பக்கங்கள்

சனி, 15 ஏப்ரல், 2017

இராமனுக்கு சீதை தங்கை  இராவணனுக்கு சீதை மகள் இராமனுக்கு பல பெண்டாட்டிகள்

03.03.1929 - குடிஅரசிலிருந்து...

இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமா யணம் என்னும் பெயரால் பல நூற்றுக் கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்த தாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டனவென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததா அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமா யண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப் பட்டு 1928-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப் படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புதகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புகத்தின் விலை ரூ.1) அவையாவன :- ஜைன ராமா யணம், பவுத்த ராமாயணம், யவன ராமா யணம், கிறைஸ்தராமாயணம் என்பவை களாகும்.

இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ் தராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாய ணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர் களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப் பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலிய வைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயி, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்த தாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்த தாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதுபோலவே சீதையை ஜனகராஜ்னுடைய மகள் என்றும், வில்லை வளைப்ப வனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சுமணனுக்கு 18 பெண் சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனக னுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப் பட்டா ளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டி ருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர்! சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

பவுத்த ராமாயணத்திலும், தசரதராஜ னுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சு மணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக் கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமயனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமானபின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவ ளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப் பட்டிருக்கின்றது.

இவைகளை மெய்ப்பிக்க திரு. அய் யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10-வது மண்டலத்தில் 10,12 -சுலோகங்களில் சகோ தரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின் தென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதார மாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதி யிருக்கின்றார். திரு.சி.ஆர்.சீனிவா சய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனக னுக்குத் தானம் கொடுத்தார் என்றும் அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜன கனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லையென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் கண் டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்தி ருந்ததாகவும் அந்தச் சாபத்தின் பலனாய் ராவணன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவண னுக்கு உண்மையில் ராமன் தன்தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்தி ருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கத்திலேயே குறிப்பிட் டிருக்கின்றார்.

மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டு போய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண் டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாக வும், ராமனும் சீதையும் வனத்திலிருக்கும் போது ராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்ட தாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல் லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார். எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 - ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என் பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக் கின்றன. இன்னமும் மற்ற ராமா யணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்கு மென்பது ஊகிக்கக் கூடவில்லை.

-விடுதலை,15.4.17

வெள்ளி, 31 மார்ச், 2017

இராமாயண முக்கிய பாத்திரங்களின் யோக்கியதை


18.12.1943 - குடிஅரசிலிருந்து...

இராமாயணம் என்னும் கதையில் முக்கிய பாத்திரங் களாக விளங்கும் தசரதன், இராமன், சீதை, லட்சுமணன் முதலியவர்களின் யோக்கியதையை சற்று ஆராய்வோம்.

இராமாயணத்தில், யாகத்துக்கு அடுத்தாற்போல் தசரதன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யும் சேதி குறிப்பிடத்தக்கதாகும். இதில் தசரதன், அவனுடைய பிள்ளைகள், மனைவிமார்கள், மந்திரி, குரு முதலானவர் களுடைய தன்மைகள் இன்னவை என நன்கு விளங்கும்.

தசரதன்

1. தசரதன் கைகேயியை மணக்கும்போதே, கைகேயியின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே அயோத்தியைக் கொடுக்கிறேன் என்பதாக வாக்குக் கொடுத்து இருக்கிறான். மற்றும் கதை வாசகப்படி பார்த்தால், தசரதன் தனது விவாகத்தின் போதே கைகேயி வசம் நாட்டை ஒப்புவித்து விட்டு, கைகேயிக்கு ஆக கைகேயிக்குப் பிரதிநிதியாய் இருந்து நாட்டை ஆண்டு வந்தானெனவே தெரிகிறது.

2. அதாவது, கைகேயிக்கு தசரதன் அயோத்தியை சுல்கமாகக் கொடுத்துவிட்டான் என்று மூலத்தில் இருக்கிறது.

3. இந்த சங்கதி இராமனுக்கும் கோசலைக்கும் தெரியும். என்றைக்கு பரதன், அவன் மாமன் வீட்டுக்குப் போனானோ அன்று முதல் உன் பட்டாபிஷேகத்துக்குத் தக்க காலம் என்பது எனது கருத்து என்று, இராமனிடம் வெளிப்படையாய் தசரதன் சொல்லுகிறான். பரதனை நாடு பெறச் செய்யாமல் ஏமாற்றுவதற்கு ஆகவே, அவனை அவனது பாட்டனார் வீட்டில் தசரதன் பத்து வருஷ காலம் விட்டு வைக்கிறான்.

4. திடீரென்று ஒரு நாள் நினைத்துக்கொண்டு, குடிகளுக்குச் சமாதானம் சொல்லி, அடுத்த நாளே இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்கிறான்.

5. இந்தத் துரோகமான காரியத்துக்கு, மந்திரிகளும், வசிட்டன் முதலிய குருமார்களும், இராமனும் சம்மதிக் கிறார்கள்.

6. கோசலையும் இராமனுக்குப் பட்டம் கிடைக்கச் சதா தபசு செய்கிறாள்.

7. பரதனுக்கும், சத்துருக்கனுக்கும், ஜனகனுக்கும், கேகய மன்னனுக்கும், கைகேயிக்கும் தெரிவிக்காமலும், இவர்களுக்கு அழைப்புக்கூட அனுப்பாமலும், இவ்வளவு முக்கியமான முடிசூட்டை அவசர அவசரமாக நடத்த ஏற்பாடு செய்கிறான்.

8. இராமனிடம் தனிமையில் பேசும்போது, பட்டாபிஷேகம் நடைபெறாமல் தடை செய்யவேண்டிய அவசியம் பரதனுக்கு இருந்தாலும், அது முடிந்துவிடுமாயின், பிறகு பரதன் வந்தாலும் தகராறு செய்யாமல் அதற்குச் சம்மதித்து சும்மா இருந்து விடுவான். ஏனெனில், பரதன் சாது, நல்லவன், நடந்துவிட்ட காரியத்தை ஒத்துக் கொள்ளுவது உயர்ந்த குணம் படைத்தவர்களின் கடமை. ஆதலால் சீக்கிரம் முடியவேண்டும் என்கிறான்.

9. இந்தப் பட்டாபிஷேகச் சேதியறிந்து, கைகேயி, இராஜ்யத்தைத் தன் மகன் பரதனுக்கு முடி சூட்ட வேண்டுமென்றும் அந்த முடி பரதனுக்கு நிலைக்கச் செய்ய இராமன் காட்டுக்குப் போக வேண்டுமென்றும் சொல்லும் போது, கைகேயியை ஏமாற்ற தசரதன் அவள் காலில் விழுந்து கெஞ்சுகிறான்.

10. எவ்வளவோ ஏற்பாட்டுடன் செய்த காரியத்தைக் கெடுத்துவிட்டாயே என்கிறான். ஆனால், நாடு மூத்த மகனாகிய இராமனுக்குத் தானே உரிமை என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லவே இல்லை. தசரதனுக்குக் கைகேயி இணங்காமல் போன பின்பு தசரதன் இராமனை அழைத்து, இராமா, நான் புத்தி சுவாதீனம் இல்லாத சமயத்தில் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதாக ஒப்புக் கொண்டுவிட்டேன்; என்றாலும் நீ அதற்குக் கட்டுப்பட வேண்டியதில்லை.... என்னைப் பட்டத்திலிருந்து தள்ளி விட்டு நீ இராஜ்யத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்து கொண்டு இரு என்று துர்யோசனை சொல்லிக் கொடுக்கிறான்.

11. இவையெல்லாம் பயன்படாமல் போகவே, தசரதன் சுமந்திரனை அழைத்து,இராமனுடன் நாட்டிலுள்ள பொக்கிஷம், தானியக் களஞ்சியம், குடிகள், படைகள், வியாபாரிகள், வேசையர்கள் ஆகிய எல்லாவற்றையும் காட்டிற்கு அனுப்பிக் கொடுத்துவிடு என்கிறான்.

12. இதைக் கைகேயி ஆட்சேபித்தவுடன் தசரதன், நீ, நாடுதான் கேட்டாயே ஒழிய இவைகளை எல்லாம் சேர்த்துக் கொடு என்று கேட்கவில்லையே என்று அடாவழக்குப் பேசுகிறான்.

13. பிறகு பொக்கிஷத்தில் உள்ள நகைகளையெல்லாம் வாரி சீதைக்குக் கொடுத்து விடுகிறான்.

14. தனது மற்றொரு மகன் இலட்சுமணன் காட்டுக்குப் போவதைப் பற்றித் தசரதன் துக்கப்படவில்லை

-விடுதலை,31.3.17

வெள்ளி, 27 ஜனவரி, 2017

இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும் போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்கு மணனை விட்டு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின் றான். அவனையும் கொன்று விடுகிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்த பிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்
-விடுதலை,16.5.14

புதன், 28 டிசம்பர், 2016

ராமன் தின்ன மாமிசம் எது?

இறைச்சி உணவுகளில் மேத்யம் (பவித்திரமானது) அமேத்யம் (பவித் திரமில்லாதது) என்று வகைகள் இருந் தன. ஆடு, காட்டுப் பன்றி இவற்றின் இறைச்சிகள் பவித்திரமானவை மான் இறைச்சியும் பிரியமான உணவாக இருந்தது. வனவாச காலத்தில் முதல் நாள் யமுனா நதிக்கரையில் பன்றி, ருஷ்யம், ப்ருஷத், மஹாருரு போன்ற விலங்குகளை ராமன் வேட்டையாடி னான். பல மான்களையும் வேட்டையாடி உணவுக்குக் கொண்டு வந்தான். பஞ்சவடியில் கபட சங்கியாசியாக மாறு வேஷம் பூண்டு ராவணன் வந்தபோது, 'நீங்கள் கொஞ்சநேரம் தங்கியிருங்கள் என் கணவர் பல விலங்குகளை வேட் டையாடிக் கொண்டு வருவார்.நல்ல விருந்து உணவாக படைக்கிறேன்" என்று சீதாதேவி வேண்டிக்கொண்டாள்.

அய்ந்து நகங்களுள்ள பிராணிகளில் உடும்பு, முள்ளம் பன்றி, முயல், ஆமை, ச்வாலிதமிருகம், (நாயை வேட்டையாடிப் புசிக்கும் விலங்கு) இந்த அய்ந்தையும் பிராமணரும், ஷத்திரியரும் புசிக்கத் தக்க உணவாகக் கொண்டிருந்தார்கள். குரங்கு இறைச்சியை மேலானவர் புசிக்க மாட்டார்கள். கிராதர்கள் (செம்படவ இனத்தார்) பச்சையாகவே மீனைப் புசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். பம்பைப் பொய்கையில் ரோஹிதம் சக்ரதுண்டம், நலமீனம் ஆகிய பெரிய முள் மீன்கள் நிறையக் கிடைத்தன. “அவை நல்ல ருசி யானவை, அவைகளை வேக வைத்துச்   சாப்பிடுங்கள்” என்று ராமனுக்கு கபந்தன் சிபாரிசு செய்தான்.
பரதன் தின்ன கருவாடு

மனித மாமிசத்தைப் புசிக்கும் வழக்கம் அரக்கர்களிடம் நிலவி வந்தது. உணவைச் சேகரம் செய்து வைக்க வேண்டி, இறைச்சி வகைகளைக் காய வைத்துப் பதப்படுத்தி வைப்பது அந்தக் காலத்தவரின் வழக்கம். புதிய இறைச் சியையும் காயவைத்த இறைச்சியையும் விருந்து உணவாக பரதனுக்குக் குகன் வட்டித்தான்.

- திரு. சவுரி எழுதிய 
"இந்தியாவின் கலையும் கலாசாரமும்" 
என்ற நூலின் பக்கம் 106-107
-விடுதலை ஞா.ம.,17.12.16

செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஜெய் ஸ்ரீராம்... முழங்குவோரே... ஸ்ரீராமன்... யார்?

,இரா.கண்ணிமை

உருவமும் பருவமும் கொண்ட கணிகையர் சென்று - முற்றும் துறந்த முனிபுங்கவரை அழைத்து வருகின்றனர் - யாகம் நடந்திட. தசரதனுக்குப் பிள்ளையில்லாக் குறையைப் போக்கி, புத்திரன் வேண்டுமென்றால் ரிஷ்ய சிருங்கரை (கலைக்கோட்டு முனிவன்) அழைத்து வந்து யாகஞ் செய்ய வேண்டுமென்று, சுமித்திரன் யோசனை கூறுகிறான்.

“யாகம்“ வெற்றிகரமாக முடிய ரிஷ்யசிருங்கரைக் காட்டிலிருந்து அழைக்க வேண்டாம். அதற்கு உத்தி என்னவென்றால் “தாங்கள் ரூபவதிகளான வேசை யர்களுக்கு வஸ்திரங்கள் - ஆபரணங்கள், வெகுமானம் கொடுத்து அனுப்புங்கள். அவர்கள் எல்லா விதத்தாலும் அந்த ரிஷியை அழைத்து வருவார்கள்” - என்று சுமித்திரன் சொல்லுகிறான்.
- இது வால்மீகி இராமாயணம் பாலகாண்டம் 10ஆம் சருக்கம், 35 ஆம் பக்கம். சி.ஆர்.சீனுவாசய்யங்கார் மொழி பெயர்ப்பில் உள்ளது.

“வேசையர்கள் காடு சென்று அவரை (ரிஷ்ய சிருங்கரை) இறுகத் தழுவினார்கள். ரிஷ்யசிருங்கர் மயங்கி அவர்கள் பின்வர அங்கதேசத்திற்குச் சென்ற னர்” - இதுவும் பாலகாண்டத்தில்.
அதே வால்மீகி இராமாயணம், தாத்தா தேசிகாச் சாரியர் மொழி பெயர்ப்பில் பாலகாண்டம் 10ஆவது சருக்கம், 36, 37 ஆம் பக்கத்தில் கீழ்க்காணும் விவரங்கள் காணப்படுகின்றன.
“நல்ல ரூபமும் பருவமும் உள்ள கணிகையர் மிக்க அலங்காரத்தோடு அங்கே செல்ல வேண்டும். சென்று பல வகையில் அவருக்கு ஆசை கொடுத்து அவரைச் சுவாதீனம் செய்ய வேண்டும்“ என்று சொல்லி அரசனுடைய அங்கீகாரத்தினால் புரோகிதர் முதலானோர் தக்க வேசியரை அலங்காரத்தோடு அங்கு அனுப்பினார்கள்.

கணிகையர் ரிஷ்யசிருங்கரை ஆலிங்கனம் செய்து கொண்டு சந்தோச மூட்டினர். அப்பெண்களை பிரிய ஆற்றவொட்டாமல் மனதில் குறையைக் கொண்டு, பைத்தியக்காரன் போல் அங்கு மிங்கும் திரிந்தார். மறுநாள் மகாசுந்தரிகளான அவர்களைக் கண்ட இடத்துக்கு (ரிஷ்ய சிருங்கர்) வந்து நிற்க, வேசிமாரும் அவர் சுவாதீனப்பட்டதினால் அழைத்துச் சென்றனர். இப்படி விரிகிறது இராமகாதை.

இராமன் கடவுள் அவதாரமென்றும், விஷ்ணு மனிதனாகப் பிறந்து மக்களுக்கு நல்லொழுக்கத்தை எடுத்துக் காட்டியதாகவும், பார்ப்பனரும், அவர்களின் அடிதொழும் பக்கதர்களும் கூறிவருகின்ற கீழ்வரும் குறிப்புகளால் நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

தசரதனுக்கு நான்கு மனைவிகள், அவர்கள் சூலான முறை: (வால்மீகி இராமாயணம், சி.ஆர்.சீனிவாச அய்யங்கார் மொழிபெர்யப்பு).

“தசரதனுக்கு புத்திர சந்தான முண்டாக செய்யப்படும் அஸ்வமேத யாகத்தில் 

1) ப்ரஹ்மா, 2) ஹோதா, 3) அத்வர்யு, 4) உத்காதா என்ற பிரதான (நான்கு) ரித்விக்குகள் அரசனால் தட்ச ணையாகக் கொடுக்கப்பட்ட 1) மஹிஷி 2) வர்வாதை, 3) பலாகலி, 4) பிரிவிருத்தி என்ற (நான்கு) ராஜபத்தினிகளின் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் சூலாக்கி அதற்காக தசரதனிடம் அளவற்ற திரவியத்தை வாங்கிக்கொண்டு அவர்களை தசரதனிடத்தில் மீண்டும் கொடுத்து விட்டார்கள்”.
- பாலகாண்டம், சருக்கம் 14, பக்கம் 46-47

இதில் அஸ்வமேதயாகம் என்று சொல்லப்பட்டிருக் கிறதே. இந்த அஸ்வமேதயாகத்தின் அருவருப்பை என்னவென்று சொல்வது? சுருங்கச் சொன்னால் அஸ்வம் = குதிரை, மேதம் = சேர்க்கை. அதாவது குதிரையுடன் சேர்தல் என்று பொருள்.

அஸ்வமேத யாகத்தில், யாக பசுவாகிய குதிரையை எசமான் மனைவியாகிய மஹிஷியோடு இயற்கைக்கு மாறான வகையில் புணர்ச்சி செய்ய விடுதலாம்.  இதைப்போன்ற மற்ற பௌண்டரீகம் முதலிய கீழான பல யாகங்கள் வேதத்தில் இருக்கிறது. இவ்வித பல யாகங்களை தேவர்களும், ரிஷிகளும், மனிதர்களும் செய்து முடித்தாலன்றி வேறு வகையில் முக்தி பதவியடைய முடியாதாம்.

புலால் தின்போரை சூத்திரர், தீண்டாதார் என்று சொல்லும் கள்ளக்குருக்கள். மறைமுகமாய் விருந்தி னருக்கு பசு, எருது மாமிசத்தை நெய்யில் பொரித்துத் தேனிட்டு புசிக்கக் கொடுப்பதும், யாகப்பலிகளில் கொன்ற உயிர்களின் இறைச்சியை பங்குபோட்டு உண்பதும் இவர்களின் கதை.

“கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஓர் நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய ரித்விக்குகள் இராஜ பாரியைகளைப் புணர்ந்தார்கள்” - இவ்வாறு பண்டித மன்மத நாத சித்தர் - மொழி பெயர்த்து எழுதியுள்ளார்.

அயோத்தி அரசன் தசரதன் மூன்று பெண்களைத் திருமணம் செய்தும் கூட அவனுக்கு ஆண்மை பலம் இல்லாத காரணத்தால் மூன்று பட்ட மகஷிகளையும் உட்கார வைத்து, புத்திரகா மேஷ்டியாகம் செய்து, யாக பிண்டத்தை மூன்று பேருக்கும் சாப்பிடக் கொடுத்து, அன்று இரவு யாகப் பிராமணர்களோடும், யாகக்குதிரைகளோடும் மூன்று அரசிகளும் படுத்தி ருந்து - அதன் மூலம் கருத்தரித்துத்தான் ராமன், லட்சுமணன்  சகோதரர்கள் என நான்கு பேரையும் பெற்றெடுத்தார்கள் என்பது உங்களின் வால்மீகி இராமாயணத்தின் கதை.
இராமன் கதை என்பது வரலாறோ, நடந்த உண்மையோ அல்ல; முற்றிலும் கற்பனையான - விக்கிரமாதித்தன் கதை போல இதுவும் ஒன்று ஆகும். இந்த உண்மையை அறிஞர்கள் பலர் சொல்லிப் போயிருக்கிறார்கள்.

இது கதை தான் என்பதற்கு மேலும் பெரிய ஆதாரம், அதை நம்புகிறவர்களே அதற்கு வைத்திருக்கும் பெயர் “இதிஹாசம்“ - என்பது தான். இதிகாசம் என்றாலே பழங்கதை, நீண்ட நெடுங்காலக்கதை” - என்பது தான் என்று அவர்களே சொல்லுகிறார்கள்.

எனவே இதிகாசக் கதையான ராமன் கதை வர லாறோ, நடந்தேறிய உண்மையோ அல்ல என்பதுதான் அப்பட்டமான உண்மை!

“எங்களின் ஒரே மதம் இந்து - இதிகாசம் இராமாயணம் - ஜெய் சிறீராம் - எங்களின் கோஷம்! - எனச்சொல்லுபவர்களை எல்லாம் இந்திய மக்கள் ஒரு மனதாக ஏற்பது என்றால் - உலக மக்கள் இந்தியர்களை ஆறறிவு படைத்த மனிதர்களாக மதிக்க மாட்டார்கள். அய்ந்தறிவு கால்நடைகளாகவே நினைப்பார்கள்.

ஆபாசக் களஞ்சியமான கடவுள் கதையின் இலட்சணம் இது.

பார்ப்பனர்களே - பக்தர்களே இதை எழுதியது குற்ற மல்ல - எடுத்துச் சொன்னால் மட்டும் புண்படு கிறதோ?

-விடுதலை,25.10.16