முகப்புக் கட்டுரை:
மஞ்சை வசந்தன்
இராமாயணம் பற்றியும், இராமன் பற்றியும் தந்தை பெரியார் அவர்கள் நிறைய ஆய்வுகளைச் செய்து, இராமாயணம் மக்களுக்கு உகந்த நூல் அல்ல, நீதிநூலும் அல்ல. இராமன் ஒழுக்கம் உடையவன் அல்ல; நீதிநெறியில் நின்றவனும் அல்ல என்று ஏராளமான ஆதாரங்களோடு நூறாண்டுகளுக்கு முன்பே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்.
அதனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இராமன், இராமாயணம் இரண்டும் செல்லுபடியாகாத சரக்குகள் ஆயின. ஆனால், வடமாநிலங்களில் இராமன் கடவுளாக வணங்கப்பட்டான். தொலைகாட்சியில் இராமாயணம் ஒளிபரப்பப்பட்டபின் இராம பக்தி வட மாநிலங்களில் பன்மடங்கு பெருகியது. இராமனுக்குக் கோயில் கட்ட ஆர்வம் காட்டினர். இராமனை முதலீடாக வைத்து பி.ஜே.பி. ஆட்சியையே பிடித்தது.
ஆனால், தற்போது அந்த வடமாநிலங்களில் பெரியார் பேரலை வீசத் தொடங்கிவிட்டது. அன்றைக்குப் பெரியார் எழுப்பிய கேள்விகளை இன்று வடமாநில அமைச்சர்களே எழுப்பி மக்கள் மத்தியில், விழிப்பை, எழுச்சியை உருவாக்கியுள்ளனர்.
பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகரின் ராமாயணம்குறித்த பேச்சு:
சில நாள்களுக்கு முன்னர், பீகார் மாநிலக் கல்வி அமைச்சரான சந்திரசேகர், ‘ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ராம்சரித்மானஸ் சமுதாயத்தில் வெறுப்புணர்வைப் பரப்புகிறது’’ என்று பேசியிருந்தார். அவர் தொடர்ந்து “16-ஆம் நூற்றாண்டில் ராமாயணத்தைத் தழுவி அவதி மொழியில் துளசிதாசர் எழுதிய இந்நூல் மக்களிடையே வெறுப்பையும் பிரிவினையுணர்வையும் விதைப்பதாக உள்ளது’’ என்றும் கூறினார்.
அமைச்சர் சந்திரசேகரின் கருத்து, மாநில பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சந்திரசேகரை எதிர்த்து பாஜகவினர் கோஷங்கள் எழுப்பி, கொடும்பாவி எரிப்பு நடத்தி, சந்திரசேகர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அவர், “இந்து மதப் புனித நூல்கள் அனைத்தும் அபத்தங்கள்தாம். வெறுப்பையும் பிரிவினையையும் உண்டாக்குகிற கூற்றுகளையுடைய இந்த நூலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டியது பாஜகதான், நான் அல்ல’’ என்று அவர்களுக்குப் பதில் கூறியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியைத் தொடர்ந்து,
‘ராம்சரித்மானஸ்’ நூலைக் தடை செய்ய சமாஜ்வாதி கட்சித் தலைவர் கோரிக்கை
சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) சுவாமி பிரசாத் மவுர்யா, “மத நூலான ‘ராம்சரித்மானஸ்’ அர்த்தமில்லாத அபத்தங்கள் நிறைந்ததாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் ராம்சரித்-மானஸைப் படிப்பது இல்லை. அது முழுவதும் குப்பை தான்’’ என்று கூறியுள்ளது உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்,“ஆட்சேபணைக்குரிய பகுதிகளை ராம்சரித்மானஸ் நூலில் இருந்து அரசு நீக்க வேண்டும் அல்லது அந்த நூலையே தடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட மத நூலானது சூத்திரர்களை கீழ்ஜாதி என்கின்றது. துளசிதாசர் அந்த நூலை தற்புகழ்ச்சிக்காகவும் உல்லாசத்திற்காகவும் தான் எழுதினார் என்றும்,மதம் எதுவானாலும் அதை நாம் மதிக்கிறோம். ஆனால் (ராம்சரித்மானசில்) ஒரு மதத்தின் பெயரால் ஒரு குறிப்பிட்ட ஜாதி மற்றும் வகுப்பினரை அவமதிப்பது நடந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஜாதியைக் குறிப்பிட்டு அவதூறு செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் அதை ஆட்சேபிக்கிறோம். துளசிதாசரின் ராம்சரித்மானசில் ஆட்சேபிக்கப்படுகிற சில பகுதிகள் உள்ளன. எந்த மதத்தைச் சேர்ந்த எவரையும் அவதூறு செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. துளசி பாபாவின் ராமாயணத்தில் சூத்திரர்கள் கீழ்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாடுகள் சான்றளிக்கின்றன’’ என்றும் கூறினார்.இவர்கள் இருவரும் கூறியவை மிகக் குறைவு. இராமனின் இழிவுகள் ஏராளம் ஏராளம். சான்றாகச் சில:
வாலியை மறைந்து நின்று கொன்ற இராமன்
அரசனாகிய வாலி செய்த குற்றங்கள் என்று சிலவற்றை அனுமன் சொன்னதைக் கேட்டவுடன் இராமன் என்ன செய்திருக்க வேண்டும்? “நன்று அனும! வாலியைப் பற்றி நீ சொன்ன குற்றச் செயல்கள் குறித்து நானே வாலியை நேரில் கண்டு பேசுவேன்; அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்டு அறிந்தபின் குற்றம் எவர் பக்கம் என்பதை முடிவு செய்து அறத்தை நிலை நாட்டுவேன்’’ என்று இராமன் கூறியிருக்க வேண்டுமல்லவா? அல்லது “வாலியிடம் தம்பி இலக்குவனைத் தூதாக அனுப்பி வாலியின் பதில் அறிந்து வரச் செய்வேன்’’ என்றாவது சொல்லியிருக்க வேண்டும்? அவ்வாறு செய்திருந்தால் இராமனை அறத்தின் நாயகன் என்று கூறுவதில் பொருளுண்டு.
தன் மனைவியைக் கள்ளமாகக் கவர்ந்து சென்று சிறை வைத்த இராவணனிடமே அங்கதனைத் தூதாக அனுப்பி அந்த இராவணன் கருத்தை அறிந்து வருமாறு ஏவிய இராமனுக்குக் கிட்கிந்தை மன்னன் வாலிக்கும் தூது அனுப்பி அவன் கருத்தையும் அறிந்த பின்னரே ஒரு முடிவுக்கு வராமல் போனது சரியா? ஒரு தரப்பு செய்தியைக் கேட்டு செயல்பட்டதுதான் அறமா?
குற்றங்களின் கொள்கலம் இராமன்
அயோத்தியில் தம்பி பரதனுக்குரிய அரசை அவன் அறியாமல் தந்தை தசரதன் துணையுடன் கைப்பற்றிக் கொள்ளத் திட்டமிட்டவன் தான் இந்த இராமன். துணையின்றித் தனியே தன் எதிரில் வந்த தாடகை என்ற பெண்ணரசியை நாணேற்றிக் கொன்றவன் இந்த இராமன். தனித்து நின்ற இராவணன் தங்கை சூர்ப்பநகையிடம் முறை கேடாக நடந்து கொண்டதுடன் தம்பி இலக்குவனை ஏவி அந்தப் பெண்ணின் உறுப்புகளை அறுக்கச் செய்தவன் இந்த இராமன்.
இராமனின் சுயநலம்
வாலியைக் கொன்று சுக்ரீவனைக் கிட்கிந்தை அரசனாக்கினால் மட்டுமே வானரப் படையின் துணை கிடைக்கும்; அந்தப் படையின் துணையுடன் இராவணனை எதிர்த்துப் போரிட்டுச் சீதையை மீட்க முடியும் என்று தன்னலத்துடன் திட்டமிட்டுச் செயல்பட்ட இராமன் நேர்மையும், ஆன்றோர் போற்றும் அறப் பண்பும் இல்லாதவன்.வாலி, சுக்ரீவன் ஆகிய இருவருள் குற்றம் யார் பக்கம் இருந்தால் என்ன? எனக்கு என் மனைவி சீதை வேண்டும்; அவளை மீட்பதற்காக எவனையும் கொல்லத் தயார்… நியாயமாவது… அநியாயமாவது! என்று செயல்பட்ட இராமன் நீதிமானா?
ஈரேழு பதினான்கு உலகங்களும் வாலிக்கு உதவியாக வந்தாலும் என்னுடைய வில்லில் நாணேற்றி அவனை வீழ்த்துவேன் என்று கூறிய இராமன், களத்தில் வாலியின் எதிரே செல்லாமல் மரத்தின் பின்னே மறைந்து நின்று அம்பு தொடுத்து மாவீரன் வாலியை வீழ்த்தியது ஏன்? அது வீரமா? தர்மமா? மோசடியல்லவா?
‘‘காரணம் ஏதும் இல்லாமல் என்னைக் கொல்ல நீ முயன்றது சரி என்றால், இலங்கை வேந்தன் சீதையைக் கவர்ந்து சென்றது தவறு என்று நீ எப்படிச் சொல்ல முடியும்?
இருவர் போர் செய்யும் போது, அந்த இருவரில் ஒருவனுக்காக இள்னொருவன்மீது அம்பு தொடுத்தல் அறமோ?
நீ வாலியை வீழ்த்தவில்லை; மன்னவர்கள் போற்ற வேண்டிய அறம் ஆகிய வேலியை வீழ்த்திவிட்டாய்.
நேராக வராமல் மறைந்து நின்று நிராயுதபாணியாக நின்ற என்மீது அன்பு எய்தனையே! அது நீதியோ?’’
இவ்வாறெல்லாம் இராமனைப் பார்த்து வாலி கேட்டான். எல்லாம் கேட்டு முடித்தபின்னர், இராமன் வாலிக்குச் சொன்ன பதில் என்ன?
“நீ உன் தம்பியைக் கொல்ல முயன்றாய்; தம்பி மனைவி உருமையைக் கவர்ந்து கொண்டாய்; அது மட்டுமல்ல; சுக்ரீவன் எனக்கு ஆருயிர் நண்பன்; அதனால் உன்னைக் கொல்லத் துணிந்தேன்’’ என்றான் இராமன்.
இராமனின் பித்தலாட்டம்!
இராமன் வாலியின்மீது அம்பு தொடுப்பதற்கு ஆயத்தமாக நின்றபோது இலக்குவன் சொன்னான்: “அண்ணனைக் கொல்வதற்காகத் தம்பி உன்னை அழைத்து வந்திருக்கிறான்; அந்தத் தம்பியின் அழைப்பை ஏற்று அண்ணன் மேல் அம்பு தொடுப்பது அறமோ?’’ என்று கேட்ட இலக்குவனுக்கு இராமன் சொன்னபதில் என்ன?
‘‘வாலியும் சுக்ரீவனும் அறிவில்லாத விலங்குகள் _ குரங்குகள்! அவர்களுக்குள் அண்ணனாவது தம்பியாவது _ அறமாவது! இவ்வாறு, வாலியை விலங்கு _ மிருகம் _ குரங்கு என்று பேசிய இராமன், வாலியிடம் தம்பியின் மனைவியைத் தாரமாக்கிக் கொள்ளலாமா?’’ என்று கேட்டான்.
இப்படிக் கேட்டபோது, வாலியைக் குரங்கு என்று ஏன் ராமன் நினைக்கவில்லை! நினைக்காதது மட்டுமல்ல, வாலியே, ‘குரங்காகிய என்னிடம் மனித ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாமா?’ என்று இராமனைக் கேட்ட போது, நல்ல நெறிகளையெல்லாம் அறிந்தவனாக நீ இருத்தலால் நீ விலங்கு அல்ல என்று அறிந்தேன். அதனால் உன்மீது அம்பு தொடுத்தேன் என்றான் இராமன்! இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசிய முரண்பாட்டின் மொத்த வடிவம்தான் இராமன்.
கடைசியாக வாலி இராமனை நோக்கி ஒரு கேள்வி கேட்டான்: “மறைந்து நின்று ஏன் அம்பு தொடுத்தாய்?’’ என்பது அக்கேள்வி. பதில் சொல்ல வேண்டிய இராமன் பதில் சொல்லாமல் நின்றதால் அருகில் நின்ற இலக்குவன் சொன்னான்:
“உனக்கு முன்பாக உன் தம்பி வந்து சரண் புகுந்தான். உன்னைக் கொல்வதாக அவனுக்கு அண்ணன் வாக்களித்துவிட்டான். அதன் பிறகு, உன்னைக் கொல்வதற்காக அண்ணன் இராமன் நேரில் வந்தால், நீயும் உயிருக்குப் பயந்து அண்ணனிடம் அடைக்கலம் கேட்டால், உன் தம்பி சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாதே என்பதற்காகவே அண்ணன் இராமன் மறைந்து நின்று அம்பு தொடுத்தான்’’ என்று இலக்குவன் சொன்னான்.
‘அண்ணன் செய்தது அறம் அல்ல’ என்பதை இலக்குவன் அறிந்திருந்தாலும் அண்ணனை விட்டுக்கொடுக்க முடியாமல் இலக்குவன் முட்டுக் கொடுத்தான். இது ஏற்புடைய காரணம் அல்ல.
சம்பூகனைக் கொன்றது ஏன்?
அவன் சூத்திரன்; சூத்திரன் வேதம் ஓதக் கூடாது வேள்வி இயற்றக் கூடாது; தவம் செய்யக்கூடாது என்ற சாத்திர விதிகளை மீறி அவன் தவம் செய்தான். அந்தச் சம்பூகனைக் கொல்ல அதுவே காரணம் எனச் சொல்லப்படுகிறது.
5000 வயதுள்ள இறந்துபோன தன் குழந்தையுடன் பார்ப்பனன் ஒருவன்; இராமன் அவனுடைய கடமையில் தவறியிருக்க வேண்டும்; இராமன் அல்லது ஏதோ பாவம் செய்திருக்கவேண்டும். அதனால்தான் 100,000 ஆண்டுகள் வாழவேண்டிய தன்னுடைய குழந்தை இளம் வயதிலேயே_ 5000 வயதிலேயே இறந்துவிட்டது என்று அந்தப் பார்ப்பனன் இராமனைக் குற்றம்சாட்டுகிறான்.
அதனைக் கேட்டு மனம் குழம்பிய இராமன், அருகிலிருந்த ரிஷிகளிடம் அதுபற்றிக் கேட்கிறான். பொய்யைச் சொல்வதிலும், பரப்புவதிலும் முதலிடம் பெற்றவர்களான தேவரிஷி நாரதரும், பிரம்மரிஷி அகஸ்தியரும் இராமனிடம் சொன்னார்கள்:
“விந்திய மலைச்சாரலில் சம்பூகன் என்ற ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருக்கிறான். அது, மன்னிக்க முடியாததும், மரண தண்டனைக்கு உரியதும் ஆகிய பாவச் செயல் ஆகும்.’’ இவ்வாறு ரிஷிகள் சொன்னதைக் கேட்ட இராமன், அறிவில்லாதவனாக, ரிஷிகள் சொன்னதை அப்படியே நம்பினான். புஷ்பக விமானத்தை வரவழைத்து சம்பூகன் இருக்குமிடம் சென்றான்; சம்பூகன் தலையைத் துண்டித்தான்; பார்ப்பனரைப் பாதுகாப்பதாகிய தர்மத்தை வெற்றிகரமாக முடித்தான்! செத்துப்போன பார்ப்பனப் பிள்ளை பிழைத்துக்கொண்டது.’’
இந்தக் கதை வால்மீகி இராமாயணம், உத்தரகாண்டத்தின் 73ஆவது சருக்கத்தில் சொல்லப்படுகிறது.
சூத்திரன் தவம் செய்யக்கூடாது; அது மாபெரும் குற்றம்; மரண தண்டனைக்குரிய குற்றம். சூத்திரன் ஒருவன் தவம் செய்ததால் பார்ப்பனச் சிறுவன் ஒருவன் செத்தான்; சூத்திரன் தலை துண்டிக்கப்பட்டவுடன் செத்துப்போன பார்ப்பனச் சிறுவன் பிழைத்துக் கொண்டானாம்! பார்ப்பனர் நலனைப் பேணுவதற்காக இராமன் சூத்திரர்களைக் கொலை செய்யத் தயங்கமாட்டான் என்பதை இக்கதை தெளிவாகக் காட்டுகிறது.
“திருமால், சிவன், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளை விடவும், அய்ம்பெரும் பூதங்களை விடவும், சத்தியத்தை விடவும் பார்ப்பனர் பெரியவர்கள்; அதனால் மனதார அவர்களைப் பேண வேண்டும்’’ -இராமன் எண்ணினான்.
இராமன் மட்டுமல்ல; அவனது குலமே பார்ப்பன தர்மத்தைப் பாதுகாப்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. இட்சுவாகு வமிசத்தில் வந்தவன் இராமன்; ரகு என்பவன் இராமனது குலத்தின் முன்னோர்களில் ஒருவன். பார்ப்பனன் ஒருவன் குபேரனால் தனக்குத் துன்பம் நேர்ந்ததாக ரகுவிடம் முறையிட்டானாம். அந்தப் பார்ப்பனனது குறையைப் போக்குவதற்காக ‘ரகு’ _ குபேரனிடம் போரிட்டானாம். அவனைப் போலவே இராமனும் பார்ப்பான் ஒருவனுக்காகச் சூத்திரன் சம்பூகன் தலையை அநியாயமாகத் துண்டித்துவிட்டான். ரகுவின் வழியில் வந்தவனல்லவா? அதனால் இராமனும் அதே அநியாயத்தைச் செய்கிறான்.
கைகேயிக்குச் செய்த துரோகம்
இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சமாக இருந்து வந்திருக்கிறான்.
கைகேயியிடம் வெகு யோக்கியன் போலும், மிக அன்புடன் நடப்பதுபோலும், பாசாங்கு செய்துவந்து, பிறகு “கைகேயி தீய குணமுடையவள்’’ என்கிறான்! (அயோத்தியா காண்டம், 31, 33 ஆவது சருக்கம்).
சீதையைச் சந்தேகித்த இராமன்
மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருந்து, அவளை நெருப்பில் குளித்துவிட்டு வரச்செய்து, அப்படி வந்தபிறகும் பாமர மக்கள் மீது சாக்குப்போட்டு, அவள் கர்ப்பமானதைக் கண்டுபிடித்ததும். அதற்கு ஆக அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் செய்கிறான். இச்செய்தி உத்தரகாண்டத்தில் இடம்பெற்றுள்ளது.
பரதனுக்குத் துரோகம் செய்த இராமன்
அயோத்தி நாட்டரசு பரதனுக்குச் சேர்ந்தது என்பதும், இராமனுக்குக் கிடைக்க நியாயமில்லை என்பதும், இராமன் நன்றாக அறிந்தவனே ஆவான்.
எப்படி எனில், இராமனின் தகப்பனாகிய தசரதன், பரதனின் தாய் கைகேயியை மணம் செய்துகொள்கிற காலத்தில், “அயோத்தி நாட்டு அரசு அக்கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே உரியதாகுக’’ என்று கைகேயின் தந்தைக்கு வாக்களித்து, அந்த ஒப்புதல் மீதே மணம் செய்து கொண்டிருக்கிறான்.
இந்த உண்மை இராமனுக்குத் தெரியும். இதை இராமனே தனக்குத் தெரியும் என்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறான்.
ஆகவே, பரதனுக்குத் துரோகம் செய்து, இராமனுக்கு அயோத்தியை முடி சூட்டும் முயற்சியில் தசரதன் மாத்திரமல்லாமல், இராமன் முதல் அவன் தாய், ரிஷி, குரு, அமைச்சர் முதலிய பலரும் உடன்பட்டு ஒன்று சேர்ந்தே இம்மாபெரும் துரோகச் சதிக்கு உடந்தையாயிருந்து காரியம் துவக்கி இருக்கிறார்கள். அதை இராமனும் ஏற்று பரதனுக்குத் துரோகம் செய்தான்.
மனைவிமீது அன்பில்லாத இராமன்
“நான் அயோத்தியில் இருக்கும்போது இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால் இங்கு சரியான இடத்தில் அதாவது எப்பொழுதும் கூடி இன்பம் அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில். நான் சீதையுடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானே’’ என்ற கருத்தில் துக்கப்படுகிறான். ஆகவே, இராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கிச் சென்றிருந்தால் இராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது!
“இராவணன் உன்னைத் தொட்டு மடியில் வைத்துக்கொண்டு போனான்: ஆசை பொழியும் நேத்திரங்களால் உன்னைப் பார்த்தான்.’’
உன்னை ஏற்றால், பார்ப்போர் சீ! சீ! என்று நிந்திப்பார்!
“களங்கமற்ற இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனென்று பெயர் வைத்துக்கொண்டு உன்னை இப்போது சேர்த்துக்கொண்டால், ஒவ்வொரு பிராணியும் சீ! சீ! என்று நிந்திக்காதா?’’
உன் மீது பிரியமில்லை, எங்காவது போய்விடு!
“என் குலதர்மத்தையும், கவுரவத்தையும் காப்பாற்ற உன்னைச் சத்துருவிடத்திலிருந்து மீட்டேன்: விசேஷ கீர்த்தியைச் சம்பாதித்தேன்: உன்னிடத்தில் எள்ளளவும் எனக்கு ஆசை இல்லை: நீ இஷ்டமான இடத்திற்குப் போகலாம்.’’
இது ஆலோசித்து செய்த முடிவு!
“நான் கோபத்தால் பதறிச் சொல்லவில்லை; இது சாந்தமாய் நெடுநேரம் ஆலோசித்தும் செய்த முடிவு.’’ என்று சீதையை வெறுத்தவன் இராமன். இறுதியில் இராமன் சரயு ஆற்றில் வீழ்ந்து உயிர்விட்டான் என்று உத்தரகாண்டம் நிறை-வு பெறுகிறது.
இப்படிப்பட்ட இராமனை அறத்தின் நாயகன், கடவுள் அவதாரம் என்று கொண்டாடுவது ஏற்புடையதா என்று இந்தியர்கள் அனைவரும் சிந்திக்கவேண்டும். இராமனைக் காட்டி வாக்குகளைப் பெற்று இந்துராஷ்டிரம் அமைக்கத் துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் சதியை முறியடிக்க, இராமனின் அற்பத்தனங்களை மக்கள் மத்தியில் விளக்கவேண்டும். ஆம். பெரியார் ஒளி இந்தியா முழுவதும் பரவவேண்டும். பாசிசம் வீழ்த்தப்படவும், மக்களாட்சி காப்பாற்றபடவும் அதுவொன்றே வழி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக