பக்கங்கள்

வெள்ளி, 17 அக்டோபர், 2025

ஹிந்தியில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் பெரியாரின் பார்வையில் இராவணன்



 பெரியார் கி நஜர்மே இராவணன்  என்ற கட்டுரை  ஹிந்தியில் தர்கசங்கத் ஜெய்ஸ்வால் என்பவர் எழுதியதை பிரீபிரஸ் ஜெனரல் ஹிந்தி மற்றும் ஆங்கில இருமொழி இதழ் 2022 ஆம் ஆண்டு வெளியிட்டது. அக்கட்டுரை வருமாறு:

தந்தை பெரியார் அவர்களால் ‘இராமாயணப் பாத்திரங்கள்’ எனும் நூல் 1944ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் ஹிந்தி மொழிப்பெயர்ப்பு நூலே ‘சச்சி இராமாயண்’ என்பதாகும்.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1959-இல் ‘The Ramayana: A True Reading’ என்ற தலைப்பில் வெளிவந்தது. பின்னர், 1968-இல் இதன் ஹிந்தி மொழிபெயர்ப்பு பெரியார் லலாய் சிங் யாதவ் மூலம் வெளியிடப்பட்டது. இந்நூலில், பெரியார் வால்மீகி இராமாயணத்தின் அடிப்படையில் இராவணனின் குணநலன்களையும், இராமாயணத்தின் பாத்திரங்களைப் பற்றிய பாரம்பரிய புரிதல்களை மறு ஆய்வு செய்து, தமிழ்ச் சமூகத்தில் நிலவிய தவறான கருத்துகளை விமர்சிக்கிறார்.

இந்தக் கட்டுரை, பெரியாரின் பார்வையில் இராவணனின் குணாதிசயங்களையும், அவரது சமூக விமர்சனத்தையும் விளக்குகிறது. இராவணனின் குணநலன்கள் பெரியாரின் கூற்றுப்படி, வால்மீகி இராமாயணத்தில் இராவணன் ஒரு மாபெரும் பண்பாளனாகவும், நற்குணங்கள் நிறைந்தவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது முக்கிய குணாதிசயங்கள் பின்வருமாறு:

  1. மகத்தான புலமையாளர்: இராவணன் வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களில் புலமை பெற்றவர்.
  2. பெரும் துறவி: அவர் ஆன்மீகத்தில் ஆழ்ந்த பற்று கொண்டவர்.
  3. அரசர் மற்றும் பாதுகாவலர்: தனது உறவினர்கள் மற்றும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பாதுகாப்பு அளித்தவர்.
  4. வீரமிக்க போர்வீரர்: அவர் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வீரமிக்கவர்.
  5. புனிதமானவர்: இராவணன் தூய்மையான மனதுடன், நற்பண்புகளை வெளிப்படுத்தியவர்.
  6. இறைவனின் அன்பு பெற்றவர்: அவர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று வால்மீகி குறிப்பிடுகிறார்.
  7. புண்ணிய புருஷர்: அவரது செயல்கள் பலருக்கு முன்மாதிரியாக அமைந்தன. வால்மீகி இராமாயணத்தில், இராவணனின் இந்தப் பண்புகள் பல இடங்களில் புகழப்பட்டுள்ளன. உதாரணமாக, உத்தரகாண்டத்தில் (111ஆவது சர்க்கம்) விபீஷணன் கூட இராவணனின் மரணத்திற்குப் பின் அவரது நற்குணங்களைப் புகழ்ந்து, “நீங்கள் எப்போதும் நீதி வழுவாதவர்; மகத்தானவர்களை மதித்தவர்” என்று கூறுகிறார்.

இராவணனின் நற்செயல்கள் மற்றும் சீதையின் கடத்தல் பெரியார், இராவணனின் செயல்களைப் பற்றி பேசும்போது, அவர் சீதையை கடத்தியதற்கு காரணம் காமம் அல்ல என்று வலியுறுத்துகிறார். இராவணன், தனது சகோதரி சூர்ப்பனகையின் மூக்கு மற்றும் காதுகளை இராமனும் லட்சுமணனும் வெட்டியதால், அவமானத்திற்கு பழிவாங்குவதற்காகவே சீதையை கடத்தினார். அவர் சீதையை காதலித்ததாகவோ அல்லது பிறர் மனைவியை அபகரிக்கும் எண்ணம் கொண்டிருந்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை. சுந்தரகாண்டத்தில் (9-வது சர்க்கம்)   ஹனுமான் இராவணனின் குணத்தைப் புகழ்கிறார்: “இராவணனின் அரண்மனையில் வாழ்ந்த பெண்கள், அவரது மனைவியாக விரும்பி தங்களை அர்ப்பணித்தனர்.

ஆனால், எந்தப் பெண்ணையும் அவர்களின் சம்மதமின்றி அவர் தொடவில்லை; பலாத்காரமாக எதையும் செய்யவில்லை.” இது இராவணனின் ஒழுக்கத்தையும், பெண்களை மதிக்கும் பண்பையும் வெளிப்படுத்துகிறது. இராவணனின் புரட்சிகர பார்வை இராவணன் தேவர்களையும் முனிவர்களையும் எதிர்த்ததற்கு காரணம், அவர்கள் யாகங்களின் பெயரில் மிருகங்களை கொடூரமாக பலியிடுவதை அவர் எதிர்த்தார். வால்மீகி கூறுவதன்படி, “இராவணன் ஒரு நற்பண்பாளர், அழகானவர், ஆர்வமிக்கவர். ஆனால், பிராமணர்கள் யாகம் செய்து, சோமரசம் அருந்துவதைப் பார்க்கும்போது, அவர்களைத் தண்டித்தார்.”

இது இராவணனின் சமூக நீதி மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், இராமனும் லட்சுமணனும் சூர்ப்பநகையை கொடூரமாக தண்டித்தபோதும், இராவணன் சீதையை அவமானப்படுத்தவோ அல்லது உடல் ரீதியாக துன்புறுத்தவோ முயலவில்லை. இது அவரது கட்டுப்பாடு மற்றும் நீதி உணர்வை காட்டுகிறது. பெரியார் மேலும் குறிப்பிடுகிறார்: சீதையை கடத்துவதற்கு முன், இராமனால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு சீதை காட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்று பல மொழிபெயர்ப்பாளர்கள் கருதுகின்றனர். இதன்மூலம், இராமாயணத்தின் பாரம்பரிய விளக்கங்களை பெரியார் கேள்விக்கு உட்படுத்துகிறார்.

இராவணனின் நீதியான ஆட்சி இராவணன் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளை மதித்து ஆட்சி செய்தார். இது அவரது நீதியான மற்றும் ஜனநாயக அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. வால்மீகி இராமாயணம் மற்றும் அதன் தமிழ் மொழிபெயர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, பெரியார் இராவணனை ஒரு நற்பண்பாளராகவும், நீதியை நிலைநாட்டியவராகவும் விவரிக்கிறார். பெரியாரின் விமர்சனம் பெரியாரின் கூற்றுப்படி, இராமாயணம் உண்மையைப் பேசுபவர்களையும், நற்பண்பு உள்ளவர்களையும் தாழ்த்தி, தவறானவர்களை உயர்த்திக் காட்டுகிறது. இதன் மூலம், தமிழ்ச் சமூகத்தில் இராமாயணம் குறித்து நிலவிய தவறான புரிதல்களை அவர் அம்பலப்படுத்துகிறார். “சாதுவின் உடையை அணிந்தால் மட்டுமே ஒருவர் சாது ஆகிவிடுவார் என்று நினைப்பது தவறு” என்று பெரியார் வலியுறுத்துகிறார். இந்நூலின் நோக்கம், மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், தவறான புரிதல்களையும் நீக்கி, உண்மையை வெளிப்படுத்துவதாகும்.

பெரியாரின் ‘சச்சி இராமாயண்’ மூலம், இராவணன் ஒரு கெட்டவனாக சித்தரிக்கப்பட்டது தவறு என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். இராவணனின் குணநலன்கள், அவரது நீதியான ஆட்சி, மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவரது போராட்டம் ஆகியவை அவரை ஒரு மாபெரும் ஆளுமையாக உயர்த்துகின்றன. பாரம்பரியமாக இராமனை முன்னிலைப்படுத்தி, இராவணனை அவமதிக்கும் கதைகள், சமூகத்தில் தவறான புரிதல்களை உருவாக்கியுள்ளன என்று பெரியார் வாதிடுகிறார். இதன் மூலம், அவர் சமூக நீதி, பகுத்தறிவு, மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்துகிறார்.

நன்றி: இந்தக் கட்டுரை ‘ஈ.வி. ராமசாமி பெரியார்: தத்துவம்-சிந்தனை மற்றும் சச்சி இராமாயண்’ என்ற
நூலில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.

- விடுதலை நாளேடு, 17.09.25

திங்கள், 21 ஜூலை, 2025

துளிசிதாஸ்’ ஹிந்தி இராமாயணம் படிக்கச் சொல்லும் சூட்சமம் புரிகிறதா?

 


மனுவாதிகளான இராமாயண பக்தர்கள் துளிசிதாஸ் இராமாயணம் படிக்கச் சொல்வது எதனால் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மண்டல் கமிஷன் பரிந்துரை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு – நிறைவேற்றிய அறிக்கையின் 16ஆம் பக்கத்தில் உள்ள சில வரிகளைப் படியுங்கள்.
‘இரகசியம்’ புரியும்!
“Mythology and scriptures were also pressed into service to establish the inherent superiority of the Brahmin and the low social ranking of the Shudras. For instance, Tulsidas states in his Ramayana, that means
Venerate a Brahmin even if he is devoid of all virtue, but not a Shudra even if he is packed with virtue and knowledge.’’
– (மண்டல் கமிஷனிலிருந்து..)
இதன் தமிழாக்கம்:
‘‘ஒழுக்கங் கெட்டவன் பிராமணன் ஆனாலும் அவனை வணங்கு; அதிக ஒழுக்கமுள்ளவன் சூத்திரனானாலும் அவனை வணங்கவே கூடாது’’
அது மட்டுமல்ல.
‘பெண்களும், மேளங்களும் அடிக்கப்படவே உண்டாக்கப்பட்டவை’’
– துளசிதாஸ் இராமாயணம்

மனித தர்மம், சமத்துவம் விரும்புவோரே,
இதுதான் பரப்பப்படுகிறது. மதச் சார்பற்ற ஒரு ஜனநாயகத்தில் இது நியாயமா?
சிந்தியுங்கள் மக்களே!
இராமாயண பக்திப் பரப்பப்படுவதின் நோக்கம் புரிகிறதா?

- விடுதலை நாளேடு, 6.4.25

செவ்வாய், 13 மே, 2025

வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத இராமேஸ்வரம் - செ.ர.பார்த்தசாரதி

 

புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் வடமொழியில் எழுதப்பட்ட ‘வால்மீகி இராமாயணம்’ தான் முதல் இராமாயணமாக கருதப்பட்டு வருகிறது.

நம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நிலப்பரப்பு, சுற்றிலும் கடல் சூழ்ந்து உள்ளது. இந்தப் பகுதியில் ‘இராமநாதசுவாமி கோயில்’ என்று ஒன்று பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கட்டடக்கலையை வைத்து கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்த இராவணனை இராமன் கொன்றுவிட்டு, ‘புஷ்பக விமானம்’ மூலம் அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இறங்கி, இராவணனை கொன்ற ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்குவதற்காக, இராமன் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ததாகவும்; அதுவே பிறகு இராமநாதசுவாமி கோயில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.


‘பிரம்மஹத்தி தோஷம்’ என்றால் என்ன?

பிராமணர்கள் எனப்படும் பார்ப்பனர்கள் பிரம்மாவின் தலை பகுதியில் இருந்து தோன்றியவர்களாம்!

மற்றவர்கள் பிரம்மாவின் மற்ற பகுதிகளில் இருந்து தோன்றியவர்களாம்!

பார்ப்பனர்கள் மட்டுமே அனைத்து உரிமைகளும், தகுதியும் பெற்றவர்களாகவும்

மற்றவர்கள் விலங்குகளை போன்றவர்களாகவும் வேதங்கள் சித்தரிக்கின்றன.

ஆகையால் சூத்திரர்களைக் கொன்றால் எந்த பாவமும் கிடையாது. அதாவது ஒரு உயிரை கொன்றதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் பார்ப்பானை கொன்றால் உயிரைக் கொன்றதாக ஆகிவிடும். அதனால் கொன்றவருக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ என்ற பாவம் சூழ்ந்து விடும்.

இந்த பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்களை ‘பிரம்ம ராட்சஷ பிசாசு’ என்ற பிசாசு பின் தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வரும். இந்த தோஷம் நீங்க வேண்டுமானால் அதற்கான நிவர்த்தி பூஜை செய்ய வேண்டும்.

இந்தப்படி தான் (புராணப்படி) பிராமணனான இராவணனை இராமன் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை உண்டாக்கி அதற்கு பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

பல மதங்கள் தோன்றி பிறகு 6 மதங்களாக நிலைத்தன. (சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், சவுரம், காணாபத்தியம்)

இந்த ஆறு மதங்களும் தங்கள் தங்கள் மதங்களுக்கு ஒருவரை முழுமுதற் கடவுளாக பரிந்துரைக்கின்றன. அதாவது பரப்பிரம்மம்(மகாதேவ்).

இதில் சைவமும் வைணவமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என

இன்று வரை போட்டி போட்டுக் கொண்டுள்ளன.

சைவ புராணங்களில் வைணவத்தை இகழ்ந்தும்; வைணவ புராணங்களில் சைவத்தை இகழ்ந்தும் எழுதப்பட்டுள்ளன.

‘சிவன் தான் முழு முதற்கடவுள். இராமனே சிவனை வழங்கினான்’. என பரப்புவதற்காக தான் இந்த இராமேஸ்வர இராமநாதசுவாமி கோயில் கதை ஆகும்.

வால்மீகி இராமாயணத்தில் எந்த இடத்திலும் ‘இராமேஸ்வரத்தை பற்றியோ! ‘இராமன் சிவலிங்கத்தை வணங்கினான்’ என்பதை பற்றியோ குறிப்பு கிடையாது.

இராமன் ‘மகேந்திர கிரி’ (மகேந்திர பர்வதம்) மலையின் மேலிருந்து, மலையின் அடிவாரத்தை கடலின் அலைகள் தொட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததாகவும். பிறகு அடிவாரத்திற்கு வந்து, பாலத்தைக் கட்டி இலங்கை சென்றதாகவும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது.

இராமேஸ்வரத்தில் எந்த மலையும் கிடையாது. இராமேஸ்வரத்தில் மட்டுமல்ல இராமநாதபுரம் மாவட்டத்திலேயே எந்த மலைகளும் கிடையாது. இந்த ‘மகேந்திர கிரி’ என்ற மலை, ஒடிசாவில் உள்ளது.

ஒடிசாவை பற்றி கூறிய கதையை தமிழ்நாட்டில் நடந்ததாக கூறுவதே ஒரு பெரிய புரட்டாகும்.

இராவணனை கொன்றுவிட்டு இலங்கையிலிருந்து ‘புஷ்பக விமானம்’ மூலம் ‘அயோத்தி’ திரும்பிய போது, நடந்த நிகழ்வுகளின் இடங்களை சீதைக்கு காட்டிக் கொண்டே வருவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுகிறது. இடையில் இராமேஸ்வரத்தில் இறங்குவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படவே இல்லை.

காளிதாசர் இயற்றிய ‘இரகு வம்சம்’ என்ற காவியத்திலும் ‘இலங்கையில் இருந்து அயோத்தி நோக்கி இராமரை சுமந்து கொண்டு புறப்பட்ட புஷ்பக விமானம், இடையில் எங்கும் இறங்காமல் அயோத்தியில் தான் இறங்கியது.’ என்று கூறப்பட்டுள்ளது.

(ரகுவம்ச மஹா காவ்யம்,13ஆவது சர்க்கம்)

வால்மீகி இராமாயணத்தில் கூறப்படாத ஒரு நிகழ்வை, ‘மகாவிஷ்ணுவிற்கே ஈஸ்வரன் தான் கடவுள்’ என்று சொல்வதற்காக சைவர்கள், பிற்காலத்தில் சில புராணங்களை இயற்றி அதில் இராமாயணத்தை புகுத்தி சில திருத்தங்களை செய்து விட்டார்கள்.

சிவமகா புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம் என்கின்ற சிவனை புகழும் புராணங்களில் இந்த புகுத்தல் வேலை நடைபெற்றுள்ளது.

பத்ம புராணத்தில் ‘பூர்வ கல்ப இராமாயணம்’ என்ற பெயரிலும், பிரம்மாண்ட புராணத்தில் ‘அத்தியாத்ம இராமாயணம்’ என்ற பெயரிலும் இராமாயணங்கள் உள்ளன.

இந்தப் ‘பூர்வ கல்ப இராமாயணத்’தில்

இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இராமன் இறங்கி, இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக, சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதாக கூறப்படுகிறது.

(பத்ம புராணம், பூர்வ கல்ப இராமாயணம், பக்கம்-424, தாமரை நூலகம் வெளியீடு)

ஆனால் அதே ‘பத்ம புராணத்தில்’

‘மனிதர்கள் மோட்சம் அடைவதற்கான வழிகள்’ என்று விரதங்களையும் யாகங்களையும் பற்றி கூறும் போது, ‘பிராமணனை கொல்ல நேர்ந்ததைப் பற்றி சிறீ ராமபிரான் வருத்தம் அடைதல்’ என்ற தலைப்பில் (பக்கம்-364) ‘இராமன் பிராமணனான இராவணனை கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்க என்ன வழி’ என்று அகத்தியரை கேட்டதாகவும்; அகத்தியர், ‘அஸ்வமேத யாகம் நடத்தினால் பாவம் போகும்’ என்று கூறியதாகவும்; அதன்படி அஸ்வமேத யாகத்தை இராமன் நடத்தியதாகவும்’ உள்ளது.

ஒரு இடத்தில் இராவணனை கொன்ற பாவம் தீர, இராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை நிறுவி சிவ வழிபாடு செய்ததாகவும், அதே புராணத்தில் இன்னொரு இடத்தில் ‘அஸ்வமேத யாகம்’ நடத்தி, இராவணனை கொன்ற பாவத்தை போக்கிக் கொண்டதாகவும், முன்னுக்குப் பின் முரணாக சொல்லப்படுகிறது.

‘அத்தியாத்ம இராமாயணத்’தில் இராமேஸ்வரத்தின் கடற்கரையில் சிவலிங்கத்தை வழிபட்டுவிட்டு தான், இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

(அத்தியாத்ம இராமாயணம், நான்காவது சர்கம், பக்கம்-467, தாமரை நூலகம் வெளியீடு)

அதேபோல் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் புறப்பட்டு அயோத்தி செல்லும் வழியில் சீதைக்கு, தான் நிறுவிய சிவலிங்கத்தை காட்டிச் சென்றதாக, கூறப்பட்டுள்ளது.

சிவமஹா புராணத்தில், ‘சிறீ ராமர் பெற்ற வரமும் இராமேஸ்வரம் மகிமையும்’ என்ற தலைப்பிலான பகுதியில், தெற்கு கடற்கரை(இராமேஸ்வரம்)யில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு, சிவனிடமிருந்து, வலிமையானவனான இராவணனை கொல்ல வரம் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

(சிறீ சிவமஹா புராணம், முதற் பாகம், பக்கம் -248, பிரேமா பிரசுரம் வெளியீடு)

கந்தபுராணத்தில் பார்வதி நாதரை பூஜித்து பாசுபதாஸ்திரத்தை வரமாக பெற்றுக்கொண்டு இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.

(சிறீ கந்தபுராணம், இரண்டாம் பாகம், உபதேச காண்டம் பக்கம்- 454, பிரேமா பிரசுரம்)

இராமன் (மகாவிஷ்ணு) கடவுள் அல்ல, சிவன் தான் கடவுள் என்று நிறுவுவதற்காக சைவர்களால் உண்டாக்கப்பட்டது தான். இராமேஸ்வர இராமநாதசாமி கோயில் கதையும், அதற்கு ஆதாரமாக புனையப்பட்டதே பத்ம புராணமும், பிரம்ம புராணமும், சிவமகா புராணமும் ஆகும்.

இது ஒரு புறம் இருக்க பராசக்தியை முழு முதல் கடவுளாக (மகாதேவ்) கூறும் ‘சாக்த மதத்’தின் புராணமான ‘தேவி பாகவதம்’ என்ற புராணத்தில் ‘மகாவிஷ்ணுவே (இராமர்) பராசக்தியை வழங்கினார்’ என்று சொல்வதற்காக இராமர் கிருஷ்கிந்தையில் துக்கப்பட்டு கொண்டிருந்தபோது, நாரதர் பராசக்தியை வணங்கி ‘நவராத்திரி விரதம்’ இருக்க கூறுகிறார். அதன்படி நவராத்திரி விரதம் மேற்கொண்டு, பராசக்தி இடம் இருந்து, போருக்கு உடந்தையாக இருக்க ‘சக்தியம்சத்’தை வரமாக பெற்றதாக’ கூறப்படுகிறது.

- எனது கட்டுரை 

வியாழன், 27 பிப்ரவரி, 2025

ராமராஜ்ஜியம்’’ எப்படி இருக்கும்? – தந்தை பெரியார்

 

‘‘ராமராஜ்ஜியம்’’ எப்படி இருக்கும்? – தந்தை பெரியார்

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை, தந்தை பெரியார்

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை லயோலா காலேஜ் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பெருக்கொன்றில் “எனக்கு அதிகாரம் வந்தால் – நான் சர்வாதிகாரியானால் சமஸ்கிருத பாஷையை இந்தியர்கள் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்று, சட்டம் செய்வேன்” என்று கூறி இருப்பதோடு சீக்கிரம் ராமராஜ்ஜியத்தையும் ஏற்படுத்திவிடுவேன் என்பது பொருளாகப் பேசியிருந்ததை சுதேச மித்திரனில் உள்ளபடி ஜூலை 30ஆம் தேதி குடிஅரசில் எடுத்து எழுதி அதைப்பற்றிய நமது கருத்தையும் வெளியிட்டிருந்தோம். அதன் அடுத்த வாரத்தில் (6.8.1939) தோழர் சத்தியமூர்த்தியார் ஸ்தாபிக்க முயற்சிக்கும் ராம ராஜ்ஜியம் என்றால் என்ன? அதன் கால ஒழுக்கம் என்ன? நீதி என்ன? என்பவைகளைப் பற்றியும் எழுதிவிட்டு அத்தலை யங்கத்தின் முடிவில் அவைகளுக்கு ஆதாரமாக வால்மீகி ராமாயணத்தில் உள்ள வாசகங்களைப் பின்னால் எடுத்துக்காட்டுவோம் என்றும் எழுதி இருந்தோம்.

அது பல காரணங்களால் சென்ற வாரம் எழுதத் தவறிவிட்டதால் பல தோழர்கள் எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்ததாக எழுதி இவ்வாரம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனதுபற்றி சிலவற்றை மாத்திரம் இவ்வாரம் குறிப்பிடுகிறோம்.

ராமன் பிறப்புக்குக் காரணங்கள்
ராமாயண ஆரம்பத்திற்குக் காரணம் காட்டும் போதே ராவணேஸ்வரனால் துன்பமடைந்த தேவர்கள் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்ததாகவும், மகாவிஷ்ணு அத்தவத்திற்கு இரங்கி, தான் தசரத ராஜனுக்கு மகனாகப் பிறந்து ராவணனைக் கொன்று பதினோராயிரம் வருஷம் அரசாண்டுவிட்டு, பிறகு தேவலோகத்திற்கு வருவதாக வாக்களித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மகாவிஷ்ணு அவதாரமெடுத்தற்குக் காரணம் ராவணனைக் கொல்வதற்கு மாத்திரம்தான் என்று இருக்குமானால் ராவணனை ஏன் கொல்லவேண்டும்? ராவணன் என்ன குற்றம் செய்தான்? என்பவைகளைப் பற்றி முதலில் ஆராயவேண்டியது நியாயமாகத் தோன்றலாம். ஆனால், மகாவிஷ்ணு ராமனாகப் பிறப்பதற்குக் காரணம் மற்றொன்று கூறப்பட்டிருக்கிறது. அதுதான் ராமாயண ஒழுக்கத்திற்குப் பொன்மதில் அரண் என்று சொல்லத்தக்கதாக இருக்கிறது.

அது என்னவெனில், மகாவிஷ்ணு வானவர் ஒருகாலத்தில் பிருகு மகரிஷியின் பத்தினியைக் கொன்று விட்டாராம். அதற்காக அந்த ரிஷி கோபித்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கி, “நீ என் மனைவியைக் கொன்றுவிட்ட கொலை பாதகனானதால் நீ ஒரு மனிதனாகப் பிறந்து உன் மனைவியை இழந்து சீரழிய வேண்டியது” என்று சபித்து விட்டாராம். அதனால் விஷ்ணு ராமனாகப் பிறந்து தனது மனைவியை இழந்து துன்பப்பட்டாராம். இது வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 51ஆம் சருக்கத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு மனிதனாகப் பிறந்தது மனைவியைப் பறிகொடுத்துத் தவித்ததற்கு ராமாயணத்தைவிடப் பழைமையானதும் முக்கியமானதுமென்று கருதப் படுவதாகிய கந்த புராணத்தில் மற்றொரு காரணம் கூறப்பட்டிருக்கிறது. அது என்னவெனில் மகாவிஷ்ணு வானவர் சலந்தராசுரன் மனைவியாகிய பிருந்தை என்பவள் சற்று அழகுடையவளாக இருந்ததால் அவளை எப்படியாவது சேரவேண்டுமென்று கருதிச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாராம். ஆனால், அவ்வசுரன் இடம் கொடுக்காமல் காவல் இருந்ததால் முடியாமல் போய்க் கடைசியாக அவ்வசுரன் சாகும் படியாக ஆன பின்பு அவ்வசுரனுடைய உடலுக்குள் புகுந்துகொண்டு புருஷன் மாதிரியாகவே இருந்து பிருந்தையை அனுபவித்து வந்தாராம். சில நாட்கள் விஷ்ணுவிடம் அனுபவித்த பின்பே அந்த கற்புக்கரசி யாகிய பிருந்தை இவன் தன் புருஷனல்ல, மகாவிஷ்ணு என்று அறிந்து உடனே மகாவிஷ்ணுவை “ஓ விஷ் ணுவே! நீ என்னை எனது இஷ்டமில்லாமல் ஏமாற்றி வஞ்சித்துப் புணர்ந்துவிட்டதால் உன் மனைவியை ஒருவன் வஞ்சனையால் எடுத்துப் போகக்கடவது” என்று சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாய் மனிதராகப் பிறந்து மனைவியை இழந்து துன்பப் பட்டார் என்றும் மேல்படி கந்த புராணம் தக்க காண்டம் 23ஆம் அத்தியாயத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு ராமனாகப் பிறந்த பெருமைக்குக் காரணம் மேற்கண்ட இரண்டு மாத்திரமல்லாமல் 3ஆம் காரணமும் ஒன்று இருக்கிறது.

அதாவது, ஒரு பொல்லாத வேளையில் மகா விஷ்ணு மனித உடம்போடு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும், அதுசமயம் பிருகு ரிஷி முதலியவர்கள் அவரைக் காணச் சென்றதாகவும், வேறு சிலர் தன்னைப் பார்க்க வந்த சமயத்தில்கூட தான் புணர்ச்சியை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே அவர்களுடன் பேசியதாகவும், அதற்கு அவர்கள் கோபித்து விஷ்ணுவைப் பார்த்து “ஓ மானம், வெட்கம் இல்லாத விஷ்ணுவே! நீ இம்மாதிரி இழிவான காரியம் செய்ததற்காக நீ உன் மனைவியை இழந்து வருந்தக்கடவை” என்று சபித்ததாகவும் சொல்லப் படுகிறது.

இந்த உண்மை சிவரகசியம் மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலும், அது மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.

ஆகவே, ராமராஜ்ஜியத்தின் மூலபுருஷரும் கடவுள் அவதாரமாக வந்தவருமான ராமனின் பிறப் புக்கே இம்மாதிரியான காரணங்கள் இருக்குமானால் இந்த இப்படிப்பட்ட ராமனுடைய அல்லது கடவுளி னுடைய ஆட்சி ராஜ்ஜிய பாரம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக்கூற வேண்டுமா என்று கேட்கின்றோம்.

ரிஷி ஜாதிகள் யோக்கியதை
ரிஷிகள் மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் அசுரர்களுடைய மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் எடுத்துக் காட்டப்பட்டதில் இருந்தே ரிஷி ஜாதிகளின் யோக்கியதையும், அசுரர் ஜாதியினுடைய யோக்கியதையும் நன்றாய்த் தெரிவதோடு கடவுள் ஜாதிகளுடைய யோக்கியதையும் பளிங்குபோல் விளங்குகின்றது.

என்னவெனில், ரிஷி பத்தினியை அவள் புருஷ னுக்குத் தெரியாமல் மாத்திரம்தான் கலந்ததாகவும், ஆனால் ரிஷிபத்தினிகள் சம்மதித்து விஷ்ணுவுடன் கலந்து இன்பம் அனுபவித்ததாகவும் விளங்கும்படியாக இருக்கிறது. அசுரர்களு டைய மனைவிகளிடத்தில் அந்த ஜபம் செல்லவில்லை. புருஷன் சாகும்படியாக ஆனபின்பே அதுவும் புருஷன் போல் வேஷம் போட்டு அசுர ஸ்திரீயை ஏமாற்றித்தான் சேர முடிந்ததே ஒழிய மற்றபடி ரிஷி பத்தினிகள் மாதிரி சம்மதம் பெற்றுச் சேர முடியவில்லை. அன்றியும் ரிஷி பத்தினிகள் கற்பழிக் கப்பட்டதற்கு ரிஷிகளால் தான் மகாவிஷ்ணுக்கு சாபம் கொடுக்கப்பட்டதே தவிர, ரிஷி பத்தினியால் சாபம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், அசுர ஸ்திரீகளோ வென்றால் தாங்களே விஷயம் தெரிந்த உடனே சாபம் கொடுத்து தண்டிக்கத் தக்க சக்தி உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அன்றியும் கடவுள்ஜாதி ஸ்திரீயான திருமகள் அந்நிய புருஷர்கள் வந்து பார்க்கும்போதுகூட கலவி யில் இருந்து நீங்காமல் கலவிசெய்துகொண்டே இருக்கச் சம்மதித்து இருந் தாள் என்றால் அவர்களது தைரியத்தை மெச்ச வேண் டியதென்றாலும் அந்த ஜாதி எவ்வளவு இழிவுக்கும் சம் பந்தப்படக்கூடியது என்பது விளங்காமல் போகாது.

புராணப் பொய்கள்
இந்த உண்மைகள் இயற்கைக்கு மாறானவை என்றாலும் எப்படியோ இருக்கட்டும் நடந்தததா இல்லையா என்பதைப் பற்றி இப்போது நாம் விவகரிக்க வரவில்லை.

பொதுவாகவே இராமா யணம் மாத்திரமல்லாமல் மற்றும் அதுபோன்ற – கடவுள் சம்பந்தமான சைவ, வைணவ புராணங்கள் பொய்யென்றும், அறிவுக்குப் பொருத்தமில்லாத இழிவான ஒழுக்க ஈனமான விஷ யங்கள் கொண்ட காட்டு மிராண்டிக் காலத்து கட்டுக் கதைகள் என்றும் சொல்லி வருகிறோம். ஆனதால் அவற்றின் உண்மையைப் பற்றியும் வாதாட விரும்ப வில்லை.

ஆனால், தோழர் சத்தியமூர்த்தியார் இப்படிப் பட்ட கதையில் உள்ள இப்படிப்பட்ட சம்பவங்களில் சிக்குண்டவனாகக் காட்டப்பட்டுள்ள ஒரு பாத்திர மாகிய ராமன் என்பவனுடைய பெயரால் இருந்து வரும் கதையில் உள்ள ஒழுக்கங்களையும், நீதி களையும் கொண்ட ஒரு ராஜ்ஜிய பாரத்தை – ராஜ நீதியை இந்தியர்களுக்கு என்பதில் வடநாட்டாருக்குச் சொல்வதைப் பற்றி நமக்கு இப்போது கவலை இல்லை. தென்னாட்டாருக்கு – திராவிடர்களுக்கு – தமிழ் நாட்ட வருக்கு – தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்போவதாகக் கூறுவதும் அதற்காகவே இந்தியையும் – சமஸ் கிருதத்தையும் தமிழ் மக்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்துவதும் இந்தக் காரியத்திற்காகவே தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இந்திய அரசாட்சிக்கு சர்வாதிகாரியாக ஆகவேண்டும் என்றும் ஆசைப் படுவதாகச் சொல்வதுமாயிருந்தால் அதைத் தமிழ் மக்கள் எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறோம்.

ஆரியர் வேறு தமிழர் வேறு என்பதற்கும்; ஆரியநாடு வேறு தமிழ்நாடு வேறு என்பதற்கும் இந்த புராண இதிகாசக் கலைகளே போதாதா என்று கேட்கின்றோம்.

இந்தியாவென்பது எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தேசத்தையோ, ஒரு நாட்டையோ குறிப்பிடும் பெயராகாது என்று முன்னம் பல முறை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். குறிப்பாக இந்த நாட்டுக்குப் பரத கண்டம் என்றோ, பாரததேசம் என்றோ, பாரதத்தாய் என்றோ சொல்லுவது சிறிதும் பொருத்தமற்றது என்பதோடு ஒரு தமிழ் மகன் வாயில் தமிழ் நாட்டைப் பாரதநாடு அல்லது பாரததேசம் என்று சொல்லப் படுமானால், “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் அய்யப்படும்” என்ற திருவள்ளுவரின் திருவாக்குப்படி அப்படிப்பட்டவரது குலத்தைப்பற்றிச் சந்தேகப்பட வேண்டியதைத் தவிர வேறு பரிகாரமில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்மக்கள் திராவிட மக்கள் ஆண்ட நம் தமிழ் – திராவிட நாட்டை என்ன காரணத் திற்கு ஆக ஒருவன் பரதன் (ஆரியன்) ஆண்டதாகச் சொல்லி இதை பரதநாடு என்று சொல்லவேண்டும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி ஒவ்வொரு தமிழ் மகனையும் வேண்டிக்கொள்கிறோம்.

நந்தன் தேசம்
தமிழ் நாட்டை ஏன் ஒரு தமிழ் மன்னன் அல்லது ஒரு தமிழன், திராவிடன், ஆட்சியின்பேரால் அழைக்கக்கூடாது என்று கேட்கின்றோம். இந்த தமிழ் நாட்டிற்கு ஒரு ஆட்சி வேண்டுமானால் ஒரு பழங்காலத்து மூவேந்தர்கள் ஆட்சியை ஸ்தாபிக்கப் பாடுபடுகிறோம் என்றோ அல்லது மூவேந்தர்களாலும் கைவிடும்படி செய்யப்பட்ட பிறகு ஒரு நாயக்கர் ஆட்சி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மைச் சரித்திரமானால் அந்த நாயக்கர் ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ அல்லது முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்லப்படுவதில் நேர்மையாக, நீதியாக அரசாட்சி செய்த ஒரு முஸ்லிம் மன்னன் பெயரைச் சொல்லி அவன் ஆட்சியை ஸ்தாபிக்க ஆசைப்படுகிறோம் என்றோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் சமுகத்தைச் சேர்ந்த நந்தன் முதலிய அரசர் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படும் சரித்திரம் உண்மையாய் இருக்குமானால் அந்த ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ சொல்லாமல், அவர்கள் பேரால் இந்த நாட்டை அழைக்காமல் பரத தேசமென்றும், ராமராஜ்ஜியம் என்றும், இந்தப் பார்ப்பனர் சொல்லுவதின் அர்த்தம் என்ன என்றும் அதைச் சில தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு பின்தாளம் போடும் இழிதன்மைக்குக் காரணம் என்னவென்றும் கேட்பதோடு இன்று நிறுத்திக் கொள்ளுகிறோம்.

குடிஅரசு – தலையங்கம் – 20.08.1939

புதன், 30 அக்டோபர், 2024

இராமன் -இராமராஜ்ஜியம் என்றால் என்ன? - பார்ப்பானே கடவுள் என கூறும் ஆதாரங்கள்!

இராமன் -இராமராஜ்ஜியம் என்றால் என்ன?


- கவிஞர் கலி.பூங்குன்றன்

(தமிழர் தலைவர் உரையைத் தழுவியது இக்கட்டுரை )


"இராமாயணம் -இராமன் இராமராஜ்ஜியம்" எனும் தலைப்பிலே 23, 27.3.2018 அன்று இருநாள்களிலும் மாலை நேரத்தில் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொற் பொழிவுகளை நிகழ்த்தினார்.

குறுகிய கால அறிவிப்பு எனினும் மக்கள் பெரு வெள்ளமாய்த் திரண்டனர்.

இரண்டாவது சொற்பொழிவில் "பிராமணர்கள்" கடவுளுக்கு மேலே எப்படி தூக்கி நிறுத்தப்படுகிறார்கள்? இராமன் - இராமராஜ்ஜியம் என்ற சொல்லாடல்கள் உச்சத்தில் இருக்கும் காலக்கட்டம் இது ; இவற்றின் மீதான காதல் அல்லது உச்சக்கட்ட மதிப்பு என்பதெல்லாம் மக்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்ச்சியின் வெளிப் பாடல்ல; மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கைங்கர்யம் இது. இராமராஜ்ஜியம் அமைப்போம் என்று கூறி அதிகார பலத்தால் ஆட்டம் போடுகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து இராம ராஜ்ஜிய ரத ஊர்வலம் புறப்பட்டு பல
மாநிலங்களின் வழியாக செல்லும் திட்டத்தோடு தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அவர்கள் காலடி வைத்த போது, ஈரோட்டுப் பூகம்பம் வெடித்து, பேரச்சத்தை ஊட்டியது.

இராமராஜ்ஜியம் என்றால் வருணாசிரம ராஜ்ஜியம், சூத்திரன் சம்பூகன் தலையை வெட்டிய ராஜ்ஜியம்தானே!

இந்த அடிவேரின் இரகசியத்தை உணர்ந்ததால் அல்லவா திராவிடர் கழகத் தலைவர் ஓர் அறிவிப்பினைக் கொடுத்தார்.

"இராமராஜ்ஜியம்" என்றால் பார்ப்பனர் களின் ராஜ்ஜியம் தான் என்பதற்குப் பல ஆதாரங்களை அடுக்கிக் காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு. கி.வீரமணி அவர்கள்.

அந்த உரையைத் தழுவி இந்தக் கட்டுரை வழங்கப்பட்டுள்ளது.

வேதம் என்ன கூறுகிறது?

தெய்வாதீனம் ஜகத் சர்வம்,
மந்த்ரா தீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணா தீனம்
தஸ்மதத் பிரம்மணம் பிரபு ஜெயத என்பது ரிக் வேதம்.

(62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்)

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணர்களே நமது கடவுள் - அவனைத் தொழ வேண்டும்.

பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்திற் பிறந்ததினாலும், இந்த உலகத்தில் உண்டாகியிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்.

(மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 100)

பிராமணன் பிறப்பானது தருமத்தின் அழிவில்லாத உருவமாயிருக்கிறது. தருமம் விளங்கும் பொருட்டு உற்பவித்த அந்தப் பிராமணனின் ஞாநத்திலே மோக்ஷத்திற் குரியவனாகிறான். (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 98)
.........

கிருஷ்ண அவதாரக் கற்பிதம்

"புத்தர்பிரான்" அறமொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணாவதாரக் கதை ஆரிய பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப் பட்டது. காம விளையாட்டுக்களை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே 'கிருஷ்ண லீலா' கதையின் நோக்கம். புத்தர் கொள்கையின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக்கட்டப்பட்டது."
('என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' தொகுதி -4, பக்கம் 210)

மகா பாகவதம் செப்புவது என்ன?

ஸ்ரீவேத வியாசர் அருளிச் செய்த ஸ்ரீமஹா பாகவதம் (திருவனந்தபுரம் பாகவத சிரேஷ்டரான வேணுகோபாலாச்சாரியார் அவர்களால் ஸம்ஸ்க்ருத காவ்யத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. (எண்பத்தாறாவது அத்தியாயம், தசம ஸ்கந்தம், பக்கம் 351-352)

"ஸ்ரீகிருஷ்ணன் எதிரே தோன்றிய தபசியான நீ ஒரு பெண் கணங்களை விசேஷமாய்ப் பூஜிக்காமல் மாதவனை மாத்திரம் விசேஷமாய்ப் பூஜித்தபடியால் அந்தப் பகவான் அம்மறையோனை நோக்கி இந்த ரிஷிகள் எந்த ஜலத்தைத் தொடுகிறார்களோ, அதுவே புண்ணிய தீர்த்தமாகும் படிச் செய்யத் தக்கின மகிமையுடையவர்கள், சகல தேவர்களுடைய சொரூபம் யான்.

என்னுடைய சொரூபம் வேதம், அந்த வேதங்களுடைய சொரூபம் மறையோர். அவர்களுக்கு மிஞ்சினவர்கள் உலகி லில்லை. அவர்கள் சாமானிய மானிடர் களென்றெண்ணி அவர்களை பழித்து என்னைப் பூஜித்ததனால் ஒரு பயனையு மடைய மாட்டார்கள். அந்த வேதியரை பூஜிக்கிறவன்தான் ஞானி அவனே எனக்கு மிகவும் இஷ்டனென்று ஸ்ரீபகவனால் ஆக்கியாபிக்கப்பட்டு அந்தச் சுவாமியின் எதிரில்தானே அந்த ரிஷிகளை அநேக விதமாய்ப் பூஜித்து உபசரித்து சந்தோஷப் படுத்தினார்.
........

பிராமணன் திரி மூர்த்திகளிலும் உயர்ந்தவன் என்று நிரூபிக்க இன்னும் இரண்டொரு உதாரணங்களை வேண்டுமானாலும் சொல்லுகிறேன். அதாவது, ஸ்ரீவைகுந்த வாசனாகிய நீலமேக சாமள வர்ணனாகிய ஸ்ரீசாட்சாத் கிருஷ்ண பரமாத்துமாவை, பிரம்ம புத்திரனாகிய நாரதர் தரிசிக்க வந்தபோது, அச்சமயம் பரமாத்துமா பூசையறையில் இருந்து வெளியே வந்தார். வெகு நேரம் வரையில் பரமாத்துமாவின் தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்த நாரத பகவான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்துமாவைப் பார்த்து இவ்வுலகத்தின் கண்ணுள்ள அனந்தகோடி மக்களும் தங்களைப் பூசித்துவரும் போது, தாங்கள் இவ்வளவு நேரமாய் யாரைப் பூசை செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்ட உடனே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்துமா, பூசையறையில் முன்னால் விடப்பட்ட திரைச் சீலையை நீக்கிவிட்டு, அங்கு அவரால் பூஜிக்கப்பட்ட விக்கிரகத்தைத் திறந்து காட்டினார். அதைப் பார்த்தவுடன், நாரதபகவான் அப்படியே ஆச்சரியப்பட்டுப் பிரம்மித்துப் போனார். ஏனென்றால் அஃது ஒரு பிரமஷ்வரூபமாகிய பிராமணனுடைய விக்கிரகமே அன்றி, வேறல்ல. ஆதலால் அப்படிப்பட்ட கண்ணனாலேயே பூசிக்கப்பட்டு வரும், பிராமணாளுடைய மகத்துவத்தை வேதங்கள் கூட வரை யறுத்துக் கூறமுடியாது என்றால், மற்றவர்களால் அவர்களுக்குக் குணதோஷம் கூறமுடியுமா? இதுகிடக்க, இன்னொரு சம்பவத்தையும் சொல்லுகிறேன் கேளும். ஒரு சமயம், வாயுபுத்திரனாகிய ஹனுமான், ஒரு பிராமணச் சிறுவனாக உருவந்தாங்கி, ஸ்ரீராமபிரான் முன் தோன்றிய போது ஸ்ரீராமர் அவரைக் கண்ட மாத்திரத்தில், அவர் காலில் நெடுஞ்சாரியாய் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டுள்ளார். இதைக் கண்ட இராம தூதனாகிய ஹனுமான், இராமமூர்த்தியைப் பார்த்துச் சொல்லுகின்றார், நான் உண்மையான பிராமணன் அல்ல; நாட்டினில் வாழும் குரங்கு வம்சத்தைச் சார்ந்தவன். ஆகையால் என் காலில் விழுவது முறையல்ல என்று சொல்லவும், அதற்கு இராமர் பதிலுத்தாரமாக என்ன சொன்னார் என்றால், நான் பிராமணாளைக் கண்ட மாத்திரத்தில் உடனே அவர்களைக் கைகூப்பி வணங்குவது என் கடமையாகும். ஆகையால் உண்மையான பிராமணனாய் இருந்தாலென்ன, அல்லது போலிப் பிராமணனாய் இருந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான். அதைப் பற்றி ஒன்றும் தோஷமில்லை என்று சொல்லியிருக்கிறார்.

(சிங்கப்பூர் அறிஞர் அ.சி.சுப்பய்யா அவர்களின் 'சுந்தரமூர்த்தி நாயனார்' கிரிமினல் கேஸ்)

கம்ப இராமாயணம்

வால்மீகி தனது இராமாயணத்தில் இராமனை சாதாரண மனிதனாகப் படைத்திருக்க, கம்பனோ மிகப் பெரிய அளவில் உயர்த்திப் பிடித்தான்; கடவுளுக்கு மேல் பார்ப்பனர்கள் என்றும் கூச்சமின்றிப் பாடி சென்று இருக்கிறான்.

கரிய மாலினும் கண்ணுத லானினும்
உரிய தாமரை மேலுறை வானினும் விரியும் பூதமோ ரைந்தினும் மெய்யினும்
பெரிய ரந்தணர் பேணுதி யுள்ளத்தால்

அதாவது, திருமால், சிவன், நான்முகன், அய்ம்பூதம், வாய்மை ஆகியவர்களைக் காட்டிலும் அந்தணர்கள் பெருமையுடையவர்கள்; ஆகையால் அவர்களை உள்ளன் போடு வழிபடுவாயாக என்றும்,

2 அந்த ணாளர் முனியவு மாங்கவர்

சிந்தை யாலருள் செய்யவுந் தேவரில்

நொந்து ளாரையும் நொய்துயர்ந் தாரையும்

" மைந்த எண்ண வரம்புமுண் டாங்கொலோ

அதாவது அந்தணர்கள் கோபத்தால் அழிந்தவர்களையும், அந்தணர்கள் அருளினால் செல்வாக்குப் பெற்றுயர்ந்தவர்களையும் கணக்கிட முடியாது என்றும்,

3 அனைய ராதலின் அனையஇவ்வெய்யதீ
வினையின் நீங்கிய மேலவர் தாளிணை
புனையுஞ் சென்னியை வாய்ப்புகழ்ந் தேத்துதி
இனிய கூறிநின் றேயின செய்தியால்

அதாவது, அந்தணர்கள் இத்தனையு முடையவராக இருத்தலினால், தீவினை செய்யாது உயர்ந்தவர்களாகிய அவ்வந்தணர் பாதங்களில் உன் தலை படும்படியாக வணங்கி, அவர்களைப் புகழ்ந்து அவர்களிடம் இனிய சொற்களைக் கூறி அவர்களிடும் கட்டளைப்படி நடப்பாய் என்றும்,

4. ஆவ தற்கும் அழிவதற் கும்மவர்

ஏவ நிற்கும் விதியுமென் றாலினி

யாவ தெப்பொருள் இம்மையு மம்மையுந்

தேவ ரைப்பர வுந்துணை சீர்த்ததே

ஒருவன் செல்வம் அடைவதற்கும்
அழிவதற்கும் காரணமான விதியும் அந்தணர்களின் கட்டளைப் படியேதான் நடக்கும்; ஆகையால் இப்பிறப்பிற்கும், மறுபிறப்பிற்கும் (அவர்களை விடுத்தால்) வேறு பயன் ஏது? எனவே, அந்தணர்களை வணங்குதல் தேவர் களை வணங்குதல் போலச் சிறந்ததாகும் என்று கூறி அந்தணர் (பார்ப்பனர்) பெருமையை இவ்வாறு கூறுகிறார். போதுமா? இன்னும் வேண்டுமா?

(குடிஅரசு - கட்டுரை - 12.02.1944)

                                                   ...............

சங்கராச்சாரியார் பார்வையில்

9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் 'தாம்ப்ராஸ்' எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் "அருந் தொண்டாற்றிய அந்தணர்கள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நூலை வெளியிட்டு நூலோர் வழிவந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாவது

"எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர்

சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப்

பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி

செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான்

நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்ட

போதும் கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு.

அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த

காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட

அப்புறம்தான். அந்தணன்தான் முதலில்

(நக்கீரன் 5.112002) இப்பொழுது சொல்லுங்கள் -

இந்து மதம் என்றால், இராமன் என்றால், அதன்

பொருள் என்ன?


பிராமணாள் நமது கடவுள் - இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

 - விடுதலை ஞாயிறு மலர், 31.3.2018

திங்கள், 28 அக்டோபர், 2024

இராமன் சீதை திருமணத்திலும் தாலி இல்லை

 


செப்டம்பர் 16-30

– அ.ப.நடராசன்


வால்மீகி இராமயணம்: மிதிலை நகரத்தில் ராமன் சீதை திருமணத்தை வசிஷ்டர் நடத்தி வைக்கிறார்: எப்படி?

வசிஷ்டர் விசுவாமித்திரரையும், சதானந்தரையும் அழைத்துக் கொண்டு திருமண மண்டபத்தின் நடுப்பகுதிக்குச் சென்றார்.

அழகான மேடையை உண்டாக்கினார். சாஸ்திர முறைப்படி வேதியைத் தோற்றுவித்தார். மலர்களாலும் சந்தனம் போன்றவற்றாலும் அலங்காரம் செய்தார். தங்க பாலிகைகள், கிண்டிகள், சங்க பாத்திரங்கள், முளைத்த விதைகள் உள்ள மடக்குகள்  போன்றவற்றை அவ்வவற்றிற்கு உரிய இடத்தில் வைத்தார். பின்னர் தீர்த்தக் கும்பங்களை வைத்து விதிப்படி பூசனை செய்தனர்.

மஞ்சள் கலந்த அட்சதைகள், நெல் பொரி அர்க்கிய ஜலம் போன்றவற்றையும் தாயார் செய்தார். தூப தீபங்களைக் கொண்டு பூசித்தார். ஓரே அளவுள்ள தர்ப்பங்களை வேதியைச் சுற்றிப் பரப்பி, மந்திரங்களால் அக்னிப் பிரதிஷ்டை செய்தார். தம்பதிகளின் நலத்திற்காக ஹோமம் செய்தார். திருமண மந்திரங்களை முறைப்படி உச்சரித்தார்.

இந்த நேரத்தில் அழகு மிக்க சீதையை அழைத்துக் கொண்டு அங்கு வந்தனர். அவள் ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப்-பட்டிருந்தாள். அக்னிக்கு அருகில் இராமரும் எதிரில் அவளை நிறுத்தினார்.

பின்னர் ஜனகர் இராமரைப் பார்த்து, இராமா! இவள் எனக்குப் பூமியில் இருந்து கிடைத்தவள். எனவே சீதை என்று பெயரிட்டுள்ளேன். இவளை என் பெண்ணாக எண்ணியே மிகுந்த அன்புடன் வளர்த்து வருகின்றேன். இவள் எல்லா தர்மத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவள், இவளை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள், அவளுடைய கையைப் பற்றிக் கொள்ளுங்கள், நிழலைப் போல உங்களைப் பிரியாமல் எப்பொழுதும் இருப்பாள் என்று சொன்னார்.

பின்னர் மந்திரங்களால் பரிசுத்தமாக்கப்-பட்ட நீரை எடுத்து இராமரின் கையில் தாரை வார்த்தார். இவ்வாறு கன்னிகாதானம் இனிதாக நிறைவேறியது. ஆதாரம்: வால்மீகி இராமயணம், வார்த்தமானன் வெளியீடு பாலகாண்டம் பக்கம் 295, 296
கம்ப இராமாயணம்: கம்ப இராமாயணம் இராமாவதாரம் பாலகாண்டம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) கடிமணப் படலம் வசிட்டன் திருமணச் சடங்கு என்ற தலப்பில் சொல்லப்பட்டுள்ள செய்திகளிலும் தாலி இல்லை.

திருமணத்துக்குரிய  ஆசனங்களில் ஏறி; வெற்றியினையும் பெருங்குணங்களையும் உடைய வீரனான இராமபிரானும்; அந்த இராமபிரான்பால் பேரன்பினை யுடையவளாய் (அவனுக்கு) இனிய துணையாக ஆகவுள்ள அன்னம் அனைய சீதையும்  நெருக்கமாக வீற்றிருந்தார்கள்.

தசரதச் சக்கரவர்த்தித் திருமகனான இராமனின் எதிர்நின்று சனகமன்னன், நீ (பரம்) பொருளாகிய திருமகளும் போல என்னுடைய பெருமைக்குரிய திரு மகளான சீதையுடனே நிலை பெற்று வாழ்க என்று கூறி, குளிர்ந்த நீரைத் (தாரை வார்த்து) தாமரை மலர் போன்ற (இராமனது) வலத் திருக்கையிலே கொடுத்தான்.

1246 வாழ்த்து ஒலியும் மலர் மழையும்:

அந்தணர் ஆசி, அருங்கல மின்னார் தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர் வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு முந்திய சங்கம் முழங்கின மாதோ! இங்கும் தாலி பற்றிய செய்தி இல்லை.

மாவீரனாகிய இராமபிரான் அப்பொழுது மந்திரங்களை மூன்று முறை கூறி, வெம்மை மிக்க தீயில் நெய்யோடு கூடிய அவியுணவுள் யாவற்றையும் பெய்தான். அதன்பின் சீதையினுடைய மெல்லிய கரத்தைத் தனது திருக்கரத்தால் பற்றினான்.

1250 இராமனும் சீதையும் தீயினை வலம் வந்து வணங்கினர் பின்பு பொரியிடுதல் முதலிய பொருள்கள் கொண்டு செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்து வசிட்டன், விசுவாமித்திரன், தசரதன் இவர்கள் பாதங்களில் வீழ்ந்து கும்பிட்டவுடன், சீதையின் கைகளைப் பற்றிக் கொண்டு தனக்குரிய மாளிகையினுள் சென்றான்.