20.3.1948 - குடிஅரசிலிருந்து
சென்ற இதழ் தொடர்ச்சி
சீதை: என்னைப் போல் நீங்கள் என்ன தாய் தகப்பன் இன்னாரென்று அறிய முடியாத பிள் ளையா? அல்லது உங்கள் தகப்பனார்க்கு நீங்கள் என்ன வைப் பாட்டி மகனா? எனக்குத் தாங்கள் சொல்வதிலிருந்து புத்தி எப்படி எப்படியோ எங்கு எங்கோ போகிறதே! இந்தப் பட்டாபிஷேகம் என் தகப்ப னாருக்கும், பரதன் பாட்டன், மாமன் முதலியோருக்கும் தங்கள் மீது மிகவும் அன்பும் உயிர் போன்ற ஆசையும் உள்ள உங்கள் சிற்றன்னை கைகேயி அம் மாளுக்கும் கூடத் தெரிவிக்கப்படாமல் ஏற்பாடு செய்யப்பட்டது என்றால், இது மகா ஆச்சரியமாகவும், மகா மூடு மந்திரமாகவும் இருக்கிறதே! இதில் ஏதோ ரகசியம், அதுவும் திருட்டுத் தனமான துரோகமான சூழ்ச்சி ரகசியம் இருக்க வேண்டும். அதைச் சற்று விளக்குங்கள். என் மனம் அதை அறியத் துடிக்கின்றது. நாதா! நாதா! சற்று சொல்லுங்கள்.
இராமன்:- சீதாய்! நீ ஊகிப்பது நிஜம் தான். இதில் பல சூழ்ச்சிகள் இருக்கின்றன என்பதும் மெய்தான். அவற்றைச் சொல்லுகிறேன். கேள்! நான் அரசனுக்குப் பட்ட மகிஷியின் புத்திரன் என்பதிலும், சிரேஷ்ட (மூத்த) புத்திரன் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் நமது அரசர் பரதனின் தாயாரான கைகேயியை மூன்றாந்தாரமாக மணக்க வேண்டுமென்று ஆசை கொண்டார். ஏனென்றால் அந்த அம்மாள் மகா சுந்தரவதி. உலகில் உள்ள பெண்களில் எல்லாம் மிக அழகியவள். மிக்க குணவதி, அந்தச் சமயத்தில் என் தாயார் மிகக் கிழப்பருவம் அடைந்தவர்களாய் இருந்தார்கள். ஆதலால் அரசர் கைகேயி யின் குணத்தையும் அழகையும் கேள்விப் பட்டுக் கேகய மன்னனிடம் சென்று பெண் கேட்டார். கேகய மன்னன் கிழ வனுக்குப் பெண் கொடுக்கவும் அதுவும் மூன்றாம் தாரமாய் கொடுக்கவும் சம்மதிக்காமல் மறுத்து விட்டார். பிறகு என் தந்தையார் இந்தக் குறைகளுக்குப் பரிகாரமாகத் தனது ராஜ்யத்தைக் கைகேயிக்குக் கொடுத்து விடுவதாகவும் கைகேயி, தனது மகனுக்குப் பட்டம் கட்டிக் கொள்ளத் தான் சம்மதிப்ப தாகவும் கூறி அன்றே சுலபமாக ராஜ்யத்தைக் கைகேயிக்கு ஒப்புவித்து அந்த அம்மாளுக்காக தான் ஆளுவதாகச் சொல்லி ஒப்புக் கொண்டு கைகேயியைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் இந்த நாடு கைகேயிக்கும், பரதனுக்கும் சொந்தமானதாக இருந்து வருகிறது. இதனால் எனது தந்தையார் பரதனுக்கும், பரதன் பாட்டனார், மாமன் முதலியவர்களுக்கும், பரதன் தாய், கைகேயி அம்மைக்கும் தெரியா மலும் பரதன் வருவதற்கு முன்னாலு மாகப் பட்டாபிஷேகத்தைத் திடீர் என்று நினைத்து ஒருவருக்கும் தெரி யாமல், நினைத்த மறுநாளே பட்டா பிஷேக முகூர்த்தம் வைத்துக் கொண் டார். இந்தப் பட்டாபிஷேகத்தை உன் தந்தை ஜனகமகாராஜாவுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று நீ கேட்கக் கூடும். ஏன் தெரியவில்லை என்றால் உன் தகப்பனாருக்குத் தெரிவிப்பதாய் இருந்தால் கைகேயியின் தகப்ப னாருக்கும் தெரிவிக்க வேண்டி வரும். அப்படித் தெரிவிக்கா விட்டாலும் கூட உன் தகப்பனாருக்கு இப்படி மகாராஜா பட்டாபிஷேகத்தை இவ்வளவு ரகசியமாய் நடத்துவது பற்றி அதிருப்தி ஏற்படக் கூடும். இவை எல்லாம் இல்லா விட்டாலும் அவரும் வந்திருக்கிற சமயத்தில், இப்படிப்பட்ட தடையான காரியங்களும், சூழ்ச்சி வெளியாகும் காரியங்களும் நடந்து விட்டால் அதை அவர் சகிக்க மாட்டார். என் தகப்பனார் மீது மிகுந்த கோபமும் அசிங்கமும் கொள்வார். ஆனதால் ரகசியமாகக் காரியம் செய்ய வேண்டி வந்தது. இது வெளியாகிவிட்டது. இதனால் இந்த கதி ஏற்பட்டது. ஆதலால்தான் இதில் ஆச்சர்யப்படத்தக்கது ஒன்றுமில்லை என்றேன்.
சீதை:- அப்படியா சங்கதி! தாங்களும் தங்கள் தகப்பனாரும் மிகச் சாமார்த்திய மாய், நல்ல வேலை செய்திருக்கிறீர்களே! இதற்கு வசிஷ்டர் எப்படி ஒப்புக் கொண் டார்?
இராமன்:- என் தகப்பனார் இஷ்டப் படி கேட்டு நடப்பவர்தானே நமது குரு வசிஷ்டர். அன்றியும் அவருக்கும் இந்த தந்திர ஏற்பாடுகள் எல்லாம் தெரியும். அவரும்தான் இந்த முயற்சியில் பங் கெடுத்துக் கொண்டு யோசனை சொல்லி இருக்கிறார். குடி ஜனங்கள் பின்னால் சங்கதி தெரிந்தால் அவர்கள் நம்மை அவமதித்து விடுவார்களே என்று கருதி, என் தகப்பனார் என்னைக் குடிஜனங்களுக்கு நல்லவனாய் நடந்து கொள்ளும்படியும், அடிக்கடி அவர் களைக் காணும் படியும், அவர்கள் சேமலாபங்களை விசாரித்து அன்பு வார்த்தை கூறும்படியும் செய்து அவர்களை என் வசமாக்கி வைத்தார். இவ்வளவு மாத்திரம் தானா? இன்னும் அவர் செய்த நல்ல காரியங்கள் எவ்வளவு தெரியுமா? கலியாணமானவுடன் பரத னைக் கேகய நாட்டிற்கு அனுப்பி விட்டார்.
அவனுக்கும் குடிகளுக்கும் சம்பந்தமில்லாமலே செய்தார். கைகே யிக்கும் என்னை நல்ல பிள்ளையாகவே நடந்து அவளது பூரண அன்பையும், நம்பிக்கையையும் பெரும்படியும், கைகேயிக்குப் பரதன் ஞாபகமே வராமல் இருக்கும்படி நடந்து கொள்ளவும் செய்தார். என்னமோ ஒருவராலும் செய்ய முடியாததான, அவ்வளவு தந்திரமாகவும், முன்னேற்பாடாகவும் செய்த இந்தக் காரியம், கைக்கெட்டியது வாய்க் கெட்டாமல் போனது போல் ஆகிவிட்டது. இந்தக் கைகேயி கடைசி நிமிஷத்தில் அப்படிச்செய்து விட்டாள் என் செய்வது? எனக்கு இப்போது எவ்வளவு அவமானம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக