பக்கங்கள்

புதன், 25 செப்டம்பர், 2019

உண்மை இராமாயணம் (3)

20.3.1948  - குடிஅரசிலிருந்து


சென்ற வாரத்  தொடர்ச்சி
சீதை:- நாதா! இவ்வளவு கெட்டிக் காரத்தனமாகவும், பஞ்ச தந்திரமாகவும், ரகசியமாகவும், நடந்த சங்கதி எப்படி கைகேயிக்கு நல்ல சமயத்தில் தெரிந்து விட்டது?

இராமன்:- அதுதான் எனது பொல் லாத காலம். கைகேயினுடைய வீட்டில் மந்தரை என்ற கிழவி வேலைக்காரியாக இருக்கிறாள். அவள் என் தகப்பனாருக்கும் கைகேயிக்கும் கலியாணம் ஆகி கைகேயி அயோத்திக்கு வரும் போது, கைகேயியோடு கூடவே வேலைக் காரியாக  வந்தவள். அவளுக்குக் கலியாண காலத்தில் நடந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம் தெரியும். அந்தப் பேச்சு வார்த்தையின்படி அயோத்தி பரதனுக்குச் சொந்தமானது என்பதை அவள் உணர்ந்தவள். நேற்று நம் வீட்டு வேலைக்காரி, கைகேயி வீட்டுக்குப் போன போது பட்டாபிஷேகச் சங்கதி யைச் சொல்லிவிட்டாள். மந்தரை உடனே கைகேயிக்குச் சொல்லி அவள் புத்தியைக் கெடுத்து விட்டாள். அதனால் கைகேயி ஆத்திரப்பட்டு என்னை நாட்டிலேயே வைக்கக்கூடாது என்று முடிவு செய்து விட்டாள். காரணம் நான் இங்கிருந்தால் பரதனுக்கு ஏதாவது கேடு செய்வேன் என்கிற பயம்தான்.

சீதை: அடடா! இந்த வேலைக்காரி முண்டை கூனியாலா இப்படி நேர்ந்தது! இதற்கு வேறு தந்திரம் ஒன்றும் இல்லையா?

இராமன்:- இப்போதைக்கு ஒரு மார்க்கமும் இல்லை. நான் சரியென்று ஒப்புக்கொண்டுக் காட்டிற்குப் போக வேண்டியது தான். பிறகு சரிப்படுத்திக் கொள்ளலாம்!

சீதை:- பிறகு எப்படிச் சரிப்படுத்திக் கொள்ள முடியும்? தாங்கள் சென்ற உடன் பரதனுக்குப் பட்டமாகிவிடுமே!

இராமன்:- எப்படி ஆனாலும் சரி! பரதன் ஒரு ஏமாளி. அவனைச் சுலபத்தில் ஏமாற்றிவிடலாம், நீ மாத்திரம் நான் சொன்னபடி கேட்டால் போதும்.

சீதை:- நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் உடனே செய்கிறேன்.

இராமன்:- நீ செய்ய வேண்டியது என்னவென்றால், நான் காட்டிற்குப் போன உடன் பரதன் இங்கு வர வழைக்கப்படுவான். அவனுக்குப் பட் டாபிஷேகம் நடக்கலாம். நீ அவனுக்குத் தக்கபடி நடந்து நீ அவனைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். அவனை நீ சொல்லுகிறபடி ஆடும்படிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து விட்டால் பிறகு அவனாலேயே என்னை அழைத் துக் கொள்ளும்படிச் செய்யலாம். பிறகு நீ தான் ராணி. உன்கையில் தான் அயோத்தி. ஆனால் காரியம் மிகக் கெட்டிக்காரத்தனமாகச் செய்ய வேண்டும். செய்வாயோ?

சீதை:- நாதா! இது என்ன ஆகக்கூடிய காரியமா? பரதனை இந்த விதமாக ஏமாற்றவே முடியாது. அதுவும் என்னால் முடியவே முடியாது. இராமன்:- சீதாய்! அதென்ன அப்படிச் சொல்லுகிறாய்?

சீதை:- நாதா! அது என்ன காரணமோ, பரதனுக்கு என்னைக் கண்டால் பிடிப்பதே இல்லை. என்மேல் அவனுக்கு நமது திருமணம் ஆன காலத்திலேயே வெறுப்பு. என்னிடம் பேசுவதில்லை. கொழுந்தனாயிற்றே என்று நானாகச் சிரித்தால், விளையாடினால் சிறிது கூட லட்சியம் செய்வதில்லை.

இராமன்:- ஆம்! அவன் உன்னைக் கேவலமாகத்தான் மதித்து வந்திருக் கிறான். இருந்தாலும் அந்தக் காலத்தில் அவன் சின்னப்பையன். இப்போது சரி யான ஆளாக ஆகி இருப்பான். ஆதலால் நீ அவனைச் சரிப்படுத்தி விடலாம். எப்படி எனில் என்னைப் பற்றிக் கவலைப் படுபவள் போல் காட்டிக் கொள்ளாதே! என்னை அவன் முன் புகழ்ந்து பேசாதே! என்னிடம் வெறுப்புள்ளவள் போல் காட்டிக் கொள்! எப்போதும் அவன் பக்கத்தி லேயே இரு! சரிப்பட்டு விடுவான். பிறகு நமது ராஜ்யம்தான்.

சீதை:- நாதா! அந்தக் காரியம் என்னால் முடியாது! என்னைக் கண் டாலே மகாக் கசப்பு போல் வெறுக் கிறான். அவனை நான் எப்படிச் சரிப்படுத்த முடியும். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை! அது மாத்திரம் செல்லாது அவனிடம்! இந்த வழி வேண்டாம்! பெண்டாட்டியைக் கொடுத்து ராஜ்ய செல்வாக்கு பெற்றாய் என்ற பேர் வேண்டாம்! அப்படி அவ னைச் சரிபடுத்த முடியாது. வீணாகப் பேர் கெட்டு விடும். வேறு ஏதாவது வழிபாருங்கள்.

இராமன்:- வேறு வழி என்ன? பேசாமல் தகப்பனார் சொல்லுக்குக் கட்டுப்பட்டு காட்டுக்குப் போவது போல் சொல்லிக் கொண்டு காட்டுக்குப் போக வேண்டி யதுதான். மற்றபடி வேறு ஏதாவது தகராறு செய்வதனால் அது முடிவதாய் இருந்தாலும் மிகவும் பழிக்கு இடமாகி விடும். அதாவது லட்சுமணன் சொன்ன படி என் தகப்பனாரைச் சிறையில் வைத்து விட்டு விரோதிகளை நாசம் செய்து ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாம். ஆனால் அதிலிருந்து உண்மை விஷயம் அதாவது இந்த ராஜ்யம் பரதனுடையது; அவனை மோசம் செய்து இப்படிப்பட்ட காரியத் தால் நான் கைப்பற்றி விட்டேன் என்பது வெளியானால் குடிகள் மதிக்க மாட்டார்கள். அதோடு எதிர்ப்பாகவும் ஆகிவிடுவார்கள். கேகய நாட்டுடன் போர் ஏற்படும். உலகம் என்னை மிகமிகக் கேவலமாக மதிக்கும். இவ்வள வும் தவிர மற்ற தம்பிமார்களும், தங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற கலகத்துக்குத் தொடங்கி விடுவார்கள். இப்போதே லட்சுமணனுக்கு இந்த பூமியை ஆளவேண்டுமென்கிற ஆசை இருக்கிறது. அவன் இப்போதே என்னைக் கூட மீறி ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொள் ளத் துடிக்கிறான். ஆதலால் இப்போ தைக்கு நான் பேசாமல் காட்டுக்குப் போக வேண்டியதுதான். பிறகு எப்படியும் வகை செய்து கொள்ள லாம் என்று எனக்கு தைரியம் இருக்கிறது. நான் காட்டுக்குப் போன பின்பு, எப்படியும் பரதன் என்னிடம் வருவான். அவன் சுத்தப் பயித்தியக்காரன். அவனைச் சுலபத்தில் ஏமாற்றி விடலாம்.

தொடரும்...

- விடுதலை நாளேடு, 28. 6. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக