பக்கங்கள்

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ஹங்கேரி - இராமாயணம்


வார்சா ஒப்பந்தநாடுகளில் இராமாயண நாடகத்தை நடத்துவது இந்தியாவிற்கு நீண்டகாலமாக நற்பெயரை தரக்கூடிய வழிமுறையாக இருந்ததாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹங்கேரியர்கள் இராமாயண நாடகத்தை நடத்தினால் நல்ல வரவேற்பு இருக்குமென்று கருதி, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளையே கவரும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய இராமாயண நாடகத்தை தயாரித்தார்களாம்.
இந்த நாடகத்தில் இராவணன் வில்லனல்ல. மாறாக இலட்சுமணன் தான் வில்லன். இவன் நம்பிக்கைத் துரோகம் செய்து தன் அண்ணன் மனைவி சீதையை கூட்டிக் கொண்டு ஓடுவதாகக் கதை. இந்த நாடகம் ஹங்கேரியிலுள்ள புடா பெஸ்ட் நகரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.
மேலும் புதிய டியூட் டானிக்கின் புராண மொழி பெயர்ப்பின்படியும் சமீபத்தில் ஜெர்மானிய ஜனநாயக குடியரசு சார்பில் பெர்லினில் நடந்த நாடகத்திலும், இராவணன் சீதை மீது விருப்பமில்லாதவனாகவும், சீதை வலிய சென்று இராவணனை மயக்கக் கூடியவளாகவும் சித்தரித்திருக்கிறார்களாம்.
ஆதாரம்: இந்துஸ்தான் டைம்ஸ் - 4.10.1981

-விடுதலை,30.1.15,பக்-7

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

இராமயண காலம் - பொய்

-தந்தை பெரியார்
    இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.
புத்தர் பிறந்து இன்றைக்கு 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங் களுடன் கீழே தரப்படுகின்றன:- (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)
1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங் களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்ப வர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(
அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)
2. ராமன், ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும், பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(
மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)
3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.
(
சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)
4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
(
கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)
5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத் தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(
அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்)
21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும்.
-விடுதலை,6.2.15,பக்-7