சு.அறிவுக்கரசு
பீஷ்மன்
பீஷ்ம பிதாமகன் என்பார்கள். கங்கையைக் கட்டிக் கொண்டானாம் மன்னன் சந்தனு. எட்டுப் பிள்ளைகளாம். கங்கை நதி பிள்ளைகள் பெற்றிருக்கிறது. அறிவியலுக்கு அடிப்படையான இந்து மதத்தில்! எல்லாப் பிள்ளைகளையும் தாய்தான் வளர்ப்பாளாம். எட்டாவது பிள்ளை தேவவிரதன். மன்னன் மகனுக்குத் தேவையான கல்வி, பயிற்சிகளை அளித்தாள். அறிவும், வீரமும் பெற்றவனாகத் தந்தையிடம் அனுப்பி வைத்தாள் தாய். சந்தனு அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிப் பக்கத்தில் வைத்துக் கொண்டான்.
அத்தோடு தன் கடமை முடிந்ததைப் போல கங்கை சந்தனுவை விட்டுப் பிரிந்துபோனாள். சந்தனு மச்சகந்தியைப் பார்த்து மயங்கினான். காதலைக் கூறினான். தன் தந்தையிடம் பேசச் சொன்னாள் மச்சகந்தி. அவன் நிபந்தனை விதித்தான். மச்சகந்தி மூலம் பிறக்கும் மக்களே அரசாள வேண்டும் என்றான். சந்தனு மனமில்லாததால் மறுகிக் கொண்டிருந்தான். விவரம் தெரிந்த தேவவிரதன் அப்பனுக்குப் பெண் கேட்டுப் போனான். “நான் கங்கையின் மகனல்லன், இனி, நின் மகள்தான் என் அன்னை. அவள் மகன் என் தம்பி, அவன்தான் அஸ்தினாபுரியை ஆள்வான். கவலையை விடு. என் தந்தைக்கு உன் மகளைக் கட்டி வை’’ என்கிறான்.
“சரி தம்பி! உன் அப்பாவின் மேல் உள்ள பற்றினால் நீ அரசுரிமையைத் துறக்கிறாய், உன் பிள்ளைகளும் விட்டு விடுவார்களா?’’ என்ற கேள்வியை எழுப்புகிறான். “நான் சாகும்வரையில் என் விந்து வெளியே வராது’’ என்று உறுதி கூறுகிறான் தேவவிரதன். “சரதம் முற்றிய மெய்த்தாதுவும் மூலத் தழலுடன் மீதெழும் தகைத்தே’’ வில்லிபுத்தூரானின் பாரதம் பாடும். யோகமுறையில் குண்டலினி எழுப்புதல் என்பார்கள். குய்யத்திற்கும் (குறி) குதத்திற்கும் மையப்பகுதி சக்கரம் மூலம் எனப்படும். அங்குச் சுரக்கும் சுக்கிலம் வெளியே சிந்தப்படாமல் அடக்கி வாழ்வேன் என்கிறான். நைஷ்டிக பிரம்மச்சாரி என்பார்கள் வடநூலார். கனவில்கூட விந்து விடாதவர்கள் என்பது அதற்குப் பொருள்.
இதனைக் கேட்ட வானுலகத் தேவர்கள், “பீஷ்மன், பீஷ்மன்’’ என்று முழங்கினராம். தேவவிரதன் பீஷ்மனானான். “கடும் விரதமிருப்போன்’’ எனப் பொருள். எட்டுப் பிள்ளை பெற்றவன் இரண்டாம் தாரம் தேடுகிறான். அவன் மகனோ பீஷ்மவிரதம் பூணுகிறான். இதுதான் பாரதப் பண்பாடு!
“தழுவும் போதெல்லாம் உயிர் தழைக்கும் அமுதத்தை அளிக்கிறாள் பெண்’’ என்பான் வள்ளுவன். (குறள் 1106) அத்தகைய அமுத ஊற்றையே புறக்கணிக்கிறான் தேவவிரதன். பெண் சுகத்தை அறியாதவன் எந்நாளும் அதை அடைய முடியாதவாறு தடை போடப்பட்டது. இடையறாது அதனை அடைந்து வாழ்ந்தவன் தொடர்ந்து அடையுமாறு மடை திறக்கப்பட்டது.
சந்தனுவும் மச்சகந்தி எனப்பட்ட சத்தியவதியும் மணந்து கொண்டனர். இரண்டு மகன்கள் பிறந்தனர். ஒருவன் சித்திராங்கதன். மற்றவன் விசித்திரவீரியன்.
சித்திராங்கதன் மணம் செய்யாமலே மரித்துப் போனான். விசித்திரவீரியன் இரு மனைவிகளைக் கட்டிக் கொண்டாலும் பிள்ளை இல்லாமலே இறந்து போனான்.
சத்தியவதியும் அவளின் தந்தையும் விரும்பியவாறு சத்தியவதியின் வம்சம் ஆளமுடியவில்லை. அரசுரிமை பெறப் பிள்ளைகள் இல்லை. அவர்களுக்குப் பிள்ளை கொடுக்குமாறு பீஷ்மனைக் கேட்டாள் சத்தியவதி. அவன் விந்துவை வெளியே விடேன் என்ற வைராக்கியத்திற்கு வித்தே இவள்தான். இப்போது, விந்துவை வெளியே விடச்சொல்லி அவளே கேட்கிறாள். பீஷ்மன் உறுதியாக நின்றான்.
குரு வம்சத்தில் சிறப்பானவனாம் பீஷ்மன்.
அவன் செய்ததைப் போல் எவனும் செய்ய மாட்டான். விசித்திர வீரியனுக்குத் திருமண மாகாமல் இருந்த நேரம் அவனுக்குப் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை.
காசியின் அரசனின் மூன்று பெண்களுக்கும் சுயம்வரம். பெண்களும் ஆண்களும் கூடித் தங்கள் இணையரைத் தேடி முடித்துக் கொள்ளும் முறை. காசி மன்னன் முறைப்படி எல்லாருக்கும் அழைப்பு அனுப்பினான். குரு வம்சத்தினர்க்கு அழைப்பு இல்லை.
அவமானம்தான். குரு வம்சத்து பீஷ்மனுக்கோ கோபமான கோபம். மண்டைக்கு ஏறிவிட்டது கோபம். இருந்தாலும், தன் தம்பிக்குத் திருமணம் செய்விக்கப் பெண் வேண்டுமே. சுயம்வரத்திற்குப் பீஷ்மன் போனான்.
காசி அரசனின் மூன்று மகள்களையும் வலுக்கட்டாயமாகத் தன் தேரில் ஏற்றிக் கடத்திக் கொண்டு வந்துவிட்டான், அஸ்தினாபுரிக்கு. இது அடாது, தகாத செயல் என்று நியாயம் கேட்ட மன்னர்களை அடித்துத் துரத்திவிட்டான் பீஷ்மன். தேவர்களால் பாராட்டப் பெற்றுப் பெயர் மாற்றம் பெற்றவன் அடாத செயல் செய்கிறபோது தேவர்கள் என்ன செய்தார்கள்? ஒன்றும் செய்யவில்லை.
மூவரில் மூத்தவள் அம்பை. சால்வ அரசனைக் காதலித்தவள். அவனை அடையச் சுயம்வரத்திற்கு வந்தவள். பீஷ்மன் அவளையும் கடத்திக்கொண்டு வந்துவிட்டான். காதல் விசயம் தெரியவந்ததும் அவனைச் சாலுவனிடம் அனுப்பிவிட்டான் பீஷ்மன்.
சால்வன் அவளை ஏற்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிய அம்பை விசித்திரவீரியனிடம் சென்றாள். தன் தங்கைகள் இருவருடன் தன்னையும் சேர்த்து மணந்து கொள்ளக் கேட்கிறாள். அவன் மறுத்து விடுகிறான்.
பீஷ்மனிடம் கேட்கிறாள். வயதானவனாக இருந்தாலும் சரி என்று துணிந்து கேட்கிறாள். அவனோ தன் வைராக்கியத்தை எடுத்துக் கூறி மறுக்கிறான்.
அம்பைக்கு வந்தது கோபம். “பீஷ்மா! உன்னை யாரும் அழைக்காமலிருந்தும் சுயம்வரத்திற்கு வந்தாய். சால்வனை மணக்கவிருந்த என்னையும் கடத்திக் கொண்டு வந்தாய். உன் தம்பிக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லையென்று எங்களை கடத்தி வந்து நீ செய்தது முறையா? நீ எப்படி பெரிய மனிதன்?’’ நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவது மேல் என்ற நிலைக்குச் செல்லும்படி கேட்டாள். பாரதப் பிதாமகன் பீஷ்மனுக்கு ரோஷமேயில்லை. சலனமே இல்லாமல் இருந்தான்.
பிறநாட்டு மன்னர்களை அணுகித் தன் பக்கத்து ஞாயங்களைக் கூறினாள். யாரும் பீஷ்மனுக்கு எதிராகப் பேசவும் செயல்படவும் தயாரில்லை. அச்சம்! அவனை எதிர்க்க பயம்.
பரசுராமனிடம் போய்ச் சொன்னாள் பேதைப் பெண்ணுக்காகப் பீஷ்மனிடம் பேசினான். முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா. மூர்க்கனான பீஷ்மன் பரசுராமனிடம் மோதினான். அவனை வெல்ல பரசுராமனால் முடியவில்லை.
கடவுள் முருகனிடம் முறையிடுகிறாள் அம்பை. அவன் தந்தை சிவனிடம் வேண்டினாள். அவனோ, “இப்பிறப்பில் பீஷ்மனை வெல்லுதல் இயலாது. அடுத்த பிறப்பில் நீ வெல்வாய்’’ எனக் கூறிவிட்டான்.
அடுத்த பிறவியை விரைவில் அடைய இப்பிறவியை முடிக்க வேண்டுமே. தீயில் இறங்கித் தன்னைப் பொசுக்கிக் கொண்டுவிட்டாள்.
அடுத்த பிறவியில் பெண்ணாகவே, மன்னன் துருபதனுக்கு மகளாகப் பிறக்கிறாள் முருகன் தந்த மாலையைப் போட்டுக் கொள்கிறாள் சிகண்டி என்பவளாகிறாள்.
இந்த சிகண்டியினால்தான் பீஷ்மன் கொல்லப்பட்டான். பெண்ணாகப் பிறந்து, வாழ்ந்து, ஆணாக மாறிய சிகண்டியால் கொல்லப்பட்ட மகாவீரன் பீஷ்மன். பரசுராமனாலேயே வெல்லப்பட முடியாதவன் எப்படி பால்மாறிய ஆணான சிகண்டியால் கொல்லப்பட்டான்? தர்ம நியாயங்களின்படி வாழ்ந்தவன் எனப்படுபவன் எப்படி இந்த வீழ்ச்சியை அடைந்தான்? சுயம்வரத்திற்கு அழைப்பு இல்லாதபோது ஏன் போனான்? பெண் தேட வேண்டுமென்றால் மாப்பிள்ளையான விசித்திரவீரியனைத்தானே அனுப்ப வேண்டும். அவன் அண்ணனான பீஷ்மன் ஏன் போனான்?
பெண்களைக் கடத்தி வந்து தன் தம்பிக்கு மணம் முடிப்பேன் என்ற திடத்துடன் போனது என்ன ஞாயம்? என்ன முறை?
தான் நிகரற்ற வீரன். தன்னைத் தோற்கடிக்க யாராலும் முடியாது என்கிற இறுமாப்புதானே. திருமணமாகாமல் தடுக்கப்பட்டுவிட்ட ஒரு பெண்ணின் நியாயமான கோபத்தின் எதிரொலிதானே பீஷ்மனின் சாவு? (கதைப்படியே) கடவுளர்கள் மாலைபோட்டு வாழ்த்தியதும் மறுபிறப்பில் சாகடிக்க வழி ஏற்படுத்தியதும் பீஷ்மன் அநியாயக்காரன் என்ற முடிவுக்கு வந்ததன் அடையாளங்கள்தானே.
பீஷ்மன் அநியாயக்காரன் மட்டுமல்ல, தன்னலக்காரன். தன் தம்பிக்காக மூன்று பெண்களைக் கடத்தியவன், பாஞ்சாலி மானபங்கப்படுத்தப்பட்டபோது வாய்மூடி மவுனமாக, நெட்டை மரம்போல நின்றிருந்தவன் தானே?
(தொடரும்...)
- உண்மை இதழ், 1-15.6.18