பக்கங்கள்

வெள்ளி, 5 மே, 2023

இராமன் எத்தனை இராமனடி!

  

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

இராமன் எத்தனை இராமனடி!

மின்சாரம்

5

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள் அவற்றைப் பெற்று ஒரு புத்தகத்தில் ஒருலட்சம் முறை என்ற கணக்கில் எழுதி அவற்றை அந்த வங்கியில்' சமர்ப்பித்தால் அந்த ஸ்தாபனம் அவற்றை திரட்டி சேமித்து தமிழகத்தில் பல ஊர்களிலும் அயல் மாநிலங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களிலும் ராமநாம மந்திரம் என்ற பெயரில் சிறிய ராமர் சன்னிதி எழுப்பி அவற்றில் விக்ரகம் அமைந்துள்ள பீடத்தின் அடியில் இந்த நோட்டுப் புத்தகங்களை வைக்கிறார்கள். அவ்விதமாக தினசரி வழிபாட்டின் அங்கமாக அவை மாறிவிடுகின்றன. இவ்விதமாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து, கையினால் எழுதி கைகூப்பித் தொழுது - இயன்ற வகையில் எல்லாம் ராமன் புகழ் பரப்புவது நல்லது என்றால், ராமன் வாழ்ந்த வாழ்க்கை நம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் முன்னுதாரணம் ஆவது மிக நல்லது. 

- விஜய பாரதம், 31.3.2023

இராமன் என்பவன் ஏதோ உதாரண புருஷன் போலவும், அவன் பெயரை இலட்சம் முறை ஸ்ரீராம நாம மந்திரம் எழுதினால், ராமன் வாழ்த்துவான் என் றும் ஒவ்வொருவர் வாழ்க்கையும் முன்னுதாரணமாக அமையும் என்றும் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்' (31.3.2023, பக். 13) ‘புரூடா' விட்டுத் தள்ளியுள்ளது. 

இதன் மூலம் என்ன தெரிகிறது? இராமன் தற் புகழுக்கு மயங்கும் சராசரி மனிதன் என்று விளங்க வில்லையா?

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், இராம அவ தாரத்தின் நோக்கம் என்ன? இராமனுக்கு இருந்த சாபம் என்ன என்பதை இராமாயணத்திலிருந்தும் சிவரக சியத்து மூன்றாம் அம்சத்து இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலிருந்தும் பார்க்கலாமா?

இதோ ஆதாரங்கள்:

6

இராவணேசுவரனால் துன்பமடைந்த தேவர்கள் யாவரும் இந்திரனோடு நான்முகன் உலகடைந்து, தங்கள் குறையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருமாலும் அங்கே வந்து சேர்ந்தார். உடனே நான்முகனும் தேவர்களும் அவரைப் பூமியில் மனிதனாகப் பிறந்து, இராவணனைக் கொன்று வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அவ்வேண்டுதலுக்குத் தாமும் இசைந்து. அவர்களை நோக்கித் திருமால், "தசரத மன்னருக்கு மகனாகப் பிறந்து. இராவணனைக் கொன்று, பதினோராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர். இங்கே வருவேன்" என்று கூறினார். அவ்வாறே தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இவ்வாறு பிறப்பதற்கு ஆதாரமான மற்ற காரணங்களையும் ஆராய்வோம் அவை:

1. ஒருகால் திருமால், பிருகு முனிவருடைய மனைவியைக் கொன்றுவிட்டார். அதனால். அம் முனிவர் திருமாலை நோக்கி, மனிதனாகப் பிறந்து, மனைவியை இழந்து வருந்தும்படி சபித்துவிட்டார். இது முதற்காரணம். இது வால்மீகி இராமாயணம் உத்தரகாண்டம் அய்ம்பத்தோராம் சருக்கத்திலுள்ளது. இதே செய்தி மகா ஸ்கந்த புராணம், உபதேசகாண்டம் அறுபத்து நான்காம் அத்தியாயத்திலும் கூறப்பெற்று உள்ளது.

2. சலந்தராசுரனின் மனைவியாகிய பிருந்தையைச் சேரவேண்டும் என்னும் காதல் மிகக்கொண்ட திருமால், அவ்வசுரன் இறந்தமைகண்டு. அவனுடலில் நுழைந்து கொண்டு அவளிடம் இன்பம் நுகர்ந்து கொண்டிருந்தார். சில நாள்களில் அவரை அக்கற்பரசி இன்னாரென அறிந்துகொண்டு, "மாயையினால் என் னோடு கூடி. அதனால் பிறர் மனையாளைப் புணர லென்னும் குற்றத்திற்குள்ளாகிய ஏ திருமாலே! உன் மனைவியைப் பகைவன் வஞ்சனையாலெடுத்துப் போகக் கடவன் என் கணவன் உடம்பினைக் குரங்கு களால் நீ கொண்டு வந்ததனாலேயே நீயும் குரங்கு களோடு சேர்ந்து காட்டில் அலையக் கடவாய்” என்று சபித்தாள், பின், உடனே அவள் தீக்குளித்து, கெட்ட தன் உடலைச் சாம்பலாக்கினாள். இச்செய்தி மகா ஸ்கந்த புராணம் தக்க காண்டம் இருபத்துமூன்றாம் அத்தியாயத்திலுள்ளது. பின் திருமால் அவள் சாம்பலிற் கிடந்து புரண்டார். அதன்பின் அச்சாம்பவில் முளைத்த துளசியை அணிந்து மயக்கந் தீர்ந்தார் என்பது. இது இரண்டாவது காரணம்.

3. ஒரு பிரதோஷ வேளையிலே திருமால் மனித உடம்போடு திருமகளைப் புணர்ந்துகொண்டிருந்தார். அப்போது சோதனைக்குச் சென்ற அற்புதாக்கள் என்னும் சிவகணத் தலைவன் அவரை நோக்கி. “நீ யாரடா?" என்று கேட்டான். அதற்குக் கொஞ்சமும் வெட்கமின்றி விலகாமல் திருமால் அவள் மேலிருந்த வண்ணமாகவே. "கேட்பது யாரடா?" என்றார். இவ் வெறுக்கத்தகுந்த செயலைக் கண்டு மீண்டு அத் தலைவன் இச்செய்தியை நந்திபிரானிடம் தெரிவித்தான். உடனே நந்திதேவர் அத்திருமாலைப் பூமியில் இராமனாய் பிறந்து. மனைவியைப் பிரிந்து வருந்துமாறு சபித்தார். இச்செய்தியைச் சிவ ரகசியத்து மூன்றாம் அம்சத்து இரண்டாம் காண்டம் நாற்பத்து மூன்றாம் சருக்கத்தில் காண்க.

அச்செய்யுள் வருமாறு:-

"அவளை நீ யாவனடா வென்று கேட்டே 

ளம்புயப் பெண் ணைத்தழுவ னீங்ககில்லா

னெவனமா துடன்கூடி யிலச்சை யின்றி 

யென்னை நீ யாவனடா வென்று கேட்டான் 

கவனமுறு மிவன் தூர்த்த ளென்று கண்டேன் 

கருத்தி லவன்றனைத் தள்ளவல்லே ளெம்மான 

சிவனருள்சே ருளதாணை குறித்து மீண்டேன் 

தேவரி தொரு புதுமையவள் பாற் கண்டேன்"

“மன்னவன் றன் மைந்தனா மிராமனாகி 

வந்து பிறந்திடக்கடவ னாகுமன்றே"

இது மூன்றாவது காரணம்.

இது போன்ற யாதொரு செய்தி சிவரகசியம் 3 ஆம் அமிசம் 2ஆம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது. அதாவது, வைகுண்டத்திலே திருமால் பிரதோஷ வேளையாகிய மாலைக் காலத்தில் திருமகளைப் புணர்ந்து கொண்டிருக்க, அங்கே பிருகு முனிவர் அவரைக் காணச் சென்றனர். அப்போது தடுத்த கருடனைச் சாம்பலாக்கி, அம்முனிவர் உள்ளே நுழைந்தார். அவர் வருவதைக் கண்ட திருமால் நீங்காமல் புணர்ச்சியிலிருந்தபடியே அவரை வராது நிற்கும்படி கைகாட்டித் தடுத்தனர். உடனே பிருகு முனிவர்.

"எந்நாளு மினியவந் திவேளை தன்னி

லேந்திழையைப் புணர்வரோ வுனக்கிப் புத்தி 

சொன்னாரா ருன்மத்த முண்டோ வென்று 

தூயமா தவன்றான்மா தவனை நோக்கிப் 

பன்னாளும் பிரதோடந் தனிலுன் னாமம் 

பகர்ந்துளோர் தரிசித்தோர் பரவல் செய்தோர் 

துன்னாத நிரயத்திற் புகுவா ரென்று 

சூழ்கோபத் தாற்சாபஞ் சொல்லிப் போனான்."

மேலே கண்ட சாபங்கள் பலிக்குங் காலம் வர, திருமால் தேவர்களின் வேண்டுகோளின்படி பூமியில் மனிதனாகப் பிறந்தார்.

இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? யாகம் என்றால் என்ன? கடவுளாகிய திருமாலுக்குக் கொலை, களவு, காமம், விபசாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன? இக்காரியங்களைச் செய்ப வர்கள் கடவுளர்கள் ஆவார்களா? இச்செயல்கள் தேவலோகத்தில் நடந்ததா? பூலோகத்தில் நடந்ததா? தேவர்கள் எங்கிருப்பவர்கள்? அவர்கள் யாகம் செய்யப் பூலோகத்திற்கு ஏன் வரவேண்டும்? ஜீவப் பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று. பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும் உயர் பதவியும், மேன்மை யும் அளிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமையும், கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா? கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும், அதைத் தடுக்கிறவர்கள் இராட்ச தர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா? என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப் பட வேண்டியதாகும்.

இன்றைய நாள்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப்பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொதுமக்களும், அரசாங்கமும் கருதிப் பழிப்பும் ஆக்கினையும், தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத் தடுப்பது ஒழுக்கமாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா? அதிலும் 'சிவபக்த'னான இராவணனுடைய நாட்டிலும் ஆட்சியிலும் இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும். தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்ய வேண்டியது கடமையாக இருந்திருக்காதா? இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததனாலேயே அந்த அர சனையும். அவனது குலத்தையும், குடிபடைகளையும், நாட்டையும், அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்துவர வேண்டியது கடவுள் தன்மையா? என் பனவும், இதைப்போன்ற பிறவற்றையுமே ஆராய்ந் தால், இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருந்துவருவது விளங்கும்.

இவை நம் கை சரக்கல்ல - ஹிந்து மத நூல் களிலிருந்தே எடுத்துக் காட்டியுள்ளோம். அறிவு நாணயம் இருந்தால் மறுக்கட்டுமே பார்க்கலாம்.

1944ஆம் ஆண்டிலேயே "இராமாயணப் பாத்திரங்கள்" என்ற நூலை தந்தை பெரியார் எழுதி வெளியிட்டுள்ளார்கள். இதுவரை மறுப்பு உண்டா?

இந்த இலட்சணத்தில் இலட்சம் முறை "ராமாவளி" எழுதினால் என்னென்னவெல்லாம் கிடைக்குமாமே!

காகிதத்திற்கும் மைக்கும் நேரத்துக்கும் உழைப்புக்கும் தான் கேடு - அம்மட்டே!

இராமரின் யோக்கியதாம்சம் குறித்து வரும் வெள்ளியன்று (14.4.2023) பதிலடியில் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக