பக்கங்கள்

திங்கள், 28 அக்டோபர், 2024

இராமன் சீதை திருமணத்திலும் தாலி இல்லை

 


செப்டம்பர் 16-30

– அ.ப.நடராசன்


வால்மீகி இராமயணம்: மிதிலை நகரத்தில் ராமன் சீதை திருமணத்தை வசிஷ்டர் நடத்தி வைக்கிறார்: எப்படி?

வசிஷ்டர் விசுவாமித்திரரையும், சதானந்தரையும் அழைத்துக் கொண்டு திருமண மண்டபத்தின் நடுப்பகுதிக்குச் சென்றார்.

அழகான மேடையை உண்டாக்கினார். சாஸ்திர முறைப்படி வேதியைத் தோற்றுவித்தார். மலர்களாலும் சந்தனம் போன்றவற்றாலும் அலங்காரம் செய்தார். தங்க பாலிகைகள், கிண்டிகள், சங்க பாத்திரங்கள், முளைத்த விதைகள் உள்ள மடக்குகள்  போன்றவற்றை அவ்வவற்றிற்கு உரிய இடத்தில் வைத்தார். பின்னர் தீர்த்தக் கும்பங்களை வைத்து விதிப்படி பூசனை செய்தனர்.

மஞ்சள் கலந்த அட்சதைகள், நெல் பொரி அர்க்கிய ஜலம் போன்றவற்றையும் தாயார் செய்தார். தூப தீபங்களைக் கொண்டு பூசித்தார். ஓரே அளவுள்ள தர்ப்பங்களை வேதியைச் சுற்றிப் பரப்பி, மந்திரங்களால் அக்னிப் பிரதிஷ்டை செய்தார். தம்பதிகளின் நலத்திற்காக ஹோமம் செய்தார். திருமண மந்திரங்களை முறைப்படி உச்சரித்தார்.

இந்த நேரத்தில் அழகு மிக்க சீதையை அழைத்துக் கொண்டு அங்கு வந்தனர். அவள் ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப்-பட்டிருந்தாள். அக்னிக்கு அருகில் இராமரும் எதிரில் அவளை நிறுத்தினார்.

பின்னர் ஜனகர் இராமரைப் பார்த்து, இராமா! இவள் எனக்குப் பூமியில் இருந்து கிடைத்தவள். எனவே சீதை என்று பெயரிட்டுள்ளேன். இவளை என் பெண்ணாக எண்ணியே மிகுந்த அன்புடன் வளர்த்து வருகின்றேன். இவள் எல்லா தர்மத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவள், இவளை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள், அவளுடைய கையைப் பற்றிக் கொள்ளுங்கள், நிழலைப் போல உங்களைப் பிரியாமல் எப்பொழுதும் இருப்பாள் என்று சொன்னார்.

பின்னர் மந்திரங்களால் பரிசுத்தமாக்கப்-பட்ட நீரை எடுத்து இராமரின் கையில் தாரை வார்த்தார். இவ்வாறு கன்னிகாதானம் இனிதாக நிறைவேறியது. ஆதாரம்: வால்மீகி இராமயணம், வார்த்தமானன் வெளியீடு பாலகாண்டம் பக்கம் 295, 296
கம்ப இராமாயணம்: கம்ப இராமாயணம் இராமாவதாரம் பாலகாண்டம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) கடிமணப் படலம் வசிட்டன் திருமணச் சடங்கு என்ற தலப்பில் சொல்லப்பட்டுள்ள செய்திகளிலும் தாலி இல்லை.

திருமணத்துக்குரிய  ஆசனங்களில் ஏறி; வெற்றியினையும் பெருங்குணங்களையும் உடைய வீரனான இராமபிரானும்; அந்த இராமபிரான்பால் பேரன்பினை யுடையவளாய் (அவனுக்கு) இனிய துணையாக ஆகவுள்ள அன்னம் அனைய சீதையும்  நெருக்கமாக வீற்றிருந்தார்கள்.

தசரதச் சக்கரவர்த்தித் திருமகனான இராமனின் எதிர்நின்று சனகமன்னன், நீ (பரம்) பொருளாகிய திருமகளும் போல என்னுடைய பெருமைக்குரிய திரு மகளான சீதையுடனே நிலை பெற்று வாழ்க என்று கூறி, குளிர்ந்த நீரைத் (தாரை வார்த்து) தாமரை மலர் போன்ற (இராமனது) வலத் திருக்கையிலே கொடுத்தான்.

1246 வாழ்த்து ஒலியும் மலர் மழையும்:

அந்தணர் ஆசி, அருங்கல மின்னார் தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர் வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு முந்திய சங்கம் முழங்கின மாதோ! இங்கும் தாலி பற்றிய செய்தி இல்லை.

மாவீரனாகிய இராமபிரான் அப்பொழுது மந்திரங்களை மூன்று முறை கூறி, வெம்மை மிக்க தீயில் நெய்யோடு கூடிய அவியுணவுள் யாவற்றையும் பெய்தான். அதன்பின் சீதையினுடைய மெல்லிய கரத்தைத் தனது திருக்கரத்தால் பற்றினான்.

1250 இராமனும் சீதையும் தீயினை வலம் வந்து வணங்கினர் பின்பு பொரியிடுதல் முதலிய பொருள்கள் கொண்டு செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்து வசிட்டன், விசுவாமித்திரன், தசரதன் இவர்கள் பாதங்களில் வீழ்ந்து கும்பிட்டவுடன், சீதையின் கைகளைப் பற்றிக் கொண்டு தனக்குரிய மாளிகையினுள் சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக