பக்கங்கள்

வெள்ளி, 31 மே, 2019

உண்மை இராமாயணம்



13.03.1948  - குடிஅரசிலிருந்து...
காட்சி : 25
கோசலை வீடு :- (கோசலை, இராமன் பட்டாபிஷேகத்திற்கு எவ்விதத் தடையும் ஏற்பட்டு விடக் கூடாதென்று பிரார்த் தித்துக் கொண்டிருக்கிறாள். இலட்சுமணன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கின்றான்.
இராமன் கோசலை வீட்டுக்கு வருகின்றான். வருகிற வழியில் இராமன், ஆ கடவுளே! என் தலைவிதி இப்படியா நேர்ந்தது என்று நினைத்துத் துக்கம் பொறுக்க மாட்டாமல் தலையிலடித்துக் கொண்டு வேதனைப்படு கின்றான். வீட்டுக்குள் நுழையும் போது, தானே திடுக்கிட்டு நாமே இப்படித் துக்கப்பட் டால், இனி தாயாரும் நண்பர்களும், எவ்வளவு துக்கப் படுவார்கள்.
நமது துக்கத்தை வெளியிடக் கூடாது என்று துக்கத்தை அடக்கிக் கொண்டு உள்ளே புகுந்து தாயை வணங்குகிறான்.
இராமன் :- தாயே! வணக்கம். (துக்கத் தோடு நின்று கைகூப்பிச் சொல்லுதல்)
கோசலை :- இராமா! மங்களம் உண்டாகட்டும்! உன் முகம் என்ன இப்போது ஏதோ ஒரு பெரும் துக்கத்தில் ஆழ்ந்த மனதுடைய முகம் போல் காணப்படுகிறதே. பட்டாபிஷேகத் துக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டதா? ஒரு நாளும் வாக்குத்தவற மாட்டார் உன் தந்தை. எப்படியும் எடுத்த காரியத்தை முடித்துவிடுவார். இன்றைய
தினமே நீ அரசனாகப் போகிறாய். கவலை ஏன்? இந்த ஆசனத்தில் அமரு! சாப்பிடலாம் வா!
இராமன் :- அம்மா! ஆசனம் ஒரு கேடா! எனக்கும், உனக்கும், சீதைக்கும், இலட்சுமணனுக்கும் துக்கத்தையும், பெரும் கேட்டையும் கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
கோசலை :- (திடுக்கிட்டு) ஆ! அய்யோ! மகனே! அப்படிப்பட்ட கெட்ட சங்கதி என்ன? துக்கப்படாமல் சொல்லு!
இராமன் :- அம்மா! எனக்கு இராஜ்ய பட்டாபிஷேகம் இல்லை; பரதனுக்கு ஆகப்போகிறது. என் கைக்கு எட்டிய இராஜ்யமும் போய், நான் 14 ஆண்டு காட்டுக்குப் போகவேண்டும். இது தந்தை கட்டளை. மாமிசத்தை விலக்கி இனி நான் காய், கிழங்கு தான் சாப்பிட வேண்டும்! போய் வருகிறேன்!
கோசலை :- (வயிற்றிலடித்துக் கொண்டு) அய்யோ! தெய்வமே! என் எண்ணமெல்லாம் இப்படியா ஆக வேண்டும். என்னிடம் காசு பணமும் இல்லையே! நகையும் இல்லையே! என் அழகும் போய்விட்டதே! அரசர் கண் ணுக்கும் பிடித்தமில்லாத கிழவியாக இருக்கிறேனே! இந்த நிலையில் நீயும் போய்விட்டால், என்னை இனி - யார் சட்டை செய்வார்கள்? இந்த நிலையில் நான் உன்னை விட்டு உயிர்வாழ மாட்டேன். நீ என்னை விட்டுப் போகக் கூடாது. நீ போக அனுமதிக்க மாட்டேன் நான்.
இலட்சுமணன் :- அம்மா! அப்படிச் சொல்லுங்கள்! இராமன் காட்டிற்குப் போவது எனக்குச் சம்மதமில்லை. ஒரு பெண் பிள்ளை சொன்னால், அதைக் கேட்டுக் கொண்டு காட்டுக் போவதா? முடியாது. இராமா! இதோ நிமிட நேரத்தில் அயோத்தி ராஜ்யத்தை உன் கைவசப்படுத்திவிடுகிறேன். குடிகள் ஒப்புக் கொள்ளாவிட்டால், மனிதப் பூண்டே இந்த நாட்டில் இல்லாமல் செய்துவிடுகிறேன். பரதனுடைய கட்சியார் எல்லோரையும், அவன் தாயாரையும், பரதனையும், யாவரையும் அழித்து விடுகிறேன்.
நமது தந்தையாரையும் கொன்று விடுகிறேன். அல்லது சிறையில் வைத்து விடுகிறேன். அவர் யோக்கியரல்ல. அவர் உம்மை ஏமாற்ற இச்சதி செய்திருக்கிறார். அவர் கைகேயிடம் பேசி முன்னேற்பாடாக அதாவது, நான் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதாய் நடிப்பு ஏற்பாடு செய்கிறேன். நீ அதைத் தடுத்துவிடு என்று சொல்லி இப்படிச் செய்திருக்கின்றார். அவ ரையும் கொன்றுவிடுகிறேன். அம்மா என்ன சொல்கிறீர்?
கோசலை :- இராமா! உன் தம்பி சொல்வதைக் கேள். என் சக்களத்திப் பேச்சைக் கேட்டுக் கொண்டு நீ காட்டுக்கு போகாதே!
இராமன் :- அம்மா! அவனுக்கு ராஜ்யம் போய்விட்டதென்ற ஆத்திரம் இருக்கிறது; அவனுக்கு இராஜ்யத்தை அடைய நல்லவழி எது என்பது தெரியவில்லை. நான் இப்போது காட்டிற்குப் போவதுதான் ராஜ்யத்தை அடைய நல்லவழி! நீ கவலைப்படாமல் அரசரைக் கவனித்துக் கொண்டிரு! நான் திரும்பி வந்து இராஜ்யத்தை அடைந்து உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன்! இப்போது நாம் இந்த நிலைமையில் இராஜ்யத்திற்கு ஆசைப் பட்டால் குடி ஜனங்கள் எதிர்ப்பு ஏற்பட்டுவிடும். ஏனென்றால், குடி ஜனங்களுக்கு உண்மை தெரிந்து விட்டது. தந்திரமாய்க் காரியம் செய்ய வேண்டும்! கவலைப்படாதே! இதை நம்பு!
கோசலை :- சரி! அப்படியானால் போய்விட்டுவா! மன தைரியத்தோடும், உறுதியோடும் போய்விட்டு வா! அவசியம் வந்தாக வேண்டும்; நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். நீ திரும்பி வந்து உன்னை அரசனாகக் கண்ட பிறகுதான், என் மனம் நிம் மதியடையும்! வாக்குத் தவறிவிடாதே! திரும்பி வந்து இந்த அயோத்திக்கு அரசனாக அமர்ந்து எனக்குக் காட்சி தரப்போகும் ராமா! சுகமாகப் போய்விட்டுச் சீக்கிரம் வந்து சேர்.
(இராமனுக்கு முத்தம் கொடுத்துக் குஷாலாய் உத்தரவு கொடுக்க, இராமன் அவ்விடத்தை விட்டுச் செல்கிறான். காட்சி முடிகிறது)
- விடுதலை நாளேடு 31 .5 .2019

திங்கள், 6 மே, 2019

இராமாயணம் நடந்த காலம்

#இராமாயணம்

இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.

புத்தர் பிறந்து இன்றைக்கு 2600 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2600 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:-

(சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)
1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங் களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்ப வர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)

2. ராமன், ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும், பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.
(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்)

21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2600 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2600 ஆண்டுகளுக்குள்ளாகவே தோன்றியிருக்கவேண்டும். கி.பி. 400 குப்தர்களின் காலத்தில்தான் இவை எழுத்துருபெற்றது. ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும். அத்துடன் சமஸ்கிருத மொழி தோற்றத்திற்கும் வரலாறு உண்டு.

இன்று விஞ்ஞானம் வளர்ந்த நிலையில் ஹோமோசேப்பியன்ஸ்சே 2 லட்ச வருடங்கள்தான் ஆகிறது என்று விஞ்ஞான ரீதியாக மரபணு மூலம் நிரூபித்திருக்கிறார்கள். ஒரு துகள் மரபணு மூலம் வரலாற்றையும் கூறமுடியும் இன்னொரு உயிரையும் உருவாக்க முடியும். இவ்வாறிருக்க நேற்று தோன்றிய சமஸ்கிருத மொழியில் கூறப்பட்ட கடவுள்களை நம்புவது எவ்வாறான செயல்?

வால்மீகிதான் இராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதியது. ஆனால் திரேதா யுகத்தில் 21 லட்ச வருடங்களுக்கு முன்பு வால்மீகி ஆசிரமத்தில் சீதை வாழ்ந்ததாகவும் கூறுகிறது. 21லட்ச வருடங்களிற்குமுன் திரேதா யுகத்தில் வாழ்ந்தார் வால்மீகி எனில், துவாபர யுகமும் தாண்டி கலியுகத்தில் சமீபத்தில் தோன்றிய சமஸ்கிருதத்தில் எவ்வாறு இராமாயணத்தை எழுதியிருக்கமுடியும்?  இவ்வாறானவற்றை நம்பும் மூடர்களை என்னவென்று சொல்வது?

உண்மையில் நடந்தது என்னவெனில்...
கி.மு 6ம் நூற்றாண்டுகளிற்கு பிறகு வாய்வழியாக செய்யுள் வடிவில் உருவாகியது இந்த கற்பனை கதை. கதை கூறும்போது 21 லட்ச வருடங்களிற்கு முன் இக்கதை நடந்ததாகவும், (முன்னொரு காலத்தில் என்று கதை கூறுவதுபோல) ஏற்கனவே இருந்த இடங்களைவைத்து கதைகளை புனைந்தார்கள். (இன்றைய சினிமா எடுப்பதுபோல. ஏற்கனவே இருந்த நிலப்பரப்பை இராமர் கட்டிய பாலம் எனவும் அதற்கு ஒரு தேவை இருந்ததாகவும் கதைகளை உருவாக்கினார்கள்.)

இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது கதை நடந்ததாக கூறப்படுவது 21 லட்ச வருடங்களிற்குமுன் திரேதா யுகத்தில் என்கிறார்கள். அதன்பிறகு துவாபர யுகம் இப்போது கலியுகம் என்கிறார்கள். அவ்வாறு பார்த்தாலும் திரேதா யுகம் அழிந்து துவாபரயுகம் ஆரம்பித்து அது அழிந்து கலியுகம் ஆரம்பித்தபின்பும் திரேதாயுக நிலப்பரப்புகளும், இராமர் மூன்று கோடுபோட்ட அணிலும், ஏன் 21 லட்ச வருடங்களாக வால்மீகியும் இருப்பது வேடிக்கை.

விஞ்ஞானம்.. பரிணாம வளர்ச்சி, கண்ட ஓட்ட அசைவுகள், ஒவ்வொரு உயிர்கள், கண்டெடுக்கபட்ட பொருட்கள் எவ்வளவு பழமையானது என்று பலவற்றை நிரூபித்தபின்னும், புவியை தாண்டி பல கோள்கள், ஞாயிற்றுதொகுதிகள், இருப்பதை உறுதிசெய்த பின்பும், புவியில் சமீபத்தில் தோன்றிய ஒரு மொழியில் யாரோ மனிதன் கூறிய கதையில் அல்லது புத்தகத்தில் உள்ளவற்றை கடவுள் என்று நம்பினால் இவர்களை என்னவென்று கூறுவது? 

பல நிரூபிக்கப்பட்டபின்பும் இவை தெரியாது அல்லது இவை தவறு என்பதுபோல கண்களை மூடிக்கொண்டு மதங்கள் கூறும் பாலை அருந்தி அமைதியாவது ஐந்தறிவு பூனைகளின் செயலுக்கு ஒப்பானது.

- கட்செவி யில் வந்தது