகம், பக்கம் 518) அதன்படி சொர்க்கத்தில் இடம் பெற்றானே துரியோதனன். தர்மனா? துரியோதனனா? யாரை விரும்புவீர்கள்?

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.7.!8

பாரத பாத்திரங்கள் [5]

- சு.அறிவுக்கரசு

பீஷ்மன்

 


பலராமனின்/கிருஷ்ணனின் தங்கை சுபத்திரையை துரியோதனுக்கு மணம் முடிப்பதாக நிச்சயம் செய்திருந்த நிலையில் அவள் அருச்சுனனோடு ஓடிப் போகிறாள். அதனை அறிந்துகொண்ட பீஷ்மன் சுபத்திரையின் ஜாதியாரான யாதவர்கள் மீது போர் தொடுத்து மானம் காத்திடத் தூண்டி விட்டான். துரியோதனன் மறுத்துவிட்டான். இது அரசு சார்ந்த விவகாரமில்லையாதலால் போர் கூடாது என்று சொல்லிவிட்டான். அதன் பிறகுதானே தன் யோசனையை மாற்றிக் கொண்டான் பீஷ்மன். துரியோதனனைத் துஷ்டன் என்பவர்கள் பீஷ்மனைப் பிதாமகன் என்கிறார்களே, சரியா?

சத்திரிய ஜாதியின் தர்மப்படி போரிடக் கூறினான் பீஷ்மன். மாற்றாரின் கருத்தை, அதிலுள்ள நியாயத்தை மதிக்கத் தேவையில்லை எனும் வெறும் மறத்தனம்தானே சத்திரிய தர்மம். வன்முறைதானே அந்தத் தர்மம்? அதனை வலியுறுத்தியவன்தானே பீஷ்மன்?

வன்முறையால் சுபத்திரையை மீட்டுத் துரியோதன் மணம் முடித்தாலும் சுபத்திரையின் மனதில் இடம் பிடிக்க முடியுமா? இதைக்கூட யோசிக்காமல் போர் தொடுக்கச் சொன்னவன் பிதாமகனா? பேதை மகன் அல்லவா? கொண்டாடப்படக் கூடியவனல்லன். கண்டனம் செய்யப்பட வேண்டியவன்.

குருசேத்திரப் போரில் கவுரவர்களின் படைக்குத் தலைமை தாங்கியவன் பீஷ்மன். என்றாலும் எதிர்தரப்பினரான பாண்டவர்களைக் கொல்ல மனமில்லாதவன். விரும்பாதவன் விலகிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, நம்பவைத்துக் கழுத்தை அறுக்கும் நயவஞ்சகம் செய்யக் கூடாது.

பீஷ்மன் படைத் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிட வேண்டுமென்று துரியோதனன் நினைக்கிறான். கர்ணன் அதனைச் சொல்லிவிட்டான். வேறு வழியின்றி துரியோதனன் பீஷ்மனை விலகச் சொல்கிறான். ஏற்று, விலகத் தயாரில்லை என்கிறான் பீஷ்மன். இப்படிச் செய்யலாமா?

பீஷ்மனை எதிர்த்துப் போர்புரிய சிகண்டியை நிறுத்துகிறான் அர்ச்சுனன். சிகண்டி பெண். எதிர்க்க மாட்டான் பீஷ்மன் என்கிற எண்ணம். ஆனால் சிகண்டியின் கையால்தான் பீஷ்மன் சாவான் என்ற நிலை. சிவன் அளித்த வரமாம்.

சிகண்டி யார்? பாஞ்சால மன்னன் துருபதன் என்பானின் மகள். மகனை எதிர்பார்த்திருந்த மன்னன் மகள் பிறக்க அதிர்ந்து போய்விட்டான். குறிபார்த்த குறத்தி, மகள் மகனாவான் என்கிறாள். முடியுமா? துருபதன் நம்பினான். ஆணாகவே வளர்த்தான். சகல வீர விளையாட்டுகளையும் கற்பித்து வளர்த்தான்.

பீஷ்மனால் துராக்கிரமமாகக் கடத்தி வரப்பட்ட காசியின் மன்னனின் மகள்கள் மூவரில் மூத்தவளான அம்பையே அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்திருக்கிறாள். பீஷ்மனைக் கொல்லக் காத்திருக்கிறாள்.

சிகண்டிக்குத் திருமணம் நடந்தது. முதல் இரவில் சிகண்டி ஆணல்ல, பெண் என்பது தெரிந்துவிட்டது. விஷயத்தைத் தெரிந்து கொண்ட சிகண்டியின் மாமனார் பாஞ்சால நாட்டின் மீது படையெடுத்தார். முற்றுகையிட்டார். அவமானம் தாங்காமல் சிகண்டி காட்டுக்குப் போய் தற்கொலை முயற்சி செய்தாள். அதனைப் பார்த்த காட்டுவாசி தடுத்து, தற்கொலைக்கான காரணம் கேட்கிறான். சிகண்டி சொன்னாள். காட்டுவாசி பரிதாபப்பட்டான். ஒரே ஒரு நாள் தனது ஆண்மைச் சக்தியை சிகண்டிக்கு மாற்றித் தருகிறேன் என முன் வந்தான். மாற்றித் தந்தான்.

மறுநாள். முந்தைய இரவு முழுவதும் சிகண்டியின் புணர்ச்சிக்கும் நுணுக்கத்திற்கும் கிரங்கிப் போய் கிடந்தவள் முகமலர்ச்சியைக் கண்ட சிகண்டியின் மாமனார், மருமகனை மறுவீட்டிற்கு அழைக்கிறான். போரும் முற்றுகையும் முடிந்துபோனது. பேசியபடி காட்டு மனிதனிடம் ஆண்மையைத் திருப்பித் தர சிகண்டி காட்டுக்குப் போனான்.

சிகண்டிக்கு ஆண்மையைத் தந்துதவிய செய்தி காட்டுவாசியின் குலத் தலைவனுக்குத் தெரிந்துவிட்டது. கண்டித்தான். கொடுத்தது கொடுத்ததுதான். திரும்பப் பெற முடியாது எனத் தலைவன் சொன்னான்.

சிகண்டிக்கு மகிழ்ச்சியே. இருக்காதா, பின்னே! எவனுக்கும் எதுவும் நடக்கட்டும். எக்கேடோ கெட்டுப் போகட்டும். என் கதையை மட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன். இதுதானே சத்திரிய தர்மம். தன்னை வைத்துத் தானே தர்மஞாயம் பேசுகிறார்கள்? சிகண்டி நிரந்தர ஆண் இப்போது.

இது தெரியாத பீஷ்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன் எல்லோருமே சிகண்டியைப் பெண் என்கிறார்கள். எனவே, சிகண்டிக்குப் பின்னால் இருந்துகொண்டு அர்ச்சுனன் பீஷ்மனைக் கொல்லலாம் என்கிறான் கிருஷ்ணன்.

சிகண்டி ஆணாகிவிட்டான் என்பதை அறியாத கிருஷ்ணன் கடவுளாம்.

சண்டையில் சிகண்டியைப் பெண் எனக் கருதியதால் பீஷ்மன் வில்லை வளைக்கவில்லை. சிகண்டியோ வில்லை நாணேற்றி அம்பைத் தொடுத்து பீஷ்மனை வீழ்த்தினான்.

அம்பைக்குச் செய்த கொடுமைக்குத் தரவேண்டிய விலையை பீஷ்மன் தந்துவிட்டானா? இல்லை. விலையைக் கொடுக்கச் செய்துவிட்டாள் அம்பை. பிதாமகனாக இருந்தாலும் பிரம்மச்சாரியாக இருந்தாலும் ஒரு பெண்ணுக்குக் கொடுமை செய்த பீஷ்மன் எப்பேர்பட்ட கேவலச் சாவை அடைந்தான்?

அரை மனதோடுதானே பீஷ்மன் கவுரவர்களின் படைத் தலைவனாக இருந்தான்? பாண்டவரைக் கொன்றிட மனமில்லாமல், ஒப்புக்குத் தலைவனாகத் தானே இருந்தான்?

பழி செய்வது. பழி வாங்குவது. பழிக்குப் பழி தீர்ப்பது. இதுதான் பாரதக் கதை. அதில் பீஷ்மனின் பங்கு என்ன? புத்திமதி கூறுவதா? இல்லையே. நீதிபோதனை செய்ததா? இல்லையே. மாறாக, தூண்டிவிட்டதுதானே. அநீதிக்கு ஆதரவு தந்ததுதானே. அநீதியைச் செய்யச் செய்ததுதானே. பிதாமகனின் வேலை இதுவா? வெட்கம்.

                                                                                                (தொடரும்..)

- உண்மை இதழ், 16-30.6.18

இந்துத்துவவாதிகள் ஏன் "வால்மிகி ராமாயனத்தை" ஏற்ப்பதில்லை ??

வால்மிகிக்கு பின் 2000 ஆண்டுகள் கழித்து cutting, fitting செய்த ராமாயனத்தை ஏற்கிறார்கள் ??

வால்மிகி ராமாயனத்தில் கூறப்பட்ட விசயங்கள் வருமாறு . . .

1. ராமன் ஒரு மது பிரியன்.
2 . ராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான்.
3. ராமனுக்கு சீதையுடன் சேர்த்து சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர்.
4. ராமன் ஒரு அரசனுக்கு பிறந்து அரசனானவன் மட்டுமே ஒழிய கடவுள் அவதாரம் இல்லை.
5. ராமனின் மணைவியான சீதை அவனுக்கு தங்கை முறை.
6. ராமன் இலங்கையில் அசோக வணத்தில் சீதையை சந்தித்தபோது, மது அறுந்திக்கொண்டு 3 பெண்களின் மடியில் படுத்துக்கொண்டு ஆடினான்.

7. சீதை ராமனுடனான உறவில் திருப்தியின்றி இருந்தாள்
8. தெரிந்தே தான் ராமன் போட்ட கோட்டை தாண்டினாள்
9. ராவணனின் அழகில் மயங்கினாள்
10. விருப்பபட்டே ராவணனுடன் லங்கை சென்றாள்.
11. அனுமன் லங்கை வந்தபோது வருத்தமடைந்தாள்.

12. ராவணன் ராமனை விட பன்மடங்கு அழகானவன்.
13. அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொச்டவன்.
14. சீதையை கடத்தி வர சென்ற போதிலும், காட்டில் அவள் அழகை பார்த்து காதல் கொண்டான்.
15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்து சென்றான்.
16. ராமன் சீதையை நடத்தியதை விட மிக கன்னியமாக ராவணன் நடத்தினான்.
17.ராவணனின் பத்து தலைகள் என்பது அவனது அறிவாற்றலை உவமைப்படுத்தவே.
18. ராவணன் ஜாதி கட்டமைப்புகளை (வர்ணாசிரமத்தை) எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான்.
19. ராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திலைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
20. ராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையை தீயில் இறங்கி கற்பை நிறுபிக்க சொன்னான்.

******  கம்பராமாயனம், துளசிதாஸ் ராமாயனம், பௌத்த ராமாயனம், ஆதியாத்ம ராமாயனம், வைசித ராமாயனம், ஆணந்த ராமாயனம், அகத்திய ராமாயனம், அத்புத ராமாயனம், ரங்கநாத ராமாயனம், குமுன்டெண்டு ராமாயனம், கொத்த ராமாயனம், கிரித்திவாசி ராமாயனம், கன்னாச ராமாயனம், டன்டி ராமயனம், பவர்த்த ராமாயனம், மந்தனி ராமாயனம் . . . .

இவைகள் எல்லாம் 12 ம் நூற்றாண்டுக்கு பின் திரித்து, புதுப்பித்து எழுதப்பட்டவை !!!

original version என்பது 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட *வால்மிகி ராமாயனம்" தான் !!!

அதை படித்தால் . . . ராவணன் நல்லவனாகவும், ராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும் !!!
- கட்செவியில் வந்தது.

அண்ணாவின் இராமாயண எதிர்ப்புப் போர்



திராவிடர்  இயக்கத்தின் மிக முக்கியமான பிரச்சாரங்களில் ஒன்று இராமாயண எதிப்பு. இராமாயணக் கதையினை நாம் மட்டும் எதிர்க்கவில்லை. சைவ, சமண, பவுத்த மதத்தினரும் காலங்காலமாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியே சைவர்கள் இட்டுக்கட்டிய கதையான இராமேசுவரத்தில் வந்து இராமன் லிங்க பூஜை நடத்தினார் என்பது. இக்கதையை சைவர்கள் இட்டுக்கட்டிப் பரப்பினாலும், வைணவ பக்தர்கள் இதை நம்புவதில்லை. குறிப்பாக இன்னும் கூட வைணவ மடாதிபதிகள் இராமேசுவரம் சென்று லிங்கத்தினை வழிபடுவதில்லை, மடிந்தும் புறந்தொழா மாண்புடைய வைணவர்கள் இப்படி இருப்பதில் ஆச்சர்யமில்லை. சிவகீதையைப் பரப்ப சைவர்கள் எடுத்த பிரச்சாரத்தை வைணவர்களின் பகவத்கீதைப் பிரச்சாரம் முறியடித்துவிட்டது என்பதே கண்கூடு.

இராமாயணத்தின் கதைகள் பலப்பல. அதில் முக்கியமானது வால்மீகி இராமாயணம். வால்மீகி இராமாயணத்தின் முக்கியப் பகுதிகளை தமிழக வாசகர்களுக்கேற்ப மாற்றி, வெட்டி, ஒட்டி, புதுக்கி கவிதைச் சுவையைக் கொஞ்சம் அதிகமாக ஊற்றி பிழிந்து செய்த அல்வாதான் ‘இராமகாதை’ என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டுப் பின்பு ‘கம்பராமாயண’மாகப் பரிமாணமளிக்கும் கம்பனின் காவியம்.

பொதுவாக. எந்த ஒரு உள்ளூர்க் கதையும் உள்ளூரில் சொல்லும் போது அதற்கு  மதிப்பிருக்காது, வெளி இடத்திலிருந்து வரும் கதைகளை சற்றே மிகைப்படுத்தி அழகு சேர்த்து கற்பனைகளை அதிகம் தோய்த்து சொல்லும் போது அந்த சுவைக்காகவே கதையை வெகுவாக ரசிப்பார்கள், ஆகா, ஓகோ, என்று பாராட்டுவார்கள். நாளடைவில் கதையின் நாயகன் எல்லாம் வல்லவன், அவன் கதையைக் கேட்டாலும், பேசினாலும் பரப்பினாலும் நல்லவை நடக்கும் இல்லையேல் ஆறாத் துயர் வந்து சேரும் என்று மக்களை நம்ப வைப்பார்கள்,

“காலன் கண்டால் பொல்லாதவன் விடமாட்டான்
ராமதாசன் என்று சொன்னால் நம்மைத் தொடமாட்டான்”

என்று பாட்டுப் பாடுவார்கள். எங்கே என்றால் இறந்து போன ராம பக்தன் வீட்டில், இதைப் பற்றி அதிகம் சிந்திக்கவோ (அ) கேள்வி கேட்கவோ கூடாது. மீறினால் நமக்கு நரகம் கிடைக்கும் என்ற பயம் தான் காரணம். இப்படியே ராமன் கதை வைணவர்களால் பரப்பப்பட்டது.

சைவர்கள் பார்வையில் இராமன்

சைவர்கள் இதற்கு எதிராக நின்று ராமன் ஒன்றும் தெய்வப் பிறவி அல்ல. சாதாரண மானிடப்பிறவிதான். மாயை என்பது  கடவுளுக்குக் கிடையாது. மாயையில் சிக்கி மாயமான் பின்னால் ஓடி, மனைவியை இழந்து தவித்த ராமன் கடவுள் ஆகமாட்டான் என்று ‘சிவஞான சித்தியா’ என்ற நூலில் அருள்நந்தி சிவாச்சாரியார் மூலம் ஒரு வைணவ அன்பரைப் பாத்து  கீழ்க்காணும் பாடலால் சொல்லப்பட்டுள்ளது

“மாயமான் தன்னைப் பொய்மான் என அறியா தரக்கன்
மாயையில் அகப்பட்டுத்தன் மனைவியை இழந்தான்தன்னை
மாயைக்குக் கர்த்தா என்பை மதிகெட்டங் கவனைக் கொன்று
நாயனா தமைப்பூ சித்தான் கொலைப்பழி நணுகிடாமோ’’

இராமாயண எதிர்ப்புப் பாதை

தந்தை பெரியார் காங்கிரஸில் இருந்தபோதே ‘ராமாயணம், மகாபாரதம் போன்ற புத்தகங்களை எரிக்கவேண்டும்’’ என்று காங்கிரஸ் மாநாடுகளில் ராஜகோபாலாச்சாரியார் முன்னிலையிலேயே பேசினார்.  அதற்கு உண்மையான காரணம் இரண்டு இதிகாசங்களும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு முட்டுகட்டை போட்டு ஜாதி என்கின்ற அழுக்கு குட்டையில் மூழ்க வைத்திருப்பதால்தான். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை இராமாயண எதிப்புப் போர் திராவிடர் கழகத்தால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. 


1943ஆ-ம் ஆண்டு அண்ணா இராமாயணம், பெரிய புராணம் போன்றவைகளை ஏன் எரிக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூடியிருந்த சென்னை சட்டக் கல்லூரி விவாத அரங்கில் தமிழறிஞர் இரா.பி.சேதுபிள்ளையோடும், பின்பு சேலம் செவ்வாய்பேட்டையில் நாவலர் சோமசுந்தர பாரதியாருடன் அண்ணா வாதிட்டு அதற்கான காரணத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். அதில் ஆபாசம், ஒழுக்கக்கேடு, இனவாதம், பார்ப்பன மேலாண்மை ஜாதியக் கட்டுப்பாடு போன்றவை நீடித்து நிலை பெற்றிட இராமயணம்  ஒரு முக்கியக் கருவியாக விளங்குவதே ஆகும் என்றார். சுயமாயாதை இயக்க தொடக்க காலத்தில் இராமாயண எதிர்ப்பு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, பூவாளூர் பொன்னம்பலனார், பட்டுக்கோட்டை அழகிரி, சாமி சிதம்பரனார், சந்திரசேகர பாவலர் போன்ற தலைவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு பதில் கூற இராம பக்தர்கள் இன்றும் திணறிவருவது கண்கூடு. இராமாயணத்தைப் பற்றி சொற்பொழிவாற்ற தந்தை பெரியார் எப்பொழுதெல்லாம்  பேசினாலும் அதற்கு அடுத்த மாதமே வால்மீகி இராமாயணத்தின் ஆபாச பகுதிகளும் அர்த்தமற்ற அறிவுக்குப் பொருந்தாத சில கதைகளும் சம்பவங்களும்  அடுத்தடுத்த பதிப்புகளில் நீக்கப்பட்டது என்பது ஆவணங்களின் அடிப்படையிலான உண்மையாகும்.

‘திராவிட நாடு’, ‘காஞ்சி’, ‘நம் நாடு’, ‘The Home Land’ ஆகிய   இதழ்களில்  எழுதப்பட்ட அண்ணாவின் கட்டுரைகளில் இராமாயண எதிர்ப்புப் போர் அதிகமாக வீரியத்தோடு எழுதப்பட்டதை நாம் காணலாம். அந்தக் காலக்கட்டங்களில் அதாவது 1940-களில் அண்ணா அவர்கள் துரோகம் செய்பவனை விபீஷணன் என்றும் செய்நன்றி பாராட்டும் நல்லக் கதாபாத்திரமாக கும்பகர்ணனையும் நாட்டு மக்களுக்கு  அடையாளம் காட்டினார். அடிமை வேலை செய்வதற்கு தொண்டூழியம் செய்வதற்கும் வந்தவர்கள் ஆழ்வார்கள் என்றும் நாட்டில் காட்டாட்சி  நடத்தி வருபவர்களை ‘ஆளவந்தார்’ என்று அடையாளம் காட்டி மக்களிடையே இராமாயணத்தின் கேடுகளை விளக்கினார்.

பாரிஸ்டர் இராமசாமியின் இராமாயண எதிப்பு

ஒரு சமயம் 1944ஆம் ஆண்டு தந்தை பெரியார் மற்றும் திராவிடர் கழகம் முன்னணித் தோழர்களோடு ஆந்திராவிற்கு பயணமான அண்ணா பாரிஸ்டர் இராமசாமி என்கின்ற ஒரு வைதீக எதிர்ப்பாளர் மற்றும் இராமாயண எதிர்ப்புப் போராளியின் படத்திறப்பில் கலந்து கொண்டார். இதுபற்றி 11.06.1944இல் ‘திராவிட நாடு’ இதழில் எழுதிய கட்டுரையில் இராம எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தெலுங்கு பேசும் பகுதியான ஆந்திராவிலும் எப்படி  வலுப்பெற்றது என்றும், தமிழ் நாட்டில் பெரியார் இராமசாமி செய்த இராமாயண எதிர்ப்பு பிரச்சாரம் போல ஆந்திரத்தில் பாரிஸ்டர் இராமசாமி எப்படி இராம எதிப்புப் பிரச்சாரம் செய்தார் என்பதையும் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றியது பற்றியும் கூறியுள்ளார். பாரிஸ்டர் இராமசாமி இராமராஜ்ய அலங்கோலத்தை விளக்கிக் காட்டும் ‘சம்பூக்’ என்ற நூலை எழுதியுள்ளார் என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். தந்தை பெரியார் எப்படி திருமணங்களிலேயே புராண அலங்கோலங்களைப் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினாரோ அப்படியே பாரிஸ்டர் இராமசாமி அவர் நடத்தி வைத்தத் திருமணங்களில் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். பாரிஸ்டர் இராமசாமி எழுதிய சில புத்தகங்கள், “18 பாவங்கள் புரியும் பார்ப்பனர்கள், குல ஆச்சாரம் ஒரு கற்பனை, சாத்திரத்தின் அடிமை, சமுதாய புரட்சி’’ போன்றவை குறிப்பிடத் தகுந்தவையாகும், பாரிஸ்டர் இராமசாமி நெல்லூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தந்தை பெரியாரைப் பார்த்து பேசி பழகி இருவரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தவர்கள் என்பதை அறிந்து ஆனந்தம் அடைந்திருக்கிறார். தந்தை பெரியார் தெலுங்கிலே சில மணி நேரங்கள் பல  இடங்களிலே  இராமாயணத்தின் கேடுகளைப் பற்றி உணர்ச்சி பூர்வமான சொற்பொழிவுகளை  ஆற்றியுள்ளார். டார்பிட்டோ ஜனார்த்தனம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். சீராளா என்கின்ற ஊலிருந்து 20 மைல்களுக்கு அப்பால் நாகட்லா என்ற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேரடியாக பொது மக்களை சந்தித்து இராமாயண எதிர்ப்பு பிரச்சாரம் நடத்தியதைப் பற்றி அண்ணா எழுதியுள்ளதை இன்று படித்தாலும் இன உணர்ச்சி கொப்பளிக்கும். தந்தை பெரியார், அண்ணா, டார்பிட்டோ ஜனார்த்தனம் பேசிய கூட்டத்தில் நன்றியுரை கூற வந்த கோபிநாத் என்ற இளைஞர் நன்றியுரையினை ஆற்றும்போது இராமாயணத்தைப் படலம் படலமாக எடுத்துக்காட்டி பேசியதோடு, குறிப்பாக சம்பூக வதத்தினைப் பற்றி பேசியது மிக உணர்ச்சிகரமாக இருந்தது என்றும் இறுதியாக இராமாயணத்தை தீயில் இட வேண்டும் என்று கூறி, தீயும் கெட்டு விடும் தீய கருத்துகள் அடங்கிய இந்நூலை தீயிலிடுகையில் என்று தீப்பொறி பறக்கப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கம்பரசம் டோஸ் நெ.1 முதல் 10 வரை

கம்ப நாட்டாழ்வார் எழுதிய இராம காதை ஆபாசங்கள் நிறைந்தது அருவருக்கத்தக்கது என்பதை ஆதாரப்பூவமாக எடுத்துக்காட்ட அண்ணா அவர்கள் கம்பரசம் டோஸ் நெ.1 என்று ஆரம்பித்து எழுதினார். அவர் எழுதிய கம்பரசத்திற்கு இன்று வரை யாரும் மறுப்புக்கூறி பதில் எழுதவில்லை. மாறாக உங்கள் கண்களில் அந்தப் பாடல்கள் மட்டும்தான் தெரிகிறதா வேறு எவ்வளவோ பாடல்கள் கவிநயத்துடன் இருக்கிறதே என்று சப்பைக்கட்டு கட்டும் போக்கும் அண்ணா நோக்கத்தை ஆராயாமல் அருவருக்கத்தக்க வகையில் அவரை இழிவுபடுத்திப் பேசுகிறார்களே தவிர ஆராய்ச்சி மனப்பான்மையோ அல்லது பகுத்தறிவு கண் கொண்டோ கம்பராமாயணத்தை விமர்சிக்க மறுக்கிறார்கள்.

இராவண காவியமும் அண்ணாவும்

இந்நிலையில் 1946ஆம் ஆண்டு புலவர் குழந்தை இராமாயணத்தை மறுத்து இராவண காவியம் என்கின்ற நூலினை எழுதி வெளியிட்டார். அதற்கு ஆராய்சி முன்னுரையினை அறிஞர் அண்ணா எழுதினார். அந்த ஆராய்ச்சி முன்னுரை மிக அருமையான ஒரு தேர்ந்த அறிஞருக்கே உரிய ஆய்வு மனப்பான்மையோடு எழுதப்பட்டதாகும். அதில் இராமனும் இராவணனும் கற்பனை உருவங்கள்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக  வலியுறுத்திக் கூறிய அண்ணா, சுயமரியாதை இயக்கத்தவர்கள் இராவண தாசர்கள் அல்ல என்றும் இராவணனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி பூசாரியாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் எடுத்துக் கூறி, குறிப்பாக  இராமதாசர்களுக்கும் இராவணதாசர்களுக்கும் மறுப்புரை இராவண காவியம் அல்ல, மாறாக  “இராவண காவியம்’’ இராமதாசர்களுக்கு தன்மான தமிழர் தரும் மயக்க நீக்க மருந்து என்பதையும் இருவேறுபட்ட கலாச்சாரங்கள் அதாவது ஆரிய_திராவிடர் என்ற பண்பாடுகள் இருந்ததையும், ஆரியம் எவ்வாறு திராவிடத்தை வீழ்த்தியது என்பது பற்றியும் தனது ஆராய்ச்சி முன்னுரையிலேயே அருமையாகக் கூறியிருப்பார். “இராவண  காவியம்’’ எனும் நூல் பழமைக்குப் பயணச் சீட்டு புதுமைக்கு நுழைவுச் சீட்டு, தன்மான இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள், காவியச் சுவையறியாதார், கலையுணர்வில்லாதார் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம் தமிழ் மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர் நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும் இனப் பற்றும் ஒருங்கமைந்த ஓவியம், தமிழரின் புதுவாழ்வுக்கான போர் முரசு காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம். எனவே, இது அழிந்துபடாது என்று இறுமாந்திருப்போருக்கு ஓர் அறைகூவல், தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு, தமிழரசுக்குக் கால்கோள் விடுதலைக் கீதம்’’ என்று சொல்லியிருக்கிறார்.

நீதிதேவன் மயக்கம்

‘நீதிதேவன் மயக்கம்’ என்ற நாடக நூலில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்ட இராவணன் கேட்கும் கேள்விக்கு நீதிபதி பதில் சொல்ல முடியாமல் திணறி மயக்கம் அடைவது இன்றைக்குப்  படித்துப் பார்த்தாலும் மிகச் சிறந்த ஒரு வாதமாக இருக்கும். இப்படி அண்ணாவின் இராமாயண எதிர்ப்பு போரினை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இன்றைக்கு இராமன் என்கின்ற கடவுள் பாத்திரம் கலவரத்தைத் தூண்டும் ஓர் ஆயுதமாக மாறியிருப்பதற்கு மாற்றாக அறிஞர் அண்ணாவின் அறிவாயுதமான ‘கம்பரசம்’, ‘தீ பரவட்டும்’, ‘நீதிதேவன் மயக்கம்’ போன்ற அறிவு ஆயுதங்களை எடுத்துப் போராடும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம், 1934-ஆம் ஆண்டு தொடங்கி அண்ணா அவர்கள் மறைகின்ற வரை 35 -ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகள் 1680 ஆகும். அதில் அரசியல் தவிர்த்த கட்டுரைகளை விட்டு இலக்கியம் பேசும்  அறிஞர் அண்ணாவின் கட்டுரைகளில் இராமாயண எதிர்ப்பும் சனாதன எதிர்ப்பும் பழமைவாத எதிர்ப்பும் அதிகமாக இருக்கிறது. இவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்தி அண்ணாவிற்கு நன்றி கடன் செலுத்தப் போகிறோம் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.   


 


- வழக்கறிஞர் சு. குமாரதேவன்

- உண்மை இதழ், 1-15.9.18