பக்கங்கள்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

பாரதப் பாத்திரங்கள் (8)

சு.அறிவுக்கரசு

சத்திரியர்க்குக் கற்பிப்பதில்லை என சத்தியம் கொடுத்த துரோணன், வாக்கை மீறிப் பாண்டவர்க்குக் கற்பித்தான். வயிறு இருக்கிறதே என வாழ்ந்தவன். சொரணை ஏதும் இன்றி, துருபத மன்னனை எதிர்க்க இயலாது மருமகன் அர்ச்சுனனை ஏவிப் பழி தீர்த்தவன்.
துரோணன்

பார்ப்பன ஆசிரியர். போர்ப் பயிற்சி அளிப்பவன். வில்வித்தையில் தேர்ந்தவன். கற்பிப்பதில் கைதேர்ந்தவன். தனுர்சாஸ்திரம் கற்பிக்கும் குரு. வாள், கதை போன்ற ஆயுதங்களைக் கொண்டு ஒண்டிக்கு ஒண்டி போரிடும் முறை இருந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தாக்குதல் முறை. வாள் சண்டையின் வீரர்கள் அருகருகே இருந்துதான் மோதமுடியும். வில் சண்டையில் வெகு தூரத்தில் இருந்தே தாக்கலாம். தாக்கப்படுபவன் தாக்கியவனைப் பார்க்கும் வாய்ப்புகூட இருக்காது.

வாலியை ராமன் தாக்கிய மாதிரி மறைந்து பதுங்கி இருந்துகூட தாக்கலாம் என்பது இதில் வசதி. ஆரியரின் ஆறு சாஸ்திரங்களில் தனுர் சாஸ்திரம் ஒன்று. அதைக் கற்பிப்பவன் துரோணன்.

அவனிடம் கற்றிட காட்டுவாசி வேடன் இளைஞன் ஒருவன் வந்தான். நிறையப் பேர் அரச குடும்பத்தார்க்குக் கற்பிப்பதால் நேரமில்லை எனக் கூறிவிடுகிறான் துரோணன். ஒரு மாணவனைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள நேரம் தடையாக இல்லை. ஜாதி தடையாக இருந்தது. நூற்றைம்பது பேர் சத்திரியர்கள். அவர்களுடன் தாழ்த்தப்பட்ட ஜாதியானும் சேர்ந்து படிப்பதா? புதிய மாணவன் ஏகலைவனின் ஜாதியைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்தான் துரோணன் மறுத்தான். அவன் ஆச்சாரியனாம். குருவாம். இன்றைய இந்திய நாட்டில் அவன் பெயரில்தான் சிறந்த விளையாட்டு வீரர் விருது தரப்படுகிறது. அசிங்கம். கொடுமை.

ஏகலைவன் தொங்கிய முகத்துடன் திரும்பிவிட்டான். துரோணன் போன்று ஓர் உருவை மண்ணால் செய்து வைத்து அவனாகவே வில்வித்தையைக் கற்றுக் கொண்டான்.

தெருநாய் ஒன்று அந்தப் பொம்மையின் மீது காலைத் தூக்கி மூத்திரம் பெய்துவிட்டது. நாய்க்கு எண்ணெய் வழியும் செக்கும் ஒன்றுதான். அதேபோல் எண்ணெய் வழியும் சிவலிங்கமும் ஒன்றுதான். இரண்டையும் நக்கும். இரண்டின் மீதும் மூத்திரம் பெய்யும்.

ஏகலைவனின் குரு துரோணன். அவன் சிலை அது. சாஸ்திரப்படிப் பிரதிஷ்டை செய்யப்படாமல், வேதகோஷம் எழுப்பாமல், குடம் நீரைக் கொட்டாமல் வானத்தில் பருந்து பறந்து சுபவேளை எனக் குறிப்பு காட்டாமல் வைக்கப்பட்டதாக இருக்கலாம். வேதியன் வைக்காமல் வேடனே வைத்ததாக இருக்கலாம். என்றாலும் நாய் மூத்திரம் பெய்து கும்பாபிஷேகம் செய்யலாமா?

கோபப்பட்டான் ஏகலைவன். வில்லை எடுத்தான். அம்பைத் தொடுத்தான். நாயின் வாயைக் கட்டிவிட்டான்.

 


நாய் தன் எஜமானிடம் போய் வாலை ஆட்டி நின்றது. அதை வளர்த்தவன் அர்ச்சுனன். அவனுக்குக் கோபம் வரவில்லை. பயம் வந்தது.

நாயின் வாயை அம்புகளால் கட்டிடும் வித்தையைக் கற்றவன் அவன் மட்டுமே என்று துரோணன் சொல்லி இருந்தான். அக்னிகோத்திர முனிவன் ஒருவனும் துரோணனும் மட்டுமே இந்த வித்தை தெரிந்தவர்கள் என்பதாகச் செய்தி. மூன்று பேரைத் தவிர மற்றொரு வித்தகன் இருக்கிறான். அவன் யார் என்பதால் தான் அர்ச்சுனன் அதிர்ந்துவிட்டான்.

விசாரித்ததில் அவன் ஏகலைவன் என்பது தெரிந்தது. துரோணன் _ துரோகன் என்றானான். குரு தட்சணை என்பதாகக் கட்டை விரலை வெட்டிக் கேட்டான். இவனும் கொடுத்தான். இப்படிப்பட்ட மூட விசுவாசம் காட்டித்தான் பார்ப்பனர்களை உயர்த்தினர்.

ஜாதியால் கீழானவன் எனக் கூறி வித்தை கற்பிக்க மறுத்துவிட்டவன் எப்படி குரு? அவனுக்கு ஏன் தட்சணை? விதைக்காது விளையும் கழனியா பார்ப்பனர்?

சுயமாகவே தேர்ச்சி பெற்று ஏகலைவன், அர்ச்சுனனுக்கு நிகராக ஆகும்போது... துரோணன் எதற்காக?

துரோகம் செய்வதற்காக! தனக்கு நிகர் யாருமில்லை என்றிருந்த அர்ச்சுனனை நிகர்த்த ஏகலைவன் இனிமேல் வில்லை நாணேற்ற முடியாத நிலையை ஏற்படுத்திட கட்டை விரலை வாங்கி விட்டானே! ஒரு வீரனை ஊனப்படுத்துகிறான், மற்றொரு வீரன் பார்த்துக்கொண்டு மவுன சாட்சியாக இருக்கிறான். என்னய்யா தர்மம்? ஜாதி தர்மமோ?

பரத்வாஜ கோத்ரம் என்ற இன்றும் சில பார்ப்பனர்கள் உண்டு. அந்தக் கோத்ரத்தின் ஆதிகர்த்தா பரத்வாஜனின் மகன்தான் துரோணன். ஆயுதப் பயிற்சி பெறும்போது சக மாணாக்கன் துருபதன். பாஞ்சால நாட்டு மன்னன். பின்னாள்களில் மகள் திரவுபதையால் பாண்டவர்களின் மாமனார் ஆனவன்.

ஏழைப் பார்ப்பான் துரோணன். துருபதனிடம் பழைய பழக்கத்தில் பசுமாடு ஒன்று தருமாறு உரிமையுடன் கேட்கிறான். மன்னன் தரவில்லை. துரோணன் துருபதனை அடக்க வஞ்சினம் கூறுகிறான். துரோணன் பார்ப்பனன். துருபதன் சத்திரியன். யார் உயர்ஜாதி? போராட்டம் வெடித்தது.

துரோணனுக்கு உதவியவன் சத்திரிய அர்ச்சுனன். தன் மாணவன் என்பதால் குருதட்சணையாகத் துருபதனைச் சிறைபிடித்துத் தருமாறு கேட்டான். அர்ச்சுனன் செய்தான்.

ஆரியம் சத்திரியனைப் பயன்படுத்தி சத்திரியனைப் பழிவாங்கியது. இரண்டு ஆடுகளை மோதவிட்டு இடையில் இருந்து இரத்தம் குடித்தது நரி.

பாரதப் போரில் கவுரவர் பக்கமிருந்து போர்புரிந்த துரோணன் துருபதனைக் கொன்று விடுகிறான். துரோணனைக் கொல்ல கிருஷ்ணன் துரோகமே செய்கிறான். அவன் மகன் அசுவத்தாமன் மீது உயிராக இருப்பவன் துரோணன். அவன் கொல்லப்பட்டான் என்ற வதந்தியைப் பரப்புகிறான். வீமன் கொன்றது அந்தப் பெயர் கொண்ட யானையை. ஆனாலும் யானை என்பதைச் சொல்லாமல் அசுவத்தாமனைக் கொன்று விட்டதாக வீமன் கூறுகிறான். கேட்ட துரோணன் தர்மனைப் பார்த்துக் கேட்டான். தர்மன் பொய் கூறுவானா?

தர்மன் பொய் சொன்னான். அவன் தேரும் எல்லோரின் தேரைப் போலவே தரையில் ஓடியது. முதல் தண்டனை. செத்த பிறகு தர்மன் நரகம் போனான். கடைசி தண்டனை.

“நம்பிய சினேகிதனைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் ராமனும் பாவத்தைச் சுமந்து வாலியை அதர்ம வழியில் கொல்லத் தீர்மானித்தான். அவ்வாறே யுதிஷ்டிரனும் தன் புகழைத் தியாகம் செய்ய உறுதி கொண்டுவிட்டான்’’ என்று சப்பைக் கட்டு கட்டினார் ராஜாஜி. (மகாபாரதம் பக்கம் 372)

நிலைகுலைந்த துரோணன் திகைத்து அமர்ந்துவிட்டான். திட்டத்துய்மன் என்பானிடம் கிருஷ்ணன் சைகை காட்ட அவன் துரோணனை வெட்டிக் கொன்றுவிட்டான்.

சத்திரியர்க்குக் கற்பிப்பதில்லை என சத்தியம் கொடுத்த துரோணன், வாக்கை மீறிப் பாண்டவர்க்குக் கற்பித்தான். வயிறு இருக்கிறதே என வாழ்ந்தவன். சொரணை ஏதும் இன்றி, துருபத மன்னனை எதிர்க்க இயலாது மருமகன் அர்ச்சுனனை ஏவிப் பழி தீர்த்தவன்.

ஜாதித் திமிர் பேசி வாழ்க்கை முழுவதும் நடந்துகொண்ட பரத்வாஜ கோத்ரத்தின் இரண்டாம் தலைமுறையும் அழிந்தது. ஜாதி இன்னமும் அழியவில்லை.

ஆள்கள் தீர்வது தீர்வாகாது. தத்துவம் தீர்த்துக்கட்டப்பட வேண்டும்.

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக