பக்கங்கள்

திங்கள், 27 ஜனவரி, 2020

சம்பூக வதம் - இராமாயண ஆதாரம்




எவரோ பேராசிரியராம்! அவர் பெயர் சீனிவாசனாம்! இராமயணத்தில் சம்புகவதம் என்று ஒன்ரு நிகழவே இல்லையாம். அதற்கு நம் பெலாறுமுகம் புரட்சியாளர் அம்பேதகர் அது குறித்துக் கூறியுள்ளவற்றைப் பதிந்திருந்தார்.

அம்பேத்கரும் பெரியாரும் சொல்லுவதை விடுங்கள்! கீழே உள்ளதைப் படித்து அந்தப் பேராசிரியருக்குத் தெரியப் படுத்துங்கள். = முத்து.செல்வன்


இது ஜானகி கிருஷ்ணன் என்பார் மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப் படுகிறது..


”இது MLJ publications – என்ற பதிப்பகத்தின் ராமாயணத்தின் தமிழாக்கம். ராமாயணத்தின் பிரதிகள் பல விதமான பாட பேதங்களுடன் உள்ளன. மஹா பெரியவர்களின் அனுகிரஹத்துடன் எனக்கு கிடைத்ததை பல முறை பாராயணம் செய்த பின்னரே தமிழாக்கம் செய்ய முனைந்தேன். இம்முயற்சி நிறைவேற உதவியவர் பலர். அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் முடித்துள்ளார்.

காஞ்சி சங்கராச்சாரியின் “அனுகிரஹத்துடன்” மொழிபெயர்த்ததை அப்படியே தருகிறேன். 


வால்மீகியின் உத்தர காண்டம் அத்தியாயம் 73 (610)


ப்ராம்மண பரிதேவனம் (பிராம்மணனின் வருத்தம்)

சத்ருக்னனை அனுப்பி விட்டு, ராமர், மற்ற சகோதரர்களுடன், பழையபடி, தன் ராஜ்ய காரியங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். பல நாட்கள் சென்றன. ஒரு நாள் ஜன பதத்திலிருந்த ஒரு பிராம்மணன் இறந்த தன் குழந்தையைக் தூக்கிக் கொண்டு ராஜ மாளிகை வாசலில் வந்து நின்றார். பாசமும், துக்கமும் சேர, தேம்பித் தேம்பி அழுதபடி, அடிக்கடி புத்ரா என்றும், மகனே என்றும் அரற்றினார். முன் ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ, ஒரே மகன் உன்னை பறி கொடுத்து விட்டு தவிக்கிறேனே, இன்னமும் பாலகன். இளமையையே எட்டவில்லை. ஐந்து வயது மகன், அகாலத்தில் இப்படி காலனிடம் சென்றாயா, மகனே, என்றும் அழுதார். நானும் சில நாட்களில் உன்னிடம் வந்து சேருகிறேன், மரணம் தான் எனக்கும் மாற்று. உன் தாயாரும் நானும், வேறு என்ன தான் செய்வோம், நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லையே. எந்த பிராணியையும் துன்புறுத்தியதும் இல்லை. நான் செய்த எந்த தகாத காரியத்தின் பலனோ இது, தெரியவில்லை. நீ பித்ரு காரியங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியவன், முன்னால் போய் சேர்ந்து விட்டாயே. இது போல கேட்டதே இல்லையே. ராம ராஜ்யத்தில் இப்படி அகால மரணம் எப்படி சம்பவிக்கலாம்.? ராமர் செய்த மிகப் பெரிய தவறு ஏதோ இருக்க வேண்டும். அதனால் தான் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இறந்தான். இல்லையெனில், சாதாரணமாக ஆசையுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்த சிறுவன் ஏன் மரணமடைகிறான்? ராமா, அரசனே, நீ உயிருடன் இருக்கும் பொழுது, இப்படி ஒரு குழந்தை ம்ருத்யு வசம் ஆனது நியாயமா? நானும், என் பத்னியும் இந்த மாளிகையின் வாசலிலேயே மரிப்போம். ப்ரும்மஹத்தி தோஷமும் உன்னை வந்தடைய ராமா, சுகமாக இரு. உன் சகோதரர்களுடன், ராமா, சிரஞ்ஜீவியாக இரு. இது வரை உன் ராஜ்யத்தில் சௌக்யமாக இருந்தோம். உன் பிரஜைகளான எங்களுக்கு வீழ்ச்சி காலம் ஆரம்பித்து விட்டது போலும். இனி சுகம் ஏது? அனாதைகள் போல தவிக்கப் போகிறோம். இக்ஷ்வாகு குலத்தின் அரசர்கள், தர்ம நியாயத்திற்கு பெயர் போன மகாத்மாக்கள். ராமர் அரசனாக வந்து அதை மாற்றி விட்டான் போலும். 
முதிர்ச்சியடையாதவனோ இவன்? பிரஜைகள் முறையாக பாலிக்கப் படாவிட்டால், ராஜ தோஷத்தினால் பாதிக்கப் படுகிறார்கள். அரசனின் நடத்தை சரியாக இல்லையெனில், பிரஜைகள் அகாலத்தில் மரணமடைவர். நகரத்திலும், வெளியிலும், சரியான பாதுகாப்புகள் செய்து, கவனமாக இல்லாத ராஜ்யத்தில் இப்படித்தான் அகால மரணம் நிகழும். இது நிச்சயமாக ராஜ தோஷம் தான். இது வரை அறிந்திராத, சிறுவனின் மரணம். இப்படித் திரும்ப திரும்ப பல விஷயங்களைச் சொல்லி அழுது அரற்றினார். தன் மகன் இறந்த துக்கத்தில் அரசனை தூஷித்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ப்ராம்மண பரிதேவனம் என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)


அத்தியாயம் 74 (611) நாரத வசனம் (நாரதர் சொன்னது)
இப்படி வேதனை மிக்க பிராம்மணர் அரற்றவும், அதைக் கேட்ட ராமர், மந்திரிகளை அழைத்து விசாரித்தார். பிராம்மணரின் வேதனை அவரையும் வருந்தச் செய்தது. வசிஷ்டரையும், வாம தேவரையும், நிகமம் தெரிந்த அறிஞர்களையும், தன் சகோதரர்களையும் கூட்டி ஆலோசனை செய்தார். வசிஷ்டர் உள்பட, எட்டு மந்திரிகளும் வந்து சேர்ந்தனர். வாழ்க என்று அரசனை வாழ்த்தி விட்டு, மார்க்கண்டேயரும், மௌத்கல்யரும், வாமதேவரும், காஸ்யபரும், ஜாபாலி, கௌதமர், நாரதர் முதலிய பிராம்மணர்கள் எல்லோரும் வந்து தங்கள் ஆசனங்களில் அமர்ந்தபின், ராகவன், பிராம்மணரின் தூஷணையைச் சொல்லி, அவர்களின் பதிலுக்கு காத்திருந்த சமயம், நாரதர் எழுந்தார். ராமரது கவலை அவரது குரலிலேயே தெரிந்தது. எனவே, ஆறுதலாக பேசலானார். ராஜன், கேள், இந்த பாலனின் மரணம் சரியான காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறேன். முன்பு க்ருத யுகத்தில், தவம் செய்தவர்கள் பிராம்மணர்கள் மட்டுமே. மற்றவர் தவம் செய்ய முனைந்ததில்லை. அக்காலத்தில் தீர்க தரிசிகளாகவும், தவம் செய்து தேஜஸால், அக்னி போல ஜ்வலித்துக் கொண்டு, அவர்கள் இருந்த பொழுது மரணம் யாரையும் அண்டவில்லை. பின் த்ரேதாயுகத்தில், க்ஷத்திரியர்களும் அவர்களுடன் சேர்ந்து தவம் செய்ய சென்றார்கள். வீர்யமும், தவ வலிமையும் சேர்ந்து முன் ஜன்மங்களில், மனிதர்கள், சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள். த்ரேதாயுகத்தில் தான், ப்ரும்ம க்ஷத்ரம்- பிராம்மணத்வமும், க்ஷத்திரிய தர்மமும் இணைந்து செயல்படலாயின. இந்த இரண்டு யுகங்களிலும், நான்கு வர்ணங்களிலும், தனியாக விசேஷமோ, அதிக மதிப்போ தராமல், சமமாக பாவித்தனர். நான்கு வர்ணத்தாரும் சமமான அந்தஸ்தை அனுபவித்தனர். தர்மமே உருவானது போல அந்த த்ரேதாயுகம் நடந்து கொண்டிருந்த பொழுது, அதர்மம் தன் ஒரு காலை பூமியில் பதித்தது. அதர்மம் வந்தால், தேஜஸ் குறைவது கண்கூடு. பொய் என்ற சொல் பூமியில் காலுர்ன்றி விட்டது. அசத்யம் என்ற தன் காலை பூமியில் ஊன்றச் செய்த அதர்மம், இது வரை இல்லாத துஷ்க்ருத்யங்களுக்கும்-கெடுதலான செயல்களுக்கும், இடம் கொடுத்தது. ஆயுள் முன் போல தீர்கமாக இருப்பதும் சாத்யமில்லாமல் போயிற்று. இருந்தும் த்ரேதாயுகத்தில், சத்ய தர்ம பராயணர்களாக, சுபமான காரியங்களையே செய்து வந்த ஜனங்கள், பிராம்மணர்களும், க்ஷத்திரியர்களும், தவம் செய்த பொழுது, மற்றவர்கள் இவர்களுக்கு பணிவிடை செய்து வந்தனர். வைஸ்ய சூத்திரர்கள், இதை தங்கள் சிறந்த தர்மமாக ஏற்றுக் கொண்டனர். மற்ற வர்ணத்தினருக்கு சூத்திரர்கள் பணிவிடை செய்தனர். மதித்து மரியாதை செய்தனர். இந்த சமயம் தான் அதர்மம், அசத்யம் இரண்டும், நிரந்தரமாக வாசம் செய்ய வந்து சேர்ந்தன. இதன் பின் அதர்மம் தன் இரண்டாவது காலையும் பூமியில் அழுந்த ஊன்றி விட்டது. த்வாபர யுகம் ஆரம்பித்த சமயம் அது. துவாபர யுகம் முடியும் தறுவாயில், இந்த அசத்யமும், அதர்மமும் நன்றாக வளர்ந்து விட்டன. இப்பொழுது வைஸ்யர்களும், தவம் செய்ய முன் வந்தனர். மூன்று யுகங்களிலும், முறையாக மூன்று வர்ணத்தினரும், தவம் செய்வது வழக்கம் ஆயிற்று. இன்னமும் சூத்ரனுக்கு இந்த தகுதி கிடைக்கவில்லை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களும், பெரும் தவம் செய்வது, வரும் கலி யுகத்தில் அதிகமாகும். துவாபர யுகத்திலேயே இச்செயல் அதிகரித்து விட்டது. அது போல ஒருவன் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறான். அதன் பலன் தான் இந்த சிறுவனின் மரணம். செய்யும் செயல், விஷய- உலக வழக்கை ஒட்டியிருந்தாலும், தர்ம காரியமானாலும், விபரீதமாக போகும் பொழுது, அரசனேயானாலும், நன்மை பயக்காது. கெடுதலுக்கு காரணமாக, இக பரத்திலும் நன்மை தராத படி ஆகும். இது போல அதர்மமான காரியத்தில் ஈடுபடும், துர்மதியால், அரசனும் நரகம் தான் அடைவான். தவமானாலும், நற்காரியங்கள் ஆனாலும், தர்மத்தை மீறிய செயலானாலும், ஆறில் ஒரு பங்கு அரசனை வந்தடையும். தர்மத்துடன் பிரஜைகளை பாலிக்கும் அரசன், ஆறில் ஒரு பங்கை தான் அனுபவித்துக் கொண்டு, பிரஜைகளின் நன்மையையும் சிந்திக்காமல் இருந்தால் என்ன நியாயம்? அரசனே, நீ உன்னையே சோதித்து எங்கு தவறு என்று யோசி. நீ என்ன தவறு செய்தாய் என்று கண்டு பிடி. முயற்சி செய். இப்படி செய்தால் தான் அரசர்களுக்கு தர்மமும் வளரும், ஆயுளும் வளரும். இந்த பாலகனுக்கும் உயிர் வரும்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், நாரத வசனம் என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)



அத்தியாயம் 75 (612) சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்)
நாரதர் சொன்ன செய்தியைக் கேட்டு ராமர் மன நிம்மதி அடைந்தார். லக்ஷ்மணனைப் பாரத்து, சௌம்ய, போ. போய், இந்த பிராம்மணனுக்கு ஆறுதலாக இரண்டு வாரத்தைகள் பேசி, அவருடைய இறந்த குழந்தையை வாங்கி எண்ணெய் குடத்தில் வை. நல்ல வாசனைப் பொருட்களும், வாசனை மிகுந்த எண்ணெய்களும் விட்டு, குழந்தையை சற்றும் வாட்டம் காணாதபடி பாதுகாத்து வை. நன்னடத்தை உள்ள அந்தணன் மகன், மறைத்து பத்திரமாக வை. இதன் மேல் எதுவும் பட்டு எந்த வித ஆபத்தும், சேதமும் வரக் கூடாது. அவ்வாறு பார்த்துக் கொள். இவ்வாறு லக்ஷ்மணனுக்கு உத்தரவிட்டு, மனதால் புஷ்பகத்தை தியானித்தார். குறிப்பறிந்து புஷ்பகம், உடனே வந்து சேர்ந்தது. நராதிபா, இதோ, நான் வந்து விட்டேன் என்று பணிந்து நின்றது. அதைச் சார்ந்த கிங்கரர்களும் அதே போல நின்றனர். புஷ்பக விமானம் இவ்வாறு அழகாக பேசியதை ரசித்த ராமர், மற்ற மந்திரிகளிடம் விடை பெற்றுக் கொண்டு விமானத்தில் ஏறினார். தன் வில், அம்புறாத்தூணி, வாள் இவற்றை எடுத்துக் கொண்டு, பரதனையும், சௌமித்ரியையும் நகர காவலுக்கு நியமித்து விட்டு, மேற்கு திசை நோக்கி பயணமானார். பசுமையான அந்த பிரதேசங்களில், திரும்பத் திரும்ப தேடியபடி சென்றார். வடக்கு திசையில் ஹிமவான் பரந்து பரவியிருந்த திசையிலும் வந்து தேடினார். அங்கும் காணாமல், கிழக்குத் திசை சென்றார். எங்கும் தேடிப் பார்த்தபடி சென்றார். பூமி தெரியாதபடி செழிப்பாக இருந்த பிரதேசம். அதை புஷ்பகத்தில் இருந்தபடியே தரிசனம் செய்தார். இதன் பின், தென் திசை வந்தார். மலைச் சாரலின் மேல் அழகிய குளத்தைக் கண்டார். அந்த குளத்தில் அமர்ந்து, தவம் செய்து வந்த தாபஸனைக் கண்டார். அவனைப் பார்த்து, சுவ்ரத, தன்யனானாய். நீ பாக்யசாலி. நீ யார்? தவத்தில் முதிரந்தவனே, இவ்வளவு கடும் தவம் செய்யக் காரணம் என்ன? நான் தசரத குமாரன் ராமன். தெரிந்து கொள்ளும் ஆவலால் கேட்கிறேன். உன் விருப்பம் என்னவோ? ஸ்வர்கத்தை வேண்டி இந்த தவமா? அதற்கு மேலும் உயர்ந்த பதவியை அடையவா? வரம் பெற என்று தவம் செய்கிறாயா? இவ்வளவு கடுமையாக தவம் செய்யக் காரணம் என்ன? யாரைக் குறித்து தவம் செய்கிறாய். தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தாபஸ, நீ யார்? பிராம்மணனா? உனக்கு மங்களம். யாராலும் வெற்றி கொள்ள முடியாத பலம் மிகுந்த க்ஷத்திரியனா? மூன்றாவது வர்ணத்தினனான வைஸ்யனா? சூத்ரனா? உண்மையில் நீ யார், சொல். தலை கீழாகத் தொங்கிய அந்த தபஸ்வி, ராமனின் வார்த்தைகளைக் கேட்டு, அதே நிலையில் இருந்தபடியே, தான் யார் என்பதையும், என்ன காரணத்தினால் தவம் செய்கிறான் என்பதையும் விவரித்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சம்பூக நிசய: என்ற எழுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)



அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)
செயற்கரிய செய்த வீரனான ராமர், ம்ருதுவாக கேட்கவும், ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்ற சம்பூகன் மெதுவாக விவரித்தான். என் பெயர் சம்பூகன். பிறப்பால் சூத்ரன். இந்த சரீரத்தோடு தேவத்வம் பெற விரும்பி, தவம் செய்கிறேன். தேவலோக ஆசை தான். வேறு எதுவும் இல்லை. உக்ரமான தவத்தில் ஈடுபட்டேன். இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, தன் கூரிய வாளை எடுத்து ராமர் அவன் தலையைக் கொய்தார். அந்த தாபஸன் இறந்து விழுந்ததும், தேவர்கள் சாது, சாது என்று பூமாரி பொழிந்தனர். ராமன் சத்ய பராக்ரமன் என்று மகிழ்ந்து கொண்டாடினார்கள். இதுவும் ஒரு தேவகார்யமே, உன்னால் இன்று நிறைவேறியது என்றனர். என்ன வரம் வேண்டுமோ கேள், இந்த சூத்ரனுக்கு ஸ்வர்க பதவி அருகதை இல்லை, ஆனால், உன் கையால் வதம் செய்யப்பட்ட காரணமாக அவன் சுவர்கம் போவான் என்றனர். ராமர் உடனே, நீங்கள் திருப்தி அடைந்தது உண்மையானால், இறந்த குழந்தை உயிர் பிழைக்கட்டும் என்று வேண்டினார். அகால மரணம் என் ராஜ்யத்தில் தோன்றுவது, என் தவறே என்று உலகத்தார் குற்றம் சொல்வார்கள். நானும் குழந்தையை இழந்த அந்த தந்தைக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். தேவர்களும் இதைக் கேட்டு, கவலையை விடு, காகுத்ஸா, நீ இந்த தாபஸனை வதைத்த நிமிஷமே அச்சிறுவன் உயிர் பெற்று விட்டான். பந்துக்களுடன் சேர்ந்து விட்டான். உனக்கும் மங்களங்கள் உண்டாகட்டும், நாங்கள் கிளம்புகிறோம்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சம்பூக வத: என்ற எழுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
- முத்துச் செல்வம் - ஆறாம் அறிவு முகநூல் பதிவு, 27.1.20

2 கருத்துகள்:

  1. வால்மீகி இராமாயணத்தில் உத்திர காண்டம் கிடையாது. இது இடைச்சொருகல்.
    இராமாயணத்தை எழுதிய வால்மீகியே ஒரு சூத்திரர் தான். அவர் தவம் செய்து மாமுனி ஆகவில்லையா? தானே ஒரு சூத்திரனாக இருந்து தவம் இயற்றிய மாபெரும் முனிவர் வால்மீகி, சம்பூகன் என்னும் சூத்திரன் தவம் செய்ததால், இராமபிரான் கொன்றார் என்பதை எப்படி சொல்லி இருப்பார்.
    இக்கட்டுரை தவறானது.

    கம்பர் எழுதிய இராமாயணத்திலும் உத்திரகாண்டம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராமாயணக் கதையே காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெற்ற கதையேயாகும். நூற்றுக்கணக்கான இராமாயணக் கதைகள் உலவிவருகின்றன. காளிதாசர் இயற்றிய 'இரகுவம்சம்' என்கின்ற காவியத்தில் 'சம்பூக வதம்' விரிவாக கூறப்பட்டுள்ளது. வால்மீகி இராமாயணத்தின் இறுதி பகுதியில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார். அங்கே வால்மீகியை சூத்திரராக கூறப்படவில்லை.

      நீக்கு