பக்கங்கள்

வெள்ளி, 29 ஜூன், 2018

இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்':  ஏழாவது சொற்பொழிவாற்றிய தமிழர் தலைவர்

இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்':  ஏழாவது சொற்பொழிவாற்றிய தமிழர் தலைவர் இறுதியில் 30 நிமிடம் - கேள்விகளுக்குப் பதிலும் அளித்தார்

19, 20, 21 ஆம் நூற்றாண்டுகளில் வெளியான புத்தகங்களை


ஆதாரமாகக் கொண்டு  தமிழர் தலைவர் ஆசிரியர் ஆய்வுரை




சென்னை, ஜூன்23 இராமாயணம் - இராமன்--இராம ராஜ்யம் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வு சொற்பொழிவின் ஏழாவது சிறப்புக்கூட்டம் நேற்று (22.6.2018) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் எனும் தலைப்பில், இராமாயணத்தின் அத்துணை புரட்டு களையும் தோலுரித்துக் காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொடர் சுற்றுப்பயணங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள், அறவழிப் போராட்டங்களுக்கு இடையே இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் எனும் தலைப்பில் ஆய்வு சொற்பொழிவுக்கான ஆதாரங்களை அயராது திரட்டி ஆய்வுரையாற்றினார். ஆய்வு தொடரத் தொடர, சொற்பொழிவுக் கூட்டங்களும் தொடர்ந்தன. பார்வையாளர்களும் பெரிதும் ஆவலுடன் ஆய்வு ரையைக் கேட்கத் திரண்டனர்.

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்


தொடர் சொற்பொழிவுகள்


இராமாயணம்- இராமன்- இராமராஜ்யம் எனும் தலைப்பில் ஆய்வு சொற்பொழிவை 23.3.2018 அன்று தொடங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார். இராமாயணம் - இராமன்- இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் இரண்டாவது கூட்டம் 27.3.2018 அன்றும், மூன்றாவது கூட்டம் 10.5.2018 அன்றும் நடைபெற்றன. இராமாயணம்- இராமன்- இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவில் கம்பன் புளுகும், வால்மீகியின் வாய்மையும் எனும் துணைத் தலைப்பில் நான்காவது கூட்டம் 16.5.2018 அன்றும், அய்ந்தாவது கூட்டம் 21.5.2018 அன்றும், ஆறாவது கூட்டம் 12.6.2018 அன்றும்  நடைபெற்றன.

ஏழாவது சொற்பொழிவு


இராமாயணம்- இராமன்- இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் ஏழாவது சிறப்புக்கூட்டம் நேற்று (22.6.2018) மாலை நடைபெற்றது. முதல் சொற்பொழிவில் தொடங்கி அனைத்துக் கூட்டங்களிலும் அதே உணர்ச்சியுடன், பேரார்வத்துடனும் அறிஞர் பெருமக்கள் பலரும் தொடர்ச்சியாக கலந்து கொண்டனர். தாறுமாறாக வசைபாடுவதற்காக அல்ல இந்தக் கூட்டம். இது ஓர் ஆய்வுக் கூட்டம். இங்கே நாங்கள் பேசுவதில் ஆதாரபூர்வமானது அல்ல என்றால் வழக்கு தொடரலாம் எனும் அறைகூவலுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆய்வுரையைத் தொடங்கினார். ஏழாவது சொற்பொழிவிலும் அந்த அறைகூவலை வலியுறுத்திக் கூறினார். வீதிமன்றங்களில் மக்கள் மன்றங்களில் பதிவு செய்வதைப்போல், நீதிமன்றத்திலும் பதிவு செய்யும் வாய்ப்பு உருவாகும் என்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஏழு நாள் ஆய்வு சொற்பொழிவுகளும் அடுக்கடுக்கான ஆதாரங்களை அடிப்படை யாகக் கொண்டிருந்தன. 19ஆம் நூற்றாண்டு, 20 ஆம் நூற்றாண்டு, 21 ஆம் நூற்றாண்டுகளில் வெளி யான புத்தகங்களை ஆதாரங்களாகக் கொண்டு ஆய்வு சொற்பொழிவாற்றினார் தமிழர் தலைவர்.

தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தும் செயல்களில் சமூக ஊடகங்களில், ஆர்.எஸ்.எஸ்.சினர் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களின் மூலபலத்தை தாக்குவதுதான் நம் அணுகுமுறை. இராமனை வைத்துதான் பார்ப்பனர்கள் பிழைத்து வருகிறார்கள். அன்றைய இராமாயண கால ஆரியர்களின் அட்டூழியங்களுடன் இன்றைய சங்பரிவாரங்களின் கொலைவெறிச் செயல்களையும் ஒப்பிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பட்டியலிட்டார்.

ஆரியம் என்பது மனிதத்தன்மையற்றது. திராவிடம் என்பது மனிதநேயமிக்கது என்பதை ஒப்பிட்டு விளக்கிக் கூறினார் தமிழர் தலைவர்.

கூட்டத்தில் நிறைவுரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூட்டத்தின் முடிவில் பார்வை யாளர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.

கழகத் துணைத் தலைவர்


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இராமாயணம் -இராமன் - இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் எதிரொலியாக ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் இதழில் வெளியான தகவலை எடுத்துக்காட்டி, அல்லாவை, ஏசுவை பேசுவார்களா எனும் அவ்வேட்டின் கேள்விக்குரிய பதிலையும் அளித் தார். எங்களை இழிவுபடுத்துவதைத்தான் முதலில் பேசுகிறோம் என்பதை சுட்டிக்காட்டினார். பார்ப்பன பார்ப்பனிய எதிர்ப்பு என்பது புத்தர்காலத்தில்  தொடங்கிய பிரச்சினையாகும். சமுதாய மாற்றத்துக்கு பாடுபட்ட புத்தர், தந்தை பெரியார், அம்பேத்கர், நாராயணகுரு, மகாத்மா ஜோதி ராவ் புலே உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் எதிர்த்தே வந்துள்ளனர். புத்தர் இயக்கத்தின் தொடர்ச்சியே திராவிடர் இயக்கம். இராமாயணம் குறித்து தந்தை பெரியார் கருத்தும், அம்பேத்கர் கருத்தும் ஒன்றாக உள்ளது. இராமன் குறித்தும், இராமாயணம் குறித்தும் புத்தகங்கள் வெளியிட்டு மக்களிடையே பரப்பப்பட்டு வந்துள்ளது. ராமன் ஏக பத்தினி விரதன் அல்ல, ஏகப்பட்ட பத்தினிகளுடன் அந்தப்புரத்தில் ராமன் உல்லாசம் குறித்த வால்மீகியின் கருத்துகளை திட்டமிட்டு மறைத்து வருகிறார்கள் பார்ப்பனர்கள்.

உண்மைகள் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்று நினைப்பவர் தமிழர் தலைவர்தான். திராவிடர் கழகம்தான் என்றார் கழகத் துணைத் தலைவர்.



தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்த அறிஞர் பெருமக்கள் (சென்னை பெரியார் திடல், 22.6.2018)


நூல் வெளியீடு


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய இந்து மதத்தைப்பற்றி ஏன் பேசுகிறோம்? மகபாரதத்தில் வர்ண (அ)தர்மமும் பெண்ணடிமையும்,  கைவல்ய சாமியார் எழுதிய உண்மை இந்து மதம், பெரியார் பேருரையாளர் அ.இறையன் எழுதிய புரிந்து கொள்வீர் புராணங்களையும்- வேதங்களையும் ஆகிய நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளி யிட்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். நான்கு நூல்களின் நன்கொடை மதிப்பு ரூ.120. சிறப்புக் கூட்டத்தில் தள்ளுபடி ரூ.20 போக ரூ.100க்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், கவிஞர் கண்மதியன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்டி.வீரபத்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு,  சூளைமேடு இராமச்சந்திரன், தங்க.தனலட்சுமி, ஆ.வெங்கடேசன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்திய நாராயணன், கெடார் மும்மூர்த்தி, ஆதம்பாக்கம் சவரி யப்பன், செங்குட்டுவன், பெரு.இளங்கோ, திராவிட மாணவர் கழகம் தொண்டறம் உள்பட ஏராளமானவர்கள் வரிசையாக சென்று உரிய தொகை கொடுத்து தமிழர் தலைவர் அவர்களிடமிருந்து புத்தகங்களை பெரு மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்கள்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், த.கு.திவாகரன், மண்டல செயலாளர் தே.சே.கோபால் உள்பட ஏராளமானவர்கள் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

-  விடுதலை நாளேடு, 23.6.18

வால்மீகி இராமனை உயர்ந்தவனாகக் காட்டவில்லை

வால்மீகி இராமனை உயர்ந்தவனாகக் காட்டவில்லை; ஆனால் புளுகன் கம்பனோ கற்பனைக்கேற்ப உயர்த்திப் பிடிக்கிறான்


தயரதனுக்குப் பிறகு அரசு பட்டம் பரதனுக்கு உரியது என்று தெரிந்திருந்தும்


தான் பட்டம் சூட்டிக்கொள்ள நினைத்த இராமன் யோக்கியனா?




சென்னை, ஜூன் 22-  வால்மீகியைப் பொறுத்தவரை இராமன் சாதாரணமானவன்தான்; கம்பனோ தன் கற்பனை வளத்துக் கேற்பப் புளுகி இராமனை உயர்த்துகிறான் என்பதை ஆதாரத் தோடு எடுத்துக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம்


(கம்பன் புளுகும் - வால்மீகியின் வாய்மையும்)


12.6.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் (கம்பன் புளுகும் - வால்மீகியின் வாய்மையும்) என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு சொற் பொழிவு-6 சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்

அவரது உரை வருமாறு:

பேரன்பிற்குரிய கழகத் துணைத் தலைவர் அவர்களே, கழகத்தினுடைய முக்கிய பொறுப்பாளர்களான கொள்கைக் குடும்பத்தவர்களே, அறிவார்ந்த அவை என்பதற்கு அடை யாளமாக இங்கே குழுமியுள்ள ஆன்றவிந்தடங்கிய கொள் கைச் சான்றோர்களே, பெரியோர்களே, தோழர்களே, தாய் மார்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரு கலாச்சாரங்களுக்கிடையிலான போராட்டம்


கற்பனை என்றாலும், இராமாயணம் கதை என்றாலும், அடிப்படையான நீரோட்டம் என்பது ஒரு இனப் போராட்டம் - ஆரியப் போராட்டம் - இரண்டு கலாச்சாரப் போராட்டம் என்ற ஒரு சிறப்பான உண்மையை முன்பே எடுத்து வைத்தார்கள்.

நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் மட்டுமல்ல, பல்வேறு தமிழறிஞர்களும், விருப்பு வெறுப் பின்றி ஆய்ந்து இந்தக் கருத்துகளை அவ்வப்பொழுது வெளி யிட்டுத்தான் வந்திருக்கிறார்கள்.

ஆனால், அத்தகைய கருத்துகளை திட்டமிட்டே மறைத்து அல்லது திரித்து மக்கள் மத்தியில் அந்தக் கருத்துகள் போய் சேராமல் செய்தார்கள். அதை மாற்றிக் காட்டிய பெருமை - அதில் புரட்சி செய்த ஒரு சாதனையாளர் நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்தான்.

1922 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய அவரது இராமா யண எதிர்ப்புப் பிரச்சார போர் என்பது இன்றைக்கும் வெளிப்படையாக அது நடந்துகொண்டிருக்கின்றது. பல் வேறு காலகட்டத்தில், அந்தப் போராட்டம் ஆரியர்- திராவிடர் போராட்டம் - இரு வேறு பண்பாடுகளுக்கு இடை யில் நடைபெறுகின்ற அந்தப் போராட்டம் ஒரு தொடர் போராட்டமாகத்தான் நடந்துகொண்டு இருக்கிறது என்பதற்கு, ஒரு நல்ல உதாரணத்தை துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் அன்றாடம் நடப்பிலிருந்து சுட்டிக்காட்டினார்கள் - எடுத்துக்காட்டினார்கள்.

அமெரிக்காவில், ஃபெர்ட்டினா என்று சொல்லக்கூடிய தமிழ்ச்சங்கங்களுடைய கூட்டமைப்பு டல்லாஸ் நகரில் ஜூலை ஒன்றாம் தேதிமுதல் மூன்றாம் தேதிவரை நடை பெறவிருக்கக்கூடிய கூட்டத்திற்கு பலரையும், பல கருத்துள்ள வர்களையும் அழைத்திருக்கிறார்கள். அமைச்சர் பாண்டியராஜன் அவர்களையும்கூட அழைத்திருப்பாக கேள்வி.

தமிழ்நாட்டின் மொகஞ்சதாரோ - ஹரப்பா


இந்த சூழ்நிலையில், இன்றைக்கும், நேற்றும்கூட நாளேடு களில் வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஹரப்பா மொகஞ்சதாரோ என்று நாம் நினைக்கிறோமே, ஹரப்பா என்று அழைக்கக்கூடிய அளவிற்கு கீழடியில் ஆய்வுகள் நடைபெற்றது. நேற்று நான் கீழடிக்கு அருகிலுள்ள கச்சநத்தம் சென்று, பிறகு தூத்துக்குடிச் சென்றேன் சாலை வழியே!

அப்பொழுது தோழர்கள் அங்கே நடக்கக்கூடிய பணி களைப்பற்றி சொன்னார்கள். வெகுவேகமாக நடப்பதற்குக் காரணமான நல்ல ஆய்வாளர்கள் அங்கே விருப்பு வெறுப் பில்லாமல், அந்த ஆய்வுப் பணியிலேயே அக்கறை செலுத்தக் கூடியவர்களாக அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் அங்கே இருந்து அவர் எப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஆளானார் என்று  மிகத் தெளிவாக எல்லோருக்கும் தெரியும்.

ஒரு அரசு அதிகாரியாக இருக்கின்றவரை அமெரிக்காவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதை அரசுக்குப் பெருமை என்று கருத வேண்டுமே தவிர, அரசுக்கு சிறுமை என்று கருதினால், அது சிறுமைக் குணமுள்ள ஒரு அரசு இருக்கிறது என்றுதான் அதற்குப் பொருள்.

அந்த வகையில், அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை செல்ல அனுமதி மறுத்திருப்பது மிகமிகத் தவறான ஒன்று - கண்டிக்கக்கூடிய ஒன்றாகும்.

திராவிடர்களுடைய பெருமை உலகம் முழுவதும் பரவக்கூடாது என்பதற்காக - சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால், திருமணம் நின்று விடும் என்று ஒரு பழமொழி சொல்வார்களே அதுபோல, இது சீப்பைக் கூட அல்ல - அதற்குக் கீழே உதிர்ந்து போன ஒரு சூழலைப் போன்ற மனப்பான்மை அது.

அவர்கள் இந்தத் தவறுகளை செய்யக்கூடாது. முதலில் அந்த அதிகாரியை மாற்றினார்கள்; பிறகு அதையே மூடினார்கள். பிறகு நல்வாய்ப்பாக தமிழக அரசு, இல்லை, இல்லை நாங்கள் அந்த ஆய்வை தொடருகிறோம் என்று சொல்லி ஓரளவிற்கு அந்தப் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, திராவிடம் என்பது எந்த ரூபத்திலும் வெளியே வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அது முடியாது.

ஏனென்றால், இது ஒரு பண்பாட்டுச் சிறப்பு. அதனை அவர்களால் ஒழித்துவிட முடியாது.

தினசரி நீங்கள் பாடக்கூடிய நாட்டுப்பண் இருக்கிறதே, அதில்கூட திராவிடம் இருக்கிறது. அதைக்கூட உங்களால் ஒழிக்க முடியாது. திராவிட உத்சல வங்கா என்றுதான் பாட வேண்டிய அவசியத்தில் இருக்கிறீர்கள். அதிலே எப்படி நீங்கள் திராவிடத்தை மாற்ற முடியாதோ, நீக்க முடியாதோ - அதே போல்தான் இந்த உணர்வாளர்களையும் உலக அளவில் நீக்க முடியாது.

அனுமதி மறுக்கப்படுவது ஏன்?


அமெரிக்காவில் அந்த கூட்டம் சாதாரணமாக நடந்திருக்கும்.  அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று சொன்னவுடன், அப்படியா? அந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன? ஏன் மறுக்கப்படுகிறது? என்று சொல்லும்பொழுது, அந்தக் கூட்டத்திற்கு இரட்டிப்பு மடங்கு முக்கியத்துவம் வருமே தவிர - குறைபாடு வராது.

அதேபோல, திராவிடம் - ஆரியம் என்பதற்கு மிகப்பெரிய பண்பாட்டுப் படையெடுப்பு - திட்டமிட்ட ஏற்பாடுகள் - அந்தப் போர் பல முனைகளில் நடைபெறுகிறது. இராமாயணத் யுத்தம் என்பது ஒரு அடையாளம். இராமாயணத்தை நாம் ஏன் வேலையில்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றோமா? அதிலுள்ள சூழ்ச்சிகள் எப்படி? என்று சொல்வது ஒருமுறை. எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இராமாயணத்தை எடுத்துப் புரட்டிப் பாருங்கள். தீர்வு கிடைக்கும் என்று சங்கராச்சாரியார் சொன்னார்.

அதுதான் நமக்கு கிரிமினல் புரசிஜர் கோட் போன்று, சிவில் புரசிஜர் கோட் போன்று - புரசிஜர் கோட் என்று பார்ப்பனர்களுக்கு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதையே இப்பொழுது நாம் திருப்பிப் போடுகிறோம்.

இன்றைய விடுதலையை வாங்கிப் படியுங்கள் - இன்றைக்கு மிக முக்கியமான ஒரு அறிக்கை.

பார்ப்பனர்களைக் கொண்டு நிரப்பத் திட்டம்


அய்.ஏ.எஸ். அதிகாரிகளை மீண்டும் தங்கள் வயப்படுத்த வேண்டும் என்பதற்காக - திட்டமிட்டு நடக்கக்கூடிய - அரசியல் சட்டத்திற்கு முரணாக - இன்னொரு தேர்வு நடத்துவோம் - யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வுக்கு அப்பாற்பட்டு என்று ஒரு திட்டமிட்டு முயற்சிகளை அறிவித்து - அதற்கு எல்லோரும் கண்டனம் தெரிவித்துள்ள காலகட்டத்தில், அதைப்பற்றி கொஞ்சம்கூட அக்கறை காட்டாமல், லட்சியம் செய்யாமல், அலட்சியமாக, நீங்கள் என்ன சொல்வது - நான் என்ன கேட்பது என்கிற ஒரு எதேச்சதிகார மனப்பான்மையோடு - பிரதமர் மோடி அவர்கள் நேற்று ஒரு அறிவிப்பை அறிவித்தார்.

10 கூட்டுச் செயலாளர்கள் பதவிக்கு மத்திய அரசில் 10 முக்கிய துறைகளில். அதில் தனியார் துறைகளில் இருக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் மனு போட லாம். அவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் சம்பளம் கொடுக்கப்படும். அவர்கள் நேரிடையாக மத்திய அரசின் கூட்டுச் செயலாளர் பதவியில் நியமிக்கப்படுவார்கள். சிறிது காலம் கூட்டுச் செயலாளராக இருந்தார் என்றால், அடுத்ததாக அவரை செயலாளராக்கி விடுவார்கள். அவரே நிர்வாகத்தை நடத்துவார்.

இப்பொழுதுள்ள தேர்வு முறை என்ன? நம்முடைய பிள்ளைகள் அய்.ஏ.எஸ். தேர்வுக்காக முதல்நிலை தேர்வாகி, பிறகு நேர்காணல் தேர்வில் பங்கேற்கிறார்கள். யூனியன் பப்ளிக் சர்வீசு கமிசன்தான் இந்தத் தேர்வை நடத்துகிறது. இது ஒரு சுதந்திரமான அமைப்பு - தலையீடு இல்லாத அமைப்பு என்று கருதக்கூடிய ஒரு அட்டானமஸ்பாடி.

ஆகவே, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர் வானவர்கள் முசோரியில் பயிற்சி பெறுகிறார்கள். அப்படி பயிற்சி பெற்றவர்கள் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வாரியாக மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படியெல்லாம் நடைமுறை அரசியல் சட்டத்தில் தெளிவாக இருக்கிறது. அரசியல் சட்டம் 320, 321, 322, 324 பிரிவுகள் இருக்கிறது.

அரசியல் சட்டத்தைப்பற்றியே கவலைப்படாமல், அரசியல் சட்டப்படியே நடப்போம் என்று குடியரசுத் தலைவரிலிருந்து பஞ்சாயத்துத் தலைவர் வரை - பிரதமரிலிருந்து அமைச்சர்கள் வரை பதவிப் பிராமணம் ஏற்றுக்கொண்டு, இன்றைக்கு அதைப்பற்றியே கவலைப்படமாட்டோம் என்று சொன்னால், அதனுடைய உள்நோக்கம் என்ன தெரியுமா நண்பர்களே, சமூகநீதி, இட ஒதுக்கீட்டைப் புறந்தள்ள வேண்டும் என்பதுதான்.

அவசர அவசரமாக இந்தத் திட்டத்தை அவர்கள் கொண்டு வருவதற்கு என்ன காரணம் தெரியுமா? நிறைய பேருக்குத் தெரியாது. பெரியாருடைய கண்ணாடியைப் போட்டுப் பார்த் தால்தான், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் எல்லாம் அந்த நுண்ணாடியில் தெரியும்.

உச்சநீதிமன்றத்தில் எத்தனையோ தீர்ப்புகள் நமக்கு விரோ தமாக வந்தாலும், சில சில பளிச்சிடும் தீர்ப்புகள் வருகின்றன.

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் ஒதுக்கீடு


அதில் ஒரு நல்ல தீர்ப்பு - தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரர்களுக்குப் பதவி உயர்வு கொடுப்பது செல்லும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறார்கள்.

இது ஒன்றும் அதிசயமான தீர்ப்பு கிடையாது. Appoint ment includes promotion also என்பது ஏற்கெனவே நிலை நாட்டப்பட்ட ஒரு கொள்கை. ரங்காச்சாரி வழக்கில் அது நிலை நாட்டப்பட்டு இருக்கிறது.

இதை எப்படி புறந்தள்ளுவது - தடுப்பதற்கு என்ன வழி என்றால், நேரிடையாக கூட்டுச் செயலாளரை நியமித்துவிட்டால், அவர் மூன்று மாதம், ஆறு மாதத்தில் அடிஷனல் செகரட்டரி, செகரட்டரியாக ஆகிவிடுவார்.

நீட்டை எதிர்த்துப் போராடவேண்டும் - குருகுலக் கல்வியை எதிர்த்துப் போராடவேண்டும் - அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில் மாற்றம் என்கிறார்கள், அதையும் எதிர்த்துப் போராடவேண்டும் என்கிற நிலையில், திடீரென்று இன்னொன்று. இது என்ன கொடுமை?

இதற்கெல்லாம் ஒரே வழி - மத்தியில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி., ஆட்சிக்கு எவ்வளவு விரைவில் விடை கொடுக்க முடியுமோ - அவ்வளவு சீக்கிரத்தில் வீட்டுக்கு அனுப்புவதுதான் ஒரே வழி!

தங்களுடைய குழியை அவர்கள் வேகமாகத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைக்கிறார்கள், மற்றவர் களுக்குக் குழிதோண்டுகிறோம் என்று.

நீதிக்கட்சி காலத்தில், அண்ணா அவர்கள் சொன்னார்கள், நீங்கள் ஜஸ்டிஸ் கட்சிக்குக் குழிதோண்டுகிறோம் என்று சொல்லுகிறீர்கள். நீங்கள் தோண்டத் தோண்ட மண் அதிகமாகும்; நாங்கள் மேலே இருந்து உங்களை மூடுவதற்கு அது வசதியாக இருக்கும் என்று சொன்னார்.

அதுபோன்று இருக்கக்கூடிய சூழல்களை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆகவேதான், இராம - இராவண யுத்தம் இருக்கிறதே - அது எல்லா இடங்களிலும் வருகிறது.  என்னதான் ஆன்மிக அரசியல் வியாபாரம் நடத்தினாலும் - அதில் கொஞ்சம், இராம - இராவண யுத்தம் வரக்கூடிய அளவிற்கு, அவர்களையே அறியாமல்  இராவணன் கைக்கொடுக்கிறான்.

எனவேதான், இந்தப் பிரச்சினை அவ்வளவு சுலபமாக மறைத்துவிடக் கூடிய பிரச்சினையல்ல என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

கம்பன் புளுகும் - வால்மீகியின் வாய்மையும்!


அடுத்ததாக நண்பர்களே, கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் அதில் மிக முக்கியமாக ஒரு செய்தியை சொன்னோம்.


இராமன் - சீதை காய்கறி உணவு சாப்பிட்டார்கள் என்று மிகுந்த பொய்யை கம்பன் எழுதி வைத்திருக்கிறான். அவர்களை மாமிச பட்சணியல்லாமல், சாக பட்சணியாகக் காட்டியிருக்கிறோம் என்பதற்காக, நிறைய செய்திகள், ஆதாரங்கள்மூலம் சொன்னார்கள்.


மான் கறியின்மீது ஆசை என்பதினால்தான், மானைப் பிடித்து வர சொன்னாள். கோழிக் கறியை விரும்பினால், கோழியைப் பிடித்து வருவார்கள். காடை கறியின்மீது மிகவும் ஆசை என்றால், காடையைப் பிடித்து வரச் சொல்வார்கள். சீதைக்கு மான்கறிமீதுதான் மிகவும் ஆசை என்பதைப்பற்றி ஆதாரப்பூர்வமான செய்திகளை சென்ற உரையில் சொல்லியிருக்கிறேன்.


பேராசிரியர்களுடைய ஆராய்ச்சி - அவர்களுடைய வேத புராணங்களில், வேத இதிகாசங்களில் இது சர்வ சாதாரணம். இராஜகோபாலாச்சாரியார் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். இதெல்லாம் அந்தக் காலத்தில் சாப்பிடுவது வழக்கம்; அதை பெரிதுபடுத்தவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.


அதற்கடுத்ததாக இன்னொரு பெரிய புளுகு என்ன வென்றால், ஊன் திண்டி ராமனை கம்பன் சைவ' ராமனாகக் காட்டியது.


சைவ சாப்பாடு என்று சொல்லாதீர்கள்!


சைவம் என்கிற வார்த்தையை நான் பயன்படுத்துவது இல்லை பெரும்பாலும். காய்கறி உணவு என்று சொல்லலாம். அது என்ன சைவம் - வைஷ்ணவம். கறி சாப்பிடுகிறவர்கள் எல்லாம் வைஷ்ணவனா?  காய்கறி உணவு - இறைச்சி உணவு என்று சொல்லலாம்.

நீங்களும் பேச்சு வழக்கில் கேட்கும்பொழுதுகூட - நீங்கள் சைவ சாப்பாட்டுக்காரரா? என்று கேட்காதீர்கள்.

என்னை யாராவது நீங்கள் சைவமா என்று கேட்டார்கள் என்றால், இல்லீங்க, வைஷ்ணவங்க என்று வேடிக்கையாக சொல்வேன்.

அதற்கு அடுத்ததாக வால்மீகி வாய்மை தவறாது வரைந்த இயற்கைக் குணங்கள் உடையவனாக இருந்த சாத்திய ராமனைக் கம்பன் புளுகில் செயற்கை யெல்லையையும் கடந்த அசாத்திய ராமனாக்கினான்.

கோசலை வயிற்றில் ராமன் பிறந்தான்; கைகேயி பரதனைப் பெற்றெடுத்தாள். இலக்குவன், சத்ருக்கன் இருவரையும் சுபத்திரை பெற்றெடுத்தாள். நால்வருக்கும் திருமணம் முடிந்தது. மிதிலையிலிருந்து அயோத்தி திரும்பியவுடனே, தயரதன் பரதனை அழைத்து, உன் பாட்டன் வீட்டிற்கு, கேகேய நாட்டிற்குப் போய்வா என அனுப்பினான். என்றுமே பரதனைப் பிரிந்து அறியாத சத்ருக்கனும் பரதனுடன் சென்றான்.

இந்த நிலையில்தான், தயரதன் ராமனுக்கு முடிசூட்ட விரும்பினான்.

ராமனிடம் தயரதன் தன் முடிவைத் தெரிவித்து அவனது ஒப்புதலைக் கேட்டான். ராமன் இசைவு தெரிவித்தான். முடி சூட்டல் குறித்த செய்தி, முடிமன்னர் பலருக்கும் அறிவிக்கப் பட்டது. மன்னர்கள் பலரும் அயோத்தி அரண்மனையில் கூடினர்.

கேகய நாட்டு மன்னன் கைகேயியின் தந்தை அசுவபதிக்கு மட்டும் செய்தியை தெரிவிக்கவில்லை. பரதனும், சத்ருக்கனும் அசுவபதி அரண்மனையில்தான் இருந்தனர்.

மந்த்ரா படலம்


இராமனுக்கு முடிசூட்டும் தயரதன் விருப்பத்திற்கு மன் னர்கள் இசைவளித்தனர். அவர்களிடம் தயரதன் மீண்டும் மீண்டும் வினவினான்.

மகன்வயின் அன்பினால் மயங்கி, யான் இது

புகல, நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம்,

உகவையின் மொழிந்ததோ? உள்ளம் நோக்கியோ?

தகவு என நினைந்தது எத் தன்மையால்? என்றான்

கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம்


மந்த்ரா படலம்


என் மகன் இராமனிடத்தில் யான் கொண்ட அன்பினால் மயங்கி, அவனுக்கு மூடிசூட்ட விரும்புவதாக நான் தெரிவித் தேன். என் விருப்பத்தை அறிந்து அதனை மறுக்க விரும்பாமல் ஏற்றுக்கொண்டீர்களா? என் முடிவு சரிதான் என்பதை ஏற்றுக்கொண்டீர்களா? என்று மன்னர்களை வினவிய தயரதன், என் மகன் என்பது எனது நெறியின் நீங்கியவன் - நுன்மகன் கையட நோக்கும் எவ்வுக என்றான்.

மன்னர்களே என் மகன் இராமன் உங்கள் அடைக்கலம் என்றான்.

பேரரசன் என்று சொல்லப்பட்ட தயரதன் அவனுக்கு அடங்கிய சிற்றரசர்களிடம் இப்படியெல்லாம் பேசியது ஏன்?

கைகேயிக்கு கன்னியா சொருக்கமாகக் கொடுக்கப்பட்ட கோசாலை நாட்டின் ஆட்சி உரிமை பரதனுக்கு உரியது. ஆட்சிக்கு உரியது உரிமை யாருக்கு உரியது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கைகேயியிக்குத்தான் உண்டு.

நாவலர் சோமசுந்தர பாரதியார் கூற்று


நம்முடைய நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் தசரதன் குறையும் கைகேயியின் நிறையும் என்ற தலைப் பில் 1930 ஆம் ஆண்டுகளிலேயே எழுதியிருக்கிறார். அந்த நூல்கள்கூட விரைவில் நம்மால் மீண்டும் பதிப்பித்து வெளி யிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அவளிடம் கலந்து பேசாமல், அவருக்கு உரிமைப் படைத்த நாட்டை, இன்னொருத்தியின் மகனாகிய ராமனுக்கு உரிமையாக்க தசரதனுக்கு அதிகாரமில்லை. ஆனால், உரிமையாக்கிவிட துடித்தான் தயரதன். உள்ளத்தில் கள்ளம் இருந்ததினால்தான், கைகேயியிக்கும் தெரிவிக்காமல், அவள் தந்தை கேகேயினுக்கும், கேகேய நாட்டில் இருந்த பரதன், சத்ருக்கன் ஆகியோருக்கும் தெரிவிக்காமல், அவசர அவசரமாக ராமனை அரியணையில் அமர்த்திவிட திட்டமிட்டு செயல்பட்டான் தயரதன்.

முடிசூட்டிக்கொள்ள ஒப்புதல் தெரிவித்த ராமனுக்கு, கோசலை நாடு பரதனுக்கே உரியது என்ற விவரம் தெரியாதா?

தெரியும். தெரிந்தே தயரதன் விருப்பத்தை ஏற்றுக் கொண்டான்.

ஆய்வாளர் அமிர்தலிங்க அய்யர்


கூறுவது என்ன?


இதுகுறித்து வால்மீகி இராமாயணத்தில், அதனுடைய ஆய் வாளர் தி.அமிர்தலிங்க அய்யர் இவ்வாறு கூறுகிறார்.

That Rama knew about the promise made by Dasaratha to Kaikeyee and her father, that the son born of her womb shall succeed to the throne, seems to be fairly certain. When Rama tells Bharatha of it in Chithrakoota,

பரதனுக்கே ராமன் சொல்கிறான்.

what was the source of his knowledge. It must have been the general talk of the City.

எப்படி அவனுக்குத் தெரியும்? சித்திரகூடத்துக்கு வந்து பரதனை ராமன் சந்திக்கிறபோது அவனிடமே சொல்கிறான்.

அமிர்தலிங்க அய்யர் தன்னுடைய ஆய்விலே மிகத் தெளிவாக சொல்கிறார்:

When Dasaratha told Rama “ That very time when Bharatha was seat out of the City, the time had come for your coronation ”. These words must have sharply reminded Rama of Bharatha’s rights. Then why did not Rama remind his father, that his proposal was against truth? Why did he accept the offer? (Ramayana Vimarsa)

கைகேயி வயிற்றில் பிறக்கின்ற மகனுக்கே முடிசூட்டுவதாக கைகேயியிக்கும், அவன் தந்தை தயரதன் வாக்குறுதி கொடுத் திருந்ததுபற்றி இராமனுக்குத் தெரியும்.

அந்த வாக்குறுதிபற்றி தனக்குத் தெரியும் என்பதை சித்திரக் கூடத்தில் பரதனிடம் பேசியபொழுது இராமன் தெரிவித்தன்.

தயரதன் தெரிவித்த வாக்குறுதிபற்றி இராமன் எப்படி அறிந்திருக்க முடியும்?

இராமன் சொல்லியிருக்க வேண்டாமா?


அயோத்தி நகரத்து மக்கள் அந்த வாக்குறுதிப்பற்றி பரவலாகப் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கவேண்டும். அந்தப்புரம் முழுவதும் அந்த வாக்குறுதிப்பற்றி பேசப்பட்டதாக கோசலையும் சொல்லுகிறாள்.

இந்த நகரத்தை விட்டு பரதனை வெளியே அனுப்பிய உடனே, உனக்கு முடிசூட்டக் கூடிய நேரம் வந்துவிட்டது என்று தயரதன் இராமனிடம் கூறினான்.

கோசலை நாடு பரதனுக்கே உரியது என்பதை தயரதன் இந்தக் கூற்று இராமனுக்கு நினைவுபடுத்தி இருக்கவேண்டும்.

அப்படியானால், தந்தையே உங்கள் விருப்பம் தவறானது; நாடு பரதனுக்கு உரியது என்று இராமன் தயரதனிடத்தில் சொல்லியிருக்கவேண்டாமா?

தயரதன் விருப்பப்படி முடிசூட்டிக் கொள்ள ஒப்புக் கொண்டது சரியா?

வால்மீகி இராமாயண ஆய்வாளர் தி.அமிர்தலிங்க அய்யர் இப்படி கேட்கிறார்.

கைகேயி, அவள் தந்தை அசுவபதி ஆகியோருக்கு செய்த கொடுத்த சத்தியத்தை, வாய்மையை மறந்து, வாய்மையைக் குழிதோண்டி புதைத்த தயரதனை வாய்மையும் மறமும் காத்து மண்ணுயிர் துறந்த வள்ளல் தூயவன் என்று கம்பன் சொல்வது கடைந்தெடுத்த கயமைத்தனம் அல்லவா!

தம்பிக்கு உரிய நாட்டை தந்தையின் விருப்பப்படி தட்டிப் பறித்துக்கொள்ள, அந்தத் தம்பிக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக திட்டம் தீட்டிய இராமனை தெய்வம் என்று போற்றுவது அறிவுடையோர் போற்றத்தக செயலா? இது இராமனிடத்தில் இருக்கக்கூடிய நேர்மையா?

கோசலத்தின் கொற்றவனாகத் திட்டமிட்டு குற்றத்தை செய்தவன் இராமன். அரசனாக வேண்டியவன் பரதன் என்பதை அறிந்திருந்தும், அவன் இல்லாத வேளையில், பாட்டன் வீடு சென்றிருந்த வேளையில், முடிசூட்டிக்கொள்ள முனைந்து நின்றவன் இராமன். தயரதனே அந்த சதித் திட்டத்திற்கு அடித்தளமிட்டவன்.

இராமன் குற்றவாளியே!


சத்தியத்தை மீறிய தயரதனை குற்றவாளியாக்காமல், சத்தியத்தை மீறுகிறான் தயரதன் என்பதை அறிந்தும், அவன் விருப்பத்தை ஏற்று அரசனாக முடிசூட்டிக் கொள்ள ஆயத்தமாகி நின்ற இராமனைக் குற்றவாளியாக்காமல், மந்தரை, கைகேயி ஆகிய இருவரையும் மாபாவிகள் என்று படம் பிடித்துக் காட்டுகிற கம்பனையும், அவனுக்கு விழா எடுக்கிற கம்பன் அடிபொடிகளையும் குற்றவாளி இராமனை தெய்வமெனப் போற்றிக் கும்பிட்டுக் கூத்தாடுகிற கோமாளிகளையும் என்ன வென்று சொல்லுவது?

கம்பன் புளுகில் செயற்கையெல்லையையும் கடந்த அசாத்திய ராமனாக்கினன்.

எடுத்துக் காட்டுகள் இரண்டொன்று இயம்பல் சாலும்.

கைகேசி சூழ்வினைப் படலத்தில்


முடி சூடுவதற்கென வந்துகொண்டிருந் த இராமன்முன் கைகேசி தோன்றி,

ஆழிசூ ழுலக மெல்லாம்

பரதனே யாள நீ போய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித்

தாங்கருந் தவமேற் கொண்டு பூழி வெங் கான நண்ணிப்

புண்ணியத் துறைக ளாடி ஏழிரண் டாண்டின் வாவென்

றியம்பின னரச னென்றாள்

அடுத்த ஓரையில் நாடாள்வோமென வரும் இயற்கை ராமனுக்குத் திடுக்கென்று பதினான்கு ஆண்டுகள் காடாளப் போவென்று சொன்னது மாத்திரமல்ல. தரையில் விழும்படியான சடைகள் தாங்கவேண்டியதென்றும், அணித்தில் கடிமணம் புரிந்த இளங்காளை, தவம் மேற்கொள்ள வேண்டிய தென்றும், இன்ன பிறவுமான கொடுங் கடுங் கட்டளைகளைக் காதில் கேட்ட கம்பராமன் எவ்வா றிருந்தானெனக் கம்பன் பச்சைப் புளுகு புளுகுவது யாதெனின்,

கைகேசி சூழ்வினைப் படலத்தில்


இப்பொழு தெம்ம னோரா

லியம்புதற் கெளிதோ யாரும் செப்பருங் குணத்தி ராமன்

திருமுகச் செவ்வி நோக்கில் ஒப்பதே முன்பு பின்பவ்

வாசக முணரக் கேட்ட அப்பொழு தலர்ந்த செந்தா

மரையினை வென்ற தம்மா.

தெருளுடை மனத்து மன்னன்

ஏவலிற் றிறம்ப வஞ்சி இருளுடை யுலகந் தாங்கு

மின்னலுக் கியைந்து நின்றான் உருளுடைச் சகடம் பூண்ட

வுடையவ னுய்த்த காரே(று) அருளுடை யொருவ னீக்க

வப்பிணி யவிழ்ந்த தொத்தான்.

மன்னவன் பணியன் றாகில்

நும்பணி மறுப்ப னோவென் பின்னவன் பெற்ற செல்வ

மடியனேன் பெற்ற தன்றோ என்னிதின் யுறுதி யப்பா

லிப்பணி தலைமேற் கொண்டேன் மின்னொளிர் கான மின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன்.

என்று கம்பன் புளுகி லுதித்த அசாத்திய ராமன் அப் பொழு தலர்ந்த செந்தாமரை முகத்துடன் விடை கொண்டு சென்றானாம். அம்மட்டு மன்று: கம்பராமனும் கம்ப கோசலையும் அளவளாவிய பெரும் புளுகையும் கேளுங்கள்.

நகர் நீங்கு படலத்தில்


கம்ப ராமன். கோசலை கோயிலில்

குழைக்கின்ற கவரி யின்றிக்

கொற்றவெண் குடையு  மின்றி

இழைக்கின்ற விதிமுன் செல்லத்

தருமம்பின் னிரங்கி யேக மழைக்குன்ற மனையான் மௌலி

கவித்தனன் வருமென் றென்று தழைக்கின்ற வுள்ளத் தன்னாள்

முன்னொரு தமியன் சென்றான்.

அது கண்டு கம்ப கோசலை:-

புனைந்திலன் மௌலி குஞ்சி

மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன் என்கொல் என்னு

மையத்தாள் நளின பாதம், வனைந்தபொற் கழற்கால் வீரன்

வணங்கலுங் குழைந்து வாழ்த்தி நினைந்ததென் னிடையூ றுண்டோ

நெடுமுடி புனை தற் கென்றாள்.

அதாவது அப்போ தலர்ந்த ராமத் தாமரையை இள ஞாயிற்றின் கதிர்கள் பனிநீர் கலந்து தாவக் குளிர்ந்த கோசலைத் தாமரை கேட்டனளாம்.

கோசல

மங்கை யம்மொழி கூறலும்

கம்பராம்

...............................................................மானவன் செங்கை கூப்பிநின் காதற் றிருமகன் பங்க மில்குணத் தெம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின்றா னென்றான்

அதுகேட்ட குளிர் தாமரைக் கம்ப கோசலை.

முறைமை யுன்றென்ப தொன்றுண்ட தல்லது நிறைகு ணத்தவ னின்னினு நல்லனால் குறைவி லன்னெனக் கூறினள் நால்வர்க்கும்

மறுவி லன்பினில் வேற்றுமை மாற்றினாள்

ராமன், கோசலை இயற்கை யுணர்ச்சிகளை வால்மீகி


உள்ளதுள்ள படி நவிலுகின்றா ரெனல்


கம்பன் புளுகு இவ்வாறாக, மூவரானவர் தம்முளு முந்திய நாவினார் வாய்மையே கூறும் வால்மீகி சொல்லுவது கேளுங்கள்.

இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் வால்மீகியின் மாண்பு; செயற்கைப் பொருளை ஆக்கமின்றிக் கூறல் கம்ப சூத்திரம்.

வால்மீகம் - அயோத்தியா காண்டம்


20-வது சர்க்கம்.


வால்மீக ராமன் கோசலையைக் கண்டு சொல்லுதல்:

ஸ்லோகம்:



அதாவது வால்மீக ராமன் தண்ட காரண்யத் திற்குப் புறப்பட்டவனாய்க் (கோசலையைப் பார்த்துச்) சொல்லத் தொடங்கினான்:-

புகழ் வாய்ந்தவளே, மஹத்பய முயஸ்திதம்- பெரிதான துணுக்க மூலம் நேர்ந்திருப்பது - நிச்சயமாக நீ அறியவே இல்லை.



அதாவது.

மனையொன்றில்  உட்காரும்படி சொன்ன கோசலையை நோக்கி வால் மீக ராமன் சொல்லுகின்றான்:-

இதனால் உனக்கும், சீதைக்கும், இலக்குவனுக்கும் துக்க ஆதாரமாக நான் தண்டகாரண்யம் போகப் போகின்றேன்; எனக்கு இந்த ஆசனம் என்னத்திற்கு?'

இன்னும் வால்மீக ராமன் கூறுவதைக் கேளுங்கள். அப்போ தலர்ந்த தாமரை கூறுவதா அல்லது வெம்பி யுதிர்ந்த தாமரை கூறுவதா என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

வெம்பி யுதிர்வதுதான் இயற்கை யிலக்கணமாகையால் வால்மீகி நவில்வதே வாய்மை:-



அதாவது - அன்னாய்! தருப்பைமணைக்குஉரிய தான இந்த வேளை என்னை நெருங்கி விட் டது. மக்களில்லாத காட்டி லல்லவா பதினான்கு ஆண் டுகள் நான் இருக்கப் போகிறேன்?'

இன்னும்



அதாவது - அன்னாய்! துறவியைப் போல ஊனை விட்டு. தேன், வேர், கனிகள் (ஆகிய இவைகளால் யான்) உயிர் வகித்திருக்க வேண்டியவன். பேரரையர் (தசரதர்) இளவரசுப் பட்டத்தைப் பரதனுக்குக் கொடுக்கிறார்'.

வால்மீகி இராமனின் புலம்பல்


இன்னும்



அதாவது - அன்னாய்! என்னையோ வென்றால் தண்ட காரண்யத்தில் துற வியாக வாழ அனுப்புகிறார். அந்த மக்க ளில்லாக் காட்டில் நான் ஆறும் எட்டும் பதி னான்கு ஆண்டு கள் வாழப் போகிறேன்' என்று வால்மீக ராமன் சொன்னான். இவ் வுணர்ச்சிகள் தான் முற்றிலும் இயற்கை யுணர்ச்சிகளாக. கம்பராமன் உணர்ச்சி உண்மையா என் பதையும் கம்பன் கூறியது முற்றிலும் புளுகல்லவா என்பதையும் நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.

மற்றும் நிறை குணத்தவன் நின்னினு நல்ல னால் குறை விலன் என்று பரதனை வாழ்த்திய கம்ப கோசலையுடன் வாய்மையிற் சிறந்த வால்மீக கோசலையை ஒப்பிட்டுப் பாருங்கள்.

மகாராஜா பரதனுக்கு இளவரசு கொடுக்கிறார் என்று கேட்ட கோசலை.

வால்மீகம் - அயோத்தியா காண்டம் -


20 - வது சர்க்கம் ஸ்லோகம்:




அதாவது

காட்டி லுள்ள வேர், கனி, முதலா னவைகளைக் கொண்டு வாழப் போகின்றேனென்று வால்மீக ராமன் கூறக் கேட்ட அவள் (கோசலை) காட்டிடத்தில் கோடாரியால் வெட்டப்பட்ட ஆல மரத்துக் கிளைபோலவும் தெய்வ உலகத் திலிருந்து இவ்வுலகத் தரை மீது விழுந்த தெய்வப் பெண் போல வும் திடீரென்று நிலத்தில் விழுந்தாள்.

இவ்வாறு விழுந்து சாய்ந்த வால்மீக கோசலையும், நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால், குறைவிலன் என்று பரதனை வாழ்த்திய கம்ப கோசலையும் ஒருவரேயோ? வேறு வேறோ கருதிப் பாருங்கள். கம்பன் கூற்றுப் பச்சைப் புளுகல்லவா. பேரறிஞர்களே சொல்லுங்கள் - அவ்வாறு ஏன் புளுகவேண்டும் - வால்மீக கோசலை தான் இயற்கைக் குணத்தவ ளென்பதற்கும் வால்மீகி வாய்மையுடையவ ரென்ப தற்கும் என்னுடன் ஒப்புவீர்க ளன்றோ?

வால்மீகியின் மெச்சத்தகுந்த பண்பு


கோசலையிடம் விடைபெற வந்த வால்மீக ராம னுக்குப் பட்ட மிழந்ததும் காடு செல்வது ஆகிய செய்திகள் சொல்லளவி லிருந்த நிலையில் உணர்ந்த உணர்ச்சியினை அளவறிந்து கூறிய வால்மீகியின் உண்மைப் பண்பு மெச்சத் தக்கது. அதற்கடுத்தபடி வால்மீக ராமன் முதலிய மூவரும் கால் கடுக்க நடந்து காட்டிடைச் சென்று சருகெரித்து வாட்டிய ஊன் தின்று மென் மலரமளிக்குப் பதிலாகக் கட்டாந் தரையிற் சருகு பரப்பிப் பள்ளி கொள்ளும் முதனாள் முன்னிரவில் அன்றுவரை நுகர்ந்த இன்பத்திற்கும், அன்றிரவு நுகரும் துன்பத்திற்கும் வேற்றுமை அள் விகந்து புலப்படு மன்றோ? அதன்பின் நாளடைவில் காட்டு வாழ்க்கையில் பழகப் பழக இன்ப துன்ப வேற்றுமையும் குறைந்து தோன்று மன்றோ? ஆக லின் சோகரசம் கோபரசம் என்று சொல்லப்படும் ரசங்களைக் காட்டுவதற்கு மகா கவியாகிய வால்மீகி முதல் நாளிரவில் வால்மீக ராமன் உணர்ந்த இயற்கை உணர்ச்சியை இப்போது நாம் எதிரிருந்து காண்பது போல புலப்படும்படி மிகவும் அழகாக, நீண்ட சருக்க மாக யாத்து வைத்தனர். அதில் சில சுலோகங்களை மாத்திரம் இங்கே சொல்லுகின்றேன்.

வால்மீகம் - அயோத்யா காண்டம்


53-வது சர்க்கம்


ஸ்லோகம்:



அதாவது

வால்மீக ராமன் மனக் காட்சியால் சொல்வது:

ஓ இலக்குமணா! இப் போது தசரத மகாராஜா மிகுந்த துயரத்துடன் படுத்துக்கொண் டிருக்கிறார். கைகேயியோ வென்றால் தன் விருப்பத்தை நிறை வேற்றிக் கொண்டு மகிழ்வடைந்தவளாய் இருப்பதற்கு உரியவள்.'



அதாவது

அந்தத் தேவியாகிய கைகேயி அரசாட்சியடைய வேண் டியதன் பொருட்டு வந்த பரதனைப் பார்த்துத் தசரத மகாராஜா தன் உயிரை விடும்படி செய்ய மாட்டாளா என்ன?

இன்னும்



அதாவது

உதவியற்றவனும், கிழ  வனும், (தலைமகனாகிய) என்னாலும்பிரிவுபட்டவ னும், காமத்தில மிழ்ந்தோனும், கைகேயியின் கையிற் சிக்கி யவனும் ஆகிய தசரதன் என்ன செய்யப் போகிறான்?'

இன்னும்



அதாவது

இந்தத் துயரத்தையும், அரசனுடைய (தசரதனு டைய). அறிவுகெட்ட மருட் சியையும் பார்க்கிறபோது, அறம், பொரு ளிரண்டையும் விட இன்பமே பெரிதென்பது என்னுடைய கருத்து.'

இன்னும்



அதாவது

ஓஇலக்குமணா!படிப் பில்லாதவனுங்கூடமனுஷ னென்கிறஒருவன்எவன் தான், பெண் பொருட்டாக விருப்பத்தைப் பின்பற்று கின்ற புதல்வனாகிய என்னை என் அப்பனைப் போல விட்டு விடுவான்?

இன்னும்



அதாவது

எவன் செழித்திருக்கின்ற கோசல நாடுகளை ஒரு வனாகவே அரசர்க் கரசன் போல நுகரப் போகின்றானோ அவன்தான் மனைவியுடன் கூ டி ய வனும் கைகேயியின் மகனுமாகிய இன்பமுற்ற பரதன்- இது வியப்பே.

இன்னும்



அதாவது

அந்தப் பரதனே, அப்பன் முதுமை யடையவும். நான் காட்டையடையவும்,எல்லா நாடுகளுக்கும் ஒரே முதல்வ னாக ஆகப் போகிறான்.' இன்னும்

அதாவது



எவன் அறம், பொருள் களைக்கைவிட்டு,இன் பத்தைக் கடைப்பிடிக்கி றானோ அவன் தசரத அர சனைப் போல விரைவில் இம்மாதிரி துயரத்தை அடைவான்.

இன்னும்



அதாவது

திங்களைப் போன்ற (அழகிய) இலக்குமணா! தசரதனுடைய முடிவிற் காகவும், நான் நாட்டை விட்டுப் போகிறதற்காகவும், பரதன் அரசாட்சியடையும் பொருட்டும். கைகேயி யானவள் தோன்றினாள் (என்று) நான் நினைக்கின்றேன்.

இன்னும்



அதாவது

இப்பொழுது செல்வக் கொழுப்பினாலே மயங்கி யிருக்கிற கைகேயி யானவள் என்பொருட்டாகக்கோச லையையும், சுமத்திரையை யும் துன்புறுத்த மாட்டாளா?

இன்னும்



அதாவது

தீய வொழுக்கமுடைய கைகேயி, பகைச் செய்கை களையும், ஒழுங்கில்லாச் செயல்களையும் செய்வாள். (ஆகையால்) என்னுடைய தாயை அற முணர்ந்த பரதனிடம் காப்பாற்றும்படி ஒப்புவி.

இன்னும்



அதாவது

ஓ இலக்குமணா. நான் ஒருவனாகவே அயோத்தி மாத்திரமல்ல.இந்நிலவுல கம்முழுவதையும்சீற்ற முற்றேனேல்என் அம்பு களின் வன்மைகொண்டு பற்றிக்கொள்ளக் கூடியவன். ஆனால் (அவ்வாறு செய்யாததற்கு) ஆற்றலில்லாமை யன்று. காரணம்.



மற்றென் என்றால்

அதாவது

ஓ தீங்கற்ற இலக்குமணா, அறநெறி தவறுவதற்கு அஞ்சியும், பரலோகத்தைப் பற்றி அஞ்சியும், நான் இப் போது முடிசூட்டிக் கொள்ள முடியவில்லை.

இவ்வாறு இயற்கை உணர்ச்சியைப் பேசிய வால்மீகி ராமனும், பரதனுக்கு இளவரசுப் பட்டம் மகாராஜா அளித்தார் என்று கேட்டதும், அப்பொழு தலர்ந்த செந்தாமரை முகத்துடன் காட்டிற்கு விடைகொண்ட கம்பராமனும் ஒருவரேயோ? இரண்டு ராமர்களையும் ஒத்திட்டுப் பார்த்தால் கம்பன் புளுகு அளவிறந்த தென்பது விளங்கும்.

இராமாயணத்தைப் பாராயணம் செய்தால்...


இராமாயண பாராயணம் செய்தால் கிடைக்கும் பயன், கம்ப ராமாயணத் தனியன்களிற் பரக்கக் கூறப்பெற்றுள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே எடுத்துப் பொழியுதும்.

நாடிய பொருள்கை கூடும்

ஞானமும் புகழு முண்டாம்

வீடியல் வழிய தாக்கும்

வேரியங் கமலை நோக்கும்

நீடிய வரக்கர் சேனை

நீறுபட் டழிய வாகை

சூடிய சிலையி ராமன்

தோள்வலி கூறு வோர்க்கே.

வடகலை தென்கலை வடுகுகன் னடம் இடமுள பாடைய தொன்றி னாயினும் திடமுள ரகுகுலத் திராமன் றன்கதை அடைவுடன் கேட்பவ ரமர ராவரே.

இனைய நற் காதை முற்று

மெழுதினோர் வியந்தோர் கற்றோர்

அனையது தன்னைச் சொல்வோர்க்

கரும்பொருள் கொடுத்துக் கேட்போர்

கனை கடற் புடவி மீதே

காவலர்க் கரசாய் வாழ்ந்து

வினை யம தறுத்து மேலாம்

விண்ணவன் பதத்திற் சேர்வார்.

மேலெடுத்துக் காட்டிய வற்றுள்ளும், காட்டாது விட்டவற்றும். விவரித்துச் சொன்ன பயன்களெல்லாம்

நாடிய பொருள் கைகூடும்

என்ற சுருக்கமான முதற் சொற் றொடரிலே முற்றிலும் அடங்கியுள்ளன வாயினும், இராமாயண பாராயணப் பயன் மிகப் பரந்த தென்பதை வற்புறுத்தும் பொருட்டுப் பலபட வகுத்தும் கூறியிருக்கின்றனர்.

பிள்ளைப் பேறு கிடைத்தலிலாத அலிகளும் (நபும்சகர்கள்) மலடர்களும் கூட ஒருமுறை இராமா யண பாராயணம் செய்தால். கேட்டால் பிள்ளைப் பேறு பெறுவர் என்பது நமது நாட்டில் வேரூன்றிய நம்பிக்கை.

பயனைக் கோரி நம் நாட்டிற் பல விடங்களிலும் நாளும் நாளும் இராமாயண பாராயணம் செய்வது எல்லோர்க்கும் நன்றாகத் தெரிந்தது. அதிலும் கூடப் பயன் கருதிக் கம்பன் இராமாயணத்தைப் பெரும்பாலும் பாராயணம் செய்வ தில்லை. பயன்தவறாமற் கைகூடு மென்று வால்மீகி இராமாய ணத்தைத்தான் பெரும் பாலும் பாராயணம் செய்வது. கம்ப ராமாயணம் ஓதினாலும், கவிநயங் கருதித்தான் சிற்சில ப்ராஹ் மண ரல்லாதார் ஓதுவது.

பாராயணத்துக்குரியதல்ல


கம்ப இராமாயணம்


ப்ராஹ்மணரோ, தங்கள் தாய்மொழி தமிழே யாயினும், அவர்களுள் பலர், பிழைப்புத் தொழிற்கும் தமிழ்க் கல்வியையே கடைப்பிடித்துள்ளா ராயினும். கம்பராமாயணத்தைப் பாரா யண முறையில் பாராட்டுவது கிடையாது. ஏன் பாராயண முறையில் பாராட்டுவதில்லை என்று கருதின். எனக்குத் தோன்றுவது, அவர்கள் கம்பன் பெரும் புளுகை நன்குணர்ந் தவர்கள் என்பதுதான். புனைந்த பொய்க் கதை யோதில் நற்பயன் தராதென்று கண்டும். பயன்தரினும் மாறுபட்ட தீப்பயன் தருமென்று அஞ் சியும். வாய்மை பேசும் வால்மீகி இராமாயணத்தையே அவர்கள் பாராயணம் செய்வதும், படிக்கும் சாஸ்திரியாருக்குப் பணம் பாராயணம் கேளாத பல் லோரிடமிருந்தும் தண்டல் செய்து கொடுப்பதும், இராமன் பட்டாபிஷேகம் என்று பெயர் வைத்து விழாக் கொண்டாடுவதில் நான் கண்ட அளவில், படித்த சாஸ்திரியாருக்கும் அவர் மனைவி சாஸ்திரி' யாருக்கும் புத்தாடை யுடுத்துப் புது மணக்கோலம் செய்து ஊர்வலம் செய்விப்பதுமே யாம்.

ஆனால், நீங்கள் என் கருத்தை வெட்டிப் பேச இடமுண் டென்பதை ஒப்புகிறேன். மனுஷ்ய பாஷையாகிய தென்னாட்டு வறட்டுத் தமிழில், அதா வது ஸம்ஸ்க்ருதக் கலப்புக் குறைவால் வறண்ட தமி ழில், சூத்திரனாகிய கம்பன் என்பான் செய்த ராமாயணத்தைப் ப்ராஹ்மணர் கேட்கக் கூடாதென்ப தன்றிக் கம்பன் புளுகுகிறானென்றல்ல வென்றும் மகரிஷியாகிய வால்மீகி தெய்வ பாஷையாகிய ஸம்ஸ்க்ருதத்தில் ஆக்கிய ராமாயணமே சிறந்தது என்றும் - அத்தகைய வால்மீகி ராமாயணச் சிறப்பு மிக வும் தாழ்மையான மற்றொரு ராமாயணத்துடன் ஒத்திட்டுப் பார்த் தால்தான் நன்கு விளங்குமென்றும் தான் பாடியதாகக் கம்பனே.

வய்ய மென்னை யிகழவு மாசெனக்

கெய்தவும் மிதியம் புவதி யாதெனிற்

பொய்யில் கேள்விப் புலமையி னோர்புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே

எனச் சொல்லியிருத்தலால் ப்ராஹ்மணர்கள் வால்மீக ராமா யணத்தையே பாராயணம் செய்கிறார்கள்' எனக் கூறுவீர்களேல் அதனையும் யான் மறுக்கேன். ஆனால் நீங்கள் கூற்று குறைக் கூற்றென்று மாத்திரம் சொல்லவேண்டியது என் கடமை. ஏனெ னில்,

பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல் தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே

கம்பன் தான் மனுஷ்ய பாஷையில் நொய்தினொய்ய சொல் லாற் புளுகினதை அவர் நிலையில் வைத்துச் சொல்லி யிருப்பதை நோக்கு விரேல் யான் கம்பன் பேரில் வீண் குற்றம் காட்டியதாகக் கொள்ளமாட்டீர்கள். அன்றேல் கம்பன் வால்மீகியைப் பொய்யில் கேள்விப் புலமையினோரென்று அடை கொடுத்துச் சொல்லவும், தெய்வ மாக்கவி என்று சிறப்பிக்கவும் வேண்டுவதில்லை.

வால்மீகி ராமாயணத்தைப் பாராயணம் செய்தால் கிடைக் கும் பயன் பல்வேறு வகைகளென்று முன் னியம்பியவற்றுள் மலடர்களுக்குப் பிள்ளைப்பேறு கிடைக்குமென்ற தொன் றன்றோ? அந்தப் பலனைக் கம்ப ராமாயணப் பாராயணம் கொடுக் கும் வன்மையுடைய தல்லவென்று சொல்ல இடமி ருக்கிறது. ஏனெனில் அதைத் திருப்பித் திருப்பிப் படித்தாலும் ஆணிற்குப் பெண்மீது நினைப்பை ஊக்கவும் பெண்ணிற்கு ஆண்மீது நினைப்பை ஊக்கவும் ஆன செய்யுட்கள் தென்படுவதில்லை.

வால்மீகி ராமாயணமோ அவ்வாறன்று. அதில் ஆங்காங்கு மிகவும் எளிய அழகிய நடையிற் செய்த ஸ்லோகங்களில் கண்கூடுபடுத்தப்பட்டிருக்கிற லதாக் கிரகங்களும் அவைகளில் இருபாலர்கள் இருக்கும் கோலங்களும் செய்யும் கிரியைகளும் தேவபாடையில் மாத்திரம் சொல்லக் கூடியவைகளாய், இப் போதைய அரசாங்கச் சட்டப்படி. தமிழிற் சொன்னாலோ தலை போய்விடச் செய்யக் கூடியவைகள். அத்தகையவை களைப் படிக்கும், கேட்கும் நபும்சகரைப் பும்சகராக்கக் கூடியனவும். மலடனைக் கருவிடும் வன்மையனும். மலடியைக் கருவேற்கும் தன்மையோளுமாக ஆக்கக் கூடியவைகளுமான திரண்ட நீண்ட பரந்த விரிந்த விவரங்கள் பிள்ளைப் பேறு கோருவோர்க்குக் கட்டாயம் பிள்ளைப் பேற்றுப் பயனைக் கொடுக்குமென்று வால் மீகி ராமாயணம் படியாத பலருக்கும் உறுதியாகச் சொல்லுவேன்.

ஆனால் வால்மீகி ராமாயண 24,000 ஸ்லோகங்களையும் ஒருமுறை அர்த்த புஷ்டி யென்கிற விருத்தியுரையுடன் பாரா யணம் செய்து முடிக்கப் பல திங்கள்கள் செல்லும். அதுவரையில் பிள்ளைப் பேற்றிற்குக் காத்திருக்க வேண்டும்.

என்று கிண்டலோடு முடிக்கிறார்.

இந்த உரை இதோடு முடிகிறது. கம்பன் புளுகையும், வால்மீகியின் வாய்மையும் என்பது மட்டுமல்ல, கம்பனுடைய மறுபக்கம், கம்பனுடைய தவறுகள், கம்பன் தன் கூற்றை, தன் கம்பராமாயணத்தை மறுக்கின்ற முரண்பாடுகள் - அடுத்த பொழிவில் காணுவோம்.

நன்றி வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 22.6.18

செவ்வாய், 26 ஜூன், 2018

பாரத பாத்திரங்கள் (1 )

.அறிவுக்கரசு



(மத்தியில் மதவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு பெரும்பான்மை பலத்தோடு வந்தது முதல் மகாபாரதம், இராமாயணம், பகவத்கீதை போன்றவற்றை பாடமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றனர். மாணவர்கள் படிப்பதற்கு தகுதி இவற்றிற்கு உண்டா? பண்பாடு, அறிவு, ஒழுக்கம் இவற்றிற்கு எதற்த அளவிற்கு எதிரானவை என்பதைக் காட்டவும், இவற்றின் அவலம் பற்றியும் அறியவும் இத்தொடர்)                - ஆசிரியர்

வியாசன் 8800 பாடல்களைக் கொண்ட பாரதத்தை எழுதினான். வைகம்பாயணன் என்பான் 24 ஆயிரம் பாடல்களாகப் பெரிதாக்கினான். பாரதம் என்று பெயர் வைத்தவன் இவனே. சூதன் என்பான் அதனை மேலும் பெரிதாக்கி, ஏறத்தாழ ஒரு லட்சம் பாடல்களாக்கி, மகாபாரதம் என்று பெயரிட்டான். எனவே மூன்று பேர்களால் எழுதப்பட்டதுதான் இன்றிருக்கும் மகாபாரதம். பொது ஆண்டுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் எழுதத் தொடங்கி (கி.மு.500) ஆயிரம் ஆண்டுக்காலத்தில் பல கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் காலத்திற்கு ஏற்றாற்போல் செருகல்கள், திருத்தங்கள், திரித்தல்கள், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது ஆய்வு செய்த அறிஞர்களின் முடிவு.

மன்னர்களில் சூரியனைப் போன்று ஒளிவீசியவன் அசோகன் என்பது உலகின் வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்த முடிவு. அசோகன் மவுரியப் பேரரசின் சிறப்பான மன்னன். சூத்திரன். சத்திரியன் அல்லாத பேரரசை உலகில் முதன்முதலில் உருவாக்கியவன். கலிங்கப் போருக்குப் பின் கொல்லாமையைக் கடைப்பிடித்தவன். பிறரைக் கடைப்பிடிக்கச் செய்தவன். புத்த நெறியைப் பின்பற்றியவன். அவன் வம்சத்து மன்னன் பிருகத்ரன் என்பானைப் பின்னாலிருந்து வாளால் வெட்டிக் கொன்றவன் அவனது படைத்தலைவன். பார்ப்பனன். புஷ்யமித்திரன்.

பவுத்த நெறிக்கு மாற்றாக சனாதன தருமம் எனப்படும் ஜாதிமுறைகளைக் கொண்ட மதம் வேரூன்றிடப் பாடுபட்டவன் புஷ்யமித்திரன். எனவே, அசோகனின் கொள்கைகளை விளக்கி நடப்பட்ட 84 ஆயிரம் கல்தூண்களை உடைத்தான். பவுத்த நெறியில் வாழும் ஒருவரைக் கொன்றால் 100 பவுன் தந்தான். வருணாசிரமக் கொள்கையைக் கொண்ட சனாதன மதத்தை வளர்த்தான். அதன் கொள்கைகளைக் கொண்ட நூலை எழுதச் செய்து அப்போது மக்களிடம் பரவியிருந்த பாரதத்தில் செருகிச் சேர்த்திட வேண்டிய தேவை ஏற்பட்டது. பாரதக் கதையில் செருகப்பட்டது கீதை. பாதராயணன் என்பான் எழுதிய பிரும்மசூத்திரம் இவர்களுக்குத் தேவையான அளவு உதவவில்லை. கீதை உதவியது. மக்களிடையே பரவியிருந்த சாங்கியத் தத்துவங்கள், கருத்துமுதல் வாதத்திற்கு எதிர்ப்பாக பொருள்முதல் வாதத்திற்குச் செல்வாக்கு பெற்றுத் தந்தவை. எனவே, கீதை சாங்கியத்தை வரித்துக் கொண்டது. புலனடக்கம், மனக் கட்டுப்பாடு போன்ற பவுத்தக் கொள்கைகளையும் எடுத்தாண்டது கீதை. வலுவானதாக ஆக்கப்பட்ட கீதை பாரதத்தில் நுழைக்கப்பட்டதால் பரவ ஆரம்பித்தது. மேலும் பெருமை சேர்த்திட, கீதையைச் சொன்னது கடவுள் என்ற கதையும் சேர்க்கப்பட்டது. கிருஷ்ணன் என்ற கடவுளால் உபதேசிக்கப்பட்டது என்ற கூடுதல் புளுகை பாமரர் நம்பத் தொடங்கினர். சனாதனம் வலுப்பெறத் தொடங்கியது.

அவனவன் ஜாதித் தொழிலைத்தான் அவனவன் செய்ய வேண்டும். குறையில்லாமல் பிறருடைய ஜாதித் தொழிலைச் செய்யக்கூடிய திறமை இருந்தாலும்கூட, ஒருவன் அவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும், குறைகள் இருந்தாலும், இதைத்தான் கீதை கூறுகிறது.

பாரதக்கதையின் வழி இடைச்செருகலான கீதையின் தர்மங்களை (சனாதனதர்மம்) நிலை நாட்டுவதே அவர்களின் இலக்கு. மனுதர்மமும், பாரதமும் மனித தர்மத்திற்கு எதிரானவை. ஆனால், இந்த பாரதந்தான் பாரத பண்பாட்டின் சின்னம் என்கின்றன இந்துத்வா அமைப்புகள். பாடத்திட்டதிலும் சேர்க்க முயலுகின்றனர். எனவே, இந்தப் பாரதத்தின் பண்பாட்டுச் சீரழிவை அறிய பாரத பாத்திரங்களின் உண்மை நிலையை இங்கு அப்பட்டமாக அடையாளம் காண்போம்.

வியாசன்

பாரதக் கதையைப் பாடியவன் வியாசன். மிகவும் கருப்பாக இருந்தவன். அதனால் துவைபாயனன் என்பதைக் க்ருஷ்ண துவைபாயனன் என்றாக்கி விட்டனர். அவன் பாடப்பாட வினாயகன் (பிள்ளையார்) தன் தந்தத்தை ஒடித்து எழுதுகோலாக்கி எழுதினான் என்கிறார்கள். எங்கே எழுதினான் என்றால் இமயமலையில் என்கிறார்கள். எவ்வளவு முட்டாள்தனமான கற்பனை!

சமஸ்கிருதத்தை எழுதாக்கிளவி என்பார்கள். எழுத்துக்கு வரிவடிவம் இல்லாத மொழியாம். எனவே சொல்லத்தான் முடியும். கேட்பவன் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். அப்படித்தான் எல்லாக் கதைகளும் பரப்பப்பட்டன. சொன்னவன், கேட்பவன், ஒப்பித்தவன் தவறுகள் செய்திருக்க வாய்ப்புண்டு. அதனால் மாற்றங்கள், திருத்தல்கள், திரித்தல்கள் ஏற்பட்டு மாறுதல்களுக்கு வாய்ப்பும் உண்டு.

சந்தனு எனும் மன்னன் தன் மனைவி சத்தியவதியுடன் வாழ்ந்து இரு மகன்களைப் பெற்றுக் கொள்கிறாள். இந்த சத்தியவதிதான் பராசர முனிவனுடன் கலவி செய்து வியாசனைப் பெற்றவள். வியாசனைப் பெற்றபோது பராசரனுடன் கள்ளக்காதல்தான். பிறகுதான் சந்தனுவுடன் மணம், வாழ்க்கை எல்லாம். பின்னால் பார்க்கலாம்.

சந்தனு-_சத்யவதி தம்பதியர்க்குப் பிறந்த இருவரில் முதலாமவன் சித்திராங்கதன். ஆணவம் பிடித்தவன். ஒரு வீரனுடன் சண்டை போட்டதில் இறந்துபோனான். மற்றவன் விசித்திரவீரியன். அவனுக்கு இரு மனைவிகள். அம்பிகா, அம்பாலிகா. ஒரேநேரத்தில் இருவர் கழுத்திலும் தாலி கட்டினான். என்றாலும் குழந்தை ஏதும் பிறக்கவில்லை.

சந்தனுவுக்குப் பிறகு சித்திராங்கதனும் இறந்துபோக, ஆட்சியில் அமர்ந்தவன் விசித்திரவீரியன். ஆட்சியும் நடந்தது. வம்சம் வளரப் பிள்ளைகள் இல்லை.
வம்சம் வளர்ந்து தன் பிள்ளைகள் நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசையினால்தான் மச்சகந்தி எனும் சத்யவதி தன்னைப் பெண் கேட்டுவந்த பீஷ்மனிடம் வாக்குறுதி கேட்டாள். பீஷ்மன் தந்தான். தான் திருமணமே செய்து கொள்வதில்லை என்றே உறுதி கூறிவிட்டான். திருமணம் நடந்தது என்றாலும், விசித்திரவீரியன் சாவுக்குப் பிறகு வாரிசு இல்லாமல் போன நிலை.

சந்தனுவுக்குப் பிறந்த பீஷ்மன் வாக்குறுதிப்படியே திருமணமின்றி இருந்தான். வம்ச விருத்திக்காகத் தம் மருமகள்கள் இருவரையும் கூடிப் புணர்ந்து புத்திர பாக்கியம் தருமாறு கேட்கிறாள் சத்யவதி. பீஷ்மனையே அரசனாக முடிசூடிக்கொள்ளவும் வேண்டினாள்.

பீஷ்மன் ஒப்பவில்லை. சத்யவதியும் முயற்சிப்பதை நிறுத்தவில்லை. கள்ள உறவில் பிறந்த மகனைக் கூப்பிட்டுத் தன் மருமகள் இருவரையும் புணர்ந்து புத்திரதானம் செய்து வம்சத்தை வளர்த்திடவும் நாட்டை ஆள்வதற்கு வழி செய்திடவும் கேட்டாள்.

வியாசனோ முனிவன். முறைப்படி திருமணம் புரிந்து கொள்ளாதவன். கருப்பன். எந்தப் பெண்ணாலும் விரும்பப்படாத ஆண். என்றாலும் இச்சை இருக்காதா? தாய் சொல்லைத் தட்டாதவனானான்.

முதலில் அம்பா. வியாசன் கட்டிப் பிடித்தபோது, அருவருப்பு அதிகமாகித் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். பிறந்த குழந்தை ஆண். பார்வையற்ற குருடன். திருதராஷ்டிரன்.

இரண்டாவதாக அம்பாலிகை. அவனைப் பகலில் கூடினாள்.

 பிறந்த குழந்தை ஆண். உடல் முழுக்க வெள்ளை நிறம். பாண்டு. லுக்கேடெர்மா என்று ஆங்கில மருத்துவம் கூறும் வெண்குஷ்டம்.

ஒன்று நொள்ளை. மற்றொன்று வெள்ளை. இரண்டுமே தோஷம். அரச பதவிக்கு ஆகாது. மூன்றாவதாக முயற்சித்தாள் சத்யவதி.

வியாசனைத் தூண்டுகிறாள். அம்பாவும் அம்பாலிகாவும் வியாசனைக் ‘கூட’ விருப்பமில்லை. மாமியார் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல், அரண்மனைச் சேடிப் பெண்ணை அனுப்பி வைத்தனர். யார், எவர் எனப் பார்க்காத வியாசன் அவளைப் புணர்ந்தான். சேடிப் பெண்ணோ, அரண்மனையின் சப்ர மஞ்சத்தில் அறிவு நிரம்பிய முனிவனுடன் கலவி செய்கிறோம் எனும் மகிழ்ச்சியில் மிதந்தாள். விதுரன் பிறந்தான்.

பார்ப்பனர் பண்பாட்டில் பிள்ளையில்லாதவள், ஏழு தலைமுறை ஆண் எவனுடனும் புணர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளும் வகை இருந்தது. (இருக்கிறதா என்று தெரியவில்லை) இதற்குச் சாஸ்திர சம்மதமும் உண்டு. ஒரேயொரு நிபந்தனைதான். புணரும்போது உடலில், (குறிப்பாகக் குறியில்) நெய் பூசிக்கொள்ள வேண்டும். இப்படிப் புணர்ந்து, பிறந்த பார்ப்பனர்களுக்கு ‘நியோகி’ என்று பெயர். ஆந்திர மாநிலத்தில் அதிகம். அவர்களில் ஒருவர் அய்ந்து ஆண்டுக்காலம் இந்தியப் பிரதமராகவே இருந்தார்.
                (தொடரும்)

-  உண்மை இதழ், 1-15.5.18