ஜனவரி 1-15, 2023

மஞ்சை வசந்தன்

இராமர் பாலம் இல்லை. அது வெறும் மணல் திட்டு. உலகில் பல இடங்களில் அப்படித் திட்டுகள் உள்ளன என்று அறிவியல் பூர்வமாய் எடுத்துச் சொல்லும்போது, இல்லை யில்லை, இது எங்கள் மத நம்பிக்கை _ எங்கள் புராணங்கள் கூறும் செய்திகளின்படி நம்பிக்கை _ அந்த நம்பிக்கைக்கு விரோதமாக அதை இடிக்கக்கூடாது என்று எதிர்வாதம் செய்வதோடு, இன்று உச்சநீதிமன்றம் வரை சென்று எங்கள் நம்பிக்கையின் சின்னமான இராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளனர்.
ஆனால், உண்மை என்னவென்றால், புராணத்தையே படிக்காத அடி முட்டாள்கள், அரைவேக்காடுகள், ஆதிக்கப் பேர்வழிகள் பரப்பும் வதந்தியே இராமர் பாலம் என்பது. இராமர் பாலம் இல்லை என்பதை நாம் சொல்ல
வில்லை. அவர்களின் புராணமே சொல்கிறது.

இராமர் பாலத்தை, இராமரே தகர்த்தார்:-
சேது புராணம் செப்புவது என்ன?
இராமர் பாலம் அமைத்தது தொடர்பான கதையைச் சொல்வது சேது புராணம் என்ற பழைமைவாய்ந்த நூல் ஆகும். நூற்றாண்டு பழமை வாய்ந்த அப்புராணத்தை தேடிக் கண்டு அதை ஆய்வு செய்தால் இவர்களின் மோசடியும், பித்தலாட்டமும் அப்பட்ட-மாக வெளிப்படுகிறது.
இராமர் சேது அணையைக் கட்டியதை கூறும் அப்புராணம், இராமர் தன் கையாலே, தனது வில்லினால் சேது அணையைத் தகர்த்து அழித்து விட்டார் என்ற செய்தியையும் அறிவிக்கிறது.
அதாவது, கடலுக்கு மேலே (நீருக்கு மேலே) மிதவைக்கல்லால் இராமர் பாலம் அமைத்தார் என்றும். இராவண வதம் முடிந்து, அப்பாலத்தைக் கடந்து மீண்டும் தனுஷ்கோடிப் பகுதிக்கு இராமர் கூட்டம் வந்த போது, விபீஷணன், இராமனைப் பார்த்து, இலங்கைக்குச் சென்று வர நீங்கள் அமைத்த இப்பாலத்தை இப்படியே விட்டுச் சென்றால், இலங்கையில் உள்ள கொடியவர்கள் இப்பாலத்தின் வழியே வந்து பல பகுதிகளுக்கும் சென்று அக்கிரமம், கொடுமை, அழிவு செய்வார்கள். எனவே, நீங்கள் அமைத்த இப்பாலத்தை நீங்களே தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமர் அவ்வாறே அப்பாலத்தைத் தகர்த்து அழித்து விட்டார் என்கிறது சேது புராணம்.

இராமர் பாலம் அமைத்ததையும், பின் அதை அவர் தகர்த்ததையும் கூறும் சேது புராணப் பகுதி இதோ:
மிதவை அணை கட்டியது எப்படி?
இலங்கைக்குப் போக வேண்டுமானால் வானராதிகளால் சமுத்திரத்திற்கு அணைகட்டி அப்பாலத்தில் நடந்துபோக வேண்டுமென்று சொல்ல, சுவாமியும் அந்த வார்த்தையை ஒப்புக் கொண்டு சமுத்திரமும் ஆழம் நீள மறிந்து அணையைக் கட்ட வருணனை நோக்கி ஏழுநாள் தர்ப்பாசனத்தில் வருண மந்திரத்தைத் தியானித்துக் கொண்டிருந்தார். அஃதறிந்து வருணணும் வராததுகண்டு க்ஷணத்தில் சுவாமிக்கு கோபம் வந்து பாணத்தைப் பிரயோகஞ்செய்தார். வருணனும் பயந்து சரணாகதியடைந்து தோத்திரமுஞ் செய்தான். சுவாமியுந்தயவுவந்து இச் சமுத்திரத்தின் ஆழமும் இலங்கைக்குப் போக நீளமென்னவென்று கேட்டு, அணை கட்ட வேண்டியதையுஞ் சொல்ல, வருணனுங்கேட்டு சுவாமி ஆழங்காணக்கூடாது அணை போட வேண்டுமானால் போட்டகல் மிதக்கும்படி வரப்பிரசாதங்களினால் பிறந்திருக்கின்றான், வானரப்படைத் தலைவரில் நளனென்று ஒருவன் சுவாமியுடன் வந்திருக்கின்றான்.

அவன் பூர்வஜன்மத்தில் மயனாகிய சிற்பனாக்கும். அவனுக்கு சுவாமியின் உத்தரவு கொடுத்து வானரப் படைகளால் ஒத்தாசை செய்தால் அவனும் கட்டு வானென்று சொல்ல, சுவாமியும் அவனை அழைத்துப் பரிசீந்து நீரிலே போட்டால் மிதக்கும்படி உன் பிதாவினுடைய வரப்பிரசாதம் பெற்றவனாகலின் அனுமார் முதலாகிய
வானரப்படை வீரர்களான வானர வீரர்கள் கொண்டு வந்து கொடுக்கின்ற பர்வதங்களை வாங்கி உன்கையினால் இலங்கைக்குப் போகும்படி வருணனுடைய முதுகின் பேரில் அணை கட்டென்று
ஸ்ரீ ராமசுவாமி வரப்பிரசாதங் கொடுத்தருளி, யாதொரு விக்கினங்களும் வராமல் நிறைவேற்றும்படிக்கு விக்கிநேஸ்வரனைப் பூசித்து அனுகிரகம் பெற்று அப்பால் நவக் கிரகங்களையும் விதிப்படி நவபாஷாண ஸ்தாபிதஞ்செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து அப்பால் சனிப்பீரிதியாய் எண்ணெயை வைத்து சிவப்பிரதிஷ்டை செய்து திலதீஸ்வரரை பூசித்து இவர்களுடைய அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு நளனுக்கு சேதுபந்தனத்துக் குத் தேங்காய் தொட்டுக் கொடுத்து அனுமார் முதலிய பெரியோர்களான படைத் தலைவரையும், வானரப் படைகளையும் நாலுதிக்குகளிலும் போய் பருவதங்களைக் கொண்டு வந்து கொடுக்கும்படி கட்டளை-யிட ஸ்ரீராமருடைய வாக்கியப்படி வானராதிகளெல்லாம் பருவதங்களை, சங்கை யில்லாமல் கொண்டுவந்து மேன்மேலும் கொடுக்க ஸ்ரீராமசுவாமியும், லக்ஷ்மணரும், ஜயம்ஜயமென்று வாக்குக் கொடுக்க நளனானவன் வாங்கிக் கட்டின திருவணை
யானது சேதுபந்தன முடிவாயிருக்கும்.

அப்படி ஸ்ரீராமசுவாமியாலே அநேக நதிகள், சுனைகள், ரிஷிகள், சஞ்சாரஞ்
செய்து கொண்டிருந்த பருவதங்களை ஸ்ரீராமர் வாக்கியத்தின்படி வானராதிகளால் கொண்டுவந்து கொடுக்க நளன் வாங்கி
அடைக்கின்றபோது சமுத்திரத்தை எப்போதுங் கண் பார்க்க வந்த ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி நடக்கும்போது பட்ட பாதாரவிந்தங்களிலுள்ள சங்கு சக்கரரேகைகள் சேதுவில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அத்தகைய பருவதங்கள் சங்கு சக்கரங்களில் அலைமோதிச் சத்தத்
துடன் ஆடம்பரஞ் செய்து கெர்ச்சிதங்களைப் பண்ணி தென் சமுத்திரமானது
மகா ஆனந்த சந்தோஷங்களை யடைந்து கொண்டிருக்கும்படி அலைமோதுகின்றன. சமுத்திர ஜலத்துக்கு சேது தீர்த்தமென்று பெயர் அநேகயுகங்களாய்ப் பிரகாசித்துக் கொண்டுள்ளது.

இராமர் பாலத்தைத் தகர்த்தது எப்படி?
மஹருஷிகளே கோதண்ட மென்னும் வில்லைக் கரத்திலேந்தி யிலகாநின்ற ஸ்ரீராம மூர்த்தியானவர் பத்து சிரங்களையும், இருபது கரங்களையுமுடைய இராவணனைச் சங்காரஞ் செய்து பண்ணுதற்கரிய தசக்ரீவனென்னும் ராவணனாலே தரிக்கப்பட்டிருந்த கிரீடத்தை, விபூஷணனுடைய சிரத்திற்தரித்து பட்டாபிஷேகஞ்செய்து இலங்கைக்கு அரசனாக்கிச் சமுத்திரத்திற் கட்டியிருக்குஞ் சேது மார்க்கத்தில் சீதாதேவியோடு தனது தம்பியாகிய இலட்சுமணன் அனுமான், சுக்ரீவன் முதலிய வானர வீரர்கள் யாவரும் புடைசூழந்
திறைஞ்சப் புட்பக விமானத்திலேறிச் சந்திர சூரியரும் விலகிநிற்கும் படியாய் கருட காந்தர்வ சித்த வித்யாதரர்கள் போற்றச் சேதுவைக் கடந்து அந்த வாகனத்தி லிறங்கித் திருவிளையாடல் செய்ய வெண்ணியிருக்கையில் ஸ்ரீராமச்சந்திரனுடைய பாதபத்மங்களை விபீஷணனானவன் பணிந்து கூறுவான், ‘‘சுவாமீ! வேதவேதாந்த மூர்த்தியே!

தேவரீரிப்போது இராவணாதி ராட்சதர்களைக் கண்டிக்கும் பொருட்டு வானராதி வீரற்களாற் செய்யப்பட்ட இச்சேதுவை இவ்வாறேயிருக்கச்சயன்றால், இலங்கையில் உள்ள இராக்கதர்கள் யாவரும் இம்மார்க்கத்தில் எங்கும் போக்கு
வரவாயிருந்து உலகிலுள்ள ஜீவர்களை இம்சை செய்வார் களாதலால் இச்சேது வாகிய அணையை சோதிக்க (தகர்க்க) வேண்டுமென்று
சொல்ல, அப்போது ஸ்ரீராம மூர்த்தியானவர் அவ்வாய் மையைக் கேட்டு மெய்தானென்று சிந்தித்து மனக்களிப்பினோடு தனது கரத்தில் விளங்குங் கோதண்டமென்னும் வில்லினாலே
நல்ல சர்ப்பத்தை கருடன் தன் கால்நகங்-களினால் தாக்கிக் கிழித்ததுபோலவும் முன்னர் இலங்கையில் இந்திரசித்துவினால் விடப்பட்ட நாகபாசத்தை கருடபகவான் பொடி படச் செய்ததுபோலவும் கிழித்துச் சேதுவாகிய திருவணையை உடைத்துப் போட்டார்.
மேலே கண்ட புராணக் கதையிலிருந்து கீழ்க்கண்டவை உறுதி செய்யப்படுகின்றன.

1. இராமர் பாலம் கடலுக்குள் அமைக்கப்-பட்ட மணல் பாலம் அல்ல.
2. இராமர் பாலம் மிதவைக் கற்களால் கட்டப்பட்டது. கடல் நீரின் மேல் மிதக்கும்படி கட்டப்பட்டது. (வருணனின் முதுகின்மேல் என்
பதற்கு கடல் நீரின் மேல் என்பது
பொருள்).
3. இராவணனை அழிக்க இலங்கைக்குச் சென்று வர மட்டுமே மிதவைப் பாலம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் விபீஷணனின் வேண்டுகோளில் உள்ள நியாயத்தை இராமர் ஏற்று, இராமர் பாலத்தை இராமரே தகர்த்து விட்டார். அதுவும் எப்படித் தகர்த்தார்? பாம்பை கீரியானது குதறி எறிவது போல்; இந்திரசித்து விட்ட நாகபாசத்தை, கருடன் சிதைத்ததைப் போல் இராமர் தன் கையாலே, தன் வில்லாலே தகர்த்தார்.
இந்த மூன்று செய்திகளும் உறுதி செய்யும் உண்மையென்ன?
1. தற்போது கடலுக்குள் உள்ள மணல்மேடு இராமர் பாலம் அல்ல. இராமர் பாலம், கடல் நீர் மீது மிதக்கும்படியான மிதவைக் கற்களால் அமைக்கப்பட்டது. எனவே இவர்கள் இராமர் பாலம் என்று கூறும் மணல் மேடு இராமர் பாலம் அல்ல. அது இயற்கையாய் உருவான மணல்திட்டு.
2. இராமர் கட்டிய பாலத்தை இராமரே தகர்த்து அழித்து விட்டார். எனவே இராமர் பாலமே இல்லை.
3. மத நம்பிக்கைக்கு அடிப்படை புராணம். புராணமே இராமர் பாலம் அப்போதே இராமனால் அழிக்கப்பட்டு விட்டது என்றுகூறி விட்டபின், இராமர் பாலம் இருப்பதாகக் கூறுவது மோசடியல்லவா? பித்தலாட்டமல்லவா?
சுப்பிரமணியசாமியும், மற்றுமுள்ள சங்கிகளும் பதில் சொல்லவேண்டும். உங்கள் புராணமே இராமர் பாலம் இல்லையென்று சொல்லவிட்டபின், எதை வைத்து இராமர் பாலம் இருப்பதாகச் சொல்கிறீர்கள்?
மத்திய அரசு, இந்த புராண ஆதாரத்தை அறிவியல் அறிக்கையை அடிப்படையாக வைத்து இராமர் பாலம் இல்லையென்று அறிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். தமிழர்கள் இதற்காகப் போராடவேண்டும். உண்மை நம் பக்கம். வெற்றி நமதே!