பக்கங்கள்

திங்கள், 9 மார்ச், 2020

இராமனின் உணவுப் பழக்கம்– இராமன் புலால் விரும்பியே!


இராமனின் உணவு முறைகள் வால்மீகி காட்டிய உண்மைகள்

முத்து.செல்வன், பெங்களூரு

முன் குறிப்பு: இந்தக் கட்டுரையில் கண்டுள்ள செய்திகள் இராமாயணம் குறித்து, தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும், பெரியாரியலாரும், உலக அளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள ஆராய்ச்சி நூல்களும் வெளிப்படுத்தியவையே என்றாலும் இந்தியாவில் “ச்சேய்! சீராம்!” என்னும் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை வெறியாட்டங்கள் மிகுந்து வருவதால் மக்கள் உண்மை உணர வேண்டும் என்னும் நோக்கில் வெளியிடப் படுகிறது. மேலும் புலால் உணவு உண்போர்க்கு விலங்கு குணம்தான் அமைiயும் என்று ஓர் ஆன்மிகச் சொற்பொழிவாளர் அரிதின் ஆய்ந்து கூறியுள்ளார். - மு.செ

உணவு முறை என்பது அவ்வக்காலச் சமூக அமைப்பில் மாந்தனுக்குத் தேவையாக அமைந்த ஒன்று.. வேட்டைச் சமூகத்தில் பச்சையாக விலங்குகளின் புலாலை உண்டு வந்தவன் பிறகு படிப்படியாகச் சமைத்த உனவுக்கு மாறியதும் அதந்தக் காலங்களில் இருந்து பெற்ற படிப்பினையால்தான். வேட்டை, மேய்ச்சல், வேளாண்மை, வணிகம் என்று மாறிவந்த சூழ்நிலக்கட்கு ஏற்ப்ப் பழக்க வழக்கங்களும் சமூக உறவுகளும் மாறி வந்திருக்கின்றன. தமிழ் மண்ணில் நிலப்பாகுபாடுகளுக்கேற்ப உணவு முறைகள் அமைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ஊன் உணவு தமிழரிடையே பரவலாக இருந்ததையும் அறிய முடிகிறது.

அந்த வகையில்  வேதக் காலம் புலால் உணவு பரவலாக இருந்த காலம் ஆகும். இந்த நாட்டு துறவிகள் (இருடிகள்) புலால் உணவை உட்கொண்டதை வேத நூல்கள் மூலம் அறியலாம். ஆனால் காலப்போக்கில் புலால் மறுத்தல் வட பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. இன்றுள்ள புலால் மறுப்பாளர்கள் இந்த உண்மையை ஏற்கத் தயங்குகிறார்கள். குறிப்பாக, இராமன், இலக்குவன், சீதை ஊனுணவை உண்டவர்கள் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். அந்தக் கருத்துத் தவறு என்பதை எடுத்துக் காட்டிடும் வகையில், வால்மீகி இராமாயணத்திலிருந்து சில பகுதிகளைக் காட்டி அதனை நிறுவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இராமாயணக் கதையின்படி அரசக் குலத்தவர் சத்திரியர். அப்படித்தான் மனுநீதி கூறுகிறது. எனவே இராமனோ அவனைச் சேர்ந்தோரோ புலால் உண்ட்தைத் தவறாக்க் காட்டுவது நம் நோக்கம்ன்று. மாறாக மக்கள் மனதில் உள்ள மயக்கத்தை போக்கவே இந்தக் கட்டுரை.

1. அயோத்தியா காண்டம் சர்கம் 52…87.88, 89
இராமனும் சீதையும் இலக்குவனும் காட்டு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிச் செல்லும்போது வழியில் குகன் இருப்பிடம் செல்கின்றனர், குகனிடம் விடை பெற்றுக் கங்கையைக் கடக்கும் போது சீதை, கங்கையை நோக்கி, ” கங்கா தேவி! எங்களைக் காப்பாற்றும். இராமன் காட்டு வாழ்க்கை முடித்து, நலமுடன் ஆட்சியமைக்கத் திரும்பும்போது, உன்னை மகிழ்விக்கும் வகையில் நான் பார்ப்பனர்களுக்கு ஒரு லட்சம் பசுக்களையும் துணிமணிகளையும் உணவுப் பொருட்களையும் அளிப்பேன்’ என்று கூறினாள்..

”அயோத்திக்குத் திரும்பிய உடன், ஆயிரம் மதுக் குடங்களுடனும் பல வகையான புலால் உணவு களுடனும் சமைத்த சோறுடனும் உன்னை முறைப்படி வணங்குவேன்” eன்றும் கூறினாள்.

· இதனால் மதுவும் புலாலும் அன்றைய உணவு முறைகள் என்பது தெளிவாகிறது.

2. அயோத்தியா காண்டம் சர்கம்55:19,20
கங்கையைக் கடந்து அக்கரையில் மேற்கொண்டு செல்லும் வழியில், மட்ச நாட்டுக்கு வந்தார்கள். அங்கே மான் இனத்தில் சிறந்தவையான, வர்சா, இரிசியா,பிரிசதம்,, மகாருரு என்றழைக்கப்படும் மான் வகைகளைக் கொன்று, அவ்ற்றின் சுவையான பகுதிகளை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தடிக்கு ஓய்வெடுக்கச் சென்றார்கள்.
· இராமனும் இலக்குவனும் சீதையும் அரிய வகை மான்களைக் கொன்று சமைத்து உணவாகக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வருகிறது.

3. பரதனை வரவேற்ற குகன்: சர்கம்84
காட்டுக்குச் சென்ற இராமன் மீண்டும் நாட்டுக்குத் திரும்பி ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதற்காக பரதன் அவனை நாடிச் செல்கிறான். வழியில் அவனும் குகன் இருப்பிடத்தை அடைகிறான். அப்போது குகன் வந்திருந்தோர்க்கு உணவுப் பொருள்களை அளிக்கும்போது,
“என் குலத்தவர் திரட்டிய கிழங்கு வகைகளும் பழ வகைகளும் உள்ளன. அத்துடன், புதியதும் உலர வைக்கப்பட்டதுமான விலங்கு இறைச்சிகளும் காட்டு விளைபொருள்களும் உள்ளன.” எம்று கூறுகிறான்,
· அயோத்தியிலிருந்து வந்த பரதனும் அவனுடன் வந்த படையினரும் உண்ணக்கூடியவற்றைத் தேர்ந்தெடுத்துக் குகன் படைத்துள்ளான். புதிய மற்றும் உலர வைக்கப்பட்ட புலால் வகைகளை(maamsamcha) அளித்து பரதனையும் அவனுடன் வந்தோரையும் மகிழ்வித்துள்ளான் குகன்.

4. அயோத்தியா காண்டம் சர்கம்91
காட்டு வாழ்க்கையை மேற்கொண்ட இராமன் அயோத்தியாவிற்கு மீண்டும் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகக் காட்டுக்கு வந்த பரதனும் படைஞரும் குகனின் விருந்தோம்பலில் திளைத்து மேற்கொண்டு செல்லும்போது பரத்துவாச முனிவனின் பாழியை(ஆசிரமத்தை) அடைகின்றனர். அவர்களை வரவேற்று விருந்தோம்பிய பரத்துவாச முனிவன் வரவேற்பின் இறுதியில் வழங்கப்பட்ட உணவுகள் உங்களை மலைக்கச் செய்யும் என்பது திண்ணம்..

ஆட்டுக்கறி உணவுகள்(aajaishchaapi), பன்றிக்கறி உணவுகள் (vaarahaishcha), சுவை மிகுந்த சாறுகள், வாசம் மிகுந்த சதைப்பற்றுள்ள பழங்களைச் சேர்த்துச் சமைக்கப்பட்ட உணவுகள், பல பாத்திரங்களில் கிடைத்தற்கரிய விலங்குகளின் புலால் உணவுகள் அவர்களுக்குப் படைக்கப்பட்டன.

· ஊன் உணவிலும் எப்படியெல்லாம் வகை வகையான விலங்குகளின் ஊனைச் சமைத்துத் தின்றிருக்கிறார்கள் என்பதை வால்மீகி கூறியுள்ளார்.

## பரத்துவாசரின் பாழிக்கு இராமன் வந்த போதும் அவன் இந்த உணவுவகைகள் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.

பரத்துவாசர் இராமனுக்கு ஒரு பசு, மதுபர்கா, கழுவுவதற்குத் தண்ணீர் ஆகியவற்றைக் கொடுத்தார். இவற்றுள் ‘மதுபர்கா’ என்பதற்கு, ‘தயிரும் தேனும் கலந்த கலவை’ என்றே பல உரையாசிரியர்கள் கூறியிருக்கிறார்கL. ஆனால் வி.ஆர் நார்ளா . “அதற்கு அந்தப் பொருள் இல்லை….”என்று கூறிக் கீழ்க்காணும் விளக்கத்தை அளிக்கிறார். அதாவது மதுபர்கா பசு ஊன் கலந்த உணவு என்பதைச் சான்றுகளுடன் நிறுவுகிறார். புலால் இல்லாமல் மதுபர்கா இல்லையென. ஆஷ்வால்யா கிரியா சூத்திரம் கூறுகிறது(33 ஆவது சூக்த்த்தின் 24 ஆவது பத்தி, முதல் அத்தியாயம்); புலால் இல்லாமல் அர்கியா இல்லையென, பராசர கிரியா சூத்திரம் கூறுகிறது( 29 ஆவது சூத்திரம், 3ஆவது பத்தி,, முதல் காண்டம்); பசுவின் ஊனிலிருந்து உருவாக்கப்பட்ட மதுபர்கா கொடுப்பதுதான் விருந்தினரைச் சரியான முறையில் கவனிப்பதாகும் என இரணியா கவுசிகா சூத்திரமும் ஆபஸ்தம்ப கிரியா சூத்திரமும் கூறுகின்றன என்று விளக்குகிறார். மேலும் அவர் கூறுகையில், “விருந்தினர் பசுவைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் மட்டுமே வேறு விலங்குகளை வைத்துச் சமைக்கப்பட்ட உணவைப் படைப்பர். வேதங்கள் மற்றும் தர்ம ச்ம்ருதிகளின்படி நமது நாட்டில் அசைவ உணவுப் பழக்கம் பசு ஊன் உண்பது முதற்கொண்டு எல்லாவித இன மக்களுக்கும் பொதுவானதுஎன்பது தெளிவாகிறது” என்று விளக்கியுள்ளார்.

(நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய Last Word of Ramayana என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ”இராமாயணத்தின் அறுதிமொழி, Periyaar Mission of India, Bengaluru (2019),

நார்ளா அவர்களைப் பற்றி ஆசிரியர் திரு கி.வீரமணி அவர்கள் “நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய . The Truth about Gita எனற நூல்தான் “கீதையின் மறுபக்கம்’ என்று நான் ’எழுதுவதற்கு அடித்தளமாக இருந்த்து” என்று இராமாயண ஆய்வுச் சொற்பொழிவுகள் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

5. சித்திரக்கூடம் பர்ணசாலை மான்கறி - சர்கம்56
இரரமனும் இலக்குவனும் சீதையும் காட்டு வாழ்க்கையின் போது இடம் மாறியவண்ணம் இருந்துள்ளனர். அவ்வாறு செல்கையில் சித்திரக்கூடம் பகுதிக்கு வருகின்றனர். அங்கு அவர்கள் தங்குவதற்காகக் குடில் ஒன்றை அமைக்கிறார்கள். அந்த்க் குடிலுக்குள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் நடந்ததை வால்மீகி விரிவாகக் கூறுகிறார்:
( இராமன் நிகழ்த்திய “கிருஹப் பிரவேசம்)

“ஓ! இலக்குமணா! உடனே ஒரு மானின் கறியைக் (aiNeyam maamsam) கொண்டுவா. குடிலுக்குல் செல்லுவதற்கு முன்பு தூய்மைக்கான சடங்குகளைச் செய்ய வேண்டும். அவை நீண்ட நாள் உயிர் வாழ விரும்புவோர் செய்வன. (1.56.22)
”ஒ! நீள்விழி படைத்த இலக்குமணா! விரைந்து மானைக் கொன்று இங்குக் கொண்டு வா. வேதங்களில் கூறியுள்ளபடி நாம் சடங்குகளை மேற்கொள்ள வேண்டும். சடங்குகளின் உள்ளபுனிதமானவற்றை நினைவில் கொள்.” (1.56.23)

பகைவரை வெல்லுந்திறன் படைத்த இலக்குவன் தன் அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்றினான். (24)

(மானைக் கொன்று கொண்டுவந்த) இலக்குவனிடம் இராமன்,” தம்பி! இந்த மானின் புலாலை வேக வை. இந்தக் குடிலை வணங்குவோம். இந்த நாளும் இந்த நேரமும் மிகவும்பொருத்தமானவை என்பதால் வேலைகளைகளை விரைந்து முடி” என்றான்.(25)

சுமித்திரையின் மகனும் வலிமை வாய்ந்தவனுமான இலக்குவன் அந்தக் கருப்பு மானைத் தீயில் வறுத்து எடுத்தான்.(26)

ஊனில் உள்ள குருதியெல்லாம் வற்றும அளவிற்கு மானூன் வறுபட்டவுடன் தன் அண்ணனிடம் (27)

”இந்தக் கருப்பு மான் நான்கு கால்களுடனும் முழுமையாக என்னால் நன்றாகச் சமைக்கப்பட்டுவிட்டது. கடவுளை ஒத்த இராமா! நீயே வழிபாட்டு முறைகளை அறிந்தவன் என்பதால் உரிய வழிபாட்டை நிகழ்த்திடுவீர்” என்றான். (28)

அவ்வாறே உரிய வழிபாடுகளைச் சிறப்புற நிகழ்த்திய பின் மூவரும் குடிலுக்குள் சென்று மகிழ்ந்திருந்தனர்.(29)

· ”ச்சேய் சீராம்!” என்று முழங்குபவர்கள் வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி கூறியுள்ளது போலப் புதுமனை புகுவிழா நடத்த முன் வரவேண்டும். அப்போதுதான் அவர்கள் உண்மையான இராம பக்தர்கள் அதை விடுத்து ராம நவமியன்று இறைச்சி விற்பனையகங்களை மூட வேண்டும் என்று கூறுகிறார்களே! இவர்களுடைய இராம பக்தி அவ்வளவுதானா?

ஆனல் ஒன்று. கருப்பு மான் ; kR^iSNaH mR^igo = black antelope வேட்டை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு ஏதாவது மான் வகையைக் கொண்டு இந்துத்துவ இராம பக்த வெறியர்கள் “கிருகப் பிரவேசத்தை” நடத்தலாம்.

6. மந்தாகினி ஆற்றங்கரையில் … அயோத்தியா காண்டம் 96.1,2
மந்தாகினி ஆற்றங்கரையில் நடந்து செல்லும்போது அதன் சிறப்புகளைத் தன் மனைவி சீதை மகிழும்படி எடுத்துக் கூறிய இராமனும் சீதையும் மலையடிவாரத்தில் பசியாற அமர்கின்றனர். அப்போது இராமன் சீதையிடம், உண்ணுதற்குச் சமைக்கப்பட்டிருந்த ஊன் உணவில் ஒரு தசைத் துண்டத்தை எடுத்துக் காட்டி, “இந்து ஊன் புதியதாக நெருப்பில் வாட்டிச் சமைக்கப்பட்ட சுவை மிக்கஉணவு வகையாகும் “ என்று கூறினான்.

· காட்டு வாழ்க்கையில் எந்தக் கட்டுப்பாடுமின்றி வேட்டையாடிக் கொன்ற விலங்குகளைக் கொன்று சமைத்து இன்புற்று இருந்திருக்கின்றனர்,

7. ஆரண்ய காண்டம் சரகம் 47
இராமன் காட்டுக்குள சென்றிருந்த போது அவனது குரலில் மாரீசன் குரல் எழுப்ப(வால்மீகி கூறியது) அவனைத் தேடி அழைத்துவர இலக்குவனைச் சீதை ஏவிவிட்ட நேரத்தில் இராவணன் சீதை இருந்த குடிலுக்குப் பிராமணன் வடிவில் வந்த்தாகவும், இராவணனைப் பிராமணனாகக் கருதிச் சீதை கீழ் வருமாறு கூறியதாக வால்மீகி கூருகிறார்.

”தாங்கள் இந்த இடத்தைத் தங்குமிடமாகக் கருதி ஓய்வாக இருக்கலாம். காட்டுக்குள் வேட்டையாடச் சென்றுள்ள என் கணவர் விரைவில் காட்டு விளைபொருள்களுடன் கருப்பு வரிகளையுடைய மான்(ruruun = stag with black stripes). கீரிகள் (godhaan) , காட்டுப்பன்றிகள் varaahaan ca ) ஆகியவற்றின் இறைச்சிகளுடன் வருவார் (விலங்குகளின் சமற்கருதப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

· இராமனும் இலக்குவனும் வில், அம்பு போன்ற ஆயுதங்களுடன் சென்றது கிழங்குகளைத் தோண்டி எடுக்கவும் பழங்களையும் காய்கறிகளையும் பறிப்பதற்காகவும் அல்ல என்பது விலங்குகளைக் கொன்று அவற்றின் புலாலைச் சமைத்து உண்ணவே என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

8. ஆரண்ய காண்டம் சர்கம் 44/27
மானுருவில் வந்த மாரீசனைக் கொன்று தன் இருப்பிடத்திற்குத்திரும்பும்போது, இராமன், ஒரு புள்ளி மானைக் கொன்று அதனை எடுத்துக் கொண்டு சென்றான் (3.47.27)

9. ஆரண்ய காண்டம். சர்கம் 3.68.32
சீதையை இராவணனிடமிருந்து மீட்கப் போராடிச் செத்துப் போன சடாயுவுக்கு (கழுகரசனாம்) இராமன் இறுதிச் சடங்கு செய்வதற்காக்க் காட்டிலிருந்த பல மான்களைக் கொன்று அவற்றின் கறியைக் கடவுள்களுக்குப் படைத்தான். (3.68.32)

10.  ஆரண்ய காண்டம் 3.73
இராமன் கபந்தன் என்னும் அரசனைக் (அரக்கனாம்) கொலை செய்தபோது இறப்பதற்கு முன்னர் கபந்தன், “இந்த இடத்தில் கட்டி வெண்ணெய்யைப் போலக் கொழுத்த பறவைகளைத் தின்னலாம். பம்பை ஆற்றில் உரோகித்த, சக்ரத்துண்ட, நலமீன் போன்ற மீன் வகைகளைக் காண்பாய். நீ உன்னுடைய வில்லை அம்பையும் பயன்படுத்தி அவற்றைக் கொல்வாய். இலக்குவன் அவற்றை நன்றாகக் கழுவி வறுத்து உனக்குப் பக்தியுடன் படைப்பான்” என்று கூறினான். ஆரண்ய காண்டம் 3. 73

11. கிட்கிந்தா காண்டம் சர்கம்4
இராமன் வாலியைக் கொன்றபோது, இறக்கும் முன் வாலி, “ ஓ! இராகவா! காண்டாமிருகம், உடும்பு, முயல், முள்ளம்பன்றி, ஆமை ஆகிய விலங்குகள் கூர்நகங்களையுடைய விலங்குகள். பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அவற்றின் ஊனைத் தின்ன ஏற்கப்பட்டிருக்கின்றது” என்று கூறினான்.

மேற்கண்ட வரிகள் வால்மீகியின் வரிகள். கம்பனோ பம்பனோ துளசிதாசனோ என்ன கூறியுள்லனர் என்பதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் இராமாயணத்தை வால்மீகி எழுதியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே இராமாயணக் காலத்தில் இராமன் முதலானோரால் கடைப்பிடிக்கப்பட்ட உணவுப் பழக்கங்களை விளக்க அவருடைய வரிகளைப் பயன்படுத்தி உள்ளேன்.

உன்னிப் பார்த்து உண்மையை உணருங்கள். மற்றவர்களும் அறியுமாறு செய்திடுங்கள்.

இந்தக் கட்டுரையில் காணப்படும் செய்திகள் பண்டித இ.மு.சுப்ரமணியப்பிளை அவர்களுடைய இராமயண ஆராய்ச்சி நூற்தொகுப்பிலும் உள்ளன. இந்தத் தொகுப்பின் கட்டுரைத்தொடர் விடுதலையில் தொடர்ந்து வெளியிடப்பட்டதையும் அறிவீர்கள். இராமாயண ஆராய்ச்சி, பண்டித இ.மு.சுப்ரமணியப்பிள்ளை – குடி அரசு இதழில் 1929 முதல் சந்திரசேகரப்பாவலர் என்ற பெயரில் ‘இதிகாசங்கள்’ என்னும் தலைப்பில் எழுதப் பெற்று வெளிவந்த இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்தது; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, ஆறாம் பதிப்பு பிப்ரவரி 2003)

மேலும் சர்கங்களைத் தேர்ந்தெடுக்கவும் மொழிபெயர்க்கவும் உதவிய நூல்கள்”
1. The Ramayana: A New Point of View, A.H.Gupta,Vishv Vijay Publication. New Delhi.
2. . நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய Last Word of Ramayana என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ”இராமாயணத்தின் அறுதிமொழி, Periyaar Mission of India, Bengaluru (2019),
3. பெரியாரியல்– இராமாயணச் சொற்பொழிவுகள். கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு
4. Ram was a Meat Eater, says Vālmīki Rāmāyana - By Dr Radhasyam Brahmachari கட்டுரை
5. www.valmikiramayan.net/
*************
மேற்குறிப்பிடப்பட்ட சர்கங்களின் மூல வடிவம் (வால்மீகி இராமாயணம்) சம்ற்கிருத வரிகளிலும், அவற்றுக்குரிய ஆங்கிலச் சொல் லுரை(பதவுரை)களும், பொழிப்புரைகளும் விரும்புவோருக்கு அனுப்பி வைக்கப்படும்.
- முத்துச்செல்வன் - மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம், முகநூல் பக்கம், 8.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக