வியாழன், 1 நவம்பர், 2012
இராமாயணம் நடந்த கதையா? இராமன் யோக்கியமானவன் தானா?
வியாழன், நவம்பர் 01, 2012 Viduthalai Epaper
மதுரை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் தொடுத்த வினாக்கள்
மதுரை, நவ. 1- சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கி ராமனை இழுத்து வந்து முட்டுக்கட்டை போடுகிறார்களே, அந்த ராமன் இராமாயணக் கதைப்படியே பார்த்தாலும் யோக்கியனா - பின் பற்றத் தகுந்தவனா என்ற வினாக்களை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
எது தேவை? இராமனா? சேது சமுத்திரத் திட்டமா? என்ற தலைப்பில் மதுரை விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக்கூட்டத்தில் 26.10.2012, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:
எந்த மதுரையிலே இந்தத் திட்டம் தொடங்கப் பெற்றதோ, அதே மதுரையிலே மீண்டும் அது முடிந்திடவேண்டும்; நிறுத்தப்படக் கூடாது என்பதை வலியுறுத்தக் கூடிய முதல் கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது; பணி தொடங்கிவிட்டது.
இதிலே கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை. அதேநேரத்தில், தெளிவு உண்டு, முன் னேற்றப் பாதையிலே ஆர்வம் உண்டு. வளர்ச்சியிலே அக்கறை உண்டு என்ற கருத்தோடு இங்கே நாம் கூடியிருக்கின்றோம்.
இந்த மேடையைப் பார்க்கும்பொழுதே, பல பேருக்கு வியப்பாக இருக்கும். இவர்கள் எல்லோ ரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்களே, மற்ற நேரங்களில் எப்படி இருப்பார்களோ என்று.
கொள்கையின் அடிப்படையிலே உருவாகிய கூட்டணி
இதுவே ஒரு நல்ல அற்புதமான தொடக்கம் ஆகும். ஏனென்றால், கொள்கைகளின் அடிப்படை யிலே கூட்டணிகள் உருவாகவேண்டும். அந்தக் கொள்கையின் அடிப்படையிலே உருவாகிய கூட்டணிதான் இங்கே அமர்ந்திருப்பது.
திராவிடர் கழகம் எந்தக் கூட்டணியில் இல்லா விட்டாலும், இந்தக் கூட்டணியில் இருக்கும். ஏனென்றால், இது ஒரு லட்சியக் கூட்டணி. ஒரு லட்சியத்தை முன்னாலே நிறுத்தி, அந்த லட்சியம் பொதுமக்களுக்கு, பெரும்பாலான மக்களுக்கு, அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய ஒன்று.
அதை மூட நம்பிக்கையைக் காட்டி அதைத் தகர்க்கவிடக் கூடாது. மதவெறியை உண்டாக்கி இந்த நாட்டில் மீண்டும் மனிதநேயத்தைக் கொல்லக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்குத்தான் இந்தக் கூட்டம். அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எந்தவிதமான அய்யமும் இல்லை
எங்கள் மத்தியிலே யாருக்கு எத்தனை சீட்டு என்ற பிரச்சினையெல்லாம் கிடையாது. அதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இந்தக் கூட்டணியிலே பங்கீட்டுப் பிரச்சினையெல்லாம் வராது. ஏனென்றால், முழுக்க முழுக்க ஓர் இலக்கோடு இருக்கக் கூடியவர்கள் நாங்கள். அருமை சகோதரர் ஜான்மோசஸ் அவர்கள் எனக்கு சொன்னார்கள், நீங்கள் ஒரு நடை பய ணத்தைத் தொடங்குங்கள் என்று சொன்னார்கள்.
நடை பயணம் என்பது ரொம்பப் பழசு. இப் பொழுதெல்லாம் நீண்ட தூரம் நடந்து போய் இந்தப் பிரச்சாரத்தை செய்யவேண்டிய அவசியம் இல்லை. இது ராக்கெட் காலம். செவ்வாய் மண்டலத்துக்கே மனிதன் போய் குடியேறக் கூடிய காலம் இது. நம்மாள் என்னவென்றால், செவ்வாய் தோஷத்தைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டிருக்கிறான்.
மீத்தேன் வாயு அங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இங்கே இடம் இல்லை என்று, செவ்வாய் கிரகத்தில் இடத்தைத் தேடுகிற கால கட்டம் இது.
தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்
இந்தக் காலகட்டத்தில் இராமனைக் காட்டி ஒரு திட்டத்தை நிறுத்தலாம் என்று சொன்னால், அது ஆரியத்தினுடைய ஒரு புதிய அவதாரம் மட்டுமல்ல, அரசியலிலே ஒரு புதிய வியூகமும்கூட. அரசியல் கட்சிக்காரர்கள் தெளிவாகத் தெரிந்து கொள் ளுங்கள்.
இன்னொரு கட்சிக்கு, இன்னொரு அணிக்கு மரியாதை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தொடங்கப் பெற்றது. ஏற்கெனவே ஆதரித்தார்களே என்று சொன்னால், அந்தக் கட்சி செய்யாது என்று நினைத்துத்தான்.
நான் ஆதாரத்தோடு எதையும் சொல்லக் கூடியவன் என்ற முறையில் சொல்கிறேன். சுருக்கமாகவும் உங்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும் என்றால், தந்தை பெரியார் ஒரு கேள்வி கேட்டார்: நல்ல தலைப்பு போட்டார்கள். ராமனா? சேது திட்டமா? என்று.
இராமாயணப் பாத்திரங்கள்
இல்லாத ராமன், பொல்லாத ராமன்கூட, இந்தக் கற்பனைப் பாத்திரம் என்று சொல்லும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள், பல லட்சக் கணக்கிலே விற்றிருக்கின்ற ஒரு புத்தகம்.
எப்பொழுது என்றால், 60, 70, 80 ஆண்டுகளுக்கு முன்னாலே - இராமாயணப் பாத்திரங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் ஆய்வு செய்து, அய்யா அவர்கள் படிக்காத ராமாயணமே கிடையாது. அப்படி ஆய்வு செய்து எழுதிய இந்த இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலில் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்.
அதிலே, ராமாயணம் நடந்த கதை அல்ல என்று ரொம்பத் தெளிவாக எழுதிவிட்டு, ஒரு கேள்வி கேட்கிறார்.
ராமாயணம் நடந்த கதை அல்ல. அதன் காலமே சுத்தப் புரட்டு. ராமன் என்கிறவன் கற்பனைப் பாத்திரம்தான் என்பதற்கு தந்தை பெரியார் அவர்கள் ஆதாரம் சொல்கிறார்.
ராமாயணம் திரேதாயுகத்தில் நடந்த கதை. திரேதாயுகத்திற்கு உண்டான வருஷம் 12 லட்சத்து 96 ஆயிரம்தான். ஆனால், அந்த யுகத்தில் ராவணன் 50 லட்சம் வருடங்கள் ஆண்டு இருக்கிறான் என்பது ராமாயணக் கதையின்படி உள்ள செய்தியாகும்.
அய்யா அவர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, நாளைக்கு ஒரு பத்திரிகைக் காரன் எழுதுகிறார்; பல லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர், பேசும் நான். கூட்டம் 7 மணிக்குத் தொடங்கி, 10 மணிக்கு முடிந்தது. அதில் இராமசாமி எவ்வளவு நேரம் பேசினார் என்றால், 6 மணிநேரம் பேசினார்.
கூட்டம் நடந்தது மூன்று மணிநேரம்; அந்த நேரத்தில் இவ்வளவு பேர் பேசியிருக்கிறார்கள். இராமசாமி மட்டுமே 6 மணிநேரம் பேசினார் என்றால், அதைவிட பெரிய புளுகு, ஏமாற்று வேலை வேறு எதுவாக இருக்கும்?
எனவே, இல்லாத ஒரு ராமனை (கற்பனைப் பாத்திரம்) மற்றவர்கள் பார்த்து பின்பற்றக்கூடிய அளவிற்கு உண்டா?
ராமன் ரொம்பப் புனிதமானவன். ராமன் பிறந்த இடத்தில் மறுபடியும் கோவில் கட்டவேண்டும். மறுபடி பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் கோவில் கட்டுவோம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது.
ராமனையே நம்பி இருந்த கட்காரி, கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேறப் போகிறார். ராமன் அவருக்கே கைகொடுக்கவில்லை. ராமன் கைக்கொடுக்காததோடு மட்டுமல்ல, வருமான வரித்துறையினரும் அங்கே செல்ல விருக்கிறார்கள் என்ற தகவலும் வெளிவருகிறது.
ஆகவே, ராமனுக்கே இப்போ திண்டாட்டம்; ராமனை ஆதரித்தவர்களுக்கும் திண்டாட்டம்தான்.
ராமன் பாத்திரம் என்று எடுத்துக்கொண்டால், அவன் பெயரில் தேசிய சின்னம் வைக்க வேண்டு மாம். கேட்டால், ஒரே வார்த்தை சொல்கிறார்கள் நம்பிக்கையாம். பதினேழேகால் லட்சம் ஆண்டு களுக்கு முன்னால் இந்தப் பாலம் கட்டினார்களாம்; மனிதனே அப்போது இல்லை என்று எழுதி யிருக்கிறாரே நம்முடைய பேராசிரியர் அவர்கள்.
இந்தப் புத்தகத்தில் உலகத்தில் முதல் பாலம் எப்பொழுது கட்டினார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்களே!
அப்பேர்ப்பட்ட ஒரு நிலையில், சில ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால்தான் முதல் பாலம் கட்டப்பட்டது.
இராமாயண விமர்சனம்
ராமனை வால்மீகி எப்படி பார்த்தார்? வால்மீகி தானே அடிப்படையானவர். வால்மீகிக் கதையி லிருந்துதானே மற்ற கதையெல்லாம் வந்தது. அந்த வால்மீகி ராமனை எப்படிப் பார்த்திருக்கிறார் - எப்படி பிறந்தார் என்று சொல்லும்பொழுது,
நாசுக்காக நாகரிகத்தைக் கருதி நம்முடைய அருணன் அவர்கள், அமிர்தலிங்கம் அய்யர் அவர்கள் எழுதிய அந்தப் புத்தகம் இருக்கிறதே (நம்முடைய ஏ.பாலசுப்பிரமணியம் அவர்களு டைய தந்தையார் அவர்களுடைய புத்தகம்) அதிலே ராமாயண விமர்சா என்ற புத்தகத்தைப் பற்றி சொன்னார்கள் அல்லவா, அதில் சொல்லுவார்கள்;
ராமன் பிறப்பு என்று சொல்லும்பொழுது குதிரைகள், புத்திரகாமேஸ்டி யாகம், அஸ்வமேத யாகம், குதிரையை வெட்டி, கட்டிப்பிடித்து, பிறகு அந்தப் புரோகிதர்களுடன் இணைந்த பிறகுதான் இவர்கள் பிறக்கிறார்கள் என்று எழுதிய செய்தியை - அப்படியே வால்மீகி ராமயணத்தினுடைய பகுதியை - அமிர்தலிங்க அய்யர் அவர்கள் சமஸ் கிருதத்திலிருந்து மொழி பெயர்த்துவிட்டு, வால்மீகி ராமயாணத்திலே எழுதிவிட்டு, அடுத்த வரியில் என்ன எழுதுகிறார் என்று சொன்னால்,
நாகரிகம் வளர்ந்து வெட்கப்படக் கூடிய சூழ்நிலை வந்தவுடனே, கடவுளைப்பற்றி, அவ தாரத்தைப்பற்றி எழுதும்போது இவ்வளவு அசிங்க மான சூழ்நிலை வருகிறதே என்று அருவருப்பு அடைகின்ற காரணத்தால்தான்,
Later on they Introduced the Payasa theory என்று எழுதினார். அதுதான் மிக முக்கியம். பாயாசம் குடித்ததினால் கருத்தரித்தார்கள். யாகத்திலிருந்து ஒரு பூதம் வந்தது, உடனே பாயாசம் குடித்தார்கள், கருத்தரித்தார்கள் என்று மாற்றி எழுதிக் கொண் டனர்.
பாயாசம் குடித்தால் கருத்தரிக்க முடியுமா?
பாயாசம் குடித்து கருத்தரித்தார்கள் என்று சொன்னால், யாராவது ஒப்புக்கொள்வார்களா? இன்றைக்கு அறிவியல் காலமா, இல்லையா?
பாயாசம் குடித்ததினால் கருத்தரித்தேன் என்று எந்த மருத்துவமனையிலாவது சொல்ல முடியுமா?
பாயாசம் என்ன நேரே கருப்பைக்குச் செல்லுமா? உடற்கூறு தத்துவம் தெரிந்தவர்கள் இதனை நம்ப முடியுமா?
வாயால் குடிப்பது பாயாசம். கருத்தரிப்பு எப்படி நடைபெறும் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்கும்பொழுது பாயாசம் குடித்து எப்படி கருத்தரிக்க முடியும்?
அதுவே ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்லவா - இதனை சிந்திக்க வேண்டாமா?
ராமன் யோக்கியனா?
ராமன் பெண்களிடம் நடந்துகொண்டது யோக்கியப் பொறுப்புள்ள ஒரு காரியமா?
எந்தப் பெண்ணாவது இன்றைக்கு ராமனை ஒரு மனிதாபிமானி என்று ஒப்புக்கொள்ள முடியுமா?
யாரோ ஒருவன் சொல்கிறான், மனைவியைப் பற்றி பேசுகிறான் என்பதால், நெருப்பில் மனைவியை குதிக்கச் சொல்லி, நீ கற்புக்கரசிதான்; உன் கற்பு கெடவில்லை என்றால், நீ அக்கினிப் பரிட்சை நடத்தவேண்டும் என்று சொன்னார்.
சீதாபிராட்டியும் நெருப்பில் குதித்து, கற்புக்கரசி தான் என்று வெளியில் வந்துவிட்டார்கள் என்று கதை எழுதி வைக்கிறான்.
கடவுள் அவதாரத்திற்கு ஞானதிருஷ்டி இல்லையா?
இன்றைக்கு யாராவது அக்கினிப் பரீட்சை நடத்த விடுவார்களா? இது பண்புள்ள ஒரு செயலா?
இவனே கடவுள் அவதாரம் என்று சொல் கிறார்கள்; கடவுள் அவதாரத்திற்கு ஞானதிருஷ்டி இல்லையா?
ராமன் நினைத்திருந்தால், ராவணனிடம் சீதை எப்படி இருந்தாள் என்று தெரிந்துகொள்ள முடியாதா?
சந்தேகம் வந்தால், ஒரேயடியாக தண்டனை கொடுத்திருக்கலாமே? அதற்காக நெருப்பில் குதித்து வெளியே வரவேண்டும் என்று சொல்லலாமா?
இன்றைக்குப் புராதன சின்னம் என்று சொல்கிறார்களே, இன்றைக்கு யாராவது அக்கினி பரீட்சையை நடத்த முடியுமா? என்னதான் சீதாபிராட்டியாரை கும்பிடக்கூடியவர்களாக இருந்தாலும், ராமயாணத்தைப் பாராட்டக் கூடியவராக இருந்தாலும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவராக இருந் தாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஏன் உமாபாரதியாக இருந்தாலும்கூட யாராவது நெருப்பிலே குதித்துவிட்டு வா என்று சொன்னால், உடனே போகிறேன் என்று சொல் வார்களா?
முதலில் நீ நெருப்பில் விழு என்று சொல்வார்கள்
அந்த மாதிரி இன்றைய தம்பதியரிடையே நடைபெற்றால், என்னைப்பற்றி ஊரில் பேசுவதை விட, உன்னைப்பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள். முதலில் நீ நெருப்பில் விழுந்து காட்டு; பிறகு நான் நெருப்பில் குதிப்பதற்குத் தயாராய் இருக்கிறேன் என்று கேட்பதுதானே அறிவுடைமை.
அதுமட்டுமல்ல; சாபத்தால், கற்பிழந்த அக லிகை கல்லாய்ப் போனாள். ராமனுடைய பாதம் பட்டதால், அகலிகைக்கு சாப விமோசனம் அடைந்து உடனே எழுந்து விடுகிறாள்.
இவர் கால் பட்டாலே சாப விமோசனம் கிடைக்கும்பொழுது, சீதையை ஏன் நெருப்பில் குதித்து வெளியே வா என்று கேட்க வேண்டும்?
பெரிய வீராதி வீரன் ராமன்; ஒரு சுத்த வீரன் ராமன் என்று சொல்ல முடியுமா?
மரத்தின்பின் நின்று மறைந்து நின்று வாலியைக் கொல்கிறான் கதைப்படி!
சக்கரவர்த்தி திருமகன் எழுதிய ராஜ கோபாலாச்சாரியார், பல ராமாயணங்களிலிருந்து ஒட்டுப் போட்டு - சரிப்படுத்தி எழுதினார்.
அவர் எழுதியதைப் படித்துப் பார்த்தீர்களே யானால், வாலி வதம் என்ற பகுதியில் எழுதி யிருக்கிறார்,
ஆண்டவன் அவதாரமாகிய ராமன் மறைந்து நின்று ஏன் வாலியைக் கொன்றான் என்பதற்குப் பல பேர், பலவிதமான சமாதானங்களைச் சொல் கிறார்கள்; ஆனால், அது எனக்கு அவ்வளவு சரி யென்று படவில்லை; அந்த இடத்திற்கு நாம் அதிகம் போகவேண்டாம் என்று இதோடு விட்டுவிடுகிறேன் என்று எழுதியிருக்கிறார்.
எனவே, ராமன் வீரனா? ராமன் மனிதாபி மானியா? ராமன் பெண்களிடத்திலே ஒழுக்கமாக, யோக்கியமாக நடந்துகொண்டவனா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
-தொடரும்.
When looking at the bonuses, you need to} always verify to see 메리트카지노 if there's a deposit bonus, reload bonus, or recurring weekly bonus you could benefit from. These forms of bonuses could make all of the difference when you are up} gambling on-line. When selecting one of the best casinos for on-line on line casino gambling, we took into account extensive variety|all kinds} of factors.
பதிலளிநீக்கு