
அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்குத் தக்கது அல்ல எனலாம். இராமன் ஏக பத்தினி விரதன் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாத தாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடு-கிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல, வைப்-பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.
இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையைச் சந்தித்திருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையைச் சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையி லேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியி லமர்த்திய பிறகும்கூட, சீதையைக் காண அவனே போகவில்லை. அனுமனைத்தான் அனுப்புகிறான். அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிதான் என்ன? சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்பதாக சீதைக்குச் சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனைச் சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்புகிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டு போய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை.
சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?
மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) ‘உன்னைச் சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய, உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.’’
இராமன் சீதைக்கு, இதைவிடக் கொடுஞ்-செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது.
“ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்பு மில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.’’
இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ற எண்ணத்தை -சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னைச் சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி, -அதன் அடிப்படையில் சீதையைக் கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது.- “நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே’’ -என்று சீதை வெளிப்படையாகச் சொல்கிறாள். இப்படிப்-பட்ட இராமனை அற்பத்தனமானவன் என்று சீதை இகழ்ந்திடுவது இயல்பே.
(அம்பேத்கர் எழுதிய, ‘இராமன் – கிருஷ்ணன் ஒரு புதிர்’ நூலிலிருந்து…)
தகவல்: திருவாரூர் கிருட்டினமூர்த்தி
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
இராமன் எத்தகைய இராமனடி!
(10.4.2023 அன்றைய தொடர்ச்சி…)
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள் அவற்றைப் பெற்று ஒரு புத்தகத்தில் ஒருலட்சம் முறை என்ற கணக்கில் எழுதி அவற்றை அந்த வங்கியில்’ சமர்ப்பித்தால் அந்த ஸ்தாபனம் அவற்றை திரட்டி சேமித்து தமிழகத்தில் பல ஊர்களிலும் அயல் மாநிலங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களிலும் ராமநாம மந்திரம் என்ற பெயரில் சிறிய ராமர் சன்னிதி எழுப்பி அவற்றில் விக்ரகம் அமைந்துள்ள பீடத்தின் அடியில் இந்த நோட்டுப் புத்தகங்களை வைக்கிறார்கள். அவ்விதமாக தினசரி வழிபாட்டின் அங்கமாக அவை மாறிவிடுகின்றன. இவ்விதமாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து, கையினால் எழுதி கைகூப்பித் தொழுது – இயன்ற வகையில் எல்லாம் ராமன் புகழ் பரப்புவது நல்லது என்றால், ராமன் வாழ்ந்த வாழ்க்கை நம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் முன்னுதாரணாம் ஆவது மிக நல்லது.
– விஜய பாரதம், 31.3.2023
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘ சாங்கோ பாங்கமாக விவரிக்கிறது.
ஆனால் ஒரிஜினல் வால்மீகி இராமாயணம் இராமன் பற்றி என்ன சொல்லுகிறது. இதோ ஆதாரங்களின் குவியல்!
இனி, இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம்.
1. கைகேயியை மணம் செய்து கொள்ளும் போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டான் என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். இதை இராமனே பரதனிடம் கூறுவதாக அயோத்தியா காண்டம், 107 ஆவது சருக்கத்தில் காணப்படுகிறது.
2. நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும். குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான்.
3. பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான்.
4. இலட்சுமணன் பொறாமைப்பட்டு, ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி. இலட்சு மணனை ஏய்க்க. “இலட்சுமணா. உனக்காகத்தான் நான் முடிசூட்டிக்கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப்போகிறாய்” என்று தாஜா செய்கிறான் அயோத் தியா காண்டம், 4 ஆவது சருக்கம்). ஆட்சி கைக்கு வந்த பிறகு, இலட்சுமணனுக்கும் ஆட்சிக்கும் சம்பந்த மில்லை.
5. பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான்.
6. “நாடு உனக்கு இல்லை, நீ காட்டுக்குப் போக வேண்டும்” என்று தசரதன் சொன்னவுடன் மனத்துக் குள் துக்கப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 19 ஆவது சருக்கம்).
7. “நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து காட்டிற்குச் சென்று காய்கனி களைப் புசிக்க வேண்டியவனாய் விட்டேனே” என்று தாயாரிடம் சொல்லிச் சங்கடப்படுகிறான். (அயோத்தியா காண்டம், 20 ஆவது சருக்கம்). (ஆனால், காட்டில் மாமிசத்தையே பெரிதும் சாப்பிட்டிருக்கிறான்).
8. “என் கைக்குக் கிடைத்த இராஜ்யம் போன தோடல்லாமல். நான் காட்டுக்கும் போகவேண்டியதாயிற்றே” என்று தாயிடத்தும், மனைவியிடத்தும் சொல் லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம். 20,26,94 ஆவது சருக்கம்).
9. “எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்து வரும் மகனைக் காட்டுக்கனுப்பச் சம்மதிப் பானா?” என்று இலட்சுமணனிடம் தன் தகப்பனைக் குறைசொல்லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்).
10. இராமன் பல மனைவிகளை மணந்து இருக் கிறான். (இதை மொழிபெயர்ப்பாளர்களான திரு.சி.ஆர்.சீனிவாச அய்யங்கார். 1925 ஆம் ஆண்டில் வெளியிட்ட வால்மீகி இராமாயணம் 2 ஆம் பதிப்பு, அயோத்தியா காண்டம், 8 ஆவது சருக்கம். 28 ஆம் பக்கத்தில் “இராமன் பட்ட மகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்து கொண்டிருக்கிறான்’” என்றும். திரு.மன்மதநாத் தத்தரால் 1892 ஆம் வருடத்தில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் 202 ஆவது பக்கத்தில் அயோத்தியா காண்டம், 8ஆவது சருக்கத்தில், “இராமனுடைய மனைவிமார்கள் அவர்களுடைய வேலைக்காரிகளோடும் மகிழ்ச்சி அடைவார்கள். அது போலவே, உன்னுடைய (கைகேயியுடைய) மருகியர் (பரதன் மனைவியர்) துன்பத்தை அடைவர்” ‘என்றும் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இராமாய ணத்தில் பல இடங்களில் “இராமனின் மனைவிமார்கள்” என்றே வாசகங்கள் வருகின்றன.
11. இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சகமாக இருந்து வந்திருக்கிறான்.
12. கைகேயியிடம் வெகு யோக்கியன் போலும். மிக அன்புடன் நடப்பதுபோலும், பாசாங்கு செய்துவந்து, பிறகு “கைகேயி தீய குணமுடையவள்” என்கிறான்! அயோத்தியா காண்டம், 31,33 ஆவது சுருக்கம்).
13. கைகேயி ஒரு கெட்ட குணமில்லாதிருந்தும், “அவள் என் தாயைக் கொடுமை செய்வாள்” என் கிறான் அயோத்தியா காண்டம். 31,33 ஆவது சருக்கம்),
14. “என் தகப்பனைக் கொன்றாலும் கொன்று விடு வாள்” அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்று சொல்லி, இழிவான பழியைச் சுமத்துகிறான்.
15.காட்டில் தனக்கு ஆபத்து நேரிடும் என்று கரு தக்கூடிய சம்பவம் ஏற்படும்போதெல்லாம். பலமுறை யும் “கைகேயி எண்ணம் ஈடேறிற்று; கைகேயி திருப்தி அடைவாள்” என்று பல தடவை சொல்லியிருக்கிறான்.
16. காட்டில் இலட்சுமணனிடம். “இனி பரதன் ஒருவனே அவனது மனைவியுடன் தந்தையும் மூப்பினராகி, யானும் காடடைந்தமையால், எவ்வித எதிர்ப்புகளும் இன்றிச் சுகமாய் அயோத்தியை ஆளுவான்” அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும், நாட்டு ஆசையும், பொறாமையும் விளங்கும்படி பேசி இருக்கிறான்.
17. கைகேயி இராமனிடம். “இராமா! அரசர் நாட் டைப் பரதனுக்கு முடி சூட்டுவதாகவும், நீ காட்டிற்குப் போகவேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச் சொன்னார்” என்று சொன்னபோது, இராமன். “அரசர் நாட்டைப் பரதனுக்குக் கொடுப்பதாக என்னிடம் சொல்ல வில்லையே” என்று சொல்லுகிறான். அயோத் தியா காண்டம், 19 ஆவது சருக்கம்) என்றும்
18.தந்தையை, “மடையன், புத்தி இல்லாதவன்” (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றும் சொல்லுகிறான்.
19, தந்தையை, நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டுகொண்டு இரு. நான் காட்டுக்குப் போய் வந்துவிடுகிறேன்” அயோத்தியா காண்டம். 34 ஆவது சருக்கம்) என்று சொல்லிப் பரதனுக்கு முடிசூட்டுவதைத் தடுக்கிறான்.
20. “எனக்கு கோபம் வந்தால், நான் ஒருவனே எதிரிகளைக் கொன்று. என்னை அயோத்திக்கு அரச னாக்கிக் கொள்ளுவேன். உலகத்தார் பழிப்பார்களே என்று தான் சும்மா இருக்கிறேன்” (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்கிறான். இதனால், இவன் தர்மத்தையோ, சத்தியத்தையோ லட்சியம் செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொள்கிறான்.
21. தன் மனைவி சீதையைப் பார்த்து. “நீ பரதன் மனங்கோணாமல் அவனிஷ்டப்படி நடந்துகொள். அதனால், நமக்குப் பின்னால் லாபம் ஏற்படும்” அயோத் தியா காண்டம், 26 ஆவது சருக்கம்) என்கிறான்.
22. இராமன் காடுசென்ற செய்தி கேட்டு மனம் வருந்திய பரதன் இராமனைக் கூப்பிட காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபோது. “பரதா! குடிகள் உன்னை விரட்டிவிட்டார்களா? தந்தைக்குப் பணி விடை செய்ய இஷ்டமில்லாமல் வந்துவிட்டாயா?” என்று கேட்கிறான். அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).
23. மற்றும் “உன் தாய், அவளது எண்ணம், நிறை வேறிச் சுகமாய் இருக்கிறாளா?” என்று கேட்கிறான். (அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).
24. பரதன் இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுத்து விட்டதாகக் காட்டில் வாக்குக்கொடுத்த பிறகே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு ஏற்கெனவே சுல்க மாகக் கொடுத்துவிட்ட செய்தியைப் பரதனுக்குச் சொல்லுகிறான் (அயோத்தியா காண்டம். 107 ஆவது சருக்கம்)
25. பரதன் இராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, இரா மனுடைய பாதரட்சையை வாங்கிவந்து, சிம்மாசனத்தில் வைத்து, தான் துறவியாக 14 வருட காலம் இருந்து, குறிப்பிட்ட காலத்தில் இராமன் வரவில்லையே என்று ஏங்கி, நெருப்பில் விழத் தயாராயிருப்பவனை. இராமன் பரதன் மீது சந்தேகப்பட்டு, ஊருக்குச் சமீபத்தில் வந்தவுடன் அனுமானை விட்டு “நான் படைகளோடும், விபீஷணன், சுக்ரீவன் ஆகியவர்களோடும் வருகி றேன் என்று பரதனிடம் சொல்லு. அப்பொழுது, அவன் முகம் எப்படி இருக்கிறது? என்பதையும், இதைக் கேட்டவுடன் அவன் என்ன நடவடிக்கை செய்கிறான் என்பதையும் கவனித்து வந்து சொல்லு. ஏன் ஏனில், எல்லாவகை இன்பங்களும் போக போக்கியங்களும் நிரம்பியிருக்கும் அயோத்தி நாட்டின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது?” என்று சொல்லி பார்த்துவிட்டு வரச் சொல்லுகிறான். (யுத்த காண்டம், சருக்கம் 107).
26. மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருந்து, அவளை நெருப்பில் குளித்துவிட்டு வரச் செய்து அப்படி வந்தபிறகும் பாமர மக்கள் மீது சாக்குப் போட்டு. அவள் கர்ப்பமானதைக் கண்டுபிடித்ததும் அதற்காக அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் செய்கிறான்.
27. சீதை கற்புடையவள் என்று வால்மீகி சத்தியம் செய்தும். இராமன் நம்பவில்லை. அதனாலேயே அவள் சாகவேண்டியதாயிற்று. அதாவது. அவள் மண் ணில் மறைய வேண்டியதாயிற்று.
28. தமையனைக் கொல்லச்செய்து. இராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று கருதி. துரோகச் சிந்தனை யோடு வந்த சுக்ரீவன். விபீஷணன் ஆகிய அயோக்கி யர்களை, அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்த்துக் கொள்ளுகிறான்.
29. தனக்கு யாதொரு குற்றமும் புரியாத வாலியைச் சகோதரத் துரோகிக்காகவேண்டி, மறைந்திருந்து திடீ ரென்று கொல்லுகிறான். மறைந்திருந்து கொன்றவனைத் தான், “இராமன் ஒரு வீரன்” என்று மூட மக்கள் கருதி இருக்கிறார்கள். பார்ப்பனர்களும் இதை வலியுறுத்திச் சொல்லுகிறார்கள்.
30. விபீஷணனை ஏற்கும்போது தன்னை அறியா மலே தனது கெட்ட எண்ணத்தையும், வஞ்சகத்தையும் தானே வெளிப்படுத்தியிருக்கிறான். அதாவது, “தனக்கு மூத்தவன் தீயவனாயிருந்தாலும் அவனுக்குக் கீழ்ப் பட்டு நடக்கவேண்டும் என்கின்ற அறத்தைப் பரத னைப்போல் எல்லோரும் கைக்கொள்ளமாட்டார்கள். உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?” என்கிறான். (யுத்த காண்டம், சருக்கம் 17) இதில் தான் தீயவன் என்பதை ஒருவாறு ஒப்புக் கொள்கிறான்.
31. வாலியைக் கொன்றதற்குச் சமாதானமாக, “மிரு கங்களிடத்தில் தர்மத்தை அனுசரிக்க வேண்டிய தில்லை” என்று வாலிக்குச் சொல்லிவிட்டு, அதே வாலி மனிதர்களைப்போல் தர்மத்தை அனுசரிக்கவில்லை என்பதற்காகவே அவனைக் கொன்று இருக்கிறான். வாலி மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்குக்கூட வாலியைச் சமாதானம் கேட்காமல், இராமன் தன்னலம் கொண்ட சுக்ரீவன் பேச்சைக் கேட்டே கொன்று இருக்கிறான்.
32. இராமன், பல பெண்களைக் கொன்று மூக்கு, முலை, காது ஆகியவைகளை அறுத்து, அங்கஈனமாக் கிக் கொடுமையும் செய்திருக்கிறான்!
33. பல பெண்களைக் கொன்று இருக்கிறான் (தாடகை).
34. பெண்களிடம் பல இடங்களிலும் பொய் பேசி இருக்கிறான்.
35. பெண்களைக் கேவலமாய் மதித்து இருக்கிறான். “பெண்களை நம்பக் கூடாது என்கிறான். மனைவியிடத்தில் இரகசியத்தைச் சொல்லக்கூடாது” என்கிறான் அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).
36. அதிகக் காமாந்தகாரனாக இருந்திருக்கிறான்.
37. அநாவசியமாக உயிர்களைக் கொன்றும், தின்றும் இருக்கிறான்.
38. தான் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று மடிவிப்பதாகத் தான் யாருக்கோ வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாகவும் சொல்லி இருக்கிறான் (ஆரண்ய காண்டம், 6,10 ஆவது சருக்கம்).
39.அரக்கர்களோடு வலியச் சண்டைக்குப் போக வேண்டும் என்கின்ற ஏற்பாட்டுடனே. சீதை தடுத்தும் வலிய இராவணனது எல்லைக்குள் சென்று இருக் கிறான் (ஆரண்ய காண்டம், 9,10 ஆவது சருக்கம்).
40. கரனோடு போர் புரியும் போது. “உங்களை எல் லாம் கொல்லுவதற்கே நான் காட்டுக்கு அனுப்பப்பட் டேன்” என்கிறான். (ஆரண்ய காண்டம், 29 ஆவது சருக்கம்)
41. ஒருவித யோக்கியதையும் இல்லாத துரோகி யாகிய சுக்ரீவனிடம் இராமன் தன்னலத்துக்காகச் சரணடைகிறான். “என்னை ஆட்கொள்ள வேண்டும்; கருணை காட்டவேண்டும் என்கிறான்.
42. விபீஷணன் அண்ணனுக்குத் துரோகம் செய்து விட்டு வந்த துரோகி என்று தெரிந்தும், அவனைச் சேர்த்துக் கொள்கிறான் (யுத்த காண்டம், சருக்கம் 17),
43. இலங்கையை விபீஷணனுக்குப் பட்டம் கட்டி விட்டு. (யுத்த காண்டம், சருக்கம் 18) “சீதையை விட்டு விட்டால், இராவணனுக்கு இலங்கையை விட்டுவிடுகி றேன் என்று சொல்லு” என்பதாக அங்கதனிடம் இராமன் சொல்லித் தூது அனுப்புகிறான். இதிலிருந்து இராவணன்மீது வேறு குற்றமில்லை என்பதும் தெரி கிறது. (யுத்த காண்டம், சருக்கம் 40)
44. பரதனும் கைகேயியும், குடிகளும், குருவும் காட்டுக்கு வந்து, இராமனை நாட்டுக்கு வரும்படி வருந்தியும். “சத்யாகிரகம்” செய்தும் அழைத்தபோது. ‘தந்தை சொல்லைக் காப்பாற்றுவேனே ஒழிய, யாரு டைய பேச்சையும் கேட்கமாட்டேன்” என்று சொல்லி, நாட்டுக்கு வர மறுத்து விட்ட இராமன். அதே தந்தை சொல்லுக்கு விரோதமாய். அயோத்தியைப் பட்டம் கட்டிக்கொள்ள மாத்திரம் சம்மதிக்கிறான் (யுத்த காண் டம், சருக்கம் 130).
45. சம்மதித்தது மாத்திரமல்லாமல், தந்தை இராம னைக் காட்டுக்குப் போகச் சொன்ன நேரம் முதல், திரும்பி அயோத்திக்கு வந்து முடி சூட்டிக்கொள்கிற வரையில் அதே கவனமாக, ஆசையாக. நம்பிக்கையாக இருந்திருக்கிறான். இதைப் பலமுறையும் தன்னுடைய பேச்சுகளால் வெளிப்படுத்துகிறான்.
46. தபசு செய்ததற்காக சூத்திர சம்பூகனைக் கொன்று இருக்கிறான் (உத்தர காண்டம், 76 ஆவது சருக்கம்).
47.கடைசியாக. சாதாரண மனிதர்களைப் போலவே இராமன். இலட்சுமணனையும் தள்ளிவிட்டு. தானும் (‘எமனால்’) ஆற்றில் விழுந்து சாகிறான். (உத்தர காண்டம். சருக்கம் 106) பிறகு உப-இந்திரனாகத்தான் ஆனான் (உத்தர காண்டம். சருக்கம் 11).
48. இராமன் தன் கையைப் பார்த்துக் கூறுவதாவது: “ஹே ! ஹஸ்த தக்ஷிண மருதஸ்ய சி சோர்த்விஜஸ்ய ஜீவாதலே விஸ்ருஜ சூத்ர முனவ்க்ருபானாம்: ராமஸ்ய காத்ரம…”
பொருள்: ஓ! வலதுகையே! இறந்துபோன பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர்பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால் கூசாமல் இவனை வெட்டிவிடு; நீ இராமனது அங்கங் களில் ஒன்றன்றோ? (வால்மீகி இராமாயணம்)
குறிப்பு: சம்பூகன் என்கிற ‘சூத்திரனை’ தவஞ்செய்ததற்காகக் கொலை செய்த இராமன் விஷ்ணுவின் அவதாரமாம்! இராமனைப் போன்ற அரசன் இக் காலத்திலும் இருந்தால், ‘சூத்திரர்’ எனப்படுபவர்களின் கதி என்னவாகும்?
49. இராமன் ஒடித்தது சிவன் வில் என்பது. இது முன்னமேயே ஒடிந்து இருந்த வில் என்பதற்கு “அபிதான சிந்தாமணி”யில் எட்டுப் பக்கங்களில் அதாவது, 157, 331, 571, 663, 894, 1151, 1173, 1494 ஆவது பக்கங்களில் ஆதாரம் காணப்படுகின்றது.
50. இராமாயணங்களிலும் ‘பரசுராமன்’ சொன்னது முதலிய இடங்களிலும் இதற்கு ஆதாரங்கள் காணப்படு கின்றன. இதை ஒடிக்கும்போது இராமனுக்கு அவன் தாயார் சொல்லுகிறபடி 5 வயது: தகப்பன் சொல்லுகிறபடி 10 வயது, பெண்டாட்டி (சீதை) சொல்லுகிறபடி 12 வயது – எப்படி இருந்தாலும் “முன்னமேயே ஒடிந்த வில்” என்பது கதையின் படி உண்மை.
நாவலர் சோமசுந்தர பாரதியார் கருத்து
வால்மீகி இராமாயண இராமன் நேர்மையானவன் அல்ல: துரோகமான காரியத்தில் பங்கு கொண்டவனே யாவான்.
அயோத்தி நாட்டரசு பரதனுக்குச் சேர்ந்தது என் பதும். இராமனுக்குக் கிடைக்க நியாயமில்லை என்பதை யும். இராமன் நன்றாக அறிந்தவனே ஆவான்.
எப்படி எனில், இராமனின் தகப்பனாகிய தசரதன், பரதனின் தாய் கைகேயியை மணம் செய்துகொள்கிற காலத்தில், “அயோத்தி நாட்டு அரசு அக்கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே உரியதாகுக” என்று கைகேயியின் தந்தைக்கு வாக்களித்து. அந்த ஒப்புதல் மீதே மணம் செய்து கொண்டிருக்கிறான்.
இந்த உண்மை இராமனுக்கும் தெரியும். இதை இராமனே தனக்குத் தெரியும் என்பதாக ஒப்புக் கொண் டிருக்கிறான்.
இதை பரதனிடம் எடுத்துச் சொல்லி பரதனைத் தனது தாயார் மீது குறைகூற வேண்டாம் என்று வேண்டிக் கொண்டிருக்கிறான் என்பதாகக் கூறுகிறார்.
மற்றும், இந்தச் சேதி இராமனின் தாய் கவுசலைக்கும் தெரியும், மற்றும் வசிஷ்டர் முதலிய ரிஷி குருமார் களுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும்
ஆகவே பரதனுக்குத் துரோகம் செய்து, இராமனுக்கு அயோத்தியை முடி சூட்டும் முயற்சியில் தசரதன் மாத்திரமல்லாமல், இராமன் முதல் அவள் தாய், ரிஷி குரு, அமைச்சர் முதலிய பலரும் உடன்பட்டு ஒன்று. சேர்ந்தே இம்மாபெரும் துரோகச் சதிக்கு உடந்தை யாயிருந்து காரியம் துவக்கி இருக்கிறார்கள்.
அமெரிக்கர் ஆராய்ச்சி – ரஷ்யப் பத்திரிகையின் வெளியீடு “The American interpretation makes Rama something in the nature of a chicago gangster and sita a light minded girl rather pleaded at being kidnapped by the demon Ravana”
இதன் மொழிபெயர்ப்பு:
“இராமன் சிகாகோ கொள்ளைக்காரன் போன்றவன், சீதை, இராவணன் தன்னைத் தூக்கிச் செல்வதை மனதார விரும்பியவள். மகிழ்ச்சியுடன் இராவணனுடன் சென்ற அற்பப் புத்தியுள்ள பெண்”
அமெரிக்காவில் Ramayana என்பவர் எழுதிய News and views from the soviet union என்னும் புத்தகத்தில் மேற்குறித்த கருத் துப்பட மொழிபெயர்த்து எழுதியுள்ளார். ரஷ்யாவிலிருந்து வரும்Saturday, November 20, 1954 Vol. XIII. 263 பக்கம் 2 இல் இது வெளியிடப் பட்டுள்ளது.
(ஆதாரம்: தந்தை பெரியார் எழுதிய
“இராமாயணப் பாத்திரங்கள்”)
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
சீதை மாமிசம் சாப்பிட்டது ‘துக்ளக்’குக்கு தெரியுமா?
மின்சாரம்
(28.6.2023 ‘துக்ளக்’ ஏட்டின்
பதில்களுக்குப் பதிலடி)
கேள்வி: ‘முஸ்லிம் லீக் மதச் சார்பற்ற கட்சி. அந்தக் கட்சியை மதச் சார்புள்ளது என்று சொல்ல எதுவும் இல்லை‘ என்று ராஹுல் காந்தி கூறியிருப்பது பற்றி?
பதில்: ஹிந்து என்றால் மட்டுமே வகுப்பு வாதம். ஹிந்துக்கள் மட்டுமே வகுப்புவாதிகள். மைனாரிட்டி என்றால் மதச்சார்பின்மை, சுதந்திரம் பெற்றது முதல் இதுதான் நமது மதச் சார்பற்ற அரசியல் சித்தாந்தம். இதன்படி முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற கட்சியாகத் தானே இருக்க முடியும்? ராஹுல் கூறுவது சரிதான்.
நமது பதிலடி: முஸ்லிம் என்பது மத அடையாளம் தான். ஆனால் நாங்கள் முஸ்லிம் ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் – எங்கள் கடவுளைத்தான் கும்பிட வேண்டும், எங்கள் உருதுவைத்தான் தேசிய மொழியாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை, மாறாக நாங்கள் சிறுபான்மை மக்களாக இருக்கிறோம் – எங்களுக்குரிய உரிமைகளும் வாய்ப்பு களும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று பெரும்பான்மை வாத கூக்குரல்காரர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள ஓர் அமைப்பினை வைத்துள்ளனர். இது எப்படி மதவாதம் ஆகும்?
அதே நேரத்தில் ஹிந்து மதம் – சிறுபான்மை மக்களுடைய மதத்தை இழிவுபடுத்துவது – சீண்டுவது ஒரு புறம் இருக்கட்டும்.
ஹிந்து மதம் – தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களையே பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்துவது, மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பது (தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியார் தான் எங்களின் ஜெகத் குரு என்பது) எல்லாம் பச்சையான வகுப்புவாதம் அல்லாமல் வேறு என்னவாம்?
பிர்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் – அவன் இரு பிறப்பாளன் (துவி ஜாதி) அதன் அடையாளம் தான் இந்தப் பூணூல் என்று மார் தட்டுவது வகுப்பு வாதம் அல்லாமல் வேறு என்னவாம்?
கங்கையில் குளிக்கப் போன ஒரு பெண்ணைப் பார்த்து ‘நீ முஸ்லிம், நீ எப்படி எங்களின் புனிதமான கங்கையில் குளிக்கலாம்?‘ என்று கேட்பது, அச்சுறுத்து வது வகுப்புவாதம் இல்லாமல் வேறு என்னவாம்?
இன்னும் எவ்வளவோ கேள்விகள் உண்டு; தொடுக்க ஆரம்பித்து விட்டால் தாங்க மாட்டீர்கள் – அவ்வளவுதான்!
கேள்வி: பணம் வைத்திருக்கும் அயோக்கியனை மக்கள் மதிக்கிறார்களே ஏன்?
பதில்: கலியுகத்தில் பணத்தை மட்டுமே வைத்து மனிதர்கள் மதிக்கப்படுவார்கள், நல்ல பண்புகளின் அடிப்படையில் மனிதர்கள் மதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பாகவத புராணம் கூறிவிட்டது. மக்கள் அப்படி நடக்கவில்லை என்றால் பாகவத புராணம் பொய்யாகி விடுமே!
நமது பதிலடி: அப்படியென்றால் அந்தக் கலி யுகத்தைப் படைத்ததாகக் கூறும் அந்தக் கடவுள் அயோக்கியன் என்று ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்!
கேள்வி: ‘கணவரை இழந்தவர் என்பதால், புதிய நாடாளுமன்றத்தைத் திறக்க அனுமதிக்கவில்லை’ என்று ஜனாதிபதி பற்றி முத்தரசன் கூறியது அபத்தம் தானே?
பதில்: அபத்தம் மட்டுமல்ல, அநாகரிகம். முத்தரசன் கம்யூனிஸ்டாக மட்டும் இருந்தால் இப்படிக் கூறியிருக்க மாட்டார். அவர் திராவிட மாடல் கலந்த கம்யூனிஸ்ட், எனவே இந்த அநாகரிகப் பேச்சு.
நமது பதிலடி: நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறப்பது அப்புறம் இருக்கட்டும். நாடாளு மன்ற திறப்பு விழா அழைப்பிதழைக்கூட குடியரசுத் தலைவருக்கு அளிக்கவில்லையே! துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு நேரில் அளிக்கப்படுகிறது; ஆனால் குடியரசுத் தலைவருக்கு அந்தப் பதவியை உத்தேசித்தாவது அழைப்பிதழைக் கொடுக்கத் தடுத்தது எது – தோழர் முத்தரசன் கூறியதில் என்ன குற்றம்?
‘விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்கு சமமான வர்கள் என்று சொன்னவர்தானே உங்களின் லோகக் குரு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி – அதற்காக 9.3.1998 காலை 10 மணிக்கு காஞ்சி சங்கர மடத்தின் முன் திராவிடர் கழக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுண்டே!
12.1.1998 தினமணியில் பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கண்டித்து எழுதினாரே! ஹிட்லரும், சங்கராச்சாரியாரும் என்று தலைப்பிட்டு கட்டுரை தீட்டினாரே, ‘இந்தியா டுடே’யில் எழுத்தாளர் வாஸந்தி!
குடியரசுத் தலைவர் ஒரு விதவைப் பெண் – சங்கராச்சாரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் தரிசு நிலம் – அந்த அடிப்படையில் இந்துத்துவா கொள்கை உடைய பிஜேபி ஆட்சி குடியரசுத் தலைவரை அவமதித்துள்ளது என்று தோழர் இரா.முத்தரசன் கூறியதில் என்ன குற்றம்?
திராவிடர் கொள்கைக்கும், கம்யூனிஸ்ட் கொள் கைக்கும் இடையே சிண்டு முடியும் சிண்டுகளின் சில்லறைத்தன வேலை தந்தை பெரியார் மண்ணில் பலிக்காது – பலிக்கவே பலிக்காது!
கேள்வி: சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு தாம்பூலப் பையுடன் குவார்ட்டர் மதுப் பாட்டில் ஒன்றும் துணிப் பையில் போட்டுக் கொடுக்கப் பட்டுள்ளதே?
பதில்: திருவள்ளுவரைப் போன்று ஆன்றோர்கள் வகுத்த தமிழ் கலாச்சாரம் மதுவை ஒதுக்கும். ஈவெரா வகுத்த திராவிடக் கலாச்சாரம் மதுவை வரவேற்கும். திராவிட மாடல் கலாச்சாரம் தான் இப்பொழுது தமிழ்க் கலாச்சாரம். எனவே துணிப் பையில் குவார்ட்டர் பாட்டில், கூடிய விரைவில் மஞ்சள் பையிலும் குவார்ட்டர் பாட்டில் வரலாம்.
நமது பதில்: புதுச்சேரியில் மதுவிலக்கு எப் பொழுதுமே கிடையாது என்ற பாலபாடம் கூட ‘துக்ளக்’ பார்ப்பனருக்குத் தெரியாது போலும்!
உண்மையைச் சொல்லப்போனால் சுரா பானம் குடித்ததால் ஆரியர்கள் “சுரர்கள்” என்றும் அதனைக் குடிக்க மறுத்ததால் திராவிடர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்படுவது அய்யர் குருமூர்த்திக்குத் தெரி யுமா?
வால்மீகி இராமாயணத்தின்படி இராமன் குடித்திருக் கிறானே. 96ஆவது சருக்கத்தில்,
“நிஷாந்த பரஸ்த்தே சீதம்
மாம ஸேனாச் சண்டயம்”
இதன் பொருள் என்ன? சீதைக்கு இராமன் மாமி சத்தைக் கொடுத்து மகிழ்ச்சியூட்டினான் என்பதுதானே!
உண்மையைச் சொன்னால் சுதந்திரப் போராட் டத்தில் காந்தியார் மது விலக்குப் போராட்டத்தை நடத்திய போது இந்தியாவிலேயே ஈரோட்டில்தானே வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டியவர் தந்தை பெரியார் தானே!
மதுவிலக்குப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதா, கூடாதா என்பது என் கையில் இல்லை. ஈரோட்டில் இரு பெண்மணிகளின் கைகளில்தான் இருக்கிறது என்று பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தியார் கூறவில்லையா? யார் அந்த இரு பெண்மணிகள்? தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாள் ஆகியோர் தானே! இதை எல்லாம் தெரிந்து கொள்ளாத “அமாவாசை அறிவாளிகள்” தந்தை பெரியாரை இழுத்துக் குளிர் காய்வது வெட்கக் கேடே!
பாணன்
இசுலாமிய நாடு என்றால் மக்கள் அனைவரும் ஓர் இறைவழிபாட்டை கொண்டவர்கள். இசுலாமியர்களிடையே ஷியா – சன்னி என்ற பிரிவுகள் இருந்தாலும் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது சில மதவாத சச்சரவுகளைத் தவிர (இந்தச் சச்சரவுகள் குண்டு வைக்கும் வரை சென்று அடிக்கடி உயிரிழப்புகள் உண்டு) இருப்பினும் அங்கு வழிபாட்டுத்தலங்களுள் அனைவரும் ஒன்றே.
ஆனால் இங்கே.. ஹிந்து தேசம் என்றால். மகாராட்டிராவில் ராமனைத் தேடமுடியாது, பெண் தெய்வ வழிபாடுதான், அதே போல் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வாழும் மக்கள் ஜெய் மாதா ஜி – பெண் தெய்வ வழிபாடுதான்.
தெற்கே பகவதியும், மாரியம்மனும், சாமுண்டியும், எல்லம்மாவும் பவானியும், துர்க்காவும், மாகாளியும் தான் இந்திய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை துவங்கி தக்காண பீடபூமி முழுவதும் மற்றும் கிழக்கு வங்க விரிகுடா எல்லை வரை பெண் தெய்வ வழிபாடுதான், பூரி ஜெகனாதர் ரதயாத்திரையை காட்டும் தொலைக்காட்சிகள் பல லட்சம் பேர் கூடும் வீரம்மா தாலி கோவில் தேர்த் திருவிழாவை என்றாவது காட்டியுள்ளனவா?
வீரம்மா படம் இல்லாத சாமானிய தெலுங்கு மக்களின் வீடே ஆந்திரா, தெலங்கானாவில் கிடையாது.
கருநாடகாவில் வீட்டில் ஒரு குழந்தைக்காவது சாமுண்டி மற்றும் எல்லாவின் ஒரு எழுத்தாவது வருமாறுதான் பெயர் சூட்டுவர்கள். நெல்லையில் இன்றும் நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்குச் செல்லாத ஹிந்துக்கள் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மக்கள் உண்டு. (எனது தாத்தா பாட்டி கடைசி வரை அங்கு சென்றதே கிடையாது. இத்தனைக்கும் எங்கள் ஊரில் இருந்து மார்க்கெட் போகவேண்டும் என்றால் நெல்லை டவுணிற்கு என்று மட்டும் 29 ஆம் நம்பர் பேருந்து உண்டு.
இதில் என்ன கூத்து என்றால் உத்தரப்பிரதேசத்தில் 62 விழுக்காடு ஹிந்துக்கள் சிவனை வழிபடும் ஹிந்துக்கள் இவர்கள் ராமனை வணங்கமாட்டர்கள். உத்தராகண்டில் சிவன்தான் முதல் தெய்வம், இதனை மறைத்துத்தான் கேதர்நாத்தை முன்னிறுத்துகின்றனர்.
ஜார்கண்ட், சத்தீஷ்கர் சென்றால் அங்கும் மகிஷவர்த்தினிதான் வெகுஜனம் வழிபடும் தெய்வம், வடகிழக்கு மாநிலங்களில் பெண் தெய்வ வழிபாடுதான் முதன்மை, அவதிபுரி எனப்படும் அயோத்தி மற்றும் பீகார் – நேபாள் எல்லையில் உள்ள ஜனக்பூர் இந்த இரண்டு இடங்களில் மட்டும் தன் அங்குள்ள மக்கள் ராமனை கடவுளாக வழிபடுகின்றனர். ஜனக்பூரிலும் சீதாராமர் தான் வழிபாடு தெய்வம். அப்படிப் பார்த்தால் அவதிமொழி பேசும் அவதபூரி என்ற அயோத்தியில் வாழும் மக்களின் வழிபாட்டுத் தெய்வம் மட்டுமே ராமன்.
அயோத்தியில் சுமார் 80,000 பேர் பூர்வீகமாக வாழ்பவர்கள். இவர்களில் 5000 பேர் பார்ப்பனர்கள், 12,000 பேர் உயர் ஜாதியினர், 7000 இஸ்லாமியர்கள் மற்றவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர். அயோத்தியில் நாடோடிகள் மிக மிகக் குறைவு. அதன்படி அயோத்தியில் கூட 17,000 பேர் மட்டுமே ராமனை மட்டும் கும்பிடுபவர்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருமே அவர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த கங்கை அம்மனின் சகோதரி என்று கூறிக்கொள்ளும் Swaaha Devi (Svaahaa Dhevee) சுவாகா தேவியைக் கும்பிடுபவர்கள். ஆனால், இன்றைய தலைமுறைக்கு சுவாகா தேவி என்றால் யார் என்றே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.
சூத்திரர்களும் பிற்படுத்தப்பட்டவர் களும் ராமன் படம் பொறித்த அடையாளத்தை கழுத்தில் அணியக் கூடாது என்பதற்காக அவர்கள் வழிபட்ட சுவாகா தேவியின் கணவர் அனுமான் என்று கதைவிட்டு அனுமான் அடையாளத்தை சூத்திரர்கள் கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
நாம், வைக்கத்தை பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம். ஆனால் அயோத்தி தெருக்களில் அருகில் உள்ள கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்கள் இதுவரை நடந்ததே இல்லை.
2016ஆம் ஆண்டில் வாரணாசியில் ஒரு திருமணத்திற்குச் சென்ற போது அயோத்தியாவிற்கும் சென்றேன். பழைய காலத்து அக்ரகாரம் போன்றுதான் அங்குள்ள தெருக்கள் காணப்பட்டன.
புதிதாக ஒன்றுமில்லை. எங்குபார்த்தாலும் கோவில்களும் காவிச்சாமியார்களும் பழுப்பேறிய ஆடையோடு அங்கே இங்கே சுற்றிக்கொண்டு மக்களை பூஜைக்கு அழைத்துச்செல்லும் ஏஜெண்டுகளால் நிறைந்திருந்தது நகரம்.
ராமன் படம் போட்ட டாலர்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர். ஆனால் சின்ன அனுமார் சிலைகொண்ட காவி நிற கயிறுகள் தான் அதிகம் விற்பனையானது.
இது குறித்துக் கேட்ட போது ஒரு சிறுவன் கூறியது, “இராமன் டாலர் போட்டு நாங்க ஊருக்குச் சென்றால் பசங்க அடிப்பாங்க (உயர்ஜாதியினர்)” என்று கூறினான்.
அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாமரத்தோப்பு ஒன்றில் நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற போது வழியில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்த சில நடுத்தர வயது நபர்களிடம் பேசும் போது “அயோத்தியில் உள்ள ராமன் கோவிலுக்குச் சென்றுள்ளீர்களா” என்று கேட்க அவர்களோ, “எங்களுக்கு அங்கு செல்ல நேரம் ஏது!” என்றுமட்டுமே கூறினார்கள்.
உண்மையில் அவர்களை அங்கு அனுமதிக்க மாட்டார்கள் – ஒரு நந்தனார் தெற்கே தீயில் இறங்கி தன்னைப் புனிதப்படுத்திக்கொண்டு சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தார்.
ஆனால் அங்கே லட்சக்கணக்கான நந்தனார்கள் அயோத்திதெருக்களைக்கூட பார்க்காமல் அருகில் உள்ள ஊர்களில் வசிக்கின்றனர்.
இவர்கள் விருப்பப்பட்டுச்சென்றாலும் அங்கே அவர்களுக்கு அவமானங்கள் தான் மிஞ்சும்.
இன்றும் அயோத்தி உள்ளிட்ட பல நகரங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடிதிருத்தமாட்டார்கள். புதிதாக யாரும் வந்தால் அவர்கள் எந்தக் கிராமம், கிராமத்தில் எந்தப் பகுதி என்று எல்லாம் விசாரித்துவிட்டு அவர்கள் உயர்ஜாதியினர் என்றால் மட்டுமே முடிவெட்டும் தீண்டாமை 2016-இலும், அயோத்தி, வாரணாசி போன்ற நகரங்களில் இருந்ததை பார்த்த நேரடி சான்றாக நிற்கிறேன்.
22.01.2024 அன்று மட்டும் மின்னொளியில் மிதந்த அயோத்தியின் மறுபுறம் – வீடுகளுக்கு கதவு வைக்கக் கூடாது. செங்கல் வைத்த வீடுகள் கட்டக் கூடாது – அப்படியே கட்டினாலும் ஆடம்பரமாக தெரியக்கூடாது போன்ற பல கொடுமையான எழுதப்படாத சட்டங்கள் அயோத்தியைத் சுற்றியுள்ள கிராமங்களில் உண்டு.
ராமன் படம் மடங்களிலும் உயர் ஜாதியினரின் வீடுகளின் முன்பும் இருக்கும். ஆனால், அயோத்தியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் ராமன் படம் இல்லை. வேண்டுமென்றால் ராமன் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவர்கள் வற்புறுத்தி கொடுத்த ராமன் படத்தை வேண்டுமென்றால் வீட்டின் ஏதாவாது ஒரு மூலையில் ஒட்டி வைத்திருப்பார்களே தவிர, அவர்களிடம் ராமன் படத்தை பூஜைக்காக வீட்டில் வைக்கும் துணிச்சலைக் காணமுடியாது.
அயோத்தியில் வசிக்கும் பூர்வ குடிகளுக்கே ராமன் வழிபாட்டுத் தெய்வமாக இல்லாத நிலையில் நாடெங்கும் எப்படி ஜெய் சிறீராம் மயமாக இருக்கும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது.
ஜெய் சிறீராம் என்பது என்றால் என்ன? இந்தச் சொல்லைக் கூறச் சொல்லி சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர். ஆம்! ஜனவரி 22ஆம் தேதி ஜெய்சிறீராம் என்ற காட்டுக்கூச்சல் – 30ஆம் தேதி “ஹேராம்” என்ற முணுமுணுத்தலோடு காந்தியாரின் உதட்டில் இருந்து இளஞ்சூடான இறுதி சுவாசமாக வெளியேறியது. ஒருவேளை இன்று கோட்சே இருந்திருந்தால் “ஜெய் சிறீராம்” என்று கூறிக்கொண்டே காந்தியாரைச் சுட்டுக் கொன்றிருக்க அதிக வாய்ப்பு உண்டு.
அது என்ன ஜனவரி 22இல் ராமன் கோவில் திறக்க தேதி குறித்தார்கள் என்றால், வரலாற்றுக் கடிகாரத்தை 1948 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாளுக்குத் திருப்பினால், காந்தியாரைக் கொலை செய்ய அய்ந்தாம் முறையாக திட்டமிட்டு பிர்லாபவனில் குண்டுவைத்தார்கள். ஆனால் குண்டு வெடிக்கவில்லை.
குண்டுவைத்த மதன்லால் பக்வா சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குண்டு வெடிக்காமல் போகவே காவல்துறையிடம் பிடிபடுகிறார். மற்றவர்கள் ஓடி விடுகின்றனர்.
அப்படி ஓடியவர் ஆனந்தபர்பத் என்ற இடத்தில் ஜனவரி 22 அன்று கூடி இம்முறை, அதாவது ஆறாவது முறை எந்த ஒரு தவறும் நடக்காமல் காந்தியாரைக் கொல்வது என்ற திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று சபதம் எடுத்தனர்.
ஒருவேளை அப்படி சபதம் எடுத்து கலைந்துசெல்லும் போது “ஜெய் சிறீராம்” என்று கூச்சலிட்டார்களோ என்னவோ! ஆகையால் தான் ஆர்.எஸ்.எஸ். ஜனவரி 22ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தது.
ஆனாலும், காந்தியாரின் அனுதாபிகள் ஜனவரி 30 அன்று ராமன் கோவில் திறக்கப்படும் தேதியாக குறிக்கப்படவில்லையே என்று நிம்மதி அடைந்திருக்கலாம்.