இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு!
செ.ர.பார்த்தசாரதி
"இலக்குவன் சீதையிருந்த குடில் வாயிலின் வெளியே ஒரு கோடு போட்டு விட்டு 'இதை நீ தாண்டி வரவேண்டாம், வந்தால் ஆபத்து நேரலாம்' என்று சீதை இடம் கூறிவிட்டுச் சென்றதாகவும், இதை மதியாமல் இராவணனுக்கு கோட்டை தாண்டிவந்து பிச்சையிட்டதால் அவன் சீதையை தரையுடன் பெயர்த்தெடுத்து சென்றுவிட்டான்" என்று கம்பராமாயணத்தில் இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர்.
உவமைக் கவிஞர் சுரதாகூட தமது ‘சுரதா' இதழிலே ஒருமுறை கிண்டலாக "சாலை நடுவில் போடப்படும் மஞ்சள் கோட்டை (ட்ராஃபிக் கோடு) முதலில் போட்டவர் இலக்குவன் தான்' என்று எழுதியிருந்தார்.
ஆனால் உண்மையில் அப்படி எதுவும் கம்பராமாயணத்தில் இலக்குவன் கோடு போட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. ‘சடாயு காக்கும்' என்று சொன்னதாகத் தான் பாடல்-19-ல் இருக்கிறது.
சீதை இராவணனை இலை குடிலுக் குள், இருக்கையில் உட்காரவைத்து உபசரித்ததாகவும், பிறகுதான் இராவணன் இலை குடிலை தரையுடன் பெயர்த் தெடுத்துச் சென்றதாகவும் கூறுகிறார்.
இராவணன் இலை குடிலுக்குள் உட்கார்ந்ததாக கூறும் பாடல் வருமாறு:
"ஏத்தினளெய்தலு மிருத்திரீண் டென்
வேத்திரத் தாசனம் விதியினல் கினாள் மாத்திரிதண்டயல் வைத் தவஞ்சனும் பூத்தொடர் சாலையினிருந்த போழ்தினே.
(ஜடாயுவுயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம் பாடல்-34)
கம்பராமாயண வசனம் (எழுதியவர் சு. அ. இராமசாமி புலவர்) என்ற நூல் கூட கோடு போட்டதாகக் கூறவில்லை. குடிலுக் குள் அமரவைத்து பேசியதாகத்தான் கூறுகிறது.
வால்மீகி இராமாயணத்தில் கூட ‘இராவணனை குடிலில் அமரவைத்து உபசரித்த தாகத்தான்' உள்ளது. (ஆதாரம்: காவ்ய ராமாயணம், கே. எஸ். சீனிவாசன் மொழி பெயர்ப்பு, வசனம்-2) ஜடாயுவுயிர் நீத்த படலம்
துளசி இராமாயணமும் இதையேதான் கூறுகிறது. (ஆதாரம்:- திரிவேணி இராமாயணம் ஜகந்நாராயணன்)
சீதையைக் காப்பாற்றுவதில் போட்டி!
ஆனால் இல்லாத ஒன்றை, போடாத கோட்டைப்பற்றி துணிந்து பொய் சொல்லி, எல்லோரையும் நம்பும்படிச் செய்துவிட்டி ருக்கிறார்களே! இதையும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே!' இப்படிப்பட்ட மக்களிடம் நடக்காத இராமாயணத்தை எழுதி நடந்ததாக பொய் சொல்லி அதை நம்ப வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமே கிடையாது.
- உண்மை இதழ், 01.11.1986